‘தன்னை தேடி ஒரு நாள் பிர்லா வருவான்’ என இந்த ஒரு வருடமாய் தவம் செய்து காத்திருந்தாள். இந்த தவத்தில் இவள் கண்ட காதல் கனவுகள் தான் எத்தனை எத்தனை ஆனால் இப்படி தன்னையே மறந்தவனாய் தன் முன் வந்து நிற்கும் ஒரு நிலையை கனவிலும் காணவில்லை இவள்.
மொத்தத்தில் “இதற்கு தன் உயிர் அன்றைக்கு மருத்துவமணையிலேயே போய் இருக்கலாம்” “இதையெல்லாம் பார்ப்பதற்கு, உயிருடன் இல்லாமலேயே போய் இருக்கலாம்” பிர்லா மீதான ஏக்கம் விரக்தியாய் மாறியது விந்தையிலும் விந்தையே.
அதன் விளைவு அவனது இடையில் இறுக்கமாய் கோர்த்திருந்த கைகள் தானாகவே அந்த இறுக்கத்தை தளர்த்தி கொண்டது. முகத்தில் ஓடிய ஏக்கத்தையும் தவிப்பையும் அப்படியே மனதிற்குள் போட்டு மறைத்து கொண்டது.
கேட்க வந்த வார்த்தைகள் அனைத்தும் கேட்காமலேயே ஓடி ஒளிந்து கொள்ள, பிரம்மை பிடித்தார்ப்போல் இவனையே பார்த்திருந்தாள்.!
அது அப்படியே இவள் முகத்தில் பிரிதிபலிக்க, அதில் அவன் இறுகிய பிடிப்பை தளர்த்தி, கட்டிலில் இருந்தவளை எழுப்பி, அவள் கழுத்தில் இருந்த இரத்தத்தை கைக்கு கிடைத்த ஏதோ ஒரு துணியில் துடைத்து, தன் கையையும் துடைத்தான்.
பின் அதை குப்பை கூடையில் போட்டுவிட்டு அவளை தன்னோடு இழுத்துக்கொண்டு, நிதானமாய் படி இறங்கினான்.
இவர்களுக்காகவே காத்திருந்தார் போல் வேலாயுதம், செண்பா எழுந்து நிற்க,. அவர்கள் பார்க்கும் முன் இரத்தம் உறையா காயத்தை முதுகின் பின் மறைத்தான்.
“ப்ருந்தா இனி என் கூட தான் இருப்பா, நான் அழைச்சிட்டு போறேன்!” அனுமதி கேட்டார்போல் தெரியவில்லை, அவன் பேச்சில் அறிவிப்பு மட்டுமே இருந்தது.
“நைட் ஆக போது, தங்கிட்டு காலையில் போகலாமே!” என
“இல்லை கிளம்பனும்”
“அட்லீஸ்ட் சாப்பிட்டாவது போகலாமே!”
“என்கிட்ட இருந்து அவள் பிரிஞ்சதையே என்னால் இன்னும் ஜீரணிக்க முடியலை! இதில் சாப்பாடு வேறையா? தை எப்கடி ஜூரணிக்க? தேவையில்லை!’ என
அவர்களை இதற்கு மேல் யாராலும் அசிங்கப்படுத்த முடியாது! என இருவருமே உணர்ந்தனர்.
“ப்ருந்தா, வேற டிரெஸ் மாத்திட்டு, தேவையான பொருளை எல்லாம் எடுத்துட்டு வா!” என செண்பா கூறியும் இவள் அசையவில்லை
செண்பா தான் இவளை இழுத்து செல்லும் படி ஆனது.
எளிதான சுடிதார் ஒன்று அணிந்திருந்தாள். செண்பா ஒரு டிராலி பேக்குடன் வர, ப்ருந்தாவை அழைத்துக்கொண்டு வெளியேறினான். அவளை முன் புறம் அமர்த்திவிட்டு, மறுமுறம் இவன் அமர்வதற்குள், இவர்களை கேட்கவேயில்லை, பின்கதவை திறந்து அந்த டிராலி பேக்கை உள் வைத்துவிட்டு,கதவை சாத்திவிட்டு சற்று தள்ளி நின்றுகொள்ள, விருட்டென பறந்தது கார்.
“இரண்டு பேருமே என் பேச்சை கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணீடீங்க போல அவளை விட உனக்கு தான் ரொம்ப அவசரமோ!” வேலாயுதம் , செண்பாவை சீண்ட
“அதுவும் அவளை பேச விடாமல் நீ பேசினதை பார்க்கும் போது, பிர்லாவை நீ தான் வர வச்ச போல!” இன்னமும் நீண்ட
‘நான் அவர் கூட அனுப்பி வைக்கலைன்னா, நீங்க தான் அசிங்கப்பட்டு இருப்பீங்க!’ மனதினுள் பேசியவர்,
நிதானமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது கார். எண்ண அலைகள் எங்கெங்கோ பாய்ந்தோட, அடக்கி வைத்த கண்ணீர் எங்கே உடைப்பெடுத்துவிடுமோ என பயந்து பயந்து தான் அவனுடன் பயணித்தாள்.
