அத்தியாயம் –22
சுஜய்க்கோ அவன் தந்தையை நினைத்து கண்கள் கலங்கியது. அதுவரை தன் மேல் என்ன தப்பு என்ற ரீதியில் சிந்தித்துக் கொண்டிருந்த ராஜேந்திரனுக்கு உள்ளுக்குள் எதுவோ பிசைவது போல் இருந்தது.
தான் ஆடாவிட்டாலும் அவரின் தசை ஆடியது. என்ன இருந்தாலும் அவரின் உடன்பிறந்தவர் கடைசியில் என்ன சொல்ல நினைத்திருப்பார் என்று எண்ணியவர் சற்றே அமைதியானார். இருந்தும் அவர் இறுமாப்புடனே இருந்தார்.
“இன்னும் என்னங்க யோசிக்கறீங்க” என்ற மனைவியின் குரலில் கலைந்து காமாட்சியை நோக்கினார் அவர். ‘என்ன’ என்பதாய் அவர் முகம் பார்க்க “அதான் நானும் கேட்கிறேன் இன்னமும் உங்க மனசு இளகவேயில்லையா”
“பெரிய மாமா அவர் செஞ்சது தப்புன்னு நினைச்சு இத்தனை வருஷமா குடும்பத்தை பிரிஞ்சு தண்டனை அனுப்பவிச்சுட்டார். உங்களுக்கு இன்னமுமா அவர் மேல விரோதமிருக்கு”
“உங்களை நம்பி அவர் இந்த குடும்பத்தை விட்டு விலகி நின்னார். இப்பவும் அவர் மறைமுகமா உங்களை நம்பி தான் அவர் பிள்ளையை விட்டுட்டு போறேன்னு சொல்லி இருக்கார் இது ஏங்க உங்களுக்கு புரியலை”
“அவர் காதலிச்சு கல்யாணம் பண்ணது அவ்வளவு பெரிய தப்பா. உங்களுக்கு வேண்டாம்ன்னு நினைச்சு இருந்தா நீங்க பேசாம இருந்திருக்கலாம். மாமா அத்தையும் அவங்களோட பேசவிடாம பண்ணி பெரிய பாவத்தை சேர்த்திட்டீங்களே”
“பெத்தவங்களை பிள்ளையை பார்க்க கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு என்னங்க உரிமை இருக்கு. இத்தனை வருஷமா அந்த புள்ளை எந்த சொந்தபந்தமும் இல்லாம தனிச்சு வளர்ந்திருக்கே அதை நினைச்சு கூட உங்களுக்கு கவலையா இல்லையா”
“விடுங்கம்மா அவங்களை எதுவும் சொல்லாதீங்க” என்று சொல்லி இடைமறித்தான் சுஜய். “உரிமையா கோபப்படுறதுன்னா என்னன்னு இப்போ தான் எனக்கு புரியுது. கண்டிப்பா அவங்க மனசு மாறி என்னை ஏத்துக்குவாங்கன்னு நம்புறேன்”
“அப்படி அவங்களுக்கு என்னை ஏத்துக்க மனசில்லைன்னாலும் நான் வருத்தப்படலை. எனக்கு மீனுவோட கணவனா உங்க எல்லாருடைய அன்பும் அனுசரணையும் கிடைச்சுது அதுவே எனக்கு போதும்” என்று அவன் சொல்ல மீனா அக்கணம் பெருமையாக உணர்ந்தாள்.
அவன் பேச்சை கேட்டு எல்லோருமே அவனருகில் வந்து அவன் அவனிடம் அளவளாவிக் கொண்டிருக்க அப்பொழுதும் ராஜேந்திரன் எதுவும் பேசாமலே அமைதியாக இருந்தார்.
