இந்திரசேனா அகத்தியன் இப்போது இந்திரசேனா அபராஜிதனாகி ஒரு நாள் முடிந்திருந்தது. அடித்துக் கொண்டிருந்த அலாரத்தை மெல்ல எட்டி அணைத்தவள் ஆடையை சரி செய்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள்.
குளித்து வேறு உடைக்கு மாறி வந்தவள் அறைக்கதவை திறந்து வெளியே வர கரிகாலன் பூஜையறையில் நின்றிருந்ததை பார்த்தாள்.
“எதுவும் ஹெல்ப் பண்ணணுமா மாமா??” என்ற குரலில் திரும்பி பார்த்தவர் “சீக்கிரமே எழுந்துட்டியாம்மா??”
“ஆமா மாமா”
“சாமி படத்துக்குலாம் கொஞ்சம் பூ போடுறியாம்மா??”
“சரிங்க மாமா” என்றவள் அவர் அங்கு வைத்திருந்த பூவை எடுத்து அனைத்து படத்திற்கும் வைத்தாள்.
“மாமா வேற பூ இருக்குமா??”
“ஏன்மா பூ பத்தலையா??”
“அத்தை போட்டோவுக்கு கொஞ்சம் பெரிசா போடலாமேன்னு”
“ப்ரிட்ஜ்ல இருக்குமா” என்று அவர் சொல்ல அவள் சென்று எடுத்து வந்து அப்படத்திற்கு வைத்தாள். பின் விளக்கேற்றியவள் கற்பூர ஆரத்தி காட்டி கரிகாலனுக்கும் கொண்டு வந்து தர அதை வணங்கியவர் மருமகளை திருப்தியாய் பார்த்தார்.
இந்திரசேனா பின் கடவுளை தொழுது வெளியில் வர கரிகாலன் அங்கில்லை. என்றும் இல்லாத வழக்கமாய் காலையிலேயே எழுந்தாகிற்று, அதுவும் ஐந்தரை மணிக்கே குளித்து சாமியும் கும்பிட்டு முடித்துவிட்டிருந்தாள்.
அது நிச்சயம் அவளைப் பொறுத்தவரை வரலாறே. அவ்வளவு காலையில் எல்லாம் அவள் எழுந்ததேயில்லை, எப்போதாவது எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றால் எழுந்து கொண்டிருக்கிறாள். மற்றபடி வீட்டில் இருக்கும் நாட்களில் ஒருபோதும் எழுந்ததில்லை.
அவள் நின்ற இடத்திலேயே யோசித்துக் கொண்டிருக்க கரிகாலன் கையில் பால் பாக்கெட்டுடன் உள்ளே வந்தார். “பால் வாங்கவா கடைக்கு போனீங்க??” என்றாள் அவரைப் பார்த்து.
“ஹ்ம்ம் ஆமாம்மா எனக்கு காலையில வாக் போறது பிடிக்கும். அதான் நானே போய் எப்பவும் வாங்கிட்டு வருவேன்”
“காபி போடட்டுமா??”
“போடும்மா” என்றுவிட்டு பால் பாக்கெட்டை அவளிடம் கொடுத்தார்.
அவள் காபி போட்டு அவரிடம் கொண்டு வந்து நீட்டினாள். “எடுத்துக்கோங்க மாமா”
“தேங்க்ஸ்ம்மா”
“எனக்கு எதுக்கு மாமா தேங்க்ஸ் எல்லாம். காபி எங்க அம்மா அளவுக்கு எல்லாம் போட மாட்டேன், ஏதோ கொஞ்சம் சுமாரா இருக்கும் பார்த்து அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க மாமா” என்றாள்.
“கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் மாமா. சாதம் வடிக்க, சாம்பார், ரசம், ஒரு ரெண்டு மூணு பொரியல் செய்ய கத்து வைச்சிருக்கேன் அவ்வளவு தான்”
“கவலையேப்படாதே எனக்கு சமைக்க தெரியும். உன் புருஷனுக்கும் நல்லா சமைக்க தெரியும்” என்று இயல்பாய் அவளிடம் பேசியவரை அவளுக்கு பிடித்து போனது.
கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது எப்படி இருப்பார்களோ என்ன சொல்வார்களோ என்றெல்லாம். அவளும் பார்த்திருக்கிறாள் தானே அவர்கள் வீட்டில். என்ன தான் அவளுக்கு அப்பா சித்தப்பா என்று அகத்தியனும், மாணிக்கவாசகமும் இருந்தாலும் மாமனார் என்ற கெத்தை எப்போதும் அவர்கள் விட்டதேயில்லை.
அதாவது அவர்கள் அதிகாரம் எல்லாம் செய்து பேசியதில்லை. ஆனால் அவர்களிடத்தில் எப்போதும் ஒரு அதிகாரத்தொனி இருக்கவே செய்யும். மருமகளிடம் இப்படி இயல்பாக அவர்கள் எப்போதுமே உரையாடியதில்லை.
