அந்த காலைப்பொழுது சிற்பிக்கும், இனியனுக்கும் இனிமையாகவே விடிந்திருக்க, மகனும் இன்னமும் உறக்கத்தின் பிடியில் தான் இருந்தனர். வேலையை விட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருக்க, அடுத்த வேலையை தேட தொடங்கி இருந்தாள்.
அந்த நிறுவனத்தை பற்றி ஜெகனிடம் தெரிவித்து விட்டிருக்க, அதன் உரிமையாளரிடம் பேசுவதாக கூறி இருந்தான் அவன். ஆனாலும் அங்கு நடக்கும் குளறுபடிகள் மனதின் ஒரு ஓரம் ஓடிக் கொண்டே தான் இருந்தது. குறிப்பாக அங்கு கிடைக்கும் பிரத்யேக உணவுகளுக்காக அங்கு மீண்டும் மீண்டும் வரும் குழந்தைகளை நினைக்கையில் பதறியது அவளுக்கு.
ஆனால், என்ன செய்வது என்பதும் புரியாமல் அமைதியாகவே இருந்தாள்..நேற்று இரவு இனியன் உறங்க வெகு நேரம் ஆகி இருக்க, அதன்பின்பே உறங்கி இருந்தாள். அதனை கொண்டே இப்போது இந்த ஆழ்ந்த உறக்கம். ஆனால் அவள் மகனுக்கு அந்த கோழித்தூக்கம் போதுமானதாக இருக்க, எழுந்து கொண்டவன் எப்போதும் போல அன்னையை எழுப்பும் வேளையில் இறங்கி இருந்தான்.
அவள் அருகில் எழுந்து அமர்ந்து கொண்டவன் அவள் கன்னத்தில், தாடையில் என்று வரிசையாக முத்தமிட, ம்ஹூம் சிபி எழவில்லை.. மகனுக்கு பொறுமை போய்விட அவள் நெஞ்சில் கையை ஊன்றி எழுந்தவன் அவள் மீது அமர்ந்து அவள் முகத்தில் அடிக்க, லேசாக கண்களை திறந்து பார்த்தவள் அவனையும் இழுத்து தன் கைக்குள் அடக்கி கொண்டு மீண்டும் உறங்க தொடங்கினாள்.
“ம்மா..மா..” என்று அவள் கன்னத்தில் கைகளால் சீண்டிக் கொண்டே இனியன் படுத்திருக்க, அவன் கைகளில் முத்தமிட்டு “இனி குட்டி.. அம்மாக்கு தூக்கம் வருதுடா… தூங்குங்க..” என்று கண்களை திறக்காமலே அவள் கொஞ்ச
அவள் தாடையில் முத்தமிட்டவன் “தாச்ச்சு போச்.. போச்….” என்று மழலையாக கூற, உண்மையாகவே உறக்கம் போய்விட்டது அவளுக்கு. மெல்ல அவள் கண்களை திறக்க, அவளின் சமத்து சர்க்கரை கட்டி அழகாக அருகில் இருந்தது. அவனை கண்டதும் சிரிப்பு வர, அவன் எழுப்பி அன்னை எழுந்து கொண்டதில் அத்தனை குதூகலம் துரைக்கு.
அவள் அணைப்பில் இருந்து எழுந்து கொண்டவன், அவள் எழவும் அவள் மடியில் அமர்ந்து கொண்டான். அவனை இரு கைகளாலும் அணைத்து கொண்டவளுக்கு ஏனோ கண்கள் கலங்கி போக, அந்த நிமிடம் வாழ்வின் ஆதாரமே அவன்தான்..
அதன் பின் அவர்களின் வழக்கமான காலைப்பொழுதாக அந்த காலை அமைந்துவிட, காலை வேலைகளை முடித்து அவனுக்கு உணவை எடுத்துக் கொண்டு வந்து அவள் அமர, சமத்தாக அவள் அருகில் வந்து அமர்ந்தான் மகன்.
