அவன் அன்பின் கிறக்கத்தில் தனைமறந்து அமர்ந்திருந்தவளை, ஏதோ படபடவென்ற சத்தம் மீட்டெடுக்க, கண்களைத் திறந்தவள் கண்டது, தோகையைப் படபடவென அடித்தபடி பறந்து வந்து கொண்டிருந்த அழகிய மயிலைத்தான்.
“ஐ! மயிலுங்க!” என்று அவள் கூக்குரலிட, அவனும் திரும்பி அதைப் பார்க்க, திடீரென எங்கிருந்தோ, வேட்டுச் சத்தம்.
வேட்டுச் சத்தம் கேட்டதும், மயில் வேகமாய்ப் பறந்து அவ்விடம் விட்டு நகர,
“அச்சோ பறந்து போச்சேங்க!” என்று முகம் சுருங்கியவளை,
“அது சரி! வேட்டுப் போடாம இருந்தா தோட்டத்தை நாசம் பண்ணிடும்ல!” என்று குரல் கொடுத்தபடியே வந்தான் வீரன்.
“டேய் நீ எப்படா வந்த?!” என்று மித்ரன் கேட்க,
“நான் இங்க தோட்டத்துல தானே இருக்கேன் ஒரு மணி நேரமா” என, மையுவிற்கு பதட்டமாகிப் போனது.
‘அய்யய்யோ நம்மளைப் பார்த்திருப்பாரோ?!’ என்று கலக்கமும் வெட்கமும் சூழ கணவனை முறைக்க,
“அங்கன பக்கத்துல கடலைத் தோட்டத்துல இருந்தவன், மயில் இறங்கினதைப் பார்த்துட்டு வேட்டைப் போட்டுட்டு ஓடியாந்தா நீங்க ரெண்டு பேரும் இங்க மயிலை வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கீங்க! தொரத்தாம!” என்று அவனே விளக்கம் கொடுக்கவும் சற்று நிம்மதி அடைந்தாள்.
“மானும்மா. இந்தா இந்த சோளத்தைச் சாப்பிடு” என்று மித்ரன் சுட்ட சோளத்தை அவளிடம் நீட்டிவிட்டு,
“வீரா.. வா. நீயும் வந்து எடுத்துக்கோ” என்று அவனையும் அழைக்க,
“என்னங்க, என்னைத் தோட்டத்துக்குள்ள கூட்டிட்டுப் போறீங்களா?! ஆசையா இருக்கு, செடி பூவையெல்லாம் தொட்டுப் பார்க்கணும், சோளத்தை என் கையாளப் பறிக்கணும்னு” என்று மையு ஆவலுடன் கேட்க, அடுத்த நொடியே அவளைத் தூக்கி இருந்தான் மித்ரன்.
“ஆனாலும் நீங்க ரொம்ப்ப பலசாலிதான்! இப்படி பொசுக்கு பொசுக்குன்னு தூக்கிக்கிறீங்க” என்று மையு சொல்ல,
“இதெல்லாம் இன்னும் ஒரு மாசத்துக்குதான். அதுக்கப்புறம் நீயே தனியா தான் நடக்கணும். ஊரிலிருந்து திரும்பிய மறுநாளே முறையா பயிற்சியை ஆரம்பிக்கணும்” என்றான் மித்ரன் கண்டனமான குரலில்.
‘போச்சுடா உன் வாய்தான்டி உனக்கு சனி. சும்மா இருக்கவனை நீயே சீண்டி விட்டுடுற!’ என்று சலித்துக் கொண்டாள் மனதோடு.
“ஹம்ம்!!!” என்று ரசனையோடு வாசம் பிடித்த மையு, அருகே இருந்த சில பூக்களையும் சோளங்களையும் தன் கையாலேயே பறித்து கொண்டாள் ஆசை ஆசையாய்.
“என்னங்க போன் கொண்டு வந்து இருக்கீங்க?!”
“ம் போட்டோ எடுக்கவா?” என்றவன், அவளை மெல்ல கீழே இறக்கி நிற்க வைத்து விட்டு போனை எடுத்து அவள் கையில் கொடுத்துவிட்டு மீண்டும் அவளைத் தூக்கிக் கொள்ள முயல,
“இல்லை இல்லை வேணாம்! என் பாப்பாக்கு கைவலிக்கும்ல! நான் கொஞ்ச நேரம் இங்கயே நின்னு போட்டோ எடுத்துக்கறேன்” என, அவன் வாய்விட்டுச் சிரித்துவிட்டான்,
“யாரு மானும்மா பாப்பா?!” என்றபடி.
