‘வேறு யாராவதா…’ இந்த வார்த்தைகள் அவன் மூளையை சென்று அடைந்த அடுத்த நொடி, அவள் இறங்கிய இடத்தை சுற்றிலும் பிர்லாவின் பார்வை பயத்துடன் சுற்றி வர ‘இந்த இடத்தில் இங்கு இருக்கும் இத்தனை தெருவில் எங்கு சென்று நான் தேடுவேன்?’ சீறி பாய வேண்டிய கால்கள் சிக்கி கொண்டு போராட, நிதானமாய் இருக்க வேண்டிய மூளை நிதானமில்லாமல் உருக்குலைய
தலை கிறுகிறுக்க பித்துபிடித்து போய் ரோட்டின் நடுவிலேயே முழங்காலிட்டு பொத் என விழுந்தான்
“ஏய், பொண்ணுங்களை கிட்நாப் பண்ண முன்னாடி மொபைலை முதலில் புடுங்கனும்னு தெரியாதாடா பரதேசி” மீண்டும் அதே கணீர் குரல் பிர்லாவின் காதை தீண்ட
தரையில் முழங்காலிட்டு அமர்ந்திருந்தவனின் கூனி குறுகி இருந்த உடல் விறைப்பாய் விரைத்து நின்றது.
முகத்தை மட்டும் குரல் வந்த திசைக்கு திருப்ப கண்ணில் தேங்கிய நீர் , வந்த வேகத்திலேயே உள்ளுக்குள் இழுக்க பட, அந்த நீரால் கூட அவனது கண்களின் வெப்பத்தை குறைக்க முடியவில்லை போலும் செங்கங்குளாய் மாறிப்போனது.
ஆம் அவன் விழிகளில் விழுந்தது சாட்சாத் ப்ருந்தாவே தான்.
எழுந்து நிற்க வேண்டும் என்பது கூட மறந்து போனது அவனுக்கு. ஆனால் அதற்கு கூட காத்திருக்காமல், அவன் முன் வந்து அவனைப்போலவே மண்டியிட்டு அமர்ந்தாள் ப்ருந்தா., அவனிரு தோளிலும் தன் இரு கைகளையும் போட்டு
“இனி என்னை தனியா அனுப்பி வைப்ப வச்சு தான் பாரேன்” என அவனிடம் பெட் கெட்ட வைத்தது
அவனில் தெரிந்த அவளுக்கு மட்டுமேயான காதல்
ஆழமான கண்களின் கலக்கமும்
அழகிய முகத்தின் இறுக்கமும்
ஆறடி உயர உடலின் நடுக்கமும்
அந்த உடலுக்குள் இருக்கும் உயிரின் தேடலும்
எனக்காக
எனக்கே எனக்காக ! என மகிழ்ந்தது அவள் மனம்
தன்னவனின் வலி தெரியாது
தன் மன்னவனின் நோய் புரியாது
அது அவனுக்கு கொடுத்த பயம் அறியாது
கர்வம் கொண்டது அந்த பேதையின் மனம்
அவன் தோளில் கிடந்த கைகளை மாலையென கோர்த்து பிடித்து “இவ்ளோ காதல் இருக்குல்ல பின்னே ஏன் நமக்குள்ள காதலே இல்லைன்னு இத்தனை தூரம் நடிக்கனும்?” என கிண்டலாய் பேச நினைத்தவளுக்கு மெலிதான குரலாய் உருமாறிப்போனது அவனின் நிலை அறிந்து.
“எனக்கு ஒன்னும் ஆகாது நீ இருக்குற வரை! நம்பளோட காதல் இருக்குற வரை!” வார்த்தைகள் செவியில் விழ, அவளிதழ்கள் அவன் நெற்றியில் விழுந்து அழுத்தமாய் படிந்து மீண்டது “ரொம்ப பயப்பட வச்சிட்டனோ!” என கேட்கவும் செய்தாள்.
அதையெல்லாம் உணராத பிர்லா, அவனது உடலில் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தான், வெகு வருடங்களுக்கு பிறகு.
