ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ப்ருந்தா ! ஆம் தூக்க மருந்தின் உபயத்தில் அவளை அடக்க முடியாமல் உறங்க வைத்திருந்தனர்.
மகளை விட்டு அகலாத பெற்றோர்… எங்கே அகன்றால் பிர்லாவை அடித்து வைக்க போய்விடுவாளோ என்ற பயத்தில் மகளை விட்டு அகலவில்லை இரு குடும்பங்களும் ஒருவர் முகத்தை மற்றொருவர் எப்படி பார்க்க? எதை பற்றி பேச ? பேசி சரிசெய்யக்கூடிய விசயமா இது ? என ஆயிரமாயிரம் கேள்விகள் படை தொடுத்து நிற்க, எதிர்க்க முடியாமல் ஒதுங்கிப்போயினர் அத்தனை பேரும்.
நொடியில் கடக்கும் இன்பம்,யுகங்களாய் கடக்கும் துன்பம் என்ற வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பது போல், எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்கள் நொடியில் கடந்திருக்க, யுகமான இந்த இரண்டு மணி நேரமும் கடப்பதற்குள் ஒவ்வொரு நொடியும் செத்து பிழைத்தார்போல் இருந்தது.
இதோ டாக்டர் சொன்ன இரண்டு மணிநேரமும் முடிந்து, அத்தனைபேரின் வேண்டுதல்களையும் உடைத்துக்கொண்டு அமைதியாய் படுத்திருந்தான் பிர்லா.
தொடர்ந்த இரண்டு நாட்கள், நாற்பத்தெட்டு மணி நேரம் டிரிப்ஸ் மட்டுமே அவன் உடலில் ஏறிக்கொண்டிருக்க, கெடு கொடுத்த இந்த இரண்டு மணிநேரம் கடந்த நிலையில் அனைவருக்கும் இருந்த உயிரெல்லாம் இறங்கிக் கொண்டிருந்தது.
தாங்கள் வேண்டுதல் பொய்யாகி,
தாங்கள் வேண்டிய தெய்வங்கள் பொய்யாகி,
இதோ தாங்கள் பெற்ற பிள்ளையும் பொய்யாகிப்போய் விடுவானோ , மனம் ரணமாய் வலித்தது.
முரளி எதுவும் பதில் சொல்லவில்லை, அமைதியாய் கடந்து சென்றுவிட, பெற்றவர்கள் பரிதவிக்க, வயதான காலத்தில் எங்களில் ஒருவரை எடுத்துக்கொண்டு, எங்கள் பேரனை வாழ வைக்க மாட்டானா இந்த கடவுள்! என சந்திராவின் பெற்றோர் அதை விட அதிகமாய் பரிதவித்தனர்.
‘இவர்களது வாழ்க்கைக்கு இத்தனை தான் ஆயுளா !’
தன் மகளுக்காகவாவது இவர் எழுந்துவிட மாட்டாரா? ‘ஏதாவது அற்புதம் நிகழ்ந்து விடாதா’ என்ற எதிர்பார்பில் அவனில் பதிந்த பார்வையை சற்றும் திருப்பவில்லை ப்ருந்தாவின் தாய்.
அனைத்தையும் பார்த்தபடி வேலாயுதம் வெளியேறிவிட்டார். கண்களை தீண்டிய கண்ணீர் அவர் அறியாமல் கன்னத்தில் உருண்டோட, துடைத்து விட்டு மகளை தேடி சென்றார்.
கணவன் சென்ற சில நொடிகளில் பாரமேறிய மனதுடன் ப்ருந்தா அறைக்கு செல்ல அவளை ஸ்ரெச்சரில் வைத்து தூக்கிக் கொண்டிருந்தனர் இருவர். அருகில் வேலாயுதம் வேறு நின்றிருந்தார்.
“என்னங்க என்னாச்சு ஏன் ப்ருந்தாவை … ஸ்ரெட்ச்சரில் தூக்கிட்டு போறாங்க.”
“பிர்லா இனி ப்ருந்தா கூட பேசவே போறதில்லை, ப்ருந்தா , பிர்லா பேசறதை பார்க்கவே போறதில்லை, இரண்டுமே நடக்கலைன்னா, கண்டிப்பா அவள் பைத்தியமா ஆயிடுவா இருக்கட்டுமா ? இங்கேயே இருக்கட்டுமா அவள் ? சொல்லு…?” என வேலாயுதம் கத்த
தன் மகளை பைத்தியம் என முடிவு கட்டும் முன் தானே ஒரு முடிவெடுக்கவேண்டிய நிலை அவளின் பெற்றவர்களுக்கு. முழுக்க முழுக்க சுயநலமில்லாத போதும் தன் மகளின் பொருட்டு அவளுடைய முழு விசயத்திலும் சுயநலமாய் முடிவெடுத்தார் ரத்தினம். முகத்தை அழுத்த துடைத்து
“சம்மந்தியம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு” என ரத்தினம் இழுக்க
அவரை முன்னால் போக சொல்லி சைகை காட்டி பின்னாலேயே வந்தார் வேலாயுதம்.
