மறுநாள் காலை வெகு சீக்கிரமாகவே கண்விழித்தவன், குழந்தை போல் தன்னை அணைத்தபடி உறங்கும் தன் மைவிழியாளின் கண்களில் முத்தம் பதித்து,
“மானும்மா” என்று மெல்லத் தட்டி எழுப்ப,
“ம் தூக்கம் வருது” என முனகினாள் உறக்கத்திலேயே.
“மானும்மா.. ஹாஸ்பிட்டல் போகணும்ல” என்று அவன் சொன்னதும் படக்கென கண்கள் திறந்தவள்,
“ஆமாம்ல” என்று உடனே எழுந்து அமர, அவளின் ஆவலைப் பார்த்து சற்றே பயம் எழுந்தது அவனுக்கு.
‘டாக்டர் எதுவும் தப்பா சொல்லிடக் கூடாது!’ என்று நினைத்தபடியே, அவளை மெல்லக் கட்டிலில் இருந்து இறக்கினான்.
அவள் இறங்கி நின்றதும் அவன் சட்டென அவளைத் தூக்கிக் கொள்ள,
“எ எங்க போறீங்க?!” என்றாள் தயக்கத்துடன்.
“ம்!” என்று அவளை முறைத்தவன்,
“காலையில எழுந்ததும் எங்க போவாங்க?” என்று கேட்க,
“ப பாத்ரூமுக்கா?! நீ நீங்களா?! வேற வேலையாள் யாரும்” என்று அவள் தயக்கம் கொள்ள,
“நான் இருக்கும் போது என் பொண்டாட்டிக்கு யாரும் எதுக்கு செய்யணும்?!” என்றபடி, மெல்ல அவளைத் தூக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்றவன், அவளின் காலைக் கடன்களை முடிக்க உதவி செய்ய, அவள் கண்கள் கலங்கிப் போனது.
“ப்ச்! என்ன மானும்மா இதெல்லாம்?! அடி வேணுமா?!” என்று செல்லமாய் மிரட்டியவனிடம்,
“ம்!” என்று தலையசைத்தவள், தன் காலைக் கடன் முடித்து, பல் துலக்கி முகம் கழுவியதும், அவனை அன்போடும் ஆசையோடும், கட்டி அணைத்து முத்தமிட, அவனும் ஆசையாய், அழுத்தமாய் தன் மனைவிக்கு பதில் முத்தம் பதித்தான். அதன்பின் அவள் உடைகளைக் களைந்து, மீண்டும் அவளைத் தூக்கியவன், மிதமான சூட்டில் நீர் நிரம்பி இருந்த அந்த பாத் டப்பில் அவளை மெல்ல படுக்க வைத்தான்.
இருவருக்குமே அங்கு, அந்நிலையில் கணவன் மனைவி என்ற எண்ணம் எப்போதோ மறைந்திருந்தது. அவன் கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் அன்னையாய் மாறியிருக்க, அவளோ தாய்க்கும் மேலாய் அவனைப் பார்த்திருந்தாள்.
சில வருடங்களாக, வாரம் ஒருமுறை அப்பாவும், தங்கையும், வீட்டில் இருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே குளியலைக் கண்டிருந்தவளுக்கு, இன்று இந்த சொகுசான குளியலறையை விட அவனின் அன்பான கவனிப்பே வானில் பார்ப்பது போல் உணர வைத்தது. சில நிமடங்களில் அவளைக் குளிக்க வைத்து முடித்தவன், மீண்டும் அவளைத் தங்கள் அறைக்குக் தூக்கிக் கொண்டு வந்து அவள் உடல் துடைத்து டவலைக் கட்டிவிட்டு அவளைக் கட்டிலில் அமர வைத்துவிட்டு அவளுக்காய் உடைகள் வாங்கி அடுக்கப்பட்டிருந்த அந்த அலமாரியைத் திறந்தான்.
அதைப் பார்த்ததும் அவளின் கண்கள் ஆச்சர்யத்திலும் நெகிழ்விலும் விரிந்தன.
