உலகமே தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது ஹாசினிக்கு.’இவன் என்ன சொல்றான். என்ன பேசறான்’ என்று அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.
அதீத அதிர்ச்சியில் இருந்தவள் கண்ணீர் கூட உறைந்து போய் இருந்ததுவோ, சிலையாக நின்றிருந்தவள் முன் சிரிப்புடன் நின்றிருந்தனர் அர்ச்சனா, ஹர்ஷா இருவரும் ஜோடியாக.
“இவதான் நான் காதலிக்கற பொண்ணு அர்ச்சனா. ஒரு வருஷம் என்னை பின்னாடியே சுத்தவிட்டு அப்புறம்தான் மேடம் ஓகே பண்ணுனாங்க” என்று சிரித்து கொண்டே சொல்ல,
அர்ச்சனா அவனை செல்லமாக முறைக்க, அவனோ அவளை பார்த்து கண்ணடித்து சிரிக்க, பெண்ணவளுக்குதான் தலையில் இடி விழுந்த உணர்வு.
தன்னிடம் இவன் விளையாடுகிறானா என்று அவனையே பெண்ணவள் ஊன்றி பார்க்க, அவன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியும், அந்த பெண்ணை பார்க்கும்போது அவன் கண்ணில் வந்து போன மாற்றத்தையும் கண்டவளுக்கு அவன் உண்மையைதான் சொல்கிறான் என்பது புரிய, அப்படியே உறைந்து போனாள்.
“ஹேய் ஹாசி என்ன ஆச்சு உனக்கு? ஏன் அப்படியே ப்ரீஸ் ஆகி நிக்கற” என்று அவள் தோள்களை பிடித்து அவன் உளுக்க, அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தவள் இருவரையும் புரியாமல் பார்த்தாள்.
ஹர்ஷா“உனக்கு இது ஷாக்கிங்க இருக்கும்னு எனக்கு தெரியும்”. என்றவனை அவள் எந்த உணர்வும் காட்டாமல் பார்க்க,
“நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள பல தடைகள். ஆனா இவளை பர்ஸ்ட் உனக்குதான் அறிமுகப்படுத்தணும்னு முடிவெடுத்து வச்சிருந்தேன். ஏன் தெரியுமா? என்றவன் கேள்விக்கு நீயே பதில் சொல் என்பது போல் அவள் பார்க்க,
“ஏனா நீ என்னோட சைல்ட் ஹூட் பிரண்ட். உன்கிட்ட எதயும் மறைக்கணும்னு நான் நினைக்கல” என்று சொல்லியவாறு அர்ச்சனா தோளில் கை போட, அவளோ முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“ஹாசி வீட்ல அம்மா, அப்பாகிட்ட நான் பேச போறேன். நீயும் எனக்காக அவங்ககிட்ட பேசணும் ஓகேவா”
அர்ச்சனா, “ஹேய் ஹர்ஷா ஸ்டாப் என்ன பேச போற. நாம என்ன உடனேவா கல்யாணம் செய்துக்க போறோம். நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லியிருக்கேன். எனக்கு ஒரு அக்கா இருக்கா. அவளுக்கு மேரேஜ் முடிஞ்ச அப்புறம்தான் நம்ம விஷயத்தைப்பத்தி என்னால வீட்ல பேசவே முடியும்.
நீ என்னன்னா இப்போவே அவங்ககிட்ட பேச போறேன்னு சொல்ற”என்று முறைத்தவாறு சொன்னவள் ஹாசி புறம் திரும்பி “நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க. அவர் எப்பவுமே இப்படிதான் அதீத ஆர்வ கோளாறு” என்று சிரிக்க,
அவளை முறைத்தவன் “நான் ஆர்வ கோளாறாடி” என்று கேட்டு அவள் காதை திருக,
“ஹேய் ஹர்ஷா என்ன பண்ற வலிக்குது விடு. கோவில்ல வச்சு என்ன விளையாட்டு. பாக்கறவங்க என்ன நினைப்பாங்க” என்று திட்ட,
அவனோ அவளிடம் கண்களாலேயே காதல் மொழி பேச, அதை கண்டு அவள் வெட்கத்தில் சிவந்து போனாள். இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ஹாசிக்கு இதயத்தில் யாரோ கத்தி வைத்து குத்துவது போன்ற வலி எழ,
தாங்க முடியாத வலியை வெளியே காட்ட முடியாத கொடூரமான தருணத்தில் இருந்தாள். தன்னிடம் சிறு மாற்றம் தெரிந்தாலும் ஹர்ஷா என்ன ஏது என்று விசாரிப்பான்.