“ஏன் மாமா எல்லாரும் அவரை ஏத்துக்கிட்டாங்க நீங்க இன்னும் உங்க வீம்பை பிடிச்சு தொங்கிட்டே இருக்கிங்களே. நீங்க யாரு மாமா அவங்களை விலக்கி வைக்க, பெரிய மாமா நினைச்சு இருந்தா உங்களை மீறி ஒண்ணுமே செஞ்சிருக்க முடியாதுன்னு நினைச்சீங்களா”
“ஆனா அவங்க அதை செய்யலை. ஏன்னா தாத்தாவுக்கும் பாட்டிக்கும், ஏன் எங்க அம்மாவுக்கும் சித்திக்கும் கூட அவங்க மேல எந்த வெறுப்பும் இல்லாத போது எல்லாரையும் அவங்க வசப்படுத்தியிருக்க முடியும்”
“அவங்க தன் தம்பியோட கோபத்தை மதிச்சாங்க, தன்னால தான் இப்படி ஆகிபோச்சுன்னு நினைச்சு அவங்க எதுவும் செய்யலை. இவர் ஏன் இப்போ வந்தாரு சொத்து வாங்க வந்திருக்காங்களோன்னு உங்களுக்கு தோணும்”
“இந்த சொத்து எதுவும் அவங்க எதிர்பார்க்கலை, பெரிய மாமா சேர்த்து வைச்சதை விட இது ஒண்ணும் பெரிய சொத்தில்லை. ஒருவகையில நீங்க சொன்னதும் சரி தான் மாமா இவர் சொத்தை தேடி தான் இந்த வீட்டுக்கு வந்தார்”
“நீங்க நினைக்கிற சொத்து இல்லை அது, நம்ம சொந்தங்கற சொத்தை தேடி தான் வந்திருக்கார். நான் இவ்வளவு பேசியும் நீங்க அசையாம கல்லு மாதிரி உட்கார்த்திருக்கீங்களே மாமா” என்றவளுக்கு மேலும் கோபமாக வந்தது.
அவர் எதுவும் பேசாமல் வெளியே எழுந்து செல்ல மீனாவும் வேகமாக அவர் பின்னே சென்றாள். “மாமா” என்று அவள் ராஜேந்திரனை கோபத்துடன் அழைக்க திரும்பி பார்த்தவரின் விழிகளில் கண்ணீர் துளிர்த்திருந்தது.
உடனே பதறியவளாக “மாமா மன்னிச்சுடுங்க மாமா, நான் எதுவும் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சுடுங்க. ப்ளீஸ் மாமா… அழாதீங்க, கம்பீரமா இருந்த உங்களை பெரியவங்கன்னு மரியாதை இல்லாம நிக்க வைச்சு கேள்வி கேட்டுட்டேன், தப்பு தான் மாமா” என்று புலம்பியவளை சலனமில்லாமல் பார்த்தார்.
“நீ எதுவும் தப்பா சொல்லலையே… எனக்கு தான் எதையும் உடனே மாத்திக்க கஷ்டமாயிருக்கு. இப்போ என் கண்ணுல வந்த கண்ணீர் எங்கண்ணனுக்காக, இப்பவும் அவருக்காக நான் வருந்தலைன்னா நான் மனுஷனே இல்லைம்மா”
“என்னோட கோபம் எல்லாம் அர்த்தமில்லாததுன்னு எனக்கு இப்போ தான் புரியுதும்மா. அவரோட கடைசி நாட்கள்ல அவர் எங்களை தானே நினைச்சு இருக்கார். என்னால தானே அவர் இங்க வரமுடியாம போச்சு”
“நான் எவ்வளவு பாவியா இருந்திருக்கேன். நான் எப்படி அவர்கிட்ட மன்னிப்பு கேட்பேன்” என்றவர் மேலும் மனம் நொந்தார். “மாமா அப்படிலாம் எதுவும் பீல் பண்ணாதீங்க, பெரிய மாமாக்கு உங்க மேல கோபம் எதுவுமில்லைன்னு அவங்களே சொல்லியிருக்காங்க”
“நீங்க பின்னாடி வருத்தப்படுவீங்கனு தெரிஞ்சே மாமா எழுதி இருக்காங்க பாருங்க. நீங்க வருத்தப்பட வேண்டாம் மாமா உள்ள வாங்க. பெரிய மாமா இடத்துல இருந்து எல்லாரையும் நீங்க பார்த்துகிட்ட மாதிரி என் புருஷனும் உங்க பொறுப்பு” என்றாள். அவரோ பதிலுக்கு அவரை பார்த்து முறைத்தார்.
“எதுக்கு மாமா முறைக்கிறீங்க”
“அதென்ன உன் புருஷன்னு சொல்ற என் மூத்த பிள்ளை அவன். உங்க மகன்னு தானே நீ சொல்லியிருக்கணும்” என்றார்.
