அத்தியாயம் -12

ஹர்ஷா பேசாமல் செல்லவும் மித்ராவிற்கு கண்கள் கலங்க துவங்கியது. இதழை கடித்து வந்த அழுகையை நிறுத்தியவள். கவலையாக ரஞ்சித்தை பார்க்க, அந்த கள்வனோ ஒன்றும் நடவாதது போல் அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தான்.

உடனே அவனை முறைத்தவள் “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அண்ணாட்ட எதுக்கு அப்படி பேசுனீங்க”.

“ என்ன பேசினேன்” என்றவனை அவள் முறைக்க,

அவனோ கூலாக “பார்த்துடி கண்ணு வெளில வந்து குதிச்சிட போகுது. பின்ன என்னடி நிஜமா எனக்கு புரியல என்னை அவனுக்கு எதுக்கு புடிக்கணும். நான் என்ன அவன்கூடவா……”என்றவன் வாயை ஓடி வந்து மூடியவள்,

“என்ன பேசுறீங்க. அவன் என் அண்ணன் நம்ம கல்யாணத்துக்கு அவன் சம்மதமும் வேணும்”.

“எனக்கு உன் அம்மா, அப்பா சம்மதம் மட்டும் போதும்”.

“இப்படி பேசுனா எப்படி . என் அண்ணனும் எனக்கு வேணும். நான் உங்களைதான் லவ் பண்றேன். உங்க தங்கச்சி எனக்கு வேண்டாம்னு சொன்னா, நீங்க ஒத்துப்பீங்களா?”

“ஒத்துப்பேன்”

“எதே?…..” என்றவள் அதிர்ந்துதான் போனாள். ஆணவன் பதிலில். பின்ன, தங்கை என்றால் உருகும் அண்ணனின் வாயில் இருந்து உதிரும் முத்துக்களா இவை.

“ஆமா. கல்யாணம் ஆனா அவங்க…அவங்க…. அவங்க…. அவங்க வழிய பார்த்துட்டு போறதுதானே நியாயம்” என்றவனை புரியாமல் பார்த்தவள்,

“நிஜமா….. உங்க தங்கச்சி சொந்தம் வேண்டாம்னு சொன்னா நீங்க ஒத்துப்பீங்களா”

“கண்டிப்பா. என் தங்கச்சிய நீ ஏத்துக்க வேண்டாம்”.

“நீங்க வேணா அப்படி கல் நெஞ்சக்காரனா இருங்க. ஆனா எனக்கு என் அண்ணன், அம்மா, அப்பா, பாட்டின்னு எல்லாரும் வேணும்” என்றவள் தோளின் இரு புறமும் கையை வைத்தவன் “ஆமாடி செல்ல குட்டி “நீ உன் அண்ணி உறவை வளர்த்துக்கோ என் தங்கை உறவை முறிச்சுக்கோ. என்ன புரியுதா. நீ சொல்றதை நான் அக்சப்ட் பண்ணிக்கறேன்.

ஆனா எனக்கு பிடிக்காத விஷயத்தை நீ என்ன பண்ண சொல்லாத. அவன் உறவு எனக்கு வேண்டாம்” என்று சொன்னவனை ‘எந்த ஊரு லூசுடா இவன் என்பதை போல் அவள் பார்த்து வைக்க,

அவனோ அவள் பார்வையின் பொருள் புரிந்து சத்தமாக சிரிக்க துவங்கினான். உடனே அவன் வாயில் கை வைத்து மூடியவள் “ஷ்…. யாரும் வர போறாங்க. எதுக்கு இப்போ சிரிக்கற. அவ்ளோ பெரிய காமெடி ஒன்னும் நான் சொல்லலையே” என்க,

தான் சொல்வதை அவள் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்து கொண்டவன் அவள் காதில் மென்மையாக கடித்து “உன் அண்ணனை கல்யாணம் பண்ணிக்க போறது யாருடி பொண்டாட்டி” என்க,

“ம்ம்ம்…. நம்ம ஹாசி…”