அவளிரு கைகளையும் வேகமாய் உதறி பட்டென எழுந்தான்
தன் பின் இவள் வருகிறாளா இல்லையா என கவனிக்க கூட இல்லாமல் பிர்லா அவனது காருக்கு சென்றான்.
“ஸ்டியிரிங் வீலில் கை வைத்து தலையை பின்னுக்கு சாய்த்து பெரிய பெரிய மூச்சுக்களாய் வெளி விட்டு கொண்டிருந்தான். ‘ரொம்ப கோபத்தை ஏத்தி விட்டுட்டோமோ?’ என இவளும் சென்று காரினுள் ஏறி அவன் அருகில் அமர்ந்தாள்.
“செம்ம கோவத்தில் இருக்க போல பயம்மா இருக்கு பிர்லா” என பேசயதற்கு அவனிடம் பதிலே இல்லை.
“இல்லை நீ என்னை தேடினியா இல்லையான்னு செக் பண்ணினேன் பரவாயில்லை நல்லாவே தேடினே?” இவள் முடிக்கும் முன்.
“காரை விட்டு கீழ இறங்கு” என வித்யாசமான மூச்சுக்களுடன் வந்து விழுந்தன வார்த்தைகள் பிர்லாவிடமிருந்து.
“ஹான்… என்ன சொன்ன…!” அவன் நிலை தெரியாமல் வாய் வார்த்தை வளர்க்க
“காரை விட்டு கீழ இறங்க சொன்னேன்!” முகம் செவ செவ என சிவந்து போக
“இறங்கு!” என ஆன மட்டும் கத்தினான் பிர்லா
அவனது கோபத்தில் படாரென காரை விட்டு இறங்கினாள், அடுத்த நொடி விர்ரென சென்று மறைந்தது அவன் கார்
எத்தனை கோபம் இருந்தாலும், இப்படியா செய்வான்? என தோன்றியதே தவிர, அவள் செய்து வைத்த காரியத்தின் வீரியம் அவளுக்கு துளியும் தெரியவில்லை.
கோபம் ஒரு புறம் இருந்தாலும், வெறுப்பை இப்படி காட்டியிருக்க வேண்டாம் என தோன்றிய நொடி, கண்கள் கலங்க தயாரானது எதுவாக இருந்தாலும் ‘டேக் இட் ஈசி’ கேரக்டர் எத்தனை தைரியம் இருந்தும் எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு கண்ணீர் பெருகியது ப்ருந்தாவிற்கு
ஆனால் அழ பிடிக்காமல் ஒரு ஆட்டோ பிடித்து தன் வீட்டிற்கு வந்தாள்.
“ஏம்மா ஒரு நிமிஷம்” ஆட்டோவை விட்டு இறங்கிய ப்ருந்தாவை தடுத்தது ஆட்டோகாரனின் குரல்
‘என்ன?’ என்பது போல் இவள் பார்க்க
“சொல்றேனு தப்பா எடுத்துக்காத தனியா வராதமா வெளியில். கூட யாரையாவது துணைக்கு அழைச்சிட்டு வாம்மா” என சொல்ல
“ஏன்? எதுக்கு?” என்பது போல் இவளும் கேட்க
“நீ ஆட்டோவில் ஏறியதில் இருந்தே, உன்னை ஒருத்தன் பாலோ பண்ணிட்டு வரான். அதான் தனியா போக வேண்டாம்னு சொல்றேன்” என ஆட்டோ காரன் பேசி முடிக்கும் முன்
“உன்னை பாலோ பண்றங்களா? யாரை சொல்றீங்க” என கேட்க
“அப்படியே திரும்பி பாருங்கம்மா ஒரு கருப்பு கார் யூ டர்ன் அடிச்சு திரும்புதே அந்த கார் தான் என
“திரும்பி பார்த்தவளுக்கு புழுதி தான் கண்ணுக்கு தெரிய வேகமாய் தெரு முனை வரை ஓடிச்சென்று பார்த்தாள். அது பிர்லாவின் கார்.
“பிர்லா…” அதிசயித்து போய் விரிந்து வெடிக்க தயாரானது ப்ருந்தாவின் கண்கள். ஏனெனில் அவளை தொடர்ந்து வந்தது பிர்லாவின் கார் தான்
அழுகையில் நிறைந்த கண்ணீர், ஆனந்த ஊற்றாய் வழிந்தோடியது அவள் கண்களில்
……………….
