“எங்க போனாரு இவரு?! இன்னும் காணோம்?!” என்று வெகு நேரமாய் அவனுக்காய் காத்திருந்தவள், அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், அவனது கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
“நேரமாகிடுச்சுன்னு போனே பண்ணிட்டா. இதுக்கு மேல லேட் பண்ணா அவ்ளோதான்!” என்று எண்ணிக் கொண்டு, போனை அட்டென்ட் செய்தவன்,
“இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவேன்டா” என்று சொல்ல,
“ம்! இன்னும் அரைமணி நேரமா?!” என்று அவள் சிணுங்க,
“எஸ் பேபி! அதுவரைக்கும் உன்னோட எஃப்பி பேஜ்ல என்னை நினைச்சு ஒரு கவிதை எழுதி போஸ்ட் பண்ணு. அதுக்கு வர கமெண்ட்ஸ்க்கு நீ ரிப்ளை பண்ணி முடிக்குறதுக்குள்ள உன் பக்கத்துல இருப்பேன். ஓகே!” என்றுவிட்டு அவன் போனை வைத்துவிட,
“என்னது?! என் எஃப்பி பேஜ்லயா?! கவிதையா?! இ இவருக்கு எப்படித் தெரியும் இதெல்லாம்?! அய்யய்யோ!! நான் வேற இந்த மனுஷனைப் பத்திக் கண்டபடி எழுதி வச்சிருப்பேனே?!” என்றவள்,
“போச்சு! போச்சு! இப்போ ரிசன்ட்டா எழுதின காதல் கவிதைகளைப் பார்த்திருந்த கூட பரவாயில்லை! ஆனா ஆரம்பத்துல அவர் பயிற்சி குடுக்க வந்தபோது போட்ட போஸ்டை எல்லாம் அவர் படிச்சிருந்த?!” என்று எண்ணியவளுக்கு, வெட்கமாகிப் போனது.
“ஐயோ மனுஷன் என்னைப் பத்தி என்னை நினைச்சிருப்பார்?!” என்று வாய்விட்டுப் புலம்பியவள், அவன் வந்த புதிதில் அவனைப் பற்றிக் கலாய்த்துப் போட்டிருந்த போஸ்டை எல்லாம் தேடி எடுத்துப் படிக்கப் படிக்க இப்போது அவளுக்குச் சிரிப்பும் கூடவே வெட்கமும் ஒட்டிக் கொண்டது.
‘என் பேஜ் தெரிஞ்சிருக்குன்னா கண்டிப்பா இதையெல்லாம் பார்க்காம இருந்துக்க மாட்டார்?! அப்போ நான் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சது நான் சொல்றதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும்தானே! ஆனாலும் கண்டுக்காத மாதிரி என்னா பில்டப்பு இந்த குலோப்ஜாமூனுக்கு! வரட்டும் இன்னிக்கு!’ என்று அவனோடு செல்லமும் கோபமுமாய் அவள் மனதோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க, அவன் அவளுக்காய் வாங்கிய அந்தப் பரிசைக் கண்ணாடி வழியே பார்த்தபடியே, அவன் மனிதிற்கு இனியவளை நினைவு படுத்தும், அந்தப் பழைய பாடலின் வரிகளை முணுமுணுத்தபடி வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
‘காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை…
“மானும்மா… சீக்கிரம் எழுந்திரு எழுந்திரு… டைம் ஆகுது கிளம்பணும்” என்று உள்ளே நுழையும் போதே பரபரப்பாய் வந்தவன், வார்ட்ரோபிலிருந்து ஒரு வாரத்திற்கு வேண்டிய உடமைகளை பேக் செய்ய ஆரம்பித்தான்.
“என்னங்க இது எங்க போகணும்?! எதுக்கு இவ்ளோ ட்ரெஸஸ் எடுத்து வைக்கிறீங்க?! அதுவும் நான் எப்படி ரொம்ப தூரமெல்லாம் வர முடியும்?!” என்று அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,
“ப்ச் கேள்வி கேக்காம அப்படியே எழுந்து உட்கார்ந்தபடியே ஹேர்ஸ்டைல் மட்டும் பண்ணிக்கோ மானும்மா” என்றான் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல்.