அவளுக்கு புடவைச், சுடிதார் போன்ற உடைகள் வசதியாக இருக்காது என்று தானே பார்த்துப் பார்த்துக் கெஷூவல் வியருக்காக பருத்தியிலும், பார்ட்டி வியருக்காக சற்று ஆடம்பரமான வகையிலும், கவுன்களையும் ஸ்கர்ட்டாப்ஸ்களையும் வாங்கிக் குவித்திருந்தவன், அதற்கு ஏற்றாற்போல் உள்ளாடைகளையும் வாங்கி வைத்திருந்தான்.
அலமாரியில் இருக்கும் துணிகளை அவள் பார்க்கும் படி சற்று நகர்ந்து நின்றவன்,
அவள் குரல் கமருவதையும், முகம் மாறுவதையும் கண்டவன்,
“ப்ச் இப்போ நீ அடிதான் வாங்கப் போற” என்றபடியே அடுக்கியிருந்த துணிகளில் ஒவ்வென்றாய் அவளுக்கு எடுத்துக் காண்பிக்க,
“அ அந்த க்ரே கலர் காட்டன் ப்ராக்” என்றாள்.
அவன் எடுத்து வந்த உடையிலேயே அதற்கு மேட்ச்சான உள்ளாடைகளும் இருக்க, ஒவ்வொன்றாய் அவளுக்கு அணிவித்தவன், மீண்டும் அவளுக்குக் கைகொடுக்க, என்ன என்பது போல் பார்த்தாள் அவள்.
“பக்கத்துல ட்ரெசிங் டேபிள் முன்னாடி இருக்க சேர்ல உட்கார்ந்துக்கோடா. தலை சீவி விடுறேன். அப்புறம் நீ மேக்கப் பண்ணிக்கோ” என்று அவன் சொல்ல,
“ந நானே தலை சீவிக்குவேன்!” என்றாள் பெருமிதமாய்.
“ஓ! அப்படியாடா பட்டு?!” என்றவன்,
“சரி நான் சிக்கு மட்டும் எடுத்து விடறேன்! நீ உனக்குப் பிடிச்ச மாதிரி ஹேர்ஸ்டையில் பண்ணிக்கோ.” என்றவன், அவளுக்கு வலிக்காத வண்ணம் சிக்கு எடுத்துவிட, அவள் காதலும், பெருமையும் ஒருசேர கண்ணாடியில் அவனையே பார்த்திருந்தாள்.
இரவல் தேடும் உலகிலே
உனை அணைத்துக் கொள்வேன் உயிரிலே,
இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே,
அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
இறகைப் போல பறக்கிறேன்..
நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறைப் பிறக்கிறேன்…
அவள் கண்ணாடி வழியே தன்னையே பார்த்திருப்பதை உணராது, அவன் கண்ணும் கருத்துமாய் அவள் தலைமுடியைச் சிக்கெடுத்துக் கொண்டிருக்க, சட்டென்று அவன் கைகளைப் பற்றி முன்னே இழுத்தவள், அவன் வயிற்றோடு தலைசாய்த்து அவனை இறுக்கமாய்க் கட்டிக் கொள்ள, அவள் மனம் புரிந்து அவன் அமைதியாய் அவளைத் தட்டிக் கொடுத்தான்.
அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, அதன் ஈரம் உணர்ந்து அவளைத் தன்னிலிருந்துப் பிரித்தவன்,
“இப்போ நீ அடிதான் வாங்கப் போற மானும்மா!” என்றவன் அடிப்பதற்கு பதில் அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவளது நெற்றியில் முத்தம் பதிக்க,
“இங்க!” என்றாள் தன் கண்கள் மேல் விரல் வைத்து காண்பித்து.
“கண்ணு முத்தா வேணுமா என் செல்லத்துக்கு?!” என்று அவன் கேட்க,
“ம்! ம்!” என்று அவள் குழந்தை போல் தலையாட்ட,
அவளது இருவிழிகளின் இமைகளிலும் அன்பாய், அழுத்தமாய் முத்தமிட்டவன்,
“டைம் ஆகிடுச்சுடா! சீக்கிரம் சீக்கிரம் ரெடியாகு. நான் போய் சட்டுன்னு குளிச்சிட்டு வந்துடறேன்” என்றான் நேரமாவதை கவனித்து.
