இவள் எந்தன் சரணமென்றால் 13-2 14778 “அடிப்பாவி.. எல்லாமே காஸ்ட்லி சரக்குடி… எவ்ளோ விலை தெரியுமா? அசால்ட்டா கீழ கொட்ட சொல்ற..” என்று அவன் பதறி நிற்க, கட்டிலில் இருந்து கீழே இறங்கிவிட்டாள் துர்கா. மீண்டும் கிளம்ப போகிறாளோ என்று அவன் வேகமாக எழுந்து கொள்ள “அப்போ போங்க.. வெளியே போங்க.. போய் அதோடவே குடும்பம் நடத்துங்க..” என்று அவனை வெளியே தள்ளினாள் அவள். அவன் அதிர்ச்சியாக பார்க்கும்போதே “நான் தானே வெளியே போகக்கூடாது.. நீங்க போங்க..” என்று வாசலை நோக்கி கையை காட்டினாள் அவள். திருவின் நிலை பரிதாபமாக இருந்தது அங்கே. அவன் நினைத்து வந்தது என்ன… இங்கே நடந்து கொண்டிருப்பதென்ன.. அவன் மீண்டும் பாவமாக மனைவியை பார்க்க, அவள் அழுத்தமாகவே நின்றிருந்தாள் அப்போதும். கோபத்தில் அவள் மூச்சு வாங்கி கொண்டிருக்க, அவன் கண்களுக்கு அழகாக வேறு தெரிந்து தொலைத்தாள். “மனசாட்சியே இல்லாம வெளியே போக சொல்றாளே…” என்று அவளை திட்டிக் கொண்டே அவன் வெளியேற, அவன் அப்படி வெளியே போனது அதிர்ச்சிதான் துர்காவுக்கு. அவன் நேற்று நடந்து கொண்ட விதத்தில் அவன் மீது இருந்த நம்பிக்கையில் தான் வெளியே போக சொன்னாள். அவன் உள்ளே நுழையும் போதும் அவன் முகத்தை பார்த்திருந்தாளே அவள். எத்தனை எதிர்பார்ப்பு அவன் முகத்தில். அப்படி இருக்க அவன் நிச்சயம் போகமாட்டான் என்று அவள் நினைத்திருக்க, அவனோ அமைதியாக வெளியே சென்று இருந்தான். துர்காவுக்கு கண்களில் கண்ணீர் வந்துவிடும் போல் இருந்தது. அவனுக்கு என்னைவிட இந்த குடி அத்தனை முக்கியமாக இருக்கிறதா என்ற கேள்வியே அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. தன் கண்ணீரையும், கவலையையும் தனக்குள் வைத்துக் கொண்டவள், அவன் வெளியேறிய நொடி கதவை “டொம் ” என்று சத்தத்துடன் மூடி அதன்மீதே சாய்ந்து நின்றுவிட்டாள். சில நொடிகள் எதையும் யோசிக்காமல் மனதை அமைதியாக்க அவள் முனைய, கதவு தட்டப்பட்டது மீண்டும். வெளியே சென்றவனின் மீது பொங்கிய கோபத்தோடு அவள் கதவை திறக்க, அங்கே திரு அமைதியாக நின்றிருந்தான். துர்கா அவனை பார்க்கவும், “ஏய் துர்கா.. இந்த ஒரு விஷயத்தை மட்டும் விட்டுடேன்..” என்று கெஞ்சலாக கேட்டவன் “திரு பாவம்டி..” என்றும் கூற, அவனை முறைத்தவள் அவன் முகத்திலேயே கதவை அடிக்க முற்பட்ட நேரம் அவளை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அவன். துர்கா அவன் தள்ளியதில் பின்னே போனவள், தானாகவே நிதானித்து நிற்க, அவனோ அவளை தாண்டி சென்று கட்டிலில் படுத்துவிட்டான். குப்புற கவிழ்ந்து படுத்துக் கொண்டவன் முகத்தை தலையணையில் புதைத்திருக்க, துர்கா கோபத்தோடு அவனை நெருங்கியவள் “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க.. மரியாதையா வெளியே போங்க.. இல்ல நான் பாட்டுக்கு கிளம்பி போய்டுவேன்..” என்று மிரட்ட அவனோ அப்படியே அவளை முகத்தை நிமிர்த்தி பார்த்தவன் “ஏய்.. உனக்குதான அதெல்லாம் வேண்டாம். நீயே போய் எடுத்து போட்டுக்கோ.. போடி…. என்னை ஏன் டார்ச்சர் பண்ற.. போ..