அத்தியாயம் -27

ஹர்ஷா அறையில் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தான். அண்ணனுடன் பேச வந்த மித்ரா. அவன் இருக்கும் நிலை கண்டு தயக்கத்தோடு நிற்க

“என்ன வேணும் மித்து? எவ்ளோ நேரம் இப்படியே பார்த்துட்டு இருக்க போற?”

“இல்லண்ணா….. அ…. அ…. அது வந்து உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்”

“நீ என்ன கேட்க போறன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதைப்பத்தி பேச எனக்கு விருப்பம் இல்ல. தேவையில்லாத யோசிச்சுட்டு இருக்காம. போய் கல்யாண கனவு காண ஆரம்பி இல்லையா அந்த மைதா ரொட்டி வெட்டியாதான் இருப்பான் அவனுக்கு போன் போட்டு கடலை போடு போ…” என்க,

அவனை குழப்பமாக பார்த்த மித்ரா “ஆனா….. அண்ணா….. நீ…..எப்படி கல்யாணத்துக்கு…” என்றவள் சொல்லி கொண்டிருக்கும்போதே பத்மாவும் தேவகி பாட்டியும் அங்கு வந்து சேர்ந்தனர்.

பத்மா, “நீ என்னடி இங்க நின்னுட்டு இருக்க?”

“இல்லம்மா அண்ணாட்ட பேசலாம்னு…”

“அப்படி என்ன பேச வந்த” என்றவரிடம் என்ன பதில் சொல்வாள், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொன்ன அண்ணன் இன்று இன்னொரு பெண்ணை அதுவும் அவளது நாத்தனரை மணந்து கொள்ள சம்மதம் சொல்லிவிட்டு வந்துவிட்டானே.

எதனால் இந்த மாற்றம். அவன் விரும்பிய பெண் என்ன ஆனாள். ஹாசிக்கு இவன் காதல் விஷயம் தெரியுமா.. தெரியாதா என்று ஆயிரம் வினாக்கள் மனதில் இருக்க, இதை கேட்கதான் வந்தேன் என்று தாயிடம் சொல்ல முடியாதவள் திரு திருவென விழித்து பின் “ஆபிஸ் விஷயமா பேச வந்தேன்ம்மா” என்று சொல்லி சமாளிக்க,

அவரோ “ஏன்டி எப்போ பாரு ஆபிஸ் நினைப்புதானா போ போய் தூங்கு. காலைல அவன்கிட்ட பேசிக்குவ” என்று சொல்ல, அவளும் அண்ணனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்.

மகள் சென்றவுடன் பத்மா பாட்டிக்கு சைகை செய்ய “”அர்ஷா……என்ன கண்ணா செய்யுற” என்றவாறு அவர் உள்ளே செல்ல,

பத்மாவும் மகனுக்கான காபியை எடுத்து கொண்டு சென்றார்.

“ஏன்டா கண்ணா இப்படி பட்டுன்னு சொல்லி, பாட்டி பிஞ்சு மனச இப்படி பொட்டுன்னு போட்டு உடைச்சுட்டியே இது உனக்கே நியாயமா தர்மமா….. நான் உன்கிட்ட என்ன சொன்னேன்…” என்றவர் மடியில் படுத்து கொண்டவன் “பாட்டி நீங்க ரெண்டு பேரும் எதுக்கு வந்தீங்கன்னு எனக்கு தெரியும்.

ப்ளீஸ் வேற எதுவும் என்கிட்ட கேட்காதீங்க. நான் கொஞ்ச நேரம் உங்க மடில படுத்துக்கறேன்” என்றவன் மடியில் படுத்து கொள்ள,

பத்மா பரிதவிப்பாக மாமியாரை பார்த்தார். அவரோ கண்களை மூடி திறந்து தான் பார்த்து கொள்வதாக சொல்ல, அவரும் பெருமூச்சுடன் காபியை அங்கு வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

பாட்டி மடியில் படுத்த ஹர்ஷா மனதுள் பல கேள்விகள் எழுந்தது. எதனால ஹாசிய கல்யாணம் பண்ணிக்க சொல்லி கம்பல் பண்ணுனோம். வீட்ல அப்பாட்ட வேற பொண்ண பார்க்க சொல்லியிருக்கலாமே. ஏன் இப்படி பண்ணுனேன்’ என்று யோசனையில் இருக்க,

பேரனின் சுருங்கிய புருவத்தை நீவிய பாட்டி “என்ன கண்ணா பலத்த யோசனை போல, என்னன்னு சொல்லு நானும் தெரிஞ்சுக்கறேன்” என்க,

உடனே கண்களை திறந்தவன் “பாட்டி இக்கட்டானா சூழ்நிலையப்ப நமக்கு ஒருத்தவங்க முகம் முன்னாடி வந்து நின்னா அதுக்கு என்ன அர்த்தம்”.

