சிபியின் நாட்கள் வேகமாக கழிய, அன்று கல்லூரி வாசலில் இன்பனை கண்டதோடு சரி. அதன் பின்னர் அந்த கல்லூரி வளாகத்தில் ஒருமுறை கூட கண்ணில்படவே இல்லை அவன். அவன் சொன்னது போலவே, யாதவ்வின் செயலை தன் அன்னையிடம் அப்படியே அவள் ஒப்பித்து விட்டிருக்க, விஷயம் ஞானத்தின் காதில் போடப்பட்டிருந்தது.
அவர் யாதவை கண்டித்து இருக்க, அதன்பின்பு அவளிடம் எந்த வம்பும் வைத்துக் கொள்வதில்லை அவன். அவனையும் பார்த்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேல் ஆகி இருக்க, சற்றே நிம்மதியாக தன் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருந்தாள் சிபி..
என்னதான் மனம் படிப்பில் ஆழ்ந்து போனாலும், அவ்வபோது இன்பனின் நினைவும் மெல்ல எட்டி பார்க்கவே செய்தது அவளுக்கு. ஆனால், அவள் மனதில் நிச்சயம் கள்ளம் ஏதும் இல்லை அந்த சமயம். அன்று அவன் செய்த உதவிக்கு வார்த்தையில் கூட நன்றி உரைக்காதது பெரிய குற்றமாக தோன்ற, அதன் பொருட்டே அவனை தேடி கொண்டிருந்தாள் அவள்.
ஆனால், அதே சமயம் இன்பன் தன் தொழில் காரணமாக பெங்களூருவுக்கு சென்று விட்டிருக்க, அவள் தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் அவளின் இரண்டாம் வருடத்தின் முதல் செமெஸ்டர் தொடங்கி இருக்க, தேர்வுக்கு முன்னதாக சில நாட்கள் விடுப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது அவர்களுக்கு.
வழக்கமாக இந்த விடுமுறை நாட்களில் கல்லூரி நூலகம் திறந்தே இருக்கும். சிபியும், அவள் நண்பர்களும் சேர்ந்தே படிப்பது வழக்கமாக இருக்க, விடுமுறை நாட்களிலும் பெரும்பாலும் கல்லூரிக்கு வந்து விடுவர் ஏழு பேரும்.
இந்த முறையும் அதே போல் அவர்கள் கல்லூரிக்கு வந்துவிட, கல்லூரி மைதானத்தில் இருந்த ஒரு மரத்தடியில் தங்கள் கடையை பரப்பி இருந்தனர். சிபி மகேஷ் கேட்ட ஏதோ ஒரு சந்தேகத்தை தீர்த்து வைத்தவள், மீண்டும் தன் கையில் இருந்த புத்தகத்தில் கவனமாக, அவளை திசை திருப்புவது போல் அவர்களை கடந்து சென்றது அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்.
அந்த அதிநவீன கார் கல்லூரி முதல்வர் அலுவகத்தின் வாசலில் நிற்க, அதிலிருந்து இறங்கியது சாட்சாத் இன்பன் தான். இவர்கள் அமர்ந்திருந்த இடமும் அந்த கட்டிடத்திற்கு அருகிலேயே இருக்க, அவனும் இவர்களை பார்த்திருக்க வாய்ப்புகள் அதிகம் தான். ஆனாலும் கண்டுகொள்ளாதது போலவே நடந்தான் அவன்.
அவனிடம் எப்படியும் நன்றி சொல்லிவிட வேண்டும் என்று சிபி காத்திருக்க, அன்று நடந்த விஷயங்கள் அவளது நண்பர்களுக்கும் தெரிந்தே இருந்ததால் அவர்களிடம் சொல்லிவிட்டு அவன் கார் அருகில் வந்து அவள் நிற்க , அவன் வெளியே வர வெகுநேரம் ஆனது.
அதில் நொந்து போனவளாக அவள் அங்கிருந்த கல்தடுப்பில் அமர்ந்து விட, அவளை கடந்து தான் இன்பன் செல்ல வேண்டும் என்பதால் சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் அவள். இன்பன் நீண்ட நேரம் கழித்து வெளியே வர, அவனை கண்டதும் சட்டென எழுந்து நின்றாள் சிபி.
இன்பன் கேள்வியாக அவளை பார்த்துக் கொண்டே வந்தவன் அவளை நெருங்கியதும் ஒரு நிமிடம் நின்று “என்ன” என்பது போல் தன் புருவங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஏற்றி இறக்க, “என்ன செய்றாரு இவரு..” என்று ஆவென பார்த்து இருந்தாள் அவள்.