எப்போதும் போல, அவன் கையை நீட்ட,அவனை மடியில் அமர்த்தி கொண்டே உணவை ஊட்டி முடித்துவிட்டாள். அவனை விளையாட விட்டு சில சாமான்களை கையில் கொடுத்தவள் தன் வீட்டை சுற்றி இருந்த செடிகளுக்கு ஹோஸ் மூலம் தண்ணீர் விட்டு கொண்டிருந்தாள். அவளுக்கு சற்றே பிடித்தமான வேலை இது. அதற்கென ஆள் இருந்தாலும், ஜெகன் திட்டி இருந்தாலும் கூட கண்டு கொள்ளவே மாட்டாள்.
அவள் ஒரு பக்க செடிகளுக்கு தண்ணீர் விடும் முன்பே, எழுந்து வெளியே வந்திருந்தான் மகன். அன்னையை தண்ணீர் பைப்புடன் கண்டவன் குஷியாகி ஓடிவர, அவன் குரலில் அவன் பக்கம் திரும்பினாள் சிபி. கைகளை தட்டிக் கொண்டவன் அவள் தண்ணீர் பீய்ச்சும் பக்கமாக சென்று நிற்க, சிபி அவனை முறைக்க முயன்றாலும் சிரிப்பே வந்தது.
கைகளை விரித்துக் கொண்டு அந்த சாரலுக்காக அவன் காத்திருக்க, மகனை ஏமாற்ற மனம் வராமல், லேசாக அவன் மீது படும்படி தண்ணீரை பீச்சினாள் அவள். அதற்கே குதித்து கொண்டாடியவன் மீண்டும் அவள் நீர் விடும் பக்கம் வந்து நிற்க, அவனின் அழும்பில் லேசாக முறைத்து கொண்டு வேலையை பார்த்தாள் அவள்.
அவள் முடிக்கும் வரை நனைந்து கொண்டிருந்தவன் அவள் பைப்பை கீழே போடவும், ஓடிவந்து அவள் கால் சேலைக்குள் புதைந்து கொள்ள, முதுகில் பொத்தென்று ஒன்று போட்டவள் கைகளில் தூக்கி கொண்டாள்.. “மொத்தமா நனைஞ்சிட்டு, ஆட்டம் வேற..” என்றவள் அவனுக்கு உடைமாற்றி விட, அன்று சனிக்கிழமை என்பதால் அன்றும், அடுத்தநாளும் அவனுக்கு விடுமுறையாக இருக்க, கிரெச் போக வேண்டாம் என்பதில் இன்னமும் மகிழ்ச்சி அவனுக்கு.
அன்று மதியம் வரை அந்த வீடு மொத்தமும் நடந்து நடந்தே அவன் களைத்து போக, மதிய நாவை ஊட்டி அவனை உறங்க வைத்தாள் சிபி. அவன் உறங்கி எழுவதற்குள் அவனுக்கு பிடித்தமான பிரௌனியை தயார் செய்யும் வேலையில் அவள் இறங்கிவிட, அவன் எழுந்ததும் அவனையும் அழைத்து கொண்டு பெரியவரை காணச் சென்றாள்.
ஜெகன் அலுவலகத்திற்கு சென்றிருக்க, ரங்கராஜன் மட்டுமே இருந்தார். அவள் எடுத்து வந்திருந்த கிண்ணத்தை அவரிடம் கொடுக்க, இனியனை வாங்கி அமர்த்திக் கொண்டார் அவர். “என்னடா ராஜா.. இன்னிக்கு பிரௌனியா.. உன் பேரை சொல்லி கிழவனுக்கும் ஜாக்பாட்.. ” என்று அவனை கொஞ்சிக் கொண்டே அதை சுவைத்தவர் அவனுக்கும் ஒரு வாய் ஊட்ட, சப்பு கொட்டினான் அவன்.
