13

ஆத்திசூடி – பொருள்தனைப் போற்றிவாழ்

பொருள் – பொருள்களை வீண் செலவு செய்யாமல் பாதுக்காத்து வாழ்

எவ்வளவு பதட்டத்தோடு அறையில் இருந்து வந்தாளோ அதைவிட அதிகமாய் அவளுக்கு குதூகலமாய் இருந்தது. பதட்டமெல்லாம் தூரப் போயிருந்தது.

அவளின் மாற்றத்திற்கான காரணம் வேறு ஒன்றுமில்லை அவள் கண்ட காட்சி மட்டுமே. இந்திரசேனாவின் அண்ணி திவ்யா அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வர ஹாலில் இருந்த நீளமான சோபாவில் அபராஜிதன் நடுவிலும் அவனுக்கு இருபுறமும் அவளின் இரு அண்ணன்களும் அமர்ந்திருந்தனர்.

அடுத்ததாய் ஒரு அண்ணன் அமர்ந்திருந்தார். எதிரில் இருந்த சோபாவில் தான் அவனின் தந்தை, அக்காவின் கணவர், தங்கையின் கணவர் எல்லாம் அமர்ந்திருந்தனர்.

அருகருகே போட்டிருந்த இரு தனித்தனி இருக்கையில் அவளின் அப்பாவும் சித்தப்பாவும் அமர்ந்திருக்க பெண்கள் அனைவரும் விரிப்பில் கீழே அமர்ந்திருந்தனர்.

அபராஜிதனின் முகம் பார்க்க அவன் அமர்ந்திருக்கும் விதமே சொன்னது அவனை அவளின் அண்ணன்கள் கேள்விகளால் துளைத்து எடுத்துக் கொண்டிருப்பதும் அவன் நெளிந்துக் கொண்டிருப்பதும் அதைக்கண்டு தான் அவளுக்கு ஆனந்தமாய் இருந்தது, அடக்கமாட்டாமல் சிரிப்பு வேறு வந்து தொலைத்தது.

‘என்னையா பேசினே, மாட்டினியா எங்க அண்ணனுங்ககிட்ட, நல்லா வேணும்’ என்று மனம் சந்தோசமாய் கொக்கரித்தது.

வெளியில் நல்ல பிள்ளையாய் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவள் முயன்று தன் முகபாவனையை மாற்றிக் கொண்டாள். பெண்களுடன் அவள் அமர வைக்கப்பட அகல்யா நன்றாக பேசினாள் அவளிடம்.

“இந்து எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம் தெரியுமா நீ எங்க வீட்டுக்கு வர்றது. நீ லக்கியும் கூட, எங்க அண்ணன்னு சொல்றேன்னு நினைக்க வேண்டாம். நிஜத்துக்குமே எங்க அண்ணன் ரொம்ப நல்ல அண்ணன்” என்று அவள் பேச ‘எங்க முதலாளி நல்ல முதலாளி’ என்று மனதிற்குள் கவுன்ட்டர் பாட்டு ஓடியது அவளுக்கு.

“என்ன படிச்சிருக்கே??” என்று இத்து போன கேள்வியை கேட்டாள் அபராஜிதனின் தமக்கை.

‘ஏன் அது தெரியாமத்தான் இங்க வந்தாங்களா’ என்று உள்ளுக்குள் பதில் கொடுத்தவள் வெளியில் “லா முடிச்சிருக்கேன்”

“அதுக்கு பேரெல்லாம் இருக்கு தானே” என்றவளை ஒன்றுமே செய்ய முடியாமல் “பிஏ பிஎல்”

“பிஏ வேற படிச்சியா?? அப்போ உனக்கு வயசு ஒரு இருபத்தியஞ்சு இருக்குமா”

“இருபத்தினாலு” என்றாள் வீம்பாய்.

“இல்லை இப்போவே நீ மூத்து தெரியற. இனி கல்யாணம் பண்ணி குழந்தை பிறந்தா வெயிட் போட்டிருவ அப்போ என் தம்பியை விட பெரியவளா தெரிவியே” என்றவளை மனதிற்குள் வசைப்பாடி தீர்த்தாள் அவள்.