போய் தூக்கி போட்டு உடை எல்லாத்தையும். வேணும்ன்னா என் தலையில கூட போடு.. போ.. ” என்று கத்திவிட்டு அவன் மீண்டும் கட்டிலில் படுத்து கொண்டான். துர்காவுக்கு தான் கேட்டதை நம்ப முடியவில்லை. அவன் கோபமாக கத்தினாலும் அதையெல்லாம் தூக்கி போட சொன்னதே போதுமாக இருந்தது அவளுக்கு. சில நொடிகள் அமைதியாக நின்று அவனை பார்த்தவளுக்கு சிரிப்பு வர, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் அவள். அவன் இருக்கும் கடுப்பில் கடித்து விடுவான் என்று தோன்ற சிரித்துக் கொண்டே வெளியில் சென்றாள். அந்த பாட்டில்களை எல்லாம் சமையல் அறையில் இருந்த ஒரு அரிசி சாக்கில் சேகரித்தவள், அந்த மது இருந்த பாட்டில்களை தனியாக இன்னொரு பையில் அள்ளி எடுத்து கிச்சனுக்கு பின்னால் இருந்த குப்பை கூடை அருகில் வைத்துவிட்டு கையை கழுவிக் கொண்டு வீட்டினுள் வந்தாள். ஏனோ ஒரு இனம் புரியாத நிம்மதி அவளிடம் சூழ்ந்தது. திரு தந்தை அளவுக்கு போகமாட்டான் என்றாலும், அவள் முயற்சித்து பார்க்க விரும்பவில்லை. இனி திரு இதை தொடாமல் இருக்க நான் தான் பொறுப்பு என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவள் மெல்ல தன் அறையை எட்டிப் பார்த்தாள். திரு சாப்பிடாமல் படுத்திருப்பது அப்போதுதான் நினைவு வந்தது அவளுக்கு. அவன் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகி இருக்க, அவன் உள்ளே நுழைந்தது முதல் இவர்கள் பஞ்சாயத்தே சரியாக இருந்ததே. இதில் சாப்பாடு எங்கே நினைவுக்கு வந்தது அவர்களுக்கு. “எழுப்பினால் கத்துவானே..” என்று பயமாக இருந்தாலும், “அதற்காக அப்படியேவா விட, ஏற்கனவே நேத்தும் நைட் சாப்பிடல ” என்று சொல்லிக் கொண்டவள் சென்று அவனை எழுப்ப, “எதுவும் வேண்டாம்.. எனக்கு தூக்கம் வருது. விடு..” என்று கத்திவிட்டு கண்ணை மூடிக் கொண்டான் அவன். அவன் கத்தியதில் அவளுக்கும் கோபம் வர “போடா ” என்று அவனை விட்டு விட்டவள் தானும் மறுபுறம் சென்று படுத்துக் கொண்டாள். அந்த கட்டிலில் இதுவரை தனியாக மட்டுமே படுத்து பழகி இருக்க, இன்று திரு அருகில் இருப்பது நிச்சயம் புதுவிதமான உணர்வுதான். ஆனால் முறுக்கி கொண்டு படுத்திருப்பவனை நினைக்கையில் சிரிப்பும் வந்தது கூடவே. “எப்படியோ போ ” என்று நினைத்துக் கொண்டவள் தாராளமாக அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தாள். அவன் தலைமுடி ஏசி காற்றுக்கு மெல்ல அசைய பார்ப்பதற்கு அழகாக இருந்தது. சிறிது நேரம் அவனையே பார்த்திருந்தவள் அவன் எழாமல் போகவும், தானும் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்துவிட்டாள். ஆனால் உறக்கம் வராமல் போக, கஷ்டப்பட்டு அவள் உறங்க முயற்சித்த நேரம், திரு அவளை ஒரே புரட்டாக புரட்டி தன் மீது எடுத்து போர்த்திக் கொண்டான். நெருங்கிய தூக்கம் பயத்திலேயே ஓடிவிட, திருவை தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள் துர்கா.