அவளை ஏற்றுக் கொள்ள முடியாத ஒவ்வொவொரு நொடியும் மனம் சித்ரவதையை அனுபவிக்க, இரவு முழுக்க தூங்காமல் மொட்டைமாடிப் பனியில் படுத்திருந்ததன் விளைவு, பயங்கர தலைவலியோடு, கண்களின் எரிச்சலும் சேர்ந்து அவனைப் பாடாய்ப் படுத்தியது.
விடியற்காலை மற்றவர்கள் எழும் முன்பு தன் அறைக்குள் வந்து படுத்துக் கொண்டவன், அப்போதும் அவளிடம் இருந்து குட்மார்னிங் மெசேஜ் வந்திருந்ததா என்று பார்க்க, அப்போதும் எந்த மெசேஜும் வந்திருக்கவில்லை!
‘என்ன ஆச்சு இவளுக்கு?! நான் ரிப்ளை பண்ணலைனாலும் இத்தனை நாளா அனுப்பிட்டு தானே இருந்தா?! அப்படியே அனுப்ப வேண்டியதுதானே?!’ என்று தனது வயதை கூட மறந்து பதின் வயது பிள்ளைகளின் மனம் போல் அவளிடமிருந்து வரும் குறுஞ்செய்திக்காய் அலைபாய்ந்த மனதை தானே திட்டித் தீர்க்கவும் மறக்கவில்லை!
‘இல்லை! இன்னைல இருந்து என்ன ஆனாலும் சரி நான் அவங்க வீட்டுக்குப் போகக் கூடாது!’ என்று தீர்மானித்துக் கொண்டவன், தலைவலி மாத்திரை ஒன்றைப் போட்டுக் கொண்டு, நேற்றுத் தூக்கிப் போட்டதில் டெம்பர்கிளாஸ் உடைந்து போயிருந்த தனது கைபேசியை பார்த்து, இவளால இன்னும் என்னென்ன பண்ணப் போறேனோ!’ என்று தான் உடைத்ததற்கும் சேர்த்து அவளையே திட்டிவிட்டு, அதனை மொத்தமாய் ஸ்விட்ச ஆப் செய்துவிட்டுக் கண்களை இறுக மூடிப் படுத்துக் கொண்டான்.
அவனது செயல்கள் அவனுக்கே சில நேரம் சிரிப்பாகவும், பல நேரம் வேதனையாகவும் இருந்தது. ஆனாலும் விதியைப் போல் அன்பும் வலியதல்லவா! அதான் மறக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் அவளையும் வருத்தித் தன்னையும் வருத்திக் கொண்டிருந்தான் செய்வதறியாமல்.
இரவு முழுக்கத் தூங்காமல் இருந்ததன் அசதி மாத்திரையைப் போட்டதும் கண்கள் சொக்கி கொண்டு வர, சில நொடிகளில் உறக்கத்திற்குச் சென்றுவிட்டான் தனைமறந்து.
தங்கமலர் அவன் அறைக்கதவு சாற்றி இருப்பதைக் கண்டு, காலை உணவுண்ண அழைப்பதற்காய் அவனது அறைக்கதவை மெல்லத் தட்ட, அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை!
‘ராத்திரி ரொம்ப நேரம் முழிச்சிருந்திருப்பானோ?! இல்லாட்டி இவ்ளோ நேரம் தூங்க மாட்டானே?!’ என்று எண்ணிக் கொண்டவர்,
‘ஆண்டவா! என் பிள்ளைக்கு என்னதான் பிரச்சனை?! எதுவா இருந்தாலும் நீதான் அவனுக்குத் துணையா இருக்கணும்!’ என்று தன் கவலையை இறைவனிடம் ஒப்படைத்து விட்டு மற்றவர்களை கவனிக்க வேண்டுமே என்று அங்கிருந்து சென்றார்.
“என்னம்மா மித்ரன் இன்னும் வரலை?” என்று ராஜசேகர் கேட்க,
“இல்லைங்க அவனுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை! அதான் படுத்துட்டு இருக்கான்” என்று சமாளித்தார் மலர்.
“என்ன ஆச்சு?!” என்றார் அவர்.