அவளின் அம்மாவும், சித்தியும் தான் மருமகளையும் மகளாகவே பாவித்து நடந்துக் கொள்வார். அவ்வப்போது மாமியாராக மாறவும் செய்வார்கள்.
“என்னம்மா யோசிக்கறே??” என்றார் அவர்.
தன் யோசனைவிட்டு அவரைப் பார்த்தவள் “இல்லை அவருக்கு காபி”
“குடிக்க மாட்டான் இப்போ” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறையில் இருந்து வந்தான் அபராஜிதன். ஜாகிங் செய்வதற்கான உடையுடன் வந்தவன் தந்தையிடம் ஒரு தலையசைப்புடன் வெளியேறிவிட்டான்.
“நீ போய் கொஞ்ச நேரம் படும்மா. உமையாள் எழுந்து வந்திடுவா இன்னும் கொஞ்ச நேரத்துல” என்றுவிட்டு அவர் அறைக்குள் சென்று மறைந்தார்.
இந்திரசேனாவிற்கு மீண்டும் உறங்கும் எண்ணமெல்லாம் இல்லை. அப்படியே ஹால் சோபாவில் அவள் அமர உமையாள் எழுந்து வந்தாள்.
“எழுந்திட்டியா??” என்றவருக்கு தலையசைத்து பதில் சொன்னாள்.
“காபி போடவா உங்களுக்கு”
“எனக்கு இந்த ஊர் காபி பிடிக்கறதில்லை”
“வேற எந்த ஊர் காபி பிடிக்கும்” என்று சட்டென்று கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.
“எங்க மாமியார் கருப்பட்டி காபி போடுவாங்க. பால் இல்லாத கருப்பட்டி காபி தான் எனக்கு பிடிக்கும். அங்க போய் பழகினது தான் ரொம்ப பிடிச்சிருச்சு” என்றார்.
“நான் போய் குளிச்சுட்டு வந்திடறேன்” என்றுவிட்டு நகர்ந்தார்.
ஒவ்வொருவராய் எழுந்து வந்தனர். அவளின் பெரிய அண்ணி நளினா தான் அவளுடன் வந்திருந்தாள். திவ்யாவிற்கு மூன்று மாதம் என்பதால் அவளை அனுப்பவில்லை.
நேரே தன் நாத்தனாரிடம் வந்த நளினா “என்ன இந்திரா நைட்டெல்லாம் தூங்கலையா??” என்று விட்டு அவளையே ஆர்வமாய் பார்த்தாள் என்ன பதில் சொல்வாளென்று.
“அலாரம் வைச்சு எழுந்தேன் அண்ணி, முதல் நாளே லேட்டா எழுந்தா நல்லாயிருக்காதுல”
“குளிச்சு ப்ரெஷா பளிச்சுன்னு இருக்கியே, ரொம்ப அழகா இருக்கே” என்று மேலும் தூண்டி துருவினாள் அவள்.
“இவ்வளவு சீக்கிரம் எழுந்து ஒரு நாளும் நான் குளிச்சதில்லைல அதான் ப்ரெஷா இருக்கேன்” என்று அவள் பதில் “மண்டு மண்டு” என்று சத்தமாய் திட்டினாள் மற்றவள்.
“என்ன அண்ணி ரொம்ப திட்டுறீங்க??”
“பின்னே நான் என்ன கேட்கறேன் நீ என்ன பதில் சொல்றே”
“உங்க கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன்னு அர்த்தம். அதை புரிஞ்சுக்காத நீங்க மண்டுவா இல்லை நான் மண்டுவா??”
“நானே மண்டுவா இருந்துட்டு போறேன்டிம்மா. நீ தெளிவாவே இரு, நீ சொல்லாட்டியும் எனக்கு புரியாமலா இருக்கும். நானும் இதெல்லாம் கடந்து தானே வந்திருக்கேன்”
“சரி சரி விடுங்க அஸ்வின் எங்கே??”
“தூங்கறான்”
“அண்ணன்??”
“இப்போ தான் எழுந்தார் குளிச்சுட்டு வருவார். நான் உன்னை எழுப்பலாம்ன்னு வந்தா நீ சீக்கிரம் எழுந்து எனக்கு சர்பிரைஸ் கொடுத்திட்டே அதுவும் நல்லது தான். உன் புருஷனையும் எழுப்பி விடு, சீக்கிரமே ரெடியாகிட்டீங்கன்னா மறுவீட்டுக்கு கிளம்பலாம்” என்றாள் நளினா.
“எங்க கிளம்புறது பத்தி பேசிட்டு இருக்கீங்க??” என்றவாறே தலையில் கட்டிய துண்டை உதறிக்கொண்டே வந்தாள் உமையாள்.
