இரவு வீட்டிற்கு வந்த அகத்தியன் கண்டது முகத்தை தூக்கி வைத்திருக்கும் மகளைத்தான். எப்போதும் கலகலவென்று இருக்கும் மகளின் முகம் வாடியிருப்பது பொறுக்கவில்லை அவருக்கு.
“என்னாச்சு உன் பொண்ணுக்கு??” என்றார் தன் மனைவியினிடத்தில் மெல்ல.
“தெரியலை வந்ததுல இருந்து இப்படித்தான் இருக்கா??”
“கேட்கலை நீ??”
“கேட்டேன் உங்க தம்பி எங்கன்னு கேட்டா?? எங்களை கேட்டா எப்படி தெரியும் ரெண்டு பேரும் ஒண்ணா தானே வேலை பாக்குறீங்கன்னு சொன்னேன். அப்புறம் எதுவும் பேசலை”
“ஓ!!” என்றவர் “ஆமா மாணிக்கம் இன்னும் வீட்டுக்கு வரலையா??”
“இல்லை”
“ஏன்?? நாயகி எதுவும் சொல்லலையா??”
“அவர் போன் பண்ணி சொல்லியிருந்தா தான் அவளே சொல்லி இருப்பாளே…” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மாணிக்கவாசகம் உள்ளே நுழைந்தார்.
மிகுந்த சோர்வுடன் இருந்தார் அவர். அப்படியே ஹாலில் இருந்த சோபாவில் அவர் அமரவும் நாயகி சரியாக உள்ளிருந்து வந்தார். “என்னங்க சோர்வா இருக்கீங்க??”
“என்னவோ வந்ததும் உங்களைத்தான் கேட்டா… நீங்க இல்லைன்னு சொல்லவும் ரூமுக்குள்ள போய் அடைஞ்சவ தான் இன்னும் வெளிய வரலை. சாப்பிட கூட வரமாட்டேன்னு இருக்கா உங்க செல்ல பொண்ணு” என்றார் அவர்.
“ஆமா அவளுக்கு இன்னைக்கு வேலை கொடுத்திட்டீங்களா. ஆனாலும் நீங்க புள்ளைய ரொம்ப வேலை வாங்குறீங்க. தினமும் நைட் கண்ணு முழிச்சா என்னாகுறது”
“ஹேய் நான் எங்கடி வேலை வாங்குனேன். பாயிண்ட்ஸ் எடுக்க சொல்லி இருப்பேன், அவளை நைட் முழிச்சு வேலை செய்ன்னு நான் சொன்னதேயில்லை”
“சொன்னாத்தானா வேலை செய்யணும்ன்னு நீங்க சொல்லிட்டாலே அவ தான் தூங்க மாட்டாளே” என்று கணவரின் மேல் மனத்தாங்கலாய் சொன்னார்.
“சரி சரி வந்ததும் நீ வேற ஆரம்பிக்காத. நான் போய் குளிச்சுட்டு வந்து பாப்பாவை பார்க்கறேன்” என்றவர் தன் அண்ணனையும் அண்ணியையும் நோக்கிச் சென்றார்.
“இப்போ தான் நீ வந்தியா அகத்தியா” என்றார் மாணிக்கவாசகம் தன் அண்ணனை பார்த்து. அவர்கள் இருவருக்குள் இடைவெளி குறைவு என்பதால் நண்பர்கள் போல் தான் பேசிக்கொள்வர். பெயர் சொல்லி அழைப்பது உரிமையுடன் டா போட்டு பேசிக்கொள்வது அனைத்தும் அதில் அடங்கும்.
“இல்லைடா ஒரு மணி நேரம் இருக்கும். ஆமா நீ என்ன இன்னைக்கு இவ்வளவு லேட்டு??”