“அ அது ரொம்ப தலைவலி போலங்க! நீங்க சாப்பிட்டுக் கிளம்புங்க! உங்களுக்கு நேரமாகுதுல்ல! அவன் இன்னிக்கு ஒருநாள் லீவ் எடுத்துக்கட்டுமே” என்று மலர் சொல்ல, மனைவியை நிமர்ந்து பார்த்தவர்,
‘என்னவோ மறைக்கிறாங்க அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து! ம் எவ்ளோ நாள்தான் மறைக்கிறாங்கன்னு பார்ப்போம்!’ என்று எண்ணிக் கொண்டவர் மேலும் தங்கமலரைச் சோதிக்க விரும்பாமல் அமைதியாய் உண்டுவிட்டுக் கிளம்பினார்.
சரத்தின் குறுக்கு புத்தி மட்டும் இப்போதும் எதைஎதையோ கணக்குப் போட்டுக் கொண்டுதான் இருந்தது.
‘ம்ஹும்! ஏதோ சரியில்லை இந்த மித்ரன் பையக்கிட்ட! எனக்கு வாச்சிருக்க பொண்டாட்டி ஒரு தெண்டம்! அது எதையுமே இதுவரைக்கும் கவனிச்சிருக்காது! கண்டுபிடிக்கிறேன் நானே கண்டுபிடிக்கிறேன்!’ என்று சொல்லிக் கொண்டான் மனதுள். நீ என்னடா கண்டுபிடிக்கிறது அவனே இந்த எபில உங்களுக்கு ஷாக் கொடுப்பான் கவலைப் படாத!’)
பதினொரு மணியளவிலேயே அவன் உறக்கம் களைந்து எழ, மணியைப் பார்த்தவன்,
‘ஐயோ இவ்ளோ நேரமாவா தூங்கி இருக்கோம்!’ என்று எழுந்தவன், மீண்டும் தன் கைபேசியை எடுத்துப் பார்க்க, அப்போதும் அவளிடமிருந்து எந்த செய்தியும் இல்லை! அதோடு அவளது வாட்சப்பின் லாஸ்ட் சீன் நேரத்தையும் பார்க்க, இரவு ஒரு மணிவரை மட்டுமே செயல்பட்டதாய் காண்பிக்க,
‘ஏன்னா ஆச்சு இவளுக்கு?! ஆன்லைன் வராம இருக்க மாட்டாளே! ஒருவேளை உடம்புக்கு எதுவும்!’ என்று யோசனை செல்ல, மனம் பதறியது.
இதுவரை தான் நினைத்ததை எல்லாம் நொடியில் மறந்தவன், உடனே அவள் கைபேசிக்கு அழைக்க அது சுவிட்ச் ஆப் என்று வர மேலும் பயந்து போனான்.
‘ப்ச் போனை எதுக்கு ஆப் பண்ணி வச்சிருக்கா?!’ என்று வாய்விட்டுப் புலம்பியவன், வேகமாய் படுக்கையில் இருந்து எழுந்து ஐந்தே நிமிடத்தில் தயாராகி வெளியே வந்தான்.
எப்போதும் தாயிடம் சொல்லிக் கொண்டு கிளம்புபவன், அன்று சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மலரைக் கூட கவனிக்காமல், வேகமாய் வெளியேற, வாய்திறந்து அவனைக் கூப்பிட எத்தனித்தவர், அவனின் வேகத்தைக் கண்டு,
‘ஏதோ அவசரமான விஷயம் போல! இல்லாட்டி என்னைப் பார்க்காம கிளம்ப மாட்டானே! போகும்போது கூப்பிட வேண்டாம்!’ என்று நினைத்து அமைதியாய் இருந்துவிட்டார்.
அவளைப் பார்க்க வேண்டாம், பேச வேண்டாம், நினைக்க வேண்டாம் என்று தினம் தினம் அவன் நினைப்பது ஒன்றாகவும் செயல்படுவது ஒன்றாகவும் இருக்க, அவனுக்கே பெரும் போராட்டமாகிப் போனது வாழ்வு.
நிமிடங்களில் அவள் வீட்டை அடைந்தவன், வீட்டின் ரோட்டுப்புறமாய் அமைந்திருக்கும் அவள் அம்மாவின் தையல் கடையும் அன்று திறந்திருக்காதது கண்டு,
‘ஐயோ நிஜமாவே நான் நினைச்ச மாதிரி அவளுக்கு உடம்பு முடியலையோ! அதனாலதான் அவ அம்மா கடை கூட திறக்கலையோ!’ என்று கலங்கியபடி உள்ளே செல்ல, அவர்கள் வீட்டின் வாயிற் கதவு ஒருக்களித்துச் சாற்றி இருக்க மையுவின் மெல்லிய அனத்தல் சத்தம்.
