“ஆங்.யாருங்க?”, என்று கேட்ட ஈஸ்வரி, ‘ஏன் கதவ தட்றாங்க? இந்த காலிங் பெல்லுக்கு என்னாச்சு’, என்று குளிரூட்டியை நிமிர்ந்து பார்த்தாள். அந்த அறையில் இன்வெர்ட்டர் கனெக்ஷன் இருந்ததால் மின்சாரம் தடை பட்டது ஈஸ்வரிக்கு தெரிய வாய்ப்பின்றி போனது.
இப்போது மேலே குளிரூட்டியைப் பார்த்ததும் கரெண்ட் இல்லையென்பது தெரிந்தது. ‘அட ச்சே கரண்டு இல்லியா?’, என யோசித்து, ‘இல்லியே அடுப்படில கிரைண்டர் ஓடுது.. ம்ம். ஒரு பேஸ் மட்டும் போயிருக்குமோ?’ என்று தனக்குள் சொல்லி, “கதவு திறந்துதான் இருக்கு உள்ள வாங்க, இல்லனா கொஞ்சநேரம் வெயிட் பண்ணுங்க”, என்று ஈஸ்வரி இரைந்து சொன்னாள்
ஈஸ்வரியின் மகன் தனது பிஞ்சு வயிற்றை நிரப்பியபடி தூக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தான். அன்னையின் சப்தத்தில் ஒரு முறை உலுக்கி எழுந்தான். ‘ஒண்ணுமில்லடா செல்லம் அம்மாதான்..தூங்கு,” என்று சொல்லி தட்டிக்கொடுத்தாள்.
வசந்தியோ அடுக்களையில் பூண்டு மனம் கமழ மகளுக்கு சமையல் செய்து கொண்டிருந்தார். அவருக்கு அருகே கிரைண்டர் ஓட,வெளியே வந்திருப்பவர் குடுத்த டொக் டொக் வசந்திக்கு கேட்கவில்லை.
ஈஸ்வரி முழுதாக ஒரு நிமிடம் பொறுத்திருந்து, மகனைப் படுக்க வைத்த பின் கூடத்துக்கு வந்தாள். வெளியே யாரையும் காணாது அடுக்களை வந்தவள், வசந்தம்மாவிடம், “ம்மா. அந்த எக்ஸ்சாஸ்ட் ஃபேனை ஆஃப் பண்ணுங்க. கிரைண்டரும் ஓடுது. இந்த சத்தத்துல வெளில யாரோ வந்து கதவை தட்டினதுகூட கேக்காம வேல பண்ணிட்டு இருக்கீங்க. யார் வந்தாங்கன்னு தெரில, இப்போ போயி பாக்கும்போது யாரையும் காணோம்”, என்று சொன்னாள்.
“ஓ அப்டியா எனக்கு எதுவும் கேக்கலியே? இரு எதுக்கும் நா வாசல்ல போயி பாக்கறேன்”,என்று கைகளை துடைத்துக்கொண்டு வாசல்படி தாண்டி வெளியே சென்று பார்த்தார். அங்கே பக்கவாட்டில் ஒரு பெண்மணி அவளது மகளை ஒத்த பெண்ணுடன் நின்று குசுகுசுவென பேசிக்கொண்டு இருந்தார்கள்.
யாராயிருக்கும் என்று யோசித்த வசந்தம்மா, “யாருங்க.. நம்ம வீட்டுக்கு வந்தீங்க போல?”, என்று கேட்டார்.
மெல்ல திரும்பிய அந்த பெண்மணி, “ஆமாங்க உங்க வீட்டுக்குத்தான் வந்தோம்”, என்று பதில் சொல்லிவிட்டு, ஒரு சின்ன புன்முறுவலோடு வசந்தாம்மாவோடு வீட்டினுள் நுழைந்தார்.
ஈஸ்வரி கூடத்தில்தானே இருந்தாள்? யாரிவர்கள் என்பது போல கேள்வியாய் புதியவர்கள் இருவரையும் பார்த்தாலும்,விருந்தாளிகளை வரவேற்க்கும் பண்பாக தலையசைத்து, “வாங்க”, என்றாள்.
