லண்டனில் இருந்த தன் வீட்டின் பால்கனியில் அமர்ந்து வெளியே கொட்டி கொண்டிருந்த பனியை கண் எடுக்காமல் பார்த்திருந்தான் இன்பன். அங்கே ஆடு ஒரு குளிர் காலமாக இருக்க, வெண்பஞ்சு குவியல் போல் கொட்டிக் கொண்டிருந்தது பனி.
அன்னையை இரண்டு நாட்களுக்கு முன்பே இந்தியாவிற்கு அனுப்பி விட்டிருக்க, அவன் மட்டுமே அந்த பெரிய வீட்டில். அன்னை இந்த குளிரை தாக்கு பிடித்திருப்பாரா?? என்று சந்தேகம் எழ, அவரை அனுப்பி வைத்ததே நல்லது தான் என்றே தோன்றியது அவனுக்கு.
அந்த பனி காற்றும், லேசான சாரலும் தன் கனவு பெண்ணை நினைவு படுத்த, முகம் தெரியாத அவளின் நினைவில் மூழ்கி போயிருந்தான் அவன். எத்தனையோ முயற்சித்தும் இன்று வரை அவளின் முகத்தை அவனால் நினைவில் கொண்டு வரவே முடியாமல் போக, இயலாமையில் கொதித்துக் கொண்டிருந்தது அவன் மனம்.
வெளியே பொழிந்து கொண்டிருந்த அந்த பனிச்சாரல் அவனை குளிர்விக்கும் வழி தெரியாமல் தூரமாக நின்றுவிட, வெளியே இருந்த வானிலை மொத்தமாக குளிர்வித்தது என்றால் அவன் மனநிலை முழுவதுமாக எரியும் நிலையில் இருந்தது.
அதுவும் அன்னை வேறு கிளம்பும் நேரம் அவன் திருமணத்தை பற்றி பேசி இருக்க, அவர்களின் நிலையம் புரிந்தது. ஆனால், அதே நேரம் அவர்கள் கைகாட்டும் மஞ்சரியை அவள் முகத்தை எந்த வகையிலும் தொடர்பு படுத்த முடியவில்லை அவனால்.
அத்தைப்பெண் என்ற நினைவு மட்டுமே எப்போதும்.. இடைப்பட்ட அந்த நரக நாட்களை பற்றி தெரியா விட்டாலும் கூட, மீதம் இருந்த நாட்களில் பெரிதாக எந்த நினைவுகளும் இல்லை அவளை பற்றி. அவ்வபோது வீட்டிலும், ஏதாவது விசேஷங்களில் மட்டுமே பார்த்ததோடு சரி.
பாட்டியின் விருப்பத்திற்காக என்று மனதை சரிப்படுத்தி இருந்தாலும், இப்போது ஏனோ முரண்டியது. அந்த கனவு மட்டும் இல்லையென்றால் இப்போதும் கூட ஒத்து கொண்டிருப்பான். ஆனால், கனவு வருகிறதே.. கனவில் அவளும் வருகிறாளே…
இடைப்பட்ட நாட்களில் யாரையாவது தன் மனது விரும்பி இருக்குமோ, அதன் பிரதிபலிப்பே இந்த எண்ணங்களோ என்று எண்ணம் ஓட, ஆனால் தன் அன்னைக்கு கூட தெரியாமலா தான் ஒரு பெண்ணை காதலித்திருப்போம் என்று நினைத்தவனுக்கு மண்டையை பிய்த்து தனியே வைத்து விட மாட்டோமா என்று இருந்தது.
கண்களில் ஆண் மகன் என்பதையும் மீறி கண்ணீர் வழிய, தனக்கு ஏன் இந்த நிலை என்று நொந்து கொண்டிருந்தான் அவன்.. இன்றைக்கு என்று இல்லாமல் மூன்று ஆண்டுகளாகவே இதே நிலை தான்..
என்றைக்கு மருத்துவமனையில் அவன் கண்விழித்து எழுந்தானோ, அன்றிலிருந்தே இதே நிலை தான்.. ஏன் பிழைத்து வந்தோமோ என்று கூட யோசித்திருக்கிறான்.. அவன் வாழ்வின் இளமைக்காலங்கள் என்று சொல்லக்கூடிய எந்த நினைவுகளுமே அவனுக்கு நினைவில் இல்லை.
