அத்தியாயம் -22

ஆதவன் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும் அழகான காலை பொழுது சோம்பலாக கண் விழித்தாள் ஹாசி. அவளே விரும்பாமல் அவளவன் நினைவு வழக்கம் போல் அவளுள் எழ,

‘சூ….. அவன் எனக்கு வேண்டாம். என்னை மறந்தவன் எனக்கு வேண்டாம்’ என்று மந்திரம் போல் சொல்லி கொண்டவள் ஆபிஸ் கிளம்ப துவங்கினாள்.

இன்று மித்ராவை சந்தித்து வீட்டில் பேச போவதாக சொல்லி வரலாம் என்று வழக்கத்தைவிட சீக்கிரமாக எழுந்த நிரஞ்சன் வேகமாக கிளம்பி கீழே வர, அப்போது ராஜ் மகனை அழைத்து தன் எதிரில் அமர சொன்னார்.

தந்தையை குழப்பமாக பார்த்த நிரஞ்சன் “என்னப்பா” என்று கேட்க,

அவரோ “உட்காருப்பா சொல்றேன். ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்க,

அவனும் என்னவாக இருக்கும் என்ற யோசனையோடு அமர்ந்தான்.

ராஜ் பேச ஆரம்பிக்கும் முன்பே ரேவதியை அழைத்தார்.அவர் வந்த பிறகு நிரஞ்சனிடம் “நிரஞ்சா நீ யாரையாவது லவ் பண்றியா”என்று கேட்க,

நிரஞ்சனோ அந்த கேள்வியில் திகைத்து போனவன் எச்சிலை கூட்டி விழுங்கிவாறு “என்னப்பா திடீர்னு இப்படி கேட்குறீங்க” என்று கேட்க,

அவரோ “இல்லப்பா நாங்க உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு எடுத்திருக்கோம்” என்றவுடன் அதிர்ந்து போனவன்,

“ப்பா….. இப்போ எதுக்கு திடீர்னு இந்த முடிவு. எனக்கு என்ன அவசரம்னு கல்யாணம் பண்ண பாக்குறீங்க. இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போகட்டும். ஹாசிக்கு கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் நான் பண்ணிக்கறேன்” என்று சொல்ல,

அவரோ “என்னது ரெண்டு வருஷமா அது எல்லாம் வாய்ப்பில்லை மகனே. நாங்க முடிவு பண்ணிட்டோம் உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு. நீ யாரையாவது லவ் பண்ணுனா சொல்லு. அந்த பொண்ணையே கட்டி வைக்கறோம். இல்லையா நாங்க பார்த்த பொண்ண ஓகே பண்ணு.

இந்தா இதுல பொண்ணோட போட்டோ இருக்கு.நல்லா பொறுமையா பார்த்துட்டு பதில் சொல்லு” என்று ஒரு கவரை அவன் முன் வைத்தார்.

நிரஞ்சன் அதை எடுக்காமல் ‘என்ன சொல்லி இவங்கள சமாளிக்கறது. பேசாம லவ் விஷயத்தை சொல்லிடலாமா’என்று யோசித்து கொண்டு இருக்க,

ரேவதியோ “ரஞ்சா பொண்ணு போட்டோவ எடுத்து பாருடா நல்லா அழகா மகா லட்சுமியாட்டம் இருக்கா” என்க,

முகத்தை சுழித்தவன் தன்னவள் அல்லாது மற்றொரு பெண்ணை பார்க்கும் எண்ணம் இல்லாது. “இல்லப்பா. எனக்கு இந்த பொண்ணு வேண்டாம்”

“என்னடா போட்டோ பார்க்காமையே இப்படி சொல்ற. ஒரு தடவை பாருடா” என்று ரேவதி சொல்ல,

ராஜோ “சரி. நீ யாரையும் லவ் பண்ணலன்னு எனக்கு புரிஞ்சு போச்சு. அதனால இந்த பொண்ணுதான் உன் பொண்டாட்டி. நாங்க முடிவு பண்ணிட்டோம். நாளைக்கு பொண்ணு பார்க்க வரோம்னு பொண்ணு வீட்ல சொல்லிடறேன்” என்றவர் வேலை முடிந்தது. நீ கிளம்பலாம் என்பது போல் பேப்பரை எடுத்து படிக்க துவங்க.

