இவர்கள் பேசிக்கொண்டிருக்க, வெளியே ஸ்ரீகுட்டியின் கொலுசொலி மெலிதாகக் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சப்தம் அதிகரிக்க குட்டி வருகிறாள் என்று தெரிந்தது. சில நொடிகளில் கதவு திறந்து, “ம்மா. எனக்கு பசிக்குது”, என்று சொல்லிக்கொண்டே கூடத்தில் இருந்த இவர்களைக் கடந்து டைனிங் ஹால் சென்றாள் ஸ்ரீகுட்டி. கையில் ஒரு சின்ன சில்வர் டப்பா இருந்தது.
அது வசந்தி கொண்டு வந்ததுதான். மேலே யோகிக்கு உணவு கொண்டு வந்தபோது ஸ்ரீகுட்டிக்கு பிடிக்குமென ஒரு டப்பாவில் அவளுக்காகத் தனியாக எடுத்து வைத்தது, மாடிக்கு வந்ததும் அவரது கவனம் சிதற டப்பாவை ஸ்ரீயிடம் குடுக்க மறந்து விட்டார்.
யோகிக்கு அந்த டப்பாவைப் பார்த்ததுமே அது குட்டிக்கானது என்று தெரிந்ததால், அவளிடம் குடுத்து சாப்பிடச் சொன்னான். ஸ்ரீகுட்டியோ வீட்டுக்குச் சென்று சாப்பிடுவதாகக் கூறி இதோ இங்கே வந்து விட்டாள்.
கூடத்தில் இருந்த ஸ்ருதி, பசி என்று சொன்ன மகளை கவனிக்க ஸ்ரீயோடு டைனிங் ஹால் சென்றுவிட்டாள். பர்வதத்திற்கு வசந்தியின் பூர்வாங்கம் தெரியுமாதலால், வசந்தியிடம் “வசந்தி, நடந்ததுக்கு வருத்தப்பட்டு ஏதாவது பிரயோஜனம் இருக்கா? கைப்பிள்ளைக்காரிய விட்டுட்டு வந்துருக்க. அவளைப் போய்ப் பாரு போ”, என்று சொன்னார். கவலைகளை மறக்க வேலை செய்வதே மாற்று என்ற தனது உத்தியை வசந்தியிடமும் காட்டினார் பர்வதம்.
அது சரிதான் என்பதுபோல வசந்தியும், “ஆமா என்னவோ ஞாபகத்துல இங்க உக்காந்துட்டேன். குழந்தைய குளிப்பாட்டனும்-ன்னு ஈஸ்வரிட்ட சொன்னேன். வர்றேன்”, என்று கிளம்பி விட்டார்.
ஸ்ரீகுட்டி சாப்பிட்டு முடித்து வெளியே விளையாடச் சென்றாள். ஸ்ருதி சின்னவன் பாலா ஈரம் செய்த துணிகளை டெட்டால் கொண்டு அலசி தனியே எடுத்து பக்கெட்டில் வைத்திருந்தாள்.
அதை ஒவ்வொன்றாக எடுத்து மெல்ல பிழிந்து பால்கனி நிழலில் காயப்போட சென்றாள். “குடு நா போடறேன். பாலா தூளி அசையற மாதிரி இருக்கு. போய்ப் பாரு”, என்று அத்தை பின்னால் வந்து விட்டார். அவருக்கு இப்போது உடம்பு பரவாயில்லாமல் இருக்கிறது. வீட்டுக்குள் மெதுவாக நடக்கிறார். கீழே இறங்கி ஏறுவது சிரமம். ஆனாலும் சோம்பியிருக்காமல் கைதடியின் துணையோடு செய்கிறார்.
ஸ்ருதியும் சென்று தொட்டிலை நீக்கிப் பார்க்க, சின்னவன் கால் கட்டை விரலை வாயில் வைத்துக்கொண்டு கொட்ட கொட்ட விழித்திருந்தான்.
“வா பாட்டிட்ட போலாம்”, என்று அவனை தூக்கிக் கொண்டு பால்கனி சென்றாள் ஸ்ருதி.
“அத்த, இவன பிடிங்க, நா காய போடறேன்”, என்று அவரிடமிருந்து கைவேலையை வாங்கிகொண்டாள்.
