10

ஆத்திசூடி – ஞயம்பட உரை

பொருள் – கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி பேசு

மகளின் திருமணம் முடிந்து அவள் மறுவீட்டிற்கும் வந்து சென்றிருந்தாள். இரண்டு மாதங்கள் தன்னைப் போல ஓடியிருந்தது. வீடே வெறிச்சென்று ஆகிப்போனது. ஆண்கள் இருவர் மட்டுமே என்றானது அவ்வீட்டில். கரிகாலனும் ஓரிரு மாதத்தில் தன் மூத்தப்பெண் வீட்டிற்கு கிளம்பிவிடுவார்.

அவருக்கு மகனை குறித்த கவலை ஆட்கொண்டது. அவனின் திருமணத்தை உடனே நடத்திவிட வேண்டும் என்ற எண்ணமும் அவரை ஓயாமல் அரித்துக் கொண்டிருந்தது.

பகல் பொழுது பள்ளியில் சென்றுவிடுவதால் இரவு பொழுது என்னவோ போல சுற்றிக் கொண்டிருக்கும் மகனை பார்த்து அவருக்கு இன்னமும் வருத்தம் அதிகரித்தது. தன் மூத்த பெண்ணுக்கு போனை செய்து மகனின் திருமணம் குறித்து பேசினார்.

உமையாளும் பெண் தயாராகத்தானே இருக்கிறாள் முடித்துவிடலாம் என்று சொல்லிவிட மறுநாளே தங்கைக்கு வீட்டிற்கு கிளம்பினார். அதைப்பற்றி பேசுவதற்கு.

அண்ணனை கண்டதும் வாயெல்லாம் பல்லாக வரவேற்றார் அவரின் தங்கை செண்பகம். “மாப்பிள்ளை இல்லையாம்மா, அவரும் இருப்பாருன்னு தான் இந்நேரம் வந்தேன்” என்றார் அவர்.

“இருக்காருண்ணே குளிச்சுட்டு இருக்கார். கொஞ்ச நேரத்துல வந்திடுவார்” என்றவர் உள்ளே சென்று குளியலறை கதவைத் தட்டி தன் கணவருக்கு விஷயத்தை உரைத்துவிட்டு அண்ணனுக்கு காபி போடச் சென்றார்.

அவர் காபி கலந்து எடுத்து வரவும் அவரின் தங்கை கணவரும் அவர்களின் மகள் விண்ணரசியும் ஒன்றாகவே வந்தனர்.

வந்தவரை இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். கரிகாலன் தான் வந்த விஷயத்தை மெல்ல ஆரம்பித்தார்.

“அபி கல்யாண விஷயமா பேசிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன் மாப்பிள்ளை”

“அதுக்கென்ன தாராளமா முடிச்சிருவோம்” என்று அவர் சொல்லவும் கரிகாலனின் முகத்தில் மெல்லிய புன்முறுவல்.

“நான் சிவகாசி போறதுக்குள்ள அவனுக்கு முடிச்சுட்டு கிளம்பலாம்ன்னு இருக்கேன். நீங்க தான் இனி சொல்லணும், நாம ஏற்கனவே பேசினது தானே. மண்டபம் பார்க்கறது எல்லாம் நினைச்சு யோசிக்க வேண்டாம். அதெல்லாம் நாம பெரிசா பண்ணிக்கலாம். மண்டபம் கிடைக்கலைன்னா நம்ம ஸ்கூல்லவே கூட பெரிசா பந்தல் போட்டு தடபுடலா பண்ணிடலாம்”

கரிகாலனின் தங்கைக்கு முகமெல்லாம் பூரிப்பு மகன் தான் பிறந்த வீட்டில் சென்று வாழப் போகிறாள் என்று. அவர் தன் கணவரையும் மகளையும் பார்க்க இருவரின் முகமும் எதையுமே வெளிப்படுத்தவில்லை.

அங்கே அமைதி மட்டுமே நிலவியது சில நொடி. விண்ணரசியின் தந்தை பேச்சை தொடங்கும் வேளை அவருக்கு வேலை வைக்காமல் மகளே பேசினாள்.