“நீங்கதான். நீங்கதான் என் குட்டி பாப்பா! என் செல்லப் பாப்பா எல்லாம். நான் உங்க குட்டிப் பாப்பா” என்று மையு கொஞ்சலாய் அவன் மீது சாய,
“நீ எப்பவும் எனக்கு குட்டிப் பாப்பாதான் டா” என்றவன், அவள் கால்கள் வலிக்கும் என்பதால், அவள் சொன்னதையும் மீறித் தூக்கிக் கொள்ள, அவன் காதலிலும் அன்பிலும் கரைந்து போனவள்,
“நீங்களும் எனக்கு அப்படித்தான்!” என்றபடி, ஆசையாய் அவன் கன்னத்தில் தன் முத்தத்தைப் பதித்துக் கொண்டே, அந்த செல்பியை எடுத்தாள் மலர்த் தோட்டத்தின் ஊடே…
மலர்த் தோட்டத்திலும் சோளத் தோட்டத்திலும் உலா வந்த காதலர்கள், நேரமாவதை உணராது போக, தங்கமலர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, கீர்த்தியைப் போன் செய்து அவர்களை அழைக்கச் சொல்ல, அவனின் போனில் அழைப்பு வந்ததும்தான் இருவருமே மணி மதியம் பன்னிரண்டுக்கு மேல் ஆனதை உணர்ந்தனர்.
“அய்யய்யோ! மணி பன்னிரண்டுக்கு மேல ஆகிடுச்சுங்க! நாம இங்க வந்து ரெண்டு மணி நேரமாகிடுச்சு! அத்தைத் திட்டப் போறாங்க” என்று அவள் பதற,
அங்கு சரத்தோ, “அடியே உங்க அம்மா பண்றது எல்லாம் ரொம்ப ஓவராத்தான் போயிட்டு இருக்கு! அவங்க வந்ததான் சாப்பாடு போடுவாங்களா?! பசி உசிரு போகுதுடி! காலையில கோவில்ல போட்ட பொங்கலோடையே காலத்தை ஓட்டிடீங்க! இப்போ ஆக்கி வச்ச சோறையும் போடாம படுத்தி எடுக்குறீங்க?! உன் தம்பியும் தம்பி பொண்டாட்டியும் என்ன ராஜா ராணியா?! அவங்க சாப்பிட்ட பிறகு நாம சாப்பிட?!” என்று பொரிந்து தள்ள,
“உங்களுக்கு எப்படிங்க புரியும் இந்த பாசத்தைப் பத்தி எல்லாம்! அம்மா எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடனும்னு ஆசைப்படுறாங்க. இதே நீங்க எங்கயாச்சும் வெளியே போயிருந்தாலும் எங்களையும் காத்திருக்கத்தான் சொல்லுவாங்க.” என்றவள்,
“ஆனா ஒன்னு மட்டும் சொன்னீங்களே அது நிஜம். என் அம்மாவும், அப்பாவும், அவங்களோட எல்லா பிள்ளைகளையுமே ராஜா ராணியைப் போல்தான் வளர்த்தாங்க. இப்போவும் அப்படித்தான் பார்த்துக்கறாங்க. அதனால என் தம்பி இந்த வீட்டுக்கு ராஜாதான். அவன் பொண்டாட்டி இங்க ராணிதான்.” என,
‘ஐயோ சோறு போட சொன்னதுக்கு இவ்ளோ பெரிய லேக்சரா?! முதல்ல இவ அம்மா வீட்ல இருந்து இவளை கிளப்பணும்! அப்போதான் வாய் கொஞ்சம் குறையும்!’ என்று எண்ணிக் கொண்டவன், சிறிது நேரத்தில் மையுவும் மித்ரனும் வருவதைப் பார்த்து,
‘வந்துடுச்சுங்க ரோமான்சை முடிச்சிட்டு! ராஜாவாம், ராணியாம்!’ என்று மனதிற்குள் சொன்னதோடு விட்டிருக்கலாம்,
“ஏம்ப்பா மித்ரா உனக்கு தான் புதுபொண்டாட்டி வந்த குஷியில பசியும் தெரியலை! ருசியும் தெரியலை! எங்களுக்கு எல்லாம் பசிக்காத?! இவ்ளோ பொறுமையா வரீங்க?” என.
