அந்த வார ஞாயிற்றுக் கிழமையின் செங்கதிர் பத்திரிக்கையில் மணிப்புறாவின் முதல் மடல் வந்திருந்தது. மதுவிலக்கின் அவசியம் பற்றி இருந்தது அந்த கட்டுரை. தமிழ்நாட்டில் இருக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை, மது உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை, எந்தெந்த அரசியல்வாதிகள் சொந்தமாக மது நிறுவனங்கள் வைத்துக்கொண்டே மது ஒழிப்பு பற்றி பேசுகிறார்கள் என்பது போன்றவை துல்லியமான புள்ளி விவரங்களுடன் இருந்தது.
மது விற்பனையால் அரசுக்கு ஏற்படும் நிதி லாபமும், பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்பும் அழகாக எடுத்துரைக்கப் பட்டிருந்தது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் 100 நலத்திட்டங்களை செய்ததற்கு சமம். செய்யுமா அரசு? பல குடும்பங்களின் கண்ணீர் கதைகள் முடிவுக்கு கொண்டுவரப்படுமா? என கேள்வி எழுப்பி முடிக்கப்பட்டிருந்தது.
தினசரியில் வந்த அந்த கட்டுரையை படித்துவிட்டு, இன்பா தர்ஷினியை பார்த்தான். “ஆக மொத்தம் உன்னோட ஃபர்ஸ்ட் ஆர்டிகல் மணிப்புறா பேர்ல எழுதுறதுக்கு நான்தான் இன்ஸ்பிரேஷனா…?” எனக் கேட்டான்.
தர்ஷினி சிரித்துக்கொண்டாள்.
“என்னடி இது? நீ பாட்டுக்கு அரசியல்வாதிங்க பேரையெல்லாம் இப்படி இழுத்து விட்டிருக்க. எதுவும் பிரச்சனையாகப்போகுது” என்றான்.
“நான்தான் எழுதுறேன்னு யாருக்கும் தெரியாது. அப்படியே எதுவும் பிரச்சனை வந்தா நீ வந்து காப்பாத்த மாட்ட?” என கேட்டாள்.
“நான் என்ன சூப்பர் மேனா? பறந்துவந்து காப்பாத்த?”
“நான் இருக்கேன் உனக்கு? என்ன கஷ்டம் வந்தாலும் காப்பாத்துவேன்? அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்னு டயலாக் எல்லாம் விட்ட?”
“தர்ஷினி நான் சீரியஸா பேசுறேன். நீதான் இதையெல்லாம் எழுதினன்னு தெரிஞ்சதுன்னா உனக்கு ஏதாவது ஆபத்து வரலாம். எதுக்கும் நீ கொஞ்சம் பார்த்து எழுதுறது நல்லது. தேவையில்லாத வம்பை விலை கொடுத்து வாங்காத” என்றான்.
“உன் வேலை விஷயத்தில் தலையிடக் கூடாதுன்னு சொல்லுவ. இப்ப நீ என்ன பண்ற?”
“எனக்கு என் பொண்டாட்டியோட சேஃப்டி ரொம்ப முக்கியம்”
“நீ ரொம்ப செல்ஃபிஷா இருக்க”
“இருந்துட்டு போறேன். இதையெல்லாம் எழுதுறதால உனக்கு ஆபத்துன்னா நான் வேண்டாம்ன்னுதான் சொல்வேன்”
“கண்ணு முன்னாடி தப்பு நடக்கும் போது அதை தட்டிக் கேட்காம இருக்கிறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா?”
“இன்னைக்கு சண்டே. இன்னைக்குதான் நீ வீட்ல இருக்க. ஏதாவது ரொமாண்டிக்கா பேசலைன்னாலும் பரவாயில்லை. இப்படிப் பேசாத. நான் எங்கேயாவது ஓடிப் போய்டுவேன்” என்றான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க சுப்ரியாவை அழைத்துக்கொண்டு வந்தாள் சுபாஷினி. இன்னும் இரண்டு நாட்களில் சுப்ரியா சரவணன் திருமணம் நடைபெற இருந்தது. இன்பாவின் வீட்டில் சுப்ரியாவுக்கு தனியறை இல்லாததால், பத்மினியின் வீட்டில் தர்ஷினியின் அறையில் தங்கியிருந்தாள் சுப்ரியா.
