அத்தியாயம் -24

ஹர்ஷா சொன்னதை கேட்டு திகைத்து போன ஹாசி “வாட்….. என்ன உளறுறீங்க”

“நான் பேசறது உனக்கு உளர்ற மாதிரி இருக்கா. ரெண்டு நாள் முன்னாடிதான் அப்பா என்கிட்ட இதைப்பத்தி பேசுனாரு. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும்னு வேற சொல்லி இருக்காரு” என்றவன் கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் சொல்ல,

ஹாசி விக்கித்து போனாள். அதே சமயம் ‘இந்த நாய் ஒழுங்கா கண்டவ பின்னாடி சுத்தாம இருந்திருந்தா இந்த கல்யாணம் நடந்திருக்கும்தான். அத்தை உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லாம இருந்திருக்கும். ஆனா இவன்தான் லவ் பண்ணி தொலைச்சுட்டானே’ என்று மனதில் கடு கடுத்தவள் அவனை முறைத்து கொண்டு இருந்தாள்.

“ஹேய்… நான் என்ன பண்ணுனேன் எதுக்கு என்னை முறைக்கற?. வீட்ல பேசி முடிவெடுத்திருக்காங்க. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறாங்கலாம்”

“என்ன ஹர்ஷா விளையாட்டு இது. நீதான் அர்ச்சனாவ லவ் பண்றல்ல, அதை வீட்ல சொல்ல வேண்டியதுதானே. மாமாதான் உன் காதலுக்கும் ஓகே சொல்லிட்டாரே”

“அ…. அ…. அது….. அது….. வந்து….”

“என்ன வந்து போயி” என்று கோபமாக கேட்க,

“அது….ஹாசி என் பிரச்சனை…. என்னன்னா…..அச்சுவ நம்பி என்னால வீட்ல தைரியமா பேச முடியல” என்று தலையை அழுந்தி கோதியவாறு சொல்ல,

ஹாசியோ அவனை ‘அட லூசே என்பது போல் பார்த்தாள். “என்ன அந்த பொண்ண நம்பி பேச முடியலையா? டேய் அந்த பொண்ண நம்பிதான்டா உன் எதிர்காலத்தையே குடுத்துருக்க. வீட்ல பேசறதுக்கு நம்பிக்கை இல்லைன்னு சொல்ற” என்றவள் கேள்விக்கு அவனாலும் பதில் சொல்ல முடியவில்லை.

அவன் அமைதியை கண்டு கடுப்பானவள் “சரி இப்போ என்ன முடிவு எடுத்திருக்க. இதை எதுக்கு என்கிட்ட வந்து சொல்ற”.

“இல்ல ஹாசி உனக்கு போன் பண்ணுனேன் எடுக்கல”

“என் போன் மிஸ் ஆகிடுச்சு ஈவ்னிங் புது போன் வாங்கணும். அதுக்கும் என்னை பார்க்க வரதுக்கும் என்ன சம்மந்தம்”

“என்ன ஹாசி இப்படி சொல்ற. உன்னை பார்க்க வர கூட எதாவது காரணம் இருந்தாதான் நான் வரணுமா. நீ என் பிரண்ட்” என்றவுடன் அவனை மனதின்னுள்ளே அசிங்க அசிங்கமாக திட்டியவள் “இப்போ என்ன சொல்ல வர்ற”

“தெரியல. கல்யாண விஷயம் கேட்டதில் இருந்து உன்னை பார்க்கணும்னு தோணிட்டே இருந்தது. அதான் வந்தேன். ஏனோ மனசே சரியில்ல. வெளிய எங்கயாவது போயிட்டு வரலாமா?”

“இல்ல ஹர்ஷா. வீட்ல நம்ம மேரேஜ் பத்தி பேசிட்டு இருக்கும்போது நாம இப்படி வெளிய போனா அவங்களுக்கு நம்பிக்கை குடுக்கற மாதிரி ஆகிடும். அதனால இப்போ வேண்டாம்.

