“வலது கால் எடுத்து வச்சி உள்ள வாம்மா” என்ற பத்மாவின் குரலில் தன்நினைவில் இருந்து மீண்டவள் அவரை பார்த்து தலையசைத்து உள்ளே செல்ல போக, அவள் கையோடு தன் கையை கோர்த்தான் ஹர்ஷா.
கோர்த்திருந்த கரங்களை குனிந்து பார்த்தவள் ஆணவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ இனி நம் வாழ்க்கை இணைந்துதான் என்பது போல் மென்மையாக சிரித்தான். அவன் சிரிப்பு அவளுள் கோப தீயை உருவாக்க அவனை முறைத்து கைகளை வெடுக்கென்று இழுத்து கொண்டு முன்னால் சென்றுவிட்டாள்.
ஹர்ஷா முகம் வாடி போனலும் மனதில் ‘இல்ல ஹாசி. நான் முடிவு பண்ணிட்டேன். என் வாழ்க்கை முழுக்க உன்னோடுதான். நீதான் என் மனைவி. என்ன நம்ம வாழ்க்கை ஸ்டார்ட் பண்ண லேட் ஆகலாம். அதுவும் என்னோட முழு மனசோட நம்ம வாழ்க்கை ஸ்டார்ட் பண்ணனும்னுதான். எனக்கு அதுக்கான நேரத்தை மட்டும் குடு. காதல்……..’ என்று நினைத்தவன் பெரு மூச்சுவிட்டு,
உன் மேல எனக்கு காதல் வருமான்னு தெரியல ஆனாலும் கண்டிப்பா என்னால ஆன முயற்சி செய்யறேன். உனக்கு வேணா நீ வளர்ந்த கல்ச்சர்னால வேற கல்யாணம் பண்றது ஈஸினி நினைக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்ல.(மவனே இதை மட்டும் அவகிட்ட நேரா சொல்லு. உன்னை அப்படியே நிக்க வச்சு சமாதி ஆக்கிடுவா. நமக்கு எதுக்கு வம்பு. நாம ஓரமா நின்னு எப்போவும் போல வேடிக்கை பார்க்கலாம்)
எது எப்படி போனாலும் கல்யாணம் உன்னோட முடிஞ்சது. இந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டு நாம வாழ்ந்துதான் ஆகணும்’ என்று தனக்குள் சொல்லி கொண்டு உள்ளே வந்தான்.
அங்கு ஹாசி தேவகி பாட்டியிடம் பேசி கொண்டு இருந்தாள். ஹர்ஷா வருவதை கவனித்தாலும் கண்டு கொள்ளாமல் அவள் இருக்க, அங்கு வந்த பத்மா “வாம்மா… விளக்கு ஏத்தி சாமி கும்பிடலாம். ஹர்ஷா வாடா……” என்க,
அவனும் அவர்களுடன் சென்றான். விளக்கேற்றி சாமி கும்பிட்ட ஹாசிக்கு மனம் ஏனோ நிம்மதியாக இருந்ததே தவிர, சந்தோஷமாக இல்லை.
‘கடவுளே ஆசை ஆசையா நான் எதிர்பார்த்த நாள் இது. ஆனா என்னுடைய பல வருட தவம் பலிச்சும் என்னால சந்தோஷப்பட முடியல. எவ்வளவு கனவு, எவ்வளவு ஆசை.
எல்லாம் காத்தோட காத்தா பறந்து போச்சு. எல்லாத்துக்கும் காரணம் இதோ பக்கத்துல நின்னு பழைய காதலிய நினைச்சு உருகிட்டு நிக்கறானே இந்த நாயால அவனை நான் சும்மா விட போறது இல்ல.
எண்ணெய் இல்லாம வட சட்டில போட்டு வறுத்து, கரும்பு ஜூஸ் போடற மெஷின்ல போடாம போட்டு நசுக்கி எடுத்து என் மனசுல இருக்க பாரத்தை குறைக்க ஆசிர்வாதம் பண்ணுங்க கடவுளே என்று வேண்ட,
பெண்ணவளின் மனதில் இருக்கும் வஞ்சம் தெரியாமல், தங்கள் வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என்று அப்பாவியாக வேண்டுதல் வைத்தான் ஹர்ஷா.
