“என்ன சொன்னான்” என்று முழித்தவள், பின்பே தெளிந்து “என்ன அப்புறம் பார்த்துக்கலாம்..” என்று கேட்க
“இல்ல, ரொம்ப தீவிரமா என்னை பார்த்துட்டே இருந்தியே.. அதான் சாப்பிட்டு முடிச்சு பார்த்துக்கலாம்ன்னு சொன்னேன்” என்று நிதானமாக கூற
அவனை முறைத்தவள் “அப்புறம் இல்ல.. எப்பவுமே பார்க்கவேண்டாம், நான் ஏதோ யோசனையில இருந்தேன். உங்களை பார்த்துட்டு இல்ல” என்று முறைப்பாகவே கூற
“ஸ்ஸ்..ஹா..” என்று வாயை ஊதியவன் “காரம் ஜாஸ்தியா இருக்கு.. துர்கா” என்று வாய்க்கு முன்னால் கையை காற்று வீசுவதை போல அசைத்துக் காட்டினான்.
துர்கா மீண்டும் முறைக்க “சரி.. நான் நம்புறேன் உன்னை. சாப்பிடு” என்று கூற
“என்ன நக்கல் பண்றிங்களா..” என்று அவள் நேரடியாக கேட்க
“இதுல என்ன நக்கல் இருக்கு, நீ என்னை பார்த்ததா நான் நினச்சேன், நீ இல்லன்னு சொல்லிட்ட. அதையும் நான் நம்புறேன் ன்னு சொல்லிட்டேன்.. இன்னும் என்ன ? இதுல நக்கல் எங்க இருந்தது வந்தது?” என்று அவனும் தீவிரமாகவே கேட்க
சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது அவளுக்கு. “நான் ரூம்லயே இருந்திருக்கணும்” என்று நினைத்துக் கொண்டவள் அவனிடம் எதுவும் பேசாமல் உணவை உண்ண தொடங்கினாள்.
வேகமாக அவள் உண்பதை கண்டவன் தனக்குள் சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்க, அதே வேகத்தில் உண்டு முடித்து, எழுந்துவிட்டாள் துர்கா.
அவள் கையை கழுவி விட்டு வரவும், இருவரம் வெளியில் வர, அமைதியாகவே நடந்தாள் அவள். அவளை பார்த்துக் கொண்டே திரு அவள் பின்னால் நடக்க, அவனை கண்டுகொள்ளாமல் முன்னே அவள். ஆனால் அதுவும் கூட ரசனையாகத் தான் இருந்தது அவனுக்கு.
அறையை அடைந்தவள் அதன் பின்பு எப்போதும்போல் அவனை பார்க்காமல் இருந்து கொள்ள, சரத், திரு இருவரும் வள்ளிம்மா விடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.
அவன் கிளம்பும் நேரம் துர்கா முறைப்பாக அவன் முதுகை பார்த்து முறைத்துக் கொண்டிருக்க, வாசல் அருகே நின்று திரும்பியவன் அவள் முறைப்பை கண்டு கொண்டான்.
“எத்தனை நாளைக்கு பார்க்கிறேண்டி..” என்று நினைத்துக் கொண்டே அவன் கிளம்பிவிட, அவன் கண்டு கொண்டதில் தலையை குனிந்து கொண்டு அமர்ந்து கொண்டாள் அவள்.
அவனின் பார்வை மாற்றம் ஏதோ ஒன்றை அவளுக்கு உணர்த்த, அதை மேற்கொண்டு ஆராயவும் துணிவு இல்லை அவளுக்கு. ஏன் இப்படி பார்க்கிறான்? என்பது ஒன்றே அன்று முழுவதும் அவள் சிந்தனையாக இருக்கும் அளவுக்கு அவளை படுத்திக் கொண்டிருந்தான் திரு.
அவன் ஏதோ ஒன்றை அவளிடம் கூற விழைவதாகவே அவன் பார்வை அவளுக்கு சேதி சொல்ல, உணவு உண்ணும்போது அவன் பேசியதும் நினைவு வந்தது அவளுக்கு.
அவள் பார்த்த நாள் முதலாக கடுவன் பூனைதான் அவன். யாரை பார்த்தாலும் ஒரு முறைப்புடன் தான் பேசுவான்.ஏன் அவளையே முறைத்துக் கொண்டிருந்தவன் தானே.
