ஸ்ருதி சிந்திப்பது தனக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புண்டு என்பதை அறிந்த யோகி, “அவரு அவரை சொல்லுவாரா இருக்கும்”, என்று சொல்லி, விஷாலை சந்தேகத்திற்கு இடமுள்ளவனாய் மாற்றி பேசினான்.
“ம்ம்?”, என்று தனது சிந்தனையில் இருந்து வெளியே வந்த ஸ்ருதி கேள்வியாய் யோகியைப் பார்த்தாள்.
ஸ்ருதி ஆம் என்பது போல் தலையை ஆட்டினாள். பின் ஒரு பெருமூச்சோடு அவள் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க சிறிது நேரம் மௌனமாக சென்றது.
அந்த அமைதி யோகிக்கு ஒரு வித அசௌகரியத்தைத் தர, “என்னா சொல்றாங்க உங்க பிரெண்டு? அவங்க வீட்டுக்காரர் பச்ச கலர் கல் வச்ச நெக்லஸ் வாங்கித்தரலயாமா?”, என்று தனது வழமையான எகத்தாளத்தோடு பேச்சை ஆரம்பித்தான்.
“எல்லா பொம்பளைங்களும் நகைக்கும் புடவைக்கும்தான் ஏங்குவாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?”, ஸ்ருதியும் தனது வழமையான தாக்குதலை தொடுத்தாள்.
“அதென்னவோ தெரியாது, ஆனா, எங்கூர் பொம்பளைங்க கழுத்துல பிடிபிடியா தங்கம் போட்டுட்டு இருந்தா அன்னிக்கு பூரா ஒரே மிதப்பாதான் திரிவாங்க”
“உங்க ஊர் பொம்பளைங்கள எனக்குத் தெரியாது. ஆனா, ஈஸ்வரிய நல்லாத் தெரியும். நகை நட்டை வாங்கி குடுத்துட்டு ஈஸ்வரி வீட்டுக்காரரை நாலு நாள் பேசாம இருக்க சொல்லுங்க. அப்ப உங்க தங்கச்சி மிதப்பா இருக்காங்களா? இல்ல சோகமா இருக்காங்களான்னு தெரியும்.”
அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் யோகி அமைதியாகி விட்டான். சாலையில் கவனமாக இருப்பது போல யோகி காண்பித்துக் கொண்டாலும், அவன் எண்ணம் தங்கையிடம் சென்றிருந்தது. ஸ்ருதி யோகியைப் பார்த்து, ‘என்ன பேச்சைக் காணோம்?’, என்று கேட்க நினைத்தாள்.
ஆனால்.. அதற்குள்ளாகவே யோகி, “ஈஸு வேறங்க. ரொம்பவே வேற. அதுக்காக ஈஸுக்கு நகை ஆச இல்லன்னு சொல்ல மாட்டேன். ஆனா மரியாத இல்லாத தந்தா போடா நீயுமாச்சு உன் பொருளுமாச்சு ன்னு தூக்கி வீசிடுவா.”
“ஒன்னு தெரியுங்களா? கவர்மெண்டு இவள மாதிரி இருக்கவங்களுக்கு மாசாமாசம் உதவித்தொகை தரும். அதை தங்கச்சிக்கு வாங்கித்தரலாம்னு எங்கூரு மணியக்காரரு, அதுகுண்டான ஃபாரம் எடுத்துட்டு வீட்டுக்கு வந்தாங்க. அப்போன்னு பாத்து ஈஸு கத்திரி நடவுக்காக காட்டுக்கு போயிருந்துச்சு. சரி அங்கேயே பாத்து கையெழுத்தை வாங்கிட்டு வேலைய முடிச்சிடலாம்னு அங்க போயிருக்காரு.”
“ஆண்டவன் புண்ணியத்துல இதோ நாலஞ்சு பேருக்கு சம்பளம் குடுக்கற மாதிரி இருக்கேன். என்னை ஏன் பிச்சை எடுக்க சொல்றீங்க மணியக்காரரே? ன்னு கேட்டா. நகை நட்டுக்கெல்லாம்..?” என்றுவிட்டு அலட்சியமாக ஒரு “ஹ”,வை உதிர்த்தான். பெருமையான புன் முறுவலுடன், “ரோஷக்காரி”, என்றான்.
