“ப்ருந்தா, எங்கே!” என்ற பிர்லாவின் தேடல் சுமந்த அந்த ஒரு வார்த்தை போதுமானதாய் இருந்தது தேவிக்கு!
அவன் கேட்ட விதம் சொல்ல வைக்காத போதும், அவன் கத்தியால் தன் கையை கிழித்து கொண்ட செயல் ‘ப்ருந்தா இருக்கும் இடத்தை அவனுக்கு சொல்ல வைத்தது’ ஆனால் அதோடு பயமும் சேர்ந்தது. ‘இத்தனை அவசரமாய் ப்ருந்தாவை கேட்கிறான் என்றால்! நியாபகங்கள் அனைத்தும் திரும்பி விட்டதென்று தானே அர்த்தம்’ பகீரென இருந்தது.
பேச வார்த்தைகளற்று நின்ற இடம் எதுவென்னு உணராமலேயே அப்படியே அமர்ந்தார்.
எத்தனை நேரம் கடந்து ஓடியதோ! ‘சந்திரா, உன் பொண்டாட்டி பேயறஞ்ச மாதிரியே உக்கார்ந்துருக்கா, என்னன்னு வந்து பாரு! நாங்க கேட்டால் எதுவும் பதில் சொல்லவும் மாட்றா’ மரகதாம்பாள் விசயத்தை சொல்ல
‘என்னவா இருக்கும்?’ ‘இந்த பிர்லா பய வேற போனை எடுக்கவே மாட்றான்!’ என சலித்தபடி பார்த்து கொண்டிருந்த சீனிவாஸ் பிரச்சனைகளை அப்படியே போட்டுவிட்டு வீட்டிற்கு விரைந்தார்.
தேவியின் அமர்ந்திருந்த தோற்றம் மனதினை நெகிழ்த்த “பார்வதிதேவி பார்வதிதேவி” என அழுத்தமான குரலில் தன் பக்கம் திருப்பினார்.
“என்னாச்சு? ஏன் இப்படி உக்கார்ந்திருக்க?”
சந்திராவின் குரலில் சிறு தைரியம் அவரை பேச வைக்க “பிர்லா பிர்லா !” என பேச்சுவார்த்தை தடை பட
“என்னாச்சு, பிர்லாக்கு” கேட்டு கொண்டிருக்கும் போதே, அவரது கை மகனின் மொபைலுக்கு அழைக்க தயாராக
“அவனுக்கு பழைய நியாபகம் எல்லாம் வந்துடுச்சு!”
கையில் இருந்த போன் நழுவி தரையில் விழ “எ எப்போ?”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி”
“உனக்கு எப்படி தெரியும்?”
“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் வந்தான், ப்ருந்தா எங்கன்னு அப்படி ஒரு கோபத்தோட கேட்டான்! ப்ருந்தாவை கேட்குறானா அவனுக்கு நியாபகம் வந்துடுச்சுன்னு தானே அர்த்தம்” என கேட்க
“இப்போ எங்க இருக்கான்” மற்றவைகளை ஒதுக்கி தள்ளி தேவையான பதிலை மட்டுமே கேட்டார்.
“நாகப்பட்டினதுக்கு போய்ருப்பான்”
“நாகப்பட்னத்துக்கு அவன் எதுக்கு போனான், ப்ருந்தா அங்கே தான் இருக்கான்னு அவனுக்கு எப்படி தெரியும் “
“நான் தான் சொன்னேன்”
“நீ ஏன் சொன்ன? அவன் கேட்டு தெரியாதுன்னு சொல்ல வேண்டியது தானே!”
“என் மகனா கேட்டிருந்தால், சொல்லியிருப்பேன், அவன் தான் ப்ருந்தாவின் புருஷனா கேட்குறானே!” நான் என்ன செய்ய?
“ப்ச்” “இப்போ அவன் எப்போ நாகபட்னத்துக்கு கிளம்பினான்?!”
“மதியம் மூன்று மணிக்கும் மேல் இருக்கும்!”
“சாயந்தரமாயிடுச்சு,அதுவரை என்ன பண்ணிட்டு இருந்த?” என மேலும் திட்டியவர் “நான் அப்போவே சொன்னேன் , இரண்டு பேரையும் பிரிக்காதே!ன்னு கேட்டியா?” பிர்லாவையும் மிஞ்சியது சந்திராவின் கோபம்.
பார்வதிதேவியின் வாய் திறந்தால் தானே! இப்போதைக்கு திறக்காது என நிச்சயமாகிப்போனது அவரது உடல் மொழியிலேயே
உடனடியாக வேலாயுதத்திற்கு தான் போன் செய்தார். “நான் சந்த்ர போஸ் பேசறேன்!” நீண்ட நாட்களுக்கு பிறகு அழைத்தார்.
“தெரியுது சொல்லுங்க!” எதிர்பார்த்தது தான் என்பது போல் அவரது பேச்சு இருக்க, சிறிதே நிம்மதி பரவியது.