தன்னிடம் இருக்கும் மாற்றம் வைத்து எதையும் அவன் கண்டுபிடிக்க கூடாது’ என்று பிடிவாதமாக நினைத்தவள் அப்படியே இருவரையும் பார்த்து கொண்டு இறுகி போய் நின்றிருந்தாள்.
அப்போது சரியாக அர்ச்சனா போன் அடிக்க எடுத்து பார்த்தாள் அவள் அப்பாதான் உடனே அதை எடுத்தவள் மற்ற இருவரிடமும் கண்களால் அனுமதி வாங்கி கொண்டு விலகி நின்று பேச ஆரம்பித்தாள்.
“ஹலோ அப்பா….”
“ம்ம்…. குடுத்துட்டேன் அப்பா. பூஜைக்கு காலைல ஆறு மணி போல வாங்கன்னு சொன்னாரு. அக்காவையும் கூட்டிட்டு வர சொன்னாங்க”
“ம்ம்ம்ம் எல்லாம் சொல்லிட்டேன்”
“இ…. இ…இதோ கிளம்பிட்டேன்ப்பா. அரை மணி நேரத்துல வீட்ல இருப்பேன்” என்றவள் பேசி கொண்டிருக்க,
ஹர்ஷா, “ஹாசி அர்ச்சனா எனக்கு ஓகேவா. எப்படி என் செலக்சன்” என்று எதிர்பார்ப்போடு கேட்க,
அவளோ ‘என் எதிரிக்கும் இது போன்ற நிலைமை வர கூடாது. ஆண்டவா. என்னை ஏன் இப்படி வதைக்கற’ என்று நினைத்து கொண்டு அமைதியாக இருந்தாள்.
அவனோ “ஹாசி சொல்லு. என்ன ஆச்சு உனக்கு. எதைப்பத்தி யோசிக்கற” என்று கேட்டவனுக்கு பதில் சொல்லும் பொருட்டு கஷ்டப்பட்டு தன்னை சரி செய்து கொண்டவள் தன் குரலை செருமி “அ…. அ…. அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஆபிஸ் வேலை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்”
“ம்ப்ச்…. என்ன ஹாசி எப்போ பாரு உனக்கு வேலைதான். என் ஆளபத்தி நீ ஒன்னுமே சொல்லலியே. எங்க ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு” என்று கேட்டவனை, வலி நிறைந்த பார்வை பார்த்தாள்.
அவளது பார்வையின் அர்த்தம் புரியாதவன் அவளை என்ன என்பது போல் பார்க்க வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் அவனை பார்த்தவள் “ம்ம்.. உங்க ஜோடி பொருத்தம் அருமையா இருக்கு. ஆமா லவ் பண்றேன்னு சொல்ற. நீ இவங்ககூட போன் பேசி நான் பார்த்ததே இல்லையே” என்று எதாவது பேச வேண்டுமே என்றவள் கேட்க,
ஹாசி புருவம் யோசனையில் சுருங்கியது பின் நினைவு வந்தவளாக ஆக அந்த ஐ லவ் யூ எனக்கானது இல்லை. போன்ல பேசிட்டு வந்ததை, நான் எனக்கானது நினைச்சு சாந்தோஷப்பட்டு இருக்கேன். என்ன ஒரு அசிங்கம் ச்ச……’ என்றவள் முகம் சுருங்க,
அதை எல்லாம் கண்டு கொள்ளாதவன் தன் போக்கில் பேசி கொண்டே இருந்தான். ஊருக்கு வந்தப்பக்கூட ஆபிஸ்ல இருக்கும்போது மெசேஜ் மட்டும் அனுப்புனா. போன் பண்ணவே இல்ல” என்றுசொல்லும்போதுதான் நினைவு வர,
“சாரி ஹாசி” என்றான்.