அப்படியே தலை திருப்பி கூடத்தில் இருந்த கடிகாரத்தில் மணி பார்க்க, அந்தி நேரம் வந்திருந்தது. “ஸ்ரீகுட்டி..”, பால்கனியில் இருந்து கீழே பார்த்து குரல் கொடுத்தாள். அவள் இன்னும் வீட்டுப்பாடம் முடிக்கவில்லை, நாளை விடிந்தால் பள்ளி ஆரம்பித்து விடும் என்ற யோசனை ஓடியது.
“ம்மா..?”, கீழேயிருந்தே குரல் குடுத்தாள் மகள்.
“நீ இன்னும் ஹோம் ஒர்க் முடிக்கல. விளையாட்டு போதும் மேல வா”, கண்டிப்போடு ஸ்ருதி.
ஸ்ரீகுட்டி, “டே பைடா, அம்மா திட்றாங்க, ஈஸ்வரி அத்தை பை”, என்று ஈஸ்வரியிடமும் குருக்கள் மாமி பையனிடமும், அன்னைக்குக் கேட்க வேண்டும் என்றே இரைந்து சொல்லிவிட்டு இரு நிமிடங்களில் மேலே வந்து விட்டாள்.
பர்வதத்தின் கையில் இருந்த தம்பியைப் பார்த்ததும் ஸ்ரீகுட்டி அவனோடு விளையாடத் தயாராக, ஸ்ருதி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்ததும், வீட்டுப் பாடங்களை முடிக்க அறைக்குள் பம்மினாள்.
“ஹ்ம்ம். அதுவா? பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கறதா தான பேசினாங்க. ரெண்டு செலவு எதுக்குன்னு ஒரே நாள்ல வச்சுக்கலாம்னு பெரியவங்க முடிவு பண்ணவும், இந்த வனிதா இல்ல? அவ ‘ஈஸ்வரிய மணவறைக்கு கூட்டிட்டு போறத்துக்கும் அவளுக்குத் தேவையானதை செய்யவும் நா கூட நிக்கறேன். அதனால அவ கல்யாணம் முடிச்சு என் கல்யாணம் வச்சுக்கலாம்’ன்னு சொன்னா.”
“அவ சொன்னது சரியா இருந்ததால, சரின்னு ஒத்துக்கிட்டாங்க. ரெண்டு முஹூர்த்தம் வர்றமாதிரி ஒரு நல்ல நாளை பாத்து கல்யாணம் வச்சாங்க. முதல்ல ஈஸ்வரி கல்யாணம் நல்ல படியா முடிஞ்சது.”
அப்போ… {பிளாஷ் பேக்..}
“பொண்ணை மணமேடைக்கு கூட்டிட்டு வாங்க, நல்ல நேரம் முடியப்போகுது”, வழக்கமான திருமண புரோகிதரின் வசனம் கேட்டது. அவர் அருகே பட்டு வேஷ்டி சட்டையோடு யோகி மனையில் அமர்ந்திருந்தான்.
ஆனால் வனிதா அறைக்குப் புடவை மாற்றி வரச் சென்று வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால், புரோகிதரின் டயலாக் மூன்றாவது முறையாக ஒலித்தது.
நெருங்கிய உறவினர்கள் எல்லாம் குழுமி இருந்தால், பல நாள் காணாத பேசாத பேச்செல்லாம் பேசப்பட சளசளவென இரைச்சலாக இருந்தது. புரோகிதர் மந்திரங்களை சொல்லிக்கொண்டு இருக்க, யோகியால் எழுந்து சென்று என்ன வென்று பார்க்க முடியவில்லை. தவிர, விஷயம் இன்னமும் அவன் காது வரை வரவில்லை.
ஆனால்,எல்லாம் பத்து பதினைந்து நிமிடங்கள்தான். காத்திருந்த நேரம் அதிகமானதும் என்னவோ கோளாறு என்று யோகிக்குப் புரிய, “சுகு..?”, என்று அவனது வெண்கலக் குரலில் தனது தங்கை மணாளனை அழைத்தான்.
