இதயத்திலே ஒரு நினைவு – 6
“டி ரேகா… சீனியர்க்கு எங்க வீட்டு மொபைல் நம்பர் கொடுத்தியா?” என்று கேட்ட மைதிலியின் முகத்தில் ஏகப்பட்ட கோபம்
“எங்கண்ணன் என்கிட்டே கேட்கவுமில்ல. நான் கொடுக்கவுமில்ல..”
“ஓ..!”
“இப்போ எதுக்கு இந்த திடீர் விசாரணை?”
“இல்ல நேத்து சாயங்காலம் எங்க வீட்டு மொபைலுக்கு புது நம்பர்ல இருந்து கால் வந்துச்சு… முதல்ல எங்கம்மா எடுத்தாங்க கட் ஆகிடுச்சு. அடுத்து நான் எடுத்து ஹலோ சொல்லவும், மைத்தி… அப்படின்னு சொன்னாங்களா, எனக்கு முதல்ல தெரியலை. யாருன்னு கேட்டேன்.. அப்படியே கட் ஆகிடுச்சு.. எனக்கென்னவோ சீனியர் வாய்ஸ் மாதிரி தான் இருந்தது…”
“காமாலை காரன் கண்ணுக்கு பாக்குறது எல்லாம் மஞ்சளா தெரியுமாம்.. அதுமாதிரி இருக்கு உனக்கு இப்போ..”
“ஏய்…”
“பின்ன என்ன டி.. நம்ம கிளாஸ் பசங்க கூட யாராவது கால் பண்ணிருக்கலாம்..”
“யாருக்கும் என் நம்பர் தெரியாது…”
“உன் நம்பர் இல்லை.. உன் வீட்டு நம்பர்ன்னு சொல்லு.. உனக்குன்னு ஒரு போன் வாங்க சொன்னா வேணாங்குற…”
“வீட்ல இருக்க மொபைலே நான் தான் யூஸ் பண்றேன்.. பின்ன எதுக்குன்னு எனக்குன்னு ஒரு போன்..” என்றவள், “கண்டிப்பா அது சீனியர் குரல் தான்…” என்றுசொல்ல,
“உனக்கு தெரியணும்னா போய் ஜெகாண்ணா கிட்டயே கேட்டுட்டு வா…” என்ற ரேகாவிற்கு ஏகப்பட்ட கடுப்பு.
ஜெகந்நாதனோ வாசுவிடம் பொரிந்துத் தள்ளிக்கொண்டு இருந்தான். “என்னோட குரல் தெரியலையா டா மாப்ள… யாருன்னு கேக்குறா டா…” என்று..
“ஆமா உன்னோட குரல் ஊர் உலகம் அறிஞ்ச குரல்… கேட்டதுமே கண்டு பிடிக்க…”
“டேய்…!”
“சரி சரி… இப்போ யாருன்னு கேட்டதுல என்ன வந்துச்சு உனக்கு. நீதான் பேசுறன்னு சொல்ல வேண்டியதுதானே…”
“மைத்தின்னு கூப்பிட்டதுலயே கண்டுப்பிடிப்பான்னு எவ்வளோ அசையா பேசினேன் தெரியுமா? யாருன்னு கேட்கவும் கடுப்பாகிடுச்சு….”
“விளங்கும்…”
“என்ன சொன்ன..?!” என்று ஜெகா வேகமாய் கேட்க,
“இல்ல நீயும் உன்னோட லவ்வ சொல்லிடுவ, அந்த பொண்ணும் உடனே சரின்னு சொல்லிடும்…” என்று வாசு நக்கலாய் பேச,
“ம்ம்ச் நேரமே அமைய மாட்டேங்குது டா.. இது நம்ம ஊரு… சின்னதா எதுவும் பண்ணா கூட பெருசா ஆகும்.. எனக்கொண்ணும் இல்லை இப்போவே அவளை கல்யாணம் செய்யணும் அப்படின்னா கூட செய்வேன்…” என,
“நீ ஒரு விசயத்துல இவ்வளோ தீவிரமா இருந்து இப்போத்தான் டா பாக்குறேன்…” என்றான் வாசு.
“வாழ்க்கைல ஏதாவது ஒரு விசயத்துல நாம தீவிரம் காட்டனும்.. படிப்போ வேலையோ இல்லை செய்ற தொழிலோ இப்படி.. அப்படி இல்லைன்னா நம்ம வாழ்க்கைல தீவிரம் காட்டனும்.. என்னைப் பொறுத்த வரைக்கும் மைதிலிய என்னோட வாழ்க்கையா நினைக்கிறேன்…” என்ற ஜெகந்நாதனின் கண்களில் அப்படியொரு காதல்..
அவனுடன் பள்ளியில் இருந்து ஒன்றாய் பழகி வரும் வாசுவிற்கு, ஜெகாவை நினைத்து அப்படி ஆச்சர்யமாய் இருந்தது. எப்போதுமே ஜெகாவிடம் கொஞ்சம் அலட்சியம் இருக்கும். ஆனால் மைதிலியை கண்டத்தில் இருந்து அந்த அலட்சியங்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை..
எப்படியாவது இவனின் இந்த காதல் கை கூடவேண்டும் என்று வாசு மனதார வேண்டினான் அப்போதே…
__________________