அப்பாவிடம்தான் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனுக்கு, அம்மாவிடமிருந்து வந்த எதிர்ப்பு சொல்லொணா வேதனையைக் கொடுத்தது. ஆனாலும் யாருக்காகவும் தான் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் வழக்கம் இருந்ததில்லை தன் நினைவு தெரிந்த நாளிலிருந்தே!
அவளை ஏற்பதற்கு முன் வேண்டுமானால் அவன் ஆயிரம் முறை யோசித்திருக்கலாம்! அவள் தன்னவள் என்று முடிவு எடுத்த பின் அதில் இருந்து பின்வாங்குவது யாருக்காகவும் நடக்காத ஒன்று.
மலர் அங்கிருந்து சென்ற சில நிமிடங்களுக்குப் பின் மனதோடு நடந்த போராட்டத்திற்கு ஓர் முடிவு கட்டிவிட்டு அங்கிருந்து எழுந்தான்.
மையு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த இரண்டு மணி நேரங்களுக்குப் பின், அந்த மருத்துவமனைக்குள் மகளைத் தேடி விசாரித்து அவளின் அறையை அடைந்திருந்தார் சாந்தி.
சரியாய் அவர் உள்ளே நுழையும் போது, அவன் மையுவிற்காய் எடுத்த சிடி ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பற்றி,
“நல்லவேளை! பெருசா எந்தப் பிரச்சனையும் இல்லை! மைல்ட் மசில் ஸ்ட்ரையின்தான்!” என்று மையுவிடம் சொல்லிக் கொண்டிருக்க,
“எ என்ன தம்பி ஆச்சு அவளுக்கு?! இப்படி சொல்லாம கொள்ளாம நீங்களே கூட்டிடுட்டு வந்துட்டீங்களே?! ஒரு வார்த்தை எனக்கு போன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல?!” என்று அவனிடம் கேட்டவர்,
“என்ன என்னடி ஆச்சு உனக்கு?! ஹாஸ்பிட்டல் துணியெல்லாம் போட்டுக்கிட்டு இருக்க?! அப்படி என்னதான் வந்து தொலைஞ்சது உனக்கு அறை நாளுக்குள்ள?!” என்று சாந்தி பயத்திலும், கோபத்திலும் மையுவிடம் எரிந்து விழ,
“இப்போ எதுக்கு அவகிட்ட கத்துறீங்க?! தப்பு பண்ணது நீங்க?! அவளைத் திட்ட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?!” என்றான் மித்ரன் கடுமையாய்.
“இல்ல, இல்லை தம்பி! காலையில போகும்போது நல்லாத்தானே இருந்தா? அதுக்குள்ள என்ன வந்துச்சு?!” என்று அவர் சற்றே கோபம் குறைத்து அவனிடம் பேச,
“ஜூரமெல்லாம் சொல்லிக்கிட்டு வராது!” என்று கடினமாய்ச் சொன்னவன்,
“இனி உங்களை எல்லாம் நம்பி அவளை உங்க வீட்டுக்கு அனுப்புறதா இல்லை!” என்றான் ஏதோ அவள் தனக்கு மட்டுமே உரியவள் போல்.
அவனின் அந்த வார்த்தையில் சாந்தி விலுக்கென்று அவன் புறம் திரும்ப, மையு கலக்கத்துடன் இருவரையும் பார்த்திருந்தாள்.
“என்ன தம்பி?! பேச்சு எல்லாம் வித்தியாசமா இருக்கு?!” என்றார் சாந்தியும் குரலை உயர்த்தி.
“உங்க பொண்ணு மையுவை நான் கல்யாணம் செய்துக்க முடிவு பண்ணிட்டேன்! சீக்கிரமே முறைப்படி எல்லாம் நடக்கும்! அதுவரைக்கும் மையு எங்க கெஸ்ட் ஹவுஸ்லலேயே இருக்கட்டும்” என்று அவன் பாட்டிற்குப் பேசிக் கொண்டே போக, மையுவிற்கு உதறல் எடுத்தது.
‘என்ன இந்த மனுஷன்?! ஒரேயடியா ஷாக் மேல ஷாக் குடுக்குறாரு இன்னிக்கு?! அய்யய்யோ இந்த அம்மா வேற ஸ்லோ மோஷன்ல லுக்கு வுடுதே!’ என்று மையு உள்ளுக்குள் அலற,
“என்னடி?! என்னடி பண்ணி வச்சிருக்க?!” என்று மையுவை அடிக்கக் கையோங்கிக் கொண்டு போனார் அவனிடம் கோபத்தை நேரடியாய்க் காட்ட முடியாது.