“நாலு பேர் கூடி இருக்க இடத்துல எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுறதுதான் சந்தோஷம். சாப்பிடுற நேரத்துல இப்படிக் கிளம்பிப் போனா என்ன அர்த்தம்?” என்று மலரும் அவர்கள் வர தாமதமானதில் ஜாடைமாடையாய் ராதாவிடம் சொல்லியபடியே பரிமாற, மையுவின் முகம் வாடிப் போனது.
“ப்ச்! அம்மாதானே திட்டுறாங்க. அதெல்லாம் பெருசா எடுத்துக்காதடா.” என்று மித்ரன் சமாதானப் படுத்த,
“இருந்தாலும் உங்களாலதான் அத்தைக்கிட்ட திட்டு வாங்கினேன்.” என்றாள் அவனை முறைத்து.
“சாப்பிடற நேரத்துல என்னடி பேச்சு வேண்டியிருக்கு?” என்று சாந்தி இப்போது குரல் கொடுக்க,
“என் புருஷன் கிட்ட நான் பேசுறேன். உனக்கென்ன?! நீ வேணும்னா உன்புருஷன் கிட்ட பேசிக்கோ?” என்று மையு அம்மா என்பதால், வாய்த்துடுக்காய் சொல்லிவிட, தங்கமலர் அவளை முறைத்த முறைப்பில்,
“ஈஈ… சாரி அத்தை!” என்றபடி சாப்பிடத் துவங்கினாள்.
‘இந்தப் பொண்ணு இருக்காளே!’ என்று சிரித்தபடி மலரும் சாப்பிட,
“ஹப்பா அத்தை சிரிச்சுட்டாங்க!” என்றாள் அவன் காதருகே சென்று.
“பேசாம சாப்பிடு மானும்மா” என்று செல்லமாய்க் கடிந்தவனை, பொருட்படுத்தாமல்,
“ம்மா! சாப்பாடுன்னா இப்படி இருக்கணும். என் அத்தைக்கிட்ட கொஞ்சம் ட்ரெயினிங் எடுத்துக்கோ” என்று மையு இப்போது சாந்தியை வம்பிழுக்க,
“ஆமாம் ஆன்ட்டி நீங்க செய்யுற பிரியாணி, தக்காளி சோறுல கோழி தன்னால வந்து விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்ட மாதிரி இருக்குமாமே!” என்று கீர்த்தியும் மையு சொன்னதை வைத்து உளறிவிட, சாந்தி மையுவை ஏகத்திற்கும் முறைக்க,
“அய்யய்யோ!” என்று கமுக்கமாய் தலைகுனிந்து சாப்பிடத் துவங்கி விட்டாள் மையு.
சின்னதுகள் செய்யும் சேட்டைகளை பெரியவர்கள் ரசித்தபடியே சாப்பிட்டு முடிக்கும் சமயம்,
“ஹான் என்ன மாமா நீங்க?! எவ்ளோ அழகா இருக்கு இந்த ஊரு! இவ்ளோ சீக்கிரம் கிளம்பனும்னு சொல்றீங்களே?!” என்றாள் மையு இடைபுகுந்து.
“அப்பாவும் அண்ணனும் நிறைய நாள் ஹாஸ்பிட்டல் போகலைன்னா கஷ்டம் மானும்மா.” என்றான் மித்ரன்.
“புரியுதுங்க. ஆனாலும்” என்று அவள் ஏதோ சொல்ல வர,
“நீங்க எல்லோரும் வேணா ஒரு வாரம் இருந்துட்டு வாங்கம்மா. நானும் கிருஷ்ணனும் மட்டும் கிளம்பறோம்” என்றார் ராஜசேகர் முடிவெடுத்துவிட்டவராய்.
“சரி அட்லீஸ்ட் இன்னும் ஒரு நாளாச்சும் இருந்துட்டு நாளைக்குப் போங்களேன். ப்ளீஸ் மாமா ப்ளீஸ்” என்று மையு கெஞ்ச, மனைவியைப் பார்த்தார் ராஜசேகர்.
“அத்தைக்கும் நீங்க அவங்க கூட இருக்கணும்னு ஆசையாதான் மாமா இருக்கும். உங்க வேலையை நினைச்சு அமைதியா இருக்காங்க. வேணும்னா கேட்டுப் பாருங்க” என, தங்கமலரும்,
“இருங்களேங்க!” என்றார் ஆசையாய்.
