பொருள் – பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களை சொல்லாதே.
அயர்ந்த உறக்கமில்லாது போனாலும் உறங்கிக் கொண்டிருந்தவன் உறக்கம் கலைந்து மெல்ல விழி திறந்து திறந்து மூடியவன் அறையில் இன்னமும் எரிந்து கொண்டிருந்த விளக்கை கண்டதும் அருகே திரும்பி பார்த்தான்.
இந்திரசேனா இன்னமும் வந்து படுத்திருக்கவில்லை. சட்டென்று எழுந்து அமர்ந்தவன் அருகே இருந்த தன் அலைபேசியை எடுத்து நேரத்தை பார்க்க அது இரண்டு இருபது என்று காட்ட ‘இன்னும் தூங்காம என்ன பண்ணுறா’ என்றவனின் எண்ணம் ஓடியது.
‘என்ன இருந்தாலும் அவளை அடிச்சிருக்கக் கூடாது தப்பு தானே’ என்று அவன் மனசாட்சி அவனை குத்த கட்டிலை விட்டு கீழிறங்கியவன் எழுந்து வெளியே வந்திருந்தான்.
இந்திரசேனாவோ அங்கிருந்த சோபாவில் கால்களை நீட்டி சாய்ந்து படுத்திருந்தவள் விட்டத்தை வெறித்திருந்தாள். அபராஜிதனுக்கோ அவளை கண்டதும் இன்னமும் அதிகமாய் குற்றவுணர்ச்சி பெருகியது.
“சேனா” என்றான் மெல்லிய குரலில்.
அவளோ திரும்பாது இன்னமும் எங்கோ வெறித்து பார்த்திருந்தாள். அவளருகே வந்தவன் நீட்டியிருந்த அவள் பாதத்தின் நேர் கீழே அமர்ந்து அவளின் பாதத்தை மென்மையாய் பிடிக்க சட்டென்று எழுந்தமர்ந்தாள் அவன் மனைவி சிறு முகச்சுளிப்புடன்.
பார்வை அவனை குற்றம் சாட்டியது. “ஏன் உள்ள வந்து படுக்கலை??”
“எதுக்கு படுக்கணும்??”
“இன்னும் என் மேல கோபமா??”
“எனக்கு உங்க மேல கோபம் வந்து என்னாகப் போகுது. கோபத்தை எல்லாம் நீங்க மட்டும் தானே என்கிட்ட காட்டலாம். எனக்கெல்லாம் அது வரவே கூடாதுல அப்படித்தானே உங்க நினைப்பு”
“ப்ளீஸ் சேனா எனக்கு ஏதோ டென்ஷன் நிஜமாவே சாரி. இனிமே அப்படி நடக்கவே நடக்காது” என்றவன் அவள் கரத்தை எடுத்து தன் இரு கரத்திற்குள்ளும் வைத்தவாறே அவள் கண்ணைப் பார்த்து சொன்னான்.
அவன் பொய்யுரைக்கவில்லை என்பதை உணர்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள அவளின் மனம் ஒப்பவில்லை. ஒன்றும் சொல்லாமல் பார்த்திருந்தாள், இதழில் லேசாய் ஒரு விரக்தி புன்னகை மட்டுமே.
“நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து போய் அகல்யாவை அவங்க வீட்டில விட்டுட்டு வந்திடலாம். அகிலேஷ் என்ன நினைப்பாரு சொல்லு, அந்த அத்தையும் ஏதோ தெரியாம பேசிட்டாங்க. மன்னிச்சிடலாம் சரியா” என்று மனைவியை பார்த்தான்.
‘நான் அவ்வளவு சொல்லியும் உனக்கு புரியலைல’ என்ற எண்ணம் ஓட அவளின் எண்ணத்தை அப்படியே மொழி பெயர்த்தது அவளின் பார்வை.
“சோ நாளைக்கு நானும் உங்ககூட வந்து அகல்யாவை அவங்க வீட்டில விட்டுட்டு வரணும். அப்போ அந்த அத்தை சொன்னது எல்லாம் சரின்னு நீங்க சொல்ல வர்றீங்க அப்படித்தானே”
“அவங்க என்னமும் சொல்லிட்டு போகட்டும். அதுக்கு நாம ஏன் பதில் சொல்லணும் சொல்லு, நமக்கு நம்ம வீட்டு பொண்ணோட வாழ்க்கை தானே முக்கியம். அதை பார்க்க வேண்டாமா??”