சிபி இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றவள் “அவன் கையில கொடுத்திடாதீங்க… கோயிலுக்கு போறோம் ரெண்டு பேரும்..” என்று எச்சரிக்கையாக கூறிவிட, அதற்கு முன்பே கிண்ணத்தை இழுக்க முயன்று கொண்டிருந்தான் இனியன்.
ரங்கராஜன் சிரித்துக் கொண்டே அவனுக்கு ஊட்டிவிட, இரண்டு வாய் வாங்கியதும் அவனை தூக்கி கொண்டு கோவிலுக்கு கிளம்பினாள் சிபி.. வீட்டின் அருகே இருந்த சிறிய கோவிலுக்கு அவர்கள் வர, அங்கே இருந்த பிரகாரத்தில் மகனை விளையாடவிட்டு அமர்ந்து கொண்டாள் அவள்.
அங்கிருந்த ஒரு தூணில் சாய்ந்து இவள் அமர்ந்துவிட, இவளுக்கு பக்கவாட்டில் சற்றே தள்ளி இன்னொரு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தான் இன்பன் அவனுடன் லாரன்ஸ். அவர்களின் கண்கள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது இருக்க, இன்பனை சற்றே வெளிக்கொண்டு வர, அவனை வெளியே அழைத்து வந்திருந்தான் லாரன்ஸ்.
அவன் நினைத்தது போலவே, அங்கு வந்தது முதலாக இன்பன் முகம் சற்று அமைதியாக காணப்பட, நிம்மதியாக அவனுடன் அமர்ந்து இருந்தான். அங்கு அத்தனை குழந்தைகள் இருந்தாலும், கருகரு வென தலைமுடியும், பொது பொது வென உப்பி இருந்த கன்னங்களும், ஓரிடத்தில் நிற்காமல் சுழன்று கொண்டிருந்த கண்களும், கால்களும் என்று கவனம் ஈர்த்தான் இனியன்.
கொஞ்சமாக பூசினாற் போல, ஆரோக்கியமான குழந்தை என்று கண்டதும் தெரிந்து கொள்வதை போல, ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தது அந்த குட்டி வாண்டு. தன் மகன், தன் ரத்தத்தில் உதித்து உயிராக நிற்கிறான் என்று எதையும் அறியாமலே இன்பன் முழுதாக அவன் வசம் சென்றிருந்தான்.
கண் எடுக்காமல் அவனை பார்த்து அமர்ந்திருந்தான் இன்பன். லாரன்ஸ் தோளில் தட்டி அவனை மீட்க “சோ க்யூட்,… இல்ல..” என்றான் அவனிடம்..
லாரன்ஸ் ஆமோதிப்பாக தலையசைத்தவன் “பொண்ணை பார்ப்போம்ன்னு நினைச்சா, இவன் குழந்தையை பார்த்துட்டு இருக்கான்.. சோ சாட்.. ஜீசஸ்..” என்று அவன் புலம்ப, அவனை கடந்து சென்ற பெண்கள் சற்றே விசித்திரமாக பார்த்து வைத்தனர் அவனை.
இன்பன் சிரித்துவிட “ஏண்டா.. சிரிக்கிற.. என்ன சொல்லிட்டேன் இப்போ.. ஏன் அப்படி பார்க்கறாங்க…” என்று அவனிடம் எகிறினான் லாரன்ஸ்.
“முருகன் கோயில்ல உக்காந்திட்டு ஜீசஸை கூப்பிட்டா அப்படிதான் பார்ப்பாங்க.. இதுல உனக்கு பொண்ணு வேற.. மகனே லிண்டாக்கு போன் போடறேன்.. வா.. “என்று எழுந்து கொள்ள
“எங்கே இருந்தாலும், எனக்கு வில்லத்தனம் செய்யுறத மட்டும் சரியா செய்டா..” என்று நொந்து கொண்டான் அவன்.