இருவரும் ஈஸ்வரியைக் கண்டதும் (சக்கர நாற்காலிதானே அவளது இருக்கை?) சிலநொடி தயங்கி நிற்க, அப்பெண்மணி மட்டும் நேரே ஈஸ்வரியின் அருகே வந்து நின்றார். ஆறுதலாக சில வார்த்தைகள் எதையோ சொல்ல நினைத்து அதை சொல்லமுடியாமல் சங்கடப்படுவது போல அவர் நின்றிருந்தார்.
அவரது உள்ளக்கிடக்கு புரிந்து, அந்தப் பரிதாபம் தேவைப்படாதவளாக மென்னகை பூத்து தனதருகே நின்றவரை சற்றே அழுத்தப் பிடித்து, “உக்காருங்க” என்று சொல்லி, அருகிருந்த நாற்காலியில் உட்கார சொன்னாள் ஈஸ்வரி.
அவர்கள் அமர்ந்ததும், “சொல்லுங்க..”, என்று ஈஸ்வரி ஆரம்பிக்க, வசந்தி அவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றார்.
“நா.. ஓட்டு வீட்டுக்காரம்மான்னு சொன்னா இந்த தெருல எல்லாருக்கும் தெரியும்”, என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“ஓஹ். நீங்கதானா அது?, இவங்க.?”, என்று பக்கத்தில் நின்ற பெண்ணைக் காட்டி கேட்டாள் ஈஸ்வரி.
“எம் பெரியவங்க. சின்னது இன்னும் படிச்சிட்டு இருக்கா”
“ம்ம்”
“எப்ப இந்த வீட்டுக்கு குடிவரப்போறீங்க?”
“இந்த மாசத்துலயே ஒரு நல்ல நாள் பாத்து சின்னதா கிரஹப்பிரவேசம் பண்ணிட்டு வந்துடலாம்னு இருக்கோம். எல்லாம் உங்க அண்ணனால..அவர் மட்டும் வரலன்னா இப்பவும் நாங்க நடுத்தெருலதான் நின்னிருப்போம்மா”
“இதுல என்னங்க இருக்கு? எல்லாம் மனுஷங்களுக்குள்ள செய்யறதுதான? இன்னிக்கு கூட உங்கவேலையா எதோ கரண்ட்ட்டாபீஸ் போறதா அண்ணன் காலைல சொல்லுச்சே?”
“ஆமா, நாங்க போறோம் தம்பி,கொஞ்சம் கூட வந்து உதவிசெய்ய முடியுமான்னு கேட்டேன். வந்துச்சு. அந்த ஆபீஸ்ல தேவைப்பட்ட பாரம்-லாம் வாங்கி கொடுத்துச்சு. இதோ இவ எல்லாத்தையும் எழுதிட்டு நாளைக்கு ஈ பி ஆபீஸ்ல குடுத்துடுவா. நாங்க புறப்படும்போது.. தம்பிக்கு அந்த ஆபீஸ்ல யாரோ தெரிஞ்சவங்க இருக்காங்களாமே?, பேசிட்டு வர்றேன்னு சொல்லுச்சு. அதான் நாங்க கிளம்பிட்டோம்”, என்றார்.
இன்று வாய்ப்பிருந்தால் ஸ்ருதியிடம் பேசுவதாக தன் அண்ணன் சொன்னது ஈஸ்வரிக்கு நினைவிருந்தது.
கூடவே ‘வீட்டுக்காரம்மாட்ட சொல்லியிருக்குமா?’, ‘என்ன பதில் சொல்லியிருப்பாங்க?’ என்ற யோசனையும் வந்தது.
அப்போது அந்தப் பெண்மணி மிகுந்த தயக்கத்துடன், “நீங்க தப்பா எடுத்துக்க கூடாது. இது என் மனசு நிம்மதிக்காக,.. நீங்க எடுத்துக்கணும்..”, என்று கையில் இருந்த இருநூறு ரூபாய் கட்டு ஒன்றை மேஜைமீது வைத்தார்.