‘என்னைவிட வாயாடியா இருக்கா. எங்க வீட்டில எல்லாரும் என்னைச் சுத்தி இருக்காங்க. அதுனால பேசாம இருக்கேன். இதே கேள்வியை என்கிட்ட தனியா கேட்டிருந்தா நல்லா பதில் கொடுத்திருப்பேன். எங்க போய்ட போறாங்க, வைச்சுக்கறேன் என்னோட கச்சேரியை’ என்று இவள் மனதிற்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே அகல்யா தன் தமக்கையிடம் பேசினாள்.

“சும்மாயிருக்கா அவங்க ஒண்ணும் அப்படியெல்லாம் தெரியலை. அண்ணனுக்கு சரியா தான் இருப்பாங்க”

“இல்லைடி கல்யாணத்துக்கு அப்புறம் வெயிட் ஏறிடுமே”

“நீ ஏறவேயில்லையே”

“நான் அம்மாவை போலடி”

“அவங்களும் அவங்க அம்மா போல தான் இருப்பாங்க”

“இல்லைடி இப்போவே”

“கொஞ்சம் பேசாம தான் இருக்கா. அண்ணனுக்கு பிடிச்சிருக்கு நீ வேற ஏதாச்சும் பேசிக்கிட்டு” என்று தமக்கையை கண்டித்தாள் அவள்.

உமையாள் எப்போதும் அப்படித்தான் மனதில் நினைத்ததை, தோன்றியதை அப்படியே பேசிவிடும் ரகம். எதையும் உள்ளே வைத்து வெளியில் ஒன்று பேசத் தெரியாது.

சரியோ தவறோ மனதில்பட்டதை அப்படியே கூறிவிடுவாள். தவறென்றால் தயங்காது காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்பாள். 

யாரோ தன்னை பார்ப்பதாக உணர்ந்தாள் இந்திரசேனா. நிமிர்ந்து பார்க்க அபராஜிதனின் பார்வை அவள் மீதிருந்ததை கண்டுக்கொண்டாள்.

‘எங்க அண்ணனுங்க முன்னாடியே என்னை பார்க்கறியா அவ்வளவு தைரியம் வந்திடுச்சா’ என்று இவள் நினைத்த நேரம் அவளின் பெரியண்ணன் அவனை ஏதோ கேட்க அவள் புறம் இருந்து பார்வையை திருப்பினான்.

‘நல்லா வேணும்’ என்று பார்த்தவள் எப்போதடா இதெல்லாம் முடியும் என்ற ரீதியில் அமர்ந்திருந்தாள்.

“கல்யாணத்தை ஒரு மாசத்துல நடத்திடலாம். நிச்சயத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அப்போ வைச்சுடலாம்” என்று அவர்கள் வேக வேகமாய் அடுத்த கட்டப்பேச்சை பேச ‘என்னது ஒரு மாசத்துல கல்யாணமா’ என்ற பக்கென்று இருந்தது அவளுக்கு.

அருகில் இருந்த அவளின் அண்ணி திவ்யாவை அழைத்தவள் “ஒரு மாசம் எல்லாம் வேணாம்” என்று இவள் சொன்னதை முழுதாய் கேட்காதவள் “பாருங்களேன் நம்ம இந்துவை ஒரு மாசம் வரைக்கும் எல்லாம் வெயிட் பண்ண முடியாதாம், இந்து எங்களுக்கெல்லாம் ஆறு மாசம் ஆச்சும்மா. கொஞ்சம் பொறுமை வேணும்” என்று சத்தமாய் எல்லாருக்கும் கேட்கும்படி சொல்லிவிட அய்யோவென்றானது அவளுக்கு.

‘போயும் போயும் இந்த அண்ணிக்கிட்ட போய் சொன்னேன் பாரு. அச்சோ இப்போ அத்தனை தலையும் என்னை நோக்கி திரும்புதே. அவனும் என்னை கிண்டலா பாக்குறானே’ என்று வெட்கம் பிடிங்கித் தின்றது அவளை.

“என்ன இந்து அவ்வளவு நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாதா. அண்ணாகிட்ட வேணா இப்போ தனியா போய் பேசறீங்களா. நான் போய் சொல்லவா” என்று அகல்யா வேறு கிண்டல் செய்ய “அச்சோ பேசாம இரு அகல்யா” என்றாள்.