அதற்குள் அங்கே இனியன் சோர்ந்து போனவனாக தன் அன்னையிடம் சென்று ஒன்ற, அவன்மீது ஒரு கண்ணை வைத்திருந்த இன்பன் அவன் அவளிடம் செல்வதை பார்த்து தான் இருந்தான். அவளின் பக்கவாட்டு தோற்றம் மட்டுமே தெரிய, அவள் யாரென்று தெரியாத காரணத்தால் அதற்குமேல் அவர்களை கவனிக்காமல் கிளம்பி இருந்தான் அவன்..
சிபி கைப்பையில் இருந்த தண்ணீரை அவனுக்கு புகட்டியவள், அவனின் மேல் சட்டையை மாற்றி அவன் முகத்தை லேசாக துடைத்து விட்டு, அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.. அவளின் வண்டியில் அவள் வீட்டிற்கு வர, ஜெகனின் வண்டி முன்னால் நின்றிருந்தது..
அவன் வண்டியை காணவும் “ஜெ ஜெ..” என்ற கூச்சலுடன் வண்டியில் இருந்து இறங்கிவிட்டான் மகன். அப்படி என்னடா அவசரம் என்று அவன் பின்னால் ஒன்று வைத்தவள் முறைத்து கொண்டு நிற்க, அதற்குள் வெளியே வந்திருந்த ஜெகன் இனியனை கைகளில் தூக்கி கொண்டிருந்தான்.
இருவரும் சிபியை பார்த்து சிரித்து வைக்க, “எனக்கு வேலையிருக்கு ஜெகா… கொடு அவனை..” என்று அவள் கையை நீட்ட, அவன் கழுத்தை கட்டி கொண்டு “வெளிய.வெளிய..” என்று இறுக்கினான் மகன்..
“இவ்ளோ நேரம் ஊரை சுத்தியாச்சு.. போதும் வாடா…” என்று அவள் முறைக்க, அவன் கழுத்தை விடாமல் கட்டிக் கொண்டிருந்தான் இனியன்..
“நீ போ.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு தூக்கிட்டு வரேன்…” என்று ஜெகா கூறிவிட
“அவனை வெளியே கூட்டிட்டு போக கூடாது ஜெகா.. இன்னிக்கு ரொம்ப ஆட்டம்.. ஊரை சுத்திட்டே இருக்கணுமா இவனுக்கு…” என்று முறைத்து கொண்டே தன் வீட்டிற்கு சென்றாள் அவள்.
இனியன் இன்னும் அவன் கழுத்தை விடாமல் கட்டிக் கொண்டிருக்க “அம்மா.. போயாச்சு இனியா.. ” என்று ஜெகன் கூறவும், அவன் கழுத்திலிருந்தபடியே தலையை தூக்கி பார்த்தவன் கை தட்டி, சிரித்து, காரை காண்பிக்க, “உன் அம்மா ரெண்டு பேரையும் கொன்னுடுவாடா.. வா நாம விளையாடலாம்..” என்று அவனை வீட்டிற்குள் தூக்கி சென்றான்.
ஜெகன் இனியனை வீட்டிற்குள் தூக்கி வந்தவன் சோஃபாவில் அவனை அமரவைத்து தானும் அருகில் அமர்ந்து கொள்ள, அவன் சட்டை பட்டன் இடைவெளியில் கையை விட்டு, அவன் சட்டையை பற்றிக் கொண்டு எழுந்து நின்றான் அவன். அங்கிருந்து கீழே இறங்க முற்பட, ” எங்கேடா போக போற..” என்று கேட்டுக் கொண்டே அவனை இறக்கி விட்டான் ஜெகன்.
அவன் இறக்கி விடவும், வீட்டிற்குள் அங்கும் இங்குமாக ஓடியவன் ஜெகனை திரும்பி பார்க்க, அவன் விளையாட அழைப்பது புரிய, ஜெகனும் எழுந்து கொண்டான்.. அலுவலகத்தில் இருந்து வந்து அப்போதுதான் குளித்து கீழே இறங்கி இருந்தான் ஜெகன். இன்னும் காஃபி கூட குடித்திருக்கவில்லை.