“பிர்லா அங்கே வந்தானா? அங்கே தான் இருக்கானா?”
“ப்ருந்தாவோட ரூமில் இருக்காப்ல!”
“ஓ” அதன் பின் ‘இப்போ என்ன செய்ய!’ என்பது போல் இருவருமே அமைதிகாக்க,
எத்தனை நேரம் அமைதியாய் இருக்க முடியும்? “அவங்களை இனியும் பிரிச்சு வைக்கிறது ரொம்ப தப்பு!அவனுக்கு எல்லாம் நியாபகம் வந்துடுச்சு, இனி அவங்களை பிரிச்சும் வைக்க முடியாது பிர்லா என்ன செஞ்சாலும் தடுக்க வேணாம், சப்போஸ், ப்ருந்தாவை அழைச்சுட்டு போறேன்னு நின்னா கூட தடுக்க வேண்டாம்” அவன் இஷ்டப்படி நடக்கட்டும் என்பது போல் சந்திரா பேச
பதிலே இல்லை வேலாயுதத்திடம்
“என்ன சம்மந்தி? பதில் எதுவும் சொல்ல மாட்றீங்க!?” சந்திரா சிறு தயக்கத்துடன் கேட்க
“இப்போ கூட எங்களுக்கோ, இல்லை அவளுக்கோ இதில் விருப்பம் இருக்குதான்னு கூட கேட்க மாட்றீங்க! உங்க பையனுக்காக உயிர் விடக்கூட தயாரா இருந்தா என் பொண்ணு!
ஆனால் அவளை இன்னைக்கு நடைபிணமா மாத்தி வைக்க தயங்கலை, நீங்களும் உங்க குடும்பமும். என் பொண்ணு பட்ட கஷ்டத்தை நீங்க வேணா மறந்திருக்கலாம் ஆனால் நான் மறக்க மாட்டேன்!
அன்னைக்கு நீங்க வேணாம் சொன்னீங்க! இன்னைக்கு வேணும்ன்னு சொல்றீங்க! இப்போ கூட அவள் எப்படி இருக்கா? ஹெல்த் கன்டிசன் எப்படி இருக்கு? ன்னு ஒரு வார்த்தை கூட கேட்க மாட்றீங்க! எப்படி நான் அனுப்புவேன்” ஒரு தந்தையாய் அத்தனை கோபத்தையும் கொட்டி தீர்க்க,
இதையெல்லாம் எதிர்பார்க்கமலா போன் செய்வார் சந்திரா “அப்போவும் சரி இப்போவும் சரி எங்கள் மேல நம்பிக்கை இல்லை, அது வரவும் வேண்டாம்! ஆனால் இன்னைக்கு பிர்லா மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்! மதியம் மூனு மணிக்கு தான் அவனுக்கு நியாபகம் வந்திருக்கு, இதோ அடுத்த மூனு மணி நேரத்தில் உங்க வீட்டில், ப்ருந்தா ரூமில் இருக்கான்” காதலை மீட்டெடுத்து வந்த மகனை கை காட்ட
பேச்சில்லை வேலாயுதத்திடம்
‘மதியம் போனில் பேசிய அவனது அதிரடியான பேச்சும், வீட்டிற்கு தேடி வந்து நின்ற அதிகார தோரணையும், இதோ உரிமையாய் அவளது அறைக்கே சென்றிருப்பவனையும் பார்த்து நம்பிக்கை வரவில்லையென்றால் தான் அதிசயம்?’
“கண்டிப்பா இரண்டு பேரும் வேற வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க! முன்னேயே அவன் கூட என்னால பேச முடியாது, ப்ருந்தாவுக்கு பக்கபலமா நின்னவன் இதோ மதியம் ஒரு வார்த்தை கூட பேசாமலேயே தேவியை பயந்து போய் உக்கார வச்சுட்டான், இதில் அவனுக்கு பழைய நியாபகம் எல்லாம் வந்துடுச்சு, இனி சொல்லவும் வேணாம் ! ப்ருந்தாவுக்கு இனி இவன் பொறுப்பு” என சந்திரா முற்று புள்ளி வைக்க
‘இனி இவர்களை பிடித்து வைப்பதும் , பிரித்து வைப்பதும் அறவே முடியாத காரியம் தான் என வேலாயுதத்திற்கும் உணர்த்தியது, பிர்லாவின் அதிரடி நடவடிக்கை!
“இனி என் பொண்ணுக்கு உங்க மனைவியோட நச்சரிப்போ, உதாசீனமோ இருக்காதுன்னு உறுதி கொடுத்தால்! நான் ப்ருந்தாவை!” என பேசிக்கொண்டிருந்தவரை தடுத்தது
“இல்லை, அப்படிலாம் எதுவும் நடக்காது பிர்லா நடக்கவும் விட மாட்டான்!” என்ற குரல்
அந்த குரல் சாட்சாத் தேவியின் குரல் தான் ‘போன் ஸ்பீக்கரில் இருக்கிறது போல’ ‘முதலில் இருந்தா?’ என்ற தவிப்பு ஏறினாலும், ‘நான் ஒன்றும் தப்பாக பேசவில்லையே!’ என எண்ணிக்கொண்டார் வேலாயுதம்.