அங்கே ஐசியூவில் இருந்து அனைத்து வசதிகளும் கொண்ட வேறொரு தனி அறைக்கு மாற்றிஇருந்தனர் பிர்லாவை
மகனின் கன்றிப்போன கன்னம் கூறியது ப்ருந்தா கொடுத்த அடியின் தீவிரத்தை !
“சம்பந்தி” சந்திராவை அழைத்தார் வேலாயுதம். பார்வதிதேவியும் உடன் திரும்ப
“ப்ருந்தா அப்நார்மலா பிகேவ் பண்றா, அவளோட நடவடிக்கையை நீங்களும் தானே பார்த்தீங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் முழிச்சிடுவா அப்பறம் ” சொல்லமுடியாமல் பிர்லாவின் கன்றிப்போன கன்னத்தில் ஒரு முறை படிந்து மீண்டது வேலாயுதத்தின் விழிகள்
ஆனால் பேசிய விதத்தை எங்கே சம்பந்தி வீட்டார்கள் தப்பாக எடுத்து கொள்வாரோ என்ற பயத்தில் “மாப்பிள்ளை இந்த நிலையில் இருக்கும் போது இப்படி பேசறது தப்பு தான், இந்த நிலையில் மாப்பிள்ளையை பார்த்துக்கவேண்டியது ப்ருந்தாவோட கடமை தான், ஆனால் அவளையே பார்த்துக்க இன்னொரு ஆள் தேவைபடுது, அதோட அவளுக்கும் தனியா ட்ரீட்மெண்ட் தேவை படும் போது இங்க இருந்து எங்க பொண்ணை நாங்கள் கூட்டிட்டு போறது தான் உசிதம் அதோட முரளி டாக்டர் சொன்ன ஹாஸ்பிடல் மாறுவதும் நல்லதுன்னு நாங்க நினைக்கிறோம் ” யாருக்கும் நோகாமல் பேசினார் ரத்தினம்.
‘சரி’ என்ற தலையாட்டலும் இல்லை, ‘வேண்டாம் ‘ என்ற மறுப்பும் இல்லை
“இவங்க இரண்டு பேருக்கும் ஆண்டவன் வேற கணக்கு போட்டு வச்சிருக்கான் போல விதிப்படி நடக்கட்டும் நீங்க ப்ருந்தாக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க மத்ததெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம் ” என தெளிவானதொரு முடிவை கையில் எடுத்தார் பார்வதிதேவி.
சந்திரா, அவரது பெற்றோர் இவர்களுக்கெல்லாம் இந்த முடிவை ஏற்பதில் பெரும் சங்கடம் இருக்க தான் செய்தது. பிர்லா ப்ருந்தாவின் காதல் வாழ்க்கையை நேரில் கண்டவர்களாயிற்றே ! சுணக்கம் இருக்க தான் செய்தது. ஆனால் தடுக்கவில்லை.
தூரத்தில் இருந்தே தன் மருமகனை பார்த்துவிட்டு கனத்த மனதுடனே அங்கிருந்து சென்றனர் ப்ருந்தாவின் பெற்றோர்.
உன் குற்றமா ? என குற்றமா ? என பிரித்தறிய முடியா சூழலில் இரு குடும்பத்தாருமே பிரிந்தனர்.
———–
அடுத்த இரண்டு நாட்களுகளுக்கு பின்
“பிர்லா, பிர்லா கமான் கெட் அப் கெட் அப் மேன் ” ‘சார் பிர்லாவிற்கு கான்சியஸ் வருது சார் ’ அவனது லேசான உடல் அசைவை கூட முரளிக்கு சொல்லப்பட, அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கே இருந்தார் முரளி.
அவனிடம் லேசான உடல் மொழி இருந்ததே தவிர கண் விழிக்கவில்லை, எனவே லேசாய் அவன் கன்னத்தில் தட்டி அவனை எழுப்பிக்கொண்டிருந்தார் முரளி
பிர்லாவின் பிறப்பின் போது இருந்த அதே காத்திருப்பு இப்போதும் கண் விழிக்க பயந்து போய் இறுக்கமாய் கூப்பிய கைகளும், இறுக்கமான விழிகளுக்குள் உலா வந்த விழிநீரும் கூட மண்டியிட்டு வேண்டியது “அவனை மீட்டு கொடு” என்று
முரளியின் பேச்சில், லேசாக கண் விழித்தவனுக்கு, பிறந்த குழந்தையாய் வெளிச்சத்திற்கு கண்கள் கூசியது, சுருக்கி கொண்டான் கண்களை,வெளிச்சத்திற்கு பழகி மெதுவாய் விழித்து தன் முன் நிற்பவர்களை வெறிக்க வெறிக்க பார்த்தான்.
இன்னமும் அவனிடம் பேசிக்கொண்டு தான் இருந்தார் முரளி, அவரின் வாய் அசைவதும் அதன் மூலம் கேட்ட சப்தங்களும் தன் உடல் உறுப்பில் எங்கோ மாற்றம் நிகழ்த்துவதை உணர்த்தினாலும், அதன் அர்த்தம் புரியாமல் தடுமாறினான்.