“உங்க தங்கச்சி மட்டுமில்லீங்க, எல்லா பொண்ணுங்களும் ரோஷக்காரங்கதான். அட ஏன் ஆம்பளைங்க ரோஷக்காரங்க இல்லியா? னு கேக்காதீங்க.ஆம்பள பொம்பள அவ்வளவு ஏன் எல்லா ஜீவராசிக்கும் ரோஷம் இருக்கு, சுடீர்னு அடிச்சுட்டு ரெண்டு ரொட்டி போட்டா நீங்க வளக்கற நாய் கூட ‘இது நமக்குத் தேவையா?’ ன்னு கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு சாப்பிடும். அப்படி இருக்கும்போது..? பொம்பளைங்கள வெறும் பணம் காசுக்கு ஆசைப்படறவங்கன்னு சொல்லிட்டீங்க?”
“ஹ்ம்ம். ஓகே தப்புதான்.. சரி அப்ப என்னதான் வேணும்?”
“கொஞ்சம் அன்பு, கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் பாராட்டு..”
“அப்ப இந்த பணங்காசெல்லாம்..தேவையில்லை போலிருக்கு? அடடா! இத்தன நாளா இது தெரியாத போச்சே?”, என்று யோகி போலியாக வருத்தப்பட..
‘அதான பாத்தேன்? எங்கடா இன்னும் வேதாளம் முருங்கை மரம் ஏறலியேன்னு ன்னு?’ என்று முணுமுணுத்தாள். பின், “கோணி கோணி கோடினு.. , உங்கம்மா நேத்து என்னவோ ஒரு பழமொழி சொன்னாங்க. சட்டுனு வாயில வரமாட்டேங்குது”, என்று ஸ்ருதி சொல்ல..
காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தவள், தலையை திருப்பி வெளியே யோகி சென்ற அந்த வணிக வளாகத்தை பார்க்கவும், யோகி அங்கிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.
கையில் இரண்டு தண்ணீர் பாட்டிலோடு வந்தவன், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, ஒரு தண்ணீர் பாட்டிலை ஸ்ருதியிடம் குடுத்தான். பின் மற்றொரு பாட்டிலில் இருந்த நீரைக் குடித்துவிட்டு, காரின் எஃப்.எம் ஐ யோகி ஒலிக்கவிட, இருவரும் வேறு பேச்சின்றி வீடு வந்து சேர்ந்தனர்.
))))))))))))))
“அத்த, நா இங்கேயே வந்தடலாம்னு பாக்கறேன்”, என்று நந்தினி சொல்லவும் அவளை ஏதோ வேற்று கிரகவாசி போலப் பார்த்தார் விஷாலின் அம்மா.
“அப்ப இவ்ளோ நாளா ‘அவளுக்கு வீடு குப்பையா இருந்தா பிடிக்காது,ரொம்ப நறுவிசு பாப்பா’-னு இவன் சொன்னதெல்லாம் சும்மாதானா?”, என்று மருமகளிடம் அங்கலாய்த்து, பாத்ரூம் சென்று விட்டு வந்த மகனைப் பார்த்து, “ஏன்டா? உனக்குத்தான் தனியா இருக்கணும்னு தோணியிருக்கா?”, என்று லுபிலுவென பிடித்துக்கொண்டார்.
“என் பேரன் உங்களை கட்டி இழுத்துட்டானாக்கும்? இப்ப புரியுதா புள்ள பாசம்னா என்னான்னு?”, என்று சிரித்த அந்த பெண்மணி.., “ஏங்க நா சொல்லல? தர்ஷித் இங்க வந்தா தன்னால அவன பெத்தவங்களும் வந்துடுவாங்கன்னு?”, என்று வாசலை அடுத்த வராண்டாவில் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்த கணவரிடம் இங்கிருந்தே பெருமை பேசினார்.
அவர் ஒரு முறை நிமிர்ந்து மனைவியைப் பார்த்துவிட்டு ஆமோதிப்பாக தலையசைத்து மீண்டும் தொலைக்காட்சியில் ஐக்கியமானார்.