“அத்தான்..?”, என்று வந்த சுகுமாரன் அதிகமாக வியர்த்திருந்தான். முகம் இருளை அப்பி இருந்தது.
“என்ன ஆச்சு?”, என்றான்.
யோகியின் அருகே வந்து குனிந்து, “வனி ரூம்லேந்து வெளிய வர மாட்டேங்கிறா. எனக்கென்னவோ பயமா இருக்கு”, என்று சொன்னான். வெளிறி இருந்தான்.
புருவம் சுருக்கி, “ப்ச். “, என்று அவனைக் கடிந்து விட்டு, ஐயர் தடுத்தும் கேளாமல் மாலையை கழட்டி வைத்து விட்டு வனிதாவின் அறையை நோக்கி வேகமாக நடந்தான். அரை மணி நேரம் முன்பு வரை நன்றாக பேசிக்கொண்டு இருந்தவள் தானே? ஏன்? என்ன ஆயிற்று? போன்ற குழப்பங்கள் வந்து போயின.
சுகுமாரனோடு சேர்ந்து அந்த அறையின் கதவை இருமுறை தள்ளிப் பார்த்தனர். யோகி மேடையில் இருந்து எழுந்ததுமே மண்டபத்தில் கசமுசா என்று பேச ஆரம்பித்து இருந்தார்கள்.
இவர்களின் பதட்டம் பார்த்து மண்டபத்தின் மேனேஜர் வர, அவரிடம் அறைக்கதவின் மாற்று சாவி கேட்டான் சுகுமாரன். அவரோ தலையை சொறிந்து, “அது ரெண்டு மூணு மாசம் முன்னாடி காணாம போச்சுதுங்களே?”, என்றார்.
சாவியை கேட்டு கதவைத் திறப்பதைப் பற்றியெல்லாம் யோகி யோசிக்கவில்லை. அதற்கு முன்பாகவே மேடையில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த ஒரு பெரிய கனமான குத்து விளக்கை கையில் பிடித்திருந்தான். “நகருங்க” என்று சொல்லிவிட்டு, கதவிக் குமிழை வேகமாக ஓங்கி அடித்தான்.
‘ணங்’ ‘ணங்’ ‘ணங்’ குமிழி பாதிக்கு மேல் வெளியே வந்து தொய்ந்தது.
இதைக் கண்ட மேனேஜர் பதறி, “என்னங்க கதவை இப்படி போட்டு உடைக்கறீங்க? மராமத்து செலவை நீங்கதான்…”, எனும்போதே, அவரை ஒரு முறை முறைத்து தன் பலமனைத்தையும் திரட்டி ணங் கென்று குமிழி மேல் அடித்தான். அது துண்டாக தனியே விழுந்தது. அருகே இருந்த மேனேஜரை ஒரு தள்ளு தள்ளிவிட்டு அனைவரும் உள்ளே சென்றனர்.
சரியாக இவர்கள் உள்ளே நுழையவும், அறையின் மின்விசிறியில் இருந்த சுருக்கில் தலையை விட்டு இறுக்கிக்கொண்டு,காலின் கீழே இருந்த பிளாஸ்டிக் இருக்கையை வனிதா வேகமாகத் தட்டி விடவும் சரியாக இருந்தது. நொடியில் பிடிமானமில்லாது அவளது கால்கள் தள்ளாட வனிதாவின் அப்பா, “அம்மாடி!”, என்று ஓடி வந்து அவளைப் பிடித்துக் கொண்டார்.
யோகிக்கு தான் என்ன உணர்கின்றோம் என்பதே தெரியவில்லை. வனிதாவா? தற்கொலையா? அங்கிருந்த அனைவர்க்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
ஆனால் ஆலோசிக்கவோ துக்கப்படவோ இதுவா நேரம்? எதிரே மாமா வனிதாவின் எடை தாங்க முடியாது திணற, யோகி சென்று வனிதாவின் கால்களை பிடித்தான். இவனைப்போலவே இன்னும் இருவரும் உதவிக்கு வந்தனர். எல்லாம் சில நொடிகளில் நடந்தது.
அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்காக, “சுகு..”, யோகி.