“மாமா எனக்கு ஒரு விஷயம் சொல்லணும்”

“தாராளமா சொல்லும்மா” என்றார் அவர்.

“இந்த கல்யாணப்பேச்சு எந்தளவுக்கு சரி வரும்ன்னு எனக்கு தெரியலை மாமா” என்றாள் மெல்ல.

“என்னடி சொல்றே??” என்று பாய்ந்தார் அவளின் தாய்.

“செண்பகம் நீ பேசாம இரு” என்றவர் மருமகளை நோக்கி “நீ சொல்லும்மா எதுவா இருந்தாலும் உடைச்சு சொல்லு. இதுல சம்மந்தப்பட்டவங்க ரெண்டு பேரோட சம்மதம் ரொம்பவே முக்கியம்”

“சரியா சொன்னீங்க மாமா. நீங்க அத்தான்கிட்ட பேசிட்டீங்களா?? அவர் என்ன சொன்னார்??”

“அவன்கிட்ட கேட்காம நான் இங்க வந்திருப்பேனாம்மா…”

“ஹ்ம்ம்” என்றாள் ஈனஸ்வரத்தில்.

“என்னம்மா விண்ணரசி உனக்கு என்ன பிரச்சனை??”

“ஏன் மாமா எனக்கும் அத்தானுக்கு கல்யாணப்பேச்சு வார்த்தை ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் இருக்கும் தானே??” என்றாள் கேள்வியாய். ஆமென்பதாய் அவர் தலையாட்டினார்.

“இந்த பேச்சு ஆரம்பிச்ச பிறகு நான் எத்தனை தரம் அந்த வீட்டுக்கு வந்திருப்பேன், போயிருப்பேன். அத்தான்கிட்ட நானா பேசக்கூட முயற்சி பண்ணேன். அவங்களுக்கு பெரிசா என் மேல எந்த இண்டரஸ்டடும் தெரியலையே மாமா”

“அகல்யா கல்யாணத்துக்கு வந்தப்போ கூட அவங்க பாட்டுக்கு இருக்காங்க. நமக்கு பேசி வைச்சிருக்க பொண்ணாச்சேன்னு கூடவா அவங்களுக்கு தோணாது. என்னை பார்க்கக்கூட இல்லை. என்னை அத்தை மகளாவும் அவங்க பார்க்கலை, அவங்களுக்கு பார்த்த பொண்ணாவும் அவங்க பார்க்கலை. ஏன் என்னை ஒரு ஜடப்பொருளா கூட அவங்க பார்க்கலை”

“இப்படியொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழப்போற வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை மாமா”

“நான் அத்தானை குறை சொல்றேன்னு நினைக்க வேண்டாம். அவங்க இப்படி தான் இருக்கணும் அப்படித்தான் இருக்கணும்ன்னு குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி ஒரே பக்கம் தான் அவங்க பார்வை இருக்கு”

“என்னை நீங்க தப்பா நினைச்சுக்கிட்டாலும் பரவாயில்லை மாமா. இந்த கல்யாணப்பேச்சு இனி வேணாம் மாமா. அத்தானுக்கு நான் பொருத்தமானவ இல்லை, எனக்கு எல்லாமே பர்பெக்ட்டா பண்ணத் தெரியாது”

“அப்பாகிட்ட நான் முன்னாடியே சொன்னேன் உங்ககிட்ட இதைப்பத்தி பேசச்சொல்லி. அகல்யா கல்யாணம் முடிஞ்சு நீங்க கொஞ்சம் செட்டில் ஆகட்டும்ன்னு சொன்னாங்க. ஆனா நீங்களே வர்ற மாதிரி ஆகிடுச்சு சாரி மாமா” என்றாள் அவள்.

“என்னடி சொல்றே?? என்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லலை??” என்றார் செண்பகம்.

“செண்பகம் பேச எதுவுமில்லை. அவ ரொம்ப தெளிவா தான் இருக்கா. அவளை கட்டாயப்படுத்த முடியாது” என்றவர் மருமகளிடம் “நீ நேரடியா சொன்னதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லைம்மா. உன் விருப்பப்படி உனக்கு நல்லதாவே நடக்கட்டும்” என்றவர் எழுந்திருந்தார்.