“நிறுத்துங்க!” என்று தன் ஒரே கர்ஜனையில் அவரை அடக்கியவன்,
“அவ மேல ஒரு அடி விழுந்தாலும்,” என்று அவன் எச்சரிக்கையாய் சொன்ன விதத்தில், சாந்தி மட்டுமல்ல மையுவும் ஆடித்தான் போனாள்.
ஆனாலும் பெற்ற மகளாயிற்றே அவன் சொன்னதும் அப்படியே நம்பி தூக்கிக் கொடுத்து விட முடியுமா என்ன?! அதுவும் இந்த நிலையில் இருக்கும் பெண்ணை!
“என்ன தம்பி?! இருபத்தி ஆறு வருஷமா வளர்த்தவங்களுக்கு இல்லாத உரிமை, நேத்து பழகின உங்களுக்கு வந்துடுச்சோ?!” என்று குத்தலாய்க் கேட்ட சாந்தி,
“இது எங்க பொண்ணு விஷயம் நாங்கதான் முடிவு எடுப்போம்!” என,
“அ அம்மா! ந நானும் அவரை வி விரும்பறேன்!” என்றாள் மையு சற்றே தைரியத்தை வரவழைத்து. மையுவின் வார்த்தையில் திடுக்கிட்டுப் போன சாந்தி,
“எ என்னடி சொல்ற நீ?!” என்றார் அதிர்வுடன்.
“இப்போ எதுக்கு இவ்ளோ அதிர்ச்சியாகுறீங்க?! உங்களைவிட நான் அவளை நல்லாவே பார்த்துக்குவேன்” என்றவன், கலக்கத்துடன் நின்றிருந்த சாந்தியைப் பார்த்து, சற்றே தன் கோபத்தை தணித்து,
“சாரி! அவளை அந்த நிலைமையில பார்த்ததும் உங்கமேலதான் முதல்ல கோபம் வந்தது! அதான்..” என்றவன்,
“உங்க வேலை உங்களுக்கு முக்கியம்தான். நான் இல்லைன்னு சொல்லலை! ஆனா அவ இப்படி இருக்க நிலைமைல கொஞ்சம் கவனமா இருக்க வேண்டாமா எப்போவும்! அவளுக்கு முடியலைன்னா எழுந்து போய் யாரையும் உதவிக்கு கூட கூப்பிட முடியாதுல்ல!” என்று நிறுத்த சாந்திக்குமே அந்த உண்மை புரிந்தாலும், ஒரு நல்லது கெட்டதிற்கு கூட போகாமல் இருக்க முடியுமா?! என்பது அவர் எண்ணம்.
“சரி அது முடிஞ்சு போன விஷயம். இனி பேசி ஒண்ணும் இல்லை!” என்றவன்,
“இப்போ ஜூரம் விட்டுடுச்சு! திரும்ப வாரதுன்னு நினைக்கிறேன். ஏன்னா கைவலியோட தாக்கத்துனாலதான் காய்ச்சல் வந்திருக்கு. இப்போ கைவலிக்கும் டேப்லெட்டும், ஜெல்லும் கொடுத்திருக்கோம்! சோ இனி ஜூரம் வர வாய்ப்பில்லை! ஆனாலும் சாயந்திரம் வரைக்கும் இங்க இருக்கட்டும். அப்புறம் டிஸ்சார்ஜ் பண்றேன்.” என்று அவன் சொல்லிக் கொண்டே போக, சாந்தி பதில் ஏதும் பேசாது நின்றார்.
“சரி! நான் போய் அவளுக்கும், உங்களுக்கு லஞ்ச் ஆர்டர் பண்ணிட்டு வரேன். அவளைப் பத்திரமா பார்த்துக்கோங்க.” என்றுவிட்டு அவன் வெளியேற, சாந்தி மையுவைக் கொலைவெறியுடன் பார்த்தார்.
‘அய்யய்யோ! இப்படி கோர்த்துவிட்டுட்டு எஸ்கேப் ஆகுறியேய்யா?! ஆத்தா சாமி ஆடிடுமே!’ என்று மையு பாவமாய் சாந்தியை பார்க்க,
“இப்படி பாவமா மூஞ்சியை வச்சு வச்சுதான் அந்த மனுஷனை உன் பக்கம் இழுத்தியா?!” என்று சாந்தி எடுத்த எடுப்பிலேயே வார்த்தையை விட, மையுவிற்கும் சட்டெனக் கோபம் வந்துவிட்டது.