‘இதுக்கு மேல வாயை திறந்தா நான் டோடல் டேமேஜ். வேணாம் அவங்க பேசட்டும் நம்மகிட்ட வந்தா பார்த்துக்கலாம்’ என்ற எண்ணத்தில் அதற்கு மேல் அவள் வேறு பேசவும் இல்லை. யாரையும் பார்க்கவும் இல்லை.

வரும் புதன்கிழமையே நல்ல நாளாக இருப்பதால் அன்றே வீட்டளவில் நிச்சயத்தை முடித்துக்கொண்டு மாசி மாதம் பிறந்ததும் வரும் முதல் முகூர்த்ததில் திருமணம் என்று பேசி முடிக்கப்பட்டது.

“இன்னைக்கே புடவை எடுத்திட்டு வந்திடலாம். இன்னைக்கு ரொம்பவே நல்ல நாள். என்ன சொல்றீங்க??” என்றாள் உமையாள்.

“இன்னைக்கேவா??” என்றார் சாதனா.

“ஏன் அத்தை யோசிக்கறீங்க??”

“இல்லை ஒண்ணுமில்லை” என்றவர் தன் கணவரை பார்த்தார். அகத்தியன் கண்களால் தன் சம்மதம் தெரிவிக்க “போகலாங்க”

“சரி அப்போ புறப்படுங்க எல்லாரும் போயிட்டு வருவோம். இந்திரா நீயும் வா” என்றாள் அவள்.

“அவ எதுக்கு அவ இங்க இருக்கட்டுமே” என்றார் நாயகி.

“என்னத்தை சொல்றீங்க நீங்க அவளுக்கு பிடிச்சதை அவளே எடுக்கட்டும். அதை கட்டப்போறவளுக்கு பிடிக்க வேண்டாமா” என்று சொன்ன உமையாளை ‘யாரும்மா நீ?? என்னை டேமேஜ் பண்ணுறதும் நீயே எனக்காக பேசுறதும் நீயே வா’ என்று பார்த்தாள் அவளை.

“என்ன இந்திரா நான் உனக்காக தான் பேசிட்டு இருக்கேன். நீ எதுவும் பேசாம இருக்கே??” என்று உமையாள் அவளைப் பார்த்து கேட்கவும் “இல்லை பொதுவா எனக்கு எந்த டிரஸ் எடுக்கணும்ன்னாலும் நான் கடைக்கு போகவே மாட்டேன்”

“அம்மா, நாயகிம்மா தான் எடுத்திட்டு வருவாங்க. அவங்க எனக்கு பொருத்தமானதை தான் எடுப்பாங்க. நான் வரலை, நீங்க எல்லாம் போயிட்டு வாங்க” என்று தன் மறுப்பை அவளிடமே தெரிவித்தாள். உமையாள் ஏதோ தடுத்து பேச முயல அபராஜிதன் தடுத்தான் அவளை.

இந்திரசேனாவிற்கு அவர்களுடன் செல்ல விருப்பமில்லை. முக்கியமாக அபராஜிதன் வேறு இருப்பதால் அவளால் இயல்பாக இருக்க முடியுமா என்ற எண்ணம் வேறு. அவளின் விருப்பமின்மை அவள் முகத்தில் தெரிய அதை புரிந்தவன் போன்று அபராஜிதன் பேசினான்.

“அக்கா வேண்டாம்ன்னா விட்டிறேன். எதுக்கு போட்டு கஷ்டப்படுத்தறே. அவங்களுக்கு தெரியாதா அவங்க பொண்ணுக்கு என்ன பிடிக்கும்ன்னு, இதுல எல்லாம் நீ தலையிடாத, அவளுக்கு இஷ்டமில்லைன்னா விட்டுறணும்”

“என்னமோ போ, அவளுக்கு பிடிச்சதா பார்க்கலாம்ன்னு நினைச்சேன்”

“இப்போ என்ன அவளுக்கு பிடிச்சது தானே. போட்டோ எடுத்து அவளுக்கு அனுப்பு அவளுக்கு பிடிச்சதை அவளே வாங்கிக்கட்டும்” என்று அவன் சொல்ல “டேய் இதெல்லாம் எப்போடா நீ கத்துக்கிட்ட” என்றாள் அவனின் அக்கா.