பதறிப் போய்க் கதவை நன்கு திறந்தவன், அவள் இருந்த நிலை கண்டு இரண்டே எட்டில் அவளை நெருங்கினான்.
தன் படுக்கையிலேயே வாந்தி எடுத்திருந்தவள், ஜூரத்தின் வேகம் தாங்கமுடியாமல் கண்மூடி அனத்திக் கொண்டு படுத்திருக்க, அவள் உடலின் அனலில் இருந்தே கண்டு கொண்டான் ஜூரத்தின் தீவிரத்தை!
“மானு மானும்மா!” என்று அழைத்துக் கொண்டே, அருகே இருந்த ஒரு துண்டை எடுத்து தண்ணீரில் நனைத்து அவள் வாயைத் துடைத்துவிட, அவள் முனகலோடு கண்களைத் திறந்தாள்.
ஜூரத்தின் வேகத்தில் உலர்ந்து போயிருந்த அவளின் உதடுகளைக் கண்டு,
“ஒ ஒரு நிமிஷம்டா!” என்றவன் ஓட்டமும் நடையுமாக அவர்கள் வீட்டின் சமையலறைக்குள் சென்று, வெதுவெதுப்பாய் சிறிது தண்ணீரை சூடு செய்து எடுத்து வந்து மெல்ல அவளை எழுப்பி அவளுக்குப் புகட்டினான் அவளைத் தன் தோள் மேல் சாய்த்துத் தாங்கியபடியே.
அவள் மெல்லத் தண்ணீர் பருகி முடிக்கவும், “காலையில இருந்து தண்ணி கூட குடிக்கலையா?! உதடு இவ்ளோ உலர்ந்து போய் இருக்கு?! உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாம் எங்கதான் போய்த் தொலைவாங்க எப்போவும்?!” என்று பொரிய, அந்நிலையிலும் வீட்டினரைச் சொன்னதும் அவளிடம் முறைப்பு.
“இந்த முறைப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல! இவ்ளோ ஜூரம் அடிக்குதுல! ஒரு போன் பண்ணி என்னைக் கூப்பிடக் கூடாதா?! நான் போன் பண்ணாலும் சுவிட்ச் ஆப்!” என்று அவன் கடிய,
“போ போன் சார்ஜ் இல்லை! கரண்டும் இல்லை காலையில இருந்து!” என்று மெலிதான குரலில் அவள் சொல்ல,
“ஏன் திடீர்னு ஜூரம் வந்தது?! ஏதாவது சேராததை சாப்டியா?!” என்றவனிடம் தன் கையைத் தூக்கிக் காண்பித்தவள்,
“னே நேத்து, நான் வேணும்னே அப்படிப் பண்ணேன்ல! அ அது இ இங்க பாருங்க. ரொ ரொம்ப வீங்கிட்டு! வலிக்குது ரொம்ப!” என்று அவள் கையைக் காண்பிக்க, அதைப் பார்த்தவனுக்கு ஐயோ என்றானது!
அவள் செய்த குறும்பில் அவள் விளையாட்டாய் நடிக்கிறாள் என்று எண்ணிதானே வேண்டுமென்றே மீண்டும் அவளைப் பயிற்சிகளை செய்யச் சொல்லி உத்தரவிட்டான்.
“முட்டாள் முட்டாள்! அறிவே இல்லயா உனக்கு!” என்று அவளைச் சாடியவன்,
“நீ நேத்து பண்ணதை வச்சு நீ சும்மாதான் நடிக்கிறன்னு நினைச்சு நான் வேற உன்னை!” என்று தன் மேல் எழுந்த கோபத்தில் தன் கை விரல்களை மடக்கி ஓங்கி அருகிருந்த சுவற்றில் குத்திக் கொண்டு தன்னையே வருத்திக் கொள்ள, அவள் பயத்தில் மிரண்டு போய்,
“இ இல்ல! வேணாம்! வேணாம்!” என்று கத்தினாள் தன் அசதியையும் மீறி உரத்த குரலில்.
அவள் பயப்படுவதைக் கண்டு தன் கோபத்தைக் கட்டுப் படுத்தியவன்,
“இல்ல இல்ல! பயப்படாதடா!” என்று அவளைத் தூக்கப் போக,
“எ என்ன பண்றீங்க?!” என்றாள் எதற்கு தூக்குகிறான் என்று புரியாமல்.
