நல்லவேளை சினிமாவுல வர்ற மாதிரி கையில பால் சொம்பு எல்லாம் கொடுத்துவிடலை. அதுவே எனக்கு பெரிய நிம்மதி.
கதவை திறந்து உள்ள போனா அவிய உள்ள இல்லை. அப்பாடான்னு இருந்துச்சு எனக்கு, கொஞ்சம் ரிலாக்ஸ் மோடுக்கு வந்திட்டேன்.
அவிய வாறதுக்குள்ள பேசாம படுத்து தூங்கிருவோமா அப்படின்னு நா யோசிச்சுட்டு இருக்கும் போதே ஏதோ சத்தம் கேட்டுச்சு அவிய வந்துட்டாவலோன்னு நினைச்சேன்.
ஆனா சத்தம் வந்தது பாத்ரூம்ல இருந்து. கொஞ்ச நேரத்துல வந்திருவாவ நாம இப்போ என்ன செய்யணும்ன்னு யோசிச்சுகிட்டு கிடந்தேன். வித்யாக்கா சொன்ன எதையுமே நா காது கொடுத்து கேட்கவே இல்லையே… கால்ல எதுவும் விழுகணுமா…
‘இல்லையே இந்த கல்யாணி அப்படி எதுவும் செஞ்சதா சொல்லலையே… அன்னைக்கு அந்த நீலாக்கா வித்யாக்காகிட்ட அவியளோட முதலிரவு பத்தி கேட்டப்போ அக்கா கூட இப்படின்னு சொல்லலையே…’
‘நீலாக்காவும் எங்கக்காவும் என்னைய விரட்டிவிட்டு பேசிட்டு இருந்தாவ எதை செய்ய வேணாம்ன்னு சொல்லுதாவளோ நாம அதை தானே செய்வோம். நா அவிய பேசினதை ஒளிஞ்சு நின்னு கேட்டேன்…’
‘ரொம்ப பெருமை ஆனா இப்போ என்ன செய்யப் போறே…’ அப்படின்னு மனசாட்சி வேற கேள்வி கேக்க பதில் தெரியாமல் நா தான் முழிச்சேன்…’
நான் இதெல்லாம் யோசிச்சுட்டு இருந்ததுல அவிய பாத்ரூம்ல இருந்து வெளிய வந்ததை கவனிக்கவே இல்லை, அவிய கதவை தாள் போடும் போது தான் பாத்தேன்.
வெளிய அக்கா குரல் கேட்கவுமே நினைச்சேன், அவ இப்போ உள்ள வரப்போறான்னு.
எனக்குமே இப்போ எப்படி ரியாக்ட் பண்ணன்னு தெரியலை. அவ என்னைப் பார்த்து என்ன பண்ணுவான்னும் புரியலை.
அவ வரும் போது நாம இங்க இல்லாம இருந்தா அவ கொஞ்சம் ப்ரீயா உள்ள வருவான்னு தோணிச்சு. நேரா ரெஸ்ட் ரூம்க்கு போயிட்டேன்.
உள்ள போய் சின்னதா ஒரு குளியல் போட்டு பத்து நிமிஷம் கழிச்சு நிதானமா நான் வெளிய வர்றேன், வள்ளிக்கண்ணு கட்டில்ல உட்கார்ந்து சத்தமா பேசிட்டு இருந்தா.
பர்ஸ்ட் நைட்ல என்ன பண்ணணும்ன்னு கால்ல விழணுமா இப்படியெல்லாம் பேசிட்டு இருந்தா, அவங்கக்கா என்ன பண்ணாங்கன்னு எல்லாம் அவளா சத்தமா முணுமுணுத்துட்டு இருந்தா எனக்கு சிரிப்பு தாங்கலை. சிரிச்சா சத்தம் கேட்டு ஷேமா பீல் பண்ணுவாளேன்னு வாயை மூடி சிரிச்சுக்கிட்டேன்.
இன்னும் என்னென்ன யோசிப்பாளோன்னு தெரியலை, நாம வந்ததா காட்டிக்குவோம்ன்னு ஏற்கனவே நான் மூடின கதவை திறந்து இன்னும் அழுத்தமாய் சத்தமா இழுத்து தாள் போட்டேன். அந்த சத்தம் கேட்டு என்னை திரும்பி பார்த்தா… அவள் இப்பொழுது எழுந்து நிற்க நான் அருகே சென்றேன்.