இன்பன் தன் வசீகரமான புன்னகையுடன் “சிபி..” என்று அவளை அழைக்க, சற்றே தெளிந்து அவன் முகத்தை பார்த்தவள் “சார்..” என்று திக்கி நிற்க
“ம்ம்.. என்ன.. எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க..” என்று எடுத்து கொடுக்க
“அது.. சாரி.. இல்ல தேங்க்ஸ்.. உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.” என்று அப்போதும் சிறு படபடப்புடன் அவள் கூற
“எதுக்கு தேங்க்ஸ்..” என்று விளையாட்டாகவே கேட்டான் இன்பன்.
“அன்னிக்கு பஸ் ஸ்டாப்ல ஹெல்ப் பண்ணதுக்கு..” என்று தெளிவாக அவள் கூறி விட
“ஓஹ்.. ஓகே.. வீட்ல சொல்லிட்டியா…” என்று விசாரணையை தொடங்கினான்.
“சொல்லிட்டேன் சார். மாமா அவனை கண்டிச்சுட்டாங்க.. இனி இப்படி பண்ணமாட்டான் சார்..” என்று அவள் யாதவுக்கு சான்றிதழ் கொடுக்க, ஏனோ இன்பனின் மனம் அவள் சொல்வதை ஏற்கவில்லை. அந்த யாதவ் இவளை விடமாட்டான் என்று தோன்றியது இன்பனுக்கு.
ஆனால், அதை அவளிடம் சொல்லி அச்சப்படுத்த விரும்பாமல், பேச்சை மாற்றி “காலேஜ் லீவு விட்டாச்சே.. இன்னிக்கு என்ன பண்ற இங்கே…” என்று அவன் கேட்க
“நான் என் பிரெண்ட்ஸ் கூட வந்தேன் சார்.. நாங்க எப்போவும் இங்கேதான் படிப்போம்…” என்று மரியாதையுடன் பவ்யமாக அவள் கூற
“இங்கே படிப்பிங்களா.. நான்கூட நீங்க எல்லாரும் தியேட்டர்ல தான் படிப்பிங்க ன்னு நினைச்சேனே..” என்று சிரிப்புடன் அவன் கேட்டு நிற்க
“ஐயோ… இவனுக்கு அதுவும் தெரிஞ்சி போச்சா..” என்று தான் வந்தது அவளுக்கு.. கண்களை உருட்டி முழித்தவள் “சார்.. உங்களுக்கு..” என்று பாவமாக பார்க்க
“இந்த மேடத்தோட லைப்ரரி கார்ட் என்கிட்டே தான் கிடைச்சுது…நாந்தான் பிரின்சிபால் கிட்ட கொடுத்தேன்..” என்று தகவலாக அவன் சொல்ல
“அடப்பாவி.. அந்த நல்லவன் நீதானாய்யா…” என்று அவள் பார்க்க
“மனசுக்குள்ள திட்டிட்டு இருக்கியா என்னை…” என்று சற்றே கூர்மையான குரலில் அவன் கேட்க, ஒரு நொடி முழித்தவள் அடுத்தநொடி வேகமாக தலையை மறுப்பாக அசைக்க, இன்பன் அவளின் செயலில் சத்தமாகவே சிரித்து விட்டான்.
சிபி பாவமாக பார்த்து நிற்க “என்ன திட்டின என்னை… ” என்று சிரிப்புடன் அவன் கேட்டு நிற்க, கெஞ்சலாக பார்த்தவள் மறுப்பாக மீண்டும் மண்டையை உருட்ட,கொஞ்சம் கொஞ்சமாக களவாடப்பட்டுக் கொண்டிருந்தது அவன் மனம்.
அவளுடனான அந்த நேரம் இனிமையாக கழிய, “ஓகே.. பொழைச்சு போ.. நெஸ்ட் டைம் என்னை பார்க்கிறப்போ என்னை திட்டின ன்னு சொல்லணும்..” என்று சிரிப்போடு கட்டளையிட்டவன் அதோடு அவளிடம் விடைபெற்று கிளம்பிவிட்டான் அன்று.
அதோடு அவள் கல்லூரி தேர்வுகள் முடியும் வரை அவளை எந்த வகையிலும் அவளை நெருங்க முயற்சிக்கவே இல்லை அவன். அவளின் குழந்தைத்தனம் அத்தனை அழகாக அவளுக்கு பொருந்தி போக, எக்காரணம் கொண்டும் அவள் அதை தொலைத்து விடுவதை விரும்பவே இல்லை அவன். அதனோடு கூடவே அவள் படிப்பும் பாதிக்ககூடாது என்பதில் அவன் தெளிவாக இருக்க, அவளின் தேர்வுகள் முடியும் வரை பொறுமையாக காத்திருந்தான்.