“ஹாஸ்ப்பிட்டலுக்குப் போகலாம்!” என்று அவன் அவளை மீண்டும் தூக்க முனைய,
“ம்ஹும்! வேண்டாம்” என்றாள் மறுப்பாய்.
“அப்புறம் இப்படி ஜூரத்தோடவும் கை வீக்கத்தோடவும் வீட்டிலேயே இருக்கிறதா உத்தேசமா?!” என்று கண்டிப்புக் குரலில் சொன்னவன், அவள் பேச்சைப் பொருட்படுத்தாமல் அவளைத் தூக்கிக் கொண்டு நடக்க,
“இ இல்லை! வேண்டாம்! அ அம்மா வேற வீட்ல இல்லை! வெளில யாராச்சும் பார்த்தா த தப்பா நினைப்பாங்க!” என்று அவள் தயங்கியபடி சொல்ல,
“நினைக்கட்டும்!” என்றவன், எதையும் பொருட்படுத்தாமல், அவளைத் தூக்கிக் சென்று காரில் படுக்க வைத்தான். அதைப் பார்த்த அவள் வீட்டின் அருகே இருந்த பக்கத்துக்கு வீட்டுப் பெண்மணி ஒருவர் அவன் காரின் அருகே வந்து,
“என்ன என்ன ஆச்சு மையு! எங்க எங்க கூட்டிட்டுப் போறார் இந்த டாக்டர்?!” என்று என்னமோ ஏதோ என்று பயந்து போய் கேட்க,
“ஒ ஒண்ணுமில்லைக்கா! கை, கை ரொம்ப வீங்கி வலி அதிகமாகிடுச்சு நேத்துல இருந்து! அதுல ஜூரமும் வந்துடுச்சு! அதான் ஹாஸ்ப்பிட்டலுக்கு” என்று அவள் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க,
“கொஞ்சம் வழி விடுறீங்களா! காரை எடுக்கணும்” என்றான் அவன்.
“என்ன டாக்டர் தம்பி நீங்க?! அவங்க அம்மா என்னை நம்பித்தான் அவளை விட்டுட்டுப் போனாங்க! நி நீங்க இப்படி அவளைத் தனியா கூட்டிட்டுப் போனா என்னைத்தான் கேட்பாங்க! கொஞ்ச நேரம் இருக்கீங்களா! இதோ என் வீட்டுக்காரரை வேலைக்கு அனுப்பி வச்சுட்டு நானும் கூட வரேன்” என்று அப்பெண்மணி சொல்ல, ஏற்கனவே அவளை இந்நிலையில் தனியே விட்டுச் சென்றிருந்த சாந்தியின் மேலும் அவள் வீட்டினரின் மேலும் இருந்த கோபம் பன்மடங்கு கூடியது.
“ஆமாமாம்! அதான் அவ காலையில இருந்து வாந்தி எடுத்துப் படுத்துக் கிடந்தப்போ ஓடி ஓடிப் போய் பார்த்துக்கிட்டீங்களோ?!” என்று நக்கலாய்க் கேட்டவன்,
“உங்களைச் சொல்லி என்ன ஆகப் போகுது?! அவங்க வீட்டு ஆளுங்களுக்கு…” என்று பல்லை கடித்துக் கொண்டு கோபத்தில் ஏதோ திட்ட வந்து வார்த்தைகளைக் கட்டுப் படுத்தியவன்,
“அவங்க வந்ததும் மலர் ஹாஸ்ப்பிட்டலுக்கு வர சொல்லுங்க” என்றுவிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான், அவன் இப்படிச் செய்வதனால் என்னென்ன பிரச்சனைகள் உருவாகும் என்பதைப் பற்றி நன்றாய் அறிந்திருந்தும்.
மையுவின் அப்பாவும், தங்கையும் எப்போதும் போல் வேலைக்குக் கிளம்பி இருக்க, சாந்தி அதிகாலையே ஊரில் இருக்கும் உறவினர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தார் பக்கத்துக்கு வீட்டுப் பெண்மணியிடம் அவளைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு.