சாமி கும்பிட்டு முடித்தபின், பாட்டி இருவரையும் மாலை கழட்ட சொல்ல, ஹர்ஷா ஹாசி கழுத்தில் இருந்த மாலையை கழட்ட, ஹாசி ஹர்ஷா மாலையை கழட்டினாள். அதன்பின் அனைவரும் ஹாலுக்கு செல்ல, மணமக்களுக்கு பால், பழம் வழங்கப்பட, அதை வாங்கி குடித்தனர்.
பாட்டி, “ஹர்ஷா மேல உன் ரூம்ல போய் ரெஸ்ட் எடு. ஹாசி வாம்மா. நீ என் ரூம்ல இரு” என்று சொல்லி அழைத்து செல்ல, அவரோடு அமைதியாக சென்றாள்.
“ஹாசி நகை எல்லாம் கழட்டி வச்சுட்டு இந்த புடவை கட்டிகோடா” என்க,
அவளோ’மீண்டும்…. மீண்டும் புடவையா….’ என்பது போல் விழிக்க துவங்கினாள்.
“இன்னைக்கு உன்னை பார்க்க நம்ம சொந்தக்காரங்க, அக்கம் பக்கத்துல இருக்கவங்க எல்லாம் வருவாங்க அதான் புடவை அட்ஜஸ் பண்ணிக்கோடா” என்க,
தான் சொல்லாமலே தன் நிலையை புரிந்து கொண்ட பாட்டியை கண்டு மென்மையாக சிரித்தவள் “சரி பாட்டி குடுங்க” என்று வாங்கி கொண்டாள்.
ஹாசிக்கு புடவை கட்டுவது சுத்தமாக பிடிக்காது இருந்தாலும் தன்னவனுக்காக கட்டி பழகினாள். ஆனால் அதுதான் அவன் இன்னொருத்தி பின்னாடி போயிட்டானே இனி ஏன் நான் புடவை கட்டணும் என்ற எண்ணத்தில் இருந்தவள் ஆணவன் காதல் விஷயம் தெரிந்ததில் இருந்து புடவை கட்டுவதை நிறுத்தியிருந்தாள்.
திருமண பட்டு எடுக்க சென்ற அன்று கூட ரேவதி மகளை சேரி கட்ட சொல்லி எவ்வளவோ சொல்லியும் கேட்காதவள் ஒரு ஜீனையும் டாப்பையும் எடுத்து மாட்டி கொண்டு சென்றாள்.
ரேவதி அதை கண்டு திட்ட போக, ராஜோ “விடும்மா அவளுக்கு எது கம்பர்டபிலா இருக்கோ அதையே போட்டுக்கட்டும்” என்று சொல்ல,
அவரோ “இப்படியே செல்லம் குடுங்க. பையன் வீட்ல என்ன நினைப்பாங்க” என்க,
அவரோ “அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. நம்ம ஹாசி ஒன்னும் அவங்களுக்கு புது பொண்ணு இல்ல. ஏற்கனவே அங்கதானே இருந்தா. அப்போ எல்லாம் தெரியாத அவ குணம். இன்னைக்கு புடவை கட்டிட்டு போகாம போறதால மாற போறது இல்ல.
தேவையில்லாம நீயும் எதையாவது யோசுச்சு பொண்ணையும் தொல்லை பண்ணாத” என்றுவிட, கடைசியில் ரேவதிதான் அமைதியாக போக வேண்டியதாகி போனது.
அதையெல்லாம் யோசித்து கொண்டு இருந்தவள் புடவையை எடுத்து பார்க்க,
பாட்டி,“அது புதுசுதான்டா. உனக்குன்னுதான் இருந்திருக்கும் போல அதான் அப்படியே இருக்கு” என்று சொல்ல, அவளும் தலையசைத்து அமைதியாக நின்றிருந்தாள். அதன்பின்னும் செல்லாமல் பாட்டி தயங்கி அவளை பார்த்து கொண்டே நின்றிருக்க,
அவரை புரியாமல் பார்த்தவள் “என்ன பாட்டி என்கிட்ட எதாவது சொல்லனுமா” என்று கேட்டாள்.
