“என்ன மச்சான்… எதுவும் தெரிய வந்துச்சா…?” என்று வாசு கிண்டலாய் கேட்க,
“உன் பேச்சைக் கேட்டு நான் அமைதியா இருந்தேன் பாரு… என்னை சொல்லனும்டா…” என்று தலையில் அடித்துக்கொண்டான் ஜெகா.
“ஏன்டா…?”
“பின்ன? என் கண்ணு முன்னாடியே ஒருத்தன் அவளுக்கு ப்ரபோஸ் பண்றான்…” என்ற ஜெகாவிற்கு ஆத்திரம் தாங்கவில்லை.
“எது?!!!! எவன்டா அவன்? பார்த்துட்டு நீ சும்மாவா இருந்த…?!” என்ற வாசுவிற்கே கோபம் தலைக்கு ஏறியது.
“சைக்கிள் நிறுத்த வந்தா.. சரி நம்மள பாக்குறாளான்னு பார்த்து நின்னா, அவ கிளாஸ் பையன் ஒருத்தனே வந்து பேசுறான். கொஞ்சம் தள்ளி பின்னாடி அவ கிளாஸ் பசங்க அத்தனை பேரும் நிக்கிறானுங்க.. இதுல நான் போய் சத்தம் போட்டிருந்தா, பிரச்னை வேற மாதிரி ஆகும்.. கஷ்டப்பட்டு அமைதியா போகவேண்டியதா போச்சு…”
“ஆமா… இது பொறுமையாத்தான் போகணும்…” என்றவன் யாரவன் என்று கேட்டு தெரிந்துகொள்ள,
“எது பண்றதா இருந்தாலும் அதுக்கு முன்ன மைதிலிக்கிட்ட ஒருவார்த்தை பேசிட்டுத் தான் பண்ணனும்…” என்று ஜெகா சொல்ல, வாசு ஜெகா இருவருமே மைதிளியைக் காண கிளம்பினர்.
அங்கே மைதிலியோ ரேகாவிடம் புலம்பித்தள்ளிக்கொண்டு இருந்தாள்.
“பாரேன் டி இந்த சதீஸ் இப்படி வந்து சொல்றான்… அவனுக்கு லேப்ல ஹெல்ப் பண்ணது ஒரு தப்பா… உடனே வந்து லவ் யூ சொல்றான்..” என்றவளுக்கு ஒருவித பயம்.
“ஹ்ம்ம் கொஞ்சம் அழகா அறிவா பொறந்தாலே இதான் பிரச்சனை…” என்று ரேகா கிண்டலாய் சொல்ல,
“டி ரேகா…” என்று மைதிலி பல்லைக் கடித்தவள் “சீனியர் கிட்ட சொல்லலாமா?!” என்றாள்.
“எது?!?!!” என்று ரேகா அதிர்ந்து பார்க்க,
“அவங்களும் அங்கதான் இருந்தாங்க. வந்து ஏதாவது செய்வாங்கன்னு பார்த்தா, வேடிக்கைப் பார்த்துட்டு இருக்காங்க…” என்ற மைதிலியின் பேச்சினில் அப்பட்டமாய் கோபம்.
“அப்போ உனக்கும் என்னவோ இருக்கு எங்கண்ணன் மேல…” என்று ரேகா கேட்க,
“இருக்கோ இல்லையோ.. இப்போ இந்த பிரச்சனையை முடிக்கணும்…”
“நீ சதீஸ்கிட்ட நேராவே பேசிடு.. அதான் வழி.. இல்லைன்னா சீனியர் ஜூனியர் பிரச்சனை அப்படி இப்படின்னு இது பெருசாகும்…” என்று ரேகாவும் எடுத்து சொல்ல, மைதிலி இதனை அப்போதிருந்த பதற்றத்தில் உணரவில்லை.
