கம்பெனிக்கு செல்வதற்காக கிளம்பி வந்தவரோ “கண்ணப்பா, கண்ணப்பா” என குரல் கொடுக்க, வேகமாய் காரை விட்டு இறங்கி வந்தார் கண்ணப்பனும்.
‘பிர்லா ஸ்கூலுக்கு போயாச்சா !” வாசலில் நின்றிருந்த அவனது பைக்கை பார்த்தபடி பார்வதிதேவி கேட்டார்.
“எனக்கு தெரிஞ்ச வரை இன்னைக்கு தம்பி கீழ வரவே இல்லை மேடம் ரூம்லேயே தான் இருக்கார்” கண்ணப்பன் பதில் சொல்ல
கடிகாரத்தை திருப்பி மணி பார்த்த பார்வதிதேவி பின் விறுவிறுவென பிர்லாவின் அறைக்கு சென்றார்.
நேற்றைய உறக்கமில்லா இரவு, காலையில் பிர்லாவிற்கு ஆழ்ந்த நித்திரையை கொடுத்திருந்தது.
தலை வரை இழுத்து மூடி இருந்த பெட்ஷீட்டை , நன்றாக இழுத்து அவன் நெற்றியிலும் கழுத்தடியிலும் கை வைத்து பார்க்க காய்ச்சலும் இல்லை ‘பின்னே ஏன் ஸ்கூல் போகலை ?’ என யோசித்தபடி
“பிர்லா ” என பார்வதிதேவி அவனை எழுப்ப
“ம் ” என்ற சப்தம் மட்டுமே வந்தது அவனின் அசந்த தூக்கத்தை பார்த்து மீண்டும் அவனுக்கு போர்வையை மூடி விட்டு கீழே வந்தார்
“வேலா ” என்ற ஒரு சத்தத்தில் பார்வதிதேவியின் முன் அவர் வர “பிர்லா இன்னமும் தூங்கிட்டு தான் இருக்கான் இன்னும் ஒன் அவர் பாருங்க அவன் எழுந்து வரலைனா எழுப்பிவிடுங்க இல்லைனா எனக்கு கால் பண்ணிடுங்க ” என பேசிவிட்டு நகர
“ஏன் தேவி பிர்லாக்கு உடம்பு சரியில்லையா ?” என இவர்களின் பேச்சை கேட்டபடி அங்கே மரகதாம்பாள் வர
“காய்ச்சல் எதுவும் இல்லை அத்தை, ஆனால் அசந்து தூங்குறான் என்னனு தெரியலை. என்ன வேணுமோ கேட்டு செஞ்சு கொடுத்து அவனை பார்த்துகோங்க நான் சாயந்தரம் வந்திடுறேன் ” கூடவே இருந்து கவனிக்க வேண்டிய தாய் தன் மாமியிடம் அந்த பொறுப்பை விட்டுவிட்டு சென்றுவிட்டார்
“பிர்லாக்கு உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கானாம். கொஞ்சம் போய் என்னன்னு பார்த்துட்டு வாங்களேன், எப்போவுமே நேரத்துக்கு ஸ்கூல் போற பையன் கண் முழிக்காமல் கிடக்கிறான்” என கால்வலியினால் மாடிபடியேறி போய் பிர்லாவை பார்க்க முடியாத கடுப்பில் புலம்பி கொண்டிருந்தார்.
“ஆமாம் உன் பேரன் அமெரிக்காவிலா இருக்கான் போய் பார்த்துட்டு வர மாடியில் தானே இருக்கான் உன் பேரன் போய் பாரேன், வந்துட்டா வேலை சொல்லிகிட்டு”
“எனக்கு மாடியேற முடியாதுன்னு தானே உங்ககிட்ட கேட்குறேன் ”
“ஏன் கிழவியாய்ட்டியோ நீ?”