‘ஆமாம்’ என்று தலையசைத்தவர் “ஆசி என் பேரன் நல்ல பையன்தான். என்ன அப்பப்ப எதாவது குரங்கு சேட்டை பண்ணுவான். அவனுக்கு என்ன தேவைன்னு அவனுக்கே தெரியாம ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம். நீதான் இனி அவனை பார்த்துக்கணும்”என்க,
அவளோ பேந்த பேந்த விழித்தாள்.’என்னடா நடக்குது இங்க. இது எல்லாம் எங்க வீட்ல இருக்கவங்க மாப்பிளைக்கிட்ட சொல்லுவாங்க. இவங்க என்னடானா என்கிட்ட சொல்றாங்க’ என்று மனதில் நினைக்க,
“எனக்கு புரியுது ஆசி. பொண்ணு வீட்ல இருக்கவங்கதான் இதை மாப்பிள்ளைகிட்ட சொல்லுவாங்க. ஆனா என் பேரன பொறுத்தவரை நாங்கதான் இதை சொல்லணும். ரொம்ப விளையாட்டுதனமா எதா இருந்தாலும் பண்ணுவான்.
ஆனா பொறுப்புன்னு வந்துட்டா அதை கரெக்டா செய்வான். இந்த குடும்பத்து மேல அவனுக்கு அவ்ளோ பாசம். நீ நினைக்கலாம் யாருதான் குடும்பத்தை வெறுப்பாங்கன்னு, அப்பா சொன்ன ஒரு வார்த்தைக்காக தன்னோட காதலை தூக்கி போட்டு வந்தவன் என் பேரன்” என்று பெருமையாக அவர் சொல்ல,
ஹாசி அவரை அதிர்ச்சியாக பார்த்தாள்.
“என்னம்மா இப்படி பாக்குற. என் பேரன் காதலிச்சான்னு சொன்னதுனாலையா. நீ ஒன்னும் கவலைபடாத, உங்க கல்யாணத்துக்கு அப்புறம் அவன் வாழ்க்கைல நீ மட்டும்தான் இருப்ப.
ஏதோ வயசு கோளாறு லவ்வு ஜவ்வுன்னு சுத்திட்டு இருந்துட்டான். அதுக்காக அவனை தப்பான பையன்னு நினைக்காத. நான் அவனுக்கு நல்ல புத்தி சொல்லி தெளிய வச்சுட்டேன்.
நீ நினைக்கலாம் ஒரு காதலை பிரிச்சது தப்புன்னு. ஆனா அவன் காதலே உண்மையான்னு எனக்கு சந்தேகம்தான். அவனுக்கு அவதான் வேணும்னு முடிவெடுத்திருந்தான்னா எங்ககிட்ட அந்த பொண்ண பத்தி சொல்லியிருப்பான்.
நாங்க கேட்டும் அமைதியா இருந்திருக்கான்னா என்ன அர்த்தம் அவனால ஈஸியா அவளை கடந்து வர முடியும்னுதானே அர்த்தம்.
‘ம்கூம்….. நீங்க இப்படியே கனவு கண்டுட்டு இருங்க. அப்படியே உங்க பேரன் அவளை நினைச்சு உருகறதை விட்டுட்டு வந்துட்டாலும். இவங்க பேரன் ஒன்னும் கடந்து வரல, அந்த புள்ளதான் விட்டுட்டு போச்சுன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவாங்க’ என்றவள் நினைத்து கொண்டு இருக்கும்போதே,
“ஆசி ……ஆசி….” என்று அவள் கையை பிடித்து உலுக்கியவர், “என்னம்மா என் பேரன் காதலைபத்தி யோசிக்கறியா. அதெல்லாம் மாறிடுவான். நீ கவலைப்படாத. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் எக்காரணம் கொண்டும் அவன் காதலிச்ச விஷயத்தை அவன்கிட்ட நீ சொல்லி காட்டிட கூடாது. பாவம் பையன் மனசு கஷ்டப்படும். எங்க யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கான். அப்படியே இருக்கட்டும்.
