நியாபக ஊர்வலங்களின் மத்தியில் ஒளி சிதறல்களாய் ப்ருந்தாவின் நினைவுகள்… பாரம் தாங்க முடியாமல் தலை சாய்ந்திருந்தவன் ஆங்காங்கே தெரிந்த காட்சிகளை நிகழ்வுகளாய் கோர்க்க திண்டாடி போனான்
ஓட்கா பாட்டில், பொக்கே, பிறந்தாள் பரிசு அதன் பின்னான பேச்சுக்கள் எல்லாம் கோர்வையாய் ஓடிக்கொண்டிருக்கும் போது நூல் அறுபட்ட பட்டமாய் “கால் டாக்சி ஸ்டாண்டில்” இருந்து நடந்த அத்தனையும் மறந்து போய் இருந்தது
ஆனால் அதன் பின் ‘என்ன பண்ணினானு தெரிலயே, பதிலுக்கு நான் என்ன பண்ணினேன்னும் தெரிலயே…!’
யாருக்கு யார் மேல கோபம் ? யார் ஆரம்பித்த பிரச்சனை ? யார் முடிக்க வேண்டிய பிரச்சனை ?
‘நான் அவளை விட்டுட்டு வந்தேனா இல்லையெனில், அவ என்னை விட்டுட்டு போய்ட்டாளா? ஒருவரை ஒருவர் விட்டு சொல்ல வேண்டுமெனில் யாரோ ஒருவர் கோபத்தில் இருக்க வேண்டும். யார் கோப பட்டது? யார் கோபம் கொள்ளும்படி நடந்து கொண்டது.
என எந்த கேள்விக்கும் பதில் இல்லை.
பெருமூச்சுடன் காரை ஸ்டார்ட் செய்து கேட் தாண்டி வெளியில் வந்தான்.
மருத்துவமணை தாண்டிய மெயின் ரோட்டில் கார் நின்றுவிட்டது !
இல்லை நிறுத்திவிட்டான் வழி தெரியாமல் !
மருத்துவமணை வந்த போது இருந்த நியாபகம், மருத்துவமணையை விட்டு செல்லும் போது காணாமல் போய்விட ‘ப்ச்’ இது வேறையா ? விழிகள் பிதுங்கிப்போனது.
வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி வழி கேட்பதை தவிர அவனுக்கும் வேறு வழியில்லாமல் போய்விட தன் தலைவிதியை மனதார சபித்தான்
ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தான்.
“இத்தனை நேரம் எங்கே போய் இருந்த பிர்லா ? சொல்லிட்டு போக மாட்டியா ? எத்தனை போன் கால் பண்றது ? அதை அட்டெண்ட் பண்ணனும்னு கூட தோணலையா ? கலைப்பும் சோர்வுமாய் வீட்டிற்கு வந்தவனை பார்வதிதேவி குறுக்கு விசாரணை செய்ய
“நான் உயிரோட வந்ததே பெரிசு அதை நினைச்சு சந்தோசப்பட்டுக்கோங்க ” ப்ருந்தாவின் நினைப்புகள் மொத்தமும் கோபமாய் உருமாறி தன் தாயின் மீது பாய்ந்தது.
“பிர்லா…!” என பார்வதிதேவி ஒரு புறம் சந்திரா ஒரு புறம் என இருவருமே ஒன்றாக கத்தியே விட்டனர்
“பிர்லா பிர்லா பிர்லா…. இந்த பிர்லாவை நீங்க பெறாமலேயே இருந்திருக்கலாம் . இல்லை நான் வேற எங்கேயாவது பிறந்திருக்கலாம்” என் நியாபக மறதி இவர்களால் தானே ஆரம்பமானது என்ற எரிச்சல் அப்பட்டமாய் வெளிப்பட்டது அவன் வார்த்தையில்.
அது புரியாமல் “ஏன் பிர்லா என்னாச்சு ஏன் இத்தனை கோபம்…! நாங்க என்னடா பண்ணினோம் ” அவரது கண்களிலும் நீர் நிறைந்து போனது.
“என்ன பண்ணினீங்களா ? நீங்க பண்ணின வேலைக்கு தான் நான் அனுபவிக்கிறேனே வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் “ ப்ருந்தாவுடனான வாழ்க்கைக்காய் ஏங்கியது அவன் மனம்.
“நடந்தது என்னனு சொல்லுடா முதலில் ” கண்ணீரை புறம் தள்ளி மகனின் அருகில் பெற்றவர்கள் வர
“ம் வர வழியில் பிட்ஸ் வந்திருச்சு, எப்படியோ ஆஸ்பிடல் போய்டேன் ஆனா திரும்ப வர தெரில ஏன்னா பாதையை மறந்துட்டேன்
எல்லாத்தையும் மறந்து போன மாதிரி இந்த நோயை என்னைக்கு நான் மறக்குறனோ அன்னைக்கு தான் நான் நிம்மதியா இருப்பேன் ” இருந்த அத்தனை கோபத்தையும் கொட்டி விட்டு சென்றான்.