“ஆமாம் நான் கிழவியா தான் போய்ட்டேன் நீங்க தான் குமரனாச்சே கொஞ்சம் பார்த்துட்டு தான் வரது !” என அந்த வயதிலேயும் அவர்களின் நக்கல் நய்யாண்டி வெளிப்பட்டது.
ஆனாலும் பேரனின் பாசம் விடுமா என்ன? சதானந்தும் பிர்லாவின் அறைக்கு சென்றார் “பிர்லா டேய் பிர்லா “ என எழுப்ப
பார்வதிதேவியின் உசும்பலில் லேசாய் கலைந்த உறக்கம் தன் தாத்தாவின் குரலில் முழுதும் கலையந்தது “ம்ம் என்ன சதா? தூங்க விட மாட்டியா?” என்றபடி அலுப்புடன் கண் விழித்தான் பிர்லா
“ஸ்கூலுக்கு போகாமல் இவ்வளவு நேரம் என்னடா தூக்கம்?” சதானந்தம் கேட்க
லேசாய் விழித்த விழிகள் அவரது கேள்வியில் சாசராய் விரிந்து அவனின் பார்வை வால்கிளாக்கில் பதிந்து புருவங்கள் உயர்ந்தது ‘இதுக்கப்பறம், இத்தனை நேரம் கடந்தபிறகு ஸ்கூலுக்கு போக முடியாது’ என மீண்டும் குப்புற படுத்து தலையணையை தலையின் மேலையே போட்டபடி அதில் அழுத்தமாய் தன் கைகளை பதித்துக்கொண்டு “நான் போறது இருக்கட்டும், இன்னைக்கு நீ கம்பெனி போகலையா சதா டேரா போட்டுட்டியா?” என இவனும் பதிலுக்கு கேட்க
அவனது பேச்சில் சதானந்திற்கு கோபம் ஏற “உனக்கு உடம்பு முடியலையோன்னு பார்க்க வந்தேன் பார்த்தியா எனக்கு இது தேவை தாண்டா !” என சலித்து கொள்ள
“உடம்பு முடியலைன்னு தேவி சொன்னாள், பிர்லாவுக்கு என்னவோ ஏதோன்னு பதறி உங்ககிட்ட சொல்லி, புள்ளைக்கு என்ன ஆச்சுனு பார்க்க சொன்னல், இங்கே நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ” மரகதத்தின் குரலில் சதானந்தம் முறைத்து பார்த்தார்.
பின்னே நடக்கவே மாட்டேன் என மறுத்த மரகதாம்பாள் தஸ்புஸ் என மூச்சு வாங்கியபடி டீ கப்புடன் பிர்லாவின் அறைக்கே வந்திருக்க “இவளா கிழவி இந்த வயசுலயும் இத்தனை படி ஏறி வந்துட்டாளே“ என நினைத்து கொண்டிருக்க.
அவரை கொஞ்சமும் சட்டை செய்யாத மரகதாம்பாள் மெதுவாய் நடந்து வந்து கட்டிலில் பேரனின் அருகில் அமர்ந்தாள்.
“பிர்லா” என அவனது முதுகை வருடி, பெட்சீட்டை முழுதும் விலக்கிவிட்டு கெஞ்சி கூத்தாடி பிர்லாவிடம் டீயை கொடுத்தார்.
பாட்டி தாத்தாவை ஒதுக்கி பழக்கமில்லாததால் தலை மீதிருந்த தலையணையை விலக்கிவிட்டு எழுந்தமர்ந்தான். அவர் கையில் இருந்த டீயை வாங்கி குடித்துவிட்டு, அதை ஓரமாய் வைத்துவிட்டு மரகதத்தின் மடியில் மீண்டும் தலை வைத்து படுத்துக்கொண்டான். பிர்லாவின் இச்செயலை விழிதட்டி பார்த்து பின் தன் கணவனை பார்க்க அவரோ அதை கவனிக்காமல்
“என்னடா செய்து ! ஏன் இப்படி தூங்குற ” விளையாட்டை விட்டு சீரியஸாய் கேட்டார்.