“மூணு நாளா அத்தை இன்னைக்குன்னு தானே என்கிட்ட சொன்னாங்க”
“முதல்ல அப்படித்தான் பேசினோம். ஆனா பாருங்க எங்கள்ல மூணாம் நாள் தான் மறுவீட்டுக்கு போவாங்க. அன்னைக்கு செவ்வாய்கிழமை, கல்யாணம் ஆகி முதல் முதல்ல அம்மா வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்ப முடியாதுல அதான் புதன்கிழமை வருவாங்க” என்றாள் அவள்.
“சரிங்க அக்கா நீங்க சொன்னா சரி தான்” என்றாள் நளினா.
உமையாள் அப்புறம் சென்றதும் “அன்னைக்கு இவங்க தான் கல்யாணம் முடிஞ்ச மறுநாள் மறுவீடுன்னு சொன்னாங்க. இப்போ வேணாங்கறாங்க, நாங்க மூணு நாளெல்லாம் இங்க இருக்க முடியாது இந்திரா”
“நாங்க இன்னைக்கே கிளம்பறோம், புதன்கிழமை மறுபடியும் வந்து உங்களை அழைச்சுட்டு போறோம் சரியா” என்றாள் அவள்.
அவள் என்ன சொல்ல முடியும் ‘ஹ்ம்ம்’ என்பதை தவிர. எதுவோ ஒன்று தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்ட உணர்வு. திருமணம் முடிந்ததில் இருந்தே அப்படித்தான் இருந்தது.
உடன் அண்ணியும் அண்ணனும் வந்ததில் சற்று தெளிந்தது போல் இருந்தது. இப்போது நளினா கிளம்புகிறேன் என்று சொன்னதில் மீண்டும் வந்திருந்தது.
“இந்திரா” என்று உமையாள் அழைக்கும் குரல் கேட்க அத்திசை நோக்கிச் சென்றாள் அவள்.
“சொல்லுங்க அண்ணி”
“காலையில டிபன் பண்ணணும். இனிமே நீ தான் இங்க இருக்க போறே, எதெல்லாம் எங்க இருக்குன்னு ஒரு பார்வை பார்த்துக்கோ. ஜஸ்ட் பார்த்துக்கோ அப்போ தான் உனக்கு தெரியும். அப்பாவுக்கும் தம்பிக்கும் எப்பவும் ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காது. வீட்டு சாப்பாடு தான்”
“அதனால காலையில டிபன், மதியம் லஞ்ச் எல்லாம் நீயே பண்ணிடு” என்றாள் அவள்.
அகல்யா அப்போது அங்கே வந்தவள் “ஏன் அக்கா வந்த முதல் நாளே அவங்களை பயமுறுத்தற. ரிலாக்ஸா விடுக்கா…” என்றாள்.
“நான் ஒண்ணும் பயமுறுத்தலைடி, இந்த வீட்டோட நடைமுறையை சொன்னேன், நீயோ நானோ எத்தனை நாளைக்கு இங்க இருக்கப் போறோம் சொல்லு. நான் இன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்பறேன், நீ இன்னும் ரெண்டு நாள்ல உன் மாமியார் வீட்டுக்கு போய்டுவ”
“அம்மா இருந்தா நான் ஏன் இதெல்லாம் சொல்லப் போறேன் சொல்லு. அவ தனியா ஒண்ணும் புரியாம முழிக்கக் கூடாதுல அதான் சொல்லி வைக்கிறேன். நீ போய் குளிச்சுட்டு சீக்கிரம் வா கோவிலுக்கு போகணும்” என்று தங்கையை அங்கிருந்து விரட்டினாள் அவள்.
“ஆமா உனக்கு சமைக்க தெரியுமா??” என்று எல்லாம் சொல்லிவிட்டு கடைசியாய் கேட்டவளை என்ன செய்ய என்று பார்த்திருந்தாள் இந்திரசேனா.
“கொஞ்சம் கொஞ்சம் செய்வேன் அண்ணி”
“எப்படியும் பழகி தான் ஆகணும் என்ன செய்ய. உங்க வீட்டில இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டாங்க” என்று அவள் சொல்லும் போது என்னவோ போலானது இந்திரசேனாவிற்கு.
தன் வீட்டினருக்கு கெட்டப்பெயர் வாங்கி கொடுத்துவிட்டோமோ என்று எண்ணினாள். உமையாளோ “ஒரே பொண்ணுல செல்லாம இருந்திருப்பே, உன்னை எதுவும் வேலை சொல்லியிருக்க மாட்டாங்க. நான் மோனிகாவுக்கு கொடுக்கற மாதிரி” என்று அவள் மகளைச் சொல்ல ஒரு நொடி கண்கள் கலங்கிப் போனது அவளுக்கு.