“ஆஹா மாமா என்ன இப்படி ஒரேடியா மாறிட்டிட்டீங்க”
“ஒரேடியா ஒண்ணும் மாறிடலை, மாற முயற்சி பண்ணிட்டு இருக்கேன்” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார். ‘மாறினா சரி தான் என்று நினைத்துக் கொண்டு அவளும் உள்ளே சென்றாள்.
____________________
சுஜய் யார் என்று தெரிந்த மகிழ்ச்சியில் குடும்பமே சந்தோசக்கடலில் மிதந்தது. கதிர் வேறு மீனாவை மதினி என்று அழைக்க அவளோ திருதிருவென்று விழித்தாள்.
“ஏன்டா கதிரேசா உனக்கு எப்போல இருந்துடா இப்படி மரியாதையா எல்லாம் வந்திச்சி!!!” என்று வியந்தாள் அவள்.
“மரியாதை கிலோ என்ன விலைன்னு உன்கிட்ட தான்… இல்லையில்லை உங்ககிட்ட தான் மதினி கத்துக்கிட்டேன்” என்று அவளை கிண்டல் செய்தான் கதிர்.
திரும்பி அவனை ஒரு முறை முறைத்தவள் “என்னை கிண்டல் அடிச்சா போதாது, பதில் சொல்லு”
“என்ன செய்ய எங்கண்ணனுக்கு பொண்டாட்டி ஆகிட்டீங்க அதான் மரியாதை எல்லாம் கொடுக்க நானும் பழகிக்கறேன்”
“முதல்லயும் நீ அவரை அண்ணே அண்ணேன்னு தானே சொல்லுவா” என்று கிண்டலுடன் கேட்டாள்.
“அப்போ அவர் எனக்கு உறவுன்னு தெரியாதே மதினி” என்றான் மீண்டும் அந்த மதினிக்கு அழுத்தம் கொடுத்து.
“எப்பா முடியலை நீ ஆளை விடு” என்று அங்கிருந்து நகர்ந்தாள் மீனா.
எல்லோரும் சுஜய்யை பிடித்து வைத்துக் கொண்டு ஆளாளுக்கு அவனிடம் கதை பேசுவதும் கேட்பதுமாக இருக்க மீனா தவித்து போனாள். ‘எம் புருஷனை இப்போ தான் இவங்களுக்கு அடையாளம் தெரியுதா’
‘எல்லாமே ஒரே நாள்ல பேசி தீர்த்துட போற மாதிரி பேசிட்டு இருக்கறதை பார். என்னை யாராச்சும் கவனிக்கிறாங்களா. இவருக்கு என்ன வந்திச்சாம் இவரும் என்னை கண்டுக்காம எல்லார்கூடவும் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கார்’ என்று சடைத்துக் கொண்டு அவள் அறைக்கு சென்று கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
இரவின் தனிமையில் அவர்கள் அறைக்குள் சுஜய் நுழைய மீனா கட்டிலில் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தாள். ‘என்னாச்சு இவளுக்கு தனியா வந்து உட்கார்ந்திருக்கா, அட!!! ஆமா ரொம்ப நேரமா இவளை வெளியவே காணோமே’
‘என்ன பஞ்சாயத்து கூட்டப் போறாளோதெரியலையே, ச்சேஇவளோட பேசி பேசி எனக்கும் ஊர் பாஷை வந்திடுச்சு போல. பஞ்சாயத்துன்னு நானும் பேச ஆரம்பிச்சுட்டேன்’ என்று நினைத்துக் கொண்டே கட்டிலில் சென்று மெதுவாக அமர்ந்தான்.
அவளை அணைக்க வேண்டும் என்று தோன்ற பின்னிருந்து அவளை அணைத்து அவள் காதோரமாக “என் மீனுவுக்கு என்ன யோசனை” என்றான்.
காதோரம் கூசி சிலிர்க்க “ஹ்ம்ம் ஒண்ணும்மில்லை” என்றவள் அவனிடமிருந்து விடுப்பட்டு அவனை பார்த்தவாறே திரும்பி அமர்ந்தாள்.