“ஹாசி உனக்கு யாரு?” என்றவன் கேட்கும்போதுதான் புரிந்து கொண்டது போல் கண்களை அகல விரித்தவள் அவனை உக்கிரமாக முறைக்க,

அவனோ அவள் மூக்கோடு மூக்கை உரசியவாறு. என் தங்கச்சிய உன் அண்ணியா கண்டிப்பா ஏத்துப்பதானே. அவள என் தங்கச்சியா நீ ஏத்துக்கிட்டா என்ன உன் அண்ணியா ஏத்துக்கிட்டா என்ன. எல்லாம் ஒண்ணுதானே. சோ எனக்கு பிரச்சனை இல்லை”

“அடே அப்பா…. டேய் என்னால முடியலடா. உன் தங்கச்சிய ஏதோ ஒரு வழில நான் ஏத்துக்கணும் என் அண்ணன நீ ஏத்துக்க மாட்ட அப்படிதானே.

சரி உன் வழிக்கே வரேன். நீ என் அண்ணனை ஏத்துக்க வேண்டாம் உன் தங்கச்சி புருஷனை ஏத்துக்கிட்டுதானே ஆகணும்”.

“முடியாது” என்றவன் கையை தன் தோளில் இருந்து தட்டி விட்டவள் “உங்க வீட்டு மாப்பிள்ளை அவன்” என்று அழுத்தமாக சொல்ல,

அவனோ “இருந்துட்டு போறான். அவன் ஒரு ஓரமா இருக்கட்டும். எனக்கென்ன வந்தது” என்று சொல்ல,

அவனையே பொருள் விளங்கா பார்வை பார்த்தவள் ‘இவன் புரிஞ்சு பேசறானா இல்ல புரியாம பேசுறானா’ என்று நினைத்து “அடேய் என்னால முடியலடா” என்று சொல்ல,

உடனே பதறியவன் “அடியே நான் ஒன்னுமே பண்ணலலையேடி. ஒரே ஒரு முத்தம்தான் குடுத்தேன். அதுக்கு போய் முடியலன்னு சொல்ற”என்றவனை கொலை வெறியில் முறைத்தவள்.

“ரஞ்சு ஜோக்ஸ் அப்பார்ட். அண்ணாட்ட எதுக்கு அப்படி பேசுனீங்க” என்றவளை அவன் கூர்ந்து பார்க்க,

“அண்ணாட்ட நேரம் பார்த்து நம்ம விஷயத்தை சொல்லி, வீட்டில் பேச சொல்லலாம்னு இருந்தேன். நீங்க என்னன்னா சும்மா இருந்த சிங்கத்தை சொரிஞ்ச கதையா அவனை வம்பிழுத்துட்டு இருக்கீங்க.

நார்மலாவே உங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகாது. இப்போ இது வேறையா. அவனை எப்படி சமாளிச்சு நம்ம லவ்வுக்கு ஓகே வாங்க போறேன்னு எனக்கே தெரியல” என்று தலையில் கை வைத்தவளை,

ஆழ்ந்து பார்த்தவன் “உன் அண்ணன் வேண்டாம்னு சொன்னா. நீயும் சரினு சொல்லி என்னை விட்டுடுவியா ” என்று கேட்க, அவளுக்கு முனுக்கென்று கண்ணில் நீர் கோர்த்தது. அவனை அடிபட்ட பார்வை அவள் பார்க்க,

அவள் பார்வையை எல்லாம் கண்டு கொள்ளாதவன் “சொல்லுடி உன் அண்ணன் வேண்டாம்னு சொன்னா, என்னை விட்ருவியா” என்று அழுத்தமாக கேட்க,

அவளோ அவனை கண்ணீரோடு பார்த்தவள் “ரஞ்சு என்ன பேசற”

“நான் கேட்டதுக்கு பதில்”.

“என்னைப்பத்தி நீ புரிஞ்சுக்கிட்டது……”

“ஜஸ்ட் செட் அப். விட்ருவியா இல்லையா. அதுக்கு மட்டும் பதில் சொல்லு”

“விட மாட்டேன்டா. விட மாட்டேன். போதுமா. அவன் ஒத்துக்கற வரை வெயிட் பண்ணுவேன். அண்ணனா அவனையும் என்னால விட முடியாது. உன்னையும் என்னால விட முடியாது.