என்னைக் கண்டதும் எழுந்து நின்றாள். “உட்காரு எதுக்கு எழுந்து நிக்கறே…”
சட்டென்று அமர்ந்தாள். சிறிது நேரம் அமைதியில் கழிந்தது. இருவருமே என்ன பேச என்று அமைதியாகவே இருந்தோம்.
“பீல் ப்ரீ…” என்று சொல்லி நானே பேச்சை ஆரம்பித்தேன்.
“ஹ்ம்ம்…”
என்னை பார்த்து பயப்படறியான்னு கேட்டேன்… அதுக்கு என்னைய பார்த்து முறைச்சா
“எதுக்கு முறைக்கிறே??”
“நீங்க என்ன சிங்கமா, புலியா… நான் பார்த்து பயப்பட…”
அவள் சொன்ன தினுசில் எனக்கு சிரிப்பு வந்தது சத்தம் போட்டு சிரித்தேன். “ஹா ஹா…”
“சிரிக்காதீங்க…”
அவளைப் பேச வைக்க தான் பேச்சு கொடுத்தேன், அவ இப்போ நார்மல் மோடுக்கு வந்திட்டான்னு தோணுச்சு அதான் “இப்போ ஓகேவாகிட்டியா…” என்றேன்.
“ஹ்ம்ம்…”
“அந்த புடவை உனக்கு நல்லா இருந்துச்சு…” என்று சொல்லி பேச்சை தொடர்ந்தேன்.
“நிசமாவா, ஆனா நீங்க தான் என்னைய பாக்கவே இல்லையே…”
“யார் சொன்னா பார்க்கலைன்னு…”
“எப்போ பார்த்தீங்க, நா ரொம்ப ஆசையா உங்களுக்கு காமிக்கணும்ன்னு வந்தேன்… நீங்க என்னைய பாக்கவே இல்லையே…” என்று சொல்லும் போது அதில் கொஞ்சம் வருத்தம் தெரிந்தது. என்னைய அவளும் எதிர்பார்த்திட்டு இருந்தான்னு கேட்கும் போதே ஜில்லுன்னு இருந்துச்சுங்க…
“நானும் நீ வருவேன்னு பார்க்கலாம்ன்னு பார்த்தேன், இந்த ஐயர் இருக்காரே அவரு தான் என்னை மூட் ஆப் பண்ணிட்டாரு. முதல்ல இங்க பாருங்க, அப்புறம் அங்க பாருங்கன்னு சொல்லிட்டாரு…”
“ரொம்ப அசிங்கமா போச்சு. அதான் நீ வரும் போது நான் பார்க்கலை. ஆனாலும் அப்புறம் நான் திரும்பி பார்த்தேன், நீ தான் என்னை எப்பவும் போல கண்டுக்கவேயில்லை…” என்று நான் இப்போது வருத்தமாய் சொன்னேன்.
“உங்க வைப் என்ன படிச்சிருக்காங்கன்னு யாராச்சும் கேட்டா என்ன சொல்லுவிய??”
“அதெல்லாம் உங்களுக்கு எதுக்குன்னு சொல்லுவேன்…”
“படிப்புங்கறது அறிவை வளர்த்துக்க தான், வாழ்க்கைக்கு அறிவு எப்படி முக்கியமோ அது போல தான் அனுபவமும் முக்கியம்…”
“நீ கொஞ்சம் சைல்டிஷ்ஷா இருக்கே… உனக்கு தோணினதை படபடன்னு பேசுறே… உன்கிட்ட எந்த ஒளிவு மறைவும் இல்லை… அது தான் எனக்கு பிடிச்சிருக்கு…”
“உனக்கு என்னை பிடிச்சிருக்கா??”
“முதல்ல கேட்டிருந்தா தெரியாதுன்னு சொல்லியிருப்பேன். இல்லைன்னு கூட சொல்லியிருக்க சான்ஸ் இருக்கு… இப்போ அப்படி சொல்ல மாட்டேன்…”
“ஏன் அப்படி??”