“அப்போ நிச்சயம் ஏதோ இருக்கு”
“ஆமா இருக்கு”
“அதான் என்ன இருக்குன்னு கேட்குறேன்”
“உங்களுக்கு மண்டையில ஒண்ணுமேயில்லை”
“அதான் நீ பலதடவை சொல்லிட்டியே”
“நான் ஒண்ணும் சொட்டை மண்டையை சொல்லலை” என்று வேகமாக சொன்னவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“எதுக்கு நாக்கை கடிக்கிற”
“இல்லை உங்களை நான் அப்படி கூப்பிட்டு இருக்கக்கூடாது”
“நீ ஒரு ஆயிரம் தரமாச்சும் என்னை இப்படி கூப்பிட்டு இருக்க, இப்போ மட்டும் புதுசா என்ன வந்திச்சாம்”
“அப்போ ஏதோ தெரியாம கூப்பிட்டேன், இப்போ அப்படியா!!!”
“ஏன் இப்போ மட்டும் என்னவாம் நான் உன்னோட மாமா பையங்கறதாலயா???”
“ச்சே… ச்சே… அப்படிலாம் ஒண்ணுமில்லை”
“வேற எப்படின்னு நீயே சொல்லு”
“அது வந்து… அது வந்து… அதை எப்படி சொல்றது.”
“நீ சொன்னா தான் எனக்கு தெரியும்”
“இப்போ தான் நீங்க வேற நான் வேற இல்லையே” என்று வெட்கத்துடன் மெதுவான குரலில் கூறினாள்.
“மீனு!!!” என்றவனின் குரலில் தாபம் தெரிந்தது. அவளை இழுத்து அணைத்தவன் அவள் முகம் முழுதும் முத்திரை பதித்தான்.
“சரி சொல்லு உனக்கு என்ன கோபம்”
“ஹ்ம்ம்… உங்களுக்கு புதுசா எல்லா சொந்தமும் கிடைச்சதும் என்னை மறந்துட்டீங்களே” என்றாள் விசனத்துடன்.
அவன் முகம் மாறியதை கவனிக்காமல் தொடர்ந்து “எல்லார் கூடவும் கதை பேசவே உங்களுக்கு நேரம் சரியா இருக்கு. நான் ஒருத்தி இருக்கேன்னு நீங்க மறந்துட்டீங்க மாமா…” என்று சொல்லிக் கொண்டே அவன் முகம் பார்க்க அவனோ இறுகி போய் அமர்ந்திருந்தான்.
“மாமா என்னாச்சு இதுக்கு இப்படி இருக்கீங்க???”
“ப்ளீஸ் மீனு இனி இப்படி சொல்லாதே”
“எப்படி மாமா??? நான் நீங்க என்கிட்ட பேசலைன்னு தானே சொன்னேன் வேற எதுவும் சொல்லலையே???”
“புது உறவு வந்ததும் உன்னை மறந்திட்டேன்னு சொன்னியே மீனு. கதிரை என்னோட வைச்சுட்டு இருந்த போதும் எல்லார்கிட்ட இருந்தும் தள்ளி தான் இருந்தேன்”
“நம்ம குடும்பத்தில நீ தான் எனக்கு முதல் உரிமையுள்ள உறவா கிடைச்ச, உன்னை நான் எப்படி மீனு மறப்பேன். இந்த குடும்பத்துக்குள்ள நான் வர்றதுக்கு நீ தான் காரணம் நீ மட்டும் தான் மீனு காரணம்” என்றவனின் குரலில் வருத்தமும் ஆதங்கமும் இருந்தது.
“மாமா நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு நீங்க இவ்வளவு வருத்தப்படுறீங்க???”
“எல்லார்கிட்டயும் சந்தோசமா சிரிச்சு பேசிட்டு இருந்தீங்க. என்னை திரும்பி ஒரு பார்வை கூட பார்க்கலை அதான் எனக்கு கஷ்டமா இருந்துச்சு. நான் அதை நினைச்சு சொன்னா, நீங்க தேவையில்லாம பேசிட்டு போங்க மாமா”
“உங்ககிட்ட நெறைய கேட்கணும் நினைச்சேன். நீங்க இப்படி இருந்தா என்ன கேட்குறது???”
“சொல்லு மீனு உனக்கு என்கிட்ட என்ன கேட்கணும்???”
“போங்க அதான் நீங்க என்கிட்ட கோவிச்சுக்கிட்டீங்கல நான் எதுவும் கேட்க மாட்டேன்???” என்று முகத்தை திருப்பினாள்.
“என்கிட்ட சொல்ல முடியாதா??? அப்போ தண்டனை கொடுத்திட வேண்டியது தான்” என்று அவளை நெருங்கினான்.