“இவரோட ரூம் இருக்கில்லத்த? அதுவே போதுமே? எதுக்கு அவங்கள காலி பண்ண சொல்லணும்?”, என நந்தினி கேட்டதும் நிஜமாகவே அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
‘வீட்ல பாதி தடுத்து வாடகைக்கு விட்டு இருக்கீங்க. இவ்ளோ சின்ன எடத்துல என்ன டெக்கரேஷன் பண்ணினாலும் நல்லா வராது அத்த’, என்ற மருமகள் இப்படி சொன்னால் அவருக்கு தலைசுற்றி போகாதோ?
அன்று மருத்துவமனையிலிருந்து நேரே மாமியார் வீட்டுக்குச் சென்றவள்தான் அதன் பின்னர் தனக்குத் தேவையான துணிமணிகள் எடுத்துக்கொள்ள மட்டுமே அவளது வீட்டுக்கு வந்தாள்.
நந்தினியைப் பொறுத்தவரை, அவள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க, அவளுக்கு அவளே கடிவாளம் போட்டுகொண்டாள். கண்ணில் படாதது கருத்தில் நில்லாது அல்லவா? அதோடு தன்னால் வெளியேறிச் செல்ல முடியாத அளவு அவளைச் சுற்றி மகன், குடும்பம், கூடுதல் பொறுப்புகள் என்னும் பூவேலிகளை போட்டுகொண்டாள். அதற்கு அரணாக மாமியார் மாமனார் என்று உயிர் வேலி அமைத்து தன்னை சிறையிலிட்டாள்.
விஷாலும் நந்தினியின் எந்த முடிவிலும் குறுக்கிடாமல் அமைதி காத்தான். தொழில்,பணம், கேளிக்கைகள் அனைத்தும் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் ஆனால் குடும்பம் சிதறிப் போனதென்றால் பின் அமைப்பது கடினம் என்று அவனுக்கு ஞானோதயம் வந்திருந்தது.
ஒருவேளை கடிதத்தில் எழுதி இருந்ததைப் போல வீட்டை விட்டு வெளியேறிய நந்தினியைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இவனுக்கு எத்தனை தலையிறக்கமாகி இருக்கும்? இன்னும் தற்கொலை அது இது என்று பெரிதாகச் சென்றிருந்தால்? ஒவ்வொரு நாளும் குற்ற உணர்வோடு கொடுமையாக அல்லவா இருந்திருக்கும்? ரணத்தில் உப்பு நீர் சேர்ப்பதுபோல, நந்தினி இல்லாத வேதனையை போலீசும் அக்கம் பக்கமும் கேள்வியால், ஜாடையால் கேட்டு துளைத்து எடுத்துவிட்டு இருப்பார்களே? என்ற எண்ணங்களும் அவன் அமைதி காப்பதற்கு காரணமாய் இருந்தது.
இரவில் தர்ஷித் மற்றும் மூன்று பிள்ளைகளோடு,அவர்களுக்கான அறையிலேயே நந்தினி உறங்கிவிடுவாள். இதை சிலமுறை கவனித்த விஷாலின் தாயார், “என்ன இங்கயே படுக்கற?”, என்று நேரடியாக நந்தினியைக் கேட்க..
“அது மாங்காடு அம்மனுக்கு அஞ்சு வாரம் செவ்வாய்க்கிழமை பால் அபிஷேகத்துக்கு தர்றதா வேண்டுதல் வச்சிருக்கேன் அத்தை. அதான்..” என்று அவள் சொன்னதும், அவர் அதற்கு மேல் வேறு பேச்சே எடுக்கவில்லை.
கடையிலிருந்து வந்த விஷாலிடம் ரகசியமாக. “என்னாச்சுடா உன் பொண்டாட்டிக்கு? மொத்தமா மாறிப்போயிட்டா?”, என்று கேட்டார்.
“ஏன்மா சண்டை கிண்ட போட்டாளா?”, கவலையாக கேட்டான்.
“ச்சே ச்சே உன் பொண்டாட்டி எப்பவுமே சண்டை போடற பொண்ணு இல்லடா. என்ன..? வீடு அழுக்கா கிடந்தா மூஞ்சிய தூக்கி வச்சுப்பா. உன் கல்யாணம் முடிஞ்சு வந்தபோது உன் பெரிய அக்கா.., அவளோட சின்னவன் பிரசவத்துக்காக வந்துருந்தா. அவ பிள்ளை ஜெகதீசும் இங்கதான் இருந்தான். பசங்க இருக்கற வீடு பளிங்கு மாறி இருக்கணும்னு நினச்சா முடியுமா? அதுக்குத்தான் முகத்தை தூக்கி வச்சு திரிவா.ஆனா, இப்போ அதல்லாம் ஒன்னையும் காணோமே அதான் கேட்டேன். அவகிட்ட ஏதாச்சும் கோச்சிக்கிட்டியாடா?”