“ப்ச்! முதல்ல நீங்க எங்க போறோம்னு சொல்லுங்க?! சொன்னாதான் கிளம்புவேன்” என்று அடம்பிடிக்க,
“அதல்லாம் முடியாது. கிளம்புன்னா கிளம்பு!” என்றுவிட்டு அவன் தன் வேலையில் கவனமாகிவிட,
“ம்! ம்!” என்று சலித்தபடியே அவள் தலைசீவி முடித்தாள்.
அடுத்த ஒருமணி நேரத்தில் இருவரும் தயாராகி தங்கள் அறையில் இருந்து வெளியே வர, குடும்பத்தினர் அனைவரும் அங்கே கூடத்தில் காத்திருந்தனர் ஜம்மென்று தயாராகி.
“ம்மா! அப்பா! காயு! நீங்க எல்லோரும் எப்படி இங்க?! எப்போ வந்தீங்க?!” என்று மையு ஆச்சர்யத்துடன் கேட்க,
“நாங்க வந்து அரைமணி நேரமாச்சு!” என்று அக்காவின் அருகே வந்த காயத்ரி,
“மையுக்கா நான் அடிக்கடி சொல்வேன்ல! அதே மாதிரி தான் இன்னிக்கு நடந்திருக்கு! யூ ஆர் சோ லக்கி!” என்று தங்கை அக்காவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தமிட,
“என்னடி நடக்குது இங்க எனக்குத் தெரியாம?!” என்று விழித்த மையுவை,
“வெளிய வா மானும்மா தெரிஞ்சிடும்” என்றபடி, மித்ரன் அவளது சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வெளியே செல்ல, வீட்டின் வெளியே உள்ள சாலையில் அந்தப் பெரிய சொகுசு பஸ் பளிச்சென்ற விளக்குகளுடன் கிளம்பத் தயாராக நின்று கொண்டிருந்தது.
“வாவ்?! என்ன பஸ் இது குட்டி வீடு மாதிரி இருக்கே?!” என்று மையு வாய்பிளக்க,
“ஆமாக்கா! நாங்க போய் பார்த்துட்டோம் உனக்கு முன்னாடியே மாமா உனக்காக வாங்கி வச்ச இந்த பெரிய சர்ப்ரைஸ் கிப்ட்டை!” என்று காயத்ரியும் சொல்ல,
“என்ன கிப்டா?! இவ்ளோ பெரிய பஸ்ஸா?! எதுக்குங்க நான் என்ன ட்ரவல்ஸா வச்சி நடத்தப் போறேன்?!” என்று மையு புரியாமல் கேட்க,
“உள்ள வந்துப் பாரு எதுக்குன்னு புரியும்” என்றவன், அவளை அருகே அழைத்துச் சென்று பஸ்சின் கதவுகளை ரிமோட் கொண்டு திறக்க, மையுவின் கண்கள் அகல விரிந்தன.
“எ என்னங்க இது?! இவ்ளோ பெரிய பஸ், இல்ல இல்ல வீடு!” என்றவளுக்கு, அவன் சில மணி நேரங்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வர, அவள் தனது ஆசைகளை கவிதைகளில் வெளிப்படுத்தி இருந்ததை வைத்து தன்னை வெளியூருக்கு அழைத்துச் செல்வதற்காகவே இதை வாங்கி இருக்கிறான் என்று நொடியில் புரிந்து போனது. புரிந்த நொடி யார் அருகே இருக்கிறார்கள் என்பதை எல்லாம் மறந்து தன்னருகே இருந்தவனை இழுத்து அவன் வயிற்றோடு தன் முகம் புதைத்துக் கொண்ட மையுவிற்கு நெகிழ்வில் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
‘கடவுளே இந்தக் கண்றாவி எல்லாம் வேற பார்த்துத் தொலையணுமா?!’ என்று நினைத்தபடி சரத் தலையில் அடித்துக் கொள்ள,
“ம்! ம்க்கும்!” என்று காயத்திரி குரல் கொடுத்து அக்காவிற்கு சுற்றம் நினைவு படுத்த, சட்டென நிமிர்ந்து விலகியவள்,
“எ எதுக்குங்க இதெல்லாம்?!” என,
“அட என்ன அண்ணி? வாங்கியே முடிச்சாச்சு! வந்து வண்டியில ஏறுங்க ஏறுங்க! இப்படியே நீங்க பேசிட்டு இருந்தா ஊருக்கு போய் சேர நாளைக்கு ராத்திரி ஆகிடும்” என்று கீர்த்தி அவர்களைக் கிளப்ப முயல,
“ம்மா! நீங்க முதல்ல போய் உட்காருங்க” என்றான் மித்ரன்.
“அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கி இருக்கான். முதல்ல அவளை கூட்டிட்டு ரெண்டு பேரையும் உள்ள போகச் சொல்லு சாரு” என்று மலர் சொல்ல,
“இந்த அத்தை இருக்காங்களே?!” என்று முணுமுணுத்த மையு,
“என்னங்க, அத்தை பஸ்ல ஏறாம நான் ஏறமாட்டேன்” என்று ஆரம்பிக்க,
“கடவுளே! இந்தப் பொண்ணு இருக்காளே?!” என்று வாய்விட்டு முனகியவர், முதலில் உள்ளே செல்ல, நமுட்டுச் சிரிப்புடன் கணவனைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டு அவன் உடன் சென்றாள் மையு.
பேருந்தின் உள்ளே வந்தவளுக்கு அத்தனை சந்தோஷம்!
“ஐய்! நிஜமாவே கீர்த்தி சொன்ன மாதிரி குட்டி வீடு போல இருக்குங்க! ரொம்ப ரொம்ப அழகா இருக்கு! கழுகு படத்துல வர்ற பஸ்ஸை விட இது செமையா இருக்கு!” என்று மையு குதூகலிக்க,
“ம்! அதைப் பார்த்து தான் எனக்கும் இந்த ஐடியாவே வந்தது” என்றவன் அவளுக்காவே வடிவமைக்கப் பட்டிருந்த அந்தக் கட்டிலில் அவளைத் தூக்கிக் கொண்டு போய் அமர வைத்தான்.
“ஆனாலும் உன் தம்பி ரொம்ப்ப உருகுறான்டி! ம் இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?!” என்று சரத் வயரெறிய,
“தான் கெட்டக் குரங்கு ஊரையும் சேர்த்துக் கெடுக்குமாம்!” என்றாள் சாரு.
“எ என்ன? எதுக்கு இப்போ இப்படி ஒரு பழமொழி?!” என்று சரத் புரியாமல் கேட்க,
“ம் உங்களுக்குதான் உங்க பொண்டாட்டிப் பிள்ளைங்களை அப்படிப் பார்த்துக்க வக்கில்லை! பார்த்துக்கறவங்களைப் பார்த்தும் வயத்தெரிச்சல் படுறீங்களே?! அதான் இந்தப் பழமொழி!” என்று விளக்கம் கொடுக்க,
“அ அப்போ நான் என்ன குரங்கா?!” என்று சரத் சீற,
“அதை என் வாயால வேற சொல்லணுமா?!” என்ற சாரு,
“டேய் குட்டீங்களா இங்க வந்து உட்காருங்க பாட்டி பக்கத்துல” என்று பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட,
‘இருந்தாலும் இவளுக்கு இவ்ளோ திமிர் ஆகாது! நானா திரும்ப தேடி வந்ததும் இவளுக்கு ரொம்பக் கொழுப்புக் கூடிப் போச்சு!’ என்று பொருமினான் சரத்.