அவன் கீழே படுத்திருக்க, அவனுக்கு மேலே இவள். அவன் முகத்திற்கு நேராக இவள் முகம் இருக்க, மூச்சுக்காற்று கூட அவன் முகத்தில் பட்டே வெளியேற முடியும் என்ற நிலை. ஆனால் அப்போதும் அவனது சகதர்மிணி சண்டைக்கு தான் நின்றாள். “என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க..விடுங்க என்னை ” என்று அவள் முறைக்க “எது விடறதா… ஏய் கொழுப்பா..” என்றான் திரு.. “ஆமா கொழுப்பு.. முதல்ல விடுங்க என்னை.” என்று அவள் திமிர அவளை இறுக்கியவன் “எனக்கு பாயசம் வேணும்.. அதுவும் இப்போவே” என்று அவள் இதழ்களை நோக்கி நகர “அதெல்லாம் ஒன்னும் கிடையாது.. அதான் உங்க ஹெல்த் ட்ரிங்க் இருக்கு இல்ல… அதையே போய் குடிங்க. எப்போ அதை தொடாம இருக்கீங்களா அப்போதான். இப்போ விடுங்க” என்று நிர்த்தாட்சண்யமாக அவள் மறுக்க அவள் கூற்றில் அதிர்ந்து போனவன் “அடிப்பாவி” என்று வாயை பிளந்து விட்டான். “என்ன என்ன பாவி. விடுங்க முதல்ல..” என்று அவள் விலக அவளை தன்னோடு இறுக்கி கொண்டு புரண்டு படுத்தான். அவள் இப்போது பெட்டில் இருக்க, அவளை எழவிடாமல் அவள் மீது இவன். அவள் முறைப்பாக பார்க்க “ஏய்.. அதான் எல்லாத்தையும் எடுத்து போட்டுட்ட இல்ல. அப்புறம் என்னடி.” என்று அவள் இடையில் அழுத்தமாக கிள்ளி வைக்க, வலித்தது அவளுக்கு. “ஸ்ஸ்.. ஆ” என்று அவள் கத்த, “கத்தினா திரும்ப கிள்ளுவேன்… ” என்று கையை இடையில் அழுத்தமாக பதித்துக் கொண்டான் அந்த திருடன். அவள் அவனையே பார்க்க “நீ சொன்னதே தான்.. இப்போ நான் அதை தொடவே இல்லல்ல. அதனால பாயசம்தான்.. எப்போ அதை தொடறேனோ அப்போ பார்த்துக்கலாம்..” என்று கூறிக் கொண்டே அவள் இதழ்களை தன் வசம் எடுத்துக் கொண்டான். அவளும் முறைப்பாக காட்டிக் கொண்டாலும், விருப்பத்துடனே தான் அவனுடன் ஒன்றினாள். திரு மெல்ல மெல்ல அவளை உறைய வைத்தவன் பின்னர் அவனே தீயாக மாறி அவளை உருக்கவும் செய்தான். அவன் விரல்கள் அவள் உடல் முழுவதும் சுதந்திரமாக உலாவர, அவன் விரல் சென்ற திசையில் அவன் இதழ்களும் மெல்ல தன் உலாவலை தொடங்க, அவனை தடுக்க முற்பட்ட சோர்ந்து போனவள் சுகமாக கண்களை மூடிக் கொண்டாள். தன் முப்பத்து இரண்டு வருட பிரம்மச்சரியத்தை அந்த இரவில் அவளிடம் தொலைத்து விட்டு இருந்தவனோ, அதை பற்றிய கவலை இல்லாமல் அவளை கொஞ்சிக் கொண்டிருந்தான். இறைவனின் அதிசயங்களில் எப்போதும் விதிகளுக்கு அப்பாற்பட்டு நிற்கும் காதல் அங்கு மெல்ல மெல்ல இருவரையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர ஆரம்பித்திருந்தது.