“எனக்கு அவரைப் பிடிச்சிருந்தது! அதே மாதிரிதான் அவருக்கும்! அவர் ஒண்ணும் என்மேல பரிதாபப் பட்டு என்னை விரும்பலை!” என்று சீற,
“இதெல்லாம் கேட்க நல்லாதான்டி இருக்கு! ஆனா நடமுறைக்கு இதெல்லாம் ஒத்து வராது!” என்ற சாந்தி,
“அந்த தம்பி இப்போ உன்மேல இருக்க காதல்ல ஏதேதோ சொல்லிட்டுப் போகுது! இதெல்லாம் எதுவரைக்கும் நிலைக்கும்?! நீ இருக்க நிலைமை தெரிஞ்சும் உனக்கு ஏன்டி இப்படிப் பட்ட ஆசையெல்லாம்?!” என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு கேட்டவரின் கண்களும் குளமாகித்தான் போயின.
எந்தத் தாய்க்குதான் தன் மகளுக்கு நல்ல வாழ்க்கைக் கிடைப்பதில் சந்தோஷம் இருக்காது! ஆனால் தானே தன் மகளை இப்படி ஒரு கேள்வி கேட்க வைத்துவிட்டானே ஆண்டவன் என்று தன்னையே நொந்து கொண்டவர்,
தன் மகளை இப்படி ஒரு நிலையில் ஒருவனுக்கு மணம்முடித்துக் கொடுத்துவிட்டு, பின்பு அவளுக்கு ஏதேனும் விபரீதம் நிகழ்ந்துவிட்டால்?! நாளை அவன் வேண்டாமென்று விட்டுப் போய்விட்டால், இல்லை அவன் வீட்டினர் அவளை காயப்படுத்தினால் என்று ஏதேதோ எண்ணம் போக,
‘இல்லை என் பொண்ணு முடமா இருந்தாலும் என்கிட்டயே இருக்கட்டும். என் உசிரு இருக்க வரைக்கும் நானே அவளைப் பார்த்துக்குவேன்!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். அம்மாவின் கலங்கிய கண்களைப் பார்த்த மையுவிற்கு அவர் மீது எழுந்த கோபம் போய் தாயின் உள்ளம் புரிய,
“ம்மா! நீ என்ன யோசிக்கிறன்னு எனக்குப் புரியுதும்மா?! அவர் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எந்தக் காலத்திலும் நடந்துக்க மாட்டார்! எனக்குமே என் மனசுல முதல்ல இந்த நினைப்பு வந்தபோது ரொம்ப பயமாதான் இருந்தது. ஆனா அவர் என்னைக் கஷ்டப்படுத்திடுவாரோன்னு இல்லை! நான் அவரைக் கஷ்டப்படுத்திடுவேனோன்னுதான்!” என்ற மகளை சாந்தி கவலையுடன் பார்க்க,
“நாங்க நல்லா இருப்போம்மா! அவர் என்னை நல்லா பார்த்துப்பார் ம்மா!” என்றவள், சட்டென தன்னருகே நின்றிருந்த தாயின் கைகளைப் பிடித்து,
“நான் இன்னும் எவ்ளோ வருஷம் வாழ்வேன்னு எனக்குத் தெரியாது! ஆனா எஞ்சியிருக்க கொஞ்சம் வருஷமாவது அவரோட அவர்கூட அவர் மனைவியா வாழ்ந்துட்டு செத்துப் போகணும்னு ஆசையா இருக்கும்மா! ப்ளீஸ்!” என்று கண்கள் கலங்கக் கேட்க, மகளைப் பாசமும், வேதனையும் ஒருசேர கட்டிக் கொண்டார் சாந்தி.
கடைசியாய் அவள் சொன்ன வார்த்தைகள் அப்போது அறையை நோக்கி வந்தவன் காதிலும் விழ, அவன் நெஞ்சமும் பாறாங்கல்லாய் கனத்துப் போனது.
‘இல்லை! இல்லை மானும்மா! உன்னை அவ்ளோ சீக்கிரம் என்னைவிட்டுப் போகவிடமாட்டேன்! என் அன்பு உன்னை என் காலம் முழுக்க என்னோடு வாழ வைக்கும்!’ என்று சொல்லிக் கொண்டான் நெஞ்சோடு.