“சாரி மச்சான்” என்றார் தங்கையின் கணவர்.

“விடுங்க மாப்பிள்ளை” என்றவர் அனைவரிடமும் ஒரு தலையசைப்புடன் விடைப்பெற்று கிளம்பிவிட்டார். தங்கை அவருக்கு கொண்டு வந்து வந்திருந்த காபி ஆறியதை கூட கவனிக்காமல் கிளம்பியவரின் மனம் ஆறாதிருந்தது தங்கை மகளின் பேச்சில்.

‘இந்த காலத்து பிள்ளைகளின் தேவை தான் என்ன. நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண், நல்ல குடும்பம், இப்படியான வாழ்க்கையை தானே எதிர்ப்பார்ப்பர். மாப்பிள்ளை பேசவில்லை, பெண் பேசவில்லை என்றெல்லாமா எதிர்பார்ப்பார்கள்.

அவர் தன் மனைவியை கரம் பிடித்ததை எண்ணிக் கொண்டார். வீட்டில் பார்த்து வைத்த பெண்ணைத்தான் திருமணம் செய்துக் கொண்டிருந்தார். நல்ல பெண் என்றார்கள் வேறு எதையுமே யோசிக்கவில்லையே தாலியை கட்டிவிட்டோமே.

காலம் மாறிவிட்டது தான் இல்லையென்று சொல்லவில்லை. காலம் மாறினாலும் திருமணம் என்ற நிகழ்வு இன்னமும் அப்படியே தானே இருக்கிறது. கணவன், மனைவி பந்தம் என்பதும் மாறவில்லை தானே.

பார்த்து காதலித்து திருமணம் என்றால் கூட அவரால் ஒத்துக்கொள்ள முடியும். தன் மகனை குறித்த விமர்சனத்தை ஏனோ அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அவன் எல்லா விஷயத்திலும் ஒரு கண்டிப்போடும் கவனத்தோடும் பொறுப்போடும் தான் இருப்பான். அதில் என்ன தவறு இருக்கிறது. ஒருவன் நல்லவனாக இருந்தால் கூட குற்றமா என்ற ஆற்றாமையை அவரால் ஆற்றவே முடியவில்லை.

மதியம் உணவருந்த வீட்டிற்கு வந்த அபராஜிதனின் விழிகளில் சோபாவில் சாய்ந்து கண்ணை மூடிய நிலையில் சோர்வாய் அமர்ந்திருந்த தந்தை தான் தெரிந்தார்.

அவர் அருகே வந்து அமர்ந்தவன் அவர் தொடை மீது கை வைக்க அதில் சுயஉணர்வு வந்து அவர் மெல்ல கண் திறந்தார். எதிரில் மகனை காணவும் சோர்வான புன்னகை ஒன்றை கொடுத்தார்.

“எப்போப்பா வந்தே??”

“இப்போ தான்ப்பா நீங்க வெளிய ஏதோ வேலைன்னு சொன்னீங்க. போகலையாப்பா, உடம்புக்கு எதுவும் முடியலையாப்பா”

“இல்லை அபி அதெல்லாம் இல்லை. நான் காலையில் செண்பகம் வீட்டுக்கு போனேன்”

“ஓ!!” என்றவன் மேற்கொண்டு ஒன்றும் கேட்கவில்லை.

“என்னன்னு கேட்க மாட்டியா அபி??” என்று அவர் கேட்ட விதமே ஏதோவொன்று இருப்பதாக உணர்த்த அவரை உற்று நோக்கினான்.

“என்னப்பா எதுவும் பிரச்சனையா??” என்று அவன் கேட்கவும் அவர் தங்கை வீட்டில் நடந்ததை அப்படியே சொல்லி முடித்திருந்தார்.

“சரி விடுங்கப்பா அதுக்கு எதுக்கு பீல் பண்றீங்க??”

“ஏன் அபி உனக்கு வருத்தமில்லையாப்பா?? உன் மனசுல அவ தான் பொண்ணுன்னு பதிஞ்சு இருக்கும்ல. எல்லாம் என்னால தானே” என்றார் அவர் குற்றவுணர்ச்சி மேலிட!!