“என்ன தண்டனை???”
அவளை நெருகியவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து முத்தம் வைக்க உள்ளுக்குள் ஏதோ செய்ய “போங்க” என்று சொல்லி அவனை தள்ளினாள்.
“நீ சொல்ற வரைக்கும் நான் இப்படி எதாச்சும் செஞ்சுட்டே இருப்பேன் பரவாயில்லையா???”
“ஹ்ம்ம் வேணாம்… வேணாம்… நானே சொல்லிடறேன். நீங்க… நீங்க என்னை பிடிச்சிருந்துதுன்னு சொன்னீங்கள்ள??? உங்களுக்கு என்னை எப்போல இருந்து பிடிச்சுது??? நீங்க என்னை லவ் பண்ணீங்களா மாமா???” என்றாள் ஆர்வமாக.
“லவ்வா உன்னையா???”
“ஏன் எனக்கென்ன என்னை லவ் பண்ணா என்ன தப்பு??? அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க???” என்று முகம் திருப்பினாள்.
“உன்னை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ண முடியாது. கல்யாணத்துக்கு அப்புறம் தான் லவ் பண்ண முடியும்”
“அது தான் ஏன்னு கேட்கிறேன்???”
“உன்னை லவ் பண்ணறேன்னு சொல்லி உன் பின்னாடியே நான் சுத்தி சுத்தி வந்திருந்தா நீ என்னை திரும்பி பார்த்திட்டு தான் மறுவேலை பார்த்திருப்ப பாரு”
“ஏன் உங்களுக்கு என்ன குறை??? நான் ஏன் உங்களை பிடிக்கலைன்னா சொல்லி இருப்பேன்???”
“கண்டிப்பா பிடிச்சு இருக்குன்னு சொல்லி இருக்க மாட்டே, உன்னை லவ் பண்ணறேன்னு சொல்லி ஒருத்தன் உன் பின்னாடி அலைஞ்சு வாங்கி கட்டிகிட்டது பத்தாதா???”
“என்னது என்ன சொல்றீங்க??? நான் யாரையும் எதுவும் செய்யலையே”
“உன்னை லவ் பண்றேன்னு சொல்லி உன் பின்னாடி தினமும் ஸ்கூல்க்கு வந்துட்டு இருந்தானே அந்த பழனியை நீ என்ன செஞ்சேன்னு எனக்கு நல்லா தெரியும்” என்று சொல்லி சிரித்தான். ‘டேய் கதிரேசா என்னை பத்தி புட்டு புட்டு வைச்சிட்டியா… இரு உன்னை அப்புறம் வைச்சுக்கறேன்’ என்று மனதிற்குள் கறுவினாள்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம வேற என்னென்னமோ சொல்லிட்டு இருக்கீங்க???” என்று மீண்டும் அவனை முறைத்தாள் அவள்.
“கதிர் உன்னை பத்தி சொல்லும் போதெல்லாம் ஆச்சரியமா கேட்டு இருக்கேன். உன்னோட சேட்டையும் குறும்பும் எனக்கு ரொம்ப பிடிச்சுது”
“கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்படி துறுதுறுன்னு இருக்க பொண்ணா பண்ணிக்கணும் நினைச்சேன். உன்னையே கல்யாணம் பண்ணிக்குவேன்னு நான் நினைக்கவே இல்லை மீனு”
“ஏன்??? ஏன்??? நினைக்கலை”
“ஏய்!!! அப்போ உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருந்துச்சு மீனு. நான் எப்படி உன்னை நினைக்க முடியும், நான் கதிரோட ஊருக்கு வரும் போது கூட உன்னை கதிருக்கு நிச்சயம் பண்ண பொண்ணா தான் பார்த்தேன்”
“அங்க வந்த பிறகு தான் அதிர்ஷடக்காத்து என் மேல வீசுச்சு. நீ இயல்பா இருந்தது எனக்கு பிடிச்சிருந்தது. இவங்க பெரிய ஆளு இவங்க சின்ன ஆளுன்னு எல்லாம் இல்லாம எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி நீ இருந்தது என்னை கவர்ந்திச்சு”
“அன்னைக்கு சபையில எல்லாரும் உன்னை பேசினது எனக்கு பிடிக்கலை. அத்தை அழுததும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எப்பவும் எதையும் எதிர்த்து தைரியமா பேசுற நீ அங்க கூனிக்குறுகிப் போய் நின்னுட்டு இருந்தே”
“அந்த நேரம் உன் கண்ணுல இருந்து கண்ணீர் வந்துச்சு, அதுக்கு மேல என்னால பேசாம இருக்க முடியலை. என்ன ஆனாலும் சரின்னு என்னோட விருப்பத்தை உடனே சொல்லிட்டேன்”
அவன் பேசியது கேட்டதில் நெகிழ்ந்திருந்தவள் அவன் பேசி முடித்ததும் அவன் மார்பின் மீது வாஞ்சையாக சாய்ந்துக் கொண்டாள். சுஜய்யும் தன்னுடன் அவளை இறுகிக் கொண்டான்.