அவன் சம்மதம் கிடைக்கற வரை வெயிட் பண்ணுவேன். ஒத்துக்கலைனா. காலம் பூரா அவன் தங்கச்சியா உன் காதலியா இருப்பேனே தவிர வேற எவனையும் நானும் கட்டிக்க மாட்டேன். உன்னையும் கட்டிக்க விட மாட்டேன்.

உன் அண்ணன் சம்மதம் வாங்கிதான் உன்னை கட்டிக்கணும்னு அவசியம் இல்லைன்னு சொன்ன, பியூஸ புடிங்கி ஒர்க் பண்ண முடியாம பண்ணிடுவேன். போதுமா போடா……” என்று கோவமாக சொன்னவள் கண்ணில் வடிந்த நீரை துடைத்து கொண்டே ஓடிவிட்டாள்.

பெண்ணவள் வார்த்தைகளில் உண்டான சிரிப்பை இதழ் கடித்து அடக்கியவன் “அடியே உன் அண்ணன் சம்மதத்துக்கு நீ வெயிட் பண்ணுடி வை மீ…” என்று வேண்டுமென்றே அவன் சீண்ட,

அவனை திரும்பி முறைத்தவள் “வெயிட் பண்ணிதான் ஆகணும். பின்னாடியே சுத்தி ஓகே வாங்கினல்ல. என்ன மீறி உன் கண்ணு வேற எங்கயாவது போச்சு” என்றவள் கைகளில் கட் பண்ணுவது போல் சைகை செய்தவள் வெடுக்கென்று தன் தலையை திருப்பி கொண்டு ஓடி விட்டாள்.

செல்லும் அவள் முதுகையே ரசனையோடு பார்த்து கொண்டிருந்தவனுக்கும் தன்னவள் கண்ணீர் வலியை ஏற்படுத்த தலையை கோதி கொண்டவன் ‘சாரி டி. உன்னை கஷ்டப்படுத்தணும்னு நினைக்கல. ஆனா….. ஏனோ உன் அண்ணனை பார்த்தாலே எனக்கு பிடிக்கல. நான் என்ன பண்ண.

அந்த பால் டப்பா எல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்காக என்னை வெயிட் பண்ண சொல்லிட்டாளே. ச்ச…. அந்த லூசு பயலுக்கு இப்படி ஒரு தங்கச்சி. சரி மச்சானா போய் தொலைச்சுட்டான் அதனால கொஞ்சம் அடக்கியே வாசிப்போம் இல்லை. இந்த ஜென்மத்துக்கு நான் கன்னி கழிய மாட்டேன்’ என்று புலம்பி கொண்டவன்,

பின் ‘ச்ச….. அழுதுட்டே போறா. போய் சமாதானப்படுத்துவோமா. இல்ல வேண்டாம். இப்போதான் அந்த பால் டப்பா வந்து பார்த்துட்டு போனான். வேற யார் கண்ணுலயும் சிக்காம இப்போ போய் படுப்போம். நாளைக்கு நம்ம ஆள சரி பண்ணிக்கலாம்.

இவளை ரொம்ப சைலன்ட்னு நினைச்சா….பய புள்ள பியூஸ் புடுங்கிருவேன்னு சொல்லிட்டு போகுது. சரியான ரவுடியா இருப்பா போல. எதுக்கும் நாம கொஞ்சம் உஷாராதான் இருக்கணும்’ என்று நினைத்தவன்.

திரும்பி நிலவை ஒரு பார்வை பார்த்து ‘ஏன் சந்திரா உனக்கு என் மேல இம்புட்டு காண்டு?. அவளை என்கிட்ட கொண்டுவான்னு சொன்னேன். வர வச்ச. அப்படியே ரொமான்டிக்கா இருக்க விடாம இப்படி சண்டை வர வச்சுட்டியே ஏன்?