“கிளையன்ட் ஒருத்தரை நேர்ல போய் பார்க்க வேண்டியதா போச்சு. அந்தாளு தண்ணி வண்டி உள்ளே இறக்கிட்டே பேசினா தான் என்னால எல்லாம் சொல்ல முடியும்ன்னு ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய்ட்டான்”
“அப்புறம் நீ தண்ணி எதுவும்??”
“ஏன்டா என் மேல உனக்கு டவுட்டு?? நான் என்னைக்கு அந்த மாதிரி நடந்திருக்கேன்”
“உன் மேல டவுட்டு இல்லை ஆனா விட்டிருக்க மாட்டானுங்களே. சோசியல் ட்ரின்க் அது இதுன்னு எதுவும் பழகி விட்டிற போறானுங்க அதான் கேட்டேன்”
“அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஆனா அந்த ஆளு என்னை சாப்பிட்ட சொல்லி ரொம்பவே கம்பல் பண்ணத்தான் செஞ்சாரு. எப்படியோ அவர்கிட்ட இருந்து தப்பிச்சு வர்றதுக்குள்ள இவ்வளவு நேரமாகிடுச்சு” என்றார்.
அண்ணன் தம்பி இருவரும் பேசிக் கொண்டிருந்ததால் அதுவரை எந்த குறுக்கீடும் செய்யாது நின்றிருந்த சாதனா “சாப்பிடுங்க தம்பி” என்றார்.
“இல்லைண்ணி குளிச்சுட்டு வந்திடறேன். பாப்பா வேற என்னை கேட்டாளாமே போய் பார்க்கணும்” என்றார்.
“அவளுக்கு என்ன உங்ககிட்ட ஏதாச்சும் டவுட்டு கேட்கணும்ன்னு காத்திட்டு இருப்பா அவளை நாளைக்கு பார்த்துக்கலாம். நீங்க குளிச்சுட்டு சாப்பிட வாங்க நாயகி உங்களுக்கு தான் காத்திட்டு இருக்கா”
“நான் மட்டும் தான் காத்திட்டு இருக்கேனா. நீயும் தான் நான் சாப்பிடலைன்னு சாப்பிடாம இருக்கே” என்றார் நாயகி.
“நீ தான் பாப்பா சொல்லணும் அவர் என்ன விஷயம் சொன்னார்ன்னு எனக்கெப்படி தெரியும்”
“அந்த கேஸ் விஷயம்??”
“அது முடிஞ்சு போச்சு பாப்பா”
“அப்படின்னா??”
“உங்களுக்கு என்ன தெரியணும்ன்னு சொல்லுங்க பாப்பா நான் பதில் சொல்றேன். நாம தான் அடுத்தவங்ககிட்ட குறுக்க கேட்கலாம், நமக்குள்ள எதுனாலும் நேரா தான் பேசணும் பாப்பா. நீ என்கிட்ட நேராவே கேளு” என்றார் அவர்.
“சித்தா அவன்… அவர் உங்களை விலைக்கு வாங்கிட்டேன் அப்படிங்கற மாதிரி பேசினார்… நீங்க…” என்றவள் கேட்க முடியாது நிறுத்திவிட்டாள்.
“ஹா ஹா” என்று வாய் விட்டு சிரித்தார் அவர்.
“சித்தப்பா காசு வாங்கிட்டேன்னு நினைச்சுட்டியா”
“இல்லை சித்தா, ஆனா அந்த வீடியோ எல்லாம் அவன்… அவர் கைக்கு எப்படி போச்சு??”
“அவர் என்னைப் பார்க்க சேம்பர்க்கு வந்தார். சுமூகமா பேசி முடிச்சுக்கலாம் பிரச்சனையைன்னு சொன்னார். அதுக்கான ஏற்பாட்டை நான் பண்ணேன். அவங்களுக்குள்ள பேசி தீர்த்துக்கிட்டாங்க”
“ஆப் கோர்ஸ் நம்ம கிளையன்ட் காசு வாங்கிட்டு அந்த வீடியோவை அவங்ககிட்ட கொடுத்திட்டாங்க”
“தப்பில்லையா சித்தா இதெல்லாம்”
“என்ன தப்பு இருக்கு சொல்லு??”
