ரஹீம் பாயின் வீட்டில் மதிய விருந்து நடந்து கொண்டிருக்க, தர்ஷினி இன்பாவை திட்டிக் கொண்டிருந்தாள்.
தர்ஷினிக்கு பின்னால் வந்து நின்ற இன்பா, அவளது வலது கையை பின் பக்கமாக வளைத்து முறுக்கினான். தலை உயர்த்திப் பார்த்த தர்ஷினி “விடுடா” என்றாள்.
“நீ பேசினதுக்கு எல்லாம் மன்னிப்பு கேளுடி” என்றான் இன்பா.
“என்ன விளையாட்டு இது இன்பா…? பேட்டியோட கையை விடு” என ரஹீம் பாய் கூற, “முடியாது, இவ பேசினதுக்கு மன்னிப்பு கேட்டாதான் விடுவேன்” என்றான் இன்பா.
“நீ பேசுனது தப்புதானே பாப்பா…. மன்னிப்பு கேட்டுடுமா” என நூர்ஜஹான் கூற “முடியாது” என்றாள் தர்ஷினி.
இன்பா இன்னும் கொஞ்சம் முறுக்க வலியில் முகம் சுளித்தாள் தர்ஷினி.
“டேய் பாவம்டா விடுடா” என்றான் பஷீர்.
“யார் இவளா பாவம்…?” என ஏளனமாக இன்பா பார்க்க, தர்ஷினி தன் இடது முழங்கையால் இன்பாவின் வயிற்றில் குத்தினாள். எதிர்பாராமல் கிடைத்த அதிரடியான குத்தில் அவளது கையை விட்டான் இன்பா. எழுந்துகொண்ட தர்ஷினி இரு கைகளின் முஷ்டியை மடக்கி சண்டைக்கு தயாரானாள். குங்ஃபூ நன்றாக பயின்றிருந்த தர்ஷினி இன்பாவை அடித்து வீழ்த்திவிடும் ஆக்ரோஷத்துடன் நிற்க, இருவருக்கும் இடையில் வந்து நின்றார் நூர்ஜஹான்.
“என்ன பாப்பா இது? நீ என்ன சின்ன புள்ளையா?” எனக்கூறி தர்ஷினியின் கைகளை கீழே இறக்கி விட்டவர், இன்பாவைப் பார்த்து,
“நீ வாப்பா, வந்து சாப்பிடு” என்றார்.
“எனக்கு வேண்டாம்” என்றான் இன்பா.
“இப்பதான் லட்சுமி அக்கா போன் பண்ணுச்சு. வீட்டுல புளிக்குழம்பையும் வாழைக்காய் பொரியலையும் பார்த்துட்டு கோவமா கிளம்பிட்டியாமே…. வந்து ஒழுங்கா உக்காந்து சாப்பிடு” என்றார்.
“மிச்சம் மீதி எதுவும் இருக்கா?” என தர்ஷினியை நக்கலாக பார்த்துக் கொண்டே கேட்டான் இன்பா.
“பார்த்தீங்களா இவனை…?” என்றாள் தர்ஷினி.
“நீ சாப்பிட்டு முடிச்சிட்ட இல்ல… போ… போய் வாப்பாவோட பறவைகளுக்கு தண்ணீ காட்டு” என தர்ஷினியை ரஹீமுடன் அனுப்பி வைத்தவர் இன்பாவுக்கு பரிமாற ஆரம்பித்தார்.
இருவரது சண்டையும் சுவாரசியமாக இருந்தது சுப்ரியாவுக்கு. இன்பா சாப்பிட்டுக் கொண்டிருக்க பஷீர் சாப்பிட்டு முடித்தாலும் அவனுடனே பேசிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“பக்கத்து தெருவுல இருக்குற வீட்டுக்கு போய் கொடுத்துட்டு வர எவ்வளவு நேரம்டா ஆகும்?” என்றான் இன்பா.