சந்திரா ஓரளவு நிதானத்திற்கு வர. அதிர்ந்து சிலையாய் நின்றிருந்த பார்வதிதேவியிடம் வந்த
“அவனோட கோபம் வெளியில் வரது ஒரு வகையில் நல்லது தான் பார்வதிதேவி அவன் ரிலாக்ஸா இருப்பான் விடு “என
“அப்போ பிட்ஸ் நியாபக மறதி ?” என இழுத்தவர் “கெங்காகிட்ட பேசி பார்க்கலாமா ?”
“எல்லாம் பேசியாச்சு ! இனி பேச என்ன இருக்கு “
“அப்போ என்னங்க பண்றது !”
“விடு அவனே வந்து பேசுவான் ” மகனின் கோபமறிந்து ,குணமறிந்து சந்திரா தான் பார்வதிதேவியை சமாதானம் செய்யும் படி ஆனது.
அதன் விளைவு, பார்வதிதேவி கெங்காவை தேடி மருத்துவமணைக்கே வந்து விட்டார்.
“பிர்லாவா இப்படி நடந்துகொண்டான் ?” நடந்த அத்தனையையும் பார்வதிதேவி வாயிலாக தெரிந்து கொண்ட கெங்காவிற்கு அதிர்ச்சி தாளவில்லை.
“ம் ஆமாம் கெங்கா பிர்லா தான் இத்தனை கோபமாய் பேசினான் .” பயம் ஒன்றே போதுமானதாய் இருந்தது பார்வதிதேவியை கெங்காவிடம் இழுத்துவர ஆம் பார்வதிதேவி மட்டுமே வந்திருந்தார்.
ஒரு காலத்தில் அனைத்துமாய் இருந்த கெங்கா, பிர்லாவை காரணம் காட்டி சந்திராவை விட்டு சிறிது சிறிதாய் விலக ஆரம்பித்து, அந்த சிறு கீரலை இன்று பெரும்பள்ளமாய் ஆக்க, கெங்காவின் மேல் ஏற்பட்ட ஏக்கம் கோபமாய் திரும்ப இப்போதெல்லாம் கெங்காவிடம் போனில் கூட பேசுவதில்லை சந்திரா, பிர்லா சம்மந்தப்பட்ட விசயமாய் இருந்தால் கூட அப்படி ஒரு கோபம் அவரிடம் அந்த கோபம் அவ்வப்போது வெடித்த வண்ணம் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் “ப்ருந்தாவோட எதுவும் பிரச்சனையா ?” இப்போதும் அவனது பிரச்சனையை துல்லியமாய் கணக்கிட்டார் கெங்கா.
“எனக்கும் அப்படி தான் தெரியுது, ஆனால் எதுக்காகனு தெரியலையே” தன் சந்தேகத்தையும் ஒப்பு கொண்டார் பார்வதிதேவி
“மே பி அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாமல் இந்த நோய் தடுக்குதே என்ற ஆதங்கமா கூட இருக்கலாம் அதனால வந்த கோபமாவும் இருக்கலாம் ”
‘நான் கல்யாணம் பண்ணிக்கலாமா ? எதுவும் பிரச்சனை வருமா ?’ இதில் இருந்த தயக்கம்
‘நான் ப்ருந்தானு ஒரு பொண்ணை லவ் பண்றேன், ஆனால் அவள் கிட்ட நான் எதுவும் சொல்லிக்கலை ’ இதில் சிறிதளவும் தயக்கம் என்பதே இல்லை பிர்லாவிடம். அதை நினைவு கூர்ந்தபடி கெங்கா பதில் சொல்லிக்கொண்டிருக்க
“இப்போ வந்த பிட்ஸ் பத்தி உன்கிட்ட எதுவும் சொன்னானா ?” ப்ருந்தா பற்றிய பேச்சை அப்படியே கத்தரித்தார் பார்வதிதேவி
மெலிதாய் எழுந்த இதழ்வளைவுடன் “இல்லை என்கிட்ட வரவேயில்லை கால் பண்ணினேன் எடுக்கவும் இல்லை அவாய்ட் பண்றான் அது மட்டும் தெரியுது ” என
“ஓ “ அடுத்து பேச தெரியாது அமைதியா பார்வதிதேவி இருக்க
“பிர்லாவோட ஸ்ட்ரெஸ் இப்படி கோபமா வெளிவரது ஒரு வகையில் நல்லது தான் வாழ்க்கையை அதோட போக்கில் விடுங்க, வீணா உங்க ஹெல்த்தையும் ஸ்பாயில் பண்ணிக்க வேண்டாம் ” என ஒரு மருத்துவராய் அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தார் கெங்கா.