உனக்கும் தெரியாத மாதிரியே மெயிண்டேயின் பண்ணிடு. எங்களுக்காக அவளை தூக்கி போட்டுட்டு வந்தவன் அவன் மனசு வாடுனா என்னால தாங்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் எப்போவும் சந்தோஷமா இருக்கணும். சரியா” என்றவர் பேரனை நினைத்து உருகி உருகி பேச,
‘எதே…. காதலை அந்த நாய் தூக்கி போட்டுட்டு வந்துச்சா. அந்த பொண்ணு நீ வேணாம் போடான்னு பொடனில தட்டில அனுப்பியிருக்கு இதெல்லாம் இவங்களுக்கு தெரியாது போல.
அதையாவது போனா போகுதுன்னு விடலாம். ஆனா… அவன் லவ் பண்ண விஷயம் எனக்கே தெரியாம நான் சமாளிக்கணும்னு வேற சொல்றாங்களே. அவன் லவ் பண்ற விஷயத்தை முதல்ல சொன்னதே என்கிட்டதானே. இதுல நான் என்னத்த தெரியாத மாதிரி இருக்கணும்.
நான் அவனை வச்சு செய்யறதுல இந்த ஜென்மம் மட்டும் இல்ல. இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எந்த பொண்ணு பின்னாடியும் அவன் போக கூடாது. நான் ஏன் சொல்லிக்காட்ட கூடாது சொல்லுவேன்.ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை சொல்லுவேன்.
ஏன்டா, லவ் பண்ணுனோம்னு அவனே நொந்து நூடுல்ஸ் ஆகற அளவுக்கு சொல்லுவேன். சந்தோஷமா வாழணுமா அவன்கூடயா……நான் அவனையே நினைச்சு உறுகிட்டு இருந்தா அவன் இன்னொருத்தி பின்னாடி சுத்திட்டு இருந்திருக்கான். அவன் கூட நான் வாழணுமா.
அவன் லவ் பண்றதை கூட ஆயுள் தண்டனைல போடுவேன். ஆனா….பண்றது எல்லாம் பண்ணிட்டு நீ வளர்ந்த கல்ச்சர்ல இது எல்லாம் சாதாரணம்தானே பெருசா எடுத்துக்காதன்னு கூலா சொல்லிட்டு போவான்.அப்போ வரும் பாரு ஒரு எரிச்சல்.என்று நினைத்தவளுக்கு அவன் கையால் நெற்றியில் பொட்டு வைத்த நிகழ்வு அவள் கண் முன் வந்து போக,
முகம் இறுகியவள். அவன் செஞ்சதுக்கு எல்லாம் பதில் தராமல் நான் விட போறது இல்ல’ என்று தனக்குள் சொல்லி கொண்டவள் “பாட்டி……” என்று அழுத்தமாக அழைக்க,
அவரும்’என்ன’ என்பது போல் பார்த்து வைத்தார்.
“என்னை பார்த்தா உங்களுக்கு அவ்வளவு நல்ல பொண்ணு மாதிரியா இருக்கு” என்று கேட்க,
அவரோ அவளை புரியாமல் பார்த்தார் “இல்ல…. உங்க பேரன் லவ் விஷயம் தெரிஞ்சும். நான் எப்படி அவன்கூட சந்தோஷமா வாழுவேன்னு நினைக்குறீங்க” என்றவள் கேட்க,
திகைத்து போனவர் “ஆசி சொன்னா கேளுடா. அவன் ஏதோ விளையாட்டுதனமா…….”