உன்னோட காதல் விஷயத்தை வீட்ல சொல்லு. அப்புறம் நீ, நான், அர்ச்சனா, மித்ரா, ரஞ்சன்னு எல்லாரும் ஒன்னா வெளிய போகலாம். நீ ரொம்ப குழப்பமா இருக்க. போய் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு. அப்புறம் வீட்ல பேசு.

எங்க வீட்ல இருக்கவங்கள எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும். அப்பா இன்னும் இதை பத்தி என்கிட்ட பேசல. ஆக்சிடண்ட் ஆனதுல பயந்து கோவிலுக்கு போனோம். காலைல எழுந்த உடனே மீட்டிங்னு மெயில் வரவும் கிளம்பி வந்திட்டேன்.

மே பி ஈவினிங் பேசுவாங்கன்னு நினைக்கறேன். நானே அவங்ககிட்ட எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிடறேன் போதுமா. அதை பத்தின கவலை உனக்கு வேண்டாம். நீ போய் அர்ச்சனாவை பாரு. நான் கிளம்பறேன்” என்று எழுந்தவள் கரத்தை பற்றியவன் முகம் தெளிவில்லாமல் இருக்க”

“போய் முதல்ல அர்ச்சனாகிட்ட பேசு ஹர்ஷா. அவகிட்ட தெளிவான பதில் வாங்கிட்டினாலே உன்னோட குழப்பம் முடிவுக்கு வந்துடும்” என்றவளிடம் சரி என்னும் விதமாக தலையசைத்தவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஹாசி முன் அமர்ந்திருந்தான்.

ஆனால் இப்போது அவன் முகம் இறுக்கமாக இருந்தது. கண்களில் இன்னதென்று புரிந்து கொள்ள முடியாத ஒரு வலி தெரிந்தது.

ஹாசி, “என்ன ஹர்ஷா இப்போதானே சொல்லிட்டு போனேன். இங்கயே உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்க. அர்ச்சனாட்ட பேசுன்னு சொன்னேன்ல”.

“ஹாசி நான் உன்கிட்ட பேசணும்”

“கொஞ்ச நேரம் முன்னாடியும் பேசுனோம். இப்போவும் பேசிட்டுதான் இருக்கோம்”

“இல்ல. நாம வெளிய போகலாம். வா” என்றவன் முன்னால் செல்ல, அவளோ கைகளை கட்டியவாறு அவனைதான் அழுத்தமாக பார்த்து கொண்டு இருந்தாள்.

“என்ன ஆச்சு ஹாசி? வா போகலாம்”.

“இல்ல ஹர்ஷா நாம வெளிய போறது நல்லது இல்ல. எதுவா இருந்தாலும் பரவால்ல இங்கயே சொல்லு”

“ஹாசி ப்ளீஸ்….. கொஞ்சம் புரிஞ்சுக்கோ. நான் பேச போறது நம்ம சம்மந்தப்பட்ட விஷயம்”

“இல்ல ஹர்ஷா…. நான்…”

“ம்ப்ச்…. நீ இப்படியெல்லாம் சொன்னா வர மாட்ட வான்னா..,…” என்று சொல்லி கொண்டே அவள் கையை பிடித்து இழுத்து செல்ல துவங்கினான்.

அவளுக்குதான் தவிப்பாக இருந்தது. இவனுடம் நேரம் செலவிட்டால் எங்கு தன் காதலை உளறிவிடுவோமோ என்று அவள் மனம் பதற்றம் அடைய, மூளையோ ‘உனக்குதான் அவன் வேண்டாம்ல அப்புறம் என்ன பயம் தைரியமா போ….” என்று சொல்ல,

கண்ணை மூடி தன்னை நிதானப்படுத்தியவள் ‘கரெக்ட் அவன்கிட்ட நான் இனி தடுமாறமாட்டேன். என் வாழ்க்கைல அவனுக்கு இடம் இல்ல. என் முடிவுல நான் தெளிவாதான் இருக்கேன்.