“ஏன்னா எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு…” என்று அவள் சொல்லிய போது ஒரு ஆண் மகனாய், கணவனாய் லேசாய் ஒரு கர்வம் வந்தது எனக்கு.
“இதை நான் எதிர்ப்பார்க்கலை…”
“ஏன்??”
“நீ எப்பவும் பெரிசா எந்த ரெஸ்பான்ஸ் எனக்கு செஞ்சதில்லை. உனக்கு என்னை பிடிக்கும்ன்னு நான் நினைக்கலை…”
“உங்களை எப்படி பிடிக்காம போவும்… நீங்க ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்கிய… நா ரொம்ப விளையாட்டுத்தனமா இருந்தாலும் என்னைய பொறுத்துட்டு பேசாம இருக்கிய…”
“உங்ககிட்ட மனசுல நினைச்சதை எல்லாம் சொல்ல முடியுது… இப்போதைக்கு இவ்வளவு தான், ஹான் இன்னொன்னும் இருக்கு…”
“என்ன அது…”
“இந்த ஒத்தநாடி உங்களுக்கு அழகா இருக்கு…” என்று சொல்லி அதில் ஒற்றைவிரல் வைத்து அவள் பார்க்க எனக்கு குறுகுறுவென்றிருந்தது.
“ஒண்ணு சொல்லவா, தப்பா எடுத்துக்க மாட்டியே??”
“சொல்லுங்க…”
“உனக்கு படிக்கணும்ன்னு ஆசை இருந்தா, விருப்பம் இருந்தா… நீ தாராளமா படிக்கலாம்… நான் உன்னை வற்புறுத்தலை”
“எதுக்காக இப்படி சொல்றேன்னு உனக்கு தோணும். உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். உனக்கு நாம படிக்கலைன்னு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கு…”
“அதனால தான் யாராச்சும் உன்னை எதுவும் சொல்லிடுவாங்களோன்னு அவங்க கேக்க முன்னாடி நீயே உன்னைப் பத்தி சொல்லிடறே, மே பீ உன்னை நீயே கலாய்ச்சுட்டா வேற யாரும் எதுவும் பேச மாட்டாங்கன்னு கூட நீ நினைச்சு இருக்கலாம்…”
அவள் வாயே திறக்கவில்லை. நானே தொடர்ந்தேன். “நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். நீ படிச்சாலும் படிக்கலைன்னாலும் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு… எப்பவும் பிடிக்கும்…”
இயல்பா இருன்னு சொன்னாவ, ஹம்ம்ன்னு மட்டும் சொன்னேன். என்னைய பார்த்தா பயமா இருக்கான்னு அவிய கேக்க எனக்கு சிரிப்பு தான் வந்திச்சு.
நீங்க என்ன சிங்கமா, புலியா நா எதுக்கு பயப்படணும்ன்னு சொன்னேன்.
சிங்கம், புலிக்கு தான் பயப்படுவியான்னு கேட்டாவ, நா கரப்பான்பூச்சிக்கு தான் பயப்படுவேன், அது மீசையை வைச்சுட்டு என்னைய மிரட்டும் அப்படின்னு நா சொல்லவும் சிரிச்சுட்டாவ…
ச்சே… அசிங்கமா போச்சே, என்னைப் பத்தி நானே சொல்லி அசிங்கப்பட்டனே மொமென்ட்
மெதுவா புடவை உனக்கு நல்லா இருந்துச்சுன்னு சொன்னாவ… எனக்கு ஆச்சரியமா போச்சு, நா வரும் போது அவிய என்னைய சரியாவே பாக்கலைன்னு நானே கோபத்திலே இருந்தேன்ல
அவிய நல்லாயிருந்துச்சுன்னு சொல்லவும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நீங்க தான் என்னைய கவனிக்கவே இல்லையேன்னு சொன்னேன், அவிய ஐயர் ஏதோ சொன்னாரு அதான் அப்படி இருந்தேன், அப்புறம் உன்னை பார்க்கத் தான் செஞ்சேன்னு சொன்னாவ.
அதெப்படி அவிய என்னைய வள்ளிக்கண்ணுன்னு கூப்பிட்டாவன்னு தெரிஞ்சுக்க கேட்டேன். அப்படி தான் எனக்கு கூப்பிடணும்ன்னு தோணிச்சுன்னு சொன்னாவோ.