நண்பர்கள் இருவரும் தொழில் விஷயமாக பேசிக்கொண்டிருக்க, சுப்ரியாவும் நசீரும் வெளியே சென்றனர்.
பறவைகளுக்கு தண்ணீர் வைத்துவிட்டு, “வாடி என் வீட்டுக்கு போலாம்” என சுப்ரியாயாவை அழைத்தாள் தர்ஷினி.
“என் வண்டி இங்கேயே இருக்கட்டும்” என ரஹீம் பாயிடம் கூறிவிட்டு நண்பர்கள் இருவருடனும் வெளியே வந்தாள் தர்ஷினி. ஒரு சட்டை அவளது காலடியில் வந்து விழுந்தது. கையில் எடுத்தவள் நிமிர்ந்து பார்த்தாள். பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இன்பாவின் அம்மா சந்தான லட்சுமி காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருக்க, காற்றில் பறந்து வந்து அந்த சட்டை தர்ஷினியின் காலடியில் விழுந்திருந்தது.
“தர்ஷினி அதை எடுத்துட்டு வந்து கொடும்மா” என லட்சுமி கூற மூவரும் இன்பாவின் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டிற்கு வெளியே அழகிய பூச்செடிகள் காட்சியளித்தன. போர்டிகோவில் அமர்ந்து இன்பாவின் உடன்பிறப்புகளான இரட்டையர்கள் ரவிச்சந்திரனும் ரம்யாவும் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். இருவருமே தர்ஷினியின் தங்கை சுபாஷினி உடன் ஒரே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பவர்கள்.
சந்தானலட்சுமி துணிகளுடன் கீழே இறங்கி வர, “அத்தைக்கு ஹெல்ப் பண்ணாம ரெண்டு பேரும் அப்படி என்ன விளையாடிகிட்டு இருக்கீங்க?”என அவர்களை கடிந்து கொண்டே லட்சுமியிடம் இருந்து துணிகளை வாங்கிக்கொண்டாள் தர்ஷினி.
“போக்கா ஒருநாள்தான் வீட்ல ஃப்ரீயா இருக்கோம். அது பொறுக்காதா உனக்கு?” என ரம்யா கேட்க,
“அதான…. பிரியா அக்கா வீட்ல ஒரு வேலை கூட செய்யறது இல்லைன்னு பத்மினியத்தை நேத்துதான் அம்மாகிட்ட புலம்பிகிட்டு போனாங்க. இவங்க நமக்கு அட்வைஸ் பண்றாங்க” என்றான் ரவி.
“போதும்டா நீ என்னை டேமேஜ் பண்ணினது. என் ஃப்ரெண்ட் முன்னாடி இப்படியா என் மானத்தை வாங்குவ…” என கேட்டுக்கொண்டே துணிகளுடன் உள்ளே சென்றாள் தர்ஷினி.
சுப்ரியாவை அவர்களுக்கு அறிமுகம் செய்வித்து சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு நசீரும் சுப்ரியாவும் உள்ளே சென்றனர்.
லட்சுமியுடன் அமர்ந்து துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி. சுப்ரியாவை அறிமுகம் செய்விக்க இயல்பாக அவளும் துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்தாள்.
இன்பாவின் வெள்ளை நிற சட்டைகளையும் கருப்பு நிற பேண்ட்களையும் தனியே எடுத்து வைத்தார் சந்தான லட்சுமி.
“நான் சரியா அயர்ன் பண்றது இல்லைன்னு திட்டுவான். இவன் துணியை மட்டும் வெளியில் கொடுத்துதான் அயர்ன் பண்ணனும்” என சிரித்துக்கொண்டே கூறினார் லட்சுமி.
“ஆமாம்… துரைக்கு ஒரு சுருக்கம் இருந்தா கூட போட மாட்டார்” என்ற தர்ஷினி, “உங்க புள்ளை என் லைன்ல ரொம்ப கிராஸ் பண்றான், சொல்லி வைங்க” என்றாள்.