இப்போ என்ன பேசனும்னுதானே கூப்பிடறான். என்னதான் பேசறான்னு பார்க்கலாம்’ என்று தனக்குள் சொல்லி கொண்டவள் “கைய விடு ஹர்ஷா. நானே வரேன்”என்க,

அவனும் யோசனையில் இருந்ததால் உடனே அவள் கையை விட்டான்.

ஹர்ஷா கையை விட்டதும் வலிக்கும் கையை தேய்த்தவள் ‘லூசு பய எப்படி இறுக்கமா பிடிச்சுருந்திருக்கான் பாரு கையே வலி எடுத்துருச்சு’ என்று திட்டி கொண்டே அவனுடன் வண்டியில் ஏறியவள் நியாபகமாக விலகியே அமர்ந்து கொண்டாள்.

ஹர்ஷா அவளை கூட்டி வந்தது அமைதியாக யாரும் இல்லாத ஒரு பார்க்கிற்கு.

“என்ன இங்க யாருமே இல்ல”

“நாம பேச போற விஷயத்தை யாரும் கேட்க கூடாதுன்னுதான் இங்க கூட்டிட்டு வந்தேன். இங்க ஈவ்னிங்தான் குழந்தைங்க நிறைய பேர் விளையாட வருவாங்க. வா அங்க இருக்க பெஞ்சில் உட்கார்ந்து பேசலாம்” என்று முன்னால் செல்ல,

என்னதான் சொல்ல போகிறான் என்று பார்ப்போம் என்ற எண்ணத்தில் ஹாசி அமைதியாக அவனை தொடர்ந்து சென்றாள்.

பெஞ்சில் அமர்ந்தவன் எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் விழிக்க, அவளோ பொறுமை இழந்தவள் “ஹர்ஷா பேசணும்னு கூட்டிட்டு வந்துட்டு இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்”

“ஹாசி அது…. அது….. நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும் அதைதான் எப்படி கேட்கறதுன்னு தெரியல”

“உதவியா….” என்று அவனை யோசனையக பார்த்தவள் “என்ன ஹர்ஷா அங்கிள் ஆண்ட்டிகிட்ட உன் லவ்வபத்தி பேசணுமா” என்று வலித்த இதயத்தை சமன் செய்தாவாறு கேட்க,

அவனோ இல்லை என்று மறுப்பாக தலையசைத்தான்.

“ஆபிஸ் ஒர்க்ல எதுவும் ஹெல்ப் வேணுமா”

“அச்சோ…ஹாசி அதெல்லாம் ஒன்னும் இல்ல. இரு நானே சொல்றேன். நீ இன்னும் எவளோ நாள் இந்தியால இருப்ப”

இதை எதுக்கு இவன் கேட்கிறான் என்று குழம்பியவள் அவனையே புரியாமல் பார்க்க,

“ப்ளீஸ் ஹாசி சொல்லு. காரணம் இல்லாம நான் கேட்க மாட்டேன்னு உனக்கே தெரியும்ல” என்று சொல்ல,

பெருமூச்சுவிட்டவள் “இப்போ போயிட்டு இருக்க பிராஜெக்ட் முடிஞ்சுதுனா கிளம்பிடுவேன். ஏன் கேட்குற?”

“என்ன இந்த ஒரு பிராஜெக்ட்காக மட்டுமா அங்க இருந்து இங்க வந்த” என்றவன் அவளை புரியாமல் பார்க்க,

அவளோ ‘நான் எங்கடா அந்த பிராஜெக்ட்க்கு வந்தேன். உன்னை…. உன்னை மட்டும்தான் பார்க்க வந்தேன். கனவுலயே பார்த்துட்டு இருந்த உன்னை நேர்ல பார்க்கணும்ங்கற ஆவல்ல வந்தேன். ஆனா….. எல்லாம் மணல்ல கட்டுன வீடு மாதிரி விழுந்துடுச்சு.