நா ஆச்சி தான் அப்படி கூப்பிடுவாவன்னு சொன்னேன், அதான் கண்ணு கலங்குனியான்னு கேட்டாவ.
என்னையவே கவனிச்சுட்டு இருந்தாவ போல, ஒவ்வொரு விஷயமும் கவனிச்சு சொன்னாவ. எனக்கு எப்படி சொல்லன்னே தெரியலை. ஒரு இனம் புரியா சந்தோசம்.
அவியளை இப்போ ரொம்ப நெருக்கமா உணர்ந்தேன். என்னைய பிடிச்சி தான் கட்டிக்கிட்டியலான்னு கேட்டேன்.
கொஞ்சம் கூட யோசிக்காம் ஆமான்னு சொன்னாவ. நான் சத்தியமா இதை எதிர்ப்பார்க்கவேயில்லை. நா பொண்ணு பார்க்க வந்தப்போ அவ்வளவு சொல்லியும் உங்களுக்கு பிடிச்சுதான்னு கேட்டேன்.
நீ உண்மையை சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சுதுன்னு சொன்னாவ. நீ குழந்தைத்தனமா இருக்கே, மனசுல இருக்கறதை வெளிப்படையா பேசுறே அப்படி இப்படின்னு என்னென்னவோ சொன்னாவ…
எனக்கு அதெல்லாம் மண்டையில ஏறவே இல்லை. நா தான் நம்மையும் ஒருத்தருக்கு பிடிக்குதேன்னு சந்தோசத்துல பறந்திட்டு இருந்தனே.
உனக்கு என்னைய பிடிச்சிருக்கான்னு கேட்டாவ… நா பட்டுன்னு ஆமான்னு சொன்னேன். எனக்கு அவியளை பிடிச்சிருக்குன்னு நா தான் உங்ககிட்ட அப்போவே சொன்னேன்ல…
அவியளுக்கு நா சொன்னதை நம்ப முடியலை போல, நா விளக்கம் சொல்லவும் சந்தோசப்பட்டாவ.
நா விளக்கம் சொன்னதோட சும்மா இருந்திருக்கலாம்ல, அவிய தாடையில இருந்த அந்த ஒத்த நாடியை தொட்டு இது ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.
அவிய கொஞ்சம் நேரம் பேசாம ஆகிட்டாவ, எனக்குமே ஒரு மாதிரி ஆகிப்போச்சு. ரொம்பவும் ஓவரா தான் போறோமோன்னு.
அப்புறம் அவிய நீ ஏன் உன் படிப்பை தொடர கூடாதுன்னு சொன்னாவோ. நா எதுவுமே சொல்லலை, உனக்கு தாழ்வுமனப்பான்மை இருக்கு…
யாராச்சும் உன்னைய எதுவும் சொல்லிடுவாவலோன்னு நீயே உன்னைய பத்தி எல்லார்கிட்டயும் சொல்றே, அது எதுக்குன்னு கேட்டாவ.
அவிய சொன்னது உண்மை தான். ஆச்சி தவறினப்போ எனக்கு பரீட்சை நடந்திட்டு இருந்துச்சு. அதுனால என்னால படிப்புல கவனம் செலுத்த முடியலை.
அப்புறம் அம்மா திரும்பவும் ஊருக்கு கூட்டிட்டு வந்திட்டாவ, எனக்கு அப்போ தான் ஊர்ல இருந்த ஸ்கூல்ல செட்டாச்சு. மறுபடியும் இங்க ஸ்கூல்ல சேர்த்து எனக்கு எல்லாரோடவும் ஒத்து வரணுமே.
மறுபடியும் பத்தாவது பரீட்சையை எழுதணும் எனக்கு தோணலை. வீட்டில ரொம்ப வருத்தப்பட்டு சொன்னாவன்னு காசெல்லாம் கூட கட்டிட்டேன். ஆனா எனக்கு சுத்தமா படிக்கவே தோணலை. ஆச்சி ஞாபகமா வந்துச்சு.
முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டேன். ரொம்பவும் ஏசினாவ. அக்கா டிகிரி முடிக்கா நீ படிக்கலைன்னா எல்லாரும் கேப்பாவன்னு எவ்வளவோ சொன்னாவ… மத்தவிகளுக்காக நா படிக்கணுமா என்னால அது முடியாது.
எனக்காக தான் நான் படிக்கணும்ன்னு நினைச்சேன். எனக்கு எப்போ தோணுதோ அப்போ பார்த்துக்கலாம்ன்னு அப்போ விட்டது தான். கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவை வீட்டில எல்லாரும் வருத்தப்படுராவலேன்னு எழுதினேன், பெயிலாகிட்டேன்.
வீட்டுக்கு வர்றவுக போறவுக எல்லாம் கேலியா பேசுவாவ… அவிய புள்ளைக ஸ்கூல் பர்ஸ்ட் கிளாஸ் பர்ட்ஸ்ன்னு சொல்லி என்னைய வெறுப்பேத்துவாவ நா அதெல்லாம் கண்டுக்கிடவே மாட்டேன்.
நீங்க என்ன என்னைய கேலி பேசுறது நானே என்னைய கேலி பேசிக்கிடுவேன்னு முடிவு பண்ணேன். அதுக்கு பொறவு அவிய எல்லாம் வாயை மூடிக்கிட்டாவ.
இவிய அதையே சொல்லவும் எப்படி கண்டுப்பிடிச்சாவன்னு தான் எனக்கு தோணிச்சு. உனக்காக நீ படின்னு அவிய சொன்னது மனசுல நின்னிச்சு.
நேரமாச்சு தூங்கலாமான்னு அவிய கேக்குற வரை நானும் மணியை பாக்கவேயில்லை.
தூங்கணுமான்னு திரு திருன்னு முழிச்சேன். சினிமால வர்ற மாதிரி அடுத்து என்ன செய்வாவளோன்னு நா பாக்க இன்னக்கே எதுவும் நடக்க போறதில்லை. நீ தூங்கு எனக்கு டயர்டா இருக்குன்னு சொல்லிட்டு படுத்துட்டாவ.
அப்பாடி கிரேட் எஸ்கேப்
ஆமா இப்போ நா எங்க தூங்க எனக்கு அடுத்த சந்தேகம்.
நா கீழ படுக்கவான்னு கேட்டேன். பின்ன அவிய பக்கத்துல போய் படுக்கவா முடியும்…
அவிய நா அப்படி சொல்லவும் எதுக்குன்னு கேட்டுட்டு எழுந்து உட்கார்ந்திட்டாவ. கீழே படுக்க வேணாம் மேலவே படுன்னு சொல்லிட்டு இதுக்கெல்லாம் பழகிக்கோன்னு சொன்னாவ.
எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. அண்ணன் தம்பிக கூட பிறந்திருந்தா கூட எனக்கு பெரிசா தெரிஞ்ச்சு இருந்திருக்காது போல, சின்ன வயசுல இருந்து நா அம்மா, அக்கா கூட தான் தூங்குவேன்.
அக்கா கல்யாணத்துக்கு பிறகு தான் நா தனியா தூங்குறது எல்லாம். இவிய கூட ஒண்ணா ஒரே கட்டில்ல எப்படி தூங்க முடியும்.
அதை அவியகிட்ட சொல்லணும்ன்னு நினைச்சு நா சொதப்பிட்டேன். எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, யாரும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்கல்லன்னு கேட்டு வைச்சுட்டேன். ஆத்தி அவியளுக்கு மூக்குக்கு மேல கோவம் வந்திருச்சு. நா உன் புருஷன்டின்னு சொன்னாவ.
அதுவரைக்கும் பயந்துகிட்டு கிடந்த எனக்கு அந்த வார்த்தை உள்ளுக்குள்ள என்னவோ செஞ்சுச்சு. என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் பாட்டு ஞாபகம் வந்துச்சா பாடிட்டே தூங்கிட்டேன்.
சத்தம் போட்டு பாடிட்டேன் போல, மறுநா காலையில உன் புருஷன் உனக்கு மட்டும் தான்னு சொல்லி அவுக பாடவும் நா ஏன் அங்க இருக்கேன் ஓடியே போயிட்டேன்.