இதயத்திலே ஒரு நினைவு – 12
“மைத்தி காலேஜ் கிளம்பலையா நீ?” என்று இரண்டு முறைக்கும் மேலே கேட்டுவிட்டார் சுகுணா.
“ம்மா எனக்கு எப்படியோ இருக்குன்னு சொல்றேனே…” என்ற மைதிலிக்கு கல்லூரி செல்ல மனதில்லை.
“என் டி உடம்பு சரியில்லையான்னா அதுவும் இல்லைங்கற. நேத்தும் சீக்கிரம் வந்துட்ட. இப்போ போகவும் மாட்டேன்னு இருந்தா நான் என்ன செய்றது. உங்கப்பா வேற ஊர்ல இல்ல…”
“ம்ம்ம் இன்னிக்கு ஒருநாள் வீட்ல இருக்கேனே…”
“நானே லீவ் போடுன்னு சொன்னா கூட ஒடுவ.. இப்போ என்ன? காரணம் சொல்லிட்டு வீட்ல இரு…” கறாராய் சுகுணா சொல்ல,
“எனக்கு என்னவோ இன்னிக்கு போக பிடிக்கல…” என்றாள் சலிப்புடன் மைதிலி.
“என்னவோ ஆச்சு உனக்கு…?” என்றவருக்கு என்ன தோன்றியதோ வேகமாய் மகளிடம் வந்து “காலேஜ்ல எதுவும் பிரச்சனையா?” என்றார்.
தூக்கிவாரி போட்டது மைதிலிக்கு…!
பதில் சொல்லாது திகைத்துப் பார்க்க “சொல்லு டி. பசங்க எதுவும் பின்னாடி வர்றாங்களா.. அதான் பயந்து போய் வீட்ல இருக்கியா?” என, மைதிலிக்கு நிஜமாகவே பயம் வந்துவிட்டது எங்கே தன்னையும் மீறி உளரிவிடுவோமோ என்று.
“உண்மைய சொல்லு மைத்தி…”
“ம்ம்ச் ம்மா நீயா எதுக்கும்மா இப்படி நினைச்சுப் பேசுற..”
“இல்ல டி நடக்குறது எல்லாம் பார்த்தா பயமாதானே இருக்கு. பாரு உன் பெரியப்பா பொண்ணு அமைதியா இருப்பா. இப்போ திடீர்னு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வந்து நின்னுருக்கா.. உங்க பெரியப்பா நெஞ்ச பிடிச்சிட்டு சாஞ்சுட்டார். உங்கப்பா அதுக்கு தானே அடிச்சு பிடிச்சு போயிருக்கார்…”
“நீயும் போயிருக்க வேண்டியதுதானே… நான் நிம்மதியா வீட்ல இருந்திருப்பேன்..”
“அடி… உன்னை காலேஜ் அனுப்பிட்டு நானும் கிளம்பனும்னு இருந்தேன்.. அர்த்த சாமத்துல போன் வருது. உன்னை விட்டுட்டு போக முடியுமா?”
“சரி நீ கிளம்பு நான் வீட்ல இருக்கேன்…” என்ற மகளை என்ன செய்வது என்று பார்த்தார்.
“ம்மா சொன்னா கேளும்மா எனக்கு நிஜம்மாவே உடம்பு டயர்டா இருக்கு… கொஞ்சம் தூங்கி எழுந்தா சரியா போயிடும்.. நான் சூதானமா இருந்துப்பேன்..” என்று மைதிலி வாக்குறுதி கொடுக்க,
“நீ இருந்துப்ப, ஆனா உன்ன தனியா விட்டுப் போக எனக்குத்தானே பயமா இருக்கு…” என்றார் தாயாய் சுகுணா.
“அடடா உள்ள விட்டு வெளிய லாக் பண்ணிட்டு கூட போ…” என்று மைதிலி எரிச்சலாய் சொல்ல,
“ச்சி என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உன் பெரிம்மா கிட்ட அப்போவே சொன்னேன், கொஞ்சம் கவனமா இருங்கக்கான்னு கேட்டாங்களா. நீயும்தான் பொண்ணு வச்சிருக்கன்னு உடனே உன்னை சொன்னாங்க. எனக்கு உன்னைத் தெரியாதா மைத்தி… எனக்கு என் பொண்ணைப் பத்தி தெரியாதா? ” என்று சொன்ன அம்மாவின் வார்த்தைகள் ஈட்டியாய் குத்தியது மைதிலிக்கு.
பின்னே எத்துனை நம்பிக்கை தன் மகள் மீது.
“ம்மா…!” என்று பார்க்க,
“என்ன டி…” என்று வாஞ்சையாய் அவள் முகம் தடவியவர், “சரி நீ உள்ள பூட்டிக்கோ. இந்தா போன் வச்சிக்கோ. எதுன்னாலும் அப்பாக்கு கூப்பிடு. எப்படியும் நான் மாட்டுமாவது நைட் வந்துட பாக்குறேன். அங்க சூழ்நிலை எப்படி இருக்கோ. இல்லைன்னா உன்னையும் கூட்டிட்டு போயிடுவேன்…” என,
“நான் இருந்துப்பேன் ம்மா…” என்றாள் திடமாய்.
“சரி சூதானம்…” என்று பத்து முறைக்கும் மேலே கிளம்புவதற்குள் சொல்லிவிட்டு சென்றார் சுகுணா.
‘என் பொண்ணு பத்தி எனக்குத் தெரியாதா…’ சுகுணாவின் இந்த வார்த்தைகள் மைதிலிக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.