அவன் முகம் காண தயங்கி அவனில் படர்ந்த பார்வை அடிபட்ட அவன் கையில் வந்து நிலைத்தது.
“முதலில் ஹாஸ்பிடல் போலாம்” ‘இவனுக்கு தன்னை பற்றி எதுவும் நியாபகம் இல்லை என்பதெல்லாம் பின்னுக்கு செல்ல, இரத்தம் உறைந்த காயத்தை பார்க்கமுடியாமல் ப்ருந்தா அவனிடம் பேசினாள்.
இவன் பதிலே சொல்லவில்லை!
“பிர்லா, இன்பெக்ஷன் ஆயிடப்போகுது.”
“ப்ளட் வேற அரஸ்ட் ஆக மாட்டுது”
“ப்ளீஸ்” இவள் கேட்ட அத்தனைக்கும் பதில் எதுவும் கூறாமல், காரை அதிக அதிக வேகத்திற்கு கூட்டிக்கொண்டே இருந்தான்.
தன் பேச்சினால் தான் இவனது வேகம் கூடி கொண்டே செல்கிறது, அது தாமதமாய் இவளுக்கு உறைக்க ‘வீண் விபரீத முடிவுகளை தடுக்கும் பொருட்டு’ வாயை மூடிக்கொண்டாள்.
தவிர அதிகப்படுத்தி கொண்டே வந்த காரின் வேகம் எல்லாம் இவள் கேள்வி கேட்பதால் தான் என புரியவும் செய்தது.
ஆனாலும் கையில் இருந்து துளிர்க்கும் இரத்தத்தை கண் கொண்டு பார்க்கவும் பிடிக்கவில்லை. தன் கழுத்தில் இருந்த துப்பட்டாவை எடுத்து ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்திருந்த அவன் கையில் அழுத்தமாய் கட்டிவிட்டாள்.
முன்பிருந்த பிர்லா என் மனதின் மன்னவனாய் அல்லவா இருந்தான் ஆனால் இப்போது? மனதினை வதைக்கும் கண்ணனாய் அல்லவா தெரிகிறான்.
என் காதல் இல்லாமல் இவன் மனம் கல்லாய் ஆக, இவன் காதலாலேயே அவள் மனம் கல்லாய் இறுகிவிட, உயிர் இல்லா அவன் முகத்தையும், இரத்தம் தோய்ந்த அவன் கையையும் பார்க்க பிடிக்காமல் கண் மூடி சாய்ந்து கொண்டாள். பிர்லாவின் வீடு வரும் வரை.
பிர்லா கார் நிறுத்தும் சப்தம், கேட்டு, நடுஹாலில் இருந்த அனைவரின் பார்வையும், வாசலிலேயே இருந்தது.
பிர்லா, அவனை தொடர்ந்து ப்ருந்தாவும் வர ‘எதிர்பார்த்த ஒன்று எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்தற்கான அத்தனை அதிர்வும் அவர்களது முகத்தில்’
கூடவே அவன் கை காயம் தான் அவர்களை ஈர்த்தது. கையில் கட்டியிருந்த துப்பட்டாவையும் மீறி தெரிந்த இரத்த கரை. “என்னடா இது இத்தனை இரத்தம்?” என அனைவரையும் பதற வைக்க பதறாமல் நின்றிருந்தது என்னவோ தேவி மட்டும் தான்.
“இந்த இரத்தத்துக்கெல்லாம் நான் சாக மாட்டேன்!” என பிர்லா விரக்தியாய் சொல்ல
“டேய்” என அனைவரும் கூச்சலிட மற்றவர்கள் பேசும் முன்பே இவன் வாயை திறந்து
“வீட்டுக்கு வரக்கூடாது, வேற எங்கையாவது இவளை கூட்டிட்டு போய்டுவோம்னு தான் நினைச்சேன்!” தலையில் இடியை இறக்கி
“ஆனால் பாருங்க, பிரிச்சு வச்ச உங்க முன்னாடி வாழ்ந்து காட்டினால் தானே எங்க காதலுக்கும் அர்த்தம் இருக்கும்!” என அசால்ட்டாய் சொல்ல
வீட்டினர் மொத்தமும் பிர்லாவின் புது அவதாரத்தில் வாயடைத்து போயினர். ப்ருந்தாவிடம் பார்வையை திருப்பியவன்.
“தடுமாறி நின்னப்போ எல்லாம், தாங்கபிடிச்சான் ஸ்ரீதர்” எனக்காக இத்தனை தூரம் மெனக்கெட்ட யாருமே, உன்னை பத்தியோ, உன் காதலை பத்தியோ சொல்லவே இல்லை!” அவனுடைய இந்த நாழு மாத வாழ்க்கையை நாலே வரிகளில் அவன் கூறி,
“அவங்க ஏதோ ஒரு பர்பஸ்க்காக இப்படி பண்றாங்க மே பி அது சுயநலமா கூட இருக்கலாம்?”