“ஆமா என் கதையை கேட்டியே உனக்கு என்னை எப்போ பிடிக்க ஆரம்பிச்சுது”
“எனக்கு உங்களை எப்போ பிடிச்சுதுன்னு தெரியலை மாமா. ஆனா அந்த சபையில எல்லாரும் அமைதியா இருந்தப்ப நீங்க மட்டும் கம்பீரமா எழுந்து நின்னு என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னது எனக்கு பிடிச்சுது”
“அதுவரைக்கும் எனக்கு எந்த எண்ணமும் இல்லை. அப்போல இருந்து தான் உங்களை கவனிக்க ஆரம்பிச்சேன்”
“ஒரு வேளை நான் உங்களை அடிச்சதுக்காக தான் நீங்க பழிவாங்க என்னை கல்யாணம் பண்றேன்னு சொல்லி இருப்பீங்களோன்னு முதல்ல எனக்கு கொஞ்சம் பயம் தான்”
“ஆனா அப்படி இருக்காதுன்னு ஒரு பக்கம் மனசுல தோணிட்டே இருந்துச்சு. முதலிரவு அன்னைக்கு நீங்க பழிவாங்க தான் கல்யாணம் பண்ணேன்னு பேசினீங்களா. என்னடா இது இப்படி ஆகி போச்சேன்னு நினைச்சேன்”
“போக போக தான் தெரிஞ்சுது நீங்க சும்மா தான் சொன்னீங்கன்னு. ஆமா அன்னைக்கு ஏன் அப்படி சொன்னீங்க”
“அது வேற ஒண்ணுமில்லை, அன்னைக்கு நான் உள்ள வரும் போது நீ அழுதிட்டு இருந்த. எனக்கு அது பிடிக்கலை, உன்னை அதுல இருந்து வெளிய கொண்டு வரணும்ன்னு தான் உன்னை சீண்டி பேசினேன்”
“அதான் அப்படி சொன்னேன், உனக்கு தான் என்கூட சண்டை போடுறதுன்னா அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே. உடனே சிலுப்பிக்கிட்டு நீ என்கிட்ட பதில் பேச ஆரம்பிச்ச. அதுக்கு அப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே”
“நீங்க பெரிய ஆளு தான் மாமா, ஆனா மாமா உங்ககிட்ட நான் ஒண்ணு சொல்லணும்”
“என்ன மீனும்மா???”
“நீங்க என்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறீங்க, நான் இதை கூட சொல்லலைன்னா எப்படி???”
“நான் படிக்க வைச்சா போதுமா??? நீ தான் கஷ்டப்பட்டு படிக்கிற, என்ன சொல்லணுமோ அதை நேரடியா சொல்லு மீனு. எதுக்கு சுத்தி வளைக்கிற???”
“மாமா… ஐ லவ் யூ மாமா…”என்று படிக்காதவன் படத்தில் தனுஷை பார்த்து அவள் அத்தை பெண்ணாக வரும் ஆர்த்தி சொல்வது போல் சொல்லி வைக்க அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“மாமா எவ்வளோ ஆசையா உங்ககிட்ட ஐ லவ் யூன்னு சொன்னா… எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க??? போங்க மாமா” என்று சிணுங்கினாள்.
“சரி மீனு சிரிக்கலை… சமீபத்துல ஒரு படத்துல பார்த்த டயலாக் மாதிரி இருந்துச்சு அதான் சிரிச்சேன். நீ இவ்வளவு ஆசையா சொல்லும் போது சிரிச்சது தப்பு தான். போதுமா முகத்தை தூக்கி வைச்சுக்காதே ப்ளீஸ் மீனு” என்று அவள் முகவாயை தொட்டு அவன் பக்கம் திருப்பினான்.
