“நான் என் முடிவுல தெளிவா இருக்கேன். ஏன் ஹர்ஷா இப்படி என்னை கார்னர் பண்ணுற” என்று கோபமாக கத்தி கொண்டிருந்தாள் அர்ச்சனா.
ஆம், வேகமாக ஆபிஸ் வந்தவன் நேராக அர்ச்சனா டேபிளிற்கு சென்று அவளுடன் பேச வேண்டும் என்று கேன்டீன்க்கு அழைத்து வந்து, வீட்டில் தந்தை சொன்னது அனைத்தையும் சொல்லி,
அர்ச்சனா வீட்டில் தங்கள் காதலைபற்றி பேச சொல்லி சொன்னதற்குதான் அவள் கத்தி கொண்டு இருந்தாள்.
“ஹேய் நான் உன்னை கார்னர் பண்ணல. கொஞ்சம் என் நிலைமையை யோசிச்சுப்பாரு. வீட்ல ரொம்ப பிடிவாதமா இருக்காங்க”.
“ஹர்ஷா நாம லவ்பண்ண ஸ்டார்ட் பண்ணும்போதே எல்லாம் சொல்லிதான் ஓகே பண்ணுன்னேன். இப்போ இப்படி பேசுனா. நான் என்னதான் பண்ணுறது” என்று கேட்டவளை கடுப்பாக பார்த்தவன் “அர்ச்சனா நான் எத்தனை தடவை சொல்றது. நீ சொல்றது எல்லாம் நான் புரிஞ்சுக்கணும்னு நினைக்கற மாதிரி என்னையும் என் நிலைமையும் நீயும் புரிஞ்சுக்க முயற்சிபண்ணு.
இப்போ உங்க வீட்ல நம்ம காதல் விஷயத்தை சொல்றதுல உனக்கு என்ன பிரச்சனை. கல்யாணம் செய்துக்கலாங்கற எண்ணத்துலதான் லவ் பண்ணுனியா இல்ல கழட்டிவிட யோசிக்கறியா” என்க,
“ஹர்ஷா…” என்று உச்சக்கட்ட கோபத்தில் கத்தியிருந்தாள் அர்ச்சனா.
“பின்ன என்னை என்ன பண்ண சொல்ற. அப்பா ரொம்ப பிடிவாதமா இருக்காரு. நீ லவ் பண்ணாக்கூட பரவால்ல சொல்லு. அந்த பொண்ணு வீட்ல பேசறோம்னு சொல்றாரு. உங்க வீட்ல அப்பா வந்து பேசட்டும். கோவில்ல உன்னை பார்த்து புடிச்சு வந்து பொண்ணு கேட்கற மாதிரி சொல்லலாம். என்ன சொல்ற.
“ஹர்ஷா எனக்கு கல்யாணம் ஆகாத ஒரு அக்கா இருக்கா. அது கொஞ்சமாவது உனக்கு நியாபகம் இருக்கா”
“நான் சொன்னதை தவிர, இப்போ நமக்கு வேற எந்த வழியும் இல்ல”.
“உனக்கு பார்த்திருக்க பொண்ணுகிட்ட பேசி பாரு ஹர்ஷா”
“ஹாசிதான் பொண்ணு” என்று சொன்னவுடன் திகைத்து போனவள் “வாட்…” என்க,
அவனும் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தான்.
உடனே பல்லை கடித்த அர்ச்சனா “நாம லவ் பண்ற விஷயம் ஹாசிக்கு தெரிஞ்சும் எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சா. அவ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கா”
“நோ…. நோ…. இல்ல அச்சு இந்த விஷயத்துல அவளுக்கும் கோபம் இருக்கும்னு நினைக்கறேன் அதான் போன் கூட எடுக்கல”
“நீ போன் பண்ணி அவ எடுக்கலையா” என்று யோசனையாக அவள் கேட்க,
“இல்ல. போனே போகல”
“போனே போகலையா. அப்போ அவளே ஏன் இந்த கல்யாண விஷயம் தெரிஞ்சு, நீ மறுத்து பேசுவேங்கறதுக்காக போனை ஆஃப் பண்ணி வச்சிருக்க கூடாது”
“இல்ல அச்சு அவ எதுக்கு அப்படி பண்ண போறா, வேற ஏதோ பிரச்சனைனு நினைக்கறேன்.
