மாப்பிள்ளை மருது பட்டுவேட்டியைக் கட்டிக்கொண்டிருக்க, “எனக்கும்.. எனக்கும்..” என இடையில் வந்து நின்றான் சிறுவன் அசோகவரதன்.
அசோக்கின் மகன். நந்தினி தான் கணவனின் பெயரையும் இணைத்து அசோகவரதன் எனப் பெயர் சூட்டினாள்.
குமரன், மருது, சோலை என மூவருமே வரதனின் மீது தனிப்பாசம் வைத்திருந்தனர். தந்தையில்லாத ஏக்கத்தை வர விடாது, தாங்கினர். எங்கு பார்த்தாலும் சட்டென அருகிலிருக்கும் கடையில் ஏதாவது வாங்கித் தந்திடுவர்.
பள்ளி வாகனத்தில் ஏற்றி விடுவதும் அழைத்து வருவதுமாகக் கவனித்துக் கொள்பவன் மருது.
தங்கள் பிள்ளைக்கும் தங்கள் வீட்டிற்குமாக வாங்கி வருதவை சோலையும் குமரனும் வரதனுக்குமாகச் சேர்த்து வாங்கி வந்துவிடுவர்.
விடுமுறை நாட்களில் சிலம்பம், சைக்கிள், நீச்சல் என சொல்லித்தருவதுமாக தங்களுடனே பாசமாக வைத்துக்கொள்வர்.
குமரனுக்கும் மருதுவுக்கும் இடையில் உரிமையான முறைப்போடு நின்று கொண்டிருந்தான் சிறுவன்.
கையில் சின்னதான ஸ்டிக்கர் பட்டு வேட்டியை வைத்துக்கொண்டு தனக்கு முதலில் கட்டிவிட வேண்டுமென்ற பிடிவாதமும் உரிமையும்.
“இப்போ வந்திடுவான்டா கண்ணா, மீனா அத்தை கூட்டிட்டு வந்துக்கிட்டே இருக்காங்க.. நீ போய் வாசல்ல பாரு அவிங்க வந்திடுவாங்க” என்க,
மறுநொடியே வண்டியோட்டுவதைப் போல் வெறும் கையைச் சுற்றுவிட்டு, தடதடவென ஓடினான் சிறுவன்.
“டேய் வரதா.. மெல்லப் பார்த்துப் போ..” என்ற மருதுவின் குரலுக்கெல்லாம் அவன் நிற்கவே இல்லை.
“சொல்றதைக் கேட்கிறதேயில்லை..” எனப் புலம்பலாக மருது மூச்சு விட, “அவன் அப்பனை மாதிரியே வரான்டா..” என இளநகையுடன் உரைத்தான் குமரன்.
சிரித்தபடியே இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்க, வாசலில் நின்றிருந்தான் அசோகவரதன்.
அதே நேரம், சரியாக அழகு மீனாள், மகன் சுரேந்தருடன் வர, பின்னே வந்தார் வேலுநாச்சி. சுரேந்தரைக் கண்டவுடன் கரம் பற்றிக்கொண்டு அசோகவரதன் அழைக்க, இருவருமாகக் குழந்தைகள் விளையாடும் இடம் நோக்கி ஓடியிருந்தனர்.
அசோக், குமரன் இருவருக்குமிடையில் இருந்த நட்பு, அதே பிணைப்பு மாறாது அவர்கள் பிள்ளைகளுக்குள்ளும் இருந்தது. இந்த விஷயத்தில் ஊரே மெச்சும் படியாக இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காது இருப்பார்கள்.
ஏதோ உள்ளுணர்வு உந்த, மீனா மேலே பார்க்க, சரியாக ஜன்னல் வழியாகப் பார்த்தபடி நின்றிருந்த குமரன் சட்டென அவளை நோக்கிக் கண் சிமிட்டி, சூப்பர் என்றும் சைகை செய்தான்.
குப்பென முகம் சிவக்க, விகிர்த்தவள், சுற்றும் முற்றும் பார்த்து யாருமில்லை என்றறிய முறைப்போடு சட்டென மண்டபத்திற்குள் நுழைந்து விட்டாள்.
மீனாவின் மனமோ, ‘கல்யாணமாகி எட்டு வருஷமாச்சி என்னவோ நேத்துத்தான் கல்யாணமான மாதிரி பார்க்கிறதைப் பாரு..’ எனச் செல்லமாகச் சிணுங்கியது.