சத்தியமாக இந்திரசேனாவிற்கு சிரிப்பு வந்தது அவன் சொன்னதைக் கேட்டு. வாய்விட்டு சிரித்திருக்கவில்லை, வாயிடுக்கில் அதை மென்றுக் கொண்டிருந்தாள்.
அபராஜிதன் அவளை பார்த்திருந்ததினால் என்னவென்று கேட்டான் அவளிடத்தில். “ஒண்ணுமில்லை”
“இல்லை ஏதோ இருக்கு?? நீ சிரிச்ச…”
“ஆமா சிரிச்சேன்” என்று ஒப்புக்கொண்டாள்.
“எதுக்காக??”
“உங்க வீட்டு பொண்ணுக்கு ஒண்ணுன்னா உங்களுக்கு துடிக்குதுல. அதுவே அடுத்த வீட்டுப்பொண்ணுன்னா அவ அவனோட பொண்டாட்டியா இருக்க பட்சத்தில இளக்காரம் ஆகிடுதுலன்னு யோசிச்சேன், சிரிப்பு வந்திடுச்சு”
அவளின் பேச்சு அவள் எங்கு சுற்றி வருகிறாள் என்று உணர்த்த முகம் சிறுத்தது அவனுக்கு.
“சரி அந்த பேச்சை விடுவோம். நாம ஆரம்பிச்ச விஷயத்துக்கு வருவோம். உங்ககிட்ட எனக்கு சொல்ல வேண்டிய ரெண்டு பாயிண்டு இருக்கு. ஒண்ணு நீங்க என்னை அடிச்சதை பத்தி”
“சேனா ப்ளீஸ் நான் தான் சொன்னேன்ல அது மாதிரி இனி நடக்காது”
“நடக்காதுன்னு நீங்க சொன்னாலும் அந்த நம்பிக்கை எனக்கு வரணும். அதை விடுவோம், இனிமே நீங்க என்னை அடிச்சா பதிலுக்கு நானும் அடிப்பேன்னு சொல்வேன்னு நினைக்காதீங்க”
“நான் அடிக்கிறது உங்க கன்னத்துலயா இருக்காது. உங்க மனசுல தான் அந்த அடி விழுகும். அது என்னன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சா நீங்க கை வைச்சு பாருங்க. வக்கீலா இருக்கா கோர்ட் கேசுன்னு போவேன்னு நினைக்கலாம்”
“சத்தியமா போக மாட்டேன், ஆனா எனக்காக என் தரப்பு நியாயத்தை கண்டிப்பா நான் வாங்காம விடமாட்டேன்”
“ஓகே இனி பாயின்ட் நம்பர் டூக்கு போவோம். அகல்யாவை கூட்டிட்டு போய் விட கண்டிப்பா நான் வர மாட்டேன். இப்போ நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்டது உண்மையானதா இருந்தா அகல்யா நல்லாயிருக்கணும்ன்னு நீங்க நினைக்கிறது நிஜம்ன்னா அவ இங்க தான் இருப்பா கொஞ்ச நாளைக்கு”
“சேனா உனக்கு புரியலை அகல்யாவுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு அவ இப்படி தொட்டதுக்கும் கிளம்பி வர்றது தான் வாழ்க்கையா சொல்லு. அவளோட பிரச்சனைகளை அவ தான் பேசணும் அவ தான் எதிர்க்கணும்”
“இப்போ தான் நீங்க ரொம்ப சரியா பேசியிருக்கீங்க, நீங்க சொல்றது சரி தான். ஆனா அதுக்கு நீங்க உங்க தங்கச்சியை அப்படியொரு தைரியத்தோட வளர்த்திருக்கணும். எப்பவும் நீங்களும் மாமாவும் அவளுக்கு முன்னாடி அவளோட பிரச்சனைகளை சரி செஞ்சு சரி செஞ்சு அவளுக்கு அதை எப்படி கையாளுறதுன்னு கூட தெரியலை”
“இப்போ வந்து அவ தான் பார்க்கணும்ன்னு நீங்க சொல்றது உங்களுக்கு சரின்னு படுதா. நானும் ஒண்ணும் உங்களை மாதிரி செய்ய நினைக்கலை. இன்னைக்கு ஒரு நாள் அவ யோசிக்கட்டும். அகிலேஷ் அண்ணா அங்க இவ இங்க இவளோட அருமை அவங்களுக்கும் அவங்களோட அருமை இவளுக்கும் புரியலாம்”
“நாளைக்கு ரெண்டு பேருமே யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருப்பாங்க. அகல்யாவே அவங்க வீட்டுக்கு போறதுக்கு சரின்னு சொன்னா மட்டும் தான் நான் அவ கூட போவேன். அவளோட வாயால அவ அதை எனக்கு சொல்லணும். அப்போ நானே நேர்ல போய்விட்டு வர்றேன்”
“நீ என்ன பண்ண நினைக்கிற எனக்கு புரியலை??”