“அப்புறம் என்ன அத்தையே சொல்லிட்டாங்க” என்று மையு சந்தோஷம் கொள்ள,
“ரொம்ப தைரியம் தான்ங்க இந்தப் பொண்ணுக்கு. நான் கூட இத்தனை வருஷத்துல மாமா கிட்ட இவ்ளோ சகஜமா பேசினது இல்லை. நல்ல பொண்ணுதான்!” என்றாள் ராதா தன் கணவனிடம்.
“நல்ல பொண்ணுதான். ஆனா” என்று ஏதோ சொல்ல வந்தவன்,
‘என்னவோ நாம என்ன நினைச்சாலும் நடக்கிறதுதானே நடக்கும்’ என்று எண்ணிக் கொண்டு அமைதியாகிவிட,
“என்னங்க ஏதோ சொல்ல வந்தீங்க”
“ஒண்ணுமில்லைமா. ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா சரி” என்றுவிட்டு எழுந்து கை அலம்பச் சென்றான் கிருஷ்ணன்.
மாலை ஐந்து மணியளவில், அனைவரும் அந்தப் பெரிய வீட்டின் மொட்டை மாடியில் முல்லைப் பந்தல் கீழ் அமர்ந்து சந்தோஷமாய்ச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கக, பிரியாவும், ப்ரேமும் மட்டும் அமைதியாக, ஏதோ சிந்தித்தபடி அமர்ந்திருக்க, மையுவும், கீர்த்தியும் சேர்ந்து அனைவருக்காகவும், மொட்டை மாடியிலேயே இருந்த மண் அடுப்பை வைத்து, யூடியூப்பின் உதவியால் மைசூர் போண்டா செய்து கொண்டிருந்தனர் மிகத் தீவிரமாய்.
“அடியே உனக்கு ஏன்டி இந்தத் தேவையில்லாத வேலை?! அதான் நாங்க எல்லாம் இருக்கோம்ல! யாராச்சும் ஒருத்தர் செய்து தரோம் உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதானே?! நீ உட்கார்ந்த இடத்துலேயே இருந்துட்டு அதைக் கொண்டா இதக் கொண்டான்னு எத்தனை முறை எங்களை மேலயும் கீழயும் ஏறி இறங்க வைப்ப?! இதுக்கு கீழேயே செய்திருப்போம்ல!” என்று சாந்தி திட்ட,
“ஷ்! நீ பேசாம இரும்மா போட வேண்டிய இங்க்ரிடன்ட்ஸ மறந்துடப் போறேன்” என்றவள்,
“ஐயோ நீ நடுவில புகுந்ததுல உப்பு போட்டேனா இல்லையான்னு மறந்துட்டேன்.” என்றவள், சிறிது மாவைத் தொட்டு ருசி பார்க்க,
“வாவ்!!! வாவ்!! கீர்த்திமா மாவே இவ்ளோ ருசியா இருக்கே! போண்டா எப்படி இருக்கும்?!” என்று மையு தனக்குத் தானே பாராட்டிக் கொள்ள,
“ம்க்கும் மாவு கரைக்கவே இம்புட்டு நேரம்னா? நீ மைசூர் போண்டா போடுறதுக்குள்ள மைசூரே போய் வந்திடலாம்” என்றார் சாந்தி.
“இதோ பார்! நேரம் எவ்ளோ ஆகுதுங்கிறது முக்கியம் இல்லை! நீ செஞ்ச கோழித் தற்கொலை பிரியாணி மாதிரி இல்லாம இருக்கிறதுதான் முக்கியம்!” என்று மையு ஜல்லிக் கரண்டியைத் தூக்கிக் கொண்டு மிரட்ட,
“அடிங்க! சும்மா சும்மா என் பிரியாணியை இழுத்துக்கிட்டு” என்று அவள் கையில் இருந்த ஜல்லிகரண்டியைப் பிடுங்கி சாந்தி அடிக்கப் போக,
“என்னங்க?!” என்று மையு கத்த, அவனோ,
“நீங்க என்ன வேணா பண்ணிக்கோங்க அத்தை. ஆனா அவ வாயை கொஞ்சம் ஆப் பண்ணிட்டு போண்டாவை போட்டுக் கொடுக்கச் சொல்லுங்க எல்லோருக்கும்” என்று நழுவிக் கொண்டான் அவளின் அன்புக் கணவன்.