மணிப்புறாவும் மாடப்புறாவும்-10

அத்தியாயம் 10

காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகிவிட்டான் இன்பா. ரம்யா, ரவி, சுபாஷினி ஆகியோருக்கு அன்று மாதிரி தேர்வு நடைபெற இருப்பதால், பத்மினி அவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு முருகேசனுடன் வருவதாக கூறி விட்டார். தர்ஷினியும் மருத்துவமனை செல்ல தயாராகி இருந்தாள். இருவரும் தேநீர் மட்டும் அருந்தி விட்டு, வெளியே வந்தனர். இன்பா அவனது பைக்கை எடுத்து தர்ஷினிக்காக காத்துக் கொண்டிருக்க, அவளோ கேட்டை திறந்து கொண்டு வெளியே சென்றாள்.

“எங்கடி போற?” எனக் கேட்டார் பத்மினி.

“என் வண்டி அந்த வீட்ல கிடக்கு. அதை எடுக்கப் போறேன்” என்றாள்.

“நீயும் ஹாஸ்பிட்டல்தானே போறே? இன்பா கூடவே சேர்ந்து போ. ஏன் தனியா போகணும்?” எனக் கேட்டார் பத்மினி.

“நான் தனியாவே போய்க்குறேன்” என தர்ஷினி கூற, “என் கோவத்தை கிளப்பாம ஒழுங்கா இன்பா கூட வண்டியில கிளம்பு” என குரலில் கடினத்தன்மையை வரவழைத்து கூறினார் பத்மினி.

வேண்டா வெறுப்பாக அவன் பைக்கில் ஏறிக்கொண்டாள் தர்ஷினி. அவள் தனியாக செல்கிறேன் என கூறியதும் ஏகத்துக்கும் கோவம் அடைந்த இன்பா, செல்லும் வழியில் எதுவும் பேசாமல் அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். வழியில் இருந்த கோயிலில் நிறுத்தச் சொன்னாள். இன்பா வண்டியை நிறுத்த, கோயிலுக்கு சென்று கண் மூடி பிரார்த்தனை செய்தாள். ஒரு காகிதத்தில் திருநீறு குங்குமம் எடுத்து மடித்து பத்திரமாக கைப்பையில் வைத்துக் கொண்டாள்.

பின்னர் இருவரும் வண்டியில் புறப்பட்டனர். இவர்கள் சென்றடையும் பொழுது, லட்சுமி குளித்து அறுவை சிகிச்சைக்கு தயாராக அமர்ந்திருந்தார். முகத்தில் பயம் அப்பிக் கிடந்தது.

தர்ஷினி லட்சுமிக்கு திருநீறு குங்குமம் வைத்து விட்டாள்.

“எதுக்கு இப்போ இவ்வளவு பயம்? இதெல்லாம் இப்போ சாதாரண ஆபரேஷன். பயப்பட ஒண்ணும் இல்லை” என்றாள்.

“நீ வந்துட்டீல… இனிமே பயம் இல்லை” எனக் கூறி சிரித்தார் லட்சுமி. ரஹீம் பாய் நூர்ஜஹானையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.

8 மணிக்கு அறுவை சிகிச்சைக்காக லட்சுமி அழைத்துச் செல்லப்பட, செல்வதற்கு முன் தர்ஷினியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “நீ எல்லாத்தையும் பார்த்துப்பேன்கிற நம்பிக்கையில்தான் நான் தைரியமா போறேன்” எனக் கூறி கண் கலங்கினார்.

“ஆபரேஷன் முடிச்சுட்டு வாங்க. உங்களையும் நான் நல்லா பார்த்துக்கிறேன்” என கூற, சிரித்துவிட்டு லட்சுமி சென்றுவிட்டார்.

சாரங்கபாணிதான் மிகவும் கலங்கிப் போய் விட்டார்.

“சின்ன ஊசின்னா கூட பயப்படுவா…” எனக்கூற ரஹீம் பாய் அவரை ஆறுதல் படுத்தினார்.