ஒவ்வொரு நாளும் புதுமையான குமரனின் காதலில் கரைந்து போன மீனா பூரிப்பில் மேலும் அழகாகியிருந்தாள். அதிலும் உடலில் சற்று சதைப்பற்று ஏறிவிட, கன்னம் ஊதி அந்த வயதிற்கான வனப்பில் இருக்கும் மீனாவை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை குமரனுக்கு.
முகமே இளக, இதழில் அரும்பிய வெட்கப்புன்னகையோடு குமரன் திரும்ப, அதற்குள்ளாக தயாராகி நின்றிருந்த மருது, “நீங்க நடத்துங்க தலைவரே, நான் எதையும் பார்க்கலை..” எனக் கேலி செய்ய, “பார்த்து வைச்சிக்கோ மல்லுவேட்டி நாளைக்கு உனக்கும் யூஸ் ஆகும்ல..” எனக் குமரனும் கிண்டல் செய்தான்.
“ஆமாம்டா, எதுவும் ஒன்னுன்னா எங்களை மாதிரி அனுபவஸ்தனுங்கிட்ட கேட்டுக்கோ” என்றபடி கையில் மாலையோடு வந்தான் சோலை.
“யோவ்.. ஏன்யா நீ வேற, எல்லாம் தெரிஞ்சும் இவனோடு சேர்ந்து கிண்டல் பண்ணிக்கிட்டு?” என்றபடி திரும்பிக்கொண்டான் மருது.
ஆனால் மனதிற்குள்ளே ஆசை மத்தாப்புக்கள் எரிந்து மின்னியது உண்மையே!
“அதில்லை மருது.. குமரன் மட்டும் கஷ்டப்பட்டு புதுபுருஷங்கிற பட்டத்தை எட்டு வருஷமா சுமந்திருக்கான். இப்போத்தான் நீ வந்துட்டியே? இனி உனக்குத்தான். அதனால சீனியர்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோன்னு சொன்னேன்..” என்ற சோலை அப்போதும் விடாது மறைமுகமாகக் கேலி செய்துக் கொண்டே இருந்தான்.
“யோவ்.. தொழில் அதிபரே, எப்போயா தொழிலை மாத்துன?” என சிரிக்காது சீரியஸாக மருது கேட்க, புரியாது சோலை தலையைச் சொரிய, புரிந்துகொண்ட குமரன் பொங்கிச் சிரித்தான்.
அசோக்கின் திருமணத்திற்கு பின் நண்பர்கள் அனைவரும் மகிழ்வாகக் கூட, ஊரே கொண்டாட நிகழ்வது மருதுவின் திருமணம் தான்.
அதற்குள்ளாக நேரமாகிறதென தேவி அழைக்க, மருதுவின் கழுத்தில் மாலையிட்டு நண்பர்கள் இருவரும் அழைத்து வந்து மனையில் அமர்த்தினர்.
அதே வேளை, மறுபுறம் மணப்பெண்ணை மீனாவும் தேவியும் அழைத்து வந்து மருதுவின் அருகில் அமர்த்தினர்.
தன்னருகே பச்சைப்பட்டின் பளபளப்பை உணர்ந்த மருது திரும்பிப் பார்க்க, அருகில் அமர்த்தப்பட்ட நந்தினியும் இமைக்காது ஒரு நொடி அவனைத் தான் பார்த்தாள்.
மறுநொடியே முகம் திருப்பிவிட, மண்டபமெங்கும் கேள்வியாகச் சுழன்றது அவள் விழிகள்.
அதை உணர்ந்து கொண்ட மருது அருகிலிருக்கும் சோலையிடம் அசோகவரதனை அழைத்து வர வேண்டினான்.
அவனும் அழைத்து வர, தங்களோடு மனையில் மகனையும் மருது அமர்த்திக் கொண்டான். திருப்தியாக உணர்ந்த நந்தினி முதல் முறையாக மருதுவை புது பார்வை பார்த்தாள்.
அசோகவரதன் பிறந்து ஒரு வருடம் முடித்திருந்த வேளை, அரிசி ஆலையில் குமரனின் முன் அமர்ந்திருந்த மருது, “நந்தினி வீட்டுல அவளைப் பொண்ணு கேட்டா கொடுப்பாங்களா குமரா..?” என்றான்.