சிறிது நேரத்தில் சரவணன் சுப்ரியாவை வெளியில் அழைத்துச் செல்வதற்காக வந்தான். அவனிடத்தில் லிங்கேஷ் இறந்தது பற்றி விசாரித்தாள் தர்ஷினி.
“அவர் ஏற்கனவே விரக்தியில்தான் இருந்தார். டிரக் அடிக்ட் கூட. ட்ரீட்மெண்ட்காக யுஎஸ் போனாலும் அங்கேயும் டிப்ரஸ்டா இருந்தாருன்னுதான் அவருடைய மேனேஜர் சொல்லியிருக்கார். ஸோ… அவர் சூசைட் பண்ணியிருக்க நிறைய சேன்ஸஸ் இருக்கு” என்றான் சரவணன்.
“எனக்கென்னமோ இந்த ஃபேக்டரி விசயத்துல அவர் வீடியோ போட்டதால எதுவும் ஆகியிருக்குமோன்னு டவுட்” என்றாள் தர்ஷினி.
“இன்னும் அந்த கேஸ் பெண்டிங்ல இருக்கு. திருப்பி ஆய்வு நடந்தாதான் தொடர்ந்து அந்த ஃபேக்டரி இயங்க முடியுமா என்னென்னு தீர்ப்பு வரும். இந்த நேரத்துல இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டாங்க. அவர் சூசைட்தான் பண்ணிக்கிட்டார். சுப்ரியா கூட அவர் தூக்கில் தொங்கிய மாதிரிதான பார்த்திருக்கா. உன் டவுட்டை எல்லாம் மூட்டை கட்டி வை. அவர் வெளியில கூப்பிட்டு போக வந்திருக்கார்” என தர்ஷினியிடம் கூறிய இன்பா,
“சரவணன்… நீங்க உடனே சுப்ரியாவை அழைச்சிக்கிட்டு இங்கிருந்து போய்டுங்க. இல்லனா சாமானியமா விடமாட்டா” என சரவணனிடம் கூறினான்.
“சுப்ரியாவுக்கு இதை மாதிரி நடக்கறத பத்தி யார்கிட்டயாவது கன்சல்ட் பண்ணலாம்னு பேசியிருந்தோமே… என்னாச்சு?” எனக் கேட்டாள் தர்ஷினி.
“விசாரிச்சு வச்சிருக்கேன். ஃபெர்னாண்டஸ் அப்படின்னு ஒரு சைக்யாட்ரிஸ்ட்கிட்ட அழைச்சிட்டு போலாம்னு இருக்கேன். அவர் இப்போ அவுட் ஆஃப் ஸ்டேசன். வந்ததும் போகணும்” என்றான் சரவணன்.
இன்னும் தர்ஷினி ஏதேதோ கேட்க சரவணன் பதில் கூறிக் கொண்டே இருந்தான். மிகவும் இயல்பாக அவளுடன் பேசிக் கொண்டிருந்தான். பேச்சுவாக்கில் மணிப்புறா பெயரில் எழுதுவது இவள்தான் என கூறினாள்.
பாராட்டிய சரவணன், “ஜாக்கிரதையா இரு” என எச்சரிக்கவும் செய்தான்.
“அம்மா தாயே… அவங்களை ஆள விடுமா” என இன்பா கூறிய பிறகுதான், தர்ஷினி அவர்களை போக விட்டாள்.
“ஏண்டி கொஞ்சமாவது அறிவு இருக்கா? எவ்வளவு நேரம் பிளேடு போடுவ? கட்டுன பாவத்துக்கு நான் சகிச்சுக்குவேன். அவர் ரொம்ப பாவம்” எனக்கூறி தர்ஷினியிடமிருந்து சிலபல அடிகளை பரிசாகப் பெற்றான்.