ஆனால் பிர்லாவோ, ப்ருந்தாவை மறக்க, வழக்கம் போல் கம்பெனி வீடு யோகா என பொழுதுகளை இவன் துரத்த வேண்டிருந்தது, ப்ருந்தாவை துரத்தமுடியாமல் !
அன்று யோகா கிளாஸ் வந்திருந்தான். அங்கிருந்த அனைவருக்கும் ஈஷா யோகா சுவாரஸ்யமாய் போய்க் கொண்டிருக்க அவனுக்கு மட்டும் சுவாரஸ்யமாய் இல்லை போலும், அதில் அமர பிடிக்காமல் இடையிலேயே எழுந்து வந்துவிட்டான் பிர்லா
காரை எடுக்க வந்த பார்க்கிங் ஏரியாவில், அவனை பார்த்துவிட்டாள் ப்ருந்தா.
‘பிர்லா ! .’ என கிட்டதட்ட இமைகள் பிளந்து தன்னவனை தாறுமாறாக சைட் அடித்து கொண்டிருந்தது ப்ருந்தாவின் விழிகள்
எவ்வளவு நேரம் சைட் அடித்தாளோ ! அவன் கிளம்பும் முன் அவனை பிடித்தாள்
“நீயென்ன இங்க இருந்து வர்ற ?” கார் பார்க்கிங் ஏரியாவில் நின்றிருந்தவனை ப்ருந்தா வழி மறைத்து கேட்க
‘அசரீரியாய் கேட்ட’ தன்னவளின் குரலில் பிரம்மையோ என நின்று விட்டான்.
சட்டென உயர்ந்த இதயத்துடிப்பை, மெல்ல கட்டுக்குள் கொண்டு வந்தவன். ‘அன்றைக்கு பிறகு இன்னைக்கு தான் இவளை பார்க்கிறோம்’ மெலிதான படபடப்பும் எழுந்தது அவனுள், நடந்ததை மறந்துவிட்டோமே ! என்றபடி
“நான் வந்தது இருக்கட்டும் நீ எங்க இங்கே ?” படபடப்பை அடக்கியபடி கேட்டான் பிர்லா.
“ம் உன் மாமியாரை பிக் அப் பண்ண வந்தேன் !” என
“ஓ…” என இழுத்தவன் “என்ன மாமியாரா…?” அதிர்ச்சியடைய
“எனக்கு அம்மானா ? உனக்கு மாமியார் தானே !” என தன் அன்னையும் யோகா கிளாஸ் வருவதை இவள் சொல்ல
“அது சரி…”என சிரிப்பிற்கு தாவியது அவன் முகம்
“நீ எங்க இங்கே ?” என அவனை போலவே கேட்க
“நான் யோகா போறது வழக்கம் தான் ரெகுலர் கிளாஸ் ஆனால் இன்னைக்கு ஈஷா குருவோட ஸ்பீச் “ என
“ஓ அதான் பாதியிலேயே வந்திட்டியா ?” என்ற ப்ருந்தாவின் நக்கலான குரலில் இருக்கும் இடம் மறந்து சட்டென அவள் வாயை பொத்தினான் பிர்லா யார் காதிலும் விழுந்துவிடுமோ என
“பாதியிலேயே வந்திட்டா பிடிக்கலைன்னு அர்த்தமா ? எனக்கு ஆபிஸில் மீட்டிங்கும் இருக்கலாம் இல்லையா !” அவள் கண்களை பார்த்து பேச
அவன் முகத்திற்கு சில இன்ச்க்கள் மட்டுமே கீழிருந்த அவள் கண்கள் இவனை அசையாமல் பார்த்திருக்க
இவனும் அசையாது பார்த்திருந்தான் இவள் பார்வையின் வீரியம் ஏதோ செய்ய, அவள் இதழ்களில் இருந்து தன் விரல்களை எடுத்து, இரண்டடி தள்ளி நின்று “ஏன் அப்படி பார்க்குற ?” என
“அன்னைக்கு நான் பண்ணின வேலைக்கு எப்போவுமே என்கிட்ட பேச மாட்டனு நினைச்சிட்டு இருந்தேன் ஆனால்…! நீ தொட்டே பேசற ! என்மேல நிஜமாவே கோபம் இல்லையா !” என கேட்க.
‘நியாபகம் இருந்தா தானே,கோபப்படறதுக்கு’ என அவன் மனம் பதில் சொல்ல ‘நியாபகம் இருந்தா நீ கோபப்பட்டு இருக்க மாட்ட கோமாக்கே போய் இருந்திருப்ப !’ என அவன் மனசாட்சி கௌண்டர் கொடுத்தது.