சட்டென அப்படிக் கேட்க, குமரனே எதிர்பாராது அதிர்ந்த சிலையாக அப்படியே அமர்ந்து விட்டான்.
குமரனைப் பற்றி உலுக்கியபடி மீண்டும் மருது கேட்க, சுயநினைவு பெற்ற குமரன், “என்னடா சொல்லுற?” என்றான் நம்ப இயலாது.
“வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கடா. நந்தினியும் வரதனும் இருக்கும் போது என்னால வேற பொண்ணையோ கல்யாணத்தைப் பத்தியோ யோசிக்கவே முடியலை. அதான் இப்படிக் கேட்டேன்” என்றான்.
ஒருபுறம் நண்பனை எண்ணிப் பெருமையாக இருந்த போதும், மறுபுறம் கவலையே. காதல் அல்லாது ஒரு குடும்ப வாழ்க்கை எப்படியிருக்கும்?
“ஏன்டா உனக்கே இதுல இஷ்டமில்லையா?” மருது ஆற்றாமையில் கேட்க, “ச்சே.. ச்சே! அப்படியெல்லாம் இல்லைடா. ஒரு அண்ணனான நந்தினிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சால் எனக்கு அது பெரிய சந்தோஷம்” என்றான் குமரன்.
ஒரு நொடி யோசனைக்குப் பின், “உண்மையில அசோக் வீட்டுல என்ன சொல்லுவாங்கன்னு என்னகுத் தெரியலைடா.. கேட்டுப் பார்க்கிறேன்” என்க, மருதுவிற்கு நிம்மதி.
கணவனை இழந்த போதும் அசோக் வீட்டிலிருந்து தான் குழந்தையைப் பெற்று வளர்த்துக் கொண்டிருக்கிறாள் நந்தினி.
ஒன்று மருது வசதியில் குறைவு, இரண்டாவது அவன் வேறு இனம்! இந்த இரண்டு காரணங்கள் மருதுவை மறுப்பதற்கு இருந்தது.
நந்தினி பிரசவலியில் துடித்த போது உடன் இருந்தவன் மருது, அன்று கார் ஓட்டிவனுக்கு அவள் துடிக்கையில் எல்லாம் என்னவோ செய்தது. அவனும் வேதனையில் உழன்றான்.
அதே போல் அசோக்கின் கடைசி நிமிடங்களில் உடன் இருந்தவனும் மருது தான்.
மருது என்றில்லை யாராக இருந்திருந்தாலும் கடைசி நிமிடங்களில் அதைத் தான் வேண்டியிருப்பான் அசோக். அதுவே மருதுவிற்கு, தன்னிடம் ஏதோ பொறுப்பை கொடுத்திருக்கும் உணர்வைத் தந்தது.
பிரசவலியில் துடித்த நாளின் நினைவும் மனதில் நின்று அரித்துக்கொண்டே அவனை நிம்மதி இழக்கச் செய்தது.
வீட்டிலும் பெண் பார்க்க ஆரம்பிக்க, சட்டென குமரனிடம் கேட்டுவிட்டான். முழு மனதாக, விரும்பியே கேட்டான்.
வேறு சமூகம் என்பது கொஞ்சம் நெருடலாக இருந்த போதும் தங்கள் இனத்தில் வேறு யாரும் இது போல கேட்டு வரவில்லையே?
கடவுளின் படைப்பில் அனைவரும் மனிதர்கள், ஜாதி, மத வேறுபாடுகள் எல்லாம் வேண்டாதவைகள் என உணர்ந்திருந்தனர்.
மேலும் மருதுவையும் வெகு ஆண்டுகளாகத் தெரியுமே? நல்லவன், ஆகையாலே அசோக்கின் பெற்றோர் சம்மதம் சொல்ல, நந்தினி வேண்டாமென மறுத்தாள்.
வள்ளி, மீனா மற்றும் அவ்வப்போது வந்து போகும் அசோக்கின் அக்கா தேவி கூட எடுத்துச் சொல்லிப் பார்த்தனர், முடியவே முடியாதென நந்தினி பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.
இப்போது தானே வேண்டாம் அவளுக்குஎப்போது விருப்பமோ அப்போது சொல்லட்டும். அது வரை காத்திருக்கிறேன் என்ற மருதுவும் அவன் பிடியிலிருந்து இறங்கவில்லை.