“நீங்க இவ்வளவு நாள் செய்யாததை நான் செய்ய நினைக்கிறேன். பெரியம்மா பேச்சை கேட்டுகிட்டே இருக்கக்கூடாது அதுக்கு தக்க பதிலடி உங்க தங்கச்சியே கொடுக்கணும்ன்னு நினைக்கிறேன்”
“எப்படி??”
“அதைப்பத்தி அவ தான் முடிவெடுக்கணும், பார்ப்போம் என்ன நடக்குதுன்னு”
“உன்னை என்னால புரிஞ்சுக்க முடியலை”
“நீங்க என்னை புரிஞ்சுகிட்டா தான் அதிசயம்” என்றாள் அவள்.
“சேனா இன்னும் உனக்கு என் மேல கோபமிருக்கா”
“அது கோபமில்லை ஆற்றாமை நாம சொல்ல வர்றதை கூட கேட்காம நீங்க நடந்துக்கிட்டது உங்களுக்கு என்ன பிரச்சனையோன்னு தான் என்னை யோசிக்க வைச்சுது”
“சேனா!!” என்றவனால் மேற்கொண்டு ஒன்றும் பேச முடியவில்லை.
வேண்டாமென்றாலும் அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. இந்திரசேனா முழுக்க முழுக்க அவளின் சித்தப்பாவின் வளர்ப்பு என்பதை தான் அக்கணம் அவன் உணர்ந்தான்.
தான் எதுவும் சொல்லாவிட்டாலும் இருவருமே அவனை குறித்தே யோசிக்கின்றனர். ஒரு புறம் அதை நினைத்து பெருமையாக உணர்ந்தாலும் மறுபுறம் ஈகோவை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் அவன் மனம் அவர்கள் உதவியில்லாது உன்னால் ஒன்றும் செய்ய இயலாதா என்று கேலி செய்ய அவன் ஈகோவின் புறமே சரிந்தான்.
இந்திரசேனாவின் கேள்விக்கு மௌனத்தையே பதிலாக்கினான். அவன் எதுவாவது சொல்வானோ என்று அவள் அவனை பார்த்திருக்க பதிலின்றி அமர்ந்திருந்தான்.
நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவள் “ஓகே நீங்க போய் படுங்க” என்றுவிட்டு சோபாவில் மீண்டும் சாய முயல “நீ உள்ள வா” என்றான்.
“நான் வரலை”
“இப்போ தானே சொன்னே கோவமில்லைன்னு”
“நானும் மனுஷி தான் ஜடமில்லை. கோபமில்லைங்கறதுக்காக எதுவுமே நடக்காத மாதிரி எல்லாம் என்னால நடிக்க முடியாது, எனக்கு அது வரவும் வராது, நீங்க போகலாம்” என்றாள் அவன் முகத்திலடித்தது போல. அதில் அவனுக்கு சர்ரென்று கோபம் ஏறினாலும் இழுத்து பிடித்தான்.
“நான் உன் கால்ல விழணும்ன்னு எதிர்பார்க்கறியா” என்றவன் சட்டென்று அவள் காலின் புறம் குனிய “ச்சே ச்சே என்ன பண்றீங்க நீங்க. எனக்கு அந்த மாதிரி எண்ணம் எல்லாம் இல்லை. ஏன் இப்படி வதைக்கறீங்க, கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்களேன். இப்போ நான் உள்ள வந்து படுத்தா மட்டும் எல்லாம் மாறிடுமா இன்னைக்கே”
“நீ வெளிய படுத்து என்ன மாறிடுச்சு. ரொம்ப சீன் போடாம உள்ள வந்து படு” என்றான் சற்றே காரமாய்.