சிறிது நேரம் மைதிலி அமைதியாய் இருக்க, இருவரும் அவர்கள் வகுப்பிற்குச் செல்லும் மாடிப்படியில் தான் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஜெகாவும் வாசுவும் அங்கே வர, மைதிலி வேகமாய் ஒரு பார்வை ஜெகந்நாதனைப் பார்த்தாள். அவள் கண்களில் அப்பட்டமாய் பயமும் கலக்கமும் தெரிய
“நான் என்ன செய்யணும்?!” என்று ஜெகா நேராகவே மைதிலியிடம் கேட்க,
“ஓ..! அப்படியா?” என்ற ஜெகாவின் பார்வை அவளை ஊடுறுவ,
“அந்த மாதிரி எண்ணமெல்லாம் எனக்கு இல்லைன்னும் சொல்லிடுறேன்…”
“ம்ம்ம் அப்புறம்…”
“அவன்கிட்ட இதுக்குமேல எல்லாம் என்னால பேச முடியாது…” என்று மைதிலி சொல்லவும், ஜெகந்நாதனிற்கு அத்தனை நேரமிருந்த டென்சன் காணாது போய், முகத்தில் புன்னகை பூத்துவிட்டது.
__________________________
ஜெகா அப்போதும் தான் அனைத்தையும் கேட்டுக்கொண்டதாய் காட்டிக்கொள்ளவே இல்லை. சாதரணமாய் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தான். மைதிலி தான் முள்ளின் மீது அமர்ந்திருப்பது போல் இருந்தாள்.
ஜெகந்நாதனின் பார்வை அப்போதும் அவளை ஊடுறுவ, மைதிலியால் அப்போது அவனை நேர்கொண்டு காணவே முடியவில்லை.
“ரேகா நான் கிளம்புறேன்…” என்று இரண்டொரு முறை சொல்லியும் பார்த்துவிட்டாள்.
“இரு டி காபி எடுத்துட்டு வர்றேன்…” என்று ரேகா சொல்லியும் பத்து நிமிடங்கள் மேலாகிப்போனது. இன்னும் வந்தபாடில்லை.
ஜெகந்நாதனோ “எப்படி இருக்க மைதிலி…?” என்று நேரடியாய் கேட்க,
“ம்ம்…” என்று நிமிர்ந்து பார்த்தவள், “ந.. நல்லாருக்கேன்…” என்றாள் திக்கி.
“என்ன இங்க திடீர்னு…?”
“இங்க வரணும்னு தோணிச்சு….”
“அப்போ… இங்க வேக்கன்சி இருக்கான்னு பார்த்துட்டு தான் இருந்திருக்க இல்லையா?”
“பார்க்கக் கூடாதா என்ன?”
“நீ பார்க்கலாம்…” என்று சொன்ன, ஜெகந்நாதனின் வார்த்தையில் என்ன இருந்ததுவோ தெரியவில்லை.
மைதிலி ஜெகாவைக் காண, பல வருடங்கள் கழித்தான நேர்கொண்ட பார்வை இப்போது.
பார்வையை இருவரும் விலக்கவும் இல்லை, விலக்கிக்கொள்ள முயற்சிக்கவும் இல்லை.
மைதிலிக்கு மனதின் கனத்தை தாள முடியவில்லை. இன்னும் அழுகை வருவதாய் இருந்தது. அடக்கிக்கொண்டாள். என்னவோ ஜெகா முன்னம் அழ அவளுக்கு மனது வரவில்லை. ஜெகாவின் திருமணம் பற்றித் தெரியவும், இப்போதென்னவோ அவன் மீது கோபமாய் வந்தது.
“நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்ட மைதிலியின் குரலில் அப்பட்டமாய் ஒரு காட்டம்.
பேச, பேச இருவருக்கும் கோபமும் வேகமும் தான் அதிகமானதே தவிர, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மனதில் இருப்பதை பேசுவோம் என்றில்லை.
‘கிராதகி… கிராதகி…’ என்று ஜெகாவின் மனது அடித்துக்கொள்ள,
மைதிலியோ ‘திமிர்… திமிர்…’ என்று வசைபாடியது.
ரேகாவிற்கு இவர்கள் பேசுவது நன்கு கேட்டது.