அன்னை, தந்தையின் முகமே திடீரென முதிர்ந்து விட்டதாக ஒரு நினைவு மட்டுமே அப்போது.. அவன் முதல் வருட கல்லூரி நினைவுகளோடு அவன் நினைவுகள் விடைபெற்று இருந்தது. அங்கிருந்த அனைத்துமே புதிதாக இருக்க, மருத்துவர்களிடம் கேட்டதற்கு அவனுக்கு ஏற்பட்டிருப்பது ஒருவகை நினைவக திறன் இழப்பு என்று முடித்துவிட்டனர். அதன்படி அவன் வாழ்வின் கடைசி ஐந்து ஆண்டு காலத்தை பற்றிய நினைவுகளை மொத்தமாக அவன் இழந்திருந்தான்.
அன்னையிடம் கேட்டபோதோ அவன் கையை பிடித்துக் கொண்டு கதறினாரே தவிர, ஒரு வார்த்தை கூட பேசவில்லை அபிராமி. அருகில் இருந்த அவன் பாட்டி வசந்தா தான் “ஏன் அழுதுட்டே இருக்க அபி.. அதான் என் பேரன் மீண்டு வந்துட்டானே.. அவன் பிழைச்சு வந்ததே போதும் எனக்கு.. வேற எதையும் நினைச்சு வருத்தப்பட்டு அவனையும் வருத்தப்படுத்தாத..” என்று அபிராமியை அதட்டி அடக்கினார்.
பின் அவரே பொறுமையாக இன்பனின் அருகில் அமர்ந்து “ஒரு மாசம் ஆச்சு இன்பா நீ இங்கே வந்து படுத்து… எப்பவும் போல பைக் எடுத்திட்டு காலையில கிளம்பினவன் தான். பிரெண்ட்ஸ் கூட ECR போறதா சொல்லிட்டு கிளம்பின.. ஆனா நீ அங்கே போறதுக்கு முன்னமே எதிர்ல வந்த ஒரு வண்டி கட்டுப்பாடு இல்லாம, உன் பைக்ல மோதிடுச்சாம்..
“உனக்கு தலையில ரொம்ப அடிபட்டு இருந்தது இன்பா.. நீ பிழைச்சு வர்றதே..” என்றவருக்கு வார்த்தைகள் அடைத்துக் கொள்ள, கண்களில் கண்ணீர் வந்தது.. இன்பா மெதுவாக தன் உடைந்திருந்த கையால் அவரது கையை தொட முயற்சிக்க, பேரனின் கை மீது தன் கையை வைத்துக் கொண்டவர் அதன் பின்னான பெரும்பாலான நேரங்கள் அவனுடனே தான் இருந்தார்.
அவனின் கடைசி ஐந்து ஆண்டு கால வாழ்வில் நடந்த விஷயங்களை அவ்வபோது தேவைக்கேற்ப ஒன்றிரண்டாக அவனிடம் கூறியதும் அவர்தான். அந்த நாளுக்கு பிறகு மேலும் கூட ஒரு மாதம் மருத்துவமனையிலேயே கழிய, அதன்பிறகு தான் அவனின் சோதனை காலம்.
அவன் மறந்து போன அந்த நாட்களில் தான் அவன் படிப்பிலும், தொழிலிலும் சிறந்து விளங்கியதே.. அதுவும் கடைசி இரண்டு ஆண்டுகளில் அவனை பலரும் அறிந்து இருந்தனர். அவனின் தொழில் தொடர்புகளும், நட்புவட்டமும் விரிவடைந்து இருக்க, இப்போது மொத்தமாக ஒன்றுமே நினைவில் இல்லை என்ற நிலை அவனுக்கு மட்டும் தானே… அவனோடு பழகியவர்களுக்கு இல்லையே..
வெளியில் என்று எங்கே கிளம்பினாலும் அறிந்தவர், தெரிந்தவர் என்று யாரவது கண்ணில்பட, பெரும்பாலான நேரங்களில் யாரையுமே அடையாளம் தெரியாது அவனுக்கு. தனியே வெளியே செல்லவே பயந்து போனவனாக அவன் வீட்டிலேயே முடங்க தொடங்கிய காலகட்டம் அது.
