தூறல் – 23
என் இனிய தருனமதை கண்டவளே,
என் கடும் நாட்களையும் கண்டாயோ?
உடன் இருப்பாயோ இவை இரண்டிலும்,
இருந்துவிட்டு போவாய் எனில் சம்மதம் தந்திடு,
உன் சிரத்தின் சிறு அசைவின் வழி!!
     கௌதம் தன்னிடம் சத்யாவின் எண்ணின் கடந்த ஒரு மாத லொக்கேஷனை எடுத்து தருமாறு கேட்டதில் இருந்து மறுத்துக் கொண்டு இருக்கிறாள்.
     ஆனால் கௌதமும் தன்னால் முடிந்த அளவு அவளை சம்மதிக்க வைக்க பேசிக் கொண்டு இருந்தான். கிட்டதட்ட அவளை பேசியே கரைத்துக் கொண்டு இருந்தான்.
     ஆருவையும் ‘சரி’ என்று சொல்லவும் வைத்து விட்டான். அதுவும் அரை மனதுடன் தான் அவள் அதை நாளை வந்து செய்து கொடுப்பதாக ஒத்து கொண்டாள்.
     பின்பு அவள் தன் கருத்தை முன் வைத்தாள். “கௌதம் நாம சத்யா பாடி இருந்த இடத்தில போய் ஏதாவது கிடைக்கிதான்னு தேடிப் பார்க்கலாமா” என்றாள்.
     “நீ சொல்றது படி டிரை செஞ்சாலும் எவ்ளோ யூஸ் ஆகும்னு தெரியலை ருத்ரா‌. பிக்காஸ் கொலை பண்றவன் அவன் இடத்துக்கு பக்கதிலையே பாடிய டிஸ்போஸ் பண்ணுவானா.
     இந்த லாஜிக் படி பார்த்தா நாம அங்க போனாலும் எதுவும் கிடைக்குன்னு சொல்ல முடியாது ருத்ரா” என்றான் தன் எண்ணத்தை.
     “கௌதம் நீங்க இப்படி யோசிச்சு பாருங்க. நம்ம இந்த ஒரு லாஜிக்கால எந்த விஷயத்தையும் விட்ற கூடாது.
      ஏன்னா ஒரு சின்ன குளூ அந்த இடந்தில கிடைச்சாலும் நமக்கு அது பெரிய ஹெல்ப்பா இருக்கும்ல” என்றாள் தன் மனதில் தோன்றியதை.
     ஆரு கூறியதை யோசித்தவன் “நீ சொல்றதுலையும் ஒரு பாய்ண்ட் இருக்கு ருத்ரா. சரி நான் நெக்ஸ்ட் அங்க போய் பாக்குறேன்.
     அன்ட் ருத்ரா நீ எனக்கு அந்த லொக்கேஷன் மட்டும் எடுத்து குடுத்துரு என்ன” என்றான் கடைசியாக.
     “உங்களை என்ன பண்றது கௌதம். அதான் ஒத்துக்கிட்டனே. நீங்களும் நாளைக்கு அந்த காபி ஷாப்ல வச்சு வேலைய பார்க்கலாம்னு சொன்னதுக்கு ஓகேன்னு சொல்லிட்டீங்க.
     அப்புறம் என்ன. என்னை ஆள விடுங்க நான் செஞ்சு தரேன் போதுமா” என்றாள் ஆரு அவன் எதிர்ப்பார்க்கும் பதிலை.
     அவளின் வாய் வார்த்தையாக கேட்ட பின்னே தான் கௌதம் முழுதும் மனம் சமாதானம் ஆனான். பின் நாளை சந்திப்போம் என்று கூறிவிட்டு அழைப்பை வைத்தான்.
     மாலை வந்த தோழிகள் பார்த்தது படுத்து உறங்கி கொண்டிருந்த ஆருவை‌ தான். கௌதமுடன் பேசிய ஆரு‌ அப்போது தான் உறங்கினாள்.
     எனவே அவளுக்கு மதியம் சாப்பிட்ட ஏதோ உணவால் தான் அவளுக்கு வயிற்று வலி வந்தது போல என்று எண்ணிக் கொண்டு அமைதியாக சென்றனர் தோழிகள்.