அடிக்கும் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டவன், “பாரு அவரே உன்னை ஜாக்கிரதையா இருக்க சொல்றாரு. இதெல்லாம் தேவையா?”
“நான் ஏதாவது சொன்னா இப்படி பேசாத அப்படி பேசாதன்னு சொல்லுவ. எனக்கு சரின்னு படுறதை நான் செய்றேன். எனக்காக இல்லாட்டாலும் உனக்காக ஜாக்கிரதையா… ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கேன் போதுமா?” எனக் கேட்டாள். அதற்கு மேல் இன்பாவாலும் எதுவும் வற்புறுத்தி கூற முடியவில்லை.
திருமணம் எளிமையாக நடக்க இருந்தாலும், சுப்ரியாவுக்காக பட்டுப் புடவை, தாலி சரடு, மாங்கல்யம் எல்லாவற்றையும் சுப்ரியாவுக்கு பிடித்தது போல அவளையே தேர்ந்தெடுக்கச் சொல்லி வாங்கினான் சரவணன். அவள் தேர்ந்தெடுக்கும் வரை அவசரப் படுத்தாமல் பொறுமையாக இருந்தான். ஓட்டலில் சாப்பிடும் பொழுதும் என்ன பிடிக்கும் என்ன வேண்டும் என அவளிடம் கேட்டு விட்டே ஆர்டர் செய்தான்.
இன்னும் அவள் ஷாப்பிங் செய்ய வேண்டும் எனக் கூற, பொறுமையாக அவள் சொன்ன இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்றான். சுப்ரியாவிற்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. முரடன் என நினைத்திருந்தவன் இவ்வளவு பொறுமையாக அவளுடன் ஷாப்பிங் செய்தது அவளால் நம்பவே முடியவில்லை. அவனிடம் கேட்கவும் செய்தாள்.
“நான் முரட்டுப் பயதான் சுப்ரியா. கோவம் வந்தாலும் முரடன்தான். காதல் வந்தாலும் முரடன்தான். கல்யாணம் ஆனதுக்கப்புறம் நீ தெரிஞ்சப்ப” என்றான்.
“நீங்க பேசினதுல வேற அர்த்தம் இருக்கா?” என கேட்டாள்.
“நீ என்ன நினைக்கிற?”
“வேற ஏதோ பொடி வச்சி பேசுற மாதிரி இருக்கு. ஆனா என்னன்னு தெரியலை”
“இன்னும் ரெண்டு நாள்தானே..? தெரிஞ்சுக்குவ” என்றான். சுப்ரியா அழகாக சிரித்தாள். மாலையில் அவனே சுப்ரியாவை தர்ஷினியின் வீட்டில் விட்டு விட்டு சென்றான். சுப்ரியா மனதளவில் சரவணனிடம் நெருங்கி இருந்தாள்.
சரவண பாண்டியன் சுப்ரியா திருமணம் கோயிலில் எளிமையாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு அவனது வீட்டிற்குதான் செல்ல வேண்டும் எனக் கூறி அங்கேயே அழைத்துச் சென்று விட்டான் சரவண பாண்டியன்.
சுப்ரியாவை விட்டு வருவதற்காக தர்ஷினி, இன்பா, நசீர் மூவரும் வந்திருந்தனர். தர்ஷினி அவர்களுக்கு ஆரத்தி எடுதத்தாள்.
“அண்ணா உங்க தங்கச்சி ஆரத்தி எடுத்து இருக்கேன்… ஏதாவது பார்த்து செய்யுங்க” என்றாள்.
சரவணன் 2000 ரூபாய் நோட்டை எடுத்து வைத்தான்.
“ஐயய்ய… இவ நீங்க ஏதாவது திங்கிற ஐட்டம் தருவீங்கன்னு எதிர்பார்த்திருந்திருப்பா… இது தெரியாம பெரிய நோட்டை எடுத்து நீட்டிட்டீங்களே…” என்றான் நசீர். பட்டென அவன் தோளில் அடி வைத்தாள் தர்ஷினி.
“அண்ணா… உங்க பொண்டாட்டிகிட்ட சொல்லி வைங்க… ஓவரா அடிக்கிறா” என இன்பாவிடம் கூறினான் நசீர்.
