11
“ஹலோ… வெல்கம் டு சென்னைன்னு…” யாரோ ஒருத்தர் எங்க பக்கத்துல வந்து சொல்ல நான் பயந்து பின்னாடி நகர்ந்து என் மாமியார் மேல இடிச்சுக்கிட்டேன்.
“டேய் நீ இங்க என்னடா பண்ணுறேன்னு??” அவிய கேட்கவும் தான் எனக்கு புரிஞ்சுச்சு, அவியளுக்கு தெரிஞ்சவுக போலன்னு.
“அண்ணின்னு” அவிய என்னைய கூப்பிடணும் எனக்கு பொசுக்குன்னு போச்சு.
எனக்கு அவியளை விட நிறைய வயசு கம்மியதேன் இருக்கும், என்னைய போய் இப்படி கூப்பிடுதாவன்னு நா பாக்க இவிய என் பக்கத்துல வந்தாவ.
“என்னடா ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறியான்னு??” இவிய அவியகிட்ட கேட்க “இல்லை இப்போ தான் வந்தேன்னு…” அவிய சொன்னாவ.
நா அவிய ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி பாக்குறதை பார்த்திட்டு இவிய அவியகிட்ட “என்னோட வைப் வள்ளின்னு” அறிமுகப்படுத்துனாவ.
நா அவியளை பார்த்து லேசா சிரிச்சேன். இவிய என்ட “என்னோட பிரண்டு இனியன்னு சொன்னாவ…”
“அப்போ ஏன் நம்ம கல்யாணத்துக்கு இவிய வரலை…”
“நான் கூப்பிடலை… இவனை மட்டும் கூப்பிட்டா எல்லாரும் சண்டைக்கு வருவாங்க… நம்ம ரிஷப்ஷன் தான் இந்த சண்டே நடக்கப் போகுதுல அதுக்கு எல்லாரும் வருவாங்க…”
“இவனுக்கு போன் பண்ணி நான் சொல்லிட்டேன். தவிர ஷ்ரவன் இவனுக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்ணிட்டான் நம்ம மேரேஜைன்னு…” சொன்னாவ.
அவிய பிரண்டு வண்டி எடுத்திட்டு வந்திருந்தாவ… வீட்டுக்கு வந்தாச்சு… காலனி மாதிரி இருந்துச்சு. நெறைய வீடுங்க உள்ள…
மேல ஒரு வீடு எதிர்க்க இன்னொரு வீடு அப்புறம் முதல் மாடியில இதே போல, அதுக்கு பொறவு மொட்டை மாடி போல…
நா சுத்தி சுத்தி பார்த்திட்டே வந்தேன். அத்தை எங்களை வெளியவே நிக்க சொன்னாவ, இவிய பிரண்டு அம்மா கையில ஆரத்தி தட்டோட வந்தாவ, மதினி தான் ஆரத்தி எடுத்து உள்ள கூப்பிட்டாவ.
அவங்க இனியனோட அம்மான்னு இவிய என்ட்ட சொன்னாவ. பார்த்தாலே தெரியுதுன்னேன்…
இவிய என்ட எப்படின்னாவ?? அதான் முக ஒத்துமை தெரியுதேன்னு சொன்னேன்.
உள்ள வான்னு கூப்பிட்டு போனாவ, நல்ல பெரிய வீடு தான் போல… பெரிய வராந்தா இருந்துச்சு கீழே ரெண்டு ரூம் இருந்துச்சு, அப்புறம் அடுப்படி அவ்வளவு தான் இருந்துச்சு. வீட்டுல இருந்தே மேல படி இருந்துச்சு.
மேல வேற வீடு இருக்கு போலன்னு நான் நினைச்சுட்டு இருக்க அது முழுக்க ஒரே வீடு போல, இவிய என்னைய ரூமுக்கு கூட்டிட்டு போனவ.
“நீங்க போய் குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்க… அப்புறம் வந்து ரெஸ்ட் எடுங்கன்னு” அத்தை சொன்னாவ.
இவிய என்னைய மாடிக்கு தான் கூட்டிட்டு போனவ “ஏங்க கீழே தான் ரூமு இருக்கேன்னு சொன்னேன்…”
“ஒண்ணு அம்மா அப்பாவோடது, இன்னொன்னு அக்கா வந்தா தங்குவான்னு சொன்னாவ…”
“இவ்வளவு பெரிய வீடுமா உங்கது…”
“நம்மதுன்னு…” என்னைய திருத்துனாவ.
