ஆகிற்று. திரு அவனின் திருமணம் குறித்து வள்ளியிடம் பேசி இரண்டு நாட்கள் கடந்து இருந்தது. அதன்பிறகும் அவன் மருத்துவமனைக்கு வந்து சென்றான் என்றாலும் திருமண விஷயம் குறித்து வாயைத் திறக்கவில்லை.
இரண்டு நாட்கள் அமைதியாகவே கழிந்திருந்தது அவர்களுக்கு. வள்ளி கூட மகளிடம் திருமணம் குறித்தோ, திருவை குறித்தோ எந்த குறிப்பும் கொடுத்து இருக்கவில்லை.
அதுவும் திருவின் உபதேசம் தான். “இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாம் வள்ளிம்மா.. முதல்ல வீட்டுக்கு வாங்க.. அப்புறம் பொறுமையா பேசி முடிங்க..” என்று அவன் கூறிச் சென்றிருக்க, அவன் வார்த்தையை அச்சுப்பிசகாமல் கடைபிடித்து மௌனம் காத்தார் அவர்.
இன்னும் இரண்டு நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்துவிடுவதாக மருத்துவர் கூறி இருக்க, வீட்டுக்கு செல்லும் நாளுக்காக காத்திருந்தார் வள்ளி. துர்கா இவர்களின் இந்த திட்டங்களை பற்றி எதுவும் கவனித்திருக்கவில்லை. தாயின் மௌனம் புதியதாக இருந்தாலும், சோர்வாக இருக்கும் என்று நினைத்தவள் அவரின் அருகிலேயே இருப்பாள் பெரும்பாலும்.
சரத் மட்டுமே கடைக்கு சென்று கொண்டிருக்க, தேவாவை இவர்களுக்கு துணையாக இங்கேயே விட்டு சென்றிருந்தான் திரு. துர்காவும், தேவாவும் முதலில் இருந்தே நண்பர்கள் என்பதால் அவன் உடன் இருப்பது துர்காவை சற்று இலகுவாக்கி கொண்டிருந்தது.
இன்று எப்போதும் போல வீட்டிற்கு சென்றுவிட்டு வந்தவள் தேவாவுக்கும், அவளுக்கும் உணவை எடுத்து வந்திருக்க, அவள் உள்ளே நுழையும் போதே “ஆத்தா.. துர்காதேவி.. சீக்கிரமா சாப்பாடு போடு.. பசிக்குது எனக்கு..” என்று கூறிக் கொண்டே எழுந்து கை கழுவ சென்றான் தேவா.
சிரிப்புடன் உணவை எடுத்து வைத்தவள் அவன் வரவும் அவனுக்கு பரிமாறினாள். இரண்டு வாய் எடுத்து வைத்தவன் “ஹாஹா… அருமையான உணவு தோழி.. இதுக்காகவே நீ சொன்னாலும் செய்யலாம் போலவே… நான் மட்டும் ஒரு மூணு வருஷம் முன்னாடி பிறந்து இருக்கக்கூடாதா?? ” என்று சலித்து கொள்ள
“ஏன்?? என்ன பண்ணி இருப்ப.. மூணு வருஷம் முன்னாடி பிறந்து இருந்தா?? ” என்று அவள் புருவம் உயர்த்தி பார்க்க,
“என்ன பண்ணி இருப்பேனா.. இந்நேரம் வள்ளிம்மா கைல, கால்ல விழுந்தாவது உன்னை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்.. வாழ்க்கை பூரா நல்ல சோறு கிடைக்கும்ல” என்று அவன் சோற்றுக்காகவே பிறப்பெடுத்தவன் போல் அடித்துவிட
இவர்களை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியோ “டேய்.. உனக்கு வாய் அதிகமா போச்சு.. என்னை வச்சுக்கிட்டே என்ன பேச்சு பேசிட்டு இருக்கடா நீ” என்று பொய்யாக அவனை மிரட்ட
“அட ஏன் வள்ளிம்மா பொங்குற.. அதான் எங்கப்பா என்னை மூணு வருஷம் பின்னாடி பெத்து என் சோத்துல மண்ணள்ளி போட்டுட்டாரே.. நீ நிம்மதியா இரு..”
“நான் வேணா ஒரு வழி சொல்லவா?” என்று துர்கா கேட்க
“நீ தினமும் இதே மாதிரி சமைச்சு போடுவ ன்னா சொல்லு, நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்..”
“வயசெல்லாம் ஒரு விஷயமா.. சச்சின் அவரைவிட சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கல. நீ பேசாம உன் வள்ளிம்மாவை கரெக்ட் பண்ணிடு. இன்னும் நல்ல சோறு கிடைக்கும். ஏன்னா எனக்கு சொல்லி கொடுத்ததே அவங்கதான்ல. இதைவிட நல்ல சோறே கிடைக்கும்..” என்றவள் அவன் முகம் போன போக்கால் சிரித்துவிட்டாள்.