“நீங்க ரெண்டு பேரும் தினம் தினம் ஏதாவது ஏழரையை இழுத்து விடுங்க. இன்னைக்கு என்ன ஆச்சு?” எனக் கேட்டார் லட்சுமி.
“ஐயையோ பெரியம்மா… இன்னைக்கு நூரு மட்டும் இடையில் வரல… ஒரு பெரிய ஆக்ஷன் மூவியே ரெண்டு பேரும் ஓட்டியிருப்பாங்க” என்ற நசீர் நடந்ததை கூறினான்.
“வரட்டும் அவன்… வளர்ந்த பிள்ளைகிட்ட கை நீட்டாதன்னு எத்தனை தடவ அவன் கிட்ட சொல்றது…?” என புலம்பிய லட்சுமி, “ரொம்ப வலிச்சதா கண்ணு…?” என தர்ஷினியைப் பார்த்து கேட்டார்.
“ஆமாம் ரொம்ப வலிச்சிருக்கும். நீ ஒத்தடம் கொடு” எனக் கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தான் இன்பா.
“டேய் எதுக்குடா புள்ளை கைய புடிச்சி முறுக்குன?” என லட்சுமி அதட்டினார்.
“அவ என் வயித்துல விட்ட குத்துல என் கிட்னி சட்னி ஆயிடுச்சு. அதை என்னன்னு கேளு” என்றான் இன்பா.
“என்ன தர்ஷினி இது…? படாத இடத்துல பட்டு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா என்னாகிறது?” என லட்சுமி தர்ஷினியிடம் கேட்க மூவரும் சிரித்துக் கொண்டனர்.
“அம்மா….” என அலறி தலையில் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான் இன்பா.
சாரங்கபாணி- சந்தானலட்சுமி இருவரின் மூத்த புதல்வன்தான் 27 வயது நடக்கும் இன்பசாகரன். சாரங்கபாணி சொந்தமாக பெரிய பாட்டா ஷோரூம் வைத்திருக்கிறார். அவன் பிறந்து பத்து வருடங்கள் கழித்து பிறந்த இரட்டையர்கள் ரவியும், ரம்யாவும். சாரங்கபாணியின் தங்கை பூரணியின் கணவர்தான் பிரபஞ்சன். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அடுத்த தெருவில்தான் அவர்களது வீடு இருந்தது.
சிறுவயதிலிருந்தே இன்பாவுக்கு ஆளுமை மிகுந்த பிரபஞ்சனை மிகவும் பிடிக்கும். அவரைப் போலவே மாற வேண்டும் என்ற ஆசையில்தான் சட்டம் பயின்றான். சிறிய வழக்குகளை எடுத்து நடத்தவும் செய்வான். தனியாக பிராக்டீஸ் செய்யலாம் என்ற யோசனையில் இன்பா இருக்க, “ஒரு பெரிய கேஸ் வரும்போது நானே சொல்றேன் அதை எடுத்து நடத்தி ஃபேமஸ் ஆகு, அப்புறமா நீ தனியா போய்க்கோ” என்று சொல்லிவிட்டார் பிரபஞ்சன்.
வழக்குகளில் வெற்றி பெறும் பொழுது, பிரபஞ்சனின் க்ளைண்ட்டுகள் பார்ட்டி கொடுப்பது வழக்கம். அதற்கு செல்லும் இன்பா கொஞ்சமாக மது அருந்துவான். அவ்வாறு மது அருந்திவிட்டு வரும் நாட்களில், தன் தம்பி தங்கை உறங்கிய பிறகு, தாமதமாகத்தான் வீட்டிற்கு வருவான். அவ்வாறு நேற்றைய தினம் தாமதமாக இன்பா வர, அவனுக்கென எடுத்து வைத்திருந்த காளான் பிரியாணியை சாப்பிட்டு காலிசெய்துவிட்டு சென்றிருந்தாள் தர்ஷினி. இவள் இவ்வாறு செய்வதும் வாடிக்கைதான்.