நான் வந்ததற்கு அவசியமே இல்லைங்கும் போது இங்க இருந்து இனி நான் என்ன பண்ண போறேன்’ என்று தனக்குள் புலம்பி கொண்டு இருக்க,

அவள் கைகளை பிடித்து ஆட்டியவன் “ஹேய் ஹாசி என்ன யோசனை எப்போ பாரு ஆபிஸ், பிராஜெக்ட்னு நினைக்காம கொஞ்சம் நார்மலா யோசி. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. இந்த ஒரு பிராஜெக்ட்காகவா இங்க வந்த”

“ஆமா இது ரொம்ப முக்கியமான பிராஜெக்ட் அதான் நான் வர வேண்டியதா போச்சு. ஆமா இதை எதுக்கு கேக்குற” என்றவள் கேள்விக்கு அவன் அமைதியாக,

அவளே தொடர்ந்து “நான் யோசிக்கறது இருக்கட்டும். நீ எதுக்கு இப்போ என்னை ஆபிஸ் லீவ் போட்டு அவசரமா இங்க கூட்டிட்டு வந்த. தேவையில்லாம பேசாம டக்குன்னு விஷயத்துக்கு வா. எனக்கு ஏற்கனவே தலை வலிக்குது”என்க,

அவளையே பார்த்திருந்தவன் டக்கென்று அந்த வார்த்தையை சொல்ல, தான் கேட்டது சரிதானா இல்லை தவறாக எதுவும் விழுந்துவிட்டதா என்று குழம்பியவள் “ஹர்ஷா நீ ஏதோ…. சொன்ன….. ஆனா…. என் காதுல தப்பா……”

“இல்ல சரியாதான் விழுந்திருக்கு. உங்க வீட்ல நம்ம கல்யாணத்தைபத்தி பேசுனா. நீ மறுத்து எதுவும் சொல்லாம. சம்மதம் சொல்லு. நாம கல்யாணம் செய்துக்கலாம்” என்க,

ஹாசிக்கு சுறு சுறுவென கோபம் ஏற, முகம் சிவக்க துவங்கியது.

“எனக்கு வேற வழி தெரியல ஹாசி”

“என்னடா வழி தெரியல. லூசு மாதிரி உளறிட்டு இருக்காம. உங்க அப்பாட்ட போய் உன் காதல் விஷயத்தை சொல்லு. உனக்கு சொல்ல ஒரு மாதிரி இருக்குன்னா சொல்லு நான் சொல்றேன்.

அதைவிட்டுட்டு என்ன பண்ண சொல்ற. இது ஒன்னும் விளையாட்டு இல்ல. மூணு பேரோட வாழ்க்கை” என்று கத்த,

“ஹாசி….. எனக்கு மட்டும் தெரியாதா. இது மூணு பேர் வாழ்க்கை சம்மந்தப்பட்டதுன்னு. ஆனா வேற வழி தெரியல. நீன்னா என்னை புரிஞ்சுப்ப.

என்ன நான் புரிஞ்சுப்பேன். எனக்கு இது சரியா படல.

எனக்கு என்னமோ இதுதான் சரின்னு தோணுது. அப்பா சொன்னதை செஞ்ச மாதிரி ஆயிடும். அம்மாக்கும் ஒன்னும் ஆகாது. எனக்கும் கொஞ்சம் ப்ரியா இருக்கும்”

“ஹர்ஷா என்னை கடுப்பேத்தாத அர்ச்சனாட்ட பேசுனியா இல்லையா. அவ என்ன சொன்னா. அதை முதல்ல சொல்லு”

“அ.. அது…. ஹா…. ஹாசி….”

