வெளியே தான் எம்டி, செகரட்டரி எல்லாம், தனியே கார்த்திகை விட உற்ற நண்பன் ஈஸ்வருக்கு இல்லை!
“சரி என்ன விஷயம் கார்த்திக்…” என்று ஈஸ்வர் கேட்க,
“ம்… ஒரு ரெண்டு மாசம் முன்னாடி பாரீன் கம்பெனி ஒன்றிலிருந்து இங்க பிஸினஸ் டூர் வந்து நம்ம ஹோட்டல்ல தங்கினாங்க இல்ல, அவங்க மெயில் பண்ணியிருக்காங்க, நம்ம ஹாஸ்பிட்டாலிட்டி ரொம்ப நல்லா இருந்துச்சாம், முக்கியமா நம்மளோட ஹால் டெக்கரேஷன்ஸ் ரொம்ப நல்லாயிருந்ததாம்…அதனால அதுக்கு எல்லாம் தேங்க்ஸ் கிவ்விங் ப்ரெண்ட்லி பார்ட்டி மாதிரி ஒன்னு ஏற்பாடு பண்ணுறாங்களாம், முக்கியமா உன்னைய பாரட்டுறதுக்காக, கூடவே அவங்க கிளைன்ட்ஸ் கூட வருவாங்க போல , மொத்தத்தில் அவங்களுக்கும் நமக்கும் உபயோகமான ஒரு குட்டி மீட்…” என கார்த்திக் சொல்லவும்,
“இது உண்மையாவே நல்ல விஷயம் கார்த்திக், அவங்க கிளைன்ட்ஸ் பற்றி தெரிஞ்சுகிட்டா நமக்கும் உபயோகமா இருக்கும்…” என்று பிசினஸ்மேனாக பேசியவன் மற்ற விவரங்களையும் கேட்டுக்கொண்டான்.
வேறு விஷயம் பேச ஆரம்பிக்கும்பொழுது
“இன்னொரு விஷயம்…” என்று கார்த்திக் இழுக்க,
“என்னடா..” என்று ஈஸ்வர் கேட்க,
“ அது அவங்களை ரொம்ப கவர்ந்ததே அவங்களோட ஒவ்வொரு காண்பரன்ஸ்க்கும் ஏற்ற மாதிரி பண்ணின மோனோக்ரோம் ஹால் டெக்ரேஷன்ஸ் தான், அதனால அவங்க கண்டிப்பா டிசைனரை பார்க்கணும் சொன்னாங்க, சோ உன்னோடு சேர்த்து அவங்களும் முக்கியமான கெஸ்ட் லிஸ்ட்ல இருக்காங்க…”என்றான் ஈஸ்வரின் முகத்தை ஆராய்ந்து கொண்டே,
பேச்சு போன திசையிலேயே லாவகமாய் பைல் ஒன்றை எடுத்து அதில் பார்வையை பதித்துக் கொண்டே கார்த்திக் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தவனின் முகத்தில் இருந்து எதையும் அறிய முடியவில்லை.
கார்த்திக் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன்,
“விஷயத்தை சொல்லிடு… அன்னைக்கு வேற எந்த கமிட்மெண்டும் வைச்சுக்க வேணாம்னு சொல்லிடு, அபிசியலா மெயில் ஒன்னு அனுப்பிடு…” என்று இயல்பாய் ஒப்பித்து விட்டு மீண்டும் பைலை பார்க்க,
கார்த்திக் இன்னும் பார்வையை விலக்காமல் இருக்கவும்,
அது ஒரு சனிக்கிழமை பிற்பகல். விடுமுறை நாள் என்பதால் “விவி ஹோட்டல்ஸ்” கூட்டமாகவே இருந்தது. அதை ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ரகத்தில் சேர்க்கலாம். உள்ளே நுழைந்தால் இருபக்கமும் மரம் செடி கொடிகள் கொண்ட குட்டி தார்சாலை ஹோட்டலை தொடும். அதன் பக்கவாட்டில் நீச்சல் குளமும் குட்டி பூங்காவும் , பூங்காவை ஒட்டி குடைகளுக்குள் குட்டி உணவகம், அதற்கடுத்து ஆங்காங்கே தனிதனியாய் குட்டிகுட்டி வீடுகள் போன்ற தனி ரூம்கள் , இதில் ஹோட்டலில் கீழ்தளத்தில் விருந்தினர் தங்கும் அறைகள் இருக்க, முதல் தளம் முழுவதும் அலுவலகமாய் இருந்தது. அதற்கு மேல் உள்ளே தளங்களில் எல்லாம் அறைகளும், பார்ட்டி ஹால்களும் இருந்தன.
இன்று அந்த பாரீன் கம்பெனி மக்களோடு சந்திப்பு, நான்காம் தளத்தில் பிற்பகல் ஆரம்பித்து மாலைவரை நடப்பதாக இருந்தது.
சாம்பல் நிற சில்க் காட்டனில் எழிலாய் கிளம்பி சீக்கிரமே வந்திருந்த சாகித்தியா அறை அலங்காரங்களை எல்லாம் சரி பார்த்தபடி காரிடரில் மெதுவாய் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
ஹால் வாயிலுக்கு சற்று அருகில் பூக்கள், வெல்வெட் நாடாக்களின் நடுவே வைக்கப் பட்டிருந்த வரவேற்பு பலகையில் பார்வையைப் பதிக்க,
மேலிருந்து பல முக்கிய விருந்தாளிகளின் பெயர்கள் வரிசையாய் இடம் பெற்றிருக்க, அவள் கண்ணில் பட்டதெல்லாம் விஷ்வேஸ்வரனின் பெயருக்கு அடுத்ததாக கீழே இருந்த,
“மிஸஸ். சாகித்திய ஸ்ரீ விஷ்வேஸ்வரன் “ தான்.
பார்த்தவள் பார்த்தபடியே நிற்க, அருகில் வந்த கார்த்திக்கை கூட கவனிக்கவில்லை.
“என்னாச்சு மேம்…” பணிவாய் வந்த கார்த்திக்கின் குரலில் நடப்புக்கு வந்தவள்,
.”யாரு இந்த போஸ்டரை ரெடி பண்ணினது…” பார்வையை அதிலிருந்து விலக்காமலே கேட்டாள்.
“பார்ட்டி நடுத்துறவங்க மேம்…” மீண்டும் பணிவாய் வந்தது குரல்.
சரேலென்று அவனை திரும்பி பார்த்தவள், “ உன் ஸ்மார்ட்னெஸ் எல்லாம் என்கிட்ட காட்டாத கார்த்திக்…” என்று முறைத்துவிட்டு
“அவங்க ரெடி பண்ணினாங்க சரி, பெயர் போஸ்டரில் போட யார் எழுதிக் கொடுத்தா…” என்று அவனை பார்த்து புருவம் உயர்த்த,
“நான் தான் கொடுத்தேன், ஏன் ஏதாவது தப்பா இருக்கா, மிஸஸ்.விஷ்வேஸ்வரன்….” அவளை போலவே புருவம் உயர்த்திக் கேட்டான் கார்த்திக்.