இன்பாவுக்கு அறுவைசிகிச்சையை நினைத்தெல்லாம் பயம் இல்லை. ஆனால் தன் அன்னையின் கலங்கிய முகம் அவனுக்கு என்னவோ போல இருந்தது. சிறிது நேரத்தில் பத்மினியும் முருகேசனும் கூட வந்து விட்டனர்.

அறுவை சிகிச்சை கூடத்திற்கு வெளியில் எல்லோரும் காத்திருந்தனர். முகத்தில் உணர்வுகளை காட்டாமல் ஒரு ஓரமாய் அமர்ந்து இருந்தான் இன்பா. யாரிடமும் எதுவும் பேசவில்லை. பெரியவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்ள யாரும் இன்பாவை கவனிக்கவும் இல்லை. ஆனால் தர்ஷினியின் பார்வையோ அவனிடம்தான் இருந்தது.

அவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். நாற்காலியின் கைப்பிடியில் இருந்த அவனது கையை தன் கை கொண்டு ஆதரவாகப் பற்றிக்கொண்டாள். தர்ஷினிதான் என்பது அறிந்தும் அவள் முகம் பார்க்காமல் தவிர்த்து வேறு பக்கம் திரும்பி இருந்தான்.

“என்னை பாருடா… திரும்பு… ம்ப்ச் சொல்றேன்ல திரும்பு” தர்ஷினி கூறவும் அவள் முகத்தை பார்த்தான். இன்பாவின் கண்கள் கலங்கிப் போய் எப்பொழுது வேண்டுமென்றாலும் கண்ணீர் வர காத்திருந்தது. சிறுவயதிலிருந்து அவனை பார்க்கிறாள். இன்பாவை இப்படி பார்ப்பது இதுதான் முதல் முறை.

“என்னடா இது அழறியா…?” என தர்ஷினி கேட்க, எழுந்து சென்று ஜன்னல் அருகில் நின்று கொண்டான். தன் கைப்பையில் இருந்து கைக்குட்டையை எடுத்து அவனிடம் நீட்டினாள். மறுக்காமல் வாங்கிக் கொண்டவன், கண்களைத் துடைத்து, மூக்கை உறிந்து, ஆழ்ந்த மூச்சுகள் விட்டு தன்னை சமன்படுத்தி கொண்டான். தர்ஷினி ஆதரவாய் அவன் கையை பற்றிக்கொண்டாள்.

“இதெல்லாம் பெரிய ஆபரேஷன் இல்லைன்னு தெரியுது. அம்மா கண்கலங்கிட்டே போனுச்சா… அதான்… ஒரு மாதிரி ஆயிட்டு” என்றான்.

“இன்னும் கொஞ்ச நேரம் வெளியில வந்துடுவாங்க. நான் போய் டீ வாங்கிட்டு வரட்டுமா?” என கேட்டாள்.

“வேண்டாம்… எனக்கு எதுவும் சாப்பிடுற மூட் இல்லை. நீ எங்கேயும் போகாதே… என் கூடவே இருடி… ப்ளீஸ்…” என்றான்.

“எதுக்குடா பிளீஸ் எல்லாம்? நான் இங்கேதானே இருக்கேன். நீ வந்து உட்காரு… வா…” என அழைத்து வந்து உட்கார வைத்தாள். அவளும் அவனுடனே அமர்ந்து கொண்டாள்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து லட்சுமி அறைக்கு மாற்றப்பட்டார். மயக்கத்தில்தான் இருந்தார். மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, “மயக்கம் தெளிந்ததும் பேசுவாங்க. இப்ப நல்லா இருக்காங்க” எனக் கூறி சென்றுவிட்டார்.

சலைன் சென்று கொண்டிருக்க தர்ஷினி லட்சுமியின் அருகில் ஒரு நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டாள். இன்பாவும் அறையிலேயே இருக்க மற்றவர்கள் சென்று சாப்பிட்டு வந்தனர். ரஹீம் பாய் அவர்களையும் சென்று சாப்பிட்டு வர சொன்னார்.