“ஹர்ஷா சும்மா வந்து போயின்னுட்டு இருக்காத. நான் செம்ம டென்ஷன்ல இருக்கேன்” என்று கத்த,

ஹர்ஷாவும் அவர்கள் இருவருக்கும் நடந்த பேச்சு வார்த்தையை நினைத்து பார்க்க துவங்கினான்.

ஹாசியை பார்த்துவிட்டு சென்ற ஹர்ஷா அர்ச்சனாவை தேடி செல்ல, அவளோ சோகமே உருவாக அமர்ந்து கம்பியூட்டர் திரையை வெறித்து கொண்டிருந்தாள்.
O
அர்ச்சனாவிற்கு ஹர்ஷாவை பிடிக்கும்தான். அவனை கல்யாணம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசையும் இருக்குதான் ஆனால் அவள் தாய், தந்தையை மீறி எதையும் செய்ய முடியாமல் இருக்கிறாள்.

பெற்றோரை எதிர்த்து அவனுடன் செல்லவும் அவளுக்கு விருப்பம் இல்லை. அதே சமயம் அவர்களிடம் தன் காதலுக்காக போராடவும் தைரியம் இல்லை. வேறு வழி இல்லாமல் அவனை பிரிய முடிவெடுத்தவளுக்கு மனம் கஷ்டமாகதான் இருந்தது.

‘ச்ச….. அவன் வேண்டாம்னு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. வீட்ல சொல்லலாம்னு பார்த்தா அம்மா அடிச்ச ஒரு அரையே காது கொய்னு….. இருக்கு.

உனக்கெல்லாம் இந்த லவ்வு ஜவ்வு தேவையாடி’ என்று தன்னை தானே திட்டி கொண்டிருந்தவள் ‘ஹர்ஷா இப்போ வந்து வீட்ல பேசுனியான்னு கேட்பான் என்ன பதில் சொல்றது’ என்று யோசித்து கொண்டிருந்தாள்.

“அச்சு….” என்று ஹர்ஷா கூப்பிடுவது கூட தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தவள் அவன் தன்னை பிடித்து உளுக்கவும் நிகழ் காலத்திற்கு வந்து புரியாமல் விழிக்க,

ஹர்ஷாவோ “என்ன யோசனை அச்சு? கூப்பிட்டே இருக்கேன். நீப்பாட்டுக்கு உட்கார்ந்து இருக்க?”

“அ….. அ…. அது….. ஒன்னும் இல்ல….”

“சரி வா கேன்டீன் போலாம். நான் உன்கிட்ட பேசணும்” என்க, அர்ச்சனாவிற்கு பக்கென்று இருந்தது. இருந்தாலும் பரவால்லை சொல்லிதானே ஆக வேண்டும் என்று நினைத்தவள் எழுந்து நடக்க துவங்கினாள்.

ஹர்ஷாவும் உடன் சென்றவன் கேன்டீனில் சென்று அமர்ந்தவுடன் “வீட்ல பேசுனியா என்ன சொன்னாங்க?” என்று ஆர்வமாக கேட்க,

“இல்ல ஹர்ஷா இது சரிவரும்னு எனக்கு தோணலை”

“இல்ல. எனக்கு புரியல” என்று சொல்ல, அர்ச்சனா வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி “அக்காக்கு இன்னும் மாப்பிள்ளை செட் ஆகால, அக்கா இருக்கும்போது எனக்கு கல்யாணம் செய்ய கண்டிப்பா எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க.”

ஹர்ஷா, “அதனால……”

“சாரி டூ சே திஸ். ஐ ஆம் சாரி. நாம…….”

“ம்ம்ம்….. சொல்லு ஏன் தயங்கர. பிரேக் அப் பண்ணிக்கலாம்னுதானே சொல்ல வர, ச்ச….. உன்னை மாதிரி ஒரு பொண்ணை லவ் பண்ணேன் பாரு என்னை சொல்லணும்.