அவரை விடுத்து , அவனை சுற்றி நின்றிருந்தவர்களை பார்த்து கண்கள் அகலமாய் விரிந்து, பின் புருங்கள் முடிச்சிட்டு கொள்ள தலையின் மெல்லிய நரம்பின் வழியே சிறு வலி பரவுவதை கண் கூடாய் உணர்ந்தான். சிறு வலி பெரு வலியாய் மாற அவனால் தாங்கிகொள்ளமுடியவில்லை. கண்களுக்கும் காதிற்கும் புதிதாய் பழக்கப்பட்ட ஒலிகளையும், ஒளிகளையும் கிரகிக்க அவன் மூளை சண்டித்தனம் செய்தது. எங்கோ பறக்கும் உணர்வு பட்டென விழித்த வேகத்திலேயே மூடிக்கொண்டன அவன் விழிகள்.
‘கான்சியஸ் வர ஆரம்பிச்சிடுச்சு’ என யோசித்தபடியே, அவனுடைய மருந்துகள் சிலவற்றை மாற்றி எழுதி கொடுத்துவிட்டு “அப்சர்வேஷனில் இருக்கட்டும்” என்ற கூடுதல் செய்தியை கொடுத்துவிட்டு சென்றார். அதன்படி ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அவன் சம்பந்தப்பட்ட அத்தனையும் ரிப்போர்டுகளாய் முரளியை சென்று அடைந்துகொண்டிருந்தது.
மறுமுறை கண்விழிக்கும் போது மறுநாள் ஆகிவிட்டிருந்தது.இந்த தடவை அவனது குடும்பத்தார் அனைவரும் சுற்றி இருந்தனர்.
பல முறை கண்களை இறுக்கமாய் மூடியபடியும், திறந்தபடியும் இருக்க, ஒரு கட்டத்தில் அழுத்தமாய் முடிய கண்கள் அமைதியாய் ஒரு நிலையில் நிலைபெற “டாக்டர்” அவன் அறிந்து கொண்டதை வாய் வழி வார்த்தைகளாய் வடிக்க
“உஃப்…” தன்னையறியாமல் பெரு மூச்சு கிளம்பியது முரளியிடம்.
“ஆர் யூ ஆல்ரைட் ”என கேட்டவருக்கு மெதுவாய் விழி திறந்து பார்ப்பதற்குள் , எங்கிருந்தோ கட்டளை பிறந்து ‘இல்லை’ என தலையாட்ட சொல்லியது.
“வேற என்ன செய்யுது !” அவர் கேட்பதற்கு பதில் சொல்லு என ஏதோ ஒன்று உந்த ‘எப்படி பதில் சொல்வது’ என அவன் நினைவு பெட்டகத்தினுள் ஏதோ தேடி தேடி தோற்று போக “த் த்தல ரொம்ப வலி்…க்குது ” இதை சொல்வதற்குள் பெரும் தடுமாற்றம் அவனிடம்
“ஓ எந்த இடத்தில் பெயின் இருக்கு பிர்லா !” முரளி கேட்க
கீழே குனிந்திருந்த அவன் முகம் மெதுவாய் நிமிர்ந்தது. ஆனால் அந்த முகத்தில் பெரும் குழப்பம் சூழ்ந்திருந்த்து. அதை உணர்ந்த முரளி
“என்னாச்சு ?” என கேட்டவருக்கு பதில் கூறாமல் கட்டிலில் சரிந்து அமர்ந்தான்.
“பிர்லா என்னாச்சு ?” அவன் தோளை தொட !
“பிர்லா ?” நெற்றியை சுருக்கினான் !
“ம் பிர்லா நீ தான் பிர்லா !”
“நா…ன்னா ? நா னா பிர்லா ?”
“ஆமாம் நீ தான் பிர்லா உன்னோட பேர் தான் பிர்லா !” சரளமாய் பேச தூண்டியது முரளியின் பேச்சு
“பிர்லா….பி ர் லா ” அவனுக்குள்ளேயே சொல்லி பார்த்தான்
முரளிக்குள் ஏதோ ஒரு அபாய மணி அடித்தது. இந்த முறை முரளிக்கு நெற்றி்சுருங்க “நான் யாருனு தெரியுதா!” என கேட்டார்
“நீங்க டாக்டர் ” முதன் முதலில் கண்டுபிடித்த அறிய கண்டு பிடிப்பாயிற்றே !
“நான் டாக்டர்னு எப்படி தெரியும் ?” பேச வைத்தார் முரளி
“ஸ்டெஸ்தெஸ்கோப் ” அவர் கழுத்தில் கிடந்ததை கை காட்டினான். வார்த்தைகள் ஒரு கோர்வையாய் வரவில்லை என்பதை உணர்ந்து
“ஓ ஓகே நான் டாக்டர் என்னோட பேர் என்ன ?”
‘பேர் பேரா ?’ யோசித்தவனிடம் ‘தெரியலை’ என்ற தலையாட்டல் மட்டுமே