“இல்ல ஆசி அப்படி எல்லாம் எதுவும் சொல்லிடாத. என் பேரன் ஏதோ புரியாம…. அதான் நான் பேசி தெளிவாக்கிட்டேன்னு சொல்றனேடா” என்க,
அவரை ஆழ்ந்து பார்த்தவள் “இன்னொருத்தவங்க சொல்றாங்கங்கறத்துக்காக பிடிக்காத வாழ்க்கை வாழ முடியாது பாட்டி”
“பிடிக்கலைன்னு நீயே முடிவு பண்ணிக்கிட்டா எப்படிடா. அவன்கூட நீ சந்தோஷமா வாழ நான் என்ன வேணாலும் பண்ணுவேன்” என்று பரிதவிப்பாக அவர் சொல்ல.,
ஹாசியோ ‘சிக்குச்சி இன்னொரு அடிமை ரெண்டு பேரும்தான் எனக்கு பொம்மை உங்களை என்ன பண்றேன் பாருங்க’ என்று மனதில் நினைத்து கொண்டாள்.
பாட்டிக்கோ பேரன் காதலை சொல்ல போய் அவன் வாழ்க்கையே போய் விடுமோ என்ற பயம் வந்திருந்தது.
ஹாசியோ அவர் மனதை புரிந்து கொண்டது போல் நக்கலாக சிரித்தவள் “பிடிக்காததாலதான் பாட்டி இன்னொரு பொண்ண லவ் பண்ணி இருக்கான் உங்க பேரன்”.
“உன்னை கல்யாணமே பண்ணிட்டானே ஆசி”
“அது உங்க கெடுபிடினால”
“எதே…. கெடுபிடியா. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா. நாங்க கேட்டோம். முதல்ல முடியாதுன்னு சொன்னான். அப்புறம் அவனே வந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான். சரி. இப்போ என்னதான் பண்ணலாம்னு சொல்ற” என்று அவளிடமே சரணடைந்தவரிடம் அவள் சில விஷயங்கள் சொல்ல, விக்கித்து போனவர் “வேணா ஆசி எல்லாரும் இன்னைக்கு உன்னை பார்க்க வருவாங்க. என் பேரன் மட்டும் தனியா இருக்க மாதிரி ஆகிடும் பாவம் அவன். நீ நல்ல பொண்ணுன்னுதானே உன்கிட்ட எல்லா உண்மையும் சொன்னேன்”.
“நான் சொன்ன மாதிரி நீங்க கேட்கலைனா…அவன் லவ் விஷயத்தை நீங்கதான் என்கிட்ட சொன்னீங்கன்னு அவன்கிட்டயே போய் சொல்லுவேன்”.
“எது……அவன்கிட்டயேவா…” என்றவர் அரண்டு போய் கேட்க,
“ஆமாம்” என்று அப்பாவியாக சொன்னாள்.
‘ஆத்தி அவனுக்கு தெரிஞ்சுதுன்னா வள்ளு வள்ளுன்னு வருவானே. ஏன்டி தேவகி வயசான காலத்துல இது எல்லாம் உனக்கு தேவையா. பேசாம போயிருக்கலாம். வம்படியா நானே வந்து மாட்டிக்கிட்டனே’ என்று புலம்பி கொண்டு நிற்க,
ஹாசியோ “அதை இப்போ யோசிச்சு நோ யூஸ். போங்க போய் எதாவது சொல்லி சமாளிங்க. அப்புறம் முக்கியமான விஷயம் உங்க பேரனுக்கு சந்தேகம் வராம பார்த்துக்கோங்க. நான் சீக்கிரம் வந்துடுவேன்” என்றவள் சொல்ல,
பாவமாக தலையாட்டியவர் ஆனாலும்……ஆசி….. நீ….. இன்னைக்கே…..’என்றவர் இழுக்க, அவள் பார்த்த பார்வையில் கப்பென்று வாயை மூடி கொண்டு சென்றுவிட்டார்.
செல்லும் அவரையே கிண்டலாக பார்த்தவள், பேரன் வாழ்க்கைக்காக என்னென்ன பண்ண போறீங்க. உங்களை நான் என்னென்ன பண்ண வைக்க போறேன்னு பாருங்க’ என்று சொல்லி கொண்டு அங்கிருந்த பெட்டில் ஓய்ந்து போய் அமர்ந்தாள்.