“எனக்கே இப்படிதாண்டா அடி விழுது. நான் யார்கிட்ட போய் சொல்றது?” என்றான் இன்பா.
“இவங்க கம்ப்ளைன்ட் கொடுத்தா வாங்கிப்பீங்களாண்ணா…? அப்புறம் என் சுப்பு உங்களை பெண்டு நிமிர்ந்திடுவா” என சரவணனிடம் கூறியவள் “என்னடி சுப்பு?” என சுப்ரியாவிடமும் கேட்டாள்.
“இவளோட சுப்ரியாவ சேர விட்டீங்க… உண்மையாவே உங்க பெண்டு நிமிர்ந்திடம்” என நசீர் சொல்ல, “உனக்கு வாங்குனது பத்தலையா?” என தர்ஷினி அவனை அடிக்க வர, நசீர் ஓட, அவனை துரத்தி சென்றாள் தர்ஷினி. மற்ற மூவரும் சிரித்தார்கள்.
மணமக்களை விட்டுவிட்டு மற்றவர்கள் கிளம்பிவிட்டனர். சுப்ரியாவிடம் மனம் விட்டுப் பேசினான் சரவணன். அவளையும் பேசச் செய்தான். சுப்ரியாவுக்கு அவனுடன் பலகாலம் பழகியது போல இருந்தது. இனி சரவணன் அவளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று அவளுக்கு நம்பிக்கை இருந்தது.
“என் அப்பா அம்மா உயிரோட இருந்திருந்தப்பவே நம்ம கல்யாணம் நடந்திருந்தா அவங்க நிம்மதியா இறந்து போயிருப்பாங்க. உயிர் போற கடைசி நேரத்துல என்னைதானே நினைச்சிருந்திருப்பாங்க” என்றாள் சுப்ரியா.
“இப்பவும் ஒண்ணும் இல்லை சுப்ரியா.. மேலே இருந்து பார்த்துக்கிட்டுதான் இருப்பாங்க” என்றான்.
“ உங்களை முன்னாடியே நான் பார்த்திருக்கலாம்” என சுப்ரியா கூற, அவள் கூறிய விதமும், அவளது வெட்கமும் சரவணனை பித்துக் கொள்ள செய்தது. சுப்ரியாவின் கணவனாக அவன் உரிமையோடு அவளை அணுக, “இதெல்லாம் நைட்ல தான் நடக்கணும்” என்றாள் சுப்ரியா.
“நைட்லயும் நடத்தலாம்” என்றவன் அவளை அள்ளிக் கொண்டான். இருவரும் வாழ்க்கையின் அடுத்த படியில் அடியெடுத்து வைத்தனர்.
தர்ஷினிதான் மணிப்புறா என்று தெரியாமல், கடந்த ஞாயிற்றுக்கிழமையில் வந்த அவளது கட்டுரைக்கு அலுவலகத்திற்கு சில மிரட்டல்கள் வந்தன. வெங்கட்ராகவன் தர்ஷினியை எதற்கும் ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்தார்.
சரவணன் சுப்ரியாவை மனநல மருத்துவர் ஃபெர்னாண்டஸிடம் அழைத்து சென்றான். சுப்ரியா கூறியவற்றை கூர்மையாக கேட்டுக்கொண்டார்.
“இ எஸ் பி பத்தி இன்னும் ஆராய்ச்சிகள் போய்க்கிட்டுதான் இருக்கு. இப்படி ஒன்னு இருக்குன்னு இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க படலை. அதேசமயம் இல்லைன்னும் உறுதியா கூறமுடியலை. இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு சொல்லிட்டு என்கிட்ட வந்த முதல் கேஸ் நீங்கதான். ரெண்டு முறை நீங்க பார்த்தது மாதிரியே இறப்புகள் நடந்திருக்கு. இது உங்க மனசை எந்த அளவு பாதிகச்சிருக்கும்ன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. இதுக்கு ஸ்பெஷலா ட்ரீட்மெண்ட் எதுவும் இல்லை” என்றார் மருத்துவர்.