“என்னை என்ன பண்ண சொல்ற ஹர்ஷா. எங்க வீட்ல காதல்ங்கார பேர ஆரம்பச்சாலே தேச துரோகம் பண்ணுன மாதிரி பாக்குறாங்க”

“இந்த டேஷ்…. எல்லாம் எனக்கு ஓகே சொல்லும்போது தோணலையா” என்க,

இவளோ கண்ணீரோடு “ஹர்ஷா எங்க பேமிலிக்கு லவ் செட் ஆகாதுன்னுதான் நான் வேண்டாம் வேண்டம்னு விலகி போனேன். நீதான் விடாம பின்னாடியே சுத்திட்டு இருந்த,

எனக்கு அது கோபத்தையும் வீட்ல தெரிஞ்சா என் நிலைமை என்ன ஆகுங்கற பயத்தையும்தான் கூட்டுச்சு. இந்த லட்சணத்துல நீ என் பின்னாடி சுத்தவும் ஆபிஸ்ல பொண்ணுங்க வேற என்னை பொறாமையா பார்த்தாங்க, அது எனக்குள்ள ஒரு தனி பீல் குடுத்துச்சு.

ஒரு சிலர் நேர்லயே வந்து பேசுனாங்க. நம்ம ஆபிஸ் பொண்ணுங்களே பின்னாடி சுத்தற ஒருத்தன் உன்னையே சுத்தி சுத்தி வரான். நீ கண்டுக்காம போயிட்டு இருக்க அப்பிடி இப்படின்னு சொல்லி, ஏத்தி விட்டுட்டாங்க……” என்றவள் சொல்லும்போதே அவன் பார்வை கூர்மையாக அவளில் படிந்தது.

நீ சொல்லி முடி என்பது போல் இறுக்கமாக அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் முகத்தை பார்த்து பேசும் தைரியம் அற்றவளாக குனிந்து “அப்படி அவங்க பேசவும்தான் எனக்கும் சரி ஓகே சொல்லி பார்ப்பமேன்னு தோண ஆரம்பிச்சுது.

ஆனா அப்பவும் நீ வெளிய போலாம்னு சொல்லும்போது எல்லாம் முதல்ல கோபம்தான் வரும். ஓகே சொல்லிட்டா உடனே வெளிய போகணும்னு வந்து நிப்பாங்களே என்று கடுப்பாதான் இருக்கும்.

அதே சமயம் யாரவது பார்த்து வீட்ல போட்டு குடுத்துட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு பயமா இருக்கும். அதனாலதான் நீங்க கூப்பிட்டாலும் நான் வர்றது இல்லை.

நீ எது வாங்கி குடுத்தாலும் வாங்குறது இல்ல. எனக்கு உன்னை பிடிக்கும்தான். ஆனா அம்மா, அப்பாவை விட இல்ல. நமக்குள்ள செட் ஆகாது. என்னை மன்னிச்சிடு.

வீட்ல சொல்ற மாதிரி வேற பொண்ண கல்யாணம் செய்துக்கோ . என்னை மறந்துட்டு சந்தோஷமா லைப்ப ஸ்டார்ட் பண்ணு.

இந்த அறிவு முன்னாடியே இல்லையான்னு நீ பாக்குறது எனக்கு புரியுது. ஆனா என்ன பண்ண வயசு கொஞ்சம் தடுமாறிட்டேன். இப்போ சரியாகிட்டேன். நீயும் சரியாகிடு. எல்லாத்துக்கும் சாரி.

தேவையில்லாம என்கிட்ட பிரச்சனை பண்ண மாட்டேன்னு நம்பறேன். நான் கிளம்பறேன் பாய்” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட,

ஹர்ஷாவோ என்னுடைய காதல் வெறும் வயசு கோளாறுதானா, அவ்வளவுதானா… என்று பேச்சற்று விக்கித்து போய் அமர்ந்திருந்தான்.