“அப்பா எனக்கு அப்படி எந்த நினைப்பும் இல்லை. நீங்க பார்க்கிற எந்த பொண்ணையும் நான் கல்யாணம் பண்ணிக்க ரெடியா தான் இருந்தேன். அது அத்தை பொண்ணுன்னு நீங்க சொன்னீங்க. அதுல எனக்கு எந்த மறுப்பும் இல்லை”

“அவ சொல்ற மாதிரி நான் பெரிசா எதுவும் அவகிட்ட பேசினதில்லை தான். ஆனா எனக்கு மனைவின்னு வந்த பிறகும் நான் அப்படியே இருப்பேனா என்ன. கல்யாணத்துக்கு முன்னாடி தேவையில்லாத சஞ்சலம் வேண்டாம்ன்னு நினைச்சேன் அவ்வளவு தான்”

“எங்க கல்யாணம் நீங்க இன்னைக்கா பேசினீங்க எப்பவும் பேசி வைச்சீங்க. எனக்கு நெறைய பேசுறதுல எல்லாம் இஷ்டமில்லை. கல்யாணம்ன்னு ஒண்ணு ஆனபிறகும் நான் அப்படி இருக்க மாட்டேன் இதையெல்லாம் நான் அவகிட்ட போய் சொல்லிட்டு இருக்க முடியாது”

“இதுல இருந்து என்ன தெரியுது அவளுக்கு பொறுமையில்லை. எனக்கு அப்படித்தான் தோணுது. நான் இனிமேலயும் இப்படித்தான் இருப்பேன். எந்த பொண்ணை பார்த்தாலும் என்னோட எண்ணம் இது தான். கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிட்டா கல்யாணத்துக்கு பிறகு தெரிஞ்சுக்கவும் பேசவும் என்ன இருக்கும் சொல்லுங்க”

“இருந்தாலும் அபி”

“அவளை விட்டுத்தள்ளுங்கப்பா”

“உனக்கு வருத்தமில்லையே”

“துளிகூட இல்லை”

“அப்போ உனக்கு வேற பொண்ணு பார்க்கலாமா. நம்ம சங்கத்துல பதிஞ்சு வைக்கலாம். நம்ம கதிரேசன் ஏதோ மேட்ரிமோனி வைச்சிருக்கிறதா கேள்விபட்டேன் அவன்கிட்டயும் சொல்லிடவா அபி”

“அப்படி என்னப்பா என் கல்யாணத்துக்கு அவசரம்”

“நான் ஊருக்கு போய்டுவேனே அபி. நீ தனியா இருப்பியே, உனக்கு ஒரு கல்யாணம் முடிச்சிட்டா எனக்கும் நிம்மதியா இருக்கும் அபி”

“சரிப்பா”

“நான் இப்போவே கிளம்பறேன் கதிரேசனை ஒரு எட்டு பார்த்து சொல்லிடறேன்” என்று எழுந்தார் அவர்.

சட்டென்று ஏதோ தோன்ற “ஏன் அபி உனக்கு வேற ஏதும் அபிப்பிராயம் இருக்கா?? எந்த பொண்ணையாவது உனக்கு பிடிச்சிருக்கா??” என்று கேட்கார் அவர்.

“அப்படி…” என்று ஆரம்பித்தவனின் கண் முன்னே வந்தது இந்திரசேனாவின் முகம். ஏன் அவள் முகம் வந்தது எதற்கு வந்தது என்று கூட அவனுக்கு தெரியவில்லை. அது அவனுக்கு பிடிக்கவும் இல்லை.

கண்ணை மூடிக்கொண்டவன் முகத்தை சுருக்கினான். “அப்பா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றுவிட்டு சாப்பிட்டு கிளம்பிச் சென்றுவிட்டான்.

ஒரு வாரம் சென்றிருந்தது. கரிகாலன் காலை உணவின் போது மெல்ல ஆரம்பித்தார். “அபி கதிரேசனை வரச்சொல்லவா. அன்னைக்கு கூட அவன்கிட்ட போன்ல சொல்லி வைச்சிருந்தேன், நான் சொன்னதும் ஸ்டார்ட் பண்ணுன்னு. இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு”

“அப்பா…” என்றவன் எதையோ சொல்ல வந்து நிறுத்தினான்.