“எனக்கு இதைப்போல எதையும் பார்க்க வேண்டாம். ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கு. எல்லாரை மாதிரியும் நார்மலா நான் இருக்கணும். அதுக்கு என்ன பண்ணனும்?” எனக் கேட்டாள் சுப்ரியா.
“அதான் சொன்னேனே.. இதுக்கு ட்ரீட்மெண்ட் எல்லாம் ஒன்னும் இல்லை. உங்க மனச அமைதியா வச்சுக்கங்க. இதைப்போல திரும்பவும் வந்தா நல்ல விஷயமா இருந்தா சந்தோஷப்படுங்க. கெட்ட விஷயமா இருந்தா அதை தடுக்க முயற்சி பண்ணுங்க. என்னோட ஃப்ரெண்ட் ஸ்டீவ் லண்டன்ல இது சம்பந்தமா நிறைய ரிஸர்ச் பண்றார். எப்பவாவது இந்தியா வருவார். அப்போ நான் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன். அவர்கிட்ட ஒரு தடவை கன்சல்ட் பண்ணிக்கலாம்” என்று கூறினார்.
பின் சுப்ரியாவிற்கு கவுன்சிலிங் கொடுத்தார். பின்னர் இருவரும் புறப்பட்டு சென்றனர்.
லிங்கேஷின் மரணம் தற்கொலைதான் என போலீசார் அறிக்கை விடுத்தனர். தர்ஷினியால் இதை ஏற்கவே முடியவில்லை. அவள் கண்டிப்பாக இது தற்கொலையாக இருக்காது என நம்பினாள்.
அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையில் லிங்கேஷ் மரணம் குறித்து எழுதியிருந்தாள். குடும்பத்தை இழந்தவர் தற்கொலை செய்து கொள்ள ஏழு வருடங்கள் காத்திருக்க தேவையில்லை. சமீபத்தில் மக்களின் பொது நலன் கருதி அவர் வெளியிட்ட காணொளியே அவரது உயிர் பறிபோக காரணமாக இருந்திருக்கலாம் எனவும், விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை எனவும் எழுதியிருந்தாள். இதைத்தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் அவரது மரணம் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என பேட்டி அளித்தனர். செய்தி சேனல்களில் விவாதங்கள் நடைபெற்றன. இறுதியாக லிங்கேஷின் கேஸ் சிஐடி வசம் மாற்றப்பட்டது. விசாரணை நடந்து கொண்டிருந்தது.
அதற்கடுத்த வாரம் மணல் கொள்ளை பற்றியும் அதில் சம்பந்தப்பட்ட பெரும்புள்ளிகள் பற்றியும் எழுதினாள். அதற்கடுத்த வாரம் சிலைக்கடத்தல் பற்றி எழுதினாள். இவ்வாறாக வாராவாரம் ஏதாவது ஒரு விஷயத்தை அலசி ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டாள்.
அஜந்தா தொழிற்சாலை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டபோது தொழிற்சாலைக்கு ஆதரவாகவே அறிக்கை இருந்ததால், தீர்ப்பு தொழிற்சாலைக்கு சாதகமாகவே அமைந்தது.
அதையும் தர்ஷினி விட்டுவைக்கவில்லை. அந்த அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை என எழுதினாள்.
மணிப்புறா என்ற பெயரில் தர்ஷினி எழுத ஆரம்பித்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. அதற்குள் மணிப்புறாவுக்கு என ரசிகர்களும் அதிகரித்தனர்.
சில யூடியூப் சேனல்கள் மணிப்புறாவின் கட்டுரையை அக்குவேறு ஆணிவேராக விவரித்து வீடியோக்கள் வெளியிட்டன. ரசிகர்கள் அதிகரித்தது போலவே எதிரிகளும் அதிகரித்திருந்தனர்.
மணிஷ் பாண்டே தொழிற்சாலையில் அவனுடைய அறையில் அமர்ந்திருந்தான். அவனுடைய கைப்பேசிக்கு அழைப்பு வர ஏற்றான்.