இனியனோடு அவனுக்கு சரியாக ஓடிக் கொண்டு, அந்த சோஃபாவை சுற்றி வந்தவன், அந்த ஹால் முழுவதும் அவன் பின்னால் ஓடிக் கொண்டிருக்க, சட்டென வாசலை நோக்கி ஓடினான் இனியன். ஜெகனும் அவன் பின்னால் ஓட, அங்கே வாசலில் வந்து நின்ற நெடிய கால்களில் மோதி கீழே விழ இருந்தவனை சட்டென பிடித்து நிறுத்தி கைகளில் தூக்கி கொண்டான் இன்பன்.
அவனுக்கு பின்னால் லாரன்ஸ் மற்றும் ரங்கராஜன் நின்றிருக்க, இனியன் அழகாக அவன் கைகளில் வீற்றிருந்தான். அவர்களுக்கு எதிரில் நின்றிருந்த ஜெகன் நண்பனை மூன்று வருடங்கள் கழித்து காணவும், அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட, இனியன் “ஜெஜெ…” என்று அழைக்கவும் தான் சுயம் தெளிந்தான் அவன்.
அந்த நொடிகளில் பட்டென கண்கள் கலங்கிவிட, வார்த்தைகள் தொண்டை குழியிலே சிக்கி கொண்டது போல ஒரு உணர்வு. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அவனை காண்பதற்காக தவித்து நின்ற நொடிகள் நினைவில் வர, இப்போது அவனே எதிரில் நின்றும் வார்த்தைகள் வராமல் வஞ்சித்தது.
இனியன் “ஜெ..” என்று கையை நீட்ட, குழந்தை முகம் அழுகைக்கு தயாராகவும், முன்னே வந்து அவனை கைகளில் வாங்கி கொண்டான் ஜெகன்.. இன்னும் நண்பனை “வா..” என்று அழைத்திருக்கவில்லை அவன். அப்போதுதான் வரவேற்பாக தலையசைக்க, இன்பனுக்கு அது போதுமானதாக இல்லை.
அவன் நண்பனையே பார்த்து நிற்க, “இன்பா..” என்று கலங்கிய கண்களுடன் அவனை அணைத்து கொண்டான் ஜெகா… இன்பனும் அவனை கட்டி கொள்ள, வெகு நாட்களுக்கு பிறகு அவர்களின் நட்பு புத்துயிர் பெற்றது அங்கே.. அதில் பொசுங்கி போனவன் லாரன்ஸ் தான்.. அவன் புசுபுசுவென்று மூச்சு விட்டுக் கொண்டு நிற்க, இனியன் தானும் இன்பனை ஜெகன் அணைத்தது போலவே அணைக்க முற்பட்டான்.
இன்பன் சிரிப்போடு கையை நீட்டவும், இந்த முறை இலகுவாகவே அவனிடம் தாவினான் இனியன். “யாருடா இந்த குழந்தை… எனக்கு சொல்லாம கல்யாணமே பண்ணிட்டியா…” என்று இன்பன் கேட்க
நெஞ்சை அடைப்பது போல் இருந்தது ஜெகனுக்கு. தன் நண்பனின் நிலையை எண்ணி மனதிற்குள்ளாகவே கண்ணீர் வடித்தவன்
சொல்லி விடுவோமா என்று கூட யோசித்தான் தான். ஆனால், எதுவோ தடுக்க “இங்கே வேலை செய்றவங்க குழந்தைடா..” என்று முடித்து விட்டான்.