‘எதற்கு ‘ என்பது போல் அவள் பார்க்க,
“எல்லாத்துக்கும்” என்றான்.
‘இன்னும் என்னென்ன வார்த்தை பேசி என்னை கொல்ல போற. மொத்தமா கொன்னுடு என்னால முடியல’ என்பது போல் அவள் நிற்க,
அன்னைக்கு நாம கோவிலுக்கு வந்த அன்னைக்கு அர்ச்சனாவும் வந்திருந்தா. அவளை சர்பிரைஸ் பண்ணலாம்னு குங்குமம் எடுத்துட்டு வந்து ஒழிஞ்சு நின்னேன். ஆனா….” என்றவன் இழுக்க,
புரிந்தது என்பது போல் தலையசைத்த ஹாசிக்கு தெரிந்தது அன்று தன் நெற்றியில் வைக்க பட்ட குங்குமம் தனக்கானது இல்லை என்று. அடி…. அடி மேல் அடி…. உயிர் துடிக்கும் அளவிற்கான அடி. கத்தி அழ வேண்டும் போல் எண்ணம் எழ, கடினப்பட்டு தன்னை அடக்கியவள் அங்கிருந்து கிளம்ப எண்ணி “சரி ஹர்ஷா டைம் ஆச்சு. அம்மா தேடுவாங்க. நான் கிளம்பறேன்”
“நில்லு ஹாசி என்ன அவசரம். நானே வீட்ல உன்னை கொண்டு போய் விடறேன். இன்னும் நான் பேசி முடிக்கல. அப்புறம் அன்னைக்கு மாடில……” என்றவன் சொல்லும்போதே கை நீட்டி அவன் பேச்சை தடுத்தவள் “அது எதிர் பாராம நடந்த விபத்து விடு. அதைப்பத்தி பேச வேண்டாம்” என்றவள் கோவிலை சுற்றி தன் பார்வையை அலையவிட,
ஹர்ஷா சந்தோஷமாக “எனக்கு தெரியும் ஹாசி. நீ பாரின்ல வளர்ந்த பொண்ணு இதையெல்லாம் பெருசா எடுத்துக்கமாட்டன்னு. இருந்தாலும் தப்பு பண்ணிட்டமேன்னு சாரி கேட்கதான் உன்கிட்ட நிறைய முறை ட்ரை பண்ணுனேன்.
நீ வேற என்னை முறச்சுட்டு பேசாம போகவும். ரொம்ப மனசு கஷ்டமாகிடுச்சு. சரி இங்கதான் பேச முடியலன்னு ஊருக்கு வந்தப்போ பேசலாம்னு பார்த்தா அப்போவும் முடியல,
அன்னைக்கு எப்படியாவது உன்கிட்ட சாரி கேட்கணும்னுதான் உன் ரூமுக்கு வந்தேன்” என்றவனுக்கு அன்றைய நிகழ்வு நினைவு வர கண்கள் தடுமாற, அவளை பார்க்காமல் திரும்பி கொள்ள,
ஹாசிக்கும் அன்றைய நாள் நினைவில் வந்தது. தன்னவன் வந்ததை நினைத்து அவள் அதிர்ந்ததும். வெட்கத்தில் சிவந்ததும் அனைத்தையும் நினைத்தவளுக்கு தன்னை நினைத்தே அவமானமாக இருந்தது.