“ம்!” என்றவள், மீண்டும் அவன் கைபிடித்து நிறுத்தி, அவனை கீழே குனியுமாறு பற்றி இழுக்க, அவனும் அவள் ஆசை புரிந்து அவளருகே குனிய, அவனது கன்னத்தில் அழுத்தமாய் தன் காதல் முத்தங்களைப் பதித்தாள்…
*****
மையுவைப் பரிசோதித்து, அவளது அனைத்து ரிபோர்ட்களையும் பார்த்த தசைச்சிதைவு நோய்க்கான சிறப்பு மருத்துவர்,
“ஷீ இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட் டு லீட் எ மேரீட் லைப் மித்ரன்” என, மையுவின் முகம் மலர்ந்த தாமரைப் போல் ஜொலித்தது. அதைப் பார்த்த மருத்துவர் மேலும் சொல்ல நினைத்ததைச் சொல்ல முடியாமல் தயக்கத்துடன் மித்ரனைப் பார்க்க, அவர் ஏதோ சொல்ல நினைக்கிறார் என்பதை அறிந்து கொண்டான்.
லேசான தலையசைவின் மூலம் அவரிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றவன்,
“ஓகே டாக்டர். அப்போ நாங்க கிளம்பறோம்! தாங்க் யூ வெரி மச் பார் யுவர் அப்பாயிண்ட்மெண்ட்! உங்களோட பிசியான ஸ்கெடியூல்ல உடனே எங்களுக்காக நேரம் ஒதுக்கி கொடுத்திருக்கீங்க. தாங்க் யூ ஒன்ஸ் அகெயின்” என்று எழுந்து கொண்டவன், மையுவிடம் திரும்பி,
“போலாமா!” என,
“ம்!” என்று சந்தோஷமாய்த் தலையசைத்தாள்.
அவளை வெளியே அழைத்துச் சென்றவன், வேண்டுமென்று மறந்து வைத்துவிட்டு வந்த ரிப்போர்ட்சை எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்று நொடிகளிலேயே திரும்பி வந்தான்.
காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயம், “நான்தான் நேத்தே சொன்னேன்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு. நீங்கதான் ரொம்ப பயப்படுறீங்க!” என்று மையு சிரித்த முகத்துடன் சொல்ல,
“ம்!” என்றான் புன்னகையுடன்.
“என்னங்க நீங்க?! நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன். உங்க முகத்துல அவ்ளோ சந்தோஷம் இல்லையே?!” என்று மையு சந்தேகமாய் கேட்க,
“அப்படி எல்லாம் இல்லடா. நானும் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன்.” என்று தன் அருகே அமர்ந்திருந்தவளை ஒருகையால் அணைத்தபடி சொன்னவனுக்கு, மருத்துவர் தயக்கத்துடன் ஏதோ சொல்ல வந்ததே நினைவில் வந்தது.
அவன் அவளை அணைவாய்ப் பற்றிக் கொண்டதும், அவள் மெல்ல அவன் தோளில் தலைசாய்த்துக் கொள்ள, அவன் அவள் தலையை மெல்ல வருடி விட்டான் ஒரு கையால் காரை டிரைவ் செய்தபடியே.
அவள் அப்படிக் கேட்டதும் அவனுக்கு ஏதோ போல் ஆகிவிட்டது. அவனும் இதையெல்லாம் யோசித்து சில ஏற்பாடுகளை செய்திருந்தான். ஆனால், அதை அவளுடன் மருத்துவனைக்குச் சென்றுவிட்டு வந்த பிறகுசர்ப்ரைஸாகச் சொல்லலாம் என்று சொல்லாமல் இருந்தான். ஆனால் அவள் அப்படிக் கேட்டதும், தற்சமயத்திற்கு அவளை இங்கு அருகில் உள்ள இடங்களுக்காவது அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தவன்,
“சரி. என் மானும்மாக்கு எங்க போகணும் சொல்லுங்க? இப்போவே இப்படியே கிளம்பலாம்!” என,
“ம்?!” என்று சில நொடிகள் யோசித்தவள்,
“இங்க எங்கயாச்சும் சிவன் கோவில் இருக்கா?!” என்றாள் கண்கள் மிளிர.
