வேலாயுதம் எப்போதுமே அமைதியை கடைபிடிக்கும் ஒரு மனிதர், அது எந்த நேரமானாலும் சரி, எந்த சூழ்நிலையானலும் சரி கட்டுபாட்டை மீறி ஒரு நாளும் கோபம் வந்து பார்த்தில்லை அவரின் மனைவி.
ஆனால் இன்றோ மகளின் மீதான பாசம் கூட இத்தனை கோபமாய் வெளிப்பட கூடுமோ “அதுவும் உயிரோடு இருக்க மாட்டேன்” என்ற வார்த்தையெல்லாம் சொல்லும் அளவிற்கு ! இந்த வார்த்தையை சொல்பவருக்கும் வலிக்குமோ என்னவோ, அவரின் மேல் உயிரை வைத்திருக்கும் இன்னோருவருக்கு தான் அதீத வலியை கொடுக்கும் என இவர் ஏன் உணராமல் போனார்.
பின் சீட்டில் அமைதியாய் கண்மூடி படுத்திருக்கும் மகளை திரும்பி பார்த்தார்,பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவள் இப்படி சிறகொடிந்து படுத்திருப்பதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
முன்னால் திரும்பி கண்களை மூடி சாய்ந்து கொண்டார். எங்கு செல்கிறோம் என தெரியாமல் கணவனுடன் பயணப்பட்டார். சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு விரைந்தது அவரது கார். வேலாயுதத்தின் முக்கியமான கிளை அலுவலகம் இங்கே இருப்பதால் மாதம் இருமுறை வந்து செல்வது வழக்கம்.
இனி மாதம் இருமுறை சென்னை சென்று கொள்ளவேண்டியது தான் என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக நாகப்பட்டினத்திற்கு இடம் பெயர முடிவெடுத்தார் ,மருத்துவமணையில் நடந்த களோபரத்தில்
இருவருக்கும் இரு வேறு திசையில் மயான அமைதியாய் பயணப்பட்டது பலவிதயோசனைகள் அந்த மயான அமைதியும் ஒரு முடிவிற்கு வந்தது “நாகப்பட்டினம், மாநகராட்சி,அன்புடன் வரவேற்கிறது என்றவாசகம்” மேலும் ஒரு கால் மணி நேர பயணத்தின் பின் ஒரு வீட்டின் முன் கார் நின்றது. சென்னை வீட்டின் அளவு இல்லாத போதும் காம்பாக்ட் ஹோம் என்பார்களே அதை போன்று சற்று வசதியான வீடு தான்.
கார் கதவை திறந்துவிட்ட செக்யூரிட்டியிடம் “ஹாஸ்பிடலில் இருந்து நேரா வரோம் நிறைய திங்க்ஸ் டிக்கில இருக்கு எடுத்துட்டு வா ” என கூறி,
மனைவி இறங்கி வருகிறாளா ? இல்லையா ? என கண்டும் காணாமல், பின்கதவை திறந்து ஒரு குழந்தை போல் தன் மகளை கையில் ஏந்தி சென்று அவளுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் படுக்க வைத்து லேசான போர்வையால் மூடி விட்டு, கதவை திறந்தபடியே வைத்துவிட்டு வெளியே வந்தார்.
அடுத்து என்ன செய்வது என தெரியாமல் ஒரு ஓரமாய் சோர்வாய் நின்றிருந்த மனைவியிடம் “விமலேஷ் உங்கம்மா வீட்டிலேயே வச்சுக்க சொல்லிடு, இன்னும் இரண்டு மாதத்தில் ஆனுவல் எக்ஸாம் வருது, முடிஞ்சதும் கூப்பிட்டுக்கலாம் ” ப்ருந்தாவின் துன்பம் தங்களோடு போகட்டும் அவனுக்கு வேண்டாம் என அவன் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தான்.
அதை ரத்தினத்திடம் சொல்லிவிட்டு திரும்ப அதற்கெனவே காத்திருந்தார்ப்போல் அவர் முன் வந்தார் செக்யூரிட்டி
“வீட்டை நல்லா க்ளீன் பண்ணியாச்சு சார், வேலைக்கு பர்மனன்டா இரண்டு பேரை சொல்லியாச்சு, சாயந்திரம் வந்திருவாங்க சார்” என சொல்ல
“ம் ” என தலையசைத்தவர் “இனி நாங்க இங்கே தான், சென்னையில் இருந்து முக்கியமான பொருள் எல்லாம் சாயந்திரத்துக்குள்ள வந்திடும், ஆளுங்களை துணைக்கு வச்சுக்க இப்போதைக்கு என்னென்ன வேணுமோ கேட்டு, வாங்கிட்டு வந்திடு ” என செண்பாவை கண் ஜாடையில் காட்டிவிட்டு மீண்டும் மகளிடம் போய் அமர்ந்து கொண்டார், அவள் முகத்தை பார்த்தபடி.