*****
மையு மருத்துவமனையில் இருக்கும் செய்தியறிந்து, அவள் அப்பா முருகேசனும், தங்கை காயத்திரியும் மதியம் மூன்று மணியளவிலேயே பர்மிஷன் கேட்டுக்கொண்டு வந்திருந்தனர் மருத்துவமனைக்கு. விவரம் அறிந்த காயத்திரி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து அக்காவைக் கட்டிக் கொள்ள, முருகேசனோ, சாந்தியைப் போலவே முதலில் கலக்கம்தான் கொண்டார். அவரும், காயத்ரியும் அவனைப் பார்த்தது கூட இல்லை! தன் மகளுக்குக் கல்யாணம் நடக்குமா என்றே நினைத்திராதவருக்கு, சாந்தி சொன்ன செய்தி சந்தோஷத்தையும் கூடவே பயத்தையும் சேர்ந்தே தருவித்தது. ஆனாலும் மகளின் அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கும் சிறு நம்பிக்கையைக் கொடுத்தது.
மாலை சர்ஜரிகளை முடித்து ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த ராஜசேகர், மையுவைப் பார்க்க, அவளின் அறைக்குச் சென்றார்.
மையுவின் குடும்பத்தினர் அவள் உடன் இருப்பதால், மித்ரன் காலையில் தன் நோயாளிகளுக்குக் கொடுக்கத் தவறிய பயிற்சிகளைக் கொடுக்கச் சென்றிருக்க, மையுவின் அப்பாவும், அம்மாவும், காயத்ரியும் மட்டும்தான் அங்கிருந்தனர்.
அவர் வருவதைப் பார்த்ததும், அந்த ஸ்பெஷல் வார்டின் மூத்த செவிலியர் அவரைப் பார்த்துவிட்டு வேக நடையிட்டு வர,
“ரவுண்ட்ஸ் வரலை சிஸ்டர்! பெர்சனலா தான் ஒருத்தரைப் பார்க்க போறேன். யூகேரி ஆன் வித் யுவர் டியுடி.” என்றுவிட்டு ராஜசேகர் சென்றதும் அவர் புரிந்து கொண்டார் மைத்ரேயியைப் பார்க்கத்தான் செல்கிறார் என்று.
‘அந்தப் பொண்ணு ரொம்ப நெருங்கின சொந்தமா இருக்குமோ?! மித்ரன் சார் அப்படி பார்த்து பார்த்து கவனிச்சுக்கறார்! இப்போ சீஃப் டாக்டரும் வந்து பார்க்கறாரே?!’ என்று யோசித்தபடியே அவர் தனது பணியைத் தொடர்ந்தார்.
ராஜசேகர் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்ததும், மற்றவர்கள் மருத்துவர் என்று நினைத்து எழுந்து பவ்யமாய் நிற்க, மையு அவரை ஏற்கனவே ப்ரியாவின் நிச்சய புகைப்படத்தில் பார்த்திருந்ததால்,
“வ வாங்க மாமா!” என்றாள் தயக்கமும் சந்தோஷமும் ஒருசேர.
அவளின் மாமா என்ற அழைப்பில் மற்றவர்களும் அவர் மித்ரனின் தந்தை என்பதைக் கண்டு கொள்ள, அவரின் கம்பீரமும், தோரணையும் கண்டு அவருடன் பேசவே முடியாது நின்றனர்.
“ம்! இப்போ கை வலி பரவாயில்லையா மா?! ஜூரம் திரும்ப வரலையே?!” என்று அவள் அருகே வந்து கையைத் தொட்டுப் பார்த்து அவர் கேட்க,
“இ இல்லைங்க மாமா!” என்றாள் திக்கித் திணறி.
“பீ ரிலார்க்ஸ்ட் மை சைல்ட்!” என்று அவள் தலையை வருடிக் கொடுத்தவர்,
“பெத்தவங்களா உங்க மனநிலை இப்போ எப்படி இருக்கும்னு என்னாலயும் புரிஞ்சிக்க முடியுது! தைரியமா நீங்க நம்பி உங்க பொண்ணை என் பையனுக்குக் கொடுக்கலாம்! அவன் என் மருமகளை குழந்தையைப் போல பார்த்துக்குவான்!” என்று மையுவைப் பெற்றவர்களைப் பார்த்துச் சொல்லிவிட்டு,
“நான் சொல்றது சரிதானே மருமகளே?” என்று மையுவைப் பார்க்க,
“ம்! ம்! மாமா!” என்றாள் நெகிழ்வுடன் தனது கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே.
“சந்தோசமான நேரத்துல எதுக்கும்மா இந்த அழுகை?!” என்று மருமகளைக் கண்டித்தவர்,
“ஆனா, ஒரு மாமனாரா உன்கிட்ட எனக்கு ஒரே ஒரு கோரிக்கை இருக்கும்மா,” என்றார்.