எப்படி சொல்ல என்று அவள் விழித்திருந்த வேளையில் தானாகவே அதை ஊகித்து சொன்ன உமையாளை அவள் மனதில் அழுத்தமாய் நின்றாள். எதையும் மனதில் வைக்காது பேசும் அவளை பிடித்து போனது அக்கணம்.
“சரி இன்னைக்கு நான் சமைக்கிறேன் நீ பார்த்துக்கோ. அதான் உனக்கே கொஞ்சம் கொஞ்சம் தெரியுமே சமாளிச்சுக்கோ. தம்பியோ அப்பாவோ எப்பவும் சாப்பாட்டை குறை சொல்ல மாட்டாங்க. சீக்கிரமே நல்லா சமைக்க கத்துக்கோ” என்றாள்.
“சரிங்கண்ணி”
“இன்னைக்கு வீட்டில எல்லாரும் இருக்காங்க, நல்ல வேளை சொந்தக்காரங்க எல்லாம் அப்படியே கிளம்பிட்டாங்க. எல்லாரும் நம்ம வீட்டு ஆளுங்க மட்டும் தான். வடை போட்டிறலாம்,இட்லி ஊத்திக்கலாம், கொஞ்சம் கேசரியும் பொங்கலும் சாம்பார் சட்னி மட்டும் வைச்சுடலாம்” என்று அவள் போட்ட லிஸ்ட்டில் இந்திரசேனாவிற்கு மயக்கமே வந்தது.
ஆனால் உமையாள் டக் டக்கென்று அனைத்தும் செய்து முடித்ததை பார்க்கும் போது வாவ் என்று சொல்லத்தான் தோன்றியது அவளுக்கு. சித்திரமும் கைப்பழக்கம் என்று இதைத்தான் சொல்வார்களோ என்று தான் எண்ணினாள்.
வடைக்கு அரைக்கும் போது “அண்ணி எவ்வளவு பருப்பு ஊற வைக்கணும்” என்றாள் மெல்ல.
“பரவாயில்லை உனக்கு கத்துக்கணும்ன்னு ஆர்வம் வந்திட்டு” என்ற உமையாள் அவளுக்கு அளவு சொன்னாள். அதை மனதில் குறித்துக் கொண்டாள் மற்றவள்.
கிரைண்டர் ஓடிக்கொண்டிருக்கும் போதே உமையாள் மாவை லாவகமாய் வழித்தெடுக்க அப்படியே கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளுக்கு மாவரைக்கவே தெரியாதே. அரைத்து வைத்த மாவு இருந்தால் இட்லி தோசை ஊற்றுவாள் அவ்வளவு தான் தெரியும்.
“என்ன பார்க்கறே உனக்கு இப்படி எடுக்க தெரியலைன்னா. நீ அரைச்சு முடிச்சதும் நிப்பாட்டிட்டு இதை இப்படி திறந்துவிட்டு இப்படி எடுத்து ஊத்திக்கணும் அவ்வளவு தான்” என்று சொல்லிக் கொடுத்தாள் அவள்.
ஒரு வழியாய் காலை உணவு முடிந்து அனைவரும் உணவருந்தி முடிக்கவும் அவளின் அண்ணனும் அண்ணியும் அவர்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்டிருந்தனர். அவர்கள் அப்புறம் செல்லவும் இவர்கள் மணமக்களுடன் கோவிலுக்கு சென்றனர்.
இந்திரசேனா தன் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனோ மருந்துக்கும் கூட இவள் புறம் திரும்பவேயில்லை.
உமையாள் அன்று இரவே ஊருக்கு கிளம்பிவிட்டாள். அவளின் கணவனும் பெண்ணும் திருமணம் முடிந்த அன்று இரவே கிளம்பிவிட்டிருந்தார்கள். அவர்கள் பெண்ணுக்கு ஏதோ பரிட்சை நடந்துக் கொண்டிருந்தது அதனால் தான் சென்றிருந்தனர்.
வீடே வெறிச்சென்று ஆகிப்போனது. நல்ல வேளையாக அகல்யாவும் அகிலேஷும் இருந்ததால் ஒன்றும் தோன்றவில்லை.
இரவு உணவுக்கு பின் இந்திரசேனா அறைக்கு வர அபராஜிதன் கட்டிலில் எதையோ யோசித்தவாறே அமர்ந்திருந்தான்.
‘நாம பேசுவோமா இல்லை அவனே பேசட்டுமா’ என்ற சிந்தனையோடே வந்தவள் ஒன்றும் சொல்லாமல் அவனிடம் பாலை கொடுத்துவிட்டு கட்டில் ஏறி படுத்துக் கொண்டாள்.
“இனிமே நீ கோர்ட்டுக்கு போக வேண்டாம்” என்றான் அபராஜிதன் அறிவிப்பாய். அதைக் கேட்டவள் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.