இருவரும் சாப்பிட கேன்டீன் சென்றனர். “ என்னடா உன் அம்மா நல்லபடியா வந்துட்டாங்க. இப்ப நீ ஓகே வா..?” என கேட்டாள்.

“ம்…ம்… நான் அழுதேன்னு யார்கிட்டயும் சொல்லாத டி” என்றான்.

“வீட்டுக்குப் போனதும், முதல் வேலையா ‘தன் தாய்க்காக கண்ணீர் சிந்திய தனயன் இன்பா’ அப்படின்னு போட்டு பெரிய பேனர் வைக்கப் போறேன்” என்றாள் தர்ஷினி.

“நீ செஞ்சாலும் செய்வ” என்றான்.

“ஏய் நான் செய்வேன்னுதாண்டா சொல்றேன்”

“அப்படியெல்லாம் எதுவும் செஞ்சிடாதடி. இப்ப நீ என்ன கேட்டாலும் வாங்கி தந்திடுறேன்” என்றான். தர்ஷினி சிரித்துக் கொண்டாள்.

இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“உன்னை என்னமோ நினைச்சேன் டா. கல்லுக்குள் ஈரம் அப்படிங்கற மாதிரி உனக்குள்ளேயே கொஞ்சமே கொஞ்சம் ஈரம் இருக்கு. இதே மாதிரி அந்த கேஸ்ல இருந்தும்….” என தர்ஷினி கூறி முடிக்கவில்லை.

“நீ எத்தனை விதமா கேட்டாலும், நான் பின் வாங்குறதா இல்லை. இதைப்பத்தி பேசி உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாத” என்றான்.

அவனை முறைத்துக் கொண்டே வேகவேகமாய் சாப்பிட்டு முடித்தாள் தர்ஷினி. அவனுக்காக காத்திராமல் எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவசரமாய் இவனும் சாப்பிட்டு முடித்து அவளின் பின்னே ஓடினான்.

“என்னடி திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறிட்டா…? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த? சொல்ல சொல்ல போய்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்?” என கேட்டுக்கொண்டே அவள் கையைப் பிடிக்க, அவன் கையை உதறியவள் இன்னும் வேகமாக நடந்து சென்றாள்.

இன்பாவுக்கு சலிப்பாக வந்தது. சில நிமிடங்கள் அங்கேயே நின்றான். பின்னர் பெருமூச்சு விட்டுக்கொண்டு அவனும் அறைக்கு சென்றான்.

அறையில் தர்ஷினியும் இன்பாவும் இருக்க மற்றவர்கள் வெளியில் அமர்ந்திருந்தனர். லட்சுமி மெல்ல கண் திறந்து பார்த்தார்.

“எப்படி இருக்கு அத்தை?” என கேட்டாள் தர்ஷினி.

“நல்லா இருக்கேன். ரம்யாவும் ரவியும் ஸ்கூல் போய்ட்டாங்களா?” என கேட்டார்.

இன்பாவும் அருகில் வந்து நின்றான். அவனைப் பார்த்து “அப்பா எங்கடா?” எனக் கேட்டார்.

“வெளியில இருக்கார்” என்றான்.

“ஃபர்ஸ்ட் மாமாவைதானே தேடுனீங்க. கேட்க வெட்கப்பட்டுகிட்டுதானே ரம்யாவையும் ரவியையும் கேட்டீங்க?” என கிண்டல் செய்தாள் தர்ஷினி.

“போடி போக்கிரி. உனக்கு இப்பதான கல்யாணம் ஆகியிருக்கு. இனிமே நீயும் அப்படித்தான் எல்லாத்துக்கும் உன் புருஷனைதான் தேடுவ” என்றார்.

“என் புருஷனை உங்க புருஷனோட எல்லாம் கம்பேர் பண்ணாதீங்க. மாமா நீங்க காலால் இட்ட கட்டளையை தலையால் செய்றவர். எனக்கு அந்த கொடுப்பினை எல்லாம் இல்லை” என இன்பாவை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே கூறினாள்.

