கடைக்கு சென்று வாங்கிய அனைத்தையும் வீட்டினுள் கடைபரப்பி “இது உனக்கு” என பிர்லாவின் உடைகளை அவன் கையில் வைத்தார் சந்திரா. “அப்பறம் இது ப்ருந்தாவுக்கு, அவகிட்ட கொடுத்துடு” என மீண்டும் சொல்ல
“ப்ருந்தாவை நீங்க கூட்டிட்டு போகலையா!” கையில் இருந்த ப்ருந்தாவின் உடையை ஏந்தியபடி இவன் கேட்க
“நீயும் வரலைன்னுட்ட, அவளும் வரலை அதான் நாங்கள் எடுத்துட்டோம்” என சொல்ல
பிர்லாவிற்கு அத்தனை ஆத்திரமும் இவள் மேல் திரும்பியது. இருவரின் உடைகளையும் தன்னுடைய அறையில் வைத்துவிட்டு ப்ருந்தாவை தேடி தேடி கலைத்து போய், இறுதியில் அவனின் பார்வை தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தவளின் மீது பாய்ந்தது.
நிதானமாய் அவளை அளவிட்டபடியே அவளிடம் நெருங்கினான். அவள் அருகில் வந்து, “என் ரூம்க்கு வா!” என அதிகார குரலில் சொல்லி விட்டு சென்றான்.
திடீரென்ற இவரது அரவம், அவனது குரல் இரண்டும் இவளை தடுமாறத்தான் வைத்தது. ஆனாலும் “எதுக்கு இவனுக்கு இத்தனை கோபம் ?”
“அடுத்து என்னவோ?” என இவளும் அவன் பின்னேயே வந்தாள்.
இவனது அறைக்குள் வந்த அடுத்த நிமிடம் கதவை தாழ் போட்டு,
“என்னாச்சு எதுக்கு இத்தனை கோபம்”, என கேட்ட தோரணை ‘எதுக்கு இப்படி கத்திட்டு இருக்கீங்க’ என்பது போல் அவனுக்கு தெரிய
“என்னாச்சா! கேட்ட கேள்வி எதுக்காவது பதில் சொல்லு ப்ருந்தா இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”
“அர்த்தம் இல்லாத கேள்விக்கு எப்படி பதில் சொல்றது?”
“அர்த்தம் என் கேள்விக்கு இல்லையா? இல்லை, என்னோட காதலுக்கு இல்லையா!” கூர்மையாய் வந்த வார்த்தைகள் அவளுக்கு வலிக்கவே செய்தது.
“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?”
“பின்ன நான் என்ன தான் நினைக்கிறது? நானாக உன்னை தேடி நாகப்பட்டினதுக்க்கு வந்தப்போ சந்தோஷமும் படலை!
இதோ நீ வீட்டுக்கு வந்த இத்தனை நாளில், ஆசையா பேசுறதோ, அன்பு கவனிக்கிறதோ, செல்லமா சண்டைபோடுறதோ, எதுவுமே இல்லை. இத்தனை ஏன் என்னை பார்த்தாலே எங்காயாச்சும் ஓடி ஒளிஞ்சுக்கிற
இதோ இன்னும் ஐஞ்சு நாளில் நடக்கப்போற நம்ப கல்யாணத்துக்கும் எந்த ஒரு இன்ட்ரெஸ்டும் இல்லை!
எல்லாத்தையும் இரண்டு பேரோட பேரண்ட்ஸ் கிட்ட கொடுத்து பார்த்துக்க சொல்லிட்ட, கல்யாண பொண்ணு மாதிரியா இருக்க நீ ” சாதாரண சுடிதாரில் இருந்தவளை அப்போதும் அளவெடுத்தது அவன் விழிகள்.