வெகு நேரம் கழித்து தான் கண் விழித்தாள். எதிரே சேரில் சாய்ந்தபடி தந்தை, கட்டிலின் விளிம்பில் தலை வைத்தபடி அன்னை அதை தாண்டி அந்த அறையை வலம் வந்தது அவள் விழிகள் சில நொடிகளில் இது மருத்துவமணை இல்லை என உணர்ந்தாள்.
‘அப்போ பிர்லா’ என யோசிக்க ஆரம்பித்த நொடி , படாரென எழுந்து அமர்ந்தாள்.
அசதியாய் கண்மூடி இருந்தவர் ப்ருந்தாவின் அரவம் உணர்ந்து சேரை வி்ட்டு அவளருகில் வந்தார் அவர் கைகள் தலையை மெதுவாய் வருடிவிட “என்னம்மா ? என்னாச்சுடா !” என அவளின் பதற்றம் கண்டு அவரது வார்த்தைகள் கூட வருடிவிட்டது.
“அப்பா இது எந்த இடம் ப்பா ? மருத்தவமணையில் இருந்த பதட்டம் அவளிடம் இப்போது இல்லை
ஆனால் “பிர்லா எங்கப்பா ?” என கேள்வி கேட்க மறக்கவில்லை.
அவளின் கேள்விக்கு, வேலாயுதத்தின் வலது கை அவர் முகத்தை அழுத்தமாய் துடைத்தபடி அமைதியாய் இருந்தாரே தவிர பதில் இல்லை பதில் சொல்ல தெரியவில்லை அவருக்கு.
இவர்களது பேச்சில் செண்பாவும் விழித்துக்கொண்டார்.
“ப்பா பதில் சொல்லுங்கப்பா, ப்ளீஸ்ப்பா ” அப்போதும் பதில் இல்லை !
“அப்…ப்.பா உங்களை தான் கேட்குறேன் ” பாவமான அவள் முகம் ஒரு விதமாய் மாற செண்பா வேகமாய் அவளருகில் சென்று “கோபப்படாமல் அப்பா சொல்வதை கேளுடா ” அவள் தாடையை தன் புறமாய் திரும்ப அவரிடம் இருந்து தன்னை பிரித்துக்கொண்டு கட்டிலை விட்டு கீழ் இறங்கினாள்
“பிர்லா எங்க இருக்கான் ” மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை எனவும், தன் கைக்கு அருகில் இருந்த பிளாஸ்க்கை கையில் எடுத்தாள்
“ஏய், ப்ருந்தா.
ப்ருந்தா “ என தாயும் தந்தையும் அவளை தடுக்கும் முன் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடியை சுக்கு சுக்காய் உடைத்திருந்தது அந்த பிளாஸ்க்.
“பிர்லாவை நான் பார்க்கனும் பார்க்கனும் ”
“எங்க இருக்கான் அவன் ”
“அவன்கிட்ட என்னை கூட்டிட்டு போங்க…” ஒவ்வொரு வார்த்தைக்கும் கையில் கிடைத்த ஒவ்வொரு பொருளும் உடைந்து கொண்டிருக்க
நிலைமை மோசமாவதை உணர்ந்து , அவளருகில் நின்றபடி அவளை தடுக்க முயன்ற ரத்தினத்தை ஒரே தள்ளில் விலக்கியவர் தன் ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டி விட்டார் ஒரு அறை ப்ருந்தாவின் கன்னத்தில்
“ங்ஙோய்” என்ற சப்தமே அவள் செவிகளை நிறைக்க, மற்ற உணர்வுகள் ஓய்வெடுத்துக்கொள்ள, பேட்டரி தீர்ந்து போன பொம்மையாய் மாறிப்போனாள் ப்ருந்தா, சப்தநாடியும் அந்த அதிர்ச்சியை உள்வாங்க சில நொடிகள் பிடித்தது.
“இவளை அடிச்சு கொல்றதுக்கா இங்கே கூட்டி வந்தீங்க மரியாதையா எங்களை என்னோட அம்மா வீட்டில் விட்டுடுங்க இல்ல மரியாதை கெட்ரும் என் பொண்ணை பார்த்துக்க எனக்கு தெரியும் ” அதிர்வில் நின்றிருந்த மகளை அரவணைத்தபடி கர்ஜித்த செண்பா, கணவனின் முகத்தில் என்ன கண்டாரோ முந்தானையால் வாய் மூடி அழுதார் ஆனால் அழ இது நேரமல்லவே என அழுத்தமாய் கண்களை துடைத்து மகளை கட்டிலில் அமர்த்தினார்.