அவன் தந்தை தான் அந்த நேரங்களில் அவன் துவண்டு விடாமல் காத்தவர். அதிலும் அவன் வெளியே எங்கே கிளம்பினாலும் உடன் வருபவர் அவன் பார்க்கும் ஒவ்வொருவரையும் பெயரோடு அவனுக்கு எடுத்துக் கூறி, அவன் அருகிலேயே இருக்க, அவரின் பெரும்பாலான நேரங்கள் அவனோடு கழிய தொடங்கியது.
ஆனால், அதிலும் ஒரு தலைவலியாக மதுசூனனின் தொழில்களில் அவரின் இருப்பு அவசியமாக இருக்க, அவரின் அலைபேசி பேச்சுக்களை கவனித்தவன் வெளியில் செல்வதை முற்றிலுமாக குறைத்துக் கொண்டான். அவனின் வீடு மட்டுமே அவனின் இருப்பிடமாகி போக, அதிகப்படியான ஒரு மனஉளைச்சலில் அவன் இருந்த நேரம் அது.
ஏன் மாதத்திற்கு மூன்று முறை கவுன்சிலிங் சென்று வர கூட தொடங்கி இருந்தான். அவனின் எண்ணங்கள் ஏன் இப்படி?? ஏன் இப்படி??? என்று அதிலேயே உழல, ஒரு கட்டத்திற்கு மேல் அதிகப்படியான தலைவலியும் கூட ஏற்படுவதுண்டு.
இப்படியாக அவன் வாழ்வை அவன் வெறுத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அவன் பாட்டி திருமணத்தை பற்றிய பேச்சை தொடங்கி இருந்தார். ஆனால் அந்த நேரம் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற எண்ணம் ஸ்திரமாக தோன்றிவிட, ஒரேடியாக மறுத்துவிட்டான்.
அந்த கனவுப்பெண்ணை பற்றி எங்கேயும் குறிப்பிடாமல் மறுத்திருந்தான். இவன் மறுப்பு தெரிவித்த அடுத்த வாரத்திலேயே தூக்கத்திலேயே அவன் பாட்டி இறந்து போயிருக்க, மேலும் குற்றவுணர்வு தான். தன் திருமணத்தை காண ஏங்கி இருந்தவர்கள்.. அந்த மகிழ்ச்சியை கூட அவர்களுக்கு கொடுக்காமல் கொன்று விட்டேனோ என்று புழுங்கி போனான் அவன்.
அதற்கு மேலும் போராட முடியும் என்று நம்பிக்கை இல்லாததால், தற்கொலையை கூட யோசித்து வைத்திருந்தான்.. ஆனால் அன்னையின் அழுது வடிந்த முகமும், தந்தையின் தனக்கான மெனக்கெடலும் நினைவு வர, அந்த நினைவை கைவிட்டான்.
அதற்குமேல் அங்கேயே இருக்கவும் விருப்பம் இல்லாமல் போக, யார்கண்ணிலும் படாமல் எங்காவது சென்றுவிட வேண்டும் என்று தான் ஆசையாக இருந்தது அந்த நொடி. ஆனால் அன்னை, தந்தையை நினைவில் கொண்டவன் ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தான்.
தந்தை அவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாக சொல்ல, தங்களின் தொழில் தொடர்புகளை அறிந்தவன் சற்றே விலகி இருக்க நினைத்து லண்டனுக்கு வந்து சேர்ந்திருந்தான். இங்கே வந்த இரண்டாம் மாதத்திலேயே பாரில் சுயநினைவே இல்லாத அளவுக்கு குடித்து விட்டு கிடந்தவனுக்கு, உதவ நினைத்து அருகில் வந்தவன் தான் லாரன்ஸ்.
அதன் பிறகு அவர்களின் நட்பும், தொழிலும் வளர்ந்த விதத்தையும் யோசித்து அமர்ந்திருந்தவனுக்கு என்ன முயன்றும் அவன் கடந்த காலமும் அந்த கனவுகன்னியும் மட்டும் நினைவில் வரவே இல்லை.