இவியளை கல்யாணம் பண்ணதும் அந்த வீடு என்னோடதா ஆகிடுமா… இப்படி தான் ஒரு ஒரு பொண்ணுக்கும் பொழைப்பே மாறுது போலன்னு நினைச்சுட்டு இவியளை பாத்து சரின்னேன்.
மாடியில வலது பக்கம் இருந்த ரூமுக்குள்ள கூட்டிட்டு போனவ “இது நம்ம ரூம்ன்னு…” அழுத்தி சொன்னாவ.
“நீ போய் குளிச்சுட்டு வா…”
நா குளிச்சுட்டு வெளிய வரவும் இவிய அங்க இல்லை, எங்க போயிருப்பாவன்னு நா வெளிய வந்து பார்க்க ஆளை காணோம்.
இந்த வீடு எனக்கு புதுசுல என்னைய இப்படி தனியா விட்டு போகலாமா இவிய (அன்னைக்கு நீயும் அவனை இப்படி தானே உன் வீட்டில விட்டுட்டு போனே)
அதெல்லாம் அன்னைக்கு அது வேற… பேசாம கீழே போய் பாப்போமா…
நைட்டியோட எப்படி போகன்னு கதவை அடைச்சிட்டு புடவை கட்டி முடிச்சேன்…
“என்ன முடிஞ்சுதான்னு” என் பின்னாடி இருந்து இவிய குரல் கேக்கு…
“எங்க போயிருந்திய??”
“இங்க தான் பால்கனில நின்னுட்டு இருந்தேன்… நீ என்னைய வெளிய போய் தேடினது எல்லாம் பார்த்திட்டு தான் இருந்தேன்…”
“என்னது??”
“நீ புடவை கட்டினதை எல்லாம் நான் பார்க்கலைன்னு…” கண்ணை சிமிட்டினாவ.
எனக்கு வெக்கமா போச்சு, அவியளை நிமிந்து பாக்கவேயில்லை நா.
நா கீழே போறேன்…
“நானும் குளிச்சுட்டு வர்றேன், சேர்ந்தே போவோம்… அது வரைக்கும் ரெஸ்ட் எடுன்னு சொன்னாவ…”
“ஹ்ம்ம்…”
அவிய குளிச்சுட்டு வாறதுக்குள்ள நா தலையை சீவி பின்னல் போட்டேன். கீழே போய் சாப்பிட்டு மறுபடியும் மேல வந்தோம்.
ரயில்ல வந்த அலுப்பு எல்லாருக்குமே இருந்துச்சு, பேசாம படுத்து தூங்கியாச்சு.
அவிய வீடு எனக்கு இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா பழக ஆரம்பிக்கு…
அவியளுக்கும் எனக்கும் முன்னைவிட இப்போ கொஞ்சம் பேச்சு வார்த்தை கூடிச்சு… அத்தை, மாமா கூட எல்லாம் பேச ஆரம்பிச்சேன்.
அத்தை தான் அப்பப்போ ஏதாச்சும் அட்வைஸ் பண்ணுறா போல பேசுதாவ, எனக்கு தான் அதெல்லாம் எப்பவும் ஒத்து போகாதே…
வழக்கம் போல அதெல்லாம் காதில நா வாங்கவே இல்லை… நாளைக்கு எங்கம்மா அப்பா, அக்கா, அத்தான்லாம் வாராவ என்னைப் பாக்க…
எங்க ரிஷப்ஷன் வேற இங்க நடக்க போகுதுல்ல அதுக்காவும் தான் வாராவ. எனக்கு எந்த சீரும் செய்ய வேணாம்ன்னு இவிய வீட்டுல சொல்லிட்டாவ, அதனால அப்பாவும் அம்மாவும் எங்க ரெண்டு பேரு பேருலயும் பேங்க்ல அமௌன்ட் டெபாசிட் பண்ணிட்டாவ.
பீரோவும் கட்டிலும் மட்டும் கண்டிப்பா கொடுப்போம்ன்னு சொல்லிட்டாவ, நாளைக்கு வந்ததும் கடைக்கு போவணும்ன்னு நேத்து போன்ல பேசும் போது அம்மா சொன்னாவ.
எங்களுக்குள்ள எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. ரிஷப்ஷன் முடிஞ்சுது. அப்புறம் அவிய வேலைக்கு போக இல்லை.
எனக்கு ரொம்ப சந்தேகம் இவிய வேலைக்கு எப்போ தான் போவாவன்னு. ஒரு நாள் நா அதை அவியட்ட கேட்டேன். என்னைப் பாத்து சிரிச்சாவ.