இதயத்திலே ஒரு நினைவு – 18
மதுரை திருமலை நாயக்கர் மஹால்…
அன்றைய தினம் வார விடுமுறை என்பதால், கொஞ்சம் ஆட்கள் அதிகமாவே இருக்க, சிறுவர்கள் கூட்டம் வேறு இருந்தது. அதையும் தாண்டி காதலர்கள் வேறு ஆங்காங்கே அமர்ந்திருக்க, ஜெகா வாசுவோடு வந்திருக்க, மைதிலி ரேகாவோடு வந்திருந்தாள்.
ரேகாவைப் பார்த்ததுமே ஜெகா லேசாய் முறைக்க,
“இல்லண்ணா அது மைதிலி தனியா எப்படி வருவா?” என்று ரேகா இழுக்க,
“ஏன் அவ வந்தா என்ன?” என்றாள் மைதிலி.
“தெரிஞ்சவங்க பார்த்தா தேவையில்லாத பிரச்சனை…” என்றான் ஜெகந்நாதன்.
“என்ன பிரச்சனை?!” என்ற மைதிலியின் முக பாவனை அப்படியே மாறிவிட்டது.
“உங்க தங்கச்சி வந்தா பிரச்சனை.. இதேது அடுத்தவங்க பொண்ணு வர்றதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை அப்படித்தான?” என,
‘அச்சோ இதை இவ இப்படி புரிஞ்சுக்கிட்டாளா?!’ என்று பார்த்தவன்
“நான் அப்படி சொல்லல…” என்று பேச வர, மைதிலி முகம் திருப்பிக்கொண்டாள்.
வாசு, ஜெகாவை முறைக்க “மைத்தி…” என்றான் ஜெகா.
மைதிலி அப்போதும் ஜெகாவை பார்த்தவள் “நீங்க சொல்ல வந்தது என்னன்னு யோசிச்சு பேசுங்க…” என,
“இப்போ இந்த சண்டையை விட்டுட்டு வந்த வேலையை பாருங்க…” என்றாள் ரேகா.
மைதிலி முகத்தைத் தூக்கி வைத்திருக்க, ஜெகாவோ வாசுவைப் பார்க்க “சரி நீங்க பேசிட்டு வாங்க… நான் அங்குட்டு இருக்கேன்…” என்று வாசு நகர்ந்து செல்ல, வேறு வழியில்லாமல், ரேகாவும் அவனோடு செல்ல,
“இதுக்குத்தான் சொன்னேன்…” என்றான் ஜெகா.
“என்னது?!”
“இப்போ நம்ம லவ்வர்ஸ்… அவங்க அப்படி இல்லை.. ஆனா பார்க்கிறவங்களுக்கு அவங்களும் அப்படித்தான் தெரிவாங்க.. தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா ரேகாவுக்கு தானே கஷ்டம்…” என,
‘ஓ…!’ என்று மனதிற்குள் எண்ணியவள்
“நம்மள பார்த்தா கூட தான் கஷ்டம்…” என்று சொல்ல,
“அப்படி ஏதாவது ஒண்ணுன்னா, இப்போவே உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் நிப்பேன்…” என்றான் ஜெகா.
அவனது இந்த உறுதியும், தெளிவயும் மைதிலிக்கு பிரமிப்பாய் இருந்தாலும், மனதிற்குள் ஒரு சிறு சாரலும் வீசியது நிஜம்.
இதெல்லாம் எனக்காக… என்று அவள் மனது சிந்திக்க, அவள் எண்ணி வந்திருந்த முடிவு மெல்ல ஆட்டம் காண,
‘நோ மைத்தி…’ என்று தன்னை தானே உலுக்கிக்கொண்டாள்.
அவளது பாவனைகளை பார்த்தபடி தான் நின்றிருந்தான் ஜெகந்நாதன். அவள் முக மாற்றம் அவனுக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்க விட “மைத்தி…” என்றான் காதலாய்.
விழிகளை மட்டும் அவன் மீது திருப்பியவள் அவன் பேசும் முன்னமே “உங்களுக்கு எப்படின்னு தெரியாது.. ஆனா எனக்கு இதெல்லாம் ஒத்து வராது…” என,
“ஏன்?!” என்றான் சட்டென்று இறுகிய குரலில்.
“ஒத்துவராதுன்னா வராது… பிரச்சனைன்னு ஒன்னு ஆச்சுன்னா உங்களுக்கு வேணும்னா என்னை உங்க வீட்ல கூட்டிட்டு போய் நிறுத்துற தைரியம் இருக்கலாம். ஆனா நான் பிரச்சனையே வேணாம்னு சொல்றேன்…” என,
“ஏன்?!” என்றான் அப்போதும்.
“வேண்டாம்னா வேணாம்…”
“சோ இதுதான் உன்னோட முடிவா?!”
இதனை ஜெகா கேட்கையில், அவனது குரலில், பார்வையில், உடல் மொழியில் என்ன இருந்தது என்றே மைதிலிக்கு அப்போது விளங்கவில்லை.
“ஆமா…!” என்று திடமாய் சொல்லிட நினைத்தவளின் குரல் மெல்ல பிசிறு தட்டியது..