        காலை தோழிகள் எழும் முன் எழுந்த ஆரு‌ அவர்கள் எழாதவாறு மெல்ல கிளம்பி விட்டாள். துண்டு சீட்டு ஒன்றில் “இன்னைக்கு லைப்ரரில புக் கொடுக்க லாஸ்ட் டே‌.
     அதனால நான் இப்பவே போறேன். அங்க போய்ட்டு ஆபிஸ்க்கு வந்துடுறேன். பாய் கைஸ்” என்று ஒரு பொய்யை எழுதி வைத்து விட்டு சென்றாள் ஆரு.
     தன் தோழிகள் இதை கண்டிப்பாக நம்புவார்கள் என்று எண்ணிய ஆரு கிளம்பிவிட்டாள் ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கௌதமை காண.
     அந்த காபி ஷாப் காலை எட்டு மணிக்கு கும்பலே இல்லாது இருந்தது. பணக்கார வீட்டு பிள்ளைகளே அதிகம் வருகை தருவதால் இன்னும் ஆட்கள் வரவில்லை.
     கடை ஊழியர்கள் தவிர கௌதம் மட்டுமே அங்கு இருந்தான். அவன் மனமோ ‘ருத்ரா சொன்னது சரிதான் போல. இந்த கடையில ஈ காக்கா கூட இல்லை’ என்று.
     ஆரு தான் இந்த காபி ஷாப்பை சொன்னது. எனவே அவ்வாறு யோசித்தான். அவன் வந்து ஐந்து நிமிடத்திற்குள் எல்லாம் ஆரு வந்துவிட்டாள்.
     “சாரி கௌதம் டிராபிக்ல கொஞ்சம் லேட் ஆகிருச்சு. நீங்க வந்து ரொம்ப நேரம் ஆகுதா?” என்றாள் வந்தவுடன் மன்னிப்பான குரலில்.
     “இல்லை ருத்ரா இப்ப தான் ஒரு ஐஞ்சு நிமிஷம் இருக்கும். நீ வந்துட்ட. சரி பர்ஸ்ட் குடிக்க எதாவது ஆர்டர் பண்ணலாம்.
      ஏன்னா நான் வந்ததுல இருந்து அந்த பேரர் என்னை ஒரு மாதிரி பாக்குறான்” என்று கூறியவன் பேரரை அழைத்து இரண்டு கோல்டு காபியை ஆர்டர் செய்தான்.
     அதை கண்டு சிரித்த ஆருவை “சிரிக்காத ருத்ரா நம்ம மட்டும் தான் இருக்கமா. எல்லாரும் நம்மலையே பாக்குற மாதிரி இருக்கு” என்றான் அவஸ்தையுடன்.
      இப்போது நன்கு சிரித்த ஆருவை முறைத்த கௌதம், பின் தானும் அவள் சிரிப்பில் சேர்ந்துக் கொண்டான்.
     காபி வந்ததும் தங்களை யாரும் தொல்லை செய்யாதீர்கள் என்று கூறியவர்கள் சுவர் ஓரம் சென்று அமர்ந்து கொண்டனர்.
     “வேலைய ஸ்டார்ட் செய்வோமா ருத்ரா” என்ற கௌதமை பயந்த பார்வை பார்த்தாள் ஆரு‌. அதை கண்ட கௌதம் “இங்க பாரு ஆரு எந்த பிராப்லமும் வராது.
     புரியுதா. வந்தாலும் நான் பாத்துக்கிறேன் ஓகே. உன் பேரை எங்கையும் நான் வரவிட மாட்டேன். ஐ பிராமிஸ் மா” என்றான் அவள்‌ கையை பிடித்து அழுத்தி கொடுத்து.
     அந்த பிடியில் ஆருவிற்கு‌ அவ்வளவு தைரியம் வந்தது போல் தோன்றியது. ‘சரி’ என்று தலை அசைத்தவள் தன் மடிக்கணினியை எடுத்தாள்.
