இதயத்திலே ஒரு நினைவு – 14
“மைத்தி…” என்ற ஜெகாவின் குரல், மைதிலியை தடுமாறச் செய்தது நிஜமே.
என்ன இருந்தாலும் காதல் கொண்ட மனது அல்லவா?!
தடுமாறிய மனதை திடம் செய்துகொண்டவள் “ம்ம் சொல்லுங்க…” என,
“என்ன மைத்தி என்னாச்சு உனக்கு?” என்றான் அக்கறையாக, சிறிது பதற்றமாக.
“எ.. எதுவுமில்லையே…”
“ப்ச்.. பின்ன எதுக்கு நீ காலேஜ் வரல?”
“அ… அது கொஞ்சம் முடியல…”
“என்னாச்சு?” வேகமாய் ஜெகாவின் குரல் வந்து அவளது செவியில் அமர,
“முடியலைன்னா முடியலை அவ்வளோதான்…” என்றவள் “எதுக்கு போன் பண்ணீங்க…?” என்றாள் கொஞ்சம் கறார் குரலில்.
அவளின் இந்த மாற்றங்கள் எல்லாம் அவன் உணராமல் இல்லை.
“நான் தேடினேன் உன்ன…”
இதை சொல்லும்போது தான் ஜெகாவின் குரலில் எத்தனை மென்மை, எத்தனை காதல், எத்தனை ஏமாற்றம்.
அது அத்தனையும் அப்படியே இம்மி பிசகாமல், மைதிலியின் மனதிற்கு உணர்த்த, கண்களை இறுக மூடித் திறந்தாள்.
“மைத்தி…”
“ம்ம்ம்…”
“பேசு மைத்தி…”
“என்ன பேசுறது?”
“எதுக்கு தேடினேன்னு கேட்க மாட்டியா நீ?”
“எதுக்கு தேடினீங்க..?” சற்று அலட்சியமாய் கேட்பதுபோல் கேட்க, ஜெகா சிரித்துக்கொண்டான்.
“எதுக்குன்னு உனக்குத் தெரியாம இருக்குமா?” சலுகையாய் ஜெகாவின் குரல் ஒலிக்க, அவனுக்கு இவள் அவனோடு பேசியதே, அவனின் காதலுக்கு சம்மதம் சொன்னதுபோல் இருந்தது.
அது இந்த மைதிலிக்கு புரியவில்லை..!
“எனக்குத் தெரியாது…” என்றாள் பட்டென்று.
“சரி விடு.. நான் உன்னை பார்க்கணும்…” என,
“எதுக்கு?” என்றாள் வேகமாய்.
“ம்ம் உங்கப்பா ட்ரான்ஸ்பர் பத்தி பேச..” என்றவன், “எல்லாம் புரிஞ்சும், என் மனசு தெரிஞ்சும் ஏன் மைத்தி நீ இப்படி பண்ற..?” என்றவனை காணவே அவள் உள்ளம் துடித்தது.
இருந்தும்… அது அவளால் இயலாது இல்லையா…
“எக்ஸாம் முடிச்சிட்டு அன்னிக்கு நைட்டே நாங்க கிளம்பிடுவோம்…” என்றாள் ஒரு பெருமூச்சு விட்டு.
“அதான்… இனி நான் காலேஜ் எப்போவாது தான் வருவேன். ரிவியூ டைம்ல தான் வருவேன்.. சோ காலேஜ்ல பார்க்க முடியாது. ஊருக்குள்ள இப்போ வெளிய எங்கயும் கூட அப்படி நம்ம பார்த்து பேசிக்க வேணாம்.. ஆனா இப்போ கண்டிப்பா நான் உன்னை நேர்ல பார்த்து பேசணும்…”
“நமக்குள்ள பேச என்ன இருக்கு?”
மைதிலி முயன்று, வெகுவாய் தன் மனதை கட்டுப்படுத்தித் தான் இந்த கேள்வியைக் கேட்டாள்.
ஆனால் ஜெகாவோ “மைத்தி…” என்று அதிர்ந்து அழைக்க,
“ஆமா… நமக்குள்ள ஒண்ணுமில்ல.. நேர்ல பேசவும், இனி போன்ல பேசவும் கூட… எதுவுமில்ல…” என,
“மைதிலி….!” என்று ஜெகந்நாதன் கத்தியே விட்டான்.