“என்ன அர்த்தம். அவங்க உன் மனசுக்கு நெருக்கமானவங்கன்னு அர்த்தம். உன்னைவிட அதிகமா அவங்களை நம்புறன்னு அர்த்தம். அவங்க அருகாமைய நீ அதிகம் விரும்பறன்னு அர்த்தம். உனக்குன்னா அவங்க கண்டிப்பா எதையும் செய்வாங்கங்கற நம்பிக்கை அவங்க மேல உனக்கு இருக்குன்னு அர்த்தம்” என்றவரை குழப்பமாக பார்த்தவன் பின் ‘ஆமாம் பிரண்டுன்னு எனக்கு இருக்கவ அவதானே அதான் அவ நியாபகம் வந்துருக்கு. எனக்காக எதையும் செய்வான்னு நம்பிக்கையும் வந்திருக்கு’ என்று தனக்குள் சொல்லி கொண்டவன் அவரை பார்த்து மென்மையாக சிரிக்க,

அவரோ பேரன் முகத்தில் இருக்கும் சிரிப்பை கண்டு . “அது சரி என்ன அந்த இக்கட்டானா நிலைமை”

“அது ஒன்னும் இல்ல பாட்டி. என் பிரண்டு நந்தன் இருக்கான்ல அவன் இன்னைக்கு எனக்கு பெரிய உதவி செஞ்சான். அதான்” என்று சொல்லி மழுப்ப, அவரும் சரி என்று அந்த பேச்சை விட்டார்.

“அர்ஷா அந்த பக்கத்து வீட்டு மாலு புள்ளைய யாரோ ஒரு பையன் கூட பார்த்தேன்னு சொன்னியே. என்ன ஆச்சு. இன்னைக்கு அவளை பொண்ணு பார்த்துட்டு போனாங்க”.

“அவனை அவ கழட்டிவிட்டு ஒரு மாசம் ஆச்சு”

“என்னடா சொல்ற” என்று முகவாயில் கை வைத்தவரை பார்த்து சிரித்தவன் “ஆமா அவன் வேற பொண்ணுக்கூட நேத்து சுத்துனான். இன்னைக்கு மாலுக்கு பொண்ணு பார்க்க வந்துட்டு போறாங்க அவ்ளோதான். இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு” என்றவனை வித்தியாசமாக பார்த்தார் பாட்டி.

“என்ன பாட்டி? லுக்கு பயங்கரமா இருக்கு”

“ஏன்டா அர்ஷா இதுக்கு பேரு லவ்வா. உடனே உடனே எப்படிடா பொண்ண இல்ல பையன மாத்த முடியும்” என்றவரின் வார்த்தை அவனையும் கேட்டது போல்தான் இருந்தது.

அவனும் அப்படிதானே அர்ச்சனா இல்லையென்றால் ஹாசி என்ற முடிவை எடுத்தான்.

“இல்ல பாட்டி பாவம் அவங்க சூழ்நிலை என்னவோ”

“என்ன பெரிய சூழ்நிலை. பொல்லாத சூழ்நிலை. ஒருத்தி போயிட்டான்ன உடனே இன்னொருத்திய அந்த இடத்துல அவனால வைக்க முடியுதுன்னுனாலே தெரியலையா அது உண்மையான காதலே இல்லைன்னு” என்றவர் வார்த்தை அவனையும் சுடதான் செய்தது.

உண்மைதான் அர்ச்சனா பிரியலாம் என்றவுடன் ஹாசியை திருமணம் செய்ய ஒத்து கொண்ட உன் காதல் எந்த அளவுக்கு உண்மையானதாக இருக்கும் ‘ என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நின்றவன்.

பின் அம்மாக்காக அம்மாக்காக மட்டும்தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். அதுவும் ஹாசி அவங்க பார்த்த பொண்ணுங்கறதால கூட இருக்கலாம். இல்ல அவ என்னோட பெஸ்ட் பிரண்ட். நான் கேட்டு முடியாதுன்னு சொல்ல மாட்டாங்கறதாலதான் அவ உதவிய கேட்டேன். வேற எங்களுக்குள்ள ஒன்னும் இல்ல. அவ எனக்கு பிரண்ட் மட்டும்தான்.