அது மட்டும் இல்லாமல் பாரினில் வளர்ந்த பெண் என்பதால் தான் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டேன் என்று எப்படி அவனாக நினைக்கலாம் என்ற கோபம் வேறு அவளுள் எழ,
முதலில் இங்க இருந்து போகணும் இல்லைனா கண்டிப்பா நாமே எதாவது பேசிடுவோம்’ என்று தனக்குள் நினைத்து கொண்டவள் ஏதோ பேச வர,
அதற்குள் ஹர்ஷாவே “சரி அதைவிடு உனக்கு என் மேல என்ன கோபம் ஏன் என்கிட்ட சரியா பேசவே இல்ல”
அவன் கேள்வியில் திகைத்தவள் மனம் படும் பாடு அவள் மட்டுமே அறிவாள். என்ன காரணத்திற்காக அவள் பேசாமல் இருந்தாளோ அதுவே இங்கு இல்லை என்று ஆனபின் என்ன பேசி என்ன ஆக போகிறது’ என்று விரக்தியாக நினைத்தவள் அவனை பார்க்க,
அவள் பதிலுக்காக அவனும் அவளைதான் பார்த்து கொண்டிருந்தான்.
இப்போது எதாவது சொல்லி சமாளிக்க வேண்டும் என்று நினைத்தவள் பெரு மூச்சுடன் “அ…. அ…. அது வேற ஒன்னும் இல்ல. ஹர்ஷா மித்ரா லவ்க்கு நீ ஏன் ஓகே சொல்லல?” என்று கேட்க,
“யாரு லவ்க்கு ஓகே சொல்லல” என்று கேட்டவாறு அவர்கள் அருகில் வந்தாள் அர்ச்சனா.
ஹர்ஷா, “ஹேய் வந்துட்டியா. அது ஒன்னும் இல்ல. ஹாசி அண்ணனும், என் தங்கை மித்ராவும் லவ் பண்றாங்க. அது எனக்கு பிடிக்கல. அதான் ஏன்னு கேட்டுட்டு இருக்கா. அதைவிடு நாம வெளிய எங்கயாவது போய்ட்டு வரலாமா?”
அர்ச்சனா, “அய்யயோ ஆள விடுப்பா. இன்னும் அரை மணி நேரத்துல நான் வீட்ல இருக்கணும். இல்லை நான் அவ்வளவுதான். நான் கிளம்பறேன்”.
ஹாசிக்கு அதன்பின்தான் உயிரே வந்தது ‘ஹப்பாடா முதலில் தனியாக போய் மனதுவிட்டு அழ வேண்டும். தன் காதலை எண்ணி…’ என்று நினைத்தவளுக்கு கண்கள் கலங்க,
பொறு மனமே பொறு அழுவதற்கான நேரம் இப்போது இல்லை. இவ்வளவு நேரம் தாங்கியாச்சு. இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ என்று தனக்குள் உருபோட்டு கொண்டு இருந்தாள்.
ஹர்ஷா, “அச்சு மழை வரும் போல இருக்கு. எப்படி போவ”.
“வெளிய ஆட்டோ இருக்கும். நான் அதுல போயிக்கறேன். நீ அவங்கள கூட்டிட்டு கிளம்பு” என்க,
முதல் முறையாக ஹாசிக்கு ஹர்ஷாவுடன் போவதில் விருப்பம் இல்லாமல் போனது. அதனால் உடனே “பரவால்லங்க நான் கார் புக் பண்ணி போய்க்கறேன். நீங்க ஹர்ஷா கூட போங்க”.
“சரியா போச்சு. ஏங்க ஏன்? நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா?” என்று கேட்க,
உடனே பதறி போன ஹாசி “என்னாச்சுங்க? நான் என்ன பண்ணுனேன்?”
“பதறாதீங்க. நான் இவர்கூட போறதை யாரவது பார்த்துட்டாங்கன்னா என் சோலி முடிஞ்சது. இன்னைக்கே ஹர்ஷாவ வர வேண்டாம்னுதான் சொன்னேன். எங்க கேட்டாரு.
நான் கோவிலுக்கு போறேன்னு சொன்ன உடனே பின்னாடியே வந்துட்டாரு”என்று சலித்து கொண்டவள் வெளியே செல்ல, அவள் நேரம் பார்த்து அங்கு ஒரு ஆட்டோ கூட இல்லை.