“நீ இங்கே வந்தப்புறம் இந்த ரூமுக்குள்ள, ரூமுக்கு வெளியிலன்னு எத்தனை தடவை பேசி இருப்போம். ஆனால் ஜாஸ்தியாக பேசினது, ஜாஸ்தியாக சண்டை போட்டதெல்லாம் நானா தான் இருந்திருக்கேன், ஏதாவது கேட்டால் பதில் சொல்றதே இல்லை. வாயை இறுக மூடிட்டு ஒன்னு இறுகி போய் நீக்க வேண்டியது, இல்லை கண்ணீரை வடிக்க வேண்டியது.. நீ பண்றதெல்லாம் பார்த்தா, ‘இவன் ஏண்டா நம்பளை தேடி வந்தான், அப்படியே எங்கேயாவது போய் தொலைஞ்சிருக்கலாமே’ ன்னு நினைக்கிற மாதிரி இருக்கு ப்ருந்தா” ஆதங்கத்தில் வெடித்து பேசியவனின் வார்த்தைகள் அவளுள் இறங்க மறுத்து வெறுமை சூழ்ந்தது.
“நான் பேசுறதை காது கொடுத்து கேட்க கூட மாட்ற, ஒரு வேளை கேட்க நேரமில்லையோ?” என நக்கலாக நிறுத்தி “ஆக மொத்தத்துல என்னை கிறுக்கனாக்கிட்டு இருக்க நீ! இப்படியே பண்ணிட்டு இரு, ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீ பேசறதை கேட்குறதுக்கு நான் இல்லாமல் போக போறேன்.” அத்தனை எரிச்சலும் வார்த்தைகளில் கொட்ட
“வாழுறதை பத்தி பேசவே மாட்டீங்களா நீங்க? எப்போ பாரு ‘சாவேன், இல்லாமல் போய்டுவேன்னு’, என்னை உயிரோட கொல்றதுக்குன்னே என்னை தேடி வந்தீங்களா?” எத்தனை நாள் தான் இவளும் பொறுப்பாள், அவளது வார்த்தைகள் நெருப்பாய் வந்து விழ,
“தினம் தினம் உங்ககூட போராட என்னாலமுடியல பிர்லா” இவள் ஒரு அர்த்தத்தில் பேச,
இவன் வேறு அர்த்தம் கண்டு கொண்டு
“அப்போ எதுக்கு நான் கூப்ட்டதுமே என் கூட வந்த? எதுக்கு என் வீட்டில் தங்கினே? இதோ கல்யாண தேதி முடிவு பண்ணினது தெரிஞ்சும் அமைதியா இருந்தே?” சகட்டு மேனிக்கு இவன் பாட்டுக்கு கேட்க
“நீங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினதுக்கு ஒரே காரணம் நீ, நீங்க என்னோட பிர்லான்றது மட்டும் தான், அவனுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்”
பிர்லாவோ, மீண்டும் அதிர்வை உள்வாங்கியபடி இவளது வார்த்தைகளை கிரகித்தபடி நின்றிருந்தான்.
‘அப்போ, இவளது மனம் நிறைத்தவன், இவளது காதலன் நான் இல்லையா! இதற்கு முன் இருந்த பிர.லா என்றால், நான் யார்?” என்ற பயம் உயிர் வரை கொன்றது.
“என்னை பத்தின நியாபகம் இல்லைன்னாலும் பரவாயில்லைன்னு, என் பழைய பிர்லாவோட வாழ வந்தேன், அவனை மட்டும் தான் நம்பி வந்தேன், ஆனா நீ ‘ஏன் என்னை விட்டு போனே? போனே? ன்னு கேட்டு என்னை பாடா படுத்துற பிர்லா. நீயும் சந்தோஷமா இருக்க மாட்ற! என்னையும் சந்தோஷமா இருக்க விட மாட்ற, என்னை சந்தோஷபடுத்தி பார்க்கிறதுக்கு, நீ தான் என்னோட பழைய பிர்லா கிடையாதே, உன் கிட்ட பேசுறதே வேஸ்ட்!” அவன் உண்மையான மனநிலை எல்லாம் மறந்து போக, மனதில் இருந்த அத்தனையும் வார்த்தைகளில் வெளிப்பட்டது.
“நீ என்னோட பிர்லாவே கிடையாது ஆமா நீ அவன் இல்லை. நீ் யாரோ! நீ என் பிர்லாவே இல்லை, இல்லவே இல்லை!