“சரி வேற பிரச்சனையாவே இருக்கட்டும். அது என்னனு கேட்கணும்னு உனக்கு தோணலையா. ஹாசி போன் எடுக்கலைனா என்ன? அவங்க வீட்ல இருக்க மத்தவங்களுக்கு கால் பண்ணி கேட்கலாம்ல.
“அவங்ககிட்ட எல்லாம் நான் போன் பண்ணி பேசினது இல்ல”
“உன்னை ஒன்னும் நான் அவங்க கூட பேச சொல்லல. அவங்களுக்கு போன் பண்ணி ஹாசிகிட்ட குடுக்க சொல்லு”
“ம்ப்ச்…. என்ன பேசற அச்சு இப்போ அவ ஆபிஸ் போயிருப்பா. எப்படி பேச முடியும். ஈவ்னிங் ஆபிஸ்விட்டு போகும்போது அவளை நேர்லயே பார்த்து பேசிக்கறேன். இப்போ அது இல்ல பிரச்சனை. நீ உங்க வீட்ல பேசி முடிவ சொல்லு” என்க,
‘அவளை நேர்ல போய் பேச நான் விட்டாதானே’ என்று தனக்குள் கருவி கொண்டவள் கோபமாக “இல்ல நீங்க அவ அண்ணாகிட்ட பேசுங்க. அவன்கிட்ட இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லைன்னு இப்போவே என் முன்னாடியே சொல்லு” என்று பிடிவாதமாக இருக்க,
“அவன்லாம் ஒரு ஆளு அவன்கிட்ட எல்லாம் என்னால பேச முடியாது”.
“என்ன ஹர்ஷா பேசற. அவரு உங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா வர போறவரு. எப்படி இருந்தாலும் எதிர்காலத்துல அவருக்கூட நீ பேசிதான் ஆகணும். அதை இப்போ இருந்தே ஆரம்பி. போன் பண்ணு” என்று சொல்ல,
இதற்கு மேல் இவளை சமாளிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த ஹர்ஷா நிரஞ்சனை அழைத்தான்.
கோவிலில் இருந்த நிரஞ்சன் போன் அடிக்கவும் அதை எடுத்து பார்த்தவன் வந்த நம்பரை கண்டு ஆச்சர்யம் அடைந்து பக்கத்தில் இருந்த தங்கையை பார்க்க அவளும் அவன் போனில் மின்னி கொண்டு இருந்த பெயரைதான் வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்.
உடன்பிறப்புகள் இருவரும் போனையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்த ரேவதி “டேய் எவ்வளவு நேரமா போன் அடிக்குது. எடுத்து பேசேண்டா” என்க,
அவன் அட்டன் பண்ண போன சமயம் போன் கட் ஆகியது. மீண்டும் போன் அடிக்க அதை எடுத்து காதில் வைத்தவன் அமைதியாக இருக்க, ஹர்ஷாவும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.
அப்போது ரேவதி “ஹாசி கார்ல இருந்து தண்ணி எடுத்துட்டுவா” என்ற குரல் கேட்க குழம்பியவன் “ஹாசி….” என்க,
நிரஞ்சனோ “அவளுக்கு உடம்பு சரியில்ல இப்போ பேச முடியாது”.
“அவ என்னோட பிரண்டு கண்டிப்பா. நான் அவளை பார்ப்பேன். பார்க்க கூடாதுன்னு சொல்ற உரிமை உனக்கு இல்லை”.
அவன் சொல்வதை கேட்டு எரிச்சல் ஆனவன் “ஹேய் அவ என் தங்கச்சி அவகூட யார் பேசணும், யார் பேச கூடாதுன்னு நான்தான் முடிவெடுப்பேன். எனக்கு அந்த உரிமை இருக்கு. அப்புறம் இப்போ நீ வீட்டுக்கு போனாலும் வெளியதான் நிற்கணும்.
நாங்க எல்லாரும் எங்க குல தெய்வம் கோவிலுக்கு வந்துருக்கோம். நாளைக்குதான் வருவோம். ஒரு முக்கியமான விஷயம் என்ன தலை போற காரியமா இருந்தாலும் எனக்கு போன் பண்ணாத. உன் குரலை கேட்டாளே எனக்கு இரிட்டேட்டா ஆகுது”.