“என்ன தப்பு இல்லைன்னு நீங்க சொல்லுங்க. காசு வாங்கிட்டு எதுவுமே நடக்கலைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம் சித்தா. இதுக்கு எதுக்காக அவர் நம்மகிட்ட வரணும். நேரா அந்த ஸ்கூல்க்கே போயிருக்கலாமே”
“நீ நினைக்கிற மாதிரி இல்லை பாப்பா. நம்மோட கிளையன்ட் கடைசி வரை இதுக்கு ஒத்துக்கவே இல்லை, அபராஜிதன் தான் அவர்கிட்ட பேசுறதைவிட்டு நம்மோ கிளையன்ட்டோட மகன்கிட்டயும் மருமககிட்டையும் பேசினார்”
“அவங்க காம்ப்ரோமைஸ் ஆகிட்டாங்க. இதுக்கு மேல நாம என்ன பண்ண முடியும்”
“நானும் அவர்கிட்ட ஒரு உதவி கேட்டேன். செய்யறேன்னு சொல்லியிருக்கார்”
“உதவியா என்ன உதவி சித்தா??”
“எனக்கு தெரிஞ்ச ரெண்டு பசங்களுக்கு அவர் ஸ்கூல்ல அட்மிஷனுக்கு கேட்டேன். பசங்களுக்கு நானே பீஸ் கட்டுறேன்னு சொன்னேன். அதெல்லாம் வேண்டாம் நானே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டார். அதை தான் நான் பீஸா வாங்கியிருக்கேன்”
“ஏன் சித்தா அந்தாளுக்கிட்ட எல்லாம் இதை நீங்க கேட்டீங்க. அவன் என்கிட்ட நீங்க காசு வாங்கிட்டீங்க அப்படிங்கற மாதிரி பேசினான். உங்க சீனியர் விலை போயிட்டார்ன்னு அவன் சொன்னப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா”
“பாப்பா அன்னைக்கு நீ அவரை ரொம்ப பேசிட்ட போல. பதிலுக்கு அவரும் பேசிட்டார். அந்த கோபத்தை மனசுல வைச்சுட்டு உன்கிட்ட கொஞ்சம் ஏத்தி இறக்கி சொல்லியிருப்பார். அதெல்லாம் பெரிசு படுத்தாத பாப்பா” என்றார் அவர்.
“சித்தா நீங்க அவர்கிட்ட எந்த உதவியும் கேட்டிருக்க கூடாது”
“ஏன்??”
“எனக்கு பிடிக்கலை வேணாம்ன்னு சொல்லிடுங்க”
“பாப்பா!!” என்றவரின் குரலில் கண்டிப்பு தெரிய அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“அங்க தான் எல்லாமே தப்பா இருக்கே சித்தா அப்புறம் ஏன்??”
“ஆபிசியலா அது தப்பு தான். மேனேஜ்மெண்ட்டுக்கே தெரியாம அது நடந்திருக்கு. தவிர அந்த பிரின்சிபால் எல்லார்கிட்டயும் டொனேஷன் கேட்கலை. யாரெல்லாம் கொடுக்க முடியும்ன்னு பார்த்து செலெக்டிவ்வா தான் கேட்டிருக்கார்”
“நீங்க என்ன சொன்னாலும் எனக்கு பிடிக்கலை” என்றவளின் முகத்தில் அப்பட்டமான பிடித்தமின்மை தெரிந்தது.
அவர் கோபமாய் இருக்கிறார் என்பது அவர் எழுந்து செல்கையிலேயே அவளுக்கு புரிந்தது. அவள் அவரை தடுக்கவில்லை, அவளும் கோபமாயிருக்கிறாள் தானே அவர் மீது. ஏனோ அவளால் எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.