பால் டப்பா வெங்காயம் இப்போ இங்க வரலன்னு யார் அழுதா. ஒழுங்கா குப்புற படுத்து தூங்காம. எங்கள பிரிச்சிட்டு போறான். அவனுக்கு ஒரு நாள் இல்ல ஒரு நாள் ஆப்பு நான் வைக்கல என் பேரு நிரஞ்சன் இல்ல’ என்றவன் மீண்டும் நிலவை பார்த்து “உனக்கு என்னப்பா நீ உன் இருபது பொண்டாட்டிங்க கூட ஜாலியா இருப்ப. நான் அப்படியா நானே கருவேப்பிலை கொத்து மாதிரி ஒன்னே ஒன்னு வச்சுருக்கேன்.

அதுக்கும் ஆப்பு சொருவி விற்றுவ போல’என்று புலம்பி,

‘என் வாழ்க்கை நடக்கமா…என் பொறப்பு பொய் கணக்கா……” என்று பாடி கொண்டே தன் அறை நோக்கி சென்றுவிட்டான்.

நிலவோ ‘பக்கி பய கணக்க தப்பா சொல்லிட்டு போறான் பாரு. எனக்கு இருப்பத்து ஏழு பொண்டாட்டிடா. இவன் ஆளு இவன்கிட்ட சண்டை போட்டா. என் பொண்டாட்டிங்க கணக்கை தப்பா சொல்லுவானா. நல்லா கேட்டுக்கடி நீ சைலன்ட்னு நினைச்ச பொண்ணு பொண்டாட்டியா வந்ததுக்கு அப்புறம் உன் குறுக்குல ஏறி மிதிக்க போறா, அதை நான் ஜாலியா பார்க்க போறேன்.இதான் என் சாபம் வாங்கிக்கோ” என்றுவிட்டு விலகியது.

காலை கதிரவன் தன் பணியை துவங்க, ஊரில் உள்ள அனைவரும் கோவிலுக்கு பொங்கல் வைக்க வேண்டும் என்று கிளம்பி கொண்டு இருந்தனர்.

பெண்கள் ஒரு பக்கம் கோவிலை சுற்றி உள்ள இடத்தில் கல்லை கூட்டி வைத்து பொங்கல் வைக்க, ஆண்கள் கெட வெட்டும் இடத்தில் கூடினர். ஒவ்வொருவரும் அவர்களது வேண்டுதலுக்கு ஏற்றார் போல் ஆடு, கோழி என்று தங்கள் கரங்களில் வைத்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்த நின்றிருந்தனர்.

ரஞ்சன் விரைவாக கிளம்பி வந்து ஹால் சோபாவில் அமர்ந்தவன் போனை நோண்டுவது போல் அவளவன் அறையை நொடிக்கு ஒரு முறை பார்த்து கொண்டு இருந்தான்.

ஹாசினியும் அங்கு வந்தவள் அண்ணன் பார்வை செல்லும் இடத்தை கவனித்து “என்ன பிரதர் காலைலயே உங்க தேவி தரிசனத்துக்கு காத்திருக்கீங்க போல” என்றவளை அவன் கண்டு கொள்ளவே இல்லை.

“அடேய். இப்போ நான் பேசுனது உனக்கு கேட்கல அப்படிதானே. ம்கூம்….. காதல் வந்தா பக்கத்துல இருக்கவங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்கன்னு சொல்லுவாங்க அது உண்மைதான் போல, ரொம்ப மோசமான வியாதி….” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அங்கு வந்த பேச்சி, “என்ன வியாதி கண்ணு. எதா இருந்தாலும் சொல்லு என் பேரன்கிட்ட சொல்லி சரி பண்ணிடலாம்” என்க,

ரஞ்சன் ஹாசியை முறைத்தான்.