அந்த வீட்டில் மிகவும் இயல்பாகவும் உரிமையாகவும் தர்ஷினியும் நசீரும் வளைய வந்தனர். சுப்ரியாவின் கண்கள் இன்பாவை தேடிக் கொண்டிருந்தன.
வெயில் தாழ்ந்து போய் இருக்க “அக்கா பேட்மிண்டன் விளையாடலாம் வா” என அழைத்தாள் ரம்யா. சுபாஷினியும் வந்திருந்தாள். வீட்டிற்கு வெளியில் நெட் கட்டி விளையாட ஆரம்பித்தனர்.
ரவியும் சுபாஷினியும் செஸ் விளையாட்டை தொடர, சுப்ரியாவும் தர்ஷினியும் ஒரு அணியாகவும் நசீர் மற்றும் ரம்யா மற்றொரு அணியாகவும் விளையாட ஆரம்பித்தனர். தர்ஷினி அணியே அதிக பாயிண்ட்கள் எடுத்திருந்தனர்.
“நசீர் அண்ணா ஒழுங்கா விளையாடுங்க. நீங்க சர்வீஸ் ஒழுங்கா போட மாட்டேங்கிறீங்க” என குறை கூறினாள் ரம்யா.
தர்ஷினி அணியின் கையே ஓங்கியிருக்க, வெளியே வந்தான் இன்பா.
“அண்ணா நீ வா. என்னை ஜெயிக்க வை” என இன்பாவை அழைத்தாள் ரம்யா.
“நீங்க போய் அம்மாவை டீ போடச் சொல்லி எல்லோருக்கும் எடுத்துட்டு வாங்க” என கூறினாள் ரம்யா.
“நாளைக்கு என்னை திரும்ப விளையாட கூப்பிடு… அன்னைக்கு இருக்கு உனக்கு” என கூறிக் கொண்டே நசீர் உள்ளே சென்றான்.
இன்பா ரம்யாவுடன் விளையாட ஆரம்பிக்க அவனை பார்த்துக்கொண்டே விளையாட்டில் கோட்டை விட்டாள் சுப்ரியா.
“எங்கடி இருக்கு உன் கவனம்?” என தர்ஷினி கடிந்து கொண்டாள். இறுதியில் ரம்யா இன்பா அணி வாகை சூட ரம்யா இன்பாவை மகிழ்ச்சியாக கட்டிக்கொண்டாள்.
“மட்டன் பிரியாணியும் கோலா உருண்டையும் மொத்தமா கொட்டிக்கிட்டா மட்டும் பத்தாது” என இன்பா கூற, “பாத்தியா…. அந்த தடியன் என்னைதான் சொல்றான். எல்லாம் உன்னாலதாண்டி சுப்பு” என தர்ஷினி கூறினாள். சுப்ரியாவின் கவனமோ இன்பாவிடமே இருந்தது.
தேநீர் எடுத்துக்கொண்டு நசீர் வர எல்லோரும் எடுத்துக்கொண்டனர்.
“டேய் நசீர் எல்லா டீயையும் அந்த தர்பூசணிக்கே கொடு. மதியம் கொட்டிகிட்டது அப்பதான் செரிக்கும். நைட்டுக்கு அவ அப்பா வாங்கிட்டு வர சுல்தான் பாய் கடை பரோட்டாவும் ஆட்டுக்கால் பாயாவும் வேற சாப்பிடனும்ல” என கிண்டல் செய்தான் இன்பா.