‘இன்னும் வாழவே ஆரம்பிக்கல அதுக்குள்ள எவ்ளோ சலிப்பு இவளுக்கு?’ என மனதிற்குள் நினைத்தவன், “என் அம்மா என் அப்பாவோட தொழில் விஷயத்தில் தலையிட்டதே கிடையாது” என கூறிக்கொண்டே தன் தந்தையை அழைக்க சென்றான்.

“அவன்கிட்ட கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போடா தர்ஷினி” என்றார் லட்சுமி.

“உங்க பிள்ளைய கல்யாணம் பண்ணி என்கிட்ட கொடுத்திட்டிங்கல்ல. அவனை என்ன பண்ணனும், எப்படி பார்த்துத்துக்கணும்னு எனக்கு தெரியும். யாரும் தலையிடக்கூடாது” என்றாள் தர்ஷினி.

அவளின் இந்த பதிலில் என்ன உணர்ந்தாரோ லட்சுமிக்கு மனநிறைவாக இருந்தது.

சாரங்கபாணி உள்ளே வர தர்ஷினி எழுந்து கொண்டாள்.

“வலிக்குதா?” என கேட்டார் சாரங்கபாணி.

“ஒன்னும் தெரியலைங்க” என லட்சுமி கூறினார். அதற்கு மேல் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அருகருகில் இருவரும் இருப்பதே போதுமானதாக இருந்தது அவர்களுக்கு. பின்னர் எல்லோரும் வந்து பார்க்க, சிறிது நேரத்தில் உறங்கி விட்டார் லட்சுமி.

நூர்ஜஹானும், ரஹீம் பாயும் புறப்பட்டுவிட்டனர். மாலை நேரம் நெருங்கும் சமயம் பத்மினியும் பிள்ளைகள் வந்துவிடுவார்கள் என்று முருகேசனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார். பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்று லட்சுமி கூற, காலையில் வரட்டும் என கூறிவிட்டான் இன்பா.

இரவானதும் யார் தங்குவது என்று மீண்டும் பேச்சு எழுந்தது. ஒருவாறாக பேசி முடிவெடுத்து தர்ஷினியும் இன்பாவும் தங்கிக் கொண்டனர்.

தனது தந்தையையும் அத்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டான்.

அந்த அறையில் நோயாளி படுக்கை தவிர, ஒரு ஒற்றைப் படுக்கை மட்டும் இருந்தது. தர்ஷினி லட்சுமியின் அருகில் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். லட்சுமி உறங்கிக் கொண்டிருந்தார்.

“எவ்வளவு நேரம் உட்கார்ந்தே இருப்படி? கொஞ்ச நேரம் போய் படு. நான் உட்காந்துக்குறேன்” என இன்பா கூற, “ஒன்னும் தேவையில்லை” எனக் கூறி முகத்தை திருப்பிக் கொண்டாள் தர்ஷினி.

“இங்க பாருடி… என் பொறுமை போச்சுன்னா உன் பல்லை தட்டி கையில் கொடுத்துடுவேன்” என்றான் இன்பா.

“எங்க முடிஞ்சா தட்டுடா… ஈ….” என பல்லைக் காட்டினாள் தர்ஷினி.

“விட்டேனா தெரியும்” என விளையாட்டாய் இன்பா கை ஓங்க, அந்த நேரம் பார்த்து கண் திறந்தார் லட்சுமி.

“அடப்பாவி… கல்யாணம் பண்ணின அடுத்தநாளே கை நீட்டுறியே… நீயெல்லாம் மனுஷனா?” எனக் கேட்டார்.

“அட நீ வேறம்மா… கண்ணை மூடி தூங்கு” என்றான்.

“எதுக்குடா தர்ஷினிகிட்ட வம்பு பண்ணவா?”