அவனோ “ப்பா…. இது எல்லாம் அராஜகம். இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். எனக்கு நீங்க பார்த்த பொண்ண பிடிக்கல” என்றான் கோபமாக.

“ஏன் பிடிக்கலைன்னு ஒரு காரணத்தை சொல்லு”.

“ஏன்னா…. ஏன்னா….. ஹான்…. அந்த பொண்ணு பேர் பிடிக்கல, மூக்கு கோணையா இருக்கு. கண்ணு ஒரு மாதிரி குட்டியா நல்லாவே இல்ல” என்று அடிக்கி கொண்டே போக,

ரேவதி, “டேய் மகனே நீ அந்த பொண்ணு போட்டோவையே இன்னும் பார்க்கலடா. அதுக்குள்ள இவ்ளோ சொல்ற”

“அதெல்லாம் பார்த்துட்டேன். நல்லா இல்ல. இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன். எனக்கு இந்த பொண்ணு பிடிக்கல”

“ஏன்டா இப்படி பண்ற போட்டோக்கூட பார்க்காம. வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்”

“என்ன அர்த்தம்ன்னா…. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அதுதான் அர்த்தம்” என்க,

சற்று நேரத்திற்கு அந்த இடமே ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது. பெற்றோர் இருவரும் என்ன சொல்ல போகிறார்களோ என்ற பயத்தோடு ரஞ்சன் இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருக்க,

ரேவதியோ நமட்டு சிரிப்புடன் “சரி ராஜ் அவன்தான் பிடிக்கலைன்னு சொல்றான்ல. மித்ரா அப்பாக்கு போன்பண்ணி எங்க பையன்னுக்கு உங்க பொண்ண பிடிக்கலையாம். மூக்கு கோணையா இருக்காம். கண்ணு……அது கண்ணா குட்டியா கோழி குண்டு மாதிரி பார்க்க கேவலமா இருக்குன்னு சொல்றான்னு சொல்லிடுங்க முக்கியமா அவங்க பொண்ணு பேரு கேட்டாளே நாராசமா இருக்குன்னு என் பையன் சொல்றான்னு அழுத்தி சொல்லுங்க” என்க,

மித்ரா என்றவுடன் அதிர்ந்து போனவன் “ம்மா……” என்க,

இருவரும் அவனை சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.

“இ…. இ…. இப்போ….. நீ…. நீ…. நீங்க மித்ரான்னா சொன்னீங்க”

“ஆமா அதுதான் பொண்ணோட பேரு. நீதான் பிடிக்கலைன்னு சொல்லிட்டியே. சரிவிடு இனி அந்த பேச்சு எதுக்கு. ஏங்க நீங்க கிருஷ்ணன் அண்ணாக்கு போன் பண்ணி……” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே ரஞ்சன் அந்த போட்டோவை ஓப்பன் பண்ணி பார்த்தான்.

அதில் மரகத பச்சை நிற பட்டு புடைவையில் அழகாக சிரித்து கொண்டிருந்தாள் அவனின் மித்ரா. உடனே வேகமாக “எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம்” என்று வேகமாக சொல்ல,

பத்மாவோ “இல்லப்பா. எங்களுக்காக நீ உன் காதலை சேக்ரிபை பண்ண வேண்டாம். நாங்க பிடிக்கலைன்னு சொல்லிடறோம்” என்று மகனிடம் சொன்னவர்,

கணவர் புறம் திரும்பி “ஏங்க அப்புறம் நம்ம பையன் சொன்ன அந்த கோண மூக்கு, குட்டி கண்ணு, பேரு கேவலமா இருக்கு இது எல்லாத்தையும் மறக்காம சொல்லுங்க” என்று மகனை ஓர கண்ணால் பார்த்து கொண்டே மீண்டும் சொல்ல,

ரஞ்சன் அரண்டு போனான் “எதே….. இது எல்லாம் அவகிட்ட சொல்ல போறீங்களா” என்று கேட்டவன் முன் மித்ரா பத்ரகாளியாக நின்று முறைத்து கொண்டு நான் கோண மூக்காடா என்று கேட்பது போல் பிம்பம் தோன்ற ஓடி போய் தாய் காலிலேயே விழுந்துவிட்டான்.