“டூ பேட் வள்ளிம்மா, உனக்கே இது அதிகமா தெரியல.. ஒருவேளை சோறு போட்டு உன்னை என் தலையில கட்ட இவ பிளான் பண்ணிட்டா பார்த்தியா??” என்று அவன் பாவமாக வள்ளியை கேட்க, அவரோ இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தார்.
வள்ளி முறைப்பதை பார்த்த துர்கா மீண்டும் சிரிக்க, தேவாவோ “ஆத்தா.. மலையிறங்கு, ஒரு துர்கை போதும்..” என்று கூறியவன் உண்ணும் வேலையை தொடர, அந்த நேரம் தான் உள்ளே நுழைந்தனர் திருவும், சரத்தும். சரத் தேவா சாப்பிடுவதை பார்க்கவும், “துர்கா எனக்கும் சாப்பாடு போடு” என்று கூறி அமர்ந்துவிட, திரு வள்ளியின் அருகில் அமர்ந்தான்.
வள்ளி திருவை பார்த்து புன்னகைத்தவர் தன் மகளை திரும்பி பார்க்க, அவள் சிரிப்புடன் சரத்திற்கு உணவு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். மூவரும் அவர்களுக்குள் வாயடித்துக் கொண்டு இருக்க, இவர்களை கண்டுகொள்ளவில்லை.
திரு அவரிடம் “என்ன வள்ளிம்மா, உடம்பு எப்படி இருக்கு.. ஹாஸ்பிடல் வாசம் போதுமா??” என்று கிண்டலாக கேட்க
“அது சரி.. எல்லாரையும் ஒருவழி பண்ணிட்டு உங்களுக்கு ஒன்னும் இல்லையா.. உங்க பொண்ணுகிட்ட சொல்ல வேண்டியதுதானே?” என்றவன் துர்காவை பார்க்க, வள்ளியும் மகளை திரும்பி பார்த்தார். அவள் சரத்திடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தாள் அப்போது
இவர்கள் மெல்லிய குரலில் பேசுவது அவர்களுக்கு கேட்காமல் போக, துர்கா இவர்களை திரும்பியும் பார்க்கவில்லை. வள்ளிக்கு அதுதான் நெருடலாகவே இருந்தது. அவன் இருக்கும் சமயங்களில் வள்ளியை பார்ப்பதற்காக என்றுகூட துர்காவின் பார்வை அவன் இருக்கும் புறம் திரும்பவே திரும்பாது.
அப்படிப்பட்டவளை திரு திருமணம் செய்து தருமாறு கேட்க, இரண்டு நாட்களாக ஒரே யோசனைதான் அவருக்கு. அவர் மகளுக்காக என்று இல்லாமல் திருவுக்காகவே யோசித்தார் அவர். அவனை கட்டிக் கொண்டால் நிச்சயம் தன் மகளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்க, அவரின் கவலை எல்லாம் அவர் மகளை பற்றியது தான்.
ஏற்கனவே பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், ஆதரிக்க யாரும் இல்லாமல், ஆயிரம் சங்கடங்களை தாண்டி வந்தவன் அவன். இதில் மனைவி என்று வருபவளும் அவனை கடித்து குதறி வைத்தால் அவன் வாழ்க்கை என்னாவது?? இனியாவது அவன் நிம்மதியாக இருக்க வேண்டாமா ? என்றுதான் பயந்து கொண்டிருந்தார் அவர்.
மகளின் நடவடிக்கைகளும் அவர் எண்ணத்தை உறுதிப்படுத்துவது போலவே இருந்தது இந்த இரண்டு நாட்களில். இதோ இப்போது கூட சரத்திற்கு உணவு எடுத்து வைத்தவள் இதுவரை அவனை சாப்பிடுகிறாயா என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. விரோதியாக இருந்தால் கூட நம்மை தேடி வருபவர்களை மதிப்பதும், கவனிப்பதும் தானே நம்முடைய இயல்பு.