அர்ச்சனாவை நான் லவ் பண்ணுனது உண்மை’ என்றவனை கேவலமாக பார்த்த அவன் மனசாட்சி ‘உன்னை திருத்த முடியாது. நீயா அடி பட்டு மிதி பட்டு உணர்ந்துக்கோ’ என்றுவிட்டு செல்ல,

இது என்ன லூசு மாதிரி உளறிட்டு போறான். நான் என்னத்த உணர்றது. என்னவோ போ வர வர என் மனசாட்சி பேசறது கூட எனக்கு புரியமாட்டிக்குது என்றவன் தன் மனதை அறிந்து கொள்வானா. உண்மையான காதல் எது? என்பதை அறிந்து கொள்வானா பொருத்திருப்போம்.

ஹர்ஷா தனக்குள் யோசனையில் இருக்க அவன் தோளில் கை வைத்து உலுக்கி நிகழ் உலகத்திற்கு இழுத்து வந்த பாட்டி “பாஸ்ட் புட் மாதிரி இந்த காலத்துல காதலும் சீக்கிரம் வந்திருது. வந்த வேகத்துல போயும் சேர்ந்துடுது.

அந்த காலத்துல உன் தாத்தா நான் சந்தைக்கு போகும்போது, கோவிலுக்கு போகும்போதுன்னு பின்னாடியே சுத்துவாரு. எங்க வீட்ல அது தெரிஞ்சு அவரை தோட்டத்துக்கு தூக்கிட்டு போய் அடி வெளுத்து எடுத்துட்டாங்க.

அப்போவும் உடம்பு சரியான உடனே என்னை பார்க்க வந்துட்டாரு. அதை பார்த்த எங்க அப்பாருதான் உன்ற தாத்தாவ கூப்பிட்டு உட்கார வச்சு பேசி. அரை காசுன்னாலும் அரசாங்க காசு வாங்கற வேலைக்காரனுக்குதான் என் பொண்ணை தருவேன்னு சொல்லிட்டாரு.

உன் தாத்தாவும் கொஞ்ச நேரம் யோசிச்சவரு அப்புறம் சரின்னு சொல்லிட்டு போயிட்டாரு.

எங்க வீட்ல இருக்கவங்களும் அவ்ளோதான் இனி அவரு வர மாட்டாருன்னு விட்டுட்டாங்க. அப்புறம் ஒரு வருஷம் போச்சு என்னை பொண்ணு பார்க்க வர்றதாவும் கிளம்பி இருக்க சொல்லி எங்க அம்மா சொன்னாங்க. நானும் வந்த மாப்பிள்ளைக்கு காபி எல்லாம் குடுத்துட்டு இருந்தேன்.

அப்போ திடீர்னு ஒரு கார் வாசல்ல வந்து நின்னுச்சு யாருடா அதுனு எல்லாரும் பார்த்தா உன் தாத்தா நல்லா துறை கணக்கா வண்டில இருந்து இறங்குனாரு.

எனக்கு இவங்க பேசுன விஷயம் எல்லாம் எதுவும் தெரியாது. கோவிலுக்கு போறப்ப எப்பயாவது எதுத்தாப்புல வந்தா பார்ப்பேன். மத்தபடி அவரு மூஞ்சுகூட எனக்கு நினைப்பு இல்ல.

நானு யார்ரா இதுன்னு பார்த்துட்டு இருக்கும்போதே விறு விறுன்னு வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்து கால் மேல கால் போட்டு “நான் இந்த ஜில்லா கலெக்ட்டர். அரசாங்க உத்யோகம் இப்போ உங்க பொண்ண கட்டி குடுப்பீங்களான்னு கேட்டாரு”

“ம்ம்ம்….. சூப்பர் பாட்டி. தாத்தா செம்ம மாஸ் இல்ல. அப்புறம்……”

“அப்புறம் என்ன. நான் ஒன்னும் புரியாம முழிக்க, எங்க அப்பா நாளைக்கே கல்யாணம்னு சொல்லிட்டாரு”.

“அட பாரேன். கொள்ளு தாத்தாவும் சூப்பர்தான். அப்புறம் உடனே கல்யாணம்தானா”

“ம்ம்ம்…. ஆமா. கல்யாணம்தான். என்ன என் அண்ணனுக்கும் உன் தாத்தாக்கும்தான் ஆகவே ஆகாது. வேணும்னே எதாவது வம்பு இழுத்துட்டே இருப்பாரு. ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டா. வாங்குன அடி அப்புடின்னு வில்லன் லுக் விட்டுட்டு என் அப்பாட்ட கோத்துட்டு போவாரு.