“ம்ப்ச். அப்டில்லாம் ஒண்ணுமில்லமா”, என்று சலித்துக் கொண்டான்.
“மூஞ்சில சிரிப்பே காணோமேடா?”, என்று கவலைப்பட்டவர், “டே உங்கப்பாக்கு தெரியாம நகைக்கடைல ரெண்டு சவரன் சீட்டு போட்டுருக்கேன். அடுத்த வாரம் முடியுது. எங்கூட வர்றியா? அவளுக்கு பிடிச்சா மாதிரி டிசைன்ல நகை எடுக்கலாம்?”, என்று ஆர்வமாக கேட்டார்.
ஒரு பெருமூச்சோடு, “அவளுக்கு என்ன டிசைன் பிடிக்கும்னு எனக்குத் தெரியாதும்மா”என்றான்.
மகனின் பதிலில் அவர் மோவாயில் கைவைத்து, “அட ஆண்டவா!”, என்று மலைத்து நின்றார். பின்னர், “நல்ல வேளை இங்க வந்தீங்க. இல்லனா ஒன்னா அந்த பொண்ணு பைத்தியமாயிருக்கும் இல்லியா உன் சங்காத்தமே வேணான்னு அம்மா வீட்டுக்கு போயிருக்கும்.”
“சரி, இப்பவும் ஒன்னும் கெட்டுபோகல, அவ என்னவோ மாங்காடு கோவிலுக்கு வேண்டுதல் வச்சிருக்காளாம். நீயும் கூட போ. அப்பவாவது பூ புஷ்பம் ஏதாச்சும் வாங்கிகுடுறா. முதல்ல வாயத் தொறந்து பேசு. என்ன புரியுதா?”
“என்ன தெரியனும்? மாங்காட்டில அம்மன் இருக்கா. நீ ஆத்தாள பாக்கப் போற. சுத்த பத்தமா இரு. இல்லியா உன் பொண்டாட்டி கிட்ட கேட்டு தெரிஞ்சிக்க. இனிமே அந்த புள்ள எங்க போனாலும் நீயும் கூடப் போற. சரியா?”, என்று கிட்டத்தட்ட மிரட்டினார்.
“ஹ்ம்ம். சரிம்மா”, என்று கூறி தன் அறைக்குச் சென்றான் விஷால். நந்தினி அவளது நகைகள் அனைத்தையும் விஷாலிடம் முன்பே தந்து விட்டாள். அதை அடமானம் வைத்து வந்த பணமும், விஷால் அங்கங்கே சில்லறை சில்லறையாக சேமித்து வைத்த பணத்தையும் திரட்டியதில் தனபாலிடம் முன்பணமாக வாங்கிய தொகையில் பாதி சேர்ந்திருந்தது.
அதைக் கொண்டுபோய் தனபாலிடம் குடுத்தான். மீதி தொகையை கொள்முதலில் கழித்துக் கொள் என்று விஷால் சொல்ல, தனபாலன் அப்போது நல்ல மனநிலையில் இருந்தானோ என்னவோ,“அட அதான் பாதி பணத்தை குடுத்துட்டியே? மிச்சத்தை சரக்க குடுத்தே செட்டில் பண்ணிக்க. ஏதும் ப்ராபளம் இல்ல”, என்று சிரித்தான்.
சிரித்துக் கெடுக்கும் உன் நட்பு எனக்கெதற்கு? என்று எண்ணிய விஷால், “சரி நா வர்றேங்க”, என்று தனபாலனின் நட்பை மனதளவில் வெட்டி எறிந்து விடைபெற்றான் விஷால்.
அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறும் போது மனம் லேசாகி இருக்க, வானம் பார்த்தான். தனதருமை நண்பன் ராகவ் இவன் செய்த பிழைகளை மன்னித்து விட்டதாக விஷாலுக்குத் தோன்றியது.