“அம்மா தாய் குலமே. மொத்த குட்டும் வெளில வந்துடுச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். தயவு செஞ்சு உங்க மகனை கருணை பார்த்து மன்னிச்சுவிடுங்க. நான் சொன்னது எல்லாம் அவளுக்கு தெரிஞ்சுது அவ்வளவுதான்.

அப்புறம் அவளை மலை இறக்குறது ரொம்ப கஷ்டம். நல்லா இருக்க குடும்பத்துல கும்மி அடிச்சுடாதீங்க. உங்ககிட்ட சொல்லாதது தப்புதான்” என்று சொல்ல,

“அட ச்சை….. படுத்தேவிட்டனடா…” என்று சொல்லி இருவரும் சத்தமாக சிரிக்க துவங்கினர்.

அதில் கடுப்பானவன் “ஒரு மகன் கெஞ்சி கதறிட்டு இருக்கானேன்னு கொஞ்சமாவது இறக்க படறீங்களா” என்று கேட்க,

இருவரும் கோரசாக “கடல்லையே இல்லையாம் மை சன்” என்றனர்.

வேகமாக எழுந்து நின்றவன் தடுமாற்றத்துடன் “சாரிப்பா, சாரிம்மா. இந்த விஷயத்தை மறச்சதுக்கு”என்க,

ராஜோ “பரவால்ல விடு. எங்க மேல அம்புட்டு பயம் இருந்தா சரித்தான். இப்போ சொல்லு. நாங்க பார்த்த பொண்ணு ஓகேவா”

“டபுள் ஓகேப்பா….” என்று மகிழ்ச்சியாக சொன்னவன் பின் யோசனையாக “அப்பா ஹாசி இருக்கும்போது எனக்கு என்ன அவசரம். அவளுக்கு முதல்ல முடிச்சுட்டு அப்புறமா நான் பண்ணிக்கிறேனே. இப்போ நிச்சயம் மட்டும் வேணா முடிச்சுட்டு கிளம்பிடலாம்” என்று நல்ல அண்ணனாக தங்கையின் வாழ்க்கையை பற்றியும் யோசித்து சொல்ல,

ராஜோ மகனின் பொறுப்பையும் தங்கை மேல் கொண்ட பாசத்தையும் கண்டு மனதில் மெச்சி கொண்டாலும் அதே சமயம் உடனே அமெரிக்கா கிளம்ப என்ன அவசியம் வந்தது என்று யோசனையோடும் மகனை அவர் பார்த்து கொண்டிருக்க,

அதே சமயம் ஹாசி வேகமாக தயாராகி கீழே வந்தாள். “ப்பா…..ம்மா….. இன்னைக்கு சீக்கிரம் வர சொல்லி மெயில் வந்திருக்கு மீட்டிங்காம். நான் கிளம்பறேன்.” என்று ஓட,

ரேவதியோ மகளை சாப்பிட சொன்னார். “ம்மா…. டைம் ஆச்சு அங்க ஆபிஸ் கேன்டீன்ல பார்த்துக்கறேன்” என்றுவிட்டு மதியத்துக்கு தாய் ரெடி செய்து வைத்திருந்த டிபனை தூக்கி கொண்டு ஓடிவிட்டாள்.

“ப்பா……எல்லாத்துக்கும் அவசரம்தான்” என்று மகளை அனுப்பிவிட்டு வந்த ரேவதி மகனை பார்த்து “அப்போ மித்ரா வீட்டுக்கு போன் பண்ணி அடுத்த வாரமே நிச்சயம் வச்சிக்கலாம்னு சொல்லிடவா” என்று கேட்க,

ரஞ்சனுக்கு சீக்கிரம் நிச்சயம் முடித்து இங்கிருந்து கிளம்ப வேண்டும் அங்கு சென்ற பின் எதாவது சொல்லி தங்கை மனதை மாற்றி, அவளுக்கு திருமணம் முடித்த பின்தான் தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று தனக்குள் முடிவெடுத்து கொண்டவன் தாயிடம் சம்மதமாக தலையசைத்தான்.