“ஆமா எனக்கு மட்டும் உன் கூட பேசணும்னு ஆசை பாரு. போடா மைதா பன்னு”
“டேய்……”
“ம்ப்ச்…. சவுண்ட கொறடா. தேவையில்லாம உன்கிட்ட பேச எனக்கு நேரம் இல்ல. ஹாசிகிட்ட போன் குடு நான் பேசிக்கறேன்”
“முடியாது….. போனை வைடா வெண்ண” என்று கத்திவிட்டு ரஞ்சன் போனை வைக்க, அவன் அருகில் வந்த ஹாசி “என்ன ஆச்சுண்ணா? “
“ஒன்னும் இல்ல…”என்று முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு சொல்ல,
பெருமூச்சுவிட்டவள் “அப்பா, அம்மாட்ட எப்போ பேச போற”,
“நாளைக்கே பேசறேன். நீ அமெரிக்கா ஆபிஸ்க்கு மறுபடியும் போவதற்கான வேலையில் இறங்கு. கூடிய சீக்கிரம் கிளம்பிறலாம்” என்று சொல்ல அவளும் சம்மதமாக தலையசைத்தாள்.
ரேவதி, “சீக்கிரம் வாங்க. சாமி கும்பிடலாம்” என்று இருவரையும் அழைக்க, அவர்களும் நடக்க போவதைப்பற்றி அறியாமல் தெய்வத்தை தரிசிக்க சென்றனர்.
ஹர்ஷா கோவமாக போனையே பார்த்து கொண்டு இருக்க,
அச்சு, “என்ன ஆச்சு ஹர்ஷா. ஏன் அவர்கிட்ட கல்யாணத்தை நிறுத்த சொல்லி சொல்லல”
“ம்ப்ச்…. அவங்க கோவில்ல இருக்காங்கலாம். இப்போ பேச முடியாதுன்னு……”
“சரி. இப்போ அதைப்பத்தி பேச வேண்டாம். இன்னைக்குதானே கோவிலுக்கு போயிருக்காங்க நாளைக்கு காலைலயே நீ போய் ஹாசினிய பார்த்து கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு சொல்லு. சொல்லிட்டு வந்து அப்புறம் என்கூட பேசு”என்று எழுந்தவள் கரத்தை பற்றியவன்,
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ. உங்க வீட்ல நம்ம விஷயத்தை சொல்ல போறியா இல்லையா”என்க,
கலவரமாக அவனை பார்த்தவள் “முயற்சி பண்றேன்” என்றாள்.
“இல்ல புரியல. முயற்சி பண்றேன்னா என்ன அர்த்தம். நாம லவ் பண்றது கல்யாணம் பண்ணிக்கதானே. நீயும் அந்த முடிவுலதானே இருக்க. நான் வீட்ல பேசி ஓகே பண்ணிட்டேன். நீ வீட்ல பேசுன்னா இப்படி சொல்ற”
“ஹர்ஷா. நீ ஏன் சொன்னதையே சொல்லிட்டு இருக்க. எங்க வீட்ல எனக்கு முன்னாடி ஒரு அக்கா இருக்கா. அவ கல்யாணம் முடிஞ்சிருந்தாவாவது நம்ம விஷயத்தைப்பத்தி வீட்ல சொல்லி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்.
ஆனா இப்போ சூழ்நிலை அப்படி இல்ல. இருந்தாலும் நான் வீட்ல பேச முயற்சிக்கறேன்”.
“உங்க வீட்ல ஒத்துக்கலைன்னா…?” என்று கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறியவள் அமைதியாக இருக்க,
அவனோ “சொல்லு ஒத்துக்கலைனா. என்ன பண்ணலாம்னு சொல்லிட்டு போ”
“ஒத்துக்கலைனா…. நீ உன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லு. நாம பிரிஞ்சுடலாம்”
“சபாஷ்……சூப்பர்” என்று கை தட்டியவன் “இதுக்கு எதுக்குடி என்னை லவ் பண்ணுன. முதல்லயே வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதானே…”
“ஹர்ஷா ப்ளீஸ் வார்த்தையை விடாதே. நான் முதல்ல வீட்ல பேசறேன்” என்றுவிட்டு செல்ல, ஹர்ஷாவிற்கோ முடியை பிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது.
முதல் முறையாக காதலிக்காமல் இருந்திருக்கலாமோ என்று யோசிக்க துவங்கினான்.