ப்ருந்தா கடத்தப்பட்டு இருக்கிறாள் என்ற செய்தி அவனுக்குள் இறங்குவதற்குள், ப்ருந்தா தான் ஏமாற்றி நடித்திருக்கிறாள் என்ற செய்தி அவனில் எரிமலையை போல் வெடித்து சிதறியது. இருந்த அத்தனை கோபத்தையும் அவள் மேல் காட்டும் முன்பே, பிர்லாவின் உடலின் மாற்றங்கள் அவனுக்கு விட்டு போய் இருந்த நோயை உணர்த்தியது. அதற்கு மேல் அவளுடன் இருந்தால் சரிவராது என அவளை இறக்கிவிட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
ஆனால் சிறிது தூரம் மட்டுமே செல்ல முடிந்தது, அதற்கு மேல் அவன் உடல் ஒத்துழைக்க மறுத்து, வியர்வை வழிந்தோட, உள்ளிழுக்கப்படும் சுவாசம் போதாது, அதிகமாய் சுவாசத்தை அவனுடல் எதிர்பார்த்தது. தன் உயிர் தன்னை விட்டு பிரிவது போல் ஒரு உணர்வை உணர்ந்தவனுக்கு, அவனை கிராஷ் செய்து சென்றது ப்ருந்தாவை சுமந்து சென்ற ஆட்டோ
இருட்டிக்கொண்டு வந்த கண்களுக்கு ப்ருந்தாவின் உருவம் உயிர் கொடுத்ததோ என்னவோ ஆட்டோ வேகத்திற்கு தன் காரை செலுத்தினான் அந்த நிலையிலும்
ப்ருந்தா வீட்டு வாசலில் இறங்கியதும் அத்தனை நேர தாமதத்தையும் தன் வேகத்தில் சரிகட்டி விரைந்தான். முன் பின் தெரியாத ஏரியா ஆட்டோவை பின் தொடரும் போது கூட தெரியவில்லை இது எந்த ஏரியா என! அன்று விமலேஷை இறக்கி விடும் போது கூட ப்ருந்தாவை பற்றிய பேச்சுகள் மட்டுமே அவன் காதில் விழ விமல் தான் அவ்வப்போது “மாமா லைப்ட் மாமா ரைட்” என பாதை சொல்லி அழைத்து போனான். ஆனால் இன்றோ பாதையை கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட எழவில்லை அதற்கு அவனுடல் ஒத்துழைக்கவும் இல்லை
மருந்துகளின் தேவையை உணர்ந்த உடல், போகும் வழியில் மருத்துவமணையை தான் தேடியது. போகும் வழியில் அவன் கண்ணுக்கு தென்பட்ட மருத்துவமணைக்குள் நுழைந்தான். மறக்காமல் காரினுள் இருந்த பர்சை எடுத்துகொண்டு உள்ளே தள்ளாடி தான் சென்றான்.
மருத்துவமணையில் ரிசப்சனில் நின்றிருந்த பெண்ணிடம் தெளிவாய் பேச கூட முடியவில்லை. பேச்சுடன் மூச்சும் தடைபட உடலில் லேசாய் வலிப்பு காணும் அறிகுறி தென்பட சிறிது நொடிகளில் முழு மயக்கத்திற்கு சென்றுவிட்டான்.
அவன் பேச்சுக்கு செவி கொடுத்த அந்த பெண், இவனது நிலை கண்டு திடுகிட்டு போனாள். பின் சிஸ்டர் என சத்தம் கொடுக்க சில பல நொடிகளில் அவன் ஸ்ட்ரெச்சர் ஒன்றில் ஏற்றப்பட்டு அவனை அவசரசிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட, அந்த ரிசப்சன் பெண் கீழே விழுந்திருந்த அவனது பர்சை எடுத்து கொண்டு சென்றாள்.