“உமையாள்” என்று கரிகாலன் தன் மகளைப் பார்க்க சட்டென்று அமைதியானாள் அவள்.

கரிகாலனுக்கு அதிகம் பேசுவது அறவே பிடிக்காது. பேசுவதை தெளிவாய் ஒரே முறையில் பேசிவிட வேண்டும் என்று எண்ணுபவர் அவர். அனாவசிய பேச்சுக்களும் அவர் ரசிப்பதில்லை.

மகள் அதிகமாய் பேசுகிறாள் என்பதாலேயே அவளை கண்டித்தார் அவர். முதலில் இருந்தே அவளின் பேச்சை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை. இன்னொருவர் வீட்டில் இருக்கிறோம் அவளை குறை சொன்னால் அது தங்களுக்கு தான் அசிங்கம் என்று கருதியே பேசாமல் இருந்தார்.

இதற்கு மேலும் அவளைப் பேசவிட்டால் அவள் நிறுத்தவே மாட்டாள் என்று உணர்ந்து தான் அவர் உமையாள் என்று அழைத்தது. அவருக்கு தெரியும் இனி அவள் தேவையே அன்றி வேறு எதற்கும் வாய் திறவ மாட்டாள் என்று.

அபராஜிதன் குடும்பத்தினர் முதலில் கிளம்ப பின் இந்திரசேனாவின் குடும்பத்தில் யாரெல்லாம் கடைக்கு செல்லலாம் என்று முடிவு செய்து பெண்கள் அனைவரும் இந்திரசேனா தவிர்த்து கிளம்புவதாக இருந்தனர். ஆண்களில் அகத்தியனும், மாணிக்கவாசகமும் செல்வதாக இருந்தது. அஸ்வினை அவர்கள் உடனேயே அழைத்துச் சென்றுவிட்டனர்.

அண்ணன்கள் மூவரும் தங்கைக்கு துணையாய் அவளருகில். மற்றவர்கள் கிளம்பிவிட்டிருக்க அப்பாடாவென்று அவள் உடைமாற்றி ஹாலுக்கு வர எப்போதும் பிசியாக சுற்றிக் கொண்டிருக்கும் அவளின் உடன்பிறப்புகள் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்தனர்.

இவளைத்தான் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். “என்ன என்னைய எதுக்கு எல்லாரும் பார்த்துட்டு இருக்கீங்க??” என்று வாய்விட்டே கேட்டுவிட்டாள் அவள்.

“உட்காரு” என்றான் முதலாமவன் அபிமன்யு.

அவள் அவர்களுக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர “இப்போ சொல்லு உனக்கு மாப்பிள்ளை ஓகேவா”

“ரொம்ப லேட்டு”

“எது??”

“நீங்க இப்போ வந்து இதை கேட்குறது”

“எப்போ கேட்டா என்ன பதில் சொல்லு??” என்றான் இரண்டாமவன் நகுலன்.

“நிச்சயத்துக்கே நாள் குறிச்சிட்டாங்க. போங்கடா நீங்களும் உங்க அக்கறையும்” என்று சலிப்பாய் அவள் சொல்ல “என்னாச்சு பாப்பா மாப்பிள்ளை உனக்கு பிடிக்கலையா. நீ வேணாம்ன்னு சொல்லு இப்போவே போன் போட்டு பெரியப்பா, அப்பாவெல்லாம் வீட்டுக்கு வரச்சொல்றேன் பாப்பா. சொல்லு பாப்பா உனக்கு பிடிக்கலையா??” என்றான் முகிலன்.

“வேணாம்ன்னு சொன்னா நிறுத்திடுவியா??” என்றாள் இவள் விளையாட்டாய்.

“உனக்கு பிடிக்கலை இந்த கல்யாணம் வேணாம்ன்னு சொல்லு நிறுத்திடுறேன்”

“எங்கே நிறுத்து பார்ப்போம்” என்று அவள் இன்னமும் விளையாட்டை நிறுத்தாது சொல்ல அவன் உடனே அகத்தியனுக்கு அழைத்துவிட்டான். “பெரியப்பா” என்று அவன் சொல்லவும் போனை பிடிங்கி அதை கட் செய்தாள் இந்திரசேனா.