“மீனும்மா…”
“ஹ்ம்ம் என்ன???”
“நெறைய பேசிட்டோம் எனக்கு தூக்கம் வருது தூங்கலாமா”
“ஓ!!! நல்லா தூங்கலாமே, நீங்க இங்க சமத்தா படுத்து தூங்குங்க. நான் கிழே பாட்டிகிட்ட போய் தூங்கறேன்” என்று சொல்லி எழ போனவளின் கரத்தை பற்றி இழுத்து அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
“மீனு நீ பாட்டிகிட்ட போய் தூங்குறதுக்கா நான் இதை சொன்னேன்”
“பின்னே என்னவாம்”
“தெரியாத மாதிரியே கேளு. போதும் மீனு நெறைய பொறுத்தாச்சு இனி மேல் எல்லாம் காத்திட்டு இருக்க முடியாது” என்றவன் அதற்கு மேல் அவனும் பேசவில்லை அவளையும் பேசவிடவில்லை.
____________________
மூன்று வருடங்களுக்கு பின்
“இப்பிவயில நின்னா நாங்க எப்பிபோது” என்ற மழலை குரலில் திரும்பி பார்த்தான் சுஜய். சுஜய் மீனு தம்பதியின் செல்ல மகள் அனுத்யா தான் அவனை அழைத்தது.
‘அப்படியே அவங்க அம்மா போல என்னை மிரட்டுறா’ என்று மனதிற்குள் செல்லமாக வைதான். “என்ன செல்லம் அப்பா ஓரமா தானே நின்னுட்டு இருக்கேன்”
“போந்தப்பா பாப்பாவும் அஷும் (அஸ்வந்த் – பசும்பொன் கார்த்திகேயனின் மகன்) எப்பி போதது, நீந்த இப்பி நின்னா???” என்ற மகளை கைகளில் வாரி அணைத்தவன் “அப்படியே அம்மா மாதிரியே இருக்க குட்டிம்மா”
“அப்பா நீ பொய் சொல்லுத அம்மா பாப்பா உன்னு மாயி இக்கேன் சொல்லுதாங்க”
“அப்படியா சொன்னா உங்கம்மா… போய் அம்மாவை கூப்பிடு நாம கேட்போம்”
“சரிப்பா” என்று ஓடிய குழந்தை மீனாவிடம் சென்று நின்றது.
அன்று எல்லோரும் அனுத்யாவுக்கும் கதிர் தேனுவின் மகள் அபர்ணாவிற்கும் மொட்டை அடிக்கவென குலதெய்வம் கோவிலுக்கு சென்றிருந்தனர். பொங்கல் வைக்க அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த மீனாவிடம் நோக்கி குழந்தை வர “என்னம்மா” என்றாள்.
“அம்மா அப்பா கூப்புதாங்க”
“எதுக்காம்???”
“நீ வாம்மா” என்று சொல்லி அவள் சேலையை பிடித்து இழுத்தது குழந்தை.
“வரமுடியாதுன்னு சொல்லு குட்டிம்மா அம்மாக்கு நெறைய வேலை இருக்குடா தங்கம்”
“அம்மா வாம்மா… அப்பா கூப்பித்தா வரணும். நீ தாம்மா சொன்ன”
‘நான் சொல்லி கொடுத்தது என்கிட்டயே சொல்லிக்காட்டுறா வாலு’ என்று நினைத்தவள் அவளை தூக்கிக் கொண்டு சுஜய் அருகில் சென்றாள். குழந்தையோ “அம்மா விது நான் குட்டி பாப்பாத்த போதேன்” என்று ஓடிவிட அவள் சுஜய்யை தேடி சென்றாள்.