பாட்டியை போலவே அன்னையும் திருமணம் குறித்து பேசிவிட்டு இந்தியாவிற்கு கிளம்பி இருக்க, மனத்திலும் ஏதோ ஒரு இனம் புரியாத பயம். இன்னும் எத்தனை இரவுகள் இப்படி உறக்கம் இல்லாமல் கழியுமோ என்ற வேதனை அவனை உருக்கி கொண்டிருக்க, அவளின் நினைவில் உருகி கொண்டே உறங்காமல் அந்த இரவை கழித்து முடித்தான் அவன்.
அடுத்த நாள் காலை வரை அசையாமல் அந்த கண்ணாடி திரைக்கு பின்னால் அமர்ந்து அந்த பனியை வெறித்துக் கொண்டிருந்தவன் சிவந்து போன விழிகளோடும், தாங்க முடியாத தலைவலியோடும் தான் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான்.
அன்றைய நாள் ஒருவித இறுக்கத்துடனே கழிய, கிட்டத்தட்ட மதியம் இரண்டு மணி அளவில் அவன் தந்தை அழைத்துவிட்டார் அவனுக்கு. பேசியவரின் குரலே சரி இல்லாமல் இருக்க “நீ கிளம்பி வா இன்பா..” என்பதே பிரதானமாக இருந்தது.
“என்ன.. என்ன ஆச்சு டாடி..” என்று அவன் பதறி போக
“ஒண்ணுமில்ல இன்பா… யாருக்கும் ஒன்னும் இல்ல…” என்று முதலில் சொன்னவர் “உன் அம்மாவை ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கேன்.. அவளுக்கு கொஞ்சம் முடியல.. நீ உடனே வா..” என்று கூற
“என்ன.. என்ன அம்மாவுக்கு..” என்றவன் இருக்குமிடம் மறந்து போனவனாக கத்த, அவனின் சத்தத்தில் சற்று தள்ளி அமர்ந்திருந்த லாரன்ஸ் இவன் அருகில் வந்திருந்தான்.
மறுபுறம் மதுசூதனன் அவனை அமைதிப்படுத்த “இன்பா அம்மாக்கு எதுவும் இல்ல.. இப்போ அவ ஓகே தான்.. பட் கண்ணை திறந்தா, முதல்ல உன்னைத்தான் தேடுவா.. அதுக்கு தான் சொல்றேன்.. கிளம்பி வா.. உன் அம்மா நல்லா இருக்கா..” என்று தேவையான விவரங்களை அவனிடம் கூற
ஒன்றுமே முடியாமல் ஓய்ந்து போனவனாக அமர்ந்து விட்டான் இன்பா. அந்த நிமிடங்களில் மட்டும் லாரன்ஸ் உடன் இல்லை என்றால் என்னவாகி இருப்பானோ தெரியாது.ஆனால் உற்ற நண்பனாக அவன் உடன் நிற்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் இருவருக்கும் அன்று மாலையே இந்தியா செல்ல டிக்கெட் போட்டு விட்டிருந்தான் அவன்.
அலுவலகத்தை தங்களுக்கு கீழ் இருந்த நம்பிக்கையானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவனை தனியாக விடாமல் அவனுடன் வீட்டிற்கு வந்தவன் அவன் உடைகளை எடுத்து வைக்க உதவ, அவனை கட்டாயப்படுத்தி எதையோ அவன் வயிற்றில் திணித்து, அவனை அடுத்த இரண்டு மணி நேரத்தில் விமான நிலையத்திற்க்கு அழைத்து வந்து விட்டான் லாரன்ஸ்.
லிண்டா அவனுக்கான உடைமைகளை விமான நிலையத்திற்கே எடுத்து வந்து கொடுத்தவள், இன்பனின் கையை பிடித்துக் கொண்டாள்.. அவள் ஆங்கிலத்தில் “ஒன்னும் இருக்காது இன்பா.. அம்மா சரியாகிடுவாங்க..” என்று கூற
இன்பந் வெறுமனே தலையை மட்டுமேஅசைத்து வைத்தான்.. சற்றே நான் அசைந்தாலும் உடைந்து சிதறி விடுவேன் என்பதை போல் இறுக்கமான நிலை அவனுடையது…
தன்னை தானே இறுக்கி கொண்டு, உணர்வுகளை முழுவதும் கட்டுக்குள் வைத்தவனாக அவன் அமர்ந்திருக்க, லிண்டா சற்றே நெருங்கி அவனை லேசாக அணைக்க, அவள் தோள் சாய்ந்தவன் கண்களில் கண்ணீர் திரள, லாரன்ஸ் ஒருபக்கம் அவனை தோளோடு அணைத்து கொண்டான்.