“லட்சுமி அத்தை…. இன்னும் ஒரு வாரத்துக்கு கீரை சாம்பார், கீரைப் பொரியல், வெண்டைக்காய் வறுவல், சுண்டைக்காய் சட்னின்னு வைங்க. அப்பதான் நிறைய பேருக்கு மூளை கொஞ்சமாவது வளரும்” என உள்ளே இருக்கும் லட்சுமிக்கு கேட்குமாறு கத்தினாள் தர்ஷினி.
இன்பாவின் கைப்பேசி ஒலிக்க அதை எடுத்துக் கொண்டவன் “உன்னை வந்து பேசுக்குறேன்” என கூறிவிட்டு தள்ளிப்போய் பேச ஆரம்பித்தான்.
இவர்கள் இருவருக்கும் சிறுவயதிலிருந்தே இப்படித்தான் முட்டிக் கொள்ளும். சிறுவயதில் சற்று பருமனாக இருக்கும் பிரியதர்ஷினியை எல்லோரும் சுருக்கமாக தர்ஷினி என அழைத்தால் இன்பா மட்டும் தர்பூசணி என அழைப்பன். அது தர்ஷினிக்கு அறவே பிடிக்காது.
அவனது கிண்டல் பொறுக்க முடியாமல் உடல் எடையை குறைக்க எண்ணினாள். சாப்பாட்டு பிரியையான தர்ஷினிக்கு சாப்பாட்டில் கட்டுப்பாடுகள் கொண்டு வர முடியவில்லை. அதனால் உடற்பயிற்சிகள் யோகா போன்றவற்றின் மூலம் உடல் எடையை குறைத்துக் கொண்டாள். இருந்தும் இன்பா தர்பூசணி என அழைப்பதை நிறுத்தவில்லை.
இருவரும் வேறு வேறு பள்ளிகளில் படித்தனர். தர்ஷினியின் பள்ளியில் புதன்கிழமைகளில் வேறு சீருடையும் அதற்கு ஏற்றவாறு பச்சை நிற ரிப்பனும் அணிந்து செல்ல வேண்டும். வேண்டுமென்றே அன்று காலையில் தர்ஷினியின் பச்சை நிற ரிப்பனை ஒளித்து வைத்தான் இன்பா. சிவப்பு ரிப்பன் அணிந்து சென்ற தர்ஷினிக்கு அன்று தண்டனை கிடைத்தது. இது இன்பாவின் திருவிளையாடல்தான் என்பதை அறிந்துகொண்டாள் தர்ஷினி.
இன்பாவுக்கு தினமும் சுத்தமான சாக்ஸ் போட வேண்டும். ஒரு முறை உபயோகித்ததை துவைக்காமல் மறுமுறை உபயோகிக்க மாட்டான். அன்று தர்ஷினி அவனது எல்லா சாக்ஸ்களையும் தண்ணீரில் முக்கி வைத்துவிட்டாள். வேறு வழி இல்லாமல் முன்தினம் அணிந்து சென்ற அழுக்கு சாக்ஸை அணிந்து கொண்டு சென்றான்.
மாலையில் வீடு திரும்பிய இன்பா, அந்த வருட தீபாவளிக்கு தர்ஷினி ஆசையாக வாங்கிய சுடிதாரின் துப்பட்டாவை, எடுத்து ஒளித்து வைத்துவிட்டான்.
அடுத்த நாள் இன்பா பள்ளிக்கு தயாராகி வெளியே வரும்போது முட்டைகளை உடைத்து கிண்ணத்தில் தயாராய் வைத்திருந்ததை அவன் மீது ஊற்றி விட்டாள் தர்ஷினி.
அடுத்த நாள் காலையில் தர்ஷினி உறங்கும் போது அவளது தலையில் ஐஸ்கட்டிகள் போட்ட தண்ணீரை ஊற்றினான் இன்பா.
பெரியவர்கள் கண்டித்தாலும், தண்டித்தாலும் இருவரது பழிவாங்கும் படலம் மட்டும் நிற்கவே இல்லை.
தர்ஷினி பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது சட்டம் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தான் இன்பா.