வெளியில் அவள் அமைதியாக அமர்ந்திருப்பது போல் தெரிந்தாலும், நிச்சயத்திற்கு பின் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவளுள் படமாக ஓட, பல போராட்டங்கள் மனதில் எழுந்தது. அதோடு போராட முடியாமல் தடுமாறியவள் கண்களை மூடி அதில் மூழ்கி போக துவங்கினாள்.
நிச்சயம் முடிந்த அடுத்த நாட்களில் இருந்து திருமண வேலை துவங்கிவிட்டனர்.
ஹர்ஷா ஆபிஸ்கு சென்றாலும். அர்ச்சனா பக்கம் திரும்புவது கூட இல்லை. நண்பர்கள் கேட்ட கேள்விக்கு “செட் ஆகல விட்டாச்சு” என்று சொல்லி முடித்துவிட்டான்.
ஹாசி மன குழப்பத்தோடு இருந்தாலும் அதை யாருக்கும் காட்டாமல் பார்த்து கொண்டாள். அதே சமயம் ஹர்ஷாவுடன் பேசவும் அவளால் முடியவில்லை. ஏனோ அவனை நினைத்தாலே அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
அவனும் ஹாசியுடன் பேச பல முறை முயன்று பார்த்தான். ஆனால் ஹாசி பேசவில்லை. அவன் எதாவது கேட்டாள் ஆமாம், இல்லை என்பதோடு நிறுத்தி கொள்வாள்.
ஹாசி பேசாதது அவனுக்கு மனது பாரமாக இருக்க, அவளை நேரில் சந்தித்து பேச முயற்சித்தான். ஆனால் நிச்சியம் முடிந்த பின் பொண்ணை பார்த்து பேச கூடாது என்று ரேவதியும், பத்மாவும் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட, ஹர்ஷா என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி போனான்.
ரஞ்சனோ வீட்லதானே பார்க்க கூடாது. நான் ஆபிஸ்ல பார்க்கறேன் போங்கடா என்று மித்ரா ஆபிஸே கதி என்று கிடந்தான். அவளோ “நிரன் எதுக்கு இன்னைக்கும் வந்தீங்க. பாட்டி மாப்பிள்ளை போன் பண்ணா கூட பேச கூடாதுன்னு சொல்லிதான் அனுப்புனாங்க. நீங்க என்னன்னா இங்க வந்து நிக்கறீங்க”.
“போன்லதானே பேச வேண்டாம்னு சொன்னாங்க. அதான் நேர்ல வந்துட்டேன். வா போய் சூடா காபி குடிச்சுட்டே பேசலாம்” என்றவன் அவள் கதறுவதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தூக்கி வண்டியில் அமர வைத்து சுற்ற துவங்கிவிடுவான்.
ஒரு காபி குடிக்க பத்து கிலோமீட்டர் கடந்து ஒரு கபேவிற்கு அழைத்து வந்து அவளை மண்டை காய வைத்தான்.
ஒரு ஜோடி ஜாலியாக திருமணத்திற்கு முன்னான அழகான நாட்களை ரசித்து கொண்டிருக்க,
மற்றொரு புறம் ஹர்ஷா பெண்ணவளிடம் பேச முயற்சித்து தோற்று கடைசியில் முகூர்த்தபட்டு எடுக்க வேண்டும் என்ற தாயின் குரலுக்கு மண்டையாட்டி உடனே கிளம்பி வந்துவிட்டான்.
ஹர்ஷாவை பொறுத்தவரை ஹாசி மனைவி என்ற இடத்திற்கு வருவதற்கு முன்பே தோழி என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவள். இந்த திருமண விஷயம் ஆரம்பித்ததில் இருந்தே அந்த தோழியை அவன் வெகுவாக மிஸ் செய்தான். அதான் அவளுடன் பேசுவதற்காக நேரம் கிடைக்கும் என்று கிளம்பி வந்துவிட்டான்.
ஆர்வமாக வருபவனின் ஆசையை ஹாசி நிறைத்துவாளா இல்லை அவன் மனதை காயப்படுத்துவாளா காத்திருந்து பார்ப்போம்.