அவன் தோளில் மொத்தமாக சாய்ந்தவன் “பயமா இருக்கு லா..” என்று கதறலாக கூற
“ஹேய்.. ஒன்னும் இருக்காது மேன்.. அம்மா முன்னாடி இப்படி அழுது வடிஞ்சிட்டே போய் நிற்கப்போறியா..” என்று வெகுவாக தேற்றினான் அவன்.
ஓரளவு அவன் சமாதானம் ஆக, விமானத்திற்கான அழைப்பும் வந்துவிட்டது இதற்குள். லாரன்ஸ் இன்பனை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, கனத்த மனதுடன் அவர்களுக்கு விடை கொடுத்தாள் லிண்டா…
மனம் முழுவதும் “கடவுளே.. அபிம்மா வை காப்பாத்திடு…” என்ற வேண்டுதல் தான்..
அந்த பயணம் மொத்தமும் மௌனமாகவே கழிய, அவன் நிலை புரிந்தவனாக லாரன்ஸ் எதற்காகவும் அவனை கலைக்கவில்லை. இந்தியா வந்து சேர்ந்த பிறகும் கூட, தயராக நின்றிருந்த காரில் ஏறி அவனை மருத்துவமனைக்கே அழைத்து வந்து விட்டிருந்தான்.
அங்கே மதுசூதனன் ஓய்ந்து போனவராக அமர்ந்திருக்க, “டாட்..” என்று இன்பன் அவரை நெருங்கவும், “இன்பா..” என்று அவனை கட்டிக் கொண்டவர் தானும் உணர்ச்சி வசப்பட்டு போக, அந்த இரண்டு ஆண் மகன்களும் தனித்து விடப்பட்டனர் அங்கே.
அபிராமி என்ற ஒருவர் இல்லையென்றால் தாங்கள் இருவருமே ஒன்றுமில்லாமல் போய்விடுவோம் என்பது அவர்கள் இருவருக்குமே புரிந்து தான் இருந்தது… கிட்டத்தட்ட நேற்று மதியத்திலிருந்து நினைவு மொத்தமும் அன்னை மட்டுமே…
இதோ இன்றைய நாளும் மாலை வேளையை நெருங்கி கொண்டிருக்க, இன்னமும் அபிராமி மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தார். அவரின் இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறி இருக்க, இதயத்திலும் லேசான அடைப்பு என்று மருத்துவர்கள் அறிக்கை கொடுத்திருந்தனர்.
ஆனால் ரத்த அழுத்தம் குறைந்தால் அல்லவா, அவரின் உடல்நிலையை சீராக்க முடியும். அவரின் அழுத்தம் குறையாமலே இருந்தது தான் மருத்துவர்களுக்கு இன்னும் தலைவலியாக இருந்தது. மதுசூதனனுக்கு ஒன்றுமே புரியவில்லை முதலில்.
மகன் அருகில் இருப்பது அவசியம் என்று மட்டும் தெரிய அவனையும் இதோ அழைத்துக் கொண்டிருந்தார்.. ஆனால், அன்னையை பற்றி கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை அவருக்கு…
அவர்களின் ஆதாரமாக இருந்த அகரம் உள்ளே படுத்து விட்டிருக்க, ஆதரவில்லாமல் நின்றனர் இருவரும்.
காற்றில் வரும் அவன் வாசம்
காதல் வருகையை உரைக்கிறதோ…
காதலும், காயமுமே துணையாகி போக
காத்திருந்தவள் காத்திருப்பை
பூர்த்தி செய்ய வருகிறானோ
என் இனியவன்…!!!
எங்கே இருக்கிறாய் கனவு பெண்ணே
மடிந்து போக துணிந்து விட்டேன் நான்..
என் வாழ்வின் இறுதி யாத்திரையில்
சாகா வரமாக வந்து சேர
காத்திருக்கிறாயோ…!!!