அவன் சொல்லாமல் விட்டாலும், பர்ஸில் இருந்த பணம் அவனுக்குரிய சிகிச்சையை துரிதப்படுத்தியது. அதன் பின் அவனுக்கான மருத்துவத்தை அவன் உடல் காட்டி கொடுக்க ஆரம்பமானது அவனுக்கான வைத்தியம் கிட்டதட்ட நான்கு மணிநேரமும் மருத்துவமணையில் தான் இருந்தான் அந்த அவசர சிகிச்சையில்.
கையில் இருந்த வென்பிளான்ட் அகற்றபட்டு இருக்க பெரு்மூச்சொன்றை வெளியிட்டபடி மருத்துவரை பார்க்க சென்றான்
அவனுக்கான கேஸ் கிஸ்டரியை அவன் மூலமாக தெரிந்த டாக்டர் தேவையில்லாத பேச்சுகளை தவிர்த்து
“ப்ரஸர் இத்தனை அதிகமாகுற அளவுக்கு அப்படி என்ன பிராளம்? அதுவும் இந்த வயதில்? கூடவே பிட்ஸ் வேற, இதெல்லாம் பாரக்கவேண்டிய வயசு இல்ல உங்க வயசு ப்ரசர் கொஞ்சம் கன்ட்ரோல்ல வச்சுக்கோங்க. அல்ரெடி நீங்க யூஸ் பண்ற டேப்லெட்டையே கண்ட்னியூ பண்ணுங்க அதை விட முக்கியம் நல்லா தூங்கி எழனும் ம்” என மருத்துவர் எழுப்பிய கேள்விக்கு
“ம் சரிங்க சார்” என்ற வார்த்தையே பதிலாய் வந்தது அவனிடத்தில்
“ஈஈஜில கொஞ்சம் பிராப்ளம் மாதிரி தெரியுது பிர்லா உங்க நியூரோ டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணிடுங்க. மறந்துடாதீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ பண்ணிடுங்க. அதான் உங்களுக்கு சேப்“ என கூறவும்
அப்போதும் அவனிடம் சிறு தலையசைப்பு மட்டுமே வந்தது.
பணத்திற்காய் பர்சை தேடினான்…? காணவில்லை! பேண்ட் பாக்கெட் ,சர்ட் பாக்கெட் என தடவி பார்க்க அங்கிருந்த நர்ஸ் ஒருவர் வந்தார் பர்சை எடுத்து கொண்டு வந்தார். “தேங்க்யூ” என நர்ஸிடம் கூறியவன், அதை வைத்து பில் செட்டில் செய்து வந்தான்
மருத்துவமணையை விட்டு வெளியேறியவன் திரும்பி நின்று பார்த்தான், அறியாத மருத்தவமணையில் அறிந்து கொண்டது என்னவோ அவனது காரை மட்டும் தான் இகழ்ச்சியான சிறு முறுவல் தானகவே தோன்ற
“உன்னை என்னைக்கு மறக்க போறேனோ தெரில” என காரிடம் பேசியபடி, அதனுள் ஏறி அமர அவனது காலடியில் கிடந்தது அவனது மொபைல் போன்.
“நீ இங்க இருக்கியா?” என அதை எடுத்தான். வேறு எதையெல்லாம் காரினுள் தவற விட்டுட்டு இருக்கோம் என துளாவினான். தன் அருகில் இருந்த சீட்டில் இருந்து நழுவிக்கிடந்தது பேக் செய்த ஓட்கா பாட்டிலுடன் மேலும் சில அலங்கார பூக்கள்
“ப்ருந்தாவுக்காக வாங்கினது!”
நியாபகம் இருக்கிறது
கூடவே ‘பாப்பா தரேன்’ என்ற வார்த்தைகள்
அதன் பின் கோபம் கொண்டது, இன்ன பிற வாக்குவாதங்களின் பின் டாக்ஸி ஸ்டான்டில் இறக்கிவிட்ட நியாபகம் மட்டும் தான் இருந்தது.
அதற்கு மேல்? அதன் பிறகு என்ன நடந்தது?
வெகு நேரமாய் யோசித்து பார்த்தான். ஹூம் சுத்தமாய் நியாபகம் வரவில்லை.
‘உப்ப்…’ என பின்புறமாய் சாய்ந்து கொண்டது அவன் தலை… ஞாபக மறதியின் பாரம் தாங்க முடியாமல்…!