“என்ன சீன் போட்டேன் நான் இப்போ. இங்க பாருங்க நான் பாட்டுக்கு பேசாம வெளிய தானே உட்கார்ந்து இருக்கேன். சும்மா இருந்தவகிட்ட அர்த்த ராத்திரி வந்து வியாக்கியானம் பேசிட்டு இருந்துட்டு இப்போ நான் சீன் போடுறேன் சொல்றீங்க”
“என்னடி பிரச்சனை உனக்கு எல்லாத்துக்கு என்னையவே குறை சொல்லிட்டு இருக்க. அடிச்சிட்டமே பாவம் சின்ன பொண்ணாச்சேன்னு வந்து மன்னிப்பு கேட்டா ரொம்ப ஓவரா தான் பண்ணுறே”
“நான் கேட்டனா உங்ககிட்ட என்கிட்ட மன்னிப்பு கேளுங்கன்னு. இவரே வருவாராம் மன்னிப்பு கேட்பாராம் நான் தான் அதிகமா பண்ணுறேனாம். என்ன அநியாயம் இதெல்லாம்” என்று அவள் பேச மீண்டுமொரு சண்டை தொடங்கியது அந்த இரவு வேளையில்.
“நீங்க ஏன் அவளை வரச் சொன்னீங்க. நேத்து நான் அவ்வளவு சொல்லியும் நீங்க ஏன் அப்படி சொன்னீங்க”
“இந்தும்மா நீ சரியா பேசுவேன்னு நினைச்சேன் நீயும் இப்படி சொல்றியேம்மா. அம்மா பேசினது தப்பு தான் என்னாலையும் அவங்க பேசினதை மன்னிக்க முடியலை தான். அம்மாக்கு யாரு இருக்கா சொல்லு நானும் அகல்யாவும் தானே”
“எனக்கு அண்ணனா தம்பியா யாருமில்லை நான் ஒத்தை பிள்ளை தானே அவங்களுக்கு. அவங்க இருக்க வரைக்கும் அவங்களை நான் தானே பார்க்கணும் சொல்லும்மா”
“அவளுக்கு என்ன பயம் நான் கூட இருக்கும் போது. இவ்வளவு தூரம் நடந்திருக்கு நான் அவளுக்காக இருக்கேன் இருப்பேன்னு அவளுக்கு தெரியும் அப்புறம் ஏன் அவ அதை முழுசா ஏத்துக்க மாட்டேங்குறா”
“இவ்வளவு சீக்கிரம் வாழ்க்கை எனக்கு வெறுத்து போகும்ன்னு நான் நினைக்கவே இல்லை இந்தும்மா” என்று அவன் விரக்தியாய் பேசினான்.
“அண்ணா அவளுக்கு போன் பண்ணி பேச வேண்டியது தானே. நேத்து நைட் கோபமா பேசி வைச்சுட்டா, போன் போட்டா லைன் போகலை அதான் உனக்கு போட்டேன்” என்றான் அவன்.
“ஓகே நான் பார்த்துக்கறேன் நீங்க வைங்க” என்று அவனிடம் மேலும் சில வார்த்தைகள் பேசி போனை வைத்தாள் அவள்.
——————
அபராஜிதன் உச்சபட்ச அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் இருந்தான். எது நடக்கக்கூடாது என்று அவன் எண்ணினானோ அது நடந்தேவிட்டது.
அப்பெண்ணிடம் எவ்வளவோ கெஞ்சியும் அவள் நீதிமன்றத்திற்கே என்று புகார் மனு அளித்ததை ஒன்றும் செய்ய இயலாது பார்த்திருந்தான் அவன்.
அவனின் வக்கீலோ “இதெல்லாம் சகஜம் சார் பதிலுக்கு ஒரு பெட்டிஷன் போட்டோம்ன்னு வைங்க எல்லாம் காலியாகிடும்” என்று பொய் வாக்குறுதிகளை அவன் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்க அதே வளாகத்தில் இவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் அபராஜிதன் வேலையைவிட்டு நீக்கிய பிரின்சிபால் விநாயகம்.