இவிய என்னைய இங்க கூட்டிட்டு வந்தா அதுக்கு நா என்ன செய்ய… இவிய பேசப்பேச அம்மா என்னைய தான் மனசுக்குள்ள ஏசுதாவ அது எனக்கு நல்லாவே தெரியுது.
அம்மாவே இவியட்ட இவ ஏதும் கோட்டித்தனமா பேசிட்டாளான்னு கேக்காவ. நா எங்க போய் முட்டிக்கன்னு சொல்லுங்க.
இவியளுக்கு கோவம் வந்திட்டு போல அது நல்லாவே எனக்கு தெரியுது. இத்தனை நாள்ல இவியளோட கோபம் எப்படியிருக்கும்ன்னு எனக்கு தெரியாம இருக்குமா.
திட்டுற மாதிரியும் இருக்காது, ஆனா என்ன சொல்லணுமோ அதை நமக்கு பேச்சுலவே புரிய வைச்சுடுவாவ.
அந்த குரலே நமக்கு எப்படியோ இருக்கும். எனக்கு புரிஞ்சுது எங்கம்மாக்கு புரியலை. நீங்க இவ்வளவு சங்கடப்பட்டா நாங்க இன்னைக்கு ஊருக்கு கிளம்புதோம்ன்னு இவிய சொல்லவும் அம்மா கப்சிப்.
உங்களுக்கு இப்போ புரிஞ்சு இருக்குமே நா ஏன் இப்படி பேசுதேன்னு. அம்மாகிட்ட இருந்து கத்துக்கிட்டது தான், பேசிட்டு அப்புறம் ஏச்சு வாங்கறது தான் எங்க வேலையே.
இவிய இன்னும் என்ட பேசலைன்னு எனக்கு அழுகை முட்டிக்கிட்டு நிக்கு. இதுல அந்த ரூம்ல இவியளோட நானும் எங்க இருக்க, எனக்கு ஒண்ணும் சொல்ல முடியலை.
என்னை கூப்பிட்டாவ, பக்கத்துல வரச்சொன்னாவ. நானும் போனேன். என்னாச்சு உங்கம்மா ஏசுனாவலான்னு கேட்டாவ.
இல்லைன்னு தலையாட்டினேன், அப்புறம் என்னாச்சுன்னு கேட்டாவ, நீங்க தான் என்னோட பேசலைன்னு சொன்னேன்.
அதை சொல்லும் போது எனக்கு கண்ணீர் வந்திட்டு. நான் பேச மாட்டேன்னு நீயா நினைச்சுக்குவியான்னு கேக்காவ. வேற எப்படி நினைப்பாவலாம். இவிய என்ட பேசி ஒரு வாரம் மேல ஆகுது.
என்னென்னவோ பேசினாவ. அவியளுக்கும் என் மேல கோவம் தான்னு சொன்னாவ. நானும் கூட பேசினா வார்த்தையை விட்டிருவேன்னு தான் பேசலைன்னு சொன்னாவ.
அம்மாவும் எதுவும் கேக்கலை. அப்பா கேக்க விட்டிருக்க மாட்டாவன்னு தோணிச்சு.
இவிய வீட்டுக்கு ஒன்பது மணி போல ரீச் ஆகிட்டேன் போன் பண்ணாவ. அன்னைக்கு நைட் என்னால தூங்கவே முடியலை.
எத்தனையோ நாள் இதே ரூம்ல நா தனியா தான் படுத்து இருந்தேன். அப்போ எல்லாம் எனக்கு இப்படி தோணினதே இல்லை.
இன்னைக்கு இது என் இடமில்லைன்னு தோணிச்சு. இந்த வீடு எனக்கு அந்நியமா இருந்துச்சு. என் கல்யாணத்துக்கு முன்னாடி அக்கா இங்க வந்திருந்தப்போ நா அவளை கேலி பண்ணியிருக்கேன்.
அத்தான் இல்லாதது என்னவோ போல இருக்குன்னு அக்கா சொல்லுவா. எங்க வீட்டில தூங்குன மாதிரி இல்லைன்னு சொல்லுவா.
அப்போலாம் நா அவளை பார்த்து சிரிச்சிருக்கேன். நம்ம வீடு இல்லையா அப்போன்னு சொல்லி வம்பு பண்ணியிருக்கேன்.
அக்காவோட அன்னைக்கு மனநிலையில தான் இன்னைக்கு நா இருக்கேன். அவிய இல்லாம இருக்க முடியலை. அவிய இருந்தாலும் இல்லைன்னாலும் இது என் வீடு இல்லைன்னு எனக்கும் தோணுது.
சென்னையில எங்க வீட்டுல எங்க ரூம்ல இருந்தது தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது. அவிய விசாகப்பட்டினம் போன அந்த நாள்ல எனக்கு கஷ்டமா இருந்தாலும் நானும் அவியளும் இருந்த ரூம்ன்னு அங்கவே தான் கிடப்பேன்.