ராஜோ, “இல்லப்பா கல்யாணம் முடிச்சுட்டே நாம அமெரிக்கா போகலாமே” என்க,

“இல்லப்பா ஹாசி இருக்கும்போது நான் கல்யாணம் செய்துக்கறதுல எனக்கு விருப்பம் இல்ல” என்று பிடிவாதமாக சொல்ல,

பெற்றோர் இருவரும் அவனை பார்த்து மென்மையாக சிரித்து “ஹாசிக்கும் கல்யாணம் பேசி முடிச்சாச்சுன்னு சொன்னா உனக்கு ஓகேவா”என்க,

அவனோ குழப்பமாக இருவரையும் பார்த்தவன் ஹாசி மனது இருக்கும் நிலைமைக்கு அவள் கண்டிப்பாக திருமணத்திற்கு ஒத்து கொள்ள மாட்டாள் என்று புரிந்தாலும் மாப்பிள்ளையை பற்றி அறிந்து கொள்ள நினைத்தவன்.

“மாப்பிள்ளை பார்த்துட்டீங்களா. மாப்பிள்ளை பேர் என்ன? என்ன பண்றாரு?”

“நம்ம ஹர்ஷாதான்ப்பா” என்றவுடன் நிரஞ்சனுக்கு தலையே சுற்றியது. “என்னப்பா சொல்லறீங்க. மித்ரா அண்ணன் ஹர்ஷாவா?”

“ஹாஹாஹா….. என்ன ரஞ்சா எத்தனை ஹர்ஷாவ நமக்கு தெரியும். இருந்தாலும் உனக்காக சொல்றேன். மித்ரா அண்ணன். தேவகி பாட்டி பேரன். கிருஷ்ணன் மாமா பத்மா அத்தை பையன் ஹர்ஷாதான்” என்று கிண்டலாக சொல்ல,

அவர்களது கிண்டலை கண்டு கொள்ளாதவன் “ப்பா….. ஹர்ஷாக்கு ஹாசிய கல்யாணம் செய்துக்க சம்மதம்மா” என்று புருவ முடிச்சுடன் சீரியஸான குரலில் கேட்க,

பத்மாவோ “அவங்க வீட்லதான் முதல்ல இந்த கல்யாண விஷயத்தை ஆரம்பிச்சாங்க. உனக்கு மித்ராவை கேட்டதுக்கு, அவங்க ஹாசிக்கு ஹர்ஷாவை கேக்குறாங்க. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குற மாதிரி பிளான் பண்ணி இருக்கோம்”

தாய் சொல்வதைக் கேட்டு புருவம் சுருக்கியவன் “ஆனா….. இது எனக்கு சரியா வரும்னு தோணலப்பா”

“ஏன்ப்பா அப்படி சொல்ற. ஹர்ஷா நல்ல பையன். நம்ம ஹாசிய நல்லா பார்த்துப்பான். சின்ன வயசுல இருந்து அவனை பார்க்கறோம். நமக்கு அவனைப்பத்தி தெரியாதா?”

“ப்பா….. ஆனா….. அவன் சின்ன வயசுல மாதிரி இல்லாம்ம. வேற எதாவது யோசனைல இருந்தான்னா……” அவன் வேறு பெண்ணை விரும்புகிறான் என்பது அவனது பர்சனல் அதை தான் தாய், தந்தையிடம் சொல்வது நன்றாக இருக்காது. எதுவாக இருந்தாலும் அவன்தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக,

பத்மா, “ரஞ்சா உனக்கும் ஹர்ஷாக்கும் ஏழாம் பொருத்தம்ன்னு எங்களுக்கு தெரியும். இருந்தாலும் அவன் நல்ல பையன். நமக்கு நல்லா தெரிஞ்ச குடும்பம். அது மட்டும் இல்லாம நம்ம ஹாசி விரும்பற பையன்.

அந்த புள்ளைங்க நம்ம வீட்டுக்கு வந்தா உங்க வாழ்க்கையும் நல்லா இருக்கும்ன்னு எங்களுக்கு தோணுது. நம்ம ஹாசிக்கு ஹர்ஷாவ விட வேற நல்ல பையன்ன உன்னால கொண்டு வர முடியுமா சொல்லு. நாங்க பல வருஷமா யோசிச்சு வச்ச விஷயம் கண்ணா இது” என்க,

திகைத்து போனவன் “அம்மா….. ஹாசி….. லவ்….”