யோகி சொல்வதற்கு முன்பே பரபரவென நாற்காலியில் ஏறி இருந்தான் சுகுமாரன். “ஏறிட்டேன் அத்தான். சுருக்கை லூஸ் பண்ணிடறேன்”, என்று வனிதாவின் கழுத்தைச் சுருக்கி இருந்த புடவையை அவிழ்த்தான்.
மயங்கிய நிலையில் இருந்த வனிதாவை கைத்தாங்கலாக பிடித்து கட்டிலில் கிடத்தினார்கள்.
மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த மகளைப் பார்த்து, “அடிப்பாவி மகளே”, என்று வனிதாவின் தாய் அலற, அந்தக் கல்யாண வீடே கலவரமாகியது.
கழுத்தில் தொட்டுப் பார்த்து நாடித் துடிப்பை உணர்ந்த சுகுமாரன், “ம்மா, ஒன்னும் பயமில்லை, மயக்கம்தான். காத்தாட இருக்கட்டும், கொஞ்சம் எல்லாரும் வெளிய போங்க”, என்று சொன்னான்.
எலுமிச்சை சாறு, இனிப்பு அதிகம் சேர்த்த தேநீர் என்று அவரவர் அவரவருக்குத் தெரிந்த அதிர்ச்சி நீக்கும் பானத்தை எடுத்து வர ஓடினார்கள்.
துவாலையை நீரில் முக்கி மகளின் முகம் துடைத்து விட்டார் வனிதாவின் தாய். இரண்டொரு நிமிடத்தில் மயக்கம் தெளிந்து விட, மெல்ல கண் திறந்த வனிதா தன் அருகே இருந்த அம்மாவைப் பார்த்து முகம் கசங்கி அழுகைக்குத் தயாரானாள்.
“எதுக்குடி? ஏன்? எங்களையெல்லாம் கொஞ்சமாச்சும் நினச்சுப் பாத்தியா?”, என்று அவர் கதறினார்.
“க்கும். குமரிக்கு ஏழு கழுத வயசாச்சு. கல்யாணம்னா பயமா?, நல்லா இருக்கே கூத்து?”, என்று தண்டட்டி குலுங்க ஒரு பாட்டி மோவாயில் இடித்துக் கொண்டார்.
அறையின் ஓரத்தில் கைகட்டி நின்ற யோகிக்கு இந்த சிலேடைப் பேச்சு மிகுந்த சங்கடத்தைத் தர, “எல்லாரும் கொஞ்ச நேரம் வெளிய இருங்க”, என்று சொன்னான்.
“இல்லப்பா, நா என்னானு கேக்கறேன்”, என்று பதறிய மாமாவை சட்டை செய்யாமல் அம்மா அத்தை மற்றும் சுகுமாரனைத் தவிர மற்ற அனைவரையும் வெளியேறச் சொன்னான் யோகி. மாமாவைக்கூட இருக்கவிடவில்லை. ஒருவேளை காதல் என்று ஏதேனும் இருந்தால் அப்பா முன் சொல்ல வனிதா அச்சப்படக்கூடும் என்பதால் அவரை வெளியே இருக்கச் சொன்னான். ஆனால்…?
“சொல்லு வனிதா என்ன ஆச்சு?”, யோகி.
“அத் .. அத்தான்..”, எப்படி சொல்வதென்ற தயக்கம் + குழப்பம்.
“மாமா பத்தி பேசும்போதெல்லாம், ‘ஊசி முனையளவு கூட சந்தேகப்படலியே? அப்படி இந்த மனுஷன் நடந்துக்கிட்டாரே?’-ன்னு அத்தை அம்மாட்ட சொல்லி அழறத நா நிறைய வாட்டி கேட்ருக்கேன்.”
“அதுக்காக நீங்க மாமா மாதிரி ஆயிடுவீங்கன்னு சொல்லல, ஆனா நீங்க அப்படி ஆயிடுவீங்களோன்னு வர்ற பயத்தையும் என்னால தள்ளி வைக்க முடில. கல்யாணத்துக்கப்புறம் ஓரொரு தடவ நீங்க வீட்ட விட்டு வெளிய போம்போதும், எனக்கு இந்த நினைப்பு வந்துட்டேதான் இருக்கும்.”