இப்போது மட்டும் என்ன? என்று அவள் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க, பதில்தான் இல்லை. பதில் சொல்ல வேண்டியவனும் அமைதியே காக்க, அடுத்த இரண்டு நாட்களும் திருவிற்கு உற்சாகத்துடனும், துர்காவிற்கு குழப்பங்களுடனும் கடந்து போக
மூன்றாம் நாள் வள்ளியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். மருத்துவர்கள் போதும் போதும் என்று கூறும் அளவிற்கு வள்ளிக்கு அறிவுரைகள் வழங்கி இருக்க, அது அனைத்தும் அவருக்கு புரிந்ததோ, இல்லையோ துர்கா நன்றாக மனதில் வாங்கி கொண்டிருந்தாள்.
மருத்துவமனையிலிருந்து வள்ளி வீடு வந்துவிட்ட போதும், வள்ளி ஏனோ அமைதியாகவே தான் இருந்தார். அந்த பழைய வேகம் இன்னும் வரவில்லை அவரிடம்.
அவருக்கு வேளாவேளைக்கு உண்ண கொடுப்பது, அவரின் மருந்துகள் என்று அனைத்தையும் துர்கா அருகில் இருந்து கவனித்துக் கொள்ள, மருத்துவமனையில் இருந்து திரும்பிய இரண்டாம் நாள் மகளை அழைத்தார் வள்ளி.
துர்காவும் “என்னம்மா” என்று கேட்டுக் கொண்டே வந்து அவர் அருகில் அமர, மகளையே அமைதியாக பார்த்தவர் “நீ சண்முகநாதன் வீட்டுக்கு போயிருந்தியா துர்கா” என்று கேட்டுவிட்டார்.
கேட்டவர் அமைதியாகவே இருக்க எதிரில் இருந்தவள் தான் அவர் உடல்நிலையை நினைத்து பதறி போனாள்.
“மா.. நாம இன்னொருநாள் இதைப்பத்தி பேசுவோம்..இப்போ.. இப்போ ஏன் இது… விடுங்க” என்று மகள் சமாளிக்க
அவளை புரிந்தவராக புன்னகைத்தவர் “உன் அம்மா இப்போ நல்லா இருக்கேன். ஏற்கனவே எல்லாம் பார்த்திட்டு வந்திட்டேன் துர்காம்மா. இதுக்குமேல ஒன்னும் ஆகாது..” என்று கூறியவர்
“எனக்கு ஏன் நெஞ்சுவலி வந்தது ன்னு உனக்கு தெரியாது இல்ல.” என்று கேட்கவும், துர்கா மறுப்பாக தலையசைக்க, புன்னகைத்தவர் “எனக்கு நெஞ்சுவலி வர காரணமே சண்முகநாதன் தான்.” என்று அமைதியாக கூறினார்.
துர்கா அவரை பயத்துடன் பார்க்க, தலையசைத்து புன்னகைத்தவர் “இந்த வயசுல அவனுக்கு கல்யாண ஆசை வந்திருக்கு. அதுவும் அந்த பிணந்தின்னி நாய்க்கு என் மக வேணுமாம்.. கடைக்கு வந்து மிரட்டி, எனக்கு ரெண்டு நாள் அவகாசம் கொடுத்துட்டு போனான்.”
“அவனை சமாளிக்க முடியாம தான், என்ன செய்றது ன்னு யோசிச்சு யோசிச்சு அப்படியே கண்ணை இருட்டி விழுந்துட்டேன்.”
என்று அவர் முடிக்க, “ம்மா..” என்று கேவலுடன் அவர் மடியில் விழுந்து கதறினாள் மகள்.
மகளின் அழுகை கண்ணீரை கொடுத்தாலும், தன்னை தேற்றிக் கொண்டு அவள் தோளில் தட்டிக் கொடுத்தவர் “எதுக்கு இப்போ அழுகை, அதான் வந்துட்டேனே ” என்று கூற
“அதுல வருத்தமா உனக்கு.. எப்படி துடிச்சு போய்ட்டேன் தெரியுமா..” என்றவள் மீண்டும் தேம்பியழ, வள்ளி மகளின் கண்களை துடைத்து விட்டவர் “சரி சொல்லு.. நீ எதுக்கு அவன் வீட்டுக்கு போன?” என்று ஆரம்பித்த இடத்திற்கே வர, அன்னையின் முகம் பார்க்காமல் தலையை குனிந்து கொண்டாள் அவள்.