“எங்களுக்கு தெரியும். சின்ன வயசுல ஏதோ பப்பி லவ் அவளே கொஞ்ச. நாள்ல சரி ஆகிடுவான்னு நினைச்சோம். ஆனா அவளோடது உண்மையான ஆத்மார்த்தமான காதல்ன்னு. உறுதியா இருந்து எங்களுக்கு புரிய வச்சுட்டா” என்று சொல்ல,

ரஞ்சனுக்கு தங்கை காதலை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. காதலுக்கு எப்போதும் எதிரிகள் வெளியில் இருந்து வருவார்கள் ஆனால் இங்கு அனைவரும் அவர்கள் காதலுக்கும், கல்யாணத்திற்கும் சம்மதம் தெரிவிக்க, அவர்கள் காதலிப்பதாக நினைக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் வேண்டாம் என்று சொல்லும் விந்தை இங்குதான் நடக்கும்” என்று பெரு மூச்சுவிட்டான்.

அதபின்தான் தாய் அதை அடுத்து சொன்ன விஷயம் அவன் மூளையை சொரிய “எதே….பல வருஷமா யோசிச்சு வச்சதா” என்று கேட்க,

இருவரும் ஒரு சேர ‘ஆமாம்’ என்று தலையசைத்தனர்.

‘அட கொடுமையே இவங்க இப்படி பிளான் பண்ணி வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சுருந்தா, அமெரிக்கா ரோடுல அவ பின்னாடி நாய் மாதிரி சுத்தி இருக்க மாட்டானே. அந்த ஜன்னலை எத்தனை தடவை எகிறி குதிச்சு போனேன். ச்ச…. எத்தனை திட்டு, எத்தனை முறைப்பு செருப்புல அடி வாங்காதது மட்டும்தான் மிச்சம்’ என்று தான் காதலுக்காக மித்ரா பின்னால் சுற்றியதை நினைத்து பார்த்தவன் தலையில் நங்கென்று கொட்டினார் ரேவதி,

“ஆஆஆஆ……. ம்மா……” என்றவன் அலற,

அவரோ “இது முன்னாடியே தெரிஞ்சுருந்தா ஜன்னல் வழியா எகிறி குதிச்சு போய் மித்ராவ பார்க்காம, எங்க முன்னாடியே அவ ரூம்க்கு நேரா போய் பார்த்திருக்கலாம்னு தோணுதா” என்று கேட்க,

கண்களை அதிர்ச்சியாக விரித்தவன் “அதையும் பார்த்துட்டீங்களா” என்று பாவம் போல் கேட்க,

நாங்க உங்களை பெத்தவங்கடா. பிள்ளைங்களை கவனிக்கறதை விட, பெரிய வேலை எங்களுக்கு என்ன இருக்க போகுது” என்று கேட்க,

இருவரையும் ஒரு சேர அணைத்து கொண்ட ரஞ்சன் “யூ ஆர் தே பெஸ்ட் பேரண்ட்ஸ் இன் தி வேர்ல்ட்” என்று சொல்ல,

ரேவதியோ “ஓவர் ஐசா இருக்கே மை சன்” என்க,

“சளி பிடிச்சாலும் பரவால்ல. இந்த ஐச நீங்க தாங்கிக்கதான் வேணும்” என்று சொல்ல, மூவரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

இங்கு ஆபிஸ்க்கு வந்த ஹாசிக்கு வேலை சரியாக இருந்தது. இங்கு வந்ததற்கு காரணமே அந்த ப்ராஜெக்டை முடிக்க வேண்டும் என்றுதான். அதனால் மற்றவர்களையும் துரிதப்படுத்தி வேலைகளை முடிக்க முனைப்பாக இருந்தாள்.

அப்போது அவள் அருகில் இருந்த ஆபிஸ் போன் அடிக்க எடுத்து பேசியவளின் முகம் யோசனைக்கு மாறியது. “இதோ வரேன்” என்றவன் யார் இங்கு தன்னை தேடி வந்து இருக்கிறார்கள் என்று யோசித்தவள் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்துவிட்டு கிளம்பினாள்.

ஆம், அவள் ஆபிஸ் வாட்ச்மேன்தான் அழைத்திருந்தார் . அவளை தேடி யாரோ வந்திருப்பதாக சொல்ல, யார் என்று பார்க்கதான் சென்று கொண்டிருக்கிறாள் ஹாசி.

வந்தது யாராக இருக்கும். ஒருவேலை புது முகம் வந்து இறங்க போகுதோ ஹாசிக்கு ஜோடியாக….. பொருத்திருந்து பார்ப்போம்.