ஹாசி, “ஹர்ஷா இவங்கள ஆட்டோ ஸ்டாண்ட்ல விட்டுட்டு வீட்டுக்கு போ. நான் கார் புக் பண்ணிட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடும்” என்க,
ஹர்ஷாவோ கோபமாக “உன்னை யாரு கார் புக் பண்ண சொன்னா? நான்தான் கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்ல” என்று பற்களை கடித்து கொண்டு சொல்ல,
அந்த செயல் ஏனோ அர்ச்சனாவிற்கு கோபத்தை உண்டாக்கியது. “எதுக்கு ஹர்ஷா இவ்ளோ கோபப்படுற. அவங்க கார்ல போனா உனக்கு என்ன பிரச்சனை?”
“அப்படி இல்ல அச்சு. அவளுக்கு இங்க எதுவும் தெரியாது”.
“அதான் அவங்க இங்க வந்து நாலு மாசம்கிட்ட ஆச்சுல்ல அப்புறம் என்ன. அவங்களே போறேன்னு சொன்னாலும் நீ விட மாட்ட போல,
முதல்ல என்னை கொண்டு போய் ஆட்டோ ஸ்டாண்ட்ல விடு. எனக்கு டைம் ஆச்சு” என்றவள் சொல்ல,
ஹர்ஷா அப்போதும் அவளை தயக்கமாக பார்த்து கொண்டே நிற்க,
அர்ச்சனா கடுப்பாக “ஹர்ஷா என்னை ட்ராப் பண்றியா இல்லையா” என்று கேட்க,
ஹாசியைபார்த்தவன் “சரி ஹாசி பார்ப்போம். வீட்டுக்கு போன உடனே கால் பண்ணு” என்றுவிட்டு வண்டியை எடுக்க சென்றுவிட,
அர்ச்சனாவும் ஹாசியும் தனித்து இருந்தனர்.
ஹாசி புறம் திரும்பிய அர்ச்சனா “நீங்க ஹர்ஷாவ லவ் பண்றீங்களா” என்று அதிரடியாக கேட்க,
திகைத்து போன ஹாசி அவளை விழி விரித்து பார்க்க. அவளோ “சொல்லுங்க லவ் பண்றீங்கதானே” என்று மீண்டும் அழுத்தமாக கேட்க,
ஹாசியோ கண்களை மூடி திறந்தவள் “இல்லை. நாங்க சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ஸ்…. பிரண்ட்ஸ் மட்டும்தான்” என்று அவளுக்கே சொல்லி கொள்வது போல் சொல்ல,
அவளை நெருங்கிய அர்ச்சனா “இல்ல. உன் கண்ணுல வலி இருக்கு. நினைக்கறதை சொல்ல கூடிய கண்ணு உனக்கு”என்று சொல்ல,
ஹாசி அமைதியாகவே இருந்தாள். தூரத்தில் ஹர்ஷா வண்டி எடுப்பதை பார்த்தவள் அதற்குள் தான் சொல்ல வேண்டியதை சொல்ல எண்ணி “எனி வே ஹர்ஷா என்னைதான் லவ் பண்றான். உன் கண்ணுல அவனுக்கான காதலை நீங்க உள்ள வரும்போதே நான் பார்த்துட்டேன். அவனுக்கு வேணா அது புரியாமல் இருக்கலாம்.
ஆனா எனக்கு நல்லாவே தெரியும். நீ இனிமேயும் அவன்கூட பேசறதுல கூட சுத்தறதுல எனக்கு விருப்பம் இல்ல. அதனால அவன்கிட்ட இருந்து நீ விலகியே இரு.” என்று சிரிப்பது போல் முகம் வைத்து கொண்டே வார்த்தைகளால் அவளை வதைக்க,
அப்போது சரியாக அவர்கள் அருகில் வந்தான் ஹர்ஷா. “அர்ச்சனா வா போலாம். ஹாசி கேப் வந்தா அதை கேன்சல் பண்ணிட்டு உள்ள போய் வெயிட் பண்ணு. நான் அர்ச்சனாவ விட்டுட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன்” என்று சொல்ல,
ஹர்ஷா வண்டியில் அமர்ந்த அர்ச்சனா அவளை உறுத்து பார்க்க,
வலி நிறைந்த சிரிப்பை உதிர்த்த ஹாசி “இல்ல ஹர்ஷா. நான் கேப்ல போயிக்கறேன். உனக்கெதுக்கு சிரமம். அதுமட்டும் இல்லாம……”
“ஷட்அப் ஹாசி. சொன்னதை செய். போ. கோவில் உள்ள போய் வெயிட் பண்ணு. நான் வந்து கூட்டிட்டு போறேன்”என்று அவளை அழுத்தமாக பார்த்து சொன்னவன் வண்டியை உறுமவிட்டு செல்ல,
அர்ச்சனா அவளை ஊடுருவும் பார்வை பார்த்து கொண்டே சென்றாள்.