‘இந்தம்மா எதுக்கு நமக்கு பணம் தர்றாங்க? ஓ! யோகண்ணன் இவங்க பிரச்சனையை முடிச்சு வச்சதாலயா?,ஆனா அண்ணா இப்படியெல்லாம் காசு வாங்கமாட்டாரே?’, என்று ஈஸ்வரி குழம்பி, “அய்யயோ இதெல்லாம் எதுக்குங்க?”, என்று கேட்டாள்.
அதற்குள் அடுக்களையில் இருந்து வந்த வசந்தி இருவருக்கும் நீர் அருந்த குடுத்து விட்டு ஈஸ்வரியின் அருகே அமர்ந்து கொண்டார். அவருக்கு வந்திருப்பவர்கள் யாரென இன்னும் தெரியாது.
ஈஸ்வரியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அந்த பெண்மணியும் உடனிருந்த பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களை பொறுத்தவரை இது நன்றி அறிவிப்பு. ஆனால், இது தரகு வேலை செய்ததற்கான கூலி என்று யோகியின் வீட்டில் நினைத்துவிட்டால் என்ன செய்வது என்று திணறினர்.
ஈஸ்வரி,சரி இதைப் பற்றி அண்ணனிடமே போன் செய்து கேட்டு விடலாமென்று எண்ணி, “நீங்க பேசிட்டு இருங்க பாப்பா அசையறாப்ல இருக்கு”, என்று விட்டு உள்ளே சென்றாள்.
இங்கே கூடத்தில் இவர்கள் பேச்சு தொடர்ந்தது. “அது வந்துங்க.. என்னதான் உங்க நிலத்தை மீக்கறதுக்காக யோகித்தம்பி தனபாலோட சண்டை போட்டாலும், எங்களுக்கு பண்ணனும்னு என்ன இருக்கு சொல்லுங்க பாக்கலாம்?”, என்று பெரிய பீடிகையோடு ஆரம்பித்தார் அந்த பெண்மணி.
“என்னது எங்க நிலமா? அதை மீட்கறதுக்கு தனபாலோட சரத்து சண்டை போட்டானா? உங்களுக்கு உதவி செய்யத்தான்..”, என்று சொல்ல வந்து நிறுத்ததினார் வசந்தி. முதலில் இந்த பெண்மணி என்ன சொல்கிறார் என்று கேட்போம் என நினைத்து, “என்ன சொல்றீங்க? கொஞ்சம் புரியிறா மாதிரி சொல்லுங்கமா?”,என்று வசந்தி விவரம் சேகரிக்க தூண்டில் போட்டார்..
“அதாங்க, உங்க ஊருல நீங்க தானமா குடுத்த இடத்துல தனபாலன் ஆக்ரமிப்பு பண்ணினானில்ல? அதனாலதான் யோகித்தம்பி இங்க வந்துச்சு. இந்த பக்கத்து இடம் அவனோடதுன்னு நாங்க நினைச்சிட்டு இருக்கும்போதுதான் இந்த இடம் அவனோடதில்ல, செத்துப்போன தனபாலனோட மாமா அதான் யோகியோட அப்பாதுன்னு சொல்லுச்சு”,என்றவர் தொடர்ந்து..
“ஆனா பாருங்க, யோகித்தம்பி கடைசி வரைக்கும் இது எங்க அப்பாதுன்னு ஒரு வார்த்த கூட சொல்லல.”