“நேத்து நைட் ரொம்ப தலைவலி சதா நைட் புல்லா தூங்கலை. தூக்கமும் வரலை அதான் இப்போ தூங்குறேன் டிஸ்டர்ப் பண்ணாத சதா” என பாட்டியின் மடியில் சுகமாய் விட்ட உறக்கத்தை இவன் தொடர்ந்தான்.
தூக்கம் கெடும் அளவிற்கு, இந்த வயதில் இவனுக்கு அப்படி என்ன மனக்குழப்பம் ? என சதாவின் அனுபவம் யோசிக்க வைக்க, அவன் காலடியில் இவரும் வந்து அமர்ந்தார்.
என்ன நினைத்தாரோ “ஸ்கூலுக்கெல்லாம் போக வேண்டாம். நீ தூங்குடா ” என அவனது கால்களை எடுத்து தன் மடியில் போட்டு அவனது பாதங்களை மெதுவாய் வருடிக்கொண்டிருக்க சட்டென நிமிர்ந்து பார்த்தவன், “காலை எல்லாம் புடிக்காத சதா ” என கூச்சத்தில் தன் காலை பட்டென உருவ உருவ முடியாத அளவிற்கு இறுக்கி பிடித்தவர் ‘விட மாட்டேன், நீ தூங்கு’ என்பது போல் மீண்டும் மெதுவாய் கால்களை பிடித்து விட அவர்களை, அவர்களது அன்பை தவிர்க்க முடியாமல் சுகமாய் கண்ணயர்ந்தான் பிர்லா.
பிர்லா பள்ளி செல்லவில்லை என அறிந்த சந்த்ரபோஸ், அவனின் நிலையறிந்து கொள்ள, மகனின் அறைக்கு வேகமாய் வந்தார். தன் மகனை தாங்கியிருந்த தன் பெற்றோர்களை பார்த்து முழுதாய் நிம்மதி பிறந்ததென்றால் விரக்தியாய் ஒரு புன்னகை எழுந்தது. கூடவே எரிச்சலும் கிளம்பியது. அது அப்படியே பார்வதிதேவியின் மீது கோபமாய் திரும்பியது. சில மணி துளிகள் ப்படியே கிளம்பி சென்றுவிட்டார்.
இவன் நன்றாக உறங்கியதும், உறக்கம் கலைக்க விரும்பாமல் அங்கிருந்து சதா, மரகதம் இருவருமே அங்கிருந்து சென்று விட்டனர். பிர்லா தூங்கி எழுந்து வர பகல் ஒரு மணிக்கும் மேல் ஆனது இரவில் இருந்த மன அழுத்தம் சிறிதும் இன்றி தெளிவாய் இருந்தான். தலைவலி இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை அவனிடம்.
காலையில் அலுவலகம் சென்ற பார்வதிதேவி மாலையில் தான் வீட்டுக்கு வந்தார். ஷோபாவில் அமர்ந்து நல்லபிள்ளையாய் பிராக்டிகல் எழுதிக்கொண்டிருந்தவனை பார்த்து ‘இவன் நல்லா தானே இருக்கான்? பின்ன ஏன் ஸ்கூல் போகாமல் லீவ் போட்டான் ?’ என்ற யோசனையுடனேயே “பிர்லா ஆர் யூ ஆல் ரைட்?” என அவனருகில் அமர்ந்தார்.
பட்டென இதழில் புன்னகை தவழ “எஸ் மாம் ஐ ஆம் ஆல்வேஸ் ஆல் ரைட்” என்றான் வேகமாய்.