“என்ன மாமா??? எதுக்கு என்னை கூப்பிட்டீங்க”
“நீ தியாகுட்டிக்கிட்ட என்ன சொன்ன, பாப்பா என்னை மாதிரின்னு சொன்னியா”
“ஆமா அவ உங்களை மாதிரியே தானே இருக்கா”
“அவ நடந்துக்கறது எல்லாம் உன்னை மாதிரியே தானே இருக்கு. என்னை கேள்வி கேட்குறதுல ரெண்டு பேரும் ஒரே மாதிரி தானே இருக்குறீங்க”
“ஏன் மாமா??? இதை கேட்க தான் என்னை கூப்பிட்டீங்களா”
“இல்லை”
“வேற எதுக்கு என்னை கூப்பிட்டீங்க, தலைக்கு மேல வேலையிருக்கு எனக்கு. இங்க அப்பாவும் பொண்ணும் சேர்ந்துகிட்டு என் வேலையை கெடுக்குறீங்க”
சுற்றுமுற்றும் திரும்பி பார்த்தவன் எதையோ உறுதிபடுத்திக் கொண்டவனாக அருகில் வந்து அவளை இழுத்தவன் அங்கிருந்த ஒரு மரத்தின் மறைவிற்கு சென்றான்.
“இங்க எதுக்கு என்னை இழுத்துட்டு வந்திருக்கீங்க”
சுஜய்யோ எதுவும் பேசாமல் அவள் இதழிலில் இதழ் சேர்த்தான். எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ ராஜேந்திரன் அழைக்கும் குரல் தொலைவில் கேட்க அவளை சட்டென்று விடுவித்தான் அவன்.
“இதுக்கு தான் என்னை கூப்பிட்டீங்களா”
“ஆமா காலையில இருந்து சுத்திட்டே இருக்கியே இங்க ஒருத்தன் இருக்கானே அவனை கவனிப்போமான்னு பார்த்தியா”
“ஓ!!! பார்த்திட்டா போச்சு” என்றவள் அவனை மேலிருந்து கீழாக பார்க்க ராஜேந்திரன் சுஜய்யை அழைக்கும் குரல் கேட்க அவன் அங்கிருந்து நகர்ந்தான்.
இப்போதெல்லாம் ராஜேந்திரன் சுஜய்யுடன் நன்றாக பேச ஆரம்பித்துவிட்டார். “என்னப்பா” என்றவாறே அவரிடம் சென்றான் அவன்.
“நேரமாச்சுப்பா… வாங்க சாமி கும்பிடுவோம், நீங்க தானே முன்னாடி நிக்கணும்” என்று அவனை கையோடு அழைத்து சென்றார்.
“மீனா நீ என்னம்மா இன்னும் அங்கேயே நின்னுட்டு இருக்க நீயும் வா. இந்த குடும்பத்துக்கு மூத்த மருமக நீ தானே வாம்மா” என்று அவளையும் அழைத்தார்.
‘எல்லாம் உங்களால தான் என் மானமே போச்சு’ என்று அவள் அவனை முறைக்க ‘நான் என்ன செஞ்சேன் மீனும்மா’ என்பதாய் அவன் பதில் பார்வை பார்த்தான்.
குலதெய்வ வழிபாடு என்பதால் மொத்த குடும்பமும் அங்கிருக்க குழந்தைகளுக்கு தாய் மாமன் அஜயின் மடிமேல் அமர வைத்து மொட்டை அடித்து காது குத்தினர்.
மீனாட்சி பாட்டி மனம் நிறைவாக உணர்ந்தார், குடும்பம் மொத்தமும் ஒன்றாக சேர்ந்து பல வருடங்களுக்கு பின் குலதெய்வத்தை கூம்பிட்டதே அவர் நிறைவிற்கு காரணம்.
இதையெல்லாம் இருந்து பார்க்க கணவருக்கும் மூத்த மகனுக்கும் மருமகளுக்கும் கொடுத்த வைக்கவில்லையே என்று அவர்களுக்காக மனம் வருந்தினார்.
ராஜேந்திரன் அனுத்யாவை தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க சுஜயும் மீனாவும் சந்தோசத்துடன் அதை பார்த்திருந்தனர்.
மீனாவின் வாய் ஓயாத பேச்சை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த சுஜய்க்கு மீனுவுடன் அவளை போல் சுட்டியான அவர்கள் மகள் அனுத்யாவும் சேர்ந்து கொள்ள காதில் ரத்தம் வராத குறையாக அதே சமயம் அதை அவன் ரசிக்க அவர்கள் வாழ்க்கை பயணம் இனிதாக சென்றது. அவர்களுடனான நமது பயணத்தை நாமும் இங்கு முடித்துக் கொண்டு விடைபெறுவோம்… நன்றி… வணக்கம்…