ஆனால் அந்த காரணத்திற்காக கூட, அவனிடம் அவள் ஓட்டவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு தலையிடியாக இருந்தது. அவர் இத்தனை சிந்தனைகளை மனதில் ஓடவிட்டு அமர்ந்திருக்க, சம்பந்தப்பட்டவனோ யாரும் கவனிக்காதவாறு துர்காவை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
சரத் உண்டு முடித்திருக்க, அவள் கொண்டு வந்த உணவு காலியாகி இருந்தது. சாப்பிட்ட பாத்திரங்களை அங்கு இருந்த கைகழுவும் இடத்தில் அவள் கழுவிக் கொண்டு வந்து வைக்க, திரு “இவள் முன்னாடியே சாப்பிட்டாளா??” என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் வள்ளி அவனைப்போல் யோசிக்காமல் “துர்காம்மா நீ சாப்பிடலையா??” என்று கேட்டுவிட, அவரை திரும்பி பார்த்தவள் “பசிக்கலம்மா.. நான் அப்புறம் சாப்பிடுறேன்.” என்று முடித்துவிட
சரத் சும்மா இல்லாமல் “ஏன் அப்புறம் சாப்பிடணும்?இரு.. நான் கேன்டீன்ல ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்..” என்று எழுந்தவன் “திருண்ணா.. உனக்கு என்ன வேணும்.. ” என்று அவனிடம் கேட்டான்.
அப்போது தான் இவனும் இன்னும் சாப்பிடவில்லையா? என்பதுபோல் அவனை பார்த்தாள் துர்கா. திருவும் அவளை திரும்பி பார்த்தவன், “நீ இருடா, நானே போறேன்..” என்றுவிட்டு துர்காவிடம் “வா..” என்று கூறி நடக்க தொடங்கிவிட்டான்.
துர்கா அவனின் அந்த அழைப்பில் அதிர்ச்சியாக அன்னையை பார்க்க, அவரும் “போய் நீயும் சாப்பிட்டுட்டு வந்திடுமா. ” என்று கூற, எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தாள் அவள். ஆனாலும் அவனின் அந்த உரிமையான அழைப்பு உள்ளே எங்கோ உறுத்தியது.
“இது இவனில்லையே ” என்ற யோசனையுடன் அவள் நடக்க, முன்னே மெதுவாக நடந்து கொண்டிருந்தான் திரு. இவளும் அமைதியாகவே நடக்க, அந்த காரிடார் முடியும் இடத்தில் நின்றுவிட்டவன் இவளுக்காக காத்திருக்க, அதே நிதானமான நடையுடன் தான் வந்து சேர்ந்தாள் அவள்.
திரு அலட்டிக் கொள்ளவே இல்லை. அதே அமைதியான ஆனால் அழுத்தமான நடவடிக்கைகள். இவளுக்குதான் இயல்பாக காட்டிக் கொண்டாலும் உள்ளே மத்தளம் கொட்டிக் கொண்டிருந்தது. அதுவும் தன் அன்னையின் முன்பாகவே அவன் “வா” என்று அழைத்து வந்திருக்க, யோசனைகள் விடவே இல்லை அவளை.
அதே சிந்தனையில் கேன்டீன் ஏரியாவை கடந்து அவள் அடியெடுத்து வைக்க, சட்டென்று அவள் கையை பிடித்து இழுத்து அவளை நிறுத்தினான் திரு. அவள் கோபத்துடன் திரும்ப, “கேன்டீன் இங்க இருக்கு” என்றவன் அவள் கைகளை விடாமல் பற்றிக் கொண்டு நடக்க, அவன்போக்கில் பின்னால் நடந்தாள் அவள்.
கையை கழுவிக் கொண்டு அவன் நிற்க, அங்கே வைத்து அவனை எதுவும் பேச முடியாத சூழ்நிலையை நொந்து கொண்டு அவளும் கையை கழுவி அமைதியாகவே வந்து அமர்ந்து கொண்டாள். அங்கே என்ன உணவு வேண்டுமோ அதை தாங்களே சென்று தான் வாங்கி கொள்ள வேண்டும். ஆனால் திரு அவளை உட்கார சொல்லிவிட, எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள் அவள்.
“சாப்பாடு பறந்து வருமா?” என்பது போல் திருவை நோக்கி நக்கலான பார்வை வேறு. ஆனால் திருவோ அவள் பார்வையை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவனே சென்று இரண்டு வெஜ் பிரியாணி வாங்கி வந்தவன் ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றுடன் அவளுக்கு எதிரில் அமர்ந்து கொண்டான்.
இப்போதும் துர்காவிடம் “பார்றா” என்பது போன்ற பார்வைதான். திரு அவள் பார்வையை உணர்ந்தாலும், அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவள்தான் தன் யோசனையில் மூழ்கி அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
சிறிது நேரம் இப்படியே கழிய திரு அவள் உண்ணப் போவதில்லை என்று உணர்ந்தவன், டேபிளில் இருந்த அவள் வலக்கையில் லேசாக தட்ட, அதிர்ந்து முழித்தாள் அவள். அவள் சற்று தெளியவும் “அப்புறம் பார்த்துக்கலாம்.. சாப்பிடு” என்றுவிட்டான் சட்டென.