நிச்சய நாட்கள் நெருங்குவதால் ரேவதி ஹாசியை வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொன்னார். அவளும் முக்கிய வேலை இருந்தால் மட்டுமே ரஞ்சனுடன் ஆபிஸ் செல்வதும், மற்ற நாட்களில் வீட்டில் இருந்தே வேலைகளை பார்ப்பதுமாக இருந்தாள்.
இதனாலேயே ஹர்ஷாவால் ஹாசியை தனியாக சந்திக்க முடியாமல் போனது. அவளை பார்க்க வேண்டும். திருமணத்திற்கு சம்மதம் சொன்னதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றமாகவே போனது.
ஹர்ஷா பெண்ணவளை பார்த்து பேச முடியாமல் தடுமாறி கொண்டு இருக்க, அன்று நிச்சயபட்டு எடுக்க வேண்டும் என்று பத்மா அவனையும் வர சொன்னார்.
முதலில் முடியாது என்றவன் பின் தாய் “ஹாசியும் வருவா. நீ செலக்ட் பண்ற புடவையைதான் வாங்கணும்னு அவளுக்கும் ஆசை இருக்கும்ல வா ஹர்ஷா “ என்று சொல்ல,
சரி அங்கு சென்றாலாவது ஹாசியை சந்திக்கலாம் என்று நினைத்தவன் அவர்களுடன் கிளம்பினான்.
கடைக்கு வந்த இடத்தில் அவன் கண்கள் அவளை ஆர்வமாக தேட, அவளோ அவன் தாயிடம் ஏதோ சிரித்து சிரித்து பேசி கொண்டிருந்தாள்.
ஹர்ஷா பார்வை அவளைவிட்டு நகரவில்லை. கடைசியாக அவளை அவன் சந்தித்தது அவளுடன் பேச வெளியே அழைத்து சென்ற போதுதான். தன் சுயநலத்திற்கு அவளை பயன்படுத்தி கொண்டோமோ என்ற எண்ணம் வேறு அவனை அரித்து கொண்டே இருக்க,
நண்பர்களாக இருந்து பிரியலாம் என்றவனுக்கு இப்போது நட்பாக கூட அவளுடன் பேச முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க, தடுமாறி போனான்.
ஹாசியின் மகிழ்ச்சியான முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தவன் அவளோடு இன்று எப்படியாவது பேச வேண்டும் என்று முடிவெடுத்து கொண்டான்.
அவன் நினைத்தால் போதுமா ரஞ்சன் விட வேண்டுமே, அவள் அருகில் ஹர்ஷா சென்றாலே இருவருக்கும் இடையில் ரஞ்சன் வந்து நின்று கொண்டு முறைக்க துவங்கிவிடுவான். வேறு வழி இல்லாமல், அவனும் விலகி சென்றுவிடுவான்.
இப்படியே நான்கைந்து முறை நடக்கவும் கடுப்பானவன் தன் தங்கையை அருகில் அழைத்து “அந்த பட்டர ஒழுங்கா எங்கயாவது தனியா இழுத்துட்டு போ. நான் ஹாசிகிட்ட பேசணும். அவ பக்கத்துல போனாளே நந்தி மாதிரி வந்து நிக்குறான்” என்று சொல்ல,
மித்ராவோ’ஆத்தி இவன் என்ன அந்த லூசுகிட்ட நம்ம கோத்து விடறான். நானே அவன் பார்வை சரியில்லன்னு அத்த பின்னாடி வால் புடிச்சுட்டு சுத்தறேன். தனியா சிக்கினேன் அவ்வளவுதான் அன்னைக்கு போன்ல சொன்னது எல்லாம் நேர்ல செஞ்சுடுவான்’ என்று மனதுக்குள் அரண்டவள்
“அண்ணா…. அம்மா வரும்போதே சொல்லிதான் கூட்டி வந்தாங்க. கல்யாணம் முடியற வரை ரஞ்சன்கூட தனியா பேசற வேலை எல்லாம் வச்சுக்க கூடாதுன்னு. அதனால…….”
“ஓஹோ….. அம்மா சொல்லிதான் ஊர்ல படிக்கு அடில நின்னு ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தீங்களோ” என்ற அண்ணனின் கேள்விக்கு பதில் அழிக்க முடியாமல் திரு திருவென விழிக்க,
“அவனை பார்த்தாலே எனக்கு இர்ரிடேட் ஆகுது. ஒழுங்கா அவனை அந்தப்பக்கம் கூட்டிட்டு போ. அம்மா புடவை செலக்ட் பண்ண ஆரம்பிச்சாங்கன்னா சுத்தி என்ன நடக்குதுன்னே கவனிக்க மாட்டாங்க” என்று சொல்ல,
மித்ராவும் வேறு வழி இல்லாமல் அண்ணனிடம் மண்டையை ஆட்டிவிட்டு ரஞ்சன் இருக்கும் இடம் நோக்கி சென்றாள்.