“என்ன மாமா இங்கயே இப்படிக் குரங்குக்குட்டி மாதிரி நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தா எப்படி? நீங்க எங்க கூட வரீங்களா இல்லையா?!” என்று கீர்த்தியும் சீண்ட,
“ஏய்! மாப்பிள்ளையைப் போய் மரியாதை இல்லாம பேசிக்கிட்டு அடி வாங்குவ?!” என்று மிரட்டினார் தங்கமலர்.
“நல்லா சொல்லுங்க நீங்க பெத்த ரெண்டு பொண்ணுங்களுமே என்ன குரங்கு குரங்குன்னு சொல்லி டேமேஜ் பண்ணுதுங்க!” என்றான் சரத் மாமியாரிடம் குறையாய்.
அதைக் கட்ட மையு, “ச்சே ச்சே! என்ன கீர்த்தி அண்ணாவைப் போய் இப்படி எல்லாம் பேசலாமா? அவர் அதுக்கும் மேல!” என்று வார,
“ச்சே! நான் ஊருக்கு வரவே இல்லை!” என்று கோபத்தில் சரத் பேருந்திலிருந்து இறங்கப் போக,
“ஐயோ!! என்ன என்ன அண்ணா நீங்க?! நாங்க சும்மா உங்க மேல உள்ள பாசத்துல இப்படி ஆசையா சொன்னா இப்படியா கோச்சுக்குவீங்க! ப்ளீஸ் வாங்க அண்ணா. நீங்க இல்லாம இந்த டூரே களைகட்டாது!” என்று மையு ஒருவழியாய் சமாதானம் செய்து சரத்தை அமரச் செய்ய வண்டி அவர்களது சொந்த ஊரான விழுப்புரம் நோக்கிக் கிளம்பியது.
வண்டி கிளம்பியதும், “ஸ்டார்ட் தி மியூசிக்!” என்று கீர்த்தி, வண்டியில் இருந்த ஆடியோ ப்ளேயரை ஆன் செய்ய, அதில் ஒலித்த படலகளுக்கு ஏற்ப, சாரு, சரத், கிருஷ்ணன், ராதா இருவரின் வாரிசுகளும் ஆட்டம் போட கீர்த்தியும் ஆவலுடன் சேர்ந்து ஆட, பயணம் களை கட்டியது.
போட்ட ஆட்டத்தில் குட்டிகள் எல்லாம் எட்டு மணியளவில் சாப்பிட்டதுமே உறங்கிவிட, பெரியவர்கள் எல்லோரும் வீடியோ ப்ளேயரில் ஓடிக் கொண்டிருந்த படத்தில் ஐக்கியமாகி இருந்தனர்.
ப்ரியா, மற்றவர்களுக்காய் பிரேமின் அருகில் அமர்ந்திருந்தாலும் அவனைக் கொஞ்சமும் மனதளவில் நெருங்கவிடாமல், தன் முறைப்பினாலேயே தள்ளி நிறுத்தி இருந்தாள். உண்மை தெரிந்ததிலிருந்தே பிரேமிற்கு உள்ளூர உதறல் எடுத்துக் கொண்டுதான் இருந்தது. அதிலும் மையு வந்து பேசிவிட்டுச் சென்றது முதல் ப்ரியாவிடம் கெஞ்சலாய்க் கூட பேச பயந்து கொண்டு அமைதியாகவே இருந்தான். தங்கள் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றுவிடலாம் என்று நினைத்தபோது திடீரென்று இந்தக் குலதெய்வ வழிபாட்டிற்காய் சொந்த ஊர்ப் பயணம். எல்லோரும் வந்தே ஆக வேண்டும் என்பது தங்கமலர், ராஜசேகரின் கட்டளை. வேறு வழியின்றிக் கிளம்பி இருந்தான் அவர்களோடு.