என் அப்பாவும் என்ன ஏதுன்னு கூட கேட்காம மாப்பிள்ளை சொல்லிட்டாருன்னு என் அண்ணன லெப்ட் ரைட் வாங்குவாரு” என்று சோகமாக சொல்ல,

“ஹாஹாஹா…… தாத்தா செம்ம எண்டர்டெயின் பண்ணியிருக்காரு போல. செம்ம ஜாலியா இருந்திருப்பீங்க இல்ல பாட்டி”.

“ஆமா. ரொம்ப சந்தோஷமா இருந்தோம்” என்றவர் கண்களில் அன்றைய நினைவு தோன்ற, “நான் ஒரு முறை அவருகிட்ட கேட்டேன். எப்படி கரெக்ட்டா என்னை பொண்ணு பார்க்க வரும்போது வந்தீங்கன்னு”

“ம்ம்…. ஆமா எனக்கும் அந்த டவுட் இருந்துச்சு எப்படி வந்தாராம்”.

“வேற எப்படி எல்லாம் என் வீட்டுல ஒரு ஸ்பை வச்சுட்டு போயிருக்காரு அவரு மூலமாதான்”.

“யார் அந்த ஸ்பை” என்று புரியாமல் ஹர்ஷா கேட்க,

பாட்டியோ “வேற யாரு என் அப்பாதான்”என்றார்.

“எதே……தாத்தாவா……”

“ம்ம்….. உங்க தாத்தா கண்ணுல எனக்கான உண்மையான காதலை என் அப்பா பார்த்தராம் அதான். அவருகிட்ட பேசி அனுப்பினாலும் என்ன பண்றாரு ஏது பண்றாருன்னு எங்க அப்பா பார்த்துட்டே இருந்துருக்காரு.

அவரு எப்படியும் எனக்காக வருவாருன்னுதான் எனக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்காம இருந்திருக்காரு. எங்க அம்மாதான் புள்ளைக்கு கல்யாணம் பண்ணல புள்ளைக்கு கல்யாணம் பண்ணலன்னு புலம்பிட்டே இருந்தாங்களாம். அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்த ஏற்பாடு கூட எங்க அம்மா பிடிவாதத்துலதானாம் இல்லைன்னா அவங்க எல்லாம் உள்ளேயே வந்துருக்க மாட்டாங்கன்னு என் அப்பா சொன்னாரு.

“ஆனாலும் தாத்தா காதல் மாஸ்தான் பாட்டி” என்ற பேரனை சிரிப்போடு பார்த்த பாட்டி “உன் தாத்தாகிட்ட ஒரு தடவை என் மேல அவ்ளோ காதலான்னு கேட்டேன்”

“ம்ம்ம்….. என்ன சொன்னாரு…”

“காதலான்னு எனக்கு தெரியாது. ஆனா உனக்காக… உன்னை கல்யாணம் பண்ணிக்கணுங்கறத்துக்காக உசுரையே குடுக்கலாம்னு தோணுச்சு. உன் அப்பா என்ன அந்த உசுரையா கேட்டாரு? அரசாங்க வேலைதானே அதான் டக்குன்னு சரின்னு சொல்லிட்டு போய், வேலையோட வந்து நின்னேன்னு சொல்லுவாரு.

காதல்ங்கறது அதுதான் கண்ணா. எவ்ளோ அடி வாங்குனாலும். எனக்கு அவ வேணும்னு மனசுல அழுத்தமா எண்ணம் வரணும். அவளுக்காக என்ன வேணா பண்ணலாங்கற அளவுக்கு யோசிக்கணும் அதுதான் உண்மையான காதல். மத்தது எல்லாம் ஏதோ வயசு கோளாறுல தடுமாறுரது.

என்னோட சந்தோஷம் என்ன தெரியுமா. உனக்கும் எங்கள மாதிரி காதல் வாழ்க்கை அமையனும்” என்றவுடன் ஹர்ஷா முகம் வாட,

“காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டாதான் அது காதல் வாழ்க்கைன்னு இல்ல கண்ணா. வர்ற பொண்ண காதலி. அவங்க வீட்ல இருக்கறதை விட உன்கூட சந்தோஷமா இருக்கேன்னு சொல்ல வச்சிட்டேனாலே நீ கணவனா ஜெயிச்சுட்டன்னு அர்த்தம். சரியா” என்க,

அவனும் மென் சிரிப்புடன் தலையாசைத்தான். அப்போது அங்கு வந்த பத்மா “அத்த ஹாசி வீட்ல கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க. நிச்சயம் எப்போ வச்சுக்கலாம்னு கேட்கறாங்க”