தங்கை அருகில் நின்று கொண்டிருந்தவன் மித்ரா தன்னிடம் வருவதை கண்டு வாயெல்லாம் பல்லாக “ஹேய் மிது பேபி என்ன இவ்ளோ நேரம் எங்க அம்மா பின்னாடி சுத்திட்டு இருந்த, இப்போ என்னை தேடி வந்திருக்க,
“நிரன் எனக்கு நிச்சயபட்டு செலக்ட் பண்ணலாம் வாங்க” என்று அழைக்க,
அவனோ யோசனையாக தங்கையை திரும்பி பார்த்தான். அவளும் ஏதோ முடிவில் இருந்தது போல், அண்ணனை பார்த்து சிரித்தவள் “போ அண்ணா. நான் பார்த்துக்கறேன். அம்மா என்னையும் புடவை செலக்ட் பண்ண சொன்னாங்க. நான் அந்த பக்கம் போய் பார்க்கறேன்” என்க,
தங்கையை தனியாக விட்டு செல்ல மனம் இல்லாதவன் “நீயும் வா ஹாசி சேர்ந்து செலக்ட் பண்ணலாம்” என்க,
அவளோ “அண்ணா கல்யாணங்கறது ஒரு டைம் நடக்கற செலப்ரேஷன் சோ……”
“புரியுது. எனக்கேவா”
“எல்லாருக்கும் ஒன்னுதான்”
“சரி நான் போய் செலக்ட் பண்ணிட்டு வரேன். அது வரை நீ அம்மா கூட இரு. அப்புறம் உனக்கு நாம செலக்ட் பண்ணலாம்” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அங்கு வந்த ஹர்ஷா “மித்ரா என் பொண்டாட்டிக்கு புடவை செலக்ட் பண்ண எனக்கு தெரியும்.
நீ போய் உனக்கானதை எடு” என்று சொல்ல, பல்லை கடித்த ரஞ்சன் “பொண்டாட்டியாம்…. பொண்டாட்டி அவ முதல்ல எனக்கு தங்கச்சி” என்க,
ஹர்ஷா அதற்கு பதில் சொல்ல வர, ஹாசி “அண்ணா வந்த இடத்துல என்ன இது சின்ன புள்ளைங்க மாதிரி போ நீ போய் புடவை செலக்ட் பண்ணு நான் பார்த்துக்கறேன்” என்க,
அப்போதும் நாகறாமல் நின்றிருந்த அண்ணனிடம் கண்களால் கெஞ்சியவள் போக சொல்ல, அவனும் ஹர்ஷாவை முறைத்து கொண்டே மித்ரா கரம்பற்றி அழைத்து சென்றான்.
அவர்கள் சென்ற பின் ஆணவனை கண்டுகொள்ளாமல் ஹாசி தனியாக புடவை எடுக்க செல்ல, அவள் பின்னோடு சென்றவன் “ஹாசி….” என்று அழைக்க,
தன்னுள் எழுந்த கோபத்தை பல்லை கடித்து அடக்கியவள் பின் முகத்தை சிரித்தார் போல் வைத்து கொண்டு “என்ன ஹர்ஷா?” என்று சாதாரணம் போல் கேட்டவளிடம் என்ன பேசுவது என்று விழித்தவன் பின் “கல்யாணத்துக்கு சம்மதச்சதுக்கு தேங்ஸ். நீ என்னை புரிஞ்சுப்பன்னு எனக்கு தெரியும்”.
“அட இதுல என்ன இருக்கு ஹர்ஷா. நான் வளர்ந்த ஊர்ல கல்யாணம் எல்லாம் சாப்பாடு சாப்பிடற மாதிரி சாப்பாடு ஒரே விதமா சாப்பிட பிடிக்கலைனா, அதை உடனே மாத்திக்கலாம். அங்க வளர்ந்த எனக்கு இந்த கல்யாணம் என்ன கஷ்டமா? ஒரு வருஷம்தானே ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் பார்த்துக்கறேன்” என்றவளை மலைத்து போய் பார்த்தான் ஹர்ஷா.
அவன் சொன்ன வார்த்தைகள்தான் ஆனால் அதை அவள் சொல்லும்போது ஏதோ தவறாக தோன்றியது ஹர்ஷாவிற்கு,
“அப்புறம் ஹர்ஷா நம்ம….. சாரி….. சாரி….. இந்த கல்யாண வாழ்க்கை ஒரு வருஷம்தான் அதுக்காக உன்கிட்ட நான் எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டேன். நீயும் அதே போல இருக்கணும் சரியா.
இதுக்கு ஓகேன்னா வர போற ஒரு வருஷமும் நாம நல்ல பிரண்டா இருக்கலாம். அப்புறம் என்ன இருந்தாலும் இது எனக்கு முதல் கல்யாணம்ல்ல……”
“ஹாசி என்ன பேசுற. ஏன் இப்படி எல்லாம் பேசுற. நீ பேசுறது எனக்கு ஏதோ தப்பாவே தோணுது”
“ச்ச…. ச்ச…. நான் ஏன் ஹர்ஷா தப்பா பேச போறேன். எது தப்புன்னு சொல்ற. எனக்கு முதல் கல்யாணம்னு சொன்னதையா” என்க, ஆணவன் முகமோ கோபத்தில் சிவந்து போனது.