“உன்னால எவ்வளவு பிரச்சனை பாரு. வேஸ்ட் டிஸ்போசல் ஒழுங்கா பண்ணுயிருந்தீனா இவ்ளோ பிரச்சனை வந்தே இருக்காது. நல்லா குடிச்சிட்டு குப்புற விழுந்து தூங்கதான் நீ லாயக்கு” என்றது எதிர்முனையில் இருந்து வந்த ஆண் குரல்.
“எல்லாம்தான் இப்ப சரி ஆகிடுச்சே”
“இதை சரி பண்ண எவ்வளவு பணம் செலவாகி இருக்கு. பணம் செலவானது விட மாட்டியிருந்தோம்னா அவ்வளவுதான். திருப்பி பத்திரிகையில நியூஸ் வருது. என்னன்னு பாரு. என்ன வேணா பண்ணுங்க. எந்த விஷயமும் வெளியில் வரக்கூடாது. அவ்வளவுதான். தேவைப்பட்டா பாண்டுரங்கத்தை கூப்பிட்டுக்க”
“இல்ல பாண்டுரங்கம் வேண்டாம். கொஞ்ச நாளைக்கு அவனை எதிலேயும் ஈடுபடுத்திக்க வேண்டாம். லிங்கேஷ் கேஸ் இப்போ சிஐடி விசாரிக்கிறாங்க. ரிஸ்க் எடுக்க வேண்டாம்” என்றான் மனிஷ் பாண்டே.
“சிபிஐ விசாரிச்சா கூட லிங்கேஷ் விஷயத்தை கண்டுபிடிக்க முடியாது. பாண்டு அவ்வளவு சுத்தமா செய்வான்” என எதிர்முனையில் இருந்து பேசிய குரல் சிரித்தது.
“யானைக்கும் அடி சறுக்கும். நாம முன்னெச்சரிக்கையா இருக்கணும்” என மனிஷ் பாண்டே கூற, “ஆமாம் இப்போதைக்கு கொஞ்சம் அமைதியாவே இருப்போம்” என்றது அந்த குரல்.
வழக்கு சம்பந்தமாக ஆதாரங்கள் திரட்ட அலைந்து கொண்டிருந்தான் இன்பா. தர்ஷினியிடமிருந்து அழைப்பு வந்தது.
“இன்பா வெளியில போகணும் வர முடியுமா?” எனக் கேட்டாள்.
“இல்லடி கொஞ்சம் பிஸி. இன்னொரு நாள் போகலாம்” என்றான்.
“கல்யாணம் பண்ணி மூணு மாசம் கூட ஆகலை. பொண்டாட்டி வெளியில கூப்பிட்டா வர மாட்டேங்குற..?”
“ஒரு கேஸ் விஷயமா பிஸியா இருக்கேன் டி. இப்படி எல்லாம் செண்டிமெண்டா பேசாத. புரிஞ்சுக்க” என்றான்.
“புரிஞ்சிக்கிட்டேன் டா. ஆரம்பத்தில் உன்ன நெனச்சு உருகுறேன். நீ இல்லாமல் நெருப்பா சுடுது. என் தூக்கத்தை திருடிட்ட அப்படின்னு எல்லாம் பீலா விடுவீங்க. போகப்போக பிஸியா இருக்கேன்மா புரிஞ்சுக்க…. அப்படின்னு மறைமுகமாக ஃபோனை வைக்க சொல்லுவீங்க” என்றாள்.
“சத்தியமா பிஸியா இருக்கேன்டி. வைடி”
“நல்லா யோசிச்சுக்கோ இதுக்காக நீ பின்னாடி ஃபீல் பண்ணுவ”
“சரி வை” என வைத்து விட்டான்.
‘இது என்ன கொடுமையா இருக்கு. அவன் பின்னாடி சுத்துறப்ப எல்லாம் கண்டுக்காம அலைய விட்டேன். இப்ப அவன் என்னை சுத்த விடுறான். இம்சை மன்னன்’ என சிரித்துக்கொண்டே மனதிற்குள் புலம்பினாள் தர்ஷினி.