“ஹூம். இந்த வீட்டை தனக்கு மாத்திக்கிட்டு, தனபால்கிட்டயே விக்கிற மாதிரி பேசி அட்வான்ஸ் வாங்கி.., கரெக்ட்டா காய் நகத்திட்டே வந்து .. அந்த தனபாலன் பேப்பர்ல விளம்பரமெலாம் குடுத்து பிளாட்டெல்லாம் விக்கவேண்டிய நேரத்துல எங்க சார்பா காகிதம் ரெடி பண்ணி.. எங்களை வரச்சொல்லி.. எல்லாம் அவர் சொல்லித்தான் நடந்துச்சு”
“இதுக்கெல்லாம் பணம் குடுக்கறதா இருந்தா, பாதிக்குப் பாதி தரணும். ஆனா நா ரெண்டு பொண்ணு வச்சிருக்கேன்மா. உங்க புள்ள புண்ணியத்தால தனபாலன்ட்ட இருந்து கிடைச்ச இந்த பணத்தை வச்சுத்தான் அதுங்கள கரையேத்தணும். அதான்.. எதோ எங்களால முடிஞ்ச ஒரு சின்ன அன்பளிப்பு.”, என்று.. அப்பெண்மணி விளக்க.. எந்த விஷயம் தனது அன்னையின் காதுக்கு போகக்கூடாது என்று யோகி நினைத்தானோ அது.. மிகச் சரியாக ஸ்பஷ்டமாக அவரிடம் சென்று சேர்ந்தது.
வசந்திக்கு முதலில் இந்த பெண்மணி சொன்னது குழப்பம் தர, மீண்டும் ஒருமுறை அவர் சொன்னதை அசை போட்டுப் பார்த்து விஷயம் இன்னதென கணித்தார்.
ஊரில் இருக்கும் அந்த மேற்கு பாத்த நிலம்… தனது கணவன் தனக்காகவும் பிள்ளைகளுக்காகவும் விட்டுச் சென்ற நிலம்.. உனக்கு அந்த பூமி வேண்டாம் தானமாகக் குடுத்துவிடு என்றதும் மறுபேச்சின்றி, அநாதரவாக நின்ற யாரோ சிலருக்கு சரத் பிரித்துக் குடுத்த நிலம்… அது இப்போது மிகவும் வளர்ந்து ஊரை இணைக்கும் பைபாஸ் தார்ச்சாலையை ஒட்டி இருக்கின்றது என்பது வரை வசந்திக்குத் தெரியும்.
பொதுவாக ஊரில் யாரும் யோகியின் தந்தையைப் பற்றி பேசினால், வசந்தி அங்கிருந்து நகர்ந்து விடுவார். அவர் பெயரை எடுத்தாலே அப்படி எனும்போது அவர் பேரில் உள்ள நிலத்தை பற்றியோ அதில் வந்த ஆக்ரமிப்பு மற்றும் சிக்கல்களைப் பற்றியோ யார் வசந்தியிடம் சொல்வார்கள்? யாரும் இவரிடம் சொல்லவில்லை.ஆனால், கேட்க வேண்டியவன் கேட்டிருக்கிறான். செய்ய வேண்டியதை செய்திருக்கிறான்.
‘அவன் செயல்களின் காரணம் புரியாமல், ஏன் ஸ்ருதியிடம் பொய் சொன்னான் என்று அவனையே கடிந்திருக்கிறேன். ஆனாலும், எதிர்த்து ஒரு வார்த்தைகூட.?’.
‘ஹ்ம்ம். எம்புள்ள!, உன்னைய அந்தாளோட புள்ளைன்னு பாத்தேனே தவிர, நீ என் மகனும்தான்ன்னு யோசிக்காம போயிட்டேனே சரத்து..’, வசந்திக்கு கண்கள் கலங்கியது.
யோகியின் பொறுமை காற்றாய் போனது. “வீட்டுக்கு வந்து உன் மூஞ்சித்தான் நா பேக்கப்போறேன் பாத்துக்க”, என்று தங்கையை மிரட்டி அழைப்பை துண்டித்தான்.
ஈஸ்வரிக்கு இதுவே போதுமானதாக இருந்தது. ‘சரி வீட்டுக்காரம்மா குழப்பமாயிருக்காங்க அவ்ளதானே? ம்ம் இன்னும் கொஞ்சம் குழப்பி ஒருவழியா ஒத்துக்க வச்சிடலாம்’, என்று நினைத்தபடி வெளியே வந்தாள்.
“நானும் வாங்கல ஈஸ்வரி. அவங்களையே எடுத்திட்டு போக சொல்லிட்டேன்”, என்றவருக்கு குரல் கமறியது.