அரண்டு போய் இருந்த மகளை ஆறுதல்படுத்தவே நேரம் ஓட்டம் பிடித்தது. ஒரு வழியாய் ஆறுதல் கொடுத்து “சாப்பிட ஏதாவது கொண்டுவரட்டுமா !” என கூந்தலை வருடி காதோரமாய் ஒதுக்கியபடி கேட்க
“பிர்லா எங்கம்மா நீயாவது சொல்லேன் ” இரண்டு வயது குழந்தையாய் கண்களில் நீரை தேக்கி கேட்டாள் ப்ருந்தா
செண்பாவிற்கும் கண்கள் குளமாக, காதில் வாங்கிக் கொள்ளாதது போல் எழுந்தார்.
அவளின் குரல் மாற்றம் பீதியை கொடுக்க மனதிற்குள் தயாரானார் செண்பா
“எங்கே பிர்லா…
என்னை தனியாவிட்டுட்டு போய்ட்டான்ல அவன்.
அதான் என்னை அங்கே இருந்து இங்கே கூட்டிட்டு வந்துட்டீங்க
என் பிர்லாக்கு என்னவோ ஆச்சு !
ஆச்சுல்லம்மா
அப்படிதானே
அப்படிதானே…” கேள்விகள் புலம்பல்களாய் மாறிப்போய் இறுதியில் கத்த ஆரம்பித்தவள் உடைப்பதற்காய் பொருளை தேடினாள் கனமான பொருள் கிடைத்த திருப்தியில் நிமிர்ந்தாள் வெறியோடு. ஆனால் கையில் இருந்த பிளவர்வாஷ், ஆத்திரத்தோடு வீசி எறியப்படாமலேயே, அவள் கையில் இருந்து பிடிமானம் இல்லாமல் வழுகி கீழே விழுந்து நொறுங்கியது.
“ம்மா…” உயிரே போனார்ப்போல் வாழ்வுக்கும் சாவுக்குமான போரட்டத்தில் வரும் அதே குரல் அவளிடம் இருந்து வெளிப்படவும் செய்தது.
அடுத்த இரண்டொரு நொடிகளில் “அ…ப்ப்ப்.ப்பாஆஆஆ” அதிர்ச்சியடைந்த குரல் அலறலாய் மாற புள்ளி மானாய் துள்ளி இரண்டடி பின் சென்று விழுந்து இழுத்தபடி சுவரோடு சுவராய்ஒன்றிப்போனாள்.
இழுத்துக்கொண்ட கால்களை மார்போடு கட்டிக்கொண்டாள் பின்னே தன் முன் சாஷ்டாங்கமாய் விழுந்த தாயை தொடர்ந்து கொஞ்சமும் யோசிக்காமல் வேலாயுதமும் விழுந்திருக்க மின்சாரம் பாய்ந்தார்ப்போல் துள்ளிப்போய் தூரவிழாமல் இருந்தால் தான் அதிசயம்.
“ஏன், இப்படியெல்லாம் பண்றீங்க ” ஆதரவற்ற குரல் அப்பட்டமாய் வெளிப்பட்டது அவளிடம்
தலை கூட நிமிர்த்தி பார்க்க வில்லை இருவரும்
“எழுந்திருங்க இரண்டுபேரும்” இருந்த இடத்தை விட்டு கொஞ்சமும் நகராமல் இவள் சொல்ல
அவர்களது நிழல் கூட அசையவில்லை
“நான் என்ன செஞ்சா நீங்க எழுந்துப்பீங்க?” என்ன சொன்னாலும் செய்வேன் என்ற உறுதி அத்தனை தடுமாற்றத்திலும் அவளிடம் வெளிப்பட்டது.
“பிர்லாவை பத்தி இனி பேச மாட்டேன், அவனை பத்தி கேட்க மாட்டேன்… அவனை தேடி போக மாட்டேன் ” தண்டனைக்கு பயப்படும் குழந்தையாய் ப்ருந்தா கதற
ஆறுதல் கூட சொல்ல முடியா அவளின் அன்னையால் கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.
ஆனால் சப்தமாய் பேச கூட திராணி அற்றார்ப்போல் அமர்ந்திருந்த மகளிடம் எழுந்து ஓடி, தடுமாறி அவளருகில் முட்டியிட்டு விழுந்தார் வேலாயுதம் “எங்களால் உன்னை சத்தியமா இப்படி பார்க்க முடியலை ப்ருந்தா இனி பிர்லாவை கேட்காத . அவனை பத்தி பேசாத, நான் உன்னை பெத்தது நீ சந்தோஷமா வாழறதை பார்க்க தான், இப்படி துடி துடிக்கறதை பார்ப்பதற்காக இல்லை !” வேலாயுதமும் கதற,
“கேட்க மாட்டேன், பேச மாட்டேன்” சிறு குழந்தையாய் தேம்பியவளை குழந்தையை காக்கும் தாயாய் அரவணைக்க, ஒண்டிக்கொண்டாள் அவளும்