“அவகிட்ட நான் வம்பு பண்ணலம்மா. உட்கார்ந்தே இருக்காளேன்னு கொஞ்சநேரம் படுத்துக்க சொன்னேன். வேணும்னா அவகிட்டயே கேளு” என்றான். லட்சுமி தர்ஷினியின் முகத்தை பார்க்க “ஆமாம் அத்தை நீங்க தூங்குங்க” என்றாள்.

மருந்துகளின் வீரியத்தில் லட்சுமி உறங்கிவிட்டார். தர்ஷினி நாற்காலியிலிருந்து எழுவதாக தெரியவில்லை. இன்பா படுத்துக்கொண்டான். இடையிடையே லட்சுமிக்கு சலைன் முடிந்துவிட செவிலியரை அழைத்துவந்து மாற்றச் சொல்லி உறங்காமலே இருந்தாள் தர்ஷினி.

விடியற்காலை நான்கு மணிக்கு இன்பாவுக்கு விழிப்பு தட்ட, தர்ஷினியை பார்த்தான். நாற்காலியில் அமர்ந்து லட்சுமியின் படுக்கையில் தலைசாய்த்து உறங்கிப் போயிருந்தாள் தர்ஷினி. மெதுவாக அவளை தூக்கி வந்து படுக்கையில் படுக்க வைத்தவன் அன்னையின் அருகில் போய் அமர்ந்து கொண்டான். சலைன் மாற்ற செவிலியர் உள்ளே வந்தார்.

மாற்றிவிட்டு உறங்கும் தர்ஷினியை பார்த்துவிட்டு, “தூங்கிட்டாங்களா…? அம்மா மேல ரொம்ப பாசம் அவங்களுக்கு” என்றாள்.

“சிஸ்டர் இவங்க என்னோட அம்மா, அவளுக்கு மாமியார்” என்றான் இன்பா.

“உண்மையாவா…? நான் இவங்களோட பொண்ணுன்னு நினைச்சுக்கிட்டேன்” எனக் கூறி வெளியே சென்றார்.

இன்பா தர்ஷினியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான். தர்ஷினி உறக்கத்தில் புரள, ஒற்றைப் படுக்கை என்பதால் கீழே விழப் பார்த்தாள். நொடியில் சென்று விழாமல் அவளை பிடித்து மீண்டும் படுக்கையில் விட்டான் இன்பா. தர்ஷினி விழித்துக்கொண்டாள்.

“இப்படித்தான் தூக்கத்துல உருளுவியா?” எனக் கேட்டான்.

“நான் எப்படி இங்கு வந்தேன்?” எனக் கேட்டாள் தர்ஷினி.

“ம்… பறந்து வந்த. தர்பூசணி… என்ன கணம் கணக்குறடி…? பார்க்கத்தான் மெல்லிசா இருக்க. சும்மாவா… எவ்வளவு தீனி திங்கிற… எல்லாத்தையும் எலும்புல சொருகி வச்சிருக்கியாடி?” எனக் கேட்டான்.

அவன் தோளில் பட்டென்று ஒரு அடி வைத்தவள் எழப் போனாள். அவள் அடி கொடுத்த இடத்தை தடவிக்கொண்டே, விளையாட்டை கைவிட்டு, “கொஞ்ச நேரம் தூங்குடி, அம்மாவை நான் பார்த்துக்குறேன்” என்றான். தர்ஷினிக்கும் கண்கள் எரிவது போல இருக்க மறுத்துப் பேசாமல் படுத்துக் கொண்டாள்.

காலையில் லட்சுமிக்கு செவிலியரின் துணை கொண்டு தர்ஷினியே உடை மாற்றி விட்டாள். பின் இன்பாவும் தர்ஷினியும் சேர்ந்து அவரை நடக்க வைத்தனர். ரம்யா, ரவி, சுபாஷினி மூவரையும் அழைத்துக்கொண்டு பத்மினியும், சாரங்கபாணியும் வந்திருந்தனர்.

பத்மினியும், சாரங்கபாணியும் தங்கிக்கொள்ள, மற்றவர்களை அழைத்துக்கொண்டு இன்பா கிளம்பினான். பெண்கள் மூவரும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள ரவியை தன்னுடன் பைக்கில் அழைத்து வந்தான் இன்பா.