பேச்சி, “நீ ஏன் ராசா புள்ளைய முறைக்கற. என்ன நோவா இருந்தாலும் ஆரம்பத்துலயே சரி பன்னிபுட்டா, நமக்குதானே நல்லது. நீ சொல்லு கண்ணு ராசாக்கு அப்படி என்ன நோவு” என்க,

ஹாசி அண்ணனை நக்கலாக பார்த்து கொண்டே “இவன் நோய்க்கு மருந்து உங்க பேரன்ட்ட இல்ல. பேத்திட்டதான் இருக்கு” என்று முதல் பாதியை வேகமாகவும் இரண்டாவது பாதியை மெதுவாகவும் சொன்னவள் அவரை பார்த்து “ஈஈஈ….” என்று இளித்து வைக்க,

பாட்டியோ புரியாமல் “அப்படி என்ன நோவு. என் பேரன்கிட்ட இல்லாத மருந்து நோவு. அவன் டாக்டருத்தா. எங்க ஊர்ல எல்லாருக்கும் அவன்தான் வைத்தியம் பாக்குறான். நீ நோவு பேரு சொல்லு மருந்து இருக்கா இல்லையான்னு நான் அவன்கிட்ட கேட்டு சொல்லுதேன்”. என்றவர் சொல்ல,

தங்கையின் பேச்சில் கடுப்பான ரஞ்சன் எழுந்து வந்து அவள் தலையில் கொட்ட,

பேச்சியோ “என்ன ராசா வளர்ற புள்ள தலைல கொட்டுற” ,

ரஞ்சன், “ஆமா இதுக்கு மேல இவ வளர்ந்து கிளிச்சிட போறா. அட போங்க பாட்டி” என்றவன் மீண்டும் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.

தலையை தேய்த்த ஹாசி அண்ணனை திட்டி கொண்டே இருக்க அவள் அருகில் வந்த பாட்டி “ஏன் கண்ணு அண்ணனுக்கு வெளில சொல்ல முடியாத நோவு எதுவும் வந்துடுச்சா அதான் சொல்ல வேண்டாம்னு சொல்றாரா” என்க,

ஹாசியும் வந்த சிரிப்பை அடக்கி கொண்டவள் “ஆமா பாட்டி இது ரொம்ப மோசமான நோய் ” என்று உண்மை போல் சொல்ல,

பாட்டியோ பதறி “என்ன கண்ணு சொல்ற. இதை சரி பண்ண முடியாதா?”என்று சத்தமாக கேட்க, ரஞ்சன் பார்வை போனில் இருந்து இவர்கள் பக்கம் திரும்பியது.

அவனை பார்த்து “ஈஈஈ….” என இளித்து வைத்தவள் “உங்க வேலைய பாருங்க பிரதர். நாங்க சும்மா பேசிட்டு இருக்கோம் “ என்று சொல்ல, அவனும் அப்போதைக்கு மித்துவை பார்த்தாள் போதும் என்ற மன நிலையில் இருந்ததால் அவர்களை அதற்கு மேல் கவனிக்காமல் தான் முதலில் செய்த வேலையையே தொடர்ந்தான்.

(அதாங்க மூடுன கதவையும் போனையும்மாறி மாறி பாக்குறது)

அண்ணன் தங்களை கவனிக்கவில்லை என்றவுடன் பேச்சியிடம் பேச்சை துவங்கினாள் ஹாசி.

“அதெல்லாம் சரி பண்ணிடலாம் பாட்டி”

“ஏன் கண்ணு அந்த நோய்க்கு ஏதோ அறியோ குறியோ சொல்லுவாங்களே அது என்ன” என்றவர் கேள்வியில் அவள் விழிக்க துவங்கினாள்.

“எதே…. அறியா…. குறியாவா அப்படினா என்று யோசித்தவளுக்கு ஒன்றும் விளங்காமல் போக அப்படியே புரியாமல் விழித்து கொண்டிருந்தாள்.

அதை புரிந்து கொண்ட பாட்டி “அதான் கண்ணு இந்த கொரோனாக்கு தும்மலு, இருமலு வந்தா வந்தா கண்டுபிடிச்சிரலாம்னு சொல்லுவாங்களே அது மாதிரி” என்றவுடன் புரிந்து கொண்டது போல் சிரிப்போடு தலையாட்டிவள்,

“ஓஓ….. அறிகுறி கேட்குறீங்களா?”