ஹாசிக்கு ‘ஹைய்யோ……’ என்று ஆனது. அவர்கள் தன் கண்ணில் இருந்து மறையும் வரை காத்திருந்தவள். பின் அவர்கள் சென்ற திசைக்கு எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தாள்.
மனதில் பல எண்ணங்கள் முட்டி மோதி கொண்டு எழுந்தது. தன் பல வருட காதலின் நிலையை எண்ணுகையில் கண்களில் கண்ணீர் அவளையும் அறியாமல் வெளியேற, தான் சிறு வயதில் இருந்து உயிருக்கு உயிராய் காதலித்தவன் பேசிய வார்த்தைகளையும், அவன் காதலி என்று அறிமுகப்படுத்திய ஒருத்தி சிந்திய முத்துக்களையும் எண்ணி கொண்டே இலக்கில்லாமல் நடக்க துவங்கிய ஹாசிக்கு துணையாக மழை பெய்ய துவங்கியது.
உன் பல வருட காதல் உன்னை விட்டு போனால் என்ன? நான் உனக்கு துணையாக இருக்கிறேன் என்பது போல் மழை கொட்டி தீர்க்க, இதற்கு மேல வலியை மறைத்து வைத்தாள் நெஞ்சு வெடித்துவிடும் என்று பயந்த ஹாசி கண்களையும், கைகளையும் இறுக மூடி “ஆஆஆஆ……” என்று கத்தியவளின் மனம் அலை கடலாய் ஆர்ப்பரிக்க,
அப்படியே நடு தெருவில் அமர்ந்து கதற துவங்கினாள். அவள் அழுவதை கண்டு ஒரு கூட்டம் அவளை சுற்றி கூட அந்த சல சலப்பில் கண்களை திறந்தவள் கும்பலை கண்டு அதிர்ந்து எழுந்தவள் யாரையும் கண்டு கொள்ளாமல் வேகமாக நடக்க துவங்கினாள்.
அந்த கும்பலும் அவள் சென்றவுடன் கலைந்து சென்றுவிட ஹாசிக்கு உயிர் வாழும் ஆசையே அற்றது போல் மனம் தன் காதலை எண்ணி அரட்ட, கண்கள் வஞ்சனை இன்றி கண்ணீரை சொறிய,
இலக்கில்லாமல் தனக்குள் உலண்டு கொண்டு சென்றவள் எதிரில் வரும் லாரியை கவனிக்காமல் அப்படியே நடக்க, லாரியின் ஹாரன் சத்தம் கூட அவள் காதில் விழவில்லை.
“இவதான் நான் காதலிக்கற பொண்ணு அர்ச்சனா….” என்ற வார்த்தை திரும்ப திரும்ப அவள் காதுகளில் ஒலிக்க,லாரியின் ஹாரன் சத்தம் லாரி எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை.
மழை அடித்து பெய்து கொண்டு இருக்க, தன்னிலை மறந்து கண்ணீரோடு ஹாசி நடந்து கொண்டு இருக்க, எதிரில் லாரி முழு வேகத்தில் வர காதலில் தோற்று போய் கண்ணீரோடு செல்லும் பெண்ணவள் நிலை என்ன ஆகும் அடுத்த எபியில் பார்க்கலாம்….