“எதுனாலும் சொல்லு அபி. உனக்கு பிடிச்ச மாதிரி தான் இனி பொண்ணு பார்க்கறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன். என் இஷ்டத்துக்கு செஞ்சதெல்லாம் போதும்ன்னு நான் நினைக்கிறேன்”

“பொண்ணு எனக்கு மட்டுமில்லைப்பா உங்களுக்கும் பிடிக்கணும். அக்காக்கு தங்கச்சிக்கு எல்லாருக்கும் பிடிக்கணும்” என்றான்.

“கண்டிப்பாப்பா…”

“நம்ம அகல்யா கல்யாணத்துல அகிலேஷ் பக்கத்துல நின்னுட்டு இருந்த பொண்ணை வேணா கேட்டுப் பாருங்கப்பா” என்று பட்டென்று அவன் உடைத்தான் அவன்.

“யாரு நம்ம மாப்பிள்ளை அகிலேஷோட சித்தி பொண்ணா??”

“அவங்க சித்தி பொண்ணு கிடையாது. அவங்க சித்தப்பாவுக்கு அண்ணன் பொண்ணு”

“பார்க்க நல்லா பொண்ணா தான் தெரிஞ்சா. அகல்யா கூட அறிமுகப்படுத்தி வைச்சா, நான் பெரிசா எதுவுமே பேசலையே அவகிட்ட”

“அவங்க பேமிலியே நல்ல மாதிரி தான் தெரிஞ்சாங்க. கல்யாண போட்டோ பார்க்கும் போது அகல்யா சொன்னா” என்றார் அவர்.

அவருக்கு தன் மகனே வாயை திறந்து ஒரு பொண்ணை கேளுங்கள் என்ற சொல்லிவிட்டான். அதுவே போதும் என்றிருந்தது அவருக்கு. அவர் விருப்பப்படி செய்ய நினைத்தது தான் சரிவரவில்லை இதுவாவது சரியாக வரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு.

“அப்பா அவங்களை கேளுங்க. அவங்களுக்கு ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம். வேணாம்ன்னு சொன்னாங்கன்னா எந்த பிரச்சனையும் இல்லை, வேற பொண்ணை பாருங்க” என்றான் அவன்.

அவருக்கு அப்படியே விடும் எண்ணம் எல்லாம் இல்லை. மகன் வாய் திறந்து கேட்டு ஒன்றை செய்யாது அவர் விடுவாரா என்ன.

“அப்பா அவங்க நம்ம ஆளுங்களான்னு எனக்கு தெரியலை. ஏன்னா அகிலேஷ் சித்தி லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க” என்றான் தகவலாய்.

“அவங்க எந்த ஆளுங்களா இருந்தா என்ன. பொண்ணு உனக்கு ஓகே தானே விடு நான் பார்த்துக்கறேன்” என்றவர் அன்றே தன் சின்னமகளின் வீட்டுக்கு பயணமானார்.

கிளம்பும் முன் தன் மூத்த மகளிடமும் அனைத்தும் சொல்லியிருக்க அவளும் தன் தம்பிக்கு விருப்பமானதையே செய்யச் சொல்லிவிட அவருக்கு சந்தோசம்.

பவானியிடம் அவர் விஷயத்தை சொல்லியிருக்க அகிலேஷ் உடனே சொன்னான் “மாமா அவங்க வேற ஆளுங்க. அது உங்களுக்கு…”

“அதெல்லாம் பிரச்சனையில்லை மாப்பிள்ளை. நல்ல குடும்பமா இருந்தா போதும். அந்த பொண்ணை தான் நான் உங்க கல்யாணத்துல பார்த்தேனே நல்ல மாதிரியா தெரியறா”

“எங்களுக்கு சந்தோசம் தான் மாமா. அம்மாவை அவங்ககிட்ட பேசச் சொல்றேன். அவங்க என்ன முடிவெடுக்குறாங்களோ அதுபடி பார்த்துக்கலாம் மாமா” என்றான் அகிலேஷ். பவானி அன்றே தன் தங்கைக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட இந்திரசேனாவின் வீடு பரபரப்பானது.