பேருந்தின் உள்விளக்குகள் அணைக்கப் பட்டு எல்லோரும் படத்தில் மூழ்கியிருக்க, தன் தோள் மீது தலைசாய்த்துப் படத்தில் மூழ்கி இருந்த தனது மனைவியின் முகத்தை மெல்ல நிமிர்த்தியவன்,
“இந்த உலகத்துல இருக்க எல்லோரை விடவும் நான்தான் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு தோணுது! என் வாழ்க்கையில இத்தனை வருஷம் நான் அனுபவிச்ச நரக நொடிகளுக்குக் காரணம் ஈடு இணையே இல்லாத இந்த சொர்க்க நொடிகளைக் கொடுக்கத்தானோன்னு தோணுது! என் வாழ்க்கை முடிஞ்சே போச்சுன்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு வாழ்க்கையா, வரமா, காதலா, எல்லாமாவும் நீங்க கிடைச்சிட்டீங்க!” என்று கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக மையு அவனை இறுகக் கட்டிக் கொள்ள, மித்ரன் மென்மையாய் அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு தன் காதலை வெளிபடுத்தினான் வார்த்தைகள் இன்றி.
சில நொடிகள் அமைதி காத்தவள், “எப்படியோ தொல்லை பண்ணி உங்களை என்ன லவ் பண்ண வச்சிட்டேன்ல!” என்று அவள் நிமிர்ந்து குறும்பாய் அவன் முகம் பார்த்துக் கேட்க,
“ம்!” என்று மென்மையாய்ச் சிரித்தான் அவன்.
“என்ன ம் ன்னு சொல்லி சிரிக்கிறீங்க?! அப்போ தொல்லை பண்ணித்தான் உங்களை லவ் பண்ண வச்சேனா?!” என்றாள் முகம் சுருக்கி.
“ம்!” என்று அவன் மறுபடியும் அவளை வெறுப்பேற்ற,
“ப்ச் போங்க! அப்படி ஒண்ணும் என்னை லவ் பண்ண வேண்டாம்!” என்று அவள் கோபமாய் விலக முற்பட, அவளை இறுகப் பற்றி விலக முடியாமல் தன் கை வளைவுக்குள் வைத்துக் கொண்டவன்,
“ப்ச் விடுங்க ஒண்ணும் வேணாம்! தொல்லைப் பண்ணி எல்லாம் என்னை லவ் பண்ண வேணாம்!” என்று முறுக்கிக் கொண்டு நகர முயன்றவளை,
“நீ சொன்னா விட்டுட முடியுமா?!” என,
“நான் தொல்லை பண்ணிதான லவ் பண்ணீங்க அப்போ நான் வேணாம்னு சொன்னா விட்டுட வேண்டியதுதானே?!” என்று அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சொல்ல,
“அடிவிழும் மானும்மா! விளையாட்டுக்குக் கூட இந்த மாதிரி வார்த்தைங்க வரக் கூடாது!” என்று கடினமாய் சொன்னவன் முகத்தில் இத்தனை நேரம் இருந்த சந்தோஷம் காணாமல் போக, விளையாட்டிற்காய் கோபம் கொண்டு வார்த்தையை விட்டவளோ,
“சாரி சாரிங்க! நீங்க என்னை வெறுப்பேத்தினதுனாலதான் நானும் சும்மா அப்படி சொன்னேன்!” என்று கெஞ்சத் துவங்க,
“பேசாம படுத்துத் தூங்கு” என்றான் அவளிடமிருந்து எழுந்து கொள்ள முயன்று.
“அதான் சாரி சொல்டேன்ல! கோபம் வேணாம் ப்ளீஸ்!” என்று அவள் அவன் கைபிடித்துக் கொஞ்ச,
“கோபமெல்லாம் இல்லை படுத்து ரெஸ்ட் எடு மானும்மா ஊருக்குப் போனா ரெஸ்ட் எடுக்க நேரம் இருக்காது” என்று அவன் இரண்டு அர்த்தத்தில் சொல்ல,
“ஏன் ஏன்?!” என்று அவள் புரியாமல் கேட்க, அவன் குறும்புச் சிரிப்புடன் அவளை மெல்ல படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அவள் காதில் ஏதோ ரகசியம் சொல்ல, அந்தக் கருத்தக் கண்ணழகியின் முகம் செந்தூரமாய்ச் சிவந்தது…