“எ என்ன மாமா?! கோரிக்கைன்னு எல்லாம், நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்” என்ற மையுவைப் பார்த்து,
“இனி ஒருநாளும் எந்தக் காரணத்துக்காகவும், நீ உன்னோட பயிற்சியைக் கைவிடக் கூடாது!” என்று நிறுத்தியவர்,
“ஏன்னா என் மகனும், என் மருமகளும் ரொம்ப வருஷம் ஒண்ணா சந்தோஷமா வாழணும்!” என்றவருக்கு சற்றே நா தழுத்தழுத்ததோ என்னவோ, ஆனால் அதைக் கேட்ட மற்றவர்களுக்கு உள்ளம் கலங்கி விட்டது.
“ம்!” என்று நெகிழ்வோடு இசைவாய்த் தலையசைத்தவள்,
“நிச்சயமா, நிச்சயமா மாமா! ஒரு மனைவியா மட்டும் இல்ல, ஒரு மருமகளாவும், நம்ம குடும்பத்துக்கு நான் என்னோட எல்லா கடமையையும் பூரணமா நிறைவேத்திக் கொடுப்பேன்” என்றாள் மையு எதையோ நெஞ்சில் நிறுத்தி.
இதையெல்லாம் பார்த்திருந்த மையுவின் பெற்றோரின் மனமும் மகிழ்ச்சியில் நிறைந்துதான் போனது மகளுக்கு இப்படிப்பட்ட குடும்பத்தில் வாழ்க்கை கிடைத்திருப்பதை எண்ணி.
*****
மித்ரன் ஏதோ கோபத்தில் சொல்கிறான் என்று நினைத்திருந்த மையுவும், சாந்தியும் அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது அவன் தங்களது வீட்டிற்குச் செல்லும் பாதையில் வண்டியைச் செலுத்தாமல் வேறு பாதையில் வண்டியை செலுத்துவதைக் கண்டு,
“தம்பி.. தப்பா எடுத்துக்காதீங்க! உங்க கோபம் நியாயமானதுதான்! ஆனா இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் உங்க வீட்டுக்கு வந்து தகுறது தப்பு தம்பி” என, அவன் அமைதியாகவே வண்டியைச் செலுத்தினான்.
அவன் பதில் சொல்லாமல் மீண்டும் அவன் போக்கிலேயே வண்டியைச் செளுத்வோதைப் பார்த்து,தன் கணவர் முருகேசனிடம்,
‘சொல்லுங்க!’ என்றார் சாந்தி ஜாடைக் காட்டி.
“நீ ஒழுங்கா என் பொண்ணைப் பார்த்துட்டு இருந்திருந்தா இப்போ நான் பேச முடியும்?! நீ பண்ண வேலைக்கு நான் என்னன்னு பேச?!” என்று முருகேசன் மெல்லிய குரலில் முணுமுணுக்க,
“என்ன மாமா சொல்றாங்க அத்தை?!” என்றான் மித்ரன் ஒன்றும் அறியாதவன் போல்.
“அது ஒண்ணுமில்லங்க மாப்ளை! என்ன இருந்தாலும் அவ சொல்றதும் சரிதானே! உரிமையோடு மையு உங்க வீட்டுக்கு வராதுதானே சரி” என்றார் உலக நடப்பு புரிந்தவராய்.
“அதெல்லாம் நாமளா சொல்லிகிட்டதுதானே மாமா” என்றவன்,
“இன்னும் அஞ்சு நாள்ல, அதான் வர்ற வெள்ளிக்கிழமை எங்க கல்யாணம்! அதுக்கு எதுக்கு மையுவை இங்கயும் அங்கயும் அலைய வச்சுக்கிட்டு! அதுமட்டும் இல்லாம மையுவோட சேர்ந்து நீங்க எல்லோருமே கல்யாணம் முடியும் வரை இங்கயே இருந்தா கல்யாணத்துக்கு தேவையானதை எல்லாம் உங்க எல்லோர்கிட்டயும் கலந்து பேசி முடிவெடுக்கலாம்ல. அதான் எல்லோரையும் இங்கயே அழைச்சிட்டு வந்துட்டேன்.” என்று அவன் சொல்ல மையு உட்பட அனைவருமே ஸ்தம்பித்துப் போயினர்.
“ம்ஹும்! இப்படி ஒரே நாள்ல இவ்ளோ ஷாக்கு குடுத்தா தாங்க முடியாதுய்யா! நம்மால தாங்க முடியாது!” என்று மையு முனகியபடி தனது தங்கையின் தோளில் மயங்கி விழுவது போல் சரிய, கண்ணாடி வழியே அவளின் ரியாக்ஷனை குறும்புடன் பார்த்திருந்தான் அவளின் சங்கமித்ரன்…