ஆனால், அவன் பொறுமைக்கு ஆயுள் குறைவாகவே இருக்க, இன்னும் இரண்டு ஆண்டுகள் எல்லாம் தன்னால் காத்திருக்க முடியாது என்பதும் அவனுக்கே புரிந்து விட, அவளிடம் தன் மனதை சொல்லி விடுவது என்று முடிவெடுத்துக் கொண்டவனுக்கு அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்பதும் யோசனையாகவே இருக்க, அதே யோசனையுடனே கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தான் அவன்
கல்லூரி முடியும் நேரம் வந்திருந்தவன் அவள் வருகைக்காக கல்லூரி வளாகத்திலேயே காத்திருக்க, அவன் எதிர்பாராத நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தார் கலையரசன். அவனுக்கு அப்போது தான் ஒன்றை தொட்டு ஒன்றாக தன் பாட்டி, எதிரில் நிற்பவரின் மகள், தன் தாய், தந்தை என்று அத்தனையும் நினைவுக்கு வர, கலையரசன் “என்ன மாப்பிளை இங்கே நிற்கிறீங்க…” என்று கேட்டு வைத்திருந்தார்.
அவர் மீது பெரிதாக மரியாதை இல்லாவிட்டாலும், “ஏன் மாமா இங்கே நின்னா என்ன??” என்று தன்மையாகவே கேட்டான்.
“அட என்ன மாப்பிளை.. ஏசி ரூம்ல உட்கார்றதை விட்டுட்டு இங்கே வெயில்ல நிற்கிறீங்களே ன்னு கேட்டேன்..” என்று அவர் உருக
“இங்கே காலேஜ் விஷயமா கொஞ்சம் பிளான் எல்லாம் இருக்கு. அதைத்தான் ஒர்கவுட் பண்ணி பார்த்திட்டு இருக்கேன்..” என்று கூறியதோடு முடித்துக் கொண்டவன் “ஓகே.. நீங்க பாருங்க..” என்றதோடு கிளம்பிவிட்டான். செல்லும் அவனையே வெறித்துக் கொண்டு நின்றிருந்தார் கலையரசன்.
என்றுமே அவரை ஒரு பொருட்டாக கூட மதித்ததில்லை இன்பன். அந்த குடும்பத்தில் அத்தனை பேரும் மாப்பிளை என்று அவரை தாங்க, இன்பன் ஒருவன் மட்டும் எப்போதுமே கொஞ்சம் கூட மதிக்கமாட்டான் அவரை. ஆனால் அவன் செயல்கள் மரியாதையாகவே இருப்பதால், அவனை குறை கூறவும் முடிவதே இல்லை அவரால்.
இப்போது தொழிலிலும் அவன் தலையீடு இருக்க, அவன் தந்தையை போல் இல்லாமல், அங்கேயும் அவரை குடைய ஆரம்பித்து இருந்தான் அவன். அவன் முழுதாக எதையும் தெரிந்து கொள்வதற்குள் அவனை தன் மாப்பிளையாக்கி விட வேண்டும் என்று முழு வீச்சுடன் செயல்பட்டு கொண்டிருந்தார் அவர்.
இன்பன் கல்லூரியில் இருந்து கிளம்பியவன் தங்களின் நட்சத்திர விடுதிக்கு வந்து சேர்ந்திருந்தான். மனம் முழுவதும் சிபியை குறித்த எண்ணங்கள் தான். எப்படி கலையரசனையும், தன் குடும்பத்தையும் மறந்தோம் என்று சிந்தனையில் இருந்தான் அவன்.
கலையரசன் காதிற்கு விஷயம் சென்று விட்டால், நிச்சயம் அது சிபியை பாதிக்கும் என்பது வரை புரிய, இவர்களுக்கு விஷயம் தெரிவதற்கு முன்பாக சிபியிடம் தன் காதலை குறைத்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான் அவன்.
இவர்களுக்கு தன் விஷயம் தெரியும் போது எதுவும் செய்ய இயலாத நிலையில் கலையரசனை நிற்க வைக்க நினைத்தவன் நினைத்தவன் அதற்கான வேலைகளையும் தொடங்கி இருந்தான். அந்த அலுவலக அறையோடு சேர்ந்திருந்த தன் ஓய்வறைக்கு வந்து கட்டிலில் விழுந்தவன் தன் மொபைலில் இருந்த சிபியின் அலைபேசி எண்ணை சில நொடிகள் பார்த்து இருக்க, என்ன தோன்றியதோ எதையும் யோசிக்காமல் அழைத்து விட்டிருந்தான் அவளுக்கு.
புது எண்ணாக இருக்கவும், எடுக்கலாமா?? வேண்டாமா?? என்ற யோசனையில் அவள் இருக்க, அழைப்பு முடிந்திருந்தது. இன்பனுக்கு அவள் எடுக்காதது சுன்னத்தை கொடுத்தாலும், அந்த நிமிடம் அவளிடம் பேசி விட வேண்டும் என்ற உந்துதலில் மீண்டும் அவளுக்கு அழைத்து விட்டிருந்தான்