ஒரு வயது பையனோடு இருந்தவளுக்கு உலகமே அவன் மட்டும் தான் என்ற எண்ணம். மீண்டும் படிக்கத் தொடங்கினாள், போட்டித் தேர்வுகளும் எழுதினாள்.
அறநிலையத் துறையில் அரசுப் பணியும் கிடைத்துவிட, பிள்ளையோடு தன் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டாள்.
பிள்ளை வளர, வளர அவன் தந்தையின் பாசத்திற்கு ஏங்குகிறான் என்பது நந்தினிக்குப் புரிந்தது.
மகனை இது வரையிலும் எதற்குமே ஏங்க விடாது அப்படி வளர்த்தவளுக்கு ஒரு நெருக்கடி நிலை.
எத்தனை பேர் பாசமாக வளர்த்தாலும் தந்தையின் பாசத்திற்கு எதுவுமே ஈடாகாது, என்ற உண்மை உரைக்கத் தொடங்கியது. அதே நேரம் கமலத்தின் உடல் நிலை சரியில்லாது போக, அவர் மீண்டும் கேட்க, இம்முறை சம்மதித்தாள் நந்தினி.
முழு மொத்தமாக பிள்ளைக்காக, எதிர்காலத்திற்காக என்றில்லை அவளுக்காகவும் தான். சமீபமாக ஒரு வெறுமையை மனதால் உணர்ந்தவளுக்கு அதிலிருந்து மீளும் வழியும் இது தான் என்று தோன்றியது.
நந்தினி சம்மதித்ததுமே வீட்டில் சொல்லித் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்து விட்டான் மருது.
முதலில் நெருடினாலும் தங்கள் குடும்பத்திற்கே வரும் முதல் படித்த பெண், வேலையில் இருக்கிறாள் என்ற திருப்தியில் சம்மதித்தனர்.
பெற்றோர்களின் இடத்திலிருந்து செய்து வைத்த அசோக்கின் பெற்றோர்கள் சொத்து பத்துக்களும் சீரும் தர முன் வர, மருது மறுத்துவிட்டான்.
‘பின்னாளில் பிள்ளை வளரவும் உங்கள் பேரனுக்குச் செய்வதை அப்போது செய்து கொள்ளுங்கள், இப்போது வேண்டாம். நந்தினியை விருப்பி தான் மணக்கிறேன்.
சொத்திற்காக மணக்கிறேன் என்ற சின்ன சலசலப்பு பேச்சு கூடச் சொந்த பந்தத்திற்குள் வர விரும்பவில்லை’ என்று விட அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
அனைத்தையும் இரு குடும்பத்திற்கும் இடையில் பொதுவாக நின்று பேசி, நடத்திக் கொடுத்தது குமரன் தான்.
நந்தினிக்காக யோசித்து, எளிமையாகத் திருமணம் செய்ய மருது சொல்ல, என்ன இருந்தாலும் அவனுக்கு இது முதல் திருமணம் அவர்கள் வீட்டிலும் எதிர்பார்ப்பு இருக்குமே என்ற எண்ணத்தில், நந்தினி அவர்கள் முறைப்படி சிறப்பாகச் செய்யச் சொல்லிவிட்டாள்.
இதோ, பிள்ளையோடு இருவருமாக மனையில் அமர்ந்திருந்த இருவரையும் ஊரே கூடி நல்வாழ்வு வாழ வாழ்த்தினர்.
அவர்கள் ஊருக்குள் குடும்பத்தாரின் சம்மதத்தோடு சிறப்பாக நடக்கும் முதல் மறுமணம், கலப்பு மணம் இது தான்.
மங்கள இசையோடு மாங்கல்யத்தை விரும்பி நந்தினியின் கழுத்தில் கட்ட, நிறைந்த மனதோடு ஏற்றுக் கொண்டவளுக்கு மனதின் ஓரம் அசோக்கின் நினைவும் சிறிது இருந்தது.
அதில் தவறொன்றுமில்லை, மறக்க வேண்டிய கட்டாயமுமில்லை, அது முடிந்த வாழ்க்கை என்ற புரிதல் மருதுவிடம் உண்டு.
தம்பதிகளாகக் குழந்தையின் கரத்தைப் பற்றிக்கொண்டு அம்மனை வணங்க கோயிலுக்குள் சென்றனர்.