அன்றைய பொழுது இருவருக்கும் யோசனையில் செல்ல,
ஹாசியோ சின்ன வயசுல இருந்து உன்னை நான் நினைச்சுட்டு இருக்க, இப்போ வந்தவ உனக்கு முக்கியமா போயிட்டால்ல, இனி எனக்கும் நீ வேண்டாம் போடா’ என்று மனதில் தெளிவான முடிவெடுத்து அமைதியாக தந்தையின் தோளில் சாய்ந்து உறங்கி போனாள்.
நிரஞ்சன் தாய், தந்தையிடம் தன் காதல் விஷயத்தை எப்படி சொல்வது என்ற யோசனையில் மூழ்கி போய் இருந்தான்.
மாலை வீட்டிற்கு வந்த அர்ச்சனாவிற்கு கை, கால்கள் எல்லாம் உதறல் எடுத்தது. இருந்தாலும் காதல் விஷயத்தை சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால். முதலில் தன் தாயிடம் இதைப்பற்றி பேசி பார்ப்போம் என்று முடிவெடுத்து தாயை தேடி சமயல் அறைக்குள் செல்ல, அங்கு அவர் பஜ்ஜி சுட்டு கொண்டிருந்தார்.
“வாடி. டீ போட்டுட்டேன் எடுத்துக்கோ. கொஞ்சம் வெயிட் பண்ணு பஜ்ஜி ஆயிடும்” என்று சொல்ல, அவர் அருகில் சென்றவள் யோசனையோடே டீயை எடுக்க,
மகளின் முகத்தை வைத்தே ஏதோ பிரச்சனை என்று அறிந்து கொண்ட அந்த தாய் “என்ன ஆச்சு அச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க”
“அ…. அ…அதும்மா. என் பிரண்டு மது இல்ல”
“ஆமா. ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாளே அவளுக்கு என்ன?”
“ம்ம்…. அவதான் கல்யாணம் பண்ணுன புதுசுலதான் அவங்க அம்மா, அப்பா சண்டை போட்டாங்க. இப்போ அவளுக்கு குழந்தை பிறந்திருக்கு. அவனை பார்க்க அவங்க ரெண்டு பேரும் போயிருக்காங்க.
நான் வரும்போது பார்த்தேன் பேசுனாங்க அதைப்பத்திதான் யோசிச்சுட்டு இருக்கேன்”
“அதைப்பத்தி யோசிக்க என்ன இருக்கு”
“இல்லம்மா. பொண்ணு லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா அம்மா அப்பா கோவம் எல்லாம் ஒரு குழந்தை பிறக்க வரைதான் போல, அதுக்கு எதுக்கு முதல்ல அவங்க காதலை வெறுக்கணும்.
பையனைபத்தி நல்லா விசாரிச்சுட்டு அவங்க குடும்பம் எப்படின்னு எல்லாம் பார்த்துட்டு அவங்களே அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம் இல்லம்மா” என்று பேசி கொண்டே போக,
அவள் தாயோ மகளை ஆழ்ந்து பார்த்து கொண்டு நின்றிருந்தார்.
தாயின் பார்வையில் தடுமாறியாவள் “என்னம்மா ஏன் அப்படி பாக்குறீங்க?”
ஆனா நம்ம மாதிரி இருக்கவங்கள இவங்க எப்போ என்ன பண்ணுவாங்க. என்ன சொல்லி கேவலப்படுத்தலாம்னு நம்ம சொந்தமே பார்த்துட்டு இருக்கும்.
உன்னை வேலைக்கு அனுப்புனதுக்கே உன் அத்தக்காரி ஐடி பீல்ட்ல வேலை செய்யற புள்ளைங்க எல்லாம் சரி இருக்காது. அங்க வேலை செய்யறவனையே எவனாயாவது பார்த்து இழுத்துட்டு போயிடும். வேலைக்கு அனுப்பறத விட்டுட்டு வீட்டுல உட்கார வைன்னு அவ்ளோ பேச்சு பேசுனுச்சி.
உன் அப்பாதான் என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. என் வார்த்தையை என் ரெண்டு புள்ளைங்களும் மறுக்க மாட்டாங்கன்னு சொல்லி வாய அடச்சாரு. அந்த மனுஷன் தலை குனியற மாதிரி நீங்க எதுவும் பண்ண கூடாது.
அச்சு, “ம்மா…. இல்லம்மா அந்த பையன் நல்ல பையனா இருக்கான் அவளை நல்லா பார்த்துக்கறான்” என்று சொல்லும்போதே அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் அவளது தாய்.