‘திருந்தவே மாட்டாங்க…’ என்று கடிந்துகொண்டவள் காபியோடு வர, இருவருமே தங்கள் பார்வையை மாற்றிக்கொண்டார்கள்.
“கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுதுண்ணா…” என்று ரேகா கேட்க, மைதிலி அவளை அப்பட்டமாய் முறைத்தாள்.
ஜெகாவோ அதற்குமேலே, “நல்ல நாள் பார்த்து ஆரம்பிக்கணும் ரேகா.. வாழ்க்கைப் பிரச்சனை இல்லையா.. முன்ன வச்ச கால பின்ன வைக்க முடியாது…” என, மைதிலி பட்டென்று எழுந்துவிட்டாள்.
“நான் கிளம்புறேன்..” என்றவள் நடை கட்டிவிட்டாள்.
தடுக்காதே என்று ரேகாவிடம் ஜெகந்நாதன் ஜாடை காட்டிவிட, ரேகா அமைதியாய் இருந்தாள்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசலாம்னு வந்தேன்…” என்றவன் மைதிலி பேசியதை தான் கேட்டதாய் சொல்ல,
“என்னைய ஏன் ண்ணா உண்மைய சொல்ல விடாம தடுத்தீங்க…” என்றாள்.
“இப்போ சொல்லி என்னாகப்போகுது. இப்போ என்மேல கோபம் இருக்கு.. அது அப்படியே இருக்கட்டும்.. நான் இப்போ எனக்காக யோசிக்கிற நிலைல இல்லை ரேகா.. நிரஞ்சனி நிலைமை உனக்கே தெரியும். அவ கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னா நான் நந்தினியை கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்…”
“தெரியும்ணா… இதை மைதிலிக்கிட்ட எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா…”
“புரிஞ்சுப்பா. ஆனா எனக்காக இன்னும் பீல் பண்ணுவா.. வருத்தப்படுவா.. கில்டியா கூட நினைப்பா. இப்போன்னா என்மேல அவளுக்கு கோபம் மட்டும் தான் இருக்கு.. அதுவே அவளை கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கான வாழ்க்கைப் பத்தி யோசிக்க வைக்கும்…”
“அவ யோசிப்பாளான்னு தெரியலைண்ணா…” என்ற ரேகாவின் குரலில் வருத்தமே தொனித்தது.
“நினைக்கணும் ரேகா. இங்க இருந்து மைதிலி போறது தான் நல்லது.. சிலது நம்ம எதிர்பார்க்காதது நடக்கும் தானே.. கஷ்டமா இருந்தாலும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்…”
“உங்களுக்கு கஷ்டமா இல்லையாண்ணா…” என்று ரேகா கேட்க, ஜெகந்நாதன் முகத்தில் ஒரு உணர்வற்ற புன்னகை..
இத்தனை ஆண்டுகள் கழித்து தேடி வந்திருக்கும் அவள், அவள் வருந்தக் கூடாது என்று நினைக்கும் இவன்..
இருவரும் வாழ்வில் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் சந்தோஷமான ஓர் வாழ்வு தான் அமையும். ஆனால் விதி வேறு அல்லவா எழுதி வைத்துவிட்டது.
ஜெகாவிற்கும் மனது கனத்துப்போனது…
இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது தானே.
அப்படியொரு விருப்பம் கொண்டிருந்தான் மைதிலி மீது. எப்படியேனும் அவளை சம்மதிக்க வைத்துவிடலாம் என்று தான் அன்று உறுதியாய் இருந்தான். ஆனால் அவளோ திண்ணமாய் மறுத்துவிட்டாள்.
மறுத்ததும் இல்லாது, அவளது படிப்பு முடியவும் ஊரை விட்டும் கிளம்பி சென்றுவிட, அவனுக்கு அடுத்து வேறு வழியும் தெரியவில்லை. கொஞ்சம் ஈகோவும் அப்போது.
‘போனா போ டி.. பெரிய இவளாட்டம் பேசுறா…’ என்று கொஞ்சம் வீம்பும் இருந்தது.