“ம்! கொஞ்ச தூரத்துலேயே இருக்கு மானும்மா” என்றவன், சில நிமடங்களில் அந்தப் பழங்காலத்துச் சிவன் கோவிலின் முன் தங்கள் காரை நிறுத்தினான்.
“ஐ! இந்தக் கோவிலா?! இங்க நான் வந்திருக்கேனே, எங்க அம்மாயியோட!” என்று துள்ளலாய்ச் சொன்னவள்,
“என் அம்மாயிதான் எனக்கு கடவுளா இருந்து உங்களை மாதிரி ஒருத்தரை என் வாழ்கைத் துணையா அமைச்சுக் கொடுத்திருக்கு!” என்றாள் உணர்வுகள் ததும்ப.
“ஓ அவ்ளோ பிடிக்குமா அவங்களை!” என்றவன் அவளைக் காரில் இருந்து இறக்கித் தூக்கிக் கொள்ள முயல,
“ஐயோ! என்னங்க பண்றீங்க?! இது பொது இடம்!” என்று தடுத்தாள் அவள்.
“ப்ச் இந்த கோவில்ல தரையெல்லாம் போட்டிருக்க மாட்டாங்க. வீல் சேரை மண்ணில் தள்ள முடியாதுடா!” என்றவன் அவளைத் தூக்கிக் கொள்ள,
“இப்படி பொசுக்கு பொசுக்குன்னு தூக்கிக் கிறீங்களே! நான் வெயிட்டா இல்லை!” என்றாள் மையு அவன் எப்படியும் அன்பாய்தான் ஏதேனும் சொல்லுவான் என்று நினைத்து.
ஆனால் அவனோ, “அய்யோ மானும்மா! சத்தியமா சொல்றேன். செம வெயிட் தெரியுமா நீ! சீக்கிரமே உனக்கு டயட் ஸ்டார்ட் பண்ணனும். அட்லீஸ்ட் ஒரு பதினஞ்சு கிலோவாச்சும் நீ குறைக்கணும்” என்று அவன் சீரியசாகச் சொல்ல, அவள் முகம் இஞ்சி தின்ன குரங்கு போல் ஆகிவிட்டது.
“ம் போங்க! நான் டயட்டெல்லாம் இருக்க மாட்டேன்! நான் பிறந்ததே சாப்பிடத்தான்” என்றவள்,
“ஆசைப்பட்டு கட்டிகிட்டீங்கல்ல தூக்கித் தான் ஆகணும்” என்றாள் கட்டளையாக.
“இன்னும் ஒரு வாரத்துல உனக்கு டயட் ஸ்டார்ட் பண்ணனும்” என,
“நீங்க சும்மாதானே சொல்றீங்க?!” என்று அவள் சந்தேகமாய் கேட்க,
“இல்லை நிஜமா!” என்று தீர்மானமாகச் சொன்னவனை அவள் முறைக்க,
“சன்னதி வந்துடுச்சு! உன் முறைப்பெல்லாம் வீட்டுக்கு போய் வச்சுக்கலாம் மானும்மா” என்றவன், அவளை மெல்ல இறக்கி விட்டு அவளை ஆதரவாகப் பற்றிக் கொண்டு நின்றான்.
விசேஷ நாள் அல்லாததால், அதிக மக்கள் கூட்டம் இல்லாது போக, சற்று தொலைவே நாற்காலி போட்டு அமர்ந்திருந்த அர்ச்சகர், அவர்களைப் பார்த்து எழுந்து வந்து,
“என்னாச்சு அவங்களுக்கு நடக்க முடியாதா?!” என்றார்.
“ம். கூடிய சீக்கிரம் நடந்துடுவாங்க!” என்றவன்,
“அவங்களால ரொம்ப நேரம் நிக்க முடியாது” என்றான் அவர் தீப ஆராதனையை விரைவில் செய்வார் என.