காலை அவர்கள் கிளம்பும் போது எப்போதும் போல் மையு நெடுநேரம் விழித்துவிட்டு உறங்குகிறாள் என்று மற்றவர்களும் அவளைத் தொந்தரவு செய்யாமலேயே கிளம்பிவிட்டிருந்தனர். அதன் விளைவு இன்று அவனிடம் அவர்கள் என்னென்ன பேச்சு வாங்கப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தங்களது மருத்துவமனைக்குள் அவனது கார் நுழைந்ததுமே, காவலாளி சல்யுட் அடித்துக் கேட்டைத் திறந்து விட, அவன் நேராய் தங்களது எமெர்ஜென்சி பகுதியில் சென்று வண்டியை நிறுத்த என்னவோ ஏதோவென்று, உதவிப் பணியாளர்கள் விரைந்து அவனது வண்டியின் அருகே ஓடிவந்தனர்.
“டியூட்டி டாக்டரை என் ரூமுக்கு வரச் சொல்லுங்க! குவிக்!” என்று பணித்தவன், தனது கார்க் கதவைத் திறந்து தானே அவளைத் தூக்கப் போக,
“இ இல்லை வி வீல் சேர்” என்று அவள் சொல்லச் சொல்ல எதுவும் காதில் விழாதவன் போல் அவன் அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல, அனைவரும் அதிசயமும், ஆச்சர்யமுமாய் அவர்களை பார்த்தனர்.
டியூட்டி டாக்டர். தேவி வந்து அவளைப் பரிசோதித்துப் பார்த்து காய்ச்சலுக்கு ஊசி போட்டுவிட்டு, மாத்திரைகளையும் சொல்ல,
“ஓகே தாங்க் யூ டாக்டர்! சொன்னதும் உடனே வந்து பார்த்ததுக்கு” என்று அவன் நன்றி சொல்ல,
“இட்ஸ் மை டியூட்டி சார்!” என்றவர்,
“உங்க ரிலேடிவா?” என்று அவர் புன்னகையுடன் கேட்க,
“எஸ் மை யுட்பி!” என்று அவன் சொன்னதில் அவர் முகம் ஆச்சர்யத்தில் மலர்ந்தபடி அவளை நோக்க, அவள் முகமோ அதிர்ச்சியில் உறைந்தது.
இயல்பாகவே மலர்ந்ததைப் போல் போல் இருக்கும் அவளின் அழகு நயனங்கள், இப்போது மேலும் விரிய, அதைப் பார்த்தும் பாராமல் ரசித்தபடி மித்ரன் நிற்க,
“வாவ்! கங்க்ராட்ஸ் மித்ரன்.” என்றபடியே அப்ப்போதுதான் அவளை நன்றாக கவனித்தார் அம்மருத்துவர். அவளைச் சாதரணமாகப் பார்த்தாள் அவளிடம் உள்ள குறை யாருக்குமே தெரியாது! பார்ப்பதற்கு நல்ல ஆரோக்கியமான பெண்ணைப் போல்தான் இருப்பாள். பார்த்ததும் நோயாளி என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது!
கருப்பாக இருந்தாலும் மிகவும் கலையான முகம்! பெரிய இடத்துப் பெண்ணின் தோற்றம் போல் இல்லை என்றாலும், ஆர்பாட்டமில்லா அழகு! குறிப்பாய் அவள் கண்கள்! அது ஆண்களை மட்டுமல்ல பெண்களையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு!
அதற்கு அந்தப் பெண் மருத்துவரும் விதிவிலக்கின்றி,
“ஹேர் ஐஸ் லுக்ஸ் சோ பியுடிபுல்!” என்று ரசனையுடன் சொல்லிவிட்டுச் செல்ல, அவள் ஏதோ கேட்க வாய்திறக்க, தனது ரூமில் இருந்த இண்டர்காம் வழியே பெண் உதவிப் பணியாளரை உள்ளே அனுப்புமாறு சொல்ல, நொடிகளில் அவர் அங்கு வந்தார்.
“இவங்களை கீழ இருக்க ரூம்ல கொண்டு போய் தங்க வைங்க! அப்படியே அவங்களுக்கு ஹாட்வாட்டர்ல ஸ்பாஞ்ச் பாத் கொடுத்துட்டு, நம்ம ஹாஸ்பிட்டல் ட்ரெஸ்ல புதுசா ஸ்டிச் பண்ண டிரெஸ்ஸ, யாரும் யூஸ் பண்ணாததை அவங்களுக்கு மாத்தி விடுங்க! சிடி எடுக்க கூட்டிட்டுப் போகணும்!” என்று அவன் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே செல்ல, அவள் ஆடாமல் அசையாமல் பார்த்திருந்தாள்.
‘என்னடா நடக்குது இங்க?! நான் என்ன கனவு கினவு கண்டுகிட்டு இருக்கேனா?!’ என்பது போல்!