மைதிலி தன்னை மறுத்தால், தான் போய் அவளிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கவேண்டுமா?! அப்படியொரு வீம்பும் இருந்தது.
‘போனா போ…’ என்ற எண்ணமே அதிகம் அப்போது..
ஆனால் அவள் சென்றபின் சிறிது நாளில் எல்லாம் தவறு செய்துவிட்டதாய் உணர்ந்தான்.
கோபம், வீம்பு எல்லாம் தாண்டி மீண்டும் அவனின் காதல் தலை தூக்க, மைதிலியை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை.
‘என்னை இனிமே தொல்லைப் பண்ணாதீங்க…’ என்ற அவளின் அந்த வார்த்தைகள் அவனுள் இன்னமும் கூட ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.
அப்படி சொல்லிச் சென்றவள், இன்று அவன் சூழ்நிலை கைதியாய் நிற்கையில் தேடி வந்திருக்கிறாள்.
என்ன செய்வான் ஜெகந்நாதன்…
தனக்காகப் பார்ப்பானா?! இல்லை தங்கைக்காகப் பார்ப்பானா?!
அந்நிய சம்பந்தம் என்றால் கூட எதுவும் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் இங்கே எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று.. சொந்தத்தில் திருமணம். நிறைய நிறைய யோசிக்க வேண்டிய விஷயம்.
ஜெகந்நாதன் தடுமாறித்தான் போனான்.
ரேகா வீட்டினில் இருந்து, தன் வீடு வர, அங்கேயோ வீடு நிறைய ஆட்கள். எல்லாம் நந்தியின் வீட்டு மனிதர்கள். திருமணம் பற்றி பேச வந்திருந்தார்கள் போல. வருகிறோம் என்று சொல்லவும் இல்லை.
ஜெகாவின் அம்மா, செல்வி தன் கணவரிடம் “ஜெகா வரட்டும் எதுக்கும் அவன்கிட்ட பேசிட்டு எல்லாத்துக்கும் சரின்னு சொல்லுங்க…” என்று தனியே சொல்லிக்கொண்டு இருந்தார்.
பாண்டியனோ “நம்ம முன்னமே சரின்னு சொன்னதுதானே… ஜெகாக்கு விருப்பமில்லைன்னா நான் இந்த பேச்சே வர விட்டிருக்க மாட்டேன். கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் தான் இருக்கு. இப்போ வரைக்கும் வேலை ஆரம்பிக்கலை. இனியும் அப்படி இருக்க முடியாது…” என்றபடி முன்னே கூடத்திற்கு வர, ஜெகாவும் அங்கு வந்திருந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
“வந்துட்டியா ஜெகா…” என்றவர் “பத்திரிக்கை அடிக்கணும்.. அதான் பேச வந்திருக்காங்க…” என்று சொல்ல,
“நீ.. நீங்களே பாருங்கப்பா…” என்றான் கொஞ்சம் தயங்கி.
“மாப்ள என்ன அப்படி சொல்றீங்க? இப்போல்லாம் பத்திரிக்கை கூட பொண்ணும் மாப்பிள்ளையும் தான் பாக்குறாங்க… அதான் நீங்க ரெண்டு ஜோடியும் கலந்து பேசி எங்களுக்கு ஒரு முடிவு சொல்லுங்க…” என்று நிரஞ்சனியின் வருங்கால மாமனார் சொல்ல, ஜெகந்நாதனால் முழு மனதாய் இதில் ஈடுபட முடியுமா?!
மைதிலி என்ன செய்கிறாளோ என்றே உள்ளம் துடித்துக்கொண்டு இருந்தது.
மைதிலிக்கு மனது ஒரு நிலையிலேயே இல்லை.
ஜெகாவின் பார்வையும் பேச்சும் அவளுக்கு அப்படியொரு அழுகையை கொடுத்தது. இத்தனை வருடங்கள் மனதில் பூட்டி வைத்திருந்த அழுகை எல்லாம் இப்போது வெளிவர, ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அவளது அறையில் அழுதபடி படுத்திருந்தாள்.