வீட்டிற்கு வந்த பின்னர் தர்ஷினி ரம்யாவின் அறையையே உபயோகித்துக் கொண்டாள். நூர்ஜஹான் சாப்பாடு செய்து கொடுத்திருக்க நசீர் கொண்டு வந்து கொடுத்தான்.

எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறிவிட்டு நசீரிடம், “அவனைப் போய் கூட்டிட்டு வா” என்றாள் தர்ஷினி. அதற்குள் இன்பாவே வந்து விட்டான்.

நசீர் இருவரது முகத்தையும் மாறி மாறி பார்த்தான். ‘இன்னும் ரெண்டு பேரும் முறைச்சுக்கிட்டுதான் இருக்குறாங்களா?’ என மனதிற்குள் நினைத்து கொண்டான்.

மதியம் தர்ஷினியே சமைத்து விட்டாள். மீண்டும் அன்று இரவு இன்பாவும் தர்ஷினியும் லட்சுமியுடன் தங்கிக்கொண்டு, அங்கு தங்கி இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். இவ்வாறாக மாறிமாறி உறவுகள் பார்த்துக்கொள்ள ஒரு வாரத்தில் வீட்டிற்கு வந்துவிட்டார் லட்சுமி.

அவர் வந்த பின்னும், தர்ஷினி ரம்யாவின் அறையில்தான் தங்கி கொண்டிருந்தாள். காலை சமையலை முடித்துவிட்டு அலுவலகம் சென்று விடுவாள் தர்ஷினி. பின் பத்மினி வந்து பார்த்துக் கொள்வார். நூர்ஜஹான் உதவிசெய்ய, லட்சுமிக்கு சிரமம் ஏதுமில்லை.

“அண்ணி நல்ல நாள் பார்க்கணும்… ரெண்டு பேருக்கும் சடங்கு செய்யணும்” என பத்மினியிடம் கூறினார் லட்சுமி

“நானும் நினைச்சுகிட்டுதான் இருந்தேன். நாளைக்கு நாள் நல்லா இருக்கு. நாளைக்கே வச்சிடலாமா?” எனக் கேட்டார் பத்மினி.

“சரி அண்ணி. இனியும் தள்ளி போட வேண்டாம். ரெண்டும் இன்னும் முறைச்சிக்கிட்டுதான் திரியுதுங்க” என்றார் லட்சுமி.

“சீக்கிரம் சரியாகிடும்” என தனக்கும் சேர்த்து ஆறுதல் கூறினார் பத்மினி.

அன்றிரவு ரம்யாவின் அறையிலேயே தங்கி கொண்டாள் தர்ஷினி. இன்பா தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தான். அவன் வரவும் அறையிலிருந்து வெளிவந்து சாப்பாடு எடுத்து வைத்தாள் தர்ஷினி.

“நீ சாப்பிட்டியா?” எனக் கேட்டான் இன்பா.

“ம்…ம்…” என மட்டும் கூறினாள்.

“ஏன் வாய்ல என்ன முத்தா…?” எனக் கேட்டான்.

“இனிமே நேரத்துக்கு வராம லேட்டா வந்தா சாப்பாடு போட மாட்டேன்” என்றாள்.

இன்பாவுக்கு கோவம் வருவதற்குப் பதில் சிரிப்பு வந்தது. “எத்தனை மணிக்கு எழுந்திருக்கணும், எத்தனை மணிக்கு குளிக்கணும், சாப்பிடணும் எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு கொடுத்திடு. டைம்டேபிள் படி நான் செய்யறதுக்கு வசதியாய் இருக்கும்” என்றான்.

“நான் சொல்றதை எல்லாம் கேட்டுட, கீட்டுடப் போற?” என்றாள்.

“நீ சொல்றதை எல்லாம் கேட்கணும்னு எனக்கும் ஆசைதான். எங்க… நான் கேட்கிற மாதிரி ஏதாவது சொல்லு” என கிறக்கமாய் கூறினான்.