“ஆனா நீ எதுக்காக, என்ன பர்பஸ்க்காக என்னை விட்டுட்டு போன?” நிறுத்தி நிதானமாய் இவன் ப்ருந்தாவிடம் கேட்க
“எனக்கு இப்போ தெரியவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னு தான் இவங்க எல்லாரும் சேர்ந்து நம்பளை பிரிச்சாங்களா, இல்லை நீயா தான் என்னை பிரிஞ்சு போனியா?” இவன் கேட்ட கேள்வியில் ப்ருந்தா உட்பட அத்தனை பேருக்கும் மூச்சே நின்று போனது.
“சொல்லு!” இவளை நெருங்கினான் பிர்லா.
“என் கேள்விக்கு பதில் சொல்லுன்னு சொன்னேன்” “சொல்லு…” இவன் போட்ட சத்தத்தில் தேவியே நடுங்கி போய் சந்த்ராவின் பின் சென்று நின்றார். அதே பயத்தை மற்றவர்களின் முகமும் பிரதிபலிக்க அதை பார்த்தவாரே
“நா நானா தான் உங்களை விட்டு போனேன்” என இவள் திக்கி திணறி செல்ல, மற்றவர்களிடமிருந்து ‘உஃப்’ என ஆசுவாச பெருமூச்சு மெத்தமாய் கிளம்பியது.
“ஓ அப்போ நீயா தான் என்னை விட்டு போன!” என்றவன்
“என்னை விட்டுட்டு எதுக்காக போன! நீயும் ஏதாவது காரணம் வச்சிருப்பியே! சொல்லு அதையும் கேட்கிறேன்!”
பதில் சொல்ல முடியாமல் ப்ருந்தா நிற்க, பிர்லாவிற்கோ கோபம் உச்சிக்கு ஏற “வாயத்திறந்து தொலை! கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு” இன்னமுமே இவள் அமைதியாய் இருப்பதை பார்த்து “சொல்லமாட்டேல்ல சொல்லாத” என அத்தனை வெறுப்பையும் காட்டி “நம்பளோட காதலையே குழி தோண்டி புதைச்சுட்டு, என்னை அப்படியே விட்டுட்டு போனவ தான நீ பின்ன எப்படி பதில் வரும்”
“ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ, நான் எல்லாத்தையும் மறந்து போய்ட்டேன்னு ஏதோ ஒரு உண்மையை என்கிட்ட இருந்து நீங்க மறைக்கலாம், ஆனால் மறக்கவே கூடாதுன்னு உன் சம்பந்தபட்ட அத்தனையையும் பொக்கிஷமா பாதுகாத்து வச்சிட்டு இருந்திருக்கேன், நீ சொல்லாத உண்மையை எல்லாம் அது சொல்லும், அப்போ இருக்கு உனக்கு” என அவளிடமிருந்து பார்வையை திருப்பியவன், “உங்களுக்கும் சேர்த்து இருக்கு” இத்தனை பேசியும் அவன் மனது ஆகவே இல்லை கோபம் போய் இயலாமையே அவன் மனதினுள் உலா வர அப்படியே சோபாவில் அமர்ந்தான்.
“எல்லாத்தையும் மறந்த நானே, உன்னை பத்தி தெரிஞ்ச ‘ஒரே’ நாளில் தேடிட்டு வந்துட்டேன், ஆனா நீ! விட்டது தொல்லைன்னு நிம்மதியா இருந்திருக்க!” பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு பத்திரமாய் பர்சில் கிடந்ததை, அவன் கைகள் தேடி எடுத்து அவள் முன் இருந்த டீபாயில் வைத்தான் “நேத்து கம்பெனியில் ஒரு பிரச்சனை! பிரச்சனையில் ஒரு பென்டிரைவை கண்டு பிடிச்சே ஆக வேண்டிய நிலை, தேடினதில் சிக்கினது தான் இந்த தாலி!” ப்ருந்தாவை இவன் எப்படி தேட போனான் என்ற முடிச்சுகளை மெல்ல அவிழ்த்தான் பிர்லா.
தாலியை உற்று பார்த்த ப்ருந்தாவிற்கோ, அந்த தனித்துவமான தாலியின் அமைப்பு, அதன் இறந்தகாலத்தை கண் முன் கொண்டு வந்தது. “இது இது பிர்லாவின் கழுத்தில் நான் கட்டிவிட்ட தாலி. அன்று கூட வீசி எறிந்தானே! ஆனால் அது எப்படி இவனது கைக்கு வந்தது” உள்ளுக்குள் கிடுகிடு வென ஆட்டம் கண்டது.