     அப்போது கௌதமும் அவனின் மடிக்கணினியை எடுத்தான். ஏன் என்ற‌ ஆருவிடம்‌ ” எங்கையும் நான் உன் பேர கூட வரவிட மாட்டேன்னு சொன்னேன்ல அதான்.
     இப்ப யாரு வேலை பாக்குறா யார் படம் பாக்குறாங்னு தெரியாதுல” என்றவன் தன் ஹெட்செட்டை காதில் மாட்டி வேலை செய்வது போல் சீரியசாக காமெடி படம் பார்த்துக் கொண்டு இருந்தான்.
     அவனை கண்டு சிரித்து விட்டு தானும் தன் ஹெட்செட்டை காதில் மாட்டியவள் கைப்பேசி அலைவரிசை கம்பெனிக்குள் நுழைய முயன்று கொண்டிருந்தாள்.
      கௌதமோ சுற்றி உள்ளவர்கள் தங்களை ஏதும் பார்க்கிறார்களா இல்லை புதிதாக யாரேனும் வருகிறார்களா என்று படம் பார்ப்பதை போல் ஆராய்ந்து கொண்டிருந்தான்.
     விஷ்ணு பிரசாத் தன் ஆராய்ச்சியின் ஒரு பாகமாய் சில சிறுவர்களுக்கு குடிக்க எதுவோ ஒரு திரவ மருந்தை கொடுத்தான்.
     அந்த சிறுவர்களில் சிலருக்கு அதை குடித்த சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் சிலருக்கு மயக்கம் வந்து விட்டது.
     உடனே பிரசாத் அவர்களை பரிசோதித்தான். ஒரு சிறுவன் மட்டும் மிகவும் வலுவிழந்து தொய்ந்து விழுந்தான். ‘ஐயோ ச்சே’ என்று சுவற்றில் தன் கையை குத்திக் கொண்டான் பிரசாத்.
     அவன் ஆட்களில் ஒருவனை அழைத்தவன் அந்த சிறுவனை தூக்கி கொண்டு சென்று புதைக்க சொல்லி விட்டான். பின் தன் அறைக்கு வந்தவன் தீவிரமான யோசனைக்கு சென்றான்.
     விஷ்ணு பிரசாத் சக்தியை விட நன்கு படிப்பான். எனவே மருத்துவ துறையை தேர்வு செய்தான்.
     அப்படி தேர்வு செய்தவன் வெளிநாட்டில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற்கு தகுதி தேர்வின் மூலம் சென்றே படித்தான்.
     இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் இரண்டையும் அங்கேயே முடித்து வந்தவன் இங்கு தன்‌ தந்தையின் கீழே இருந்த மருந்து கம்பெனியை எடுத்து நடத்தினான்.
     பிரசாரத்திற்கு தன் கம்பெனியில் புதிய புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் புகழ் அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது.
     அதற்கு அவன் நிறைய மருந்துகளும் கண்டும் பிடித்தான். ஆனால் சோதனை செய்யாது அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு அவன் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
     இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவன் பரிசோதித்து பார்க்கவே அவனுக்கு அரசின் அனுமதி அவசியம்.
      அவனும் நேர்மையான முறையில் தான் அரசிடம் அனுமதி கோரினான். ஆனால் அவனை அரசு நிராகரித்தது ஏன் என்ற காரணம் கூட சொல்லாது.
     இன்னும் சொல்லப்போனால் நிராகரித்தது அரசு அல்ல அரசு அதிகாரிகளே. ஏனெனில் அரசின் சார்பில் இருப்பவர் அவர்கள் தானே.
     விஷ்ணு பிரசாத்தை பொருத்த வரை அவனின் மருந்துகள் முறையாக மக்களுக்கு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே பிரதானமாக இருந்தது.
     ஆனால் அவனின் எண்ணத்தை மாற்றும் நாளும் வந்தது. மருந்து ஆராய்ச்சி சம்மதம் கொடுக்கும் அதிகாரிகளே கையூட்டு பெற்று கொண்டு வேறு ஒரு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தனர்.