“உன்கிட்ட பேசினேன் பாரு என்னை சொல்லணும்”

“ரொம்ப சலிச்சுக்காதடி. எத்தனை நாளைக்கு ரம்யா ரூம்ல போய் நீ ஒளிஞ்சுக்க முடியும்? என்கிட்ட வசமா மாட்டுவ பாரு…. அன்னைக்கு இருக்கு உனக்கு” என்றான்.

“ஓ… உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கா?” எனக் கேட்டாள்.

“எந்த நினைப்பு..?”

“எனக்கு எப்படி தெரியும்? நினைக்கிற உனக்கு தானே தெரியும்?”

“ஏய்… ஜகா வாங்காதடி. நீதானே இப்ப உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கான்னு கேட்டே…? சொல்லு… சொல்லு… எந்த நினைப்பு?” என்றான்.

“நீ சாப்பிட்டு எழுந்திருச்சு போ. எனக்கு தூக்கம் வருது” எனக்கூறி ரம்யாவின் அறைக்குள் புகுந்து கொண்டாள் தர்ஷினி.

சிரித்துக்கொண்டே சாப்பிட்டு முடித்து தன் அன்னையை பாரக்க சென்றான் இன்பா. அவன் வந்ததும் விழித்துக்கொண்ட லட்சுமி, “நேரத்துக்கு வந்தா என்னடா?” என கேட்டார்.

“கொஞ்சம் வேலைம்மா. நாளைக்கு கோர்ட் ல கேஸ் வருது. மாமா கூட டிஸ்கஸ் பண்ணிட்டு வரேன். அதான் லேட்” என்றான்.

“சரி… நாளைக்கும் இதே மாதிரி பண்ணாம நேரத்தோட வந்திடு. உனக்கும் தர்ஷினிக்கும் சடங்கு இருக்கு” என்றார்.

பின்னர் அவரிடம் இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு வெளியில் வந்தான்.

தர்ஷினி அறையில் படுத்திருந்தவள் தலையை தூக்கிப் பார்க்க, ‘இங்கே வா’ என சைகையில் அழைத்தான்.

“வரமாட்டேன் போடா” என்று வாயசைத்தாள் தர்ஷினி.

“முக்கியமான விஷயம்டி வா” என அழைத்தான். தர்ஷினி எழுந்து வெளியே வந்தாள். அவளை மேலும் கீழுமாக பார்த்தான்.

“என்னன்னு சொல்லு. அதை விட்டுட்டு இப்படி அசிங்கமா பார்க்காதே” என்றாள்.

“நான் உன்னை பார்க்கிறது அசிங்கமா?” எனக் கேட்டான்.

“நீ பார்க்கிற பார்வை அப்படித்தான் இருக்கு” என்றாள்.

“உண்மையிலேயே உனக்கு எதுவும் தெரியாதா? இல்லை தெரியாத மாதிரி என்கிட்ட நடிக்கிறியா?”

“நான் என்ன நடிக்கிறேன்?”

“நாளைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் நைட்” என்றான்.

“ஹான்…” என்றாள் தர்ஷினி.

மீண்டும் ஒருமுறை கூறியவன், “சொல்ல வந்த முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன் பாரு… இன்னைக்கே நல்லா தூங்கிக்க. நாளைக்கு உன்னை தூங்க விட மாட்டேன்” எனக்கூறி அவள் கன்னத்தை தட்டி விட்டு சிரித்து கொண்டே அறைக்குள் சென்று விட்டான்.

“நான் நல்லாதான் தூங்க போறேன்டா…. நீதான் தூக்கம் வராம புரளப் போற. போ… போ… நல்லா கனவுகண்டுகிட்டே நீ தூங்கு. உன் கனவை எல்லாம் கலைக்கிறேன்” எனக்கூறிவிட்டு தர்ஷினியும் உறங்க சென்றாள்.

இருவரும் இருவேறு எண்ணங்களில் இருக்க, எது நிறைவேறுமோ….??