அர்ச்சனா கன்னத்தில் கை வைத்தவாறு தாயை அதிர்ந்து பார்க்க, அவரோ “அவன் நல்ல பையனா இருந்தா நமக்கு என்ன இல்ல குடிக்காரனா இருந்தா நமக்கு என்ன அவங்க பேச்சு நமக்கு தேவையில்லை. புரியுதா” என்று அழுத்தமாக கேட்க,
அவளோ அரண்ட விழிகளுடன் ‘சரி’ என்பது போல் தலையசைத்து தன் அறை நோக்கி செல்ல போக,
“அவ அப்படி பண்றா…இவ இப்படி பண்றான்னு நீ எதாவது தேவையில்லாத வேலை பார்த்தன்னு தெரிஞ்சுது சத்தமே இல்லாம சோத்துல விஷம் வச்சு குடுத்துருவேன் பார்த்துக்கோ.
உங்களை பெத்து வளர்க்க தெரிஞ்ச எங்களுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்கணும்னும் தெரியும். அதுக்கும் மேல உனக்கு முன்னாடி ஒரு அக்கா இருக்கா, அதையும் நியாபகம் வச்சுக்கோ.
என்கிட்ட பேசுன மாதிரி அந்த மனுஷன்கிட்ட பேசி தொலைச்சுடாதா. நம்ம குடும்பத்துக்கு காதல் கத்திரிக்காய் எல்லாம் செட் ஆகாது. புரிஞ்சுதா” என்றுவிட்டு கருகிய பஜ்ஜியை எடுத்து வைக்க துவங்கினார்.
கன்னத்தில் கை வைத்திருந்த அர்ச்சனாவும் புரிஞ்சது என்னும் விதமாக தலையசைத்து தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
‘ஆத்தி விஷம் வச்சிடுவாங்களா. கொலைகார குடும்பமால்ல இருக்கு. அவங்களைபத்தி பேசுனதுக்கே கன்னம் பன்னு மாதிரி வீங்கிடுச்சு. இதுல எப்படி என் காதலை சொல்றது.
ம்கூம்…. இதெல்லாம் நடக்கற காரியம் இல்ல. இவங்ககிட்ட போராட என்னால முடியாது. அடி வாங்கவும் முடியாது. ஏதோ ஆபிஸ்ல இருக்க பொண்ணுங்க சைட் அடிக்கற ஒருத்தன் நமக்கிட்ட ப்ரொபோஸ் பண்றானே எல்லாரும் அதை பார்த்து வயிறு எரியட்டும்னு நினைச்சு லவ்க்கு ஓகே சொன்னா,
இங்க நம்ம உசுரையே கொசுரா கேட்குறாங்களே. உசுரா….. காதலா…… ம்கூம் நமக்கு இது எல்லாம் செட் ஆகாது பேசாம ஹர்ஷாகிட்ட அக்காவை காரணம் காட்டி அந்த ஹாசியயே கல்யாணம் பண்ணிக்க சொல்லிடலாம்.
அப்புறம் அக்கா கல்யாணம் முடிஞ்சு ஹாசியை டைவர்ஸ் பண்ணிட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி, இப்போதைக்கு அவன் வாயை அடச்சிடலாம்.
கல்யாணத்துக்கு அப்புறம் இன்னொருத்தி புருஷன் எனக்கு வேண்டாம்னு சொல்லிடலாம்.
ஹையோ….. நான்பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். ஆபிஸ் பொண்ணுங்களே பின்னாடி சுத்தற ஒருத்தன் உன் பின்னாடி சுத்தறான்டின்னு சொல்லி சொல்லி உசுப்பேத்தியே அவனுக்கு ஓகே சொல்ல வச்சுட்டாளுங்க.
ச்ச…. சேர்க்க சரியில்லடி அச்சு உனக்கு’ என்று தனக்குள் புலம்பி கொண்டவள் தெளிவாக ஹர்ஷா தனக்கு வேண்டாம் என்ற முடிவை எடுத்திருந்தாள்.
ஹாசியும் ஹர்ஷாவை விலகி செல்ல முயற்சிக்க, அர்ச்சனாவும் அவனை பிரிய முடிவெடுக்க, ஹார்ஷா இனி என்ன முடிவெடுப்பான்…..