குனிந்த தலையுடனே “எனக்கு தெரியாதும்மா.. அவன் உன்கிட்ட இப்படி பேசி இருப்பான் ன்னு நான் எதிர்பார்க்கல. எனக்கு தெரிஞ்சு உறவுன்னு அவர் ஒருத்தர் தானே. அதுதான் கடனா கேட்போம்ன்னு அவர் வீட்டுக்கு போனேன்.” என்றவள் நிறுத்தி அன்னையின் முகம் பார்க்க
அவரும் அசையாத பார்வையுடன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். “அவர் பணம் கொடுக்கறதா தான் சொன்னாரு. ஆனா அதுக்கு பதிலா… நான் … நான் அவரை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு சொன்னாரு… எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியலமா…
“பணத்தை புரட்ட வேற எந்த வழியும் கிடைக்கல… எனக்கு அந்த நிமிஷம் நீ திரும்பி வந்துட்டா போதும்ன்னு தான் தோணுச்சு..” என்றவள் கண்ணீர்விட, மகள் எப்பேர்ப்பட்ட ஆபத்தில் சிக்க இருந்திருக்கிறாள் என்பது அப்போதுதான் புரிந்தது வள்ளிக்கு.
திரு சொல்லி இருந்தாலும் அங்கே என்ன நடந்தது என்று அவனுக்கும் தெரியாது அல்லவா. இப்போது மகள் வாய் வழியாகவே கேட்கும் போது வேதனை நிரம்பியது வள்ளியின் நெஞ்சில். கண்களை துடைத்துக் கொண்டு அவர் நிமிர, மகள் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
அவனிடம் ஒப்புக்கொண்டது, அவன் பணத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து வந்தது, அங்கே திரு பணம் செலுத்தி இருந்தது தெரிந்ததும் அவன் தன்னை இழுத்து சென்றது, இறுதியாக திரு வந்தது என்று அனைத்தையுமே அன்னையிடம் மறைக்காமல் கூறிவிட்டாள் மகள்.
வள்ளி அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டவருக்கு தோன்றியது ஒன்றுதான். அந்த சண்முகநாதன் தன் மகளை அத்தனை எளிதில் விட்டுவிட மாட்டான் என்பதே அது.
தனது உடல்நிலையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லாத இந்த சூழலில் மகளை எப்படி நான் கரையேற்ற போகிறேன் என்று யோசித்தவருக்கு கண்முன் வந்து நின்றவன் திரு தான்.
மீண்டும் ஒருமுறை தனக்கு ஏதாவது என்றால் என் மகள் தனியாக நின்றுவிட கூடாது. இப்போது போல் அவள் தனியாக கிடந்து அல்லாடக் கூடாது என்பது ஒன்றே அந்த தாயின் எண்ணமாக இருக்க, தனக்கு ஏதும் பெரிதாக வருவதற்குள் மகளின் திருமணத்தை முடித்துவிட முடிவு செய்து விட்டார் அவர்.
கண்களை துடைத்துக் கொண்டவர் மகளின் முகத்தை பார்த்து “நீ திருவை கல்யாணம் பண்ணிக்கோ துர்கா ” என்று கூறிவிட்டார்.
எப்போது இருந்தாலும் இதை சொல்லித்தானே ஆகவேண்டும். இப்போது சொல்வதால் என்ன என்று நினைத்தவர் தன் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிட்டார்.
துர்காவுக்கு தன் இத்தனை நாள் குழப்பங்களுக்கு விடை கிடைத்த உணர்வுதான். எதுவுமே பேசாமல் அன்னையின் முகம் பார்த்தவள் “இதை உன் திருவே உன்கிட்ட கேட்டாரா ?” என்று அழுத்தமாக வினவ, “ஆமாம்” என்பதாக தலையசைத்தார் வள்ளி.
மகள் யோசிக்கவே இல்லை. மறுப்பாக தலையசைத்தவள் “என்னால் முடியாதும்மா.. இந்த பேச்சை விட்டுடு” என்றுவிட்டு எழுந்து கொண்டாள்.