“தூங்க முடியாத அளவுக்கு உனக்கு தலைவலியா?” என்றவர் “ஏன் பிர்லா உனக்கு ஏன் இப்போலாம் அடிக்கடி தலை வலி வருது? ஹாஸ்பிடலில் செக் பண்ணலாம் தானே! ஹாஸ்பிடல் போனியா இல்லையா?”என கேட்க
யாரும் அவனை மருத்துவமணைக்கு அழைக்கவும் இல்லை அழைத்து செல்லவும் இல்லை. இதை தேவியிடம் எப்படி சொல்வது என லேசாய் ஏக்கம் ஏழுந்தது. ஆனாலும் பதில் பேசாமல் இருந்தான் பிர்லா.
“என்னைக்குமே இல்லாத அக்கறை இன்னைக்கு தாண்டவம் ஆடுதே உனக்கு” பிர்லா கேட்காமல் விட்டதை நாசூக்காய் அவர்களை நோக்கி வந்த சந்த்ரபோஸ் கேட்க.
“என் மகனை பத்தி நான் அக்கறை படாமல் வேற யார் அக்கறை படுவாங்களாம்?” சந்த்ரா கேட்டதுமே எகிறிகொண்டு வந்தார் தேவி.
“மகன் சாப்பிட்டானா இல்லையான்னு கூட தெரிஞ்சுக்காமல், பிர்லாவை ஸ்கூலுக்கு அனுப்பின நீ பேசாத அக்கறையை பத்தி.! பேச உனக்கெல்லாம் தகுதியே கிடையாது.
“என்ன நானா ?” என அதிர்வாய் பிர்லாவை பார்த்தவர் “நான் எப்போடா அப்படி பண்ணினேன்” என பிர்லாவிடமே தேவி கேட்க
“அதெல்லாம் ஒன்னுமில்லை மாம், டாட் தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறாங்க” தாய்க்கு இவன் பரிந்து வர
“சும்மா இருடா! இப்படி வாயை மூடிட்டே இருந்தால் அவளுக்கு எப்படி தெரியும்!” என கத்தியவர், அன்று நடந்ததை பிர்லா தடுக்க தடுக்க தேவியிடம் விளாவாரியாகவே கூறிவிட
கேட்ட தேவிக்கோ அத்தனை அதிர்ச்சி “இன்னும் சாப்பிடலை மாம்னு ஒரு வார்த்தை சொல்லி என்கிட்ட இருக்கலாம்ல !” என கூறியவரின் மனதில் பாரம் ஏறி அமர்ந்து கொண்டது.
“ஓஹோ சொன்னால் தான் புரியுமோ உனக்கு” எள்ளி நகையாடியவர் “எங்கே சொல்ற இடத்தில் நீயும் இல்ல. கேட்கிற இடத்தில் அவனும் இல்ல. இதில் அவன் தலைவலியா உன் கண்ணுக்கு தெரிய போகுது” என மேலும் நக்கலடித்தார் கோபத்தில்
சந்த்ரபோஸின் வார்த்தைகள் எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றியது “காலையில் பிர்லாவை காணாமல் அவனோட அறைக்கே போய் அவனை பார்த்தேன், காய்ச்சல் எதுவும் இல்லை. டயர்டா இருக்கான் போலன்னு எழுப்பாமல் வந்துட்டேன். ஒருமணி நேரம் வெயிட் பண்ண சொன்னேன் அப்போவும் எழலைனா வேலாவை எனக்கு கால் பண்ண சொன்னேனே இதுக்கு மேல் நான் என்ன செய்ய” என அவரும் தன் மேல் தவறு இருப்பதை உணர்ந்து முடிந்தளவு தன் அக்கறையை உணர்த்த
“கூடவே இருந்து நீ கவனிக்கனும், நீ பார்த்துகிட்டு இருந்துக்கனும். ஹாஸ்பிடல் கூட்டி போய் இருக்கனும். அதை விட்டுட்டு உன்பொறுப்பை அடுத்தவங்க மேல திணிக்காதே யார் கவனிச்சாலும் பெத்தவள் கவனிச்ச மாதிரி இருக்காது ”