அதோடு இனியன் பேச்சை வளர்க்க விரும்பாமல் “எப்படி இருக்க.. எங்கே போன… இப்போதான் வழி தெரிஞ்சுதாடா..” என்று அவன் வரிசையாக கேள்விகளை அடுக்க
“எப்படி இருக்கேன்.. இருக்கேன்… லண்டன்ல இருந்தேண்டா… அங்கேயே பிசினஸ் கூட.. அண்ட் இப்பவும் வழி எல்லாம் தெரிஞ்சு வரல… அங்கே மூச்சு விட முடியாம ஜஸ்ட் தப்பிச்சு வந்திருக்கேன்…” என்று வேதனையாக அவன் கூறிவிட
“என்னடா பேசற… அப்படி என்னடா பிரச்சனை உனக்கு.. உன் அப்பா பெருசா பேசினாரு..” என்று அவன் கோபத்தில் சிவக்க, ரங்கராஜன் “ஜெகா..” என்று அதட்டினார் அவனை..
தான் என்ன சொல்ல வந்தோம் என்று புரிந்தவன் சட்டென தன்னை கட்டுப்படுத்தி கொண்டான். “நீ வா..” என்று அவன் கையை பிடித்து அழைத்து சென்று சோஃபாவில் அமர்த்தியவன் “சந்திராம்மா..” என்று குரல் கொடுக்க, அவர் தலையை நீட்டவும், “இன்பா வந்திருக்கான்.. பாருங்க…” என்றான்.
அவர் மகிழ்ச்சியோடு வெளியே வந்தவர் “தம்பி எப்படி இருக்கீங்க..உடம்பெல்லாம் பரவாயில்லையா… இருங்க.. இருங்க. நான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி பாதம் பால் கொண்டு வரேன்..” என்று அவனை பேசவே விடாமல் உள்ளே ஓடிவிட
“இவங்க மாறவே இல்லைடா..” என்று கூறி இன்பன் சிரிக்க, அவன் மடியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான் இனியன்.. கையில் இன்பனின் மொபைல்..அதை முன்னும் பின்னும் திருப்பி பார்த்து அவன் அமர்ந்திருக்க, இன்பன் ஜெகனிடம் பேசிக் கொண்டிருந்தான்..
“எனக்கு நடந்த விபத்து பத்தி தெரியுமா உனக்கு.. ஏண்டா என்னை பார்க்க வரல..” என்று இன்பன் கேட்க
“உன் அப்பனை கேளுடா..” என்று சொல்லிவிடும் வேகத்தில் தான் இருந்தான் ஜெகா.. ஆனால் வாயை அடக்கி கொண்டவனாக
“அந்த நேரம் நான் மலேசியால இருந்தேன்டா.. ஆபிஸ் விஷயமா போயிருந்தேன். வர முடியல.. சென்னை வந்ததும் உன்னை பார்க்க வந்தா, உனக்கு பழசு எதுவும் ஞாபகத்துல இல்ல.. உன்னை பார்க்க விட முடியாது ன்னு உன் பாட்டி சொல்லிட்டாங்க… உன் அப்பாவும் மறுத்து பேசல..” என்று பெரிதாக குற்றம்சாட்டாமல் கூறினான் ஜெகா…
“என் ஹெல்த் கண்டிஷன் அப்படி இருந்ததுடா… யாரையுமே தெரியாம, யார்கிட்டயேயும் பேச முடியாம ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தேன்.. அதான் அப்படி செஞ்சிருப்பாங்க..” என்று தன் வீட்டினரை விட்டு கொடுக்காமல் அப்போதும் இன்பன் பூசி மெழுக
“திருந்தவே இல்லடா நீ.. மடையா…” என்று அவனை மனதிற்குள் வறுத்துக் கொண்டிருந்தான் ஜெகன்..
இதற்குள் மகனை காணாமல் சிபி அவனை தேடி ஜெகனின் வீட்டிற்கு அருகில் வர, வெளியே புதிதாக வேறு கார் நிற்கவும், வாயிலிலேயே நின்றவள் “இனியா..” என்று குரல் கொடுக்க, சட்டென இன்பனின் மடியில் இருந்து குதிக்க பார்த்தான் இனியன்..