“ஹாசி என் மேல நீ கோபத்துல இருக்கன்னு எனக்கு புரியுது. அது எதனாலன்னும் எனக்கு தெரியுது” என்றவுடன் அவள் அவனை கூர்ந்து பார்க்க,
“நான் உன்னை இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்ல சொல்லி கிட்ட தட்ட பிளாக்மெயில் பண்ணுனதுனாலதானே இந்த கோபம்.
ஹாசி நீ என்னோட நல்ல பிரண்ட் நீயே என்னை புரிஞ்சுக்காட்டி, நான் என்னதான் பண்றது சொல்லு”
“ம்ப்ச்….. என்ன ஹர்ஷா. எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்ல. இன்னும் சொல்ல போனா உனக்கு நான் தேங்ஸ்தான் சொல்லணும்.
எங்க வீட்லயும் கல்யாணம் செய்துக்க சொல்லி ஒரே டார்ச்சர். உனக்குதான் தெரியுமே நான் வளர்ந்த கல்ச்சர்ல கல்யாணம் எல்லாம் வேஸ்ட் ஆப் டைம்தான். ஒரு டீ குடிக்க டீ தோட்டத்தையே வாங்க முடியுமா சொல்லு”.
“இல்ல ஹாசி நீ……ஏதோ தப்பா….”
“அட என்னப்பா நான் என்ன தப்பா சொல்றேன். நான் வளர்ந்த இடத்தை பத்தி உனக்குதான் நல்லா தெரியுமே. அதைதான் சொல்றேன்” என்றவளை புருவ முடிச்சுடன் பார்த்தான் ஹர்ஷா.
“ஹா….. என்ன சொல்லிட்டு இருந்தேன். ஆஆஆஆ….. டீ தோட்டம். எங்க வீட்லயும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொல்லை. இப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்கறதால அவங்க தொல்லைல இருந்து நான் விடுபடுவேன். அப்புறம் ஒரு வருஷத்துக்கு அப்புறம் ஐ ஆம் அ ப்ரி பேர்ட்.
ஒரு முக்கியமான விஷயம் இது எனக்கு முதல் கல்யாணங்கறதால ஈச் அண்ட் எவ்ரி மூமண்டயும் என்ஜாய் பண்ணனும்னு நினைக்கறேன். அட் தி சேம் டைம். வீட்ல இருக்கவங்களுக்கும் சந்தேகம் வராது பாரு. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா. அதான் ஒரே எக்ஸைட்மண்டா இருக்கு” என்று சொல்ல,
ஹர்ஷாவிற்கு ஏதோ விரும்ப தகாத வார்த்தைகளை கேட்டது போல் ஆனது.
“ஹாசி நாம பிரிய போறோம்தான் அதை அடிக்கடி சொல்லாம இருக்கலாமே” என்றான் உள்வாங்கிய குரலில்.
“ஏன் நடக்க போறதைதானே சொன்னேன். ஓ…. ஒரு வேலை வீட்ல மத்தவங்க யாரும் கேட்டுட்டா என்ன பண்றதுன்னு நினைக்கறியா. ஓகே….ஓகே இனி நான் சொல்லல” என்றவளை பெரு மூச்சுடன் பார்த்தவன் “சரி வா புடவை செலக்ட் பண்ணலாம்” என்றவன் சொன்னவுடன் ஹாசி மனதில் தோன்றிய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
காலையில் கடைக்கு கிளம்பும் போது கூட நினைத்தாள் எல்லாம் நார்மலாக இருந்தால் புடவையை இருவரும் சேர்ந்து எடுத்திருக்கலாம் என்று, ஆனால் இப்போது அப்படி எடுக்க முடியாதே. இருந்தாலும் பரவாயில்லை அண்ணா சொன்ன மாதிரி என்ஜாய் பண்ணு ஹாசி.
புடவை ஏன் அவனுக்கு பிடிச்சதை எடுக்கணும்னு நினைக்கற, நீதானே கட்ட போற உனக்கு பிடிச்சதை எடு என்று தனக்குதானே சொல்லி கொண்டுதான் வந்தாள். ஆனால் ஹர்ஷாவே வந்து சேர்ந்து எடுக்கலாம் என்று சொல்ல, அவளுக்கு ஆனந்த அதிர்ச்சிதான். இருந்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல் “நீ எதுக்கு ஹர்ஷா. நான் அம்மாவை எடுக்க சொல்றேன்” என்றவள் சொல்ல,
பல்லை கடித்தவன் பார்வை அங்கு தங்களுக்குள் பேசி கொண்டே சந்தோஷமாக புடவையை பார்த்து கொண்டிருந்த ரஞ்சன், மித்ரா மீது படிந்தது. அதில் தன்னையும் அறியாமல் அவனிடத்தில் இருந்து பெருமூச்சு வெளிப்பட, ஹாசிக்கு கடுப்பானது.