“ம்ம்…அதே குறிதான்”

“நல்லா சொன்னீங்க போங்க” என்றவள் சலித்து கொண்டாலும் அண்ணனை வச்சி செய்யும் மூடில் இருந்தவள் சும்மா எடுத்து விட ஆரம்பித்தாள்

“பாட்டி நல்லா நோட் பண்ணுங்க. அவன் கண்ணு ஒரு இடத்துல இல்லாம சுத்திட்டே இருக்கும்” என்றவள் சொல்ல,

ரஞ்சனை உற்று பார்த்த பாட்டி “ஆமா கண்ணு” என்று அவன் மித்துவின் அறையை பார்ப்பதும் போனை பார்ப்பதுமாய் இருப்பதை கண்டு சொல்ல,

‘சிக்குனுச்சுடா ஒரு அடிமை’ என்று நினைத்தவள் மேலும் “ஆமா பாட்டி இந்த நோய் வந்தவங்க கண்ணு அங்க இங்க அலையும். நொடிக்கு ஒரு தரம் நல்லா மூச்சு விட முடியாம பெரு மூச்சு வரும். கையி போன நோண்டர மாதிரிதான் இருக்கும். ஆனா காரணமே இல்லாம நடுங்கும். நைட்டு கூட ரொம்ப நேரம் தூங்காம மொட்டை மாடில நடந்துட்டே இருப்பாங்க இது மாதிரி நிறைய இருக்கு” என்று சொல்ல,

பயந்து போன பேச்சி ஒரு வேலை மோஹினி அடிச்சிருக்கும்னு நினைக்கறேன்த்தா. நாம வேணா இன்னைக்கு கோவிலுக்கு கூட்டிட்டு போய் பூசாரிய திரு நீரு அடிக்க சொல்லலாம்” என்க,

அவளும் சிரிப்போடு “இருக்குமோ …. பாட்டி ஆனா…”

“நீ சும்மா இருத்தா. உனக்கு ஒன்னும் தெரியாது. புள்ள காரணமே இல்லாம கோபப்பட்டு அடிக்குது. யாருகிட்டயும் கல கலன்னு பேசாம அமைதியா இருக்கு. இதுக்கு எல்லாம் அந்த மோஹினிதான் காரணமா இருக்கும். சின்ன புள்ள. நீ என்கிட்ட சொல்லிட்டல்ல இனி பாட்டி பார்த்துக்கறேன்” என்றவர் ரஞ்சனிடம் சென்று அவன் தலையில் கை வைத்து பயப்படாதப்பா எல்லாம் சரியா போகும். எங்க ஐயனார் எல்லாம் சரி பண்ணிடுவாரு” என்றுவிட்டு தன் சுருக்கு பையில் இருந்த திருநீரை எடுத்து அவன் நெற்றியில் வைக்க, அவனோ அவரை ‘எந்த மொழில பேசுது இந்த பாட்டி’ என்ற ரேஞ்சில் பார்த்து வைத்தான்.

ஆனாலும் இது ரொம்ப பயங்கரமான மோஹினியால்ல இருக்கு’ என்று நினைத்தவள் இருவரையும் கண்டு விழுந்து விழுந்து சிரிக்க துவங்கினாள்.

அவள் சிரிப்பை வைத்தே தங்கை ஏதோ செய்திருக்கிறாள் என்று புரிந்து கொண்ட ரஞ்சன் அவளை முறைக்க, அவளோ அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு எழுந்து வெளியில் சென்றுவிட்டாள்.

அப்போது அங்கு வந்த ஹர்ஷா ரஞ்சனை முறைத்து கொண்டே அங்கிருந்த மற்றொரு சோபாவில் அமர்ந்தான்.

மித்து, கிருஷ்ணன், பத்மா, ரேவதி, ராஜ் என ஒவ்வொருவராக வர, அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.

இனி கோவிலில் பேச்சி பாட்டியிடம் ரஞ்சன் என்ன பாடு பட போகிறானோ அடுத்த எபியில் பார்க்கலாம்.