ஆனால் ஆனானப்பட்ட தேவியையே பயம் கொள்ள வைத்து விட்டானே இந்த பிர்லா! என எண்ணியபடியே!
“சரி சம்மந்தி! அனுப்பி வைக்கிறேன்’ என பேச்சை முடித்துக்கொண்டார்.
ஆனால் இதில் பெருங்கொடுமை நினைவுகள் எல்லாம் பிர்லா திரும்ப பெற்று விட்டதாய் அனைவரின் எண்ணமும் ஓட, இரண்டே இரண்டு காதல் சின்னங்கள் தான் இத்தனைக்கும் காரணம் என தெரியவந்தால்?
அங்கே…!
ப்ருந்தாவின் அறையில் இறுகிய அணைப்பிலிருந்து இருவரும் விடுபடவில்லை,
சட்டை முழுதும் ப்ருந்தாவின் கண்ணீர் ஈரங்கள், அவளின் காதலை கதை கதையாய் படித்துக்கொண்டிருக்க, பிர்லாவிற்கோ அடக்க முடியா ஆத்திரம் மூர்க்கமாய் வெளிப்பட்டு கொண்டிருந்தது.
தன் கைகளுக்குள் அவள் இருந்தாலும், விழிகளுக்குள் இன்னமும் விழுந்து கொண்டிருந்தது, டிவியில் ஓடிக்கொண்டிருந்த அந்த வீடியோ!
மேலும் மேலும் அவனது கை இறுகிக்கொண்டே இருக்க, அது உறைந்திருந்த குருதியை உடைப்பெடுக்க வைத்து, பிசுபிசுப்பு படலாமாய் பரவி ப்ருந்தாவின் பின்னங் கழுத்தை நனைத்து, அதை ஒட்டி கீழிறங்கி, அவளுக்கு காட்டி கொடுத்தது.
‘என்னோட பிர்லா வந்துட்டான்!’ என்ற ஆனந்த களிப்பில் இருந்தவளுக்கு, பிசுபிசுப்பான ஈரம் தட்டுபட
‘இவனும் அழறானா?’ ஈரம் தோய்ந்த கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள், அவன் அழுததற்கான சுவடுகளே இல்லாமல் இருந்தது.
குழப்பத்துடன் அவன் பார்வையை தொடர்ந்த இவள் விழிகள் டிவியில் பதிந்து அதில் ஓடிக்கொண்டிருந்த வீடியோவில் விழுந்து சிறு அதிர்வுடன் இவனை மீண்டுமாய் பார்க்க, இந்த தடவை இவளை தான் பார்த்திருந்தான் பிர்லா.
அவன் பார்வையை தாங்க முடியாமல் இவள் தலை குனிய,
குனிந்தவள் அதிர்ந்து போனாள், இறங்கி வந்த குருதி பின்னங்கழுத்தை தாண்டி முன் கழுத்தில் இறங்கி வர ‘ஐயோ இரத்தம்’ படபடத்துப்போய், தன் கழுத்தை இறுக்கி இருந்த பிர்லாவின் கையை இவள் விடுவிக்க ,அவன் அசைந்து கொடுத்தால் அல்லவா இது சாத்தியம்.
“பிர்லா”
“இரத்தம் வருது”
“உன் கையில் இருந்து தான் வருது…” இவள் கத்திய எதற்கும் அவன் செவி சாய்க்கவேயில்லை, அவன் முகத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க அதுவோ இவளை தான் ஆக்ரோஷமாய் வெறித்த படி இருந்தது.
“இங்க பாரு”
“இரத்தம் வருது” மீண்டும் மீண்டும் அலறிய அலறலை சிறிதும் பொருட் படுத்தாமல்
“யார் இந்த வீடியோவை கொடுத்தது?” அழுத்தமாய் கேட்ட குரல், அவளிடம் பதில் இல்லாததை உணர்ந்து
“சொல்லு !,யார் கொடுத்தது?” ஒரு கத்து கத்த
“விமல் !” திக்கி திணறி வந்தது அவள் வார்த்தைகள்.
“யாரு விமல்…” கேட்ட கேள்வியில், கனவில் வாழ்ந்த வாழ்க்கை தரை மட்டமானது போல் ஒரு பிம்பம்!
இவளை சுற்றி இருந்த அறை அவளை சுற்றிக்கொண்டிருப்பது போல் ஒரு வித உணர்வு ப்ருந்தாவிற்கு பொங்கி எழ! மயக்கம் வருவது போல் இருந்தது.