“என்னமா ஆச்சு?”
கலங்கிய கண்களை தட்டிச் சிமிட்டிகொண்டு, “உனக்குத் தெரியுமா ஈஸு?”, எனக் கேட்டார்.
“என்ன தெரியுமா?”, சந்தேகமாக கேட்டாள் ஈஸ்வரி. அதற்குள் இவர்கள் காதுவரை அண்ணனின் காதல் விவகாரம் வந்துவிட்டதா?
“இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம், நம்ம ஊர்ல இருக்கிற நிலம்ன்னு உனக்குத் தெரியுமான்னு கேட்டேன்?”
“என்னது..?”என்ற ஈஸ்வரியின் குரலிலேயே இதெதுவும் அவளுக்கு தெரியாது என்பதைப் புரிந்து கொண்ட வசந்தி ஆதியோடந்தமாக அனைத்தையும் சொல்லி முடித்தார்.
“அந்தாள் விவகாரம் எனக்குப் பிடிக்காதுன்னு எவ்ளோ வேலை பண்ணியிருக்கான் பாத்தியா? எனக்கும் கஷ்டமில்லாம, நம்மள நம்பியிருந்தவங்களையும் கைவிடாம.. எப்படி எல்லாத்தையும் சரி பண்ணி இருக்கான் பாத்தியா?”, என்று தன் மகனைப் பற்றி புளகாங்கிதத்தோடு மகளிடம் சொன்னார் வசந்தி.
இதுதான் சரியான சமயமென்று ஈஸ்வரிக்குத் தோன்ற, “சரிம்மா,உனக்கு கஷ்டம் குடுக்கக்கூடாதுன்னு நினைச்ச உன் புள்ளைக்கு நீ என்ன தரப்போற?”, என்று லாவகமாக கேள்வி கேட்டாள்.
“நா குடுக்கறதுக்கு என்ன இருக்கு ஈஸ்வரி?, என்னோடதுன்னு நா எதுவுமே வச்சுக்கலையே?அவன் தலையெடுத்ததும் அவன் பொறுப்புல எல்லாத்தையும் குடுத்துட்டேனே?”
“அண்ணனோடதுன்னு சொல்லிக்கறதுக்கும் நிலம் நீச்சு பாக்டரி தவிர எதுவுமில்லையேம்மா?”
“ஹ்ம்ம்”, மகள் சுற்றி வளைத்து எங்கே வருகிறாள் என்று வசந்திக்குப் புரிந்தது. “ஒரு நல்ல பொண்ணா பாத்து..”, என்று யோசனைக்குப் போனார்.
புருவம் உயர்த்தி மகளை பார்த்த வசந்தம்மாவின், “சரத்து ஏதாவது பொண்ண பாத்திருக்கானா என்ன?”, என்ற கேள்வியில் ஆராய்ச்சி இருந்தது. வசந்தியை பொறுத்த வரை அவரது மகன், ‘பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் ரகம்’. அப்படித்தான் அவர் வளர்த்திருந்தார். ஊரிலும் கூட மகனுக்கு நல்ல பெயர்தான். அப்படியிருக்க.. யார் அந்த மகனுக்குப் பிடித்த பொண்ணு ?என்ற யோசனை வசந்தியின் மனதில் ஓடியது.
“ஆமா, நல்ல பொண்ணு, ஆனா நீ ஓகே சொல்லணும்,அவங்களையும் சரின்னு சொல்ல வைக்கணும்”
“ஓஹ் பொண்ணு இன்னும் சம்மதம் சொல்லலியா? அப்படி யாரந்த சீமைல இல்லாத சுந்தரி?”, ‘அது யாரு எம்புள்ளை ஆசைப்பட்ட பொண்ணு?’
சட்டென, “அந்த சுந்தரியோட பேரு ஸ்ருதி.. நீ அவங்கள கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பியா?”,என்று கேட்டு தனது அன்னையை ஆழமாக பார்த்தாள் ஈஸ்வரி.