“ஓ! இதோ தீபாராதனை காண்பிச்சுடலாம்” என்றவாறே சென்று அவளது இஷ்ட தெய்வமான ஈஸ்வரனுக்கு தீபாராதனை செய்ய, அவள் நீண்ட நெடு வருடங்களுக்குப் பின் தனது மனதிற்கு நெருங்கிய ஈசனிடம் எதுவுமே வேண்டத் தோன்றாது, இத்தனைக் காலமாய் தன் மனதில் இருந்த பாரமும் வேதனையும் நீங்க ஆனந்தக் கண்ணீருடன் மனமுருக நின்றிருந்தாள்.
அர்ச்சகர் கற்பூரதட்டை எடுத்து வந்ததும், கற்பூர ஆரத்தியைத் தொட்டு மனைவியின் கண்களில் ஒற்றியவன், தானும் ஒற்றிக் கொண்டான். பின் குங்குமத்தையும் திருநீரையும், பெற்று மனைவிக்கு இட்டுவிட்டு தானும் வைத்துக் கொண்டு, மீண்டும் அவளைத் தூக்கிக் கொள்ள முயல,
“இன்னும் கொஞ்ச நேரம் இங்க பக்கத்துல இருந்து என்னோட சிவனைப் பார்க்கணும்னு ஆசையா இருக்குங்க!” என்றாள் மையு.
அவன் அர்ச்சகரைப் பார்க்க, “உட்கார்ந்து பாரும்மா!” என்றவர், தான் அமர்ந்திருந்த நாற்காலியை எடுத்து வந்து அவளருகே போட, அவள் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து தனது ஈசனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஏதேதோ எண்ணங்களைச் சுமந்தபடி.
அவளது அமைதிக்கு எந்த இடையூறும் செய்யாமல், அவனும் அமைதியாய் அமர்ந்திருந்தான், மருத்துவர் ஏதும் தவறாகச் சொல்லிவிடக் கூடாது என்று ஈசனை வேண்டியபடி.
ஆனால் அந்த ஈசன் ஆடப் போகும் விளையாட்டே அவர்கள் இருவர் இடையே இருக்கும் இந்த அதீத அன்பை வைத்துதான் என்று அவனும் அப்போது அறிந்திருக்கவில்லை அவளும் அறிந்திருக்கவில்லை!
சில நிமிடங்களுக்குப் பின், “மானும்மா! போலாமா, நேரமாகுது” என்று அவன் குரல் கொடுக்க,
“ம்ங்க!” என்றவள், மெல்ல அவனைப் பிடித்துக் கொண்டு எழ, அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு நடந்தான்.
அவர்கள் இருவரும் செல்வதைப் பார்த்திருந்த, அர்ச்சகர், “நல்ல தம்பதிங்க! ஆனா இப்படி ஒரு குறையை அந்தப் பொண்ணுக்கு வச்சிட்டியே ஈஸ்வரா! ம்! உன் விளையாட்டு யாருக்குத் தெரியும்?!” என்று எண்ணிக் கொண்டார் மனதுள்…
******
வீட்டிற்கு வந்து மையுவைத் தங்கள் அறையில் விட்டுவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லிப் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தவன், மொட்டை மாடிக்குச் சென்று மருத்துவருக்கு அழைத்தான்.
மருத்துவரிடம் பேசிவிட்டு வைத்தவனுக்கு, “அப்படி மட்டும் நடந்தா என் மையு அதை எப்படி ஏத்துக்குவா?! அவ தைரியமா அதை எதிர்கொள்வாளா? இல்லை ரொம்பவே உடைஞ்சு போயிடுவாளா?” என்ற எண்ணம் எழ,
“இல்லை! இல்லை! அவ ரொம்ப தைரியமான பொண்ணு! அதோட அவளுக்குத்தான் இந்த நோயோடத் தன்மையைப் பத்தியும் தெரியுமே! அதனால புரிஞ்சுக்குவா” என்று எண்ணித் தேற்றிக் கொண்டு கீழே இறங்கியவனுக்குத் தெரியவில்லை, அவள் தைரியமெல்லாம் தாய் என்னும் ஸ்தானத்தை அடையும் போது மொத்தமாய்த் தொலைந்து போகும் என்று.