“டேய் லூசாடா நீ” என்று அவள் சொல்ல “உனக்கு என்னைப் பார்த்தா லூசா தெரியுதா பாப்பா. நானே உனக்கு பிடிக்கலையோன்னு கவலையா இருக்கேன். போனை கொடு பாப்பா” என்று அவன் வெகு சீரியசாக சொல்லும் வேளையில் அகத்தியன் அவனுக்கு அழைத்தார்.

அவன் போனை அவளிடமிருந்து பிடுங்கி “ஹலோ பெரியப்பா” என்றவாறே எழுந்து வெளியே சென்றான். இவள் அவன் பின்னோடே செல்ல “முகிலன்” என்று சத்தமாய் அழைத்தான் அபிமன்யு.

“முகிலா போனை என்கிட்ட கொடு” என்று சொல்ல அவன் இவனிடம் நீட்ட செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தாள் இந்திரசேனா. “அண்ணா அண்ணா ப்ளீஸ் அப்பாகிட்ட எதுவும் சொல்லிடாதீங்க” என்றாள் வாயசைவில்.

“அப்பா கடைக்கு போயாச்சா” என்றவன் வேறு ஏதோ பேசிவிட்டு போனை வைத்தான். அப்பாடாவென்ற பெருமூச்சு அவளிடத்தில்.

“உன் விளையாட்டு எல்லாம் மூட்டைக்கட்டி வைச்சுட்டு ஒழுங்கா எங்களுக்கு பதில் சொல்லு”

“என்னத்தை சொல்றது அதான் உங்க மச்சான் பக்கத்துல உட்கார்ந்து அவரை ஏதோ கேள்வியா கேட்டுட்டு இருந்தீங்க. இப்போ தான் உங்களுக்கு தங்கச்சி ஞாபகம் வந்து என்கிட்ட கேட்கறீங்களா” என்றாள்.

“ஆமா நாங்க மச்சான்கிட்ட பேசிட்டு இருந்தோம்ன்னு உனக்கு எப்படி தெரியும்” என்றான் நகுலன்.

“நான் தான் பார்த்தேனே” என்றாள் அவள். அவளுக்கு அண்ணன்கள் என்று நிரூப்பித்தார்கள் அவர்கள். அவளறியாமல் அவளிடம் போட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள். மூவரின் முகத்திலும் ஏதோவொரு திருப்தி தங்கைக்கு பிடிக்காமல் எல்லாம் இல்லை என்ற நிம்மதி.

“சரி இப்போ கேட்கிறோம் பதில் சொல்லு” என்றான் அபிமன்யு.

“தெரியலை”

“இதென்ன பதில் பாப்பா”

“எனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு எல்லாம் தெரியலை. எல்லாருக்கும் ஓகே சோ எனக்கும் ஓகே தான்”

“உனக்கு பிடிச்சு சொல்லணும் பாப்பா” – முகிலன்.

“எனக்கு நீங்க எல்லாம் கெட்டது செய்ய மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். என்னைவிட எனக்காக நீங்க நிறைய யோசிப்பீங்கன்னு எனக்கு தெரியும்”

“வக்கீல்ன்னு இவ அப்பப்போ நிரூப்பிக்கிறா” என்றான் நகுலன்.

“நீ நிஜமாவே ரொம்ப நல்லா இருப்பேடா. மாப்பிள்ளையை பத்தி நாங்க எல்லாரும் நல்லா விசாரிச்சுட்டோம். இவன் ஒரு வாரம் அவன் பின்னாடியே அவருக்கு தெரியாம போயிட்டு வந்திருக்கான். எந்த கெட்டப்பழக்கமும் இல்லை”

“நல்ல குணமும் கூட, பொறுப்பான நல்ல பிள்ளை தான்” என்று அவர்கள் சொல்ல நமக்கு தெரியாமல் இதெல்லாம் செய்திருக்கிறார்களா என்றிருந்தது அவளுக்கு. கண்கள் லேசாய் பணித்தது அவர்கள் அன்பில். அதில் பதறியவர்கள் அவள் தலையை ஆதரவாய் வருட தான் எடுத்த முடிவு சரியே என்று எண்ணினாள்.