வேலை முடியவும் முதல்ல ரூமுக்கு தான் வருவேன். அவியளோட இருக்கற ஒரு நினைப்பு எப்பவும் அந்த ரூம்ல கிடைச்சுது அப்போ.
நா உடனே ஊருக்கு போகணும்ன்னு மனசு தவிக்குது. அவிய போகும் போது சொன்னது தான் நினைவுக்கு வருது.
ஒரு மாசமாச்சும் இங்க இருந்திட்டு அப்புறம் ஊருக்கு கிளம்பிறணும் இது தான் இப்போதைக்கு என மனசுக்குள்ள ஓடுது.
“நீ கூட தான்ட்டி இந்த பக்கம் வந்திருக்கா, நா கேக்க வேண்டியது நீ கேக்க… மெட்ராஸ்காரிக்கு இப்போ எங்க என்ன திடீர் விசிட்டு… ஒரு போன் கூட போடலை நீ வந்திருக்கன்னு”
“நா என்னைக்கு மெட்ராஸ்காரி ஆனேன்??”
“அது ஆகி ரொம்ப நாளாச்சு, நா கேட்டதுக்கு பதில் சொல்லுட்டி”
“சொல்றேன். நீ சொல்லு திடிர்னு எல்லாம் நீ இங்க வரமாட்டியே”
“அம்மா வீட்டுக்கு வந்தேன். உன் மாமன் தான் கொண்டு வந்து விட்டாவ, மேலுக்கு முடியலை எனக்கு…”
“என்னாச்சுட்டின்னு…” நா கேக்க அவ வெக்கப்பட்டா.
“என்னட்டி செய்யுத சகிக்கலைன்னு…” சொன்னேன்.
கடுப்பாகி தலையணை எடுத்து மேல வீசினா. “மேலுக்கு முடியலைங்கேன் என்னன்னு கேட்டியாட்டி??”
“அதை கேட்டதுக்கு தான் நீ என்னவோ செய்தியே, அதான்ட்டி எனக்கு பயந்து வருது…”
“போட்டி நா சொல்ல மாட்டேன்…”
“சரி சரி என் கண்ணுல சொல்லுட்டின்னு…” கேட்டேன்.
“மூணு மாசம்…”
“என்ன மூணு மாசம்.. ஓ!! அதுவாட்டி??”
“ஹ்ம்ம் ஆமா…”
“சந்தோசமா இருக்குட்டின்னு…” சொல்லி அவளை கட்டிக்கிட்டேன்.
“நீ தானேட்டி எனக்கு பிரண்டு உன்கிட்ட தானே நா ப்ரீயா பேச முடியும்”
“சரி வர்றேன்…”
“அம்மாகிட்ட எதுவும் சொல்லிட்டு இருக்காத. எனக்கு தெரியும் அம்மா தான் உன்னைய இங்க வரவைச்சுச்சுன்னு”
“எப்படிட்டி தெரியும்??”
“அதை நா பொறவு சொல்றேன் நீ சொல்லு அம்மா என்னன்னு சொல்லி உன்னைய இங்க வர வைச்சாவ”
“உங்க மாமன் என்னைய கூட்டிட்டு வந்து விட்டது தான் நிஜம். நேத்து தான் பெரியம்மா வீட்டுக்கு வந்திச்சு. உன்னைய பத்தி தான் விசனப்பட்டு கிடந்துச்சு…”
“உன் மாமியா பெரியம்மாட்ட பேசியிருப்பாவ போல. பட்டும்படாம பேசுனாவ போல அதேன் பெரியம்மாவுக்கு சங்கடம். அவசரப்பட்டுட்டமோ, அவ அப்போவே வேணாம்ன்னு தான் சொன்னா, நானும் அவியளும் சேர்ந்து தான் அவசரப்பட்டோம்ன்னு…”
“எனக்கே பாக்க கஷ்டமா போச்சுட்டி?? நா வந்து உன்கிட்ட பேசுதேன்னு நா தான் சொன்னேன்…”
“சரி நீ நைட் வா நாம பேசுவோம்…”
“சரி நா வர்றேன்…”
“இங்க வந்து சாப்பிடுட்டி உனக்கு பிடிச்ச உளுந்தன்சோறு கறிக்குழம்பும் செஞ்சு வைக்கேன்…”
“என் செல்ல வள்ளிக்கண்ணு…”
“அப்படி கூப்பிடாதட்டி??”
“ஏன்??”
“உங்க அத்தான் அப்படி தான் என்னைய கூப்பிடுவாவ…”
“பார்றா… சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும்ன்னு…” சொல்லிட்டு அவ கிளம்பிட்டா, நானும் கிளம்பிட்டேன். நைட் அவளுக்கு பிடிச்சதை செஞ்சு தர்றேன்னு சொன்னேன்ல அதை செய்யத்தான்.