“ஹப்பாடா…. ரொம்ப சந்தோசம். பாரின்ல வளர்ந்த புள்ளைங்க அவங்க விருப்பம் வேறையா இருந்தா என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன். பரவால்ல ரேவதி புள்ளைங்கள நல்லா வளர்த்திருக்கா” என்றவர் மேலும் “நிச்சியம் என்ன நிச்சியம் கல்யாணமே உடனே வச்சிடலாம். எல்லாம் ஏற்கனவே முடிவு எடுத்ததுதானே. என்ன கண்ணா உனக்கு ஓகேதானே”

“உங்க விருப்பம்தான் பாட்டி. நீங்க பார்த்து பண்ணுங்க” என்றவன் தலையை வாஞ்சையாக தடவியவர் “உன் மனசுக்கு எப்போவும் சந்தோஷமா இருப்பப்பா” என்றுவிட்டு எழ,

தானும் எழுந்தவன் அவரை அணைத்து “மனசு ஒரு மாதிரி தெளிவில்லாம இருந்தது. உங்ககிட்ட பேசுன உடனே இப்போ பரவால்ல தேங்ஸ் பாட்டி” என்றவனை பார்த்து சிரித்த பாட்டி மருமகளை கெத்தாக ஒரு பார்வை பார்க்க,

அவரோ “ம்கூம்….” என்று முகவாயை தோள் பட்டையில் இடித்து கொண்டு சென்றார்.

“ஏன்டா அர்ஷா என் புருஷன் எனக்காக நல்லதா பார்த்து பார்த்து செஞ்சுட்டு கடைசில வச்சார் பாரு பெரிய ஆப்பா. உன் அம்மாகூட கோர்த்தூட்டு. இதுக்காக அந்த மனுஷன நான் மன்னிக்கவே மாட்டேன்டா”.

“அட போங்க பாட்டி நானும் கூட நீங்க ரெண்டு பேரும் நிஜமா சண்டை போடறீங்கன்னு நினைச்சு ஏமாந்து தான் போறேன். மருமகளுக்கு ஒண்ணுன்னா நீங்க ஓடுவீங்க.

உங்களுக்கு ஒண்ணுன்னா உங்க மருமக வீட்டையே ரெண்டாக்கிடுவாங்க. உங்க பொம்ம விளையாட்டா வெளிய போய் விளையாடுங்க எனக்கு தூக்கம் வருது. கொண்டு வந்த காபிய கூட குடிக்கல” என்ற பேரனை கண்டு அசடு வழிய சிரித்தவர் “சரிடா கண்ணா நீ போய் தூங்கு” என்றுவிட்டு செல்ல,

கட்டிலில் வந்து படுத்த ஹர்ஷா மனது முழுதும் பாட்டி சொன்ன விஷயங்களே சுற்றி வர துவங்கியது.

ஒருத்தவங்க வேணும்னு முடிவு பண்ணிட்டா அவங்கள பக்கத்துல வச்சுக்க எந்த எல்லைக்கும் போக தோணும் என்ற பாட்டியின் வார்த்தையில் அடித்து பிடித்து எழுந்தவன். அச்சச்சோ….. நான் ஹாசிகிட்ட அவளை கல்யாணத்துக்கு ஒத்துக்க சொல்லி கிட்ட தட்ட பிளாக்மெயில் பண்ற அளவுக்கு போனேனே. அப்போ இதுக்கு பேர் என்ன’ நோ…. நோ…. ஹர்ஷா கண்டதை யோசிக்காத.

ஹாசி உன் பிரண்ட் அதானால அப்படி பண்ணிட்ட. வேற ஒன்னும் இல்ல…வேற ஒன்னுமே இல்ல…..’ என்று எதில் இருந்தோ தப்பிப்பது போல் தனக்குள் சொல்லி கொண்டவன் கண்களை இறுக மூடி கொண்டு ‘டேய் நீ ஏற்கனவே பயங்கர குழப்பத்துல ப்ளஸ் லவ் பெயிலியர்ல இருக்க. அதானல மனசு கண்டதை யோசிக்குது பேசாம கண்ண மூடி தூங்கிடு அதுதான் நல்லது.

தூங்கு…. தூங்கு…. தூங்கிடு…. என்று கன்னம் கன்னமாக அடித்து கொண்டவனுக்கு என்ன உருண்டு பிரண்டும் தூக்கம் வந்த பாடு இல்லை. பாட்டு கேட்கலாம் என்று அதையும் போட்டு கேட்டு பார்த்தாயிற்று ஒன்றுக்கும் வழியில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவன் வண்டியை எடுத்து கொண்டு வெளியில் சென்றுவிட்டான்.

ஹர்ஷாவின் குழப்பம் நீங்குமா. ஹாசி என்ன செய்ய காத்திருக்கிறாள் என்பதை அடுத்த எபியில் பார்க்கலாம்.