தர்ஷினியின் கட்டுரை நோட்டில், தமிழ் மொழி பற்றிய கட்டுரையை கோனார் நோட்ஸ் உதவியுடன் எழுதி வைத்திருந்தாள். தர்ஷினி இல்லாத நேரம் பார்த்து அதை எடுத்த படித்துப் பார்த்தான் இன்பா. ‘செத்தாலும் தமிழ் படித்து சாக வேண்டும். எந்தன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’ என்று தர்ஷினி எழுதிய மேற்கோளைப் பார்த்தான். அதில் சாம்பலிலும் என்பதை சிறிது அழித்து ‘சாம்பாரிலும்’ என மாற்றி எழுதி வைத்துவிட்டான்.
‘எந்தன் சாம்பாரிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’ என்று மாறிப்போனது.
தர்ஷினியின் தமிழாசிரியர், “எப்ப பாரு திங்குற நினைப்புதான் உனக்கு… சோத்துப் பண்டாரம்” என அனைவரது முன்பும் திட்டி விட மிகுந்த அவமானமாகி விட்டது தர்ஷினிக்கு.
நசீருக்கு அவனது பிறந்தநாளுக்காக ரஹீம் பாய் கேமரா ஒன்று பரிசளித்து இருந்தார். அவனது உதவியுடன், இன்பா திருட்டுத்தனமாக கல்லூரி வகுப்பை கட் அடித்து விட்டு சினிமா செல்வதை படம்பிடித்து இன்பாவின் தந்தை சாரங்கபாணியிடம் மாட்டிவிட, இன்பாவை அழைத்து தர்ஷினியின் முன்பே இரண்டு அறைகள் வழங்கினார் சாரங்கபாணி.
மறுநாள் தர்ஷினி பள்ளிக்கு செல்லும் பொழுது அவளது சாப்பாட்டு டப்பாவை அவளுக்கே தெரியாமல் எடுத்து வைத்து விட்டான். காலையிலிருந்து அம்மா செய்து கொடுத்த பிரியாணியின் நினைவிலேயே இருந்த தர்ஷினி ஆசையாக பையைத் திறந்து பார்க்க ராமம் போட்ட காகிதம்தான் கைக்கு கிடைத்தது. மற்ற நண்பர்களுடன் உணவை பகிர்ந்து சாப்பிட்டாலும், பிரியாணி கிடைக்காமல் மிகுந்த ஏமாற்றம் அடைந்து விட்டாள் தர்ஷினி.
இப்படியாக இன்பசாகரன் பிரியதர்ஷினி இருவரது பழிவாங்கும் கதைகளை ஒரு புத்தகமாகவே தொகுத்து வழங்கும் அளவிற்கு மிகப் பெரியது. இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது.
கைப்பேசியில் பேசிவிட்டு வந்த இன்பா தோட்டத்தில் தர்ஷினி சுப்ரியாவுடன் பேசிக்கொண்டே நடந்து வருவதை கவனித்தான். கைப்பேசியில் யாருடனோ பேசுவது போலவே அவளுக்கு எதிரில் நடந்து வந்தவன் லாவகமாக அவளது காலை தட்டிவிட இடறி கீழே விழுந்தாள் தர்ஷினி.
“அய்யோ சாரி தர்பூசணி…. சாரி… சாரி தர்ஷினி…” என இன்பா நக்கலாக கூற, கோவமாக எழுந்த தர்ஷினி அவனை அடிக்கத் துரத்த, அவளது கைகளுக்கு அகப்படாமல் ஓடினான் இன்பா.
“விடாத அக்கா” என ரவி கத்த, “ஓடிப் போங்க இன்பாண்ணா” என சுபாஷினி கூச்சலிட, “இதுங்க சண்டைக்கு முடிவே இல்லை” என நசீர் கூற, சுப்ரியா ஆர்வமாக இன்பாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.