     அதை கண்ட பின் அதுவரை நேர்மையாக இருக்க வேண்டும் என்ற அவனின் எண்ணத்தை அடியோடு மாற்றிக் கொண்டான். “அனுமதி தருவதற்கே பணம் போதும் எனில்,
     தன் மருந்துகள் கடைசி பயன் தரும் நிலையில் இவர்களிடம் காசை கொடுத்து ஒப்புதல் பெற்று கொண்டால் என்ன” என்று மனதில் நினைத்து விட்டான்.
     அதிலும் அவன் கேன்சர் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதை தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டான். அதற்கு தகுந்த அறிவும் வாய்க்கப்பட்டவன்.
      ஆனால் முறையான வழியில் போக தவறினான். அப்படி தன் மருந்துகளை யார் மீது சோதித்து பார்ப்பது என்று அவன் குழம்பிக் கொண்டு இருந்த நேரம் சக்தியின் கடத்தல் வேலைகளை கண்டுபிடித்தான்.
     ஏற்கனவே எல்லார் மீதும் கோபத்தில் இருந்தவன், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று எண்ண துவங்கினான்.
     அதை கொண்டே அவன் அண்ணனை தன் பகடையென கொண்டு அவன் வேலையை ஆரம்பித்தான்.
     முதலில் அவன் மனதே அவனுக்கு முரணாக இருந்தது தவறு செய்கிறோம் என. ஆனால் அதற்கும் தகுந்த பதில் தந்தது அவன் மனதில் இருந்த ஆசைகள்.
     தான் கண்டுபிடிக்கும் மருந்துகளை குழந்தைகளுக்கு செலுத்தி அவர்களை தன் சோதனை எலியாக மாற்றிக் கொண்டான்.
     இதில் அவன் பொருட்கள் சரியான அளவில் போட்டு உருவாக்கினாலும் அவன் மருந்துகள் சரியான‌ பலனை தரவில்லை. இதற்கு தான் மனமும் நல்லதாக இருக்க வேண்டும் என்று சொல்வதா.
     சக்தியின் மூலம் உருவாக்கிய செயலியின் மூலம் தனக்கு தேவையான தகவல்களை அவன் சேகரித்து கொள்வான். அதாவது சிறுவர்களின் இரத்த வகை இதுபோல்.
     சின்ன சின்ன சிறுவர்கள் துடிதுடித்து சாகும் போது அவன் மனமும் துடிக்க தான் செய்தது. பலரை காப்பாற்றும் மருத்துவன் இன்று சிறு சிறுவர்கள் பலர் சாவிற்கு காரணமானது அவனுக்கு குற்ற உணர்வை தந்தது.
      ஆனால் அதை பார்த்தால் தன் வாழ்வின் லட்சியம் என்ன ஆவது என்ற தான் என்னும் பிரதான எண்ணம் தலைதூக்கி அவன் குற்ற உணர்வை அடக்கி விடுகிறது.
    பிறக்கும் போதே எவரும் கெட்டவராக பிறப்பதில்லையே அவர் வளரும் சூழலும், அவர் சந்திக்கும் மனிதர்களுமே அவரவரின் குணங்களை மாற்ற முயற்சி செய்கின்றது.
     ஆனால் அதற்கு ஆட்படாமல் வாழ்வின் நெறி எதுவென்று மனிதன் புரிந்து தன் வாழ்க்கை நெறி தவறாது நடத்தல் வேண்டும்.
     அதை விடுத்து தான் மாறியதற்கு இந்த சமூகம் தான் காரணம் என்று கூறுவது சரியாகாது. நம் மனதில் ஏதோ ஓர் மூலையில் இது போல் கொடூர எண்ணங்கள் சிறிது மனிதனிடம் இருக்கும் தான்.
     ஆனால் அதை வளர விடாது நல் நெறியை கடைப்பிடிப்பவனே வாழ்வில் நிரந்தர முன்னேற்றம் காண்பான்.
      தவறான பாதையில் போகுபவனுக்கு தான் வேகமாக முன்னேறுவது போல் தோன்றும். ஆனால் அது என்றும் நிரந்தரம் இல்லை என்பதை அவன் உணர்ந்தால் உலகில் எந்த தவறும் நடக்காது.
-தொடரும்