“அப்போ என்னை பிடிக்கலையா” ப்ருந்தாவின் அத்தனை பேச்சையும் கேட்டவன், அழுத்தமாய் இவளிடம் கேட்க
“பிடிக்கலை எனக்கு என் பிர்லாவை மட்டும் தான் பிடிக்கும் நீ வேற பிர்லா. நீ வேற யாரோ ஒருத்தன் நீ எனக்கு வேண்டாம்” என அன்று மருத்துவமணையில் தன்னுடைய பிர்லாவை கண்களால் காணாமல் என்ன பாடு பட்டாளோ, அதே மன நிலை இன்றும் அப்படியே வெளிப்பட்டது, அதே தன்னுடைய பழைய பிர்லாவை இவனுள் காண முடியாததில்.
“உன்னை பார்க்க முடியாமல், உன் கூட பேச முடியாமல், உன் கூட வாழ முடியாமல், நீ இருக்கியா செத்தியான்னு கூட தெரியாமல் தான்டா இருந்தேன். ஆனா இங்கே வந்த பிறகு நீயும் அதே வார்த்தையை சொல்ற! சொல்லி சொல்லி காட்டுற இனி உங்கூட வாழறது எல்லாம் கஷ்டம், நீ இப்படியே கேட்டு என்னை சாகடுச்சுடுவே. நீ என்ன சாகுறது நான் நான் சாகுறேன், நீ என்னையவே மறந்துபோய்ட்ட, இனி எதுக்கு நான் வாழனும், நான் சாகுறேன் சாகுறேன்” கத்தியபடியே, ஏதோ கூர்மையாய் இருந்த பொருளை கையில் எடுத்து இவள் பதம் பார்த்து கொண்டிருந்தாள்.
அதிலேயே பிர்லா நடு நடுங்கி போனான், அவளருகில் விரைந்துவந்து அதை பிடுங்கி வீசி எறிந்துவிட்டு, இருந்த கோபத்திற்கு ப்ருந்தாவின் கன்னத்தில் விட்டான் ஒரு அறை!
அவள் காது சவ்வு கிழியும் அளவிற்கு. இவன் அறைந்ததில் தடுமாறி சுவற்றை பிடித்தபடி இவள் சமாளித்து நிற்பதற்குள், ஒரு கையால் பிடித்து இழுத்து நிறுத்தினான் அவளை, விழிகள் உரசி செல்ல, ஏதோ பேச வந்தவனின் காலடியில் வந்து விழுந்த ஏதோ ஒரு பொருளில் இருவரின் கவனமும் சிதறியது.
பிர்லா விட்டெறிந்த கூர்மையான பொருள் எதிரில் இருந்த ஏதோ ஒரு அலங்கார பொருள் மீது பட்டு உடைந்து அந்த இடம் முழுதும் சில்லு சில்லாய் தெரித்ததில் அதனுள் இருந்து தெரித்து வந்து அவன் காலடியிலேயே விழுந்தது! மற்றொரு பொருள். பொருள் அல்ல பொக்கிஷம் அது.
அதில் இருவரின் கவனமும் மற்றவரிடம் இருந்து அந்த பொருளுக்கு இடம் பெயர்ந்தது.
“இதையுமா இவன் பத்திரபடுத்தி வைத்திருக்கிறான்?” ப்ருந்தாவின் மூச்சே நின்று போனது அந்த ஓர் நொடியில்.
பிர்லாவோ “இதை எங்கோ, எங்கேயோ பார்த்திருக்கிறோம்! ஆனால் எங்கே? எப்படி? எப்போது?” மூளை சூடாகி, நினைவடுக்கில் தேடுதல் வேலையை ஆரம்பிக்கும் முன் தன் பிடியையும் மீறி ப்ருந்தா தடார் என விழும் சப்தத்தில் திரும்பினான்.
அவன் காலடியில் கிடந்ததை பார்த்து, உயிர் நாடி அடங்கிப்போக, இரண்டெட்டு பின் நகர்ந்து கால் இடறி தரையிலேயே விழுந்திருந்தாள் ப்ருந்தா.
அவன் காலடியில் கிடந்த பொருளில் நிலைகுத்தி பதித்திருந்தது இவள் விழிகள்.
பிர்லாவிற்கும் அதை பார்க்கும் போது ஏதோ ஒரு உணர்வு பட பட வென விரவி பரவியது. உணர்வுகளை தூண்